என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முரட்டு சிங்கிளுக்கு கல்யாணம்... விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் வயசு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
    X

    முரட்டு சிங்கிளுக்கு கல்யாணம்... விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் வயசு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

    • இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜவஹர் மித்ரன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அனைவருமே விஷால்-சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
    • தன்ஷிகாவை வாழ்நாள் முழுவதும் சிரித்த முகமாகவே வைத்துக்கொள்வேன்.

    நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

    பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளது. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். 'பெண் பார்த்தாச்சு, பேசி முடிச்சாச்சு...' என்று கூறிய விஷால், தனது காதல் குறித்தும், காதலி குறித்தும் குறிப்பிடாமல் தவிர்த்தார். ஆனால் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவைதான் காதலிக்கிறார் என்று 'தினத்தந்தி' மட்டும்தான் குறிப்பிட்டிருந்தது. அது நேற்று உண்மையானது.

    முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகா, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகி டா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விஷாலும், சாய் தன்ஷிகாவும் ஜோடியாக விழாவில் பங்கேற்றது, கைகோர்த்து பேசிக்கொண்டிருந்தது இருவரது காதலையும் சொல்லாமல் சொல்லியது.

    மேலும் விழாவில் பேசிய இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜவஹர் மித்ரன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அனைவருமே விஷால்-சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது இருவருமே வெட்கத்துடன் தலையை ஆட்டி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டனர்.



    விழாவில் சாய் தன்ஷிகா பேசும்போது, '15 வருடங்களாக நானும், விஷாலும் நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டிருந்தோம். இதை அப்படியே தொடரலாமா, வேண்டாமா? இல்லை அடுத்தக்கட்டத்திற்கு செல்லலாமா? என்று கூட யோசித்து இருக்கிறோம். ஆனால் இன்று (அதாவது நேற்று) காலை தினத்தந்தி பத்திரிகை செய்தியை பார்த்தேன். இனியும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவு எடுத்து விட்டோம்.

    நானும், விஷாலும் காதலிக்கிறோம். வருகிற ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி திருமணம் செய்ய முடிவு எடுத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

    அதனைத் தொடர்ந்து விஷால் பேசியதாவது:-

    கிசுகிசு இனியும் பரவ வேண்டாம். இருக்கும் கிசுகிசுவே போதும் என்று முடிவெடுத்து விட்டேன். நல்ல வேலையாக இந்த நிகழ்ச்சிக்கு எனது தந்தை வரவில்லை. வந்திருந்தால் ஒரு வழி செய்திருப்பார்.

    இப்போது அறிவிக்கிறேன் எனது திருமணம் முடிவாகிவிட்டது. என் காதலி தன்ஷிகா. அவரை திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப்போகிறேன். அவர் இப்போது ஆக்சன் கதாநாயகி. ஆனாலும் வடிவேலு-கோவை சரளா போல நாங்கள் இருக்க மாட்டோம். ஆனாலும் தன்ஷிகாவிடம் கொஞ்சம் சூதானமாகத்தான் இருக்க வேண்டும்.

    அவரை திருமணம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எங்களுக்குள் இருக்கும் புரிதல் எப்போதுமே இருக்கும். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார். அவரது நடிப்புக்கும், திறமைக்கும் நான் தடை சொல்லமாட்டேன். ஒரே வீட்டில் இனி ஆக்சன் ஹீரோ, ஆக்சன் ஹீரோயின் இருக்கப்போகிறார்கள். இனி எங்கள் வீட்டுக்கு பாதுகாவலரே தேவையில்லை.

    தன்ஷிகாவை வாழ்நாள் முழுவதும் சிரித்த முகமாகவே வைத்துக்கொள்வேன். இதுதான் எனது இலக்கு. அவர் சிரித்தால் அழகாக இருப்பார். அவரை காதலி, மனைவி, வாழ்க்கை துணை என்று எந்த வார்த்தையை சொல்வது என்று தெரியவில்லை. விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விஷால்- தன்ஷிகாவின் திருமணம் உறுதியானது முதல் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமண அறிவிப்பு குறித்த தகவல்கள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது இருவரின் வயது வித்தியாசம் குறித்த தகவலும் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஷாலுக்கு தற்போது 47 வயது ஆகிறது. நடிகை சாய் தன்ஷிகாவிற்கு 35 வயது ஆகிறது. இருவருக்கும் இடையே 12 வயது வித்தியாசம் உள்ளது. பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த விஷால் கடைசியாக நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    Next Story
    ×