என் மலர்
சினிமா செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் அடூர் - மம்மூட்டி கூட்டணி!
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்மூட்டி, தற்போது பேட்ரியாட் எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இதில் மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸாரின் ஷிஹப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மம்மூட்டியுடன் மீண்டும் இணைவது குறித்து பேசிய இயக்குநர் அடூர் கோபாலாகிருஷ்ணன் " என்னுடைய அடுத்த படத்தில் மம்மூட்டியே முக்கிய வேடத்தில் நடிப்பார். மீதமுள்ள கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. திரைக்கதை எழுதும் பணி நடந்து கொண்டிருந்தபோது, மையக் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியின் முகம் மட்டுமே என் நினைவுக்கு வந்தது.
அவர்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று நான் உணர்ந்தேன். எனது படங்களில் ஆண் கதாநாயகனாக நடிப்பது இது நான்காவது முறையாகும். நான் வேறு எந்த முன்னணி நடிகருடனும் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை". என தெரிவித்தார்.
இப்படம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மம்மூட்டியை அடூர் உலகிற்குள் கொண்டுவருகிறது. கடைசியாக இவர்களின் கூட்டணியில் வெளியான படம் விதேயன் (1994). அடூர் - மம்மூட்டி கூட்டணியில் வெளியான அனந்தரம் (1987), மதிலுகள் (1989) மற்றும் விதேயன் ஆகியவை மலையாள சினிமாவின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளாகும்.






