என் மலர்
சினிமா செய்திகள்

வழக்கமான கதை.. வியக்க வைக்கும் காட்சிகள் - 'அவதார் 3' நெருப்பா?.. சாம்பலா? - திரைவிமர்சனம்
- எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
- அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.
டைட்டானிக் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் காம்ரூன்.
தனது படங்களில் பிரமாண்டத்திற்காக அறியப்படும் கேமரூன் 2009 இல் ஒரு படத்தை இயக்கி வெளியிடுகிறார். அதுதான் 'அவதார்'.
ஒரு திரைப்படத்தில் இவ்வளவு பிரமாண்டத்தை அதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்ற அளவுக்கு அவ்வளவு நுட்பமான காட்சி அமைப்புகள், நவீன VFXகள் என அப்படம் அமைந்தது.
2154 ஆம் ஆண்டில் பண்டோரா எனும் கிரகத்தில் வசிக்கும் நவி இன மக்களைப் பற்றி ஆராய சென்று அவர்களில் ஒருவனாக மாறும் ஹீரோ ஜேக் சல்லி, அவர்களுக்காக தனது சொந்த மனித இனத்தையே எதிர்த்து போராடுவதாக படம் அமைந்திருந்தது.நெய்த்திரி என்ற நவி பெண்ணின் மீதான ஜேக் சல்லியின் காதலே இப்படத்தை நகர்த்தும் அச்சாணி.
இப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியானது.
இது முதல் பாகம் அளவு கொண்டாடப்படவில்லை எனினும் முதலாமதை போலவே அதன் பிரமாண்ட காட்சிகளுக்காக போற்றப்பட்டது.
இந்நிலையில் அவதார் சீரிஸ் உடைய கடைசி பாகமான ஃபயர் அண்ட் ஆஷ் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி உள்ளது.
கதை:
முதல் பாகத்தில் காடு, இரண்டாம் பாகத்தில் கடல் என நம்மை வியக்க வைத்த கேமரூன், இந்த மூன்றாம் பாகத்தில் பண்டோரா கிரகத்தின் எரிமலைப் பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அங்கு வசிக்கும் 'மாங்குவான்' எனப்படும் புதிய நவி இன மக்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் மற்ற நவி இனத்தவரைப் போல அமைதியானவர்கள் அல்ல.
மாறாக வன்முறையும், பொறாமையும் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இவர்களே சாம்பல் மக்கள் (Ash people) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தலைவி வராங் இந்த பாகத்தின் முக்கிய வில்லி ஆவார்.
இந்த பாகத்தில், ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி தங்கள் குழந்தைகளைக் காக்கவும், மனிதர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மீண்டும் போராடுகிறார்கள்.
இவர்களுக்கு எதிராக மனிதர்களும், சாம்பல் மக்களும் கைகோர்ப்பது ஜேக்கின் குடும்பத்திற்குப் பெரும் சவாலாக அமைகிறது.
இந்த சவாலை அவர்கள் முறியடித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஒரு மணி நேரம் கதை நகராமல் மிகவும் மெதுவாகச் செல்வது பலவீனமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.
காட்சி அமைப்பு:
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் VFX மற்றும் 3D தொழில்நுட்பம்தான். ஒவ்வொரு காட்சியும் மெனக்கிட்டு செதுக்கப்பட்டுள்ளது. எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
மலைக்க வைக்கும் அளவு, 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் வகையில், வழக்கமான கதைக்களத்தை வடிகட்டிய எடுத்த அவதார் 3, அதன் காட்சி பிரமாண்டத்திற்காக மட்டுமே வொர்த் என்று கூறமுடியும். இந்தப் படத்தை பெரிய திரையில் பார்த்தால் மட்டுமே அதன் முழுமையான அனுபவத்தைப் பெற முடியும்.
நடிகர்கள்:
ஹீரோ ஜேக் சல்லியாக சாம் வொர்திங்டன் தந்தையாகவும், தலைவனாகவும் முதல் 2 பாகத்தை விட முதிர்ச்சி காட்டி உள்ளார். நெய்த்திரியாக நடித்த ஜோ சால்டனா அன்பிலும் ஆக்ஷனிலும் சமமாக ஆதிக்கம் செலுத்துகிறார்.
நெருப்பு உலகத்தின் சாம்பல் மனிதர்களின் தலைவியாக வரும் வில்லி வராங் கதாபாத்திரத்தில் ஷ்பானிஷ் நடிகை ஊனா சாப்ளின் சொல்லி அடித்திருக்கிறார். அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.
பின்னணி இசை:
இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்த சைமன் ஃப்ரான்ங்க்லென் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
சாம்பல் இன மக்கள் வரும் காட்சிகளில், ஆக்ஷன் காட்சிகளில் வரும் இசை ஈர்க்கிறது. குடும்ப சென்டிமென்ட்டிலும் இசையை பிழிந்திருக்கிறார் சைமன்!
ஒட்டுமொத்தமாக அவதார் 3 ஒரு அருமையான காட்சி அனுபவம், கணிக்கக்கூடிய கதை அனுபவம். மொத்தத்தில் அவதார் 3 அறிவை விட புலன்களுக்கு ஒரு விருந்து.
மாலைமலர் ரேட்டிங் : 3 / 5






