என் மலர்
சினிமா

திரையரங்கம், பன்னீர்செல்வம்
“நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்” - கொரோனா பயத்தை போக்க தியேட்டர் அதிபர் யோசனை
கொரோனா பயத்தை போக்க நடிகர்களும், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருவதாலும், தியேட்டர் அதிபர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டும், தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

அரசு உத்தரவின்படி, அனைத்து தியேட்டர்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் மீது ரசிகர்களும், பொதுமக்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியபோது அமைச்சர்கள், பொதுமக்களுடன் அமர்ந்து கோழிக்கறி சாப்பிட்டு, பொதுமக்களின் பயத்தை போக்கினார்கள். அதுபோல பொதுமக்களுக்கு பயம் வராமல் இருக்க அவர்களுடன் நடிகர்கள் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
Next Story