என் மலர்
சினிமா செய்திகள்

பன் பட்டர் ஜாம் திரைவிமர்சனம்
- இன்றைய ஜெனரேஷன் எப்படி எல்லாம் காதல், நட்பு என்ற பெயரில் லூட்டி அடிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
கதைக்களம்
ராஜுவும், மைக்கேலும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ராஜுக்கு பெண்கள் என்றாலே பயம். நாயகி பவ்யாவை கல்லூரியில் பார்த்து பேசியதும் ராஜுக்கு பயம் பறந்து போய் விடுகிறது. இதிலிருந்து பவ்யாவும் ராஜுவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். பவ்யாவை ஒருதலையாக காதலிக்கும் மைக்கேல், ராஜுவிடம் சண்டை போட்டு பிரிகிறார். இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு புறம் ராஜுவின் தாய் சரண்யா, பக்கத்துவீட்டு பெண் ஆதியாவை ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆதியாவோ விஜே பப்புவை காதலித்து வருகிறார்.
இறுதியில் ராஜுவின் காதல் என்ன ஆனது? சண்டை போட்டு சென்ற நண்பர் மைக்கேல் மீண்டும் ராஜுவுடன் சேர்ந்தாரா? பக்கத்துவீட்டு பெண் ஆதியாவை திருமணம் செய்யும் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராஜு, ஒரு சில இடங்களில் எதார்த்தமாகவும் ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காகவும் நடித்திருக்கிறார். நண்பனுக்காக ஏங்குவது, காதலியை நினைத்து உருகுவது, வாழ்க்கையில் வெற்றி பெறப் போராடுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நண்பனாக நடித்திருக்கும் மைக்கேல், நண்பனா காதலியா என்று தவிக்கும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். வி ஜே பப்பு ஆங்காங்கே வந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பவ்யா, தான் யாரை காதலிக்க வேண்டும், தனக்கு ஏற்றவர் யார் என்பதை தீர்மானிக்கும் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துறுதுறு பெண்ணாக நடித்த மனதில் பதிந்து இருக்கிறார் ஆதியா. சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நட்புக்காக வரும் விக்ராந்தின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
இயக்கம்
இன்றைய ஜெனரேஷன் எப்படி எல்லாம் காதல், நட்பு என்ற பெயரில் லூட்டி அடிக்கிறார்கள் என்பதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத். உண்மை காதல், உண்மை நட்பு, காதல் திருமணம், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம், காதலித்து பிளஸ் பெற்றோர் நிச்சயம் செய்து நடத்தும் திருமணம் என்று பல்வேறு விஷயங்களை சொல்லி இருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் நடக்கும் காதல் என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளும்படி திரைக்கதை அமைக்காதது வருத்தம் அளிக்கிறது. நிறைய லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
இசை
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஒரு சில இடங்களில் சம்பந்தமில்லாமல் ஒலிக்கிறது.
ஒளிப்பதிவு
பாபு குமாரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
Rain Of arrows Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மொத்தத்தில் பன் பட்டார் ஜாம் டேஸ்ட் இல்லை






