என் மலர்
சினிமா செய்திகள்

அங்கம்மாள்- திரைவிமர்சனம்
- இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.
கிராமத்தில் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வரும் கீதா கைலாசம், பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையாக உழைத்து வருகிறார். இவர் தைரியமான பெண்ணாகவும், மேல் சட்டை (ஜாக்கெட்) அணியாமல் பழமைவாத பெண்மணியாகவும் வலம் வருகிறார்.
மூத்த மகனான பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இரண்டாவது மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். இவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது தாயை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்று சரண் வருந்துகிறார்.
இதனால் தனது தாய் மேல் சட்டை அணிய வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக அவர் நேரடியாக தனது தாயிடம் சொல்லாமல், அண்ணி மற்றும் ஊர் மக்கள் மூலமாக தாயை மேல் சட்டை அணிய வைக்கிறார். ஆனால், அவர் தினங்களில் மீண்டும் மேல் சட்டையை அணிய மறுக்கிறார்.
இறுதியில் கீதா கைலாசம் மேல் சட்டை அணிந்தாரா? மேல் சட்டை அணிய மறுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாமல் இருப்பது, சுருட்டு பிடிப்பது படத்தின் முழு கதையையும் தாங்கி பிடித்து இருக்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி, அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றல், இளைய மகனாக நடித்திருக்கும் சரண், அவரது காதலியாக நடித்திருக்கும் முல்லையரசி, சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
அங்கம்மாள் என்ற பெண்மணியின் வாழ்வியலை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். சுதந்திரமான பெண்ணாக இருந்தாலும், பிள்ளைகள் மூலம் அவரது சுதந்திரம் பரிக்கப்படுவதும், அவர்களுக்காக அடிபனிவதும் என்று திரைக்கதை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
இசை
இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது. பல காட்சிகள் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
ரேட்டிங்- 3.5/5






