search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கி.ராஜநாராயணன், சிவகுமார்
    X
    கி.ராஜநாராயணன், சிவகுமார்

    எனது ஞானத்தந்தையை இழந்துவிட்டேன் - கி.ரா. மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்

    பிரபல எழுத்தாளர் கி.ரா தனது அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார் என நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
    பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார். கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ரா. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.

    தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் கி.ரா.வின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தந்தை 99 வயது வாழ்ந்த கி.ரா.வை இழந்துவிட்டேன். கி.ரா.வும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய்-தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் புதுச்சேரி சென்று கலந்து கொண்டிருக்கிறேன்.

    சிவகுமார்

    அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்”. இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.
    Next Story
    ×