search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கருணாநிதி வாழ்க்கைப் படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜுடன் பேச்சுவார்த்தை
    X

    கருணாநிதி வாழ்க்கைப் படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜுடன் பேச்சுவார்த்தை

    பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை படமாகி வரும் நிலையில், கருணாநிதியின் வாழ்க்கையும் படமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதில் நடிக்க பிரகாஷ்ராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #KarunanidhiBiopic
    தென் இந்திய சினிமாவில் இது தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கில் முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.

    எம்.ஜி.ஆர் என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. இதை காமராஜ், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய பாலகிருஷ்ணன் படமாக்கி வருகிறார்.

    எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக பிக்பாஸ் ரித்விகா நடிக்கிறார். இப்படத்தில் கருணாநிதி கதாபாத்திரத்திற்கும், ஜெயலலிதாவாக யார் நடிக்கப்போகிறார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. எம்.ஆர்.ராதாவாக பாலா சிங் நடிக்கிறார்.



    இயக்குனர் பிஆர்.பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு நடிக்கிறார். சென்னை, பாலக்காடு மற்றும் திருப்போரூரில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்க இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி மூன்று இயக்குனர்களும் போட்டி போடுகின்றனர்.

    விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வைக்க இந்தி நடிகை வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தின் பெயர் த அயர்ன் லேடி. நித்யாமேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். வரும் பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாளில் படத்தை தொடங்க இருக்கிறார்கள்.



    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் இறங்கி இருக்கின்றனர். ஏற்கெனவே நடிகர் பிரகாஷ்ராஜ் ‘கருணாநிதி வேடத்தில் நடிக்க ஆசை’ என்று தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

    எம்.ஜி.ஆர், கருணாநிதியை மையமாக வைத்து ‘இருவர்’ படத்தை இயக்கினார் மணிரத்னம். அப்போது நடந்த தமிழக அரசு திரைப்பட விழாவில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதி ‘இருவர்’ படத்தில் கருணாநிதி வேடத்தில் நடித்ததற்காக பிரகாஷ்ராஜுக்கு விருது வழங்கினார்.

    1967-ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியான கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தை விரைவில் தொடங்கும் வேலையை ரகசியமாக செய்து வருகின்றனர்.

    கருணாநிதி வேடத்தில் நடிப்பதற்காக பிரகாஷ்ராஜிடம் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. #KarunanidhiBiopic #PrakashRaj

    Next Story
    ×