search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மோசடி வழக்கில் டி.வி. நடிகை சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
    X

    மோசடி வழக்கில் டி.வி. நடிகை சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

    சென்னையில் ஏ.சி. எந்திரங்கள் வாங்கியதில் ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக டி.வி. நடிகை அனிஷா கைது செய்யப்பட்டது எப்படி என்று தகவல் வெளியாகியுள்ளது. #Anisha
    சின்னத்திரையில் பிரபலமான நடிகை அனிஷா ஏ.சி. எந்திரங்கள் வாங்கியதில் ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், டி.வி. தொடர் நடிகையாகவும் இருப்பவர் பூர்ணிமா என்கிற அனிஷா (34). இவருடைய கணவர் சக்திமுருகன் (38). இவர்கள் இருவரும் கிண்டி, நெசப்பாக்கம் ஆகிய இடங்களில் மின்சாதன பொருட்கள் வாங்கி விற்கும் நிறுவனங்களை நடத்தி வந்தனர்.

    இதில், பணம் வரவு- செலவு பொறுப்பாளராக அனிஷா இருந்து வந்தார். வாங்கி விற்கும் பொருட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கான காசோலைகளில் அனிஷாதான் கையெழுத்து போடுவார்.

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏ.சி. எந்திரங்களின் மொத்த விற்பனையாளர் பிரசாந்த்குமார் என்பவரிடம் ஏ.சி. எந்திரங்களை வாங்கி விற்றனர். இதில் 107 ஏ.சி. எந்திரங்களை வாங்கி விட்டு அதற்கான பணத்தை கொடுக்கவில்லை.

    இந்த பணத்துக்காக டி.வி. நடிகை அனிஷா கையெழுத்து போட்டு கொடுத்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரசாந்த்குமார் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் அனிஷாவின் கணவர் சக்தி முருகன் தலைமறைவாகி விட்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பண மோசடிக்கு டி.வி.நடிகை அனிஷா உடந்தையாக இருந்தது தெரியவந்தது. சக்தி முருகனின் சகோதரர் ஹரிகுமாரும், இவர்களுக்கு உதவியாக இருந்து வந்தார் என்பதும் தெரிந்தது.



    இதையடுத்து, கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை அனிஷா, சக்திமுருகனின் தம்பி ஹரிகுமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சக்திமுருகனை தேடி வருகிறார்கள்.

    இதுபோல் மற்றொரு மோசடி தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் சக்தி முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரை நூம்பல் பாலாஜி நகர் யுவராஜ் என்பவர் கொடுத்துள்ளார்.

    இதில் டிராவல் நிறுவனம் நடத்துவதாக கூறி சக்தி முருகன் 25-க்கும் அதிகமான கார்களை வாங்கி விட்டு அதன் உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டிராவல் மானேஜராக பணி புரிந்து வந்த ரமேஷ் (29) என்பவரும் தலைமறைவாகி விட்டார். இதிலும் அனிஷாவுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இவைதவிர டி.வி. நிறுவனங்களில் விற்பதற்காக வாங்கிய ஏராளமான டி.வி.களுக்கும் சக்திமுருகன் பணம் கொடுக்கவில்லை என்று வளசரவாக்கம் போலீசில் மற்றொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இதில் சக்திமுருகன் எத்தனை லட்சம் மோசடி செய்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×