search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் அரசியலுக்கு வர ஆதரவு அளித்த 72.50 சதவீதம் பேர்.. ரசிகர்கள் உற்சாகம்
    X

    விஜய் அரசியலுக்கு வர ஆதரவு அளித்த 72.50 சதவீதம் பேர்.. ரசிகர்கள் உற்சாகம்

    • நடிகர் விஜய் ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
    • விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார் விஜய்.

    திரையுலகிற்கும், தமிழக அரசியலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சீமான் உள்ளிட்டவர்கள் தனக்கென தனி பாதை அமைத்து அரசியலில் பயணிக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அவர் அதற்கான காலம் கனியவில்லை என ஒதுங்கிய நிலையில் இளம் ரசிகர் பட்டாளங்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளார். சமீபகாலமாக திரைப்படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி பலரது கவனத்தை ஈர்த்த விஜய் தன் செயல்பாட்டை வசனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நகர்வுக்கு மாற்றியுள்ளார்.

    இந்த சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில் விஜய்க்கு ஆதரவு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. வார இதழ் நடத்திய சர்வேயில் விஜய் அரசியலுக்கு வரலாமா?, விஜய்க்கு ஓட்டு போடுவீர்களா?, விஜய் கூட்டணி வைக்கலாமா?, அவர் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சிக்கு பாதிப்பு?, தமிழக அரசியலில் விஜய்யால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற 5 கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

    சென்னை, கொங்கு, வடக்கு, டெல்டா என 5 மண்டலங்களாக பிரித்து சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. தொகுதிக்கு ஒரு ஆண்கள், பெண்கள் கல்லூரிகளில் 500 குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டார்கள். ஒரு குழுவுக்கு 10 முதல் 15 பேர் வரை என மொத்தம் 5 ஆயிரத்து 250 பேர் இதில் களம் இறங்கினர். புதுவையில் தனியே 30 பேர் கொண்ட குழு சர்வே பணியில் ஈடுபட்டது.

    மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 100 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில் விஜய் அரசியலுக்கு வர 72.50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 27.50 சதவீதம்பேர் அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

    71.56 சதவீதம் பேர் விஜய்க்கு ஓட்டு போடுவோம் என்றும், 28.44 சதவீதம் பேர் விஜய்க்கு ஓட்டு போடமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.தேர்தலில் விஜய் கூட்டணி வைக்க 52.70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 47.30 சதவீதம்பேர் கூட்டணி வைக்கவேண்டாம் என்று கூறியுள்ளனர்.

    அதேபோல் விஜய் அரசியலுக்கு வருவதால் தி.மு.க. வுக்கு பாதிப்பு என 40.16 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என்று 22.11 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு என்று 20.75 சதவீதம் பேரும், பா.ஜ.கவுக்கு பாதிப்பு என்று 16.98 சதவீதம்பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    தமிழக அரசியலில் விஜய்யால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று 76.53 சதவீதம் பேரும், முடியாது என்று 23.47 சதவீதம்பேரும் கருத்து கூறியுள்ளனர். சர்வேயில் பெரும்பாலானோர் கருத்து விஜய்க்கு ஆதரவாகவே உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.

    பொதுவாக விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையில் அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார்? வெளிப்படையாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பாரா? பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இயக்கத்தினரை களம் இறக்குவாரா? என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அரசியல் களத்தில் விரைவில் விஜய்யின் அதிரடி தொடங்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

    ஆசியாவில் சமூக வலைதளங்களில் விஜய் தொடர்பான செய்தி, வீடியோக்கள் அதிகளவில் பார்க்கப்படுகின்றன. பார்வையாளர்கள் அதிகம் தேடும் நபராக நடிகர் விஜய் ஆசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 3-வது இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்தே விஜய் தனது அரசியல் நகர்வுகளை தொடங்கி இருக்கிறார்.

    Next Story
    ×