என் மலர்
சினிமா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
வேல்ஸ் வெற்றிவிழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுவதாக கூறினார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் ஐசரி கணேஷ். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி ‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய 3 படங்களை தயாரித்தார். இந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களின் வெற்றி விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு ஐசரி கணேஷ் நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- இதுவரை பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் கலந்துகொண்ட நான் முதன் முறையாக இந்த பட விழாவில் பங்கேற்கிறேன். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ ஒரே வருடத்தில் 3 வெற்றி படங்களை தயாரித்திருப்பது பாராட்டுக்குரியது. திரைப்படங்கள் மூலம் பண்பாடு, வாழ்வியல், கலாசாரம் போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுகின்றன.
நாடகத்துறையில் இருந்துதான் எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வந்தார். அதுபோல் ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலனும் நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வந்து, எம்.ஜி.ஆருடன் அரசியலிலும் பயணித்தார். எம்.ஜி.ஆர்., நடிக்கும் போது, ஏழை மக்களின் பசி துயர் அறிந்து, வீட்டிற்கு வருவோருக்கு, பசியாற உணவளித்தார். பசியின் கொடுமையை அறிந்ததால், முதல்வராக பொறுப்பேற்றதும், பள்ளிக் குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்கி, சரித்திரம் படைத்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், மக்களுக்கு முன் மாதிரியாக, வாழ்ந்து காட்டினர்.

மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் சாதனமாக மட்டும் சினிமாவை பயன்படுத்தாமல், மக்களை நெறிமுறைப்படுத்தும் களமாக மாற்றி அமைத்தனர். ‘இளைஞர்கள் நலன் கருதி, தீய கருத்துக்களை பரப்பும் வகையில் படம் எடுக்க வேண்டாம்; அத்தகைய படங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டாம்‘ என்று திரைத்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். அரசியல் ரீதியாக கூறவில்லை; சமுதாய அக்கறையோடு பதிவு செய்கிறேன். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் சமுதாய அக்கறையுள்ள படங்களை எடுக்கும்படி வேண்டுகிறேன்.
30 ஆயிரம் மாணவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டு கல்வித்துறையில் சிறப்பாக சேவை புரியும் ஐசரி கணேசும் 3 சிறந்த வெற்றி படங்களை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஜெயலலிதா வழியில் இந்த அரசு சினிமாத்துறைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் நிதி வழங்கியிருக்கிறது. கோவா பட விழாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திரைப்பட துறையினரை இந்த அரசு மறக்காது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முன்னதாக பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசு சார்பில் சர்வதேச திரைப்பட விழா விற்கு முன்பு 50 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக 25 லட்சம் ரூபாய் சேர்ந்து 75 லட்சமாக வழங்கியுள்ளதாக கூறினார். முதல்வர் பல அதிசயங்களை நடத்தி காட்டுபவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

விழாவில் ‘கோமாளி’ படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் உள்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ‘எல்.கே.ஜி.’ படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், டைரக்டர் பிரபு உள்ளிட்டோருக்கும், ‘பப்பி’ படத்தில் நடித்த வருண், சம்யுக்த ஹெக்டே உள்ளிட்ட நடிகர்நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல்அமைச்சர் விருதுகள் வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, காமராஜ், கே.சி.வீரமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தே.மு. தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், டைரக்டர்கள் பாக்யராஜ், சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார். ஆர்.வி.உதயகுமார், திருமலை, நடிகர்கள் ஜீவா, உதயா, சிவா, ஆர்.கே.சுரேஷ், நடிகை குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்யராஜ், டைரக்டர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிர்வாக தயாரிப்பாளர் அஸ்வின் வரவேற்றார்.
Next Story