என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    "கிழக்கு வாசல்'' படத்துக்குப்பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் நடித்த படங்களை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.
    "கிழக்கு வாசல்'' படத்துக்குப்பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் நடித்த படங்களை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    1992-ம் ஆண்டு, ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்த மிகப்பெரிய வெற்றிப்படம் "சின்னக்கவுண்டர்.'' இதில் விஜயகாந்த்தும், சுகன்யாவும் இணைந்து நடித்தனர்.

    படத்தின் திரைக்கதை, வசனம், பாடல் ஆகிய பொறுப்புகளையும் உதயகுமார் ஏற்றிருந்தார்.

    விஜயகாந்த்துக்கு இது முற்றிலும் மாறுபட்ட படம். பெரும்பாலும் `ஆக்ஷன்' படங்களில் நடித்து வந்த அவர், இதில் கதர் சட்டை, கதர் வேட்டி அணிந்து, கிராமத்து பிரமுகராக வலம் வந்தார்.

    முதலில், `இந்த படம் வெற்றி பெறுமா?' என்பதில் விஜயகாந்துக்கே சந்தேகம் இருந்தது. வீரதீரச் செயல்கள் புரியும் ஹீரோவாக தன்னை வழிபடும் ரசிகர்கள், `கதர் சட்டை' கவுண்டராக ஏற்பார்களா என்று அவர் தயங்கினார்.

    ஆனால், படம் பிரமாதமாக அமைந்து, சக்கை போடு போட்டது.

    படத்தைப் பார்த்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார், "கதர் சட்டைக்கு மரியாதை கொடுக்கும் படம்'' என்று பாராட்டினார்.

    இந்தப்படத்தில் ஒரு காட்சி.

    விஜயகாந்த் பம்பரத்தை சுழற்றிவிட, அது விர் என்று பறந்து சென்று தரையில் படுத்திருக்கும் சுகன்யாவின் வயிற்றில் அழகாகச் சுற்றும்!

    இந்தக் காட்சி ரசிகர்களுக்கு கிளு கிளுப்பையும், பெண்களிடம் சலசலப்பையும் உண்டாக்கியது.

    1992-ல் இசை அமைப்பாளர் இளையராஜா சொந்தமாகத் தயாரித்த படம் "சிங்காரவேலன்.'' கமலஹாசனும், குஷ்புவும் இணைந்து நடித்த இந்தப் படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-

    "கமல் சாரை வைத்து, சீரியசான கதை அம்சம் கொண்ட ஒரு படத்தை உருவாக்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால ஆசை. ஆனால் அவரை வைத்து, நகைச்சுவைப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் கமல் அருமையாக நடித்து, இப்படத்துக்கு வெற்றி தேடித்தந்தார். கமலுடன் பணியாற்றியது, மறக்க முடியாத அனுபவம்.

    என் படங்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி கமலிடம் கேட்டுக்கொண்டேன். அதன்படி, அவர் தேவர் மகன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அது வடிவேலு வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.''

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    "கிழக்கு வாசல்'' படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், "நாம் இருவரும் இணைந்து படம் பண்ணவேண்டும்'' என்று தன் விருப்பத்தை உதயகுமாரிடம் தெரிவித்திருந்தார்.

    அதற்கான சந்தர்ப்பம் 1993-ல் வாய்த்தது. ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

    எந்த மாதிரி கதையை எடுக்கலாம் என்று ரஜினியும், உதயகுமாரும் ஆலோசித்தபோது, "உங்கள் படத்தை நான் இயக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?'' என்று உதயகுமார் கேட்டார்.

    "இரண்டும் ஒன்றுதானே'' என்றார் ரஜினி.

    "இல்லை'' என்றார், உதயகுமார்.

    "எப்படி?'' என்று கேட்டார், ரஜினி.

    "ரஜினி படம் என்பது பார்முலா படம். அதை யாரும் இயக்கலாம். ஆனால், உதயகுமார் பாணி படம் என்றால், நான்தான் இயக்க முடியும்'' என்றார், உதயகுமார்.

    அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே, "ரஜினி ஸ்டைல் கதையையே பண்ணுங்கள்'' என்றார்.

    "ஜில்லா கலெக்டர்'' என்ற கதையை சொன்னார், உதயகுமார். "சரி, எடுக்கலாம்'' என்று ரஜினி சொன்னார்.

    பிறகு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், உதயகுமாரை ரஜினி அழைத்தார். "என் ஸ்டைலில் வேண்டாம்; உங்கள் ஸ்டைலிலேயே படத்தை எடுங்கள்'' என்றார்.

    ஏற்கனவே, "பொன்னுமணி'' என்ற கதையை ரஜினிக்கு உதயகுமார் சொல்லியிருந்தார். "அதை எடுக்கலாமே'' என்று ரஜினி கூற, "அந்தக் கதையை கார்த்திக்கிடம் சொல்லி, அவரை வைத்து எடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்'' என்றார், உதயகுமார்.

    அதன் பிறகுதான், "எஜமான்'' கதை முடிவானது. இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வேட்டி-சட்டையில் நடித்தார், ரஜினி.

    அவருக்கு ஜோடி மீனா. படம் பெரிய வெற்றி பெற்றது. "என்னால் மறக்க முடியாத படம்'' என்றார், ரஜினி.

    1994 ஏப்ரல் 14-ல் (தமிழ்ப்புத்தாண்டு) வெளிவந்த படம் "பொன்னுமணி.'' கதாநாயகனாக கார்த்திக் நடித்த வெற்றிப்படம்.

    இந்தப் படத்தில்தான் சவுந்தர்யா புதுமுகமாக அறிமுகமானார். முதல் படம் என்று கூற முடியாதபடி சிறப்பாக நடித்தார்.

    இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-

    "பொன்னுமணியில் கதாநாயகியாக நடிக்க, முதல் கட்டமாக 3 பேர்களை தேர்வு செய்தோம். அவர்களை நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்திப் பார்த்ததில், இறுதியாக சவுந்தர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவர் டாக்டருக்கு படிக்க வேண்டியவர். குடும்ப சூழ்நிலை காரணமாக நடிக்க வந்தார். அவருடைய நிஜப்பெயர் சவுமியா. அதை "சவுந்தர்யா'' என்று மாற்றினேன். அறிமுகப் படத்திலேயே நல்ல பெயர் வாங்கினார். என்னிடம் கடைசி வரை நன்றி விசுவாசத்துடன் இருந்தார்.

    பெரிய வெற்றிப்படமான பொன்னுமணி, 48 நாட்களில் தயாரிக்கப்பட்டதாகும்.''

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    1995-ம் ஆண்டு பிரபுவின் 100-வது படமான "ராஜகுமாரன்'' படத்தையும், கார்த்திக் நடித்த "நந்தவனத்தேரு'' என்ற படத்தையும், 1997-ம் ஆண்டு நடிகர் அர்ஜ×ன் நடித்த "சுபாஷ்'' என்ற படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    1995-ம் ஆண்டு 8-வது உலகத்தமிழ் மாநாட்டிற்காக பண்டைய தமிழ் இலக்கியத்தை வைத்து தமிழக அரசுக்காக "இலக்கியச்சோலை'' என்ற படத்தை எடுத்தார். இந்த படத்தை அரசுக்கு இலவசமாக இயக்கிக்கொடுத்தார்.

    1996-ம் ஆண்டு "சின்னராமசாமி பெரியராமசாமி'' படத்தில் ஜெயராமனுடன் இணைந்து ஆர்.வி.உதயகுமாரும் நடித்தார். அந்தப்படம் சில பிரச்சினைகள் காரணமாக இதுவரை வெளிவரவில்லை.

    1998-ம் ஆண்டு "தாரகராமுடு'' என்ற தெலுங்கு படத்தை டைரக்ட் செய்தார். படத்தில் ஸ்ரீகாந்த், சவுந்தர்யா ஆகியோர் நடித்தனர். தமிழில் "வெள்ளி நிலவே'' என்ற பெயரில் இது வெளியானது.

    2005-ம் ஆண்டு "கற்ககசடற'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் அறிமுகமானார்.

    உதயகுமாரின் மனைவி பெயர் சுஜாதா.

    இந்த தம்பதிகளின் ஒரே மகளான பூமிகா, மூன்றாம் வகுப்பு மாணவி.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருது பெற்ற உதயகுமார், திரைப்பட மானியக்குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.
    கிழக்கு வாசல்'' படப்பிடிப்பின் போது, விபத்துகள் ஏற்பட்டு நினைவு இழந்து "கோமா''வில் இருந்த டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
    "கிழக்கு வாசல்'' படப்பிடிப்பின் போது, அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டன. மண்டை உடைந்து, 1 1/2 மாதம் நினைவு இழந்து "கோமா''வில் இருந்த டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் அதிசயமாக உயிர் பிழைத்தார்.

    இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-

    "கிழக்குவாசல்'' படப்பிடிப்பையும், "உறுதிமொழி'' படப்பிடிப்பையும், ஒரேநேரத்தில் இரவும் பகலுமாக நடத்தினேன்.

    அப்போது தேக்கடிக்கு எங்களுடன் சிவாஜிசார் குடும்பத்துடன் வந்து தங்கினார். எங்கள் அனைவருக்கும், அவரது கையாலேயே அயிரைமீன் குழம்பு சமையல் செய்து பரிமாறினார். அதை இன்றைக்கும் மறக்கமுடியாது.

    கிழக்கு வாசல் படப்பிடிப்பு முழுவதுமே தொடர்ந்து விபத்துகள் நடந்தன.

    ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது, திடீர் என்று செட் தீப்பிடித்து எரிந்தது. அதை அணைத்து விட்டு சூட்டிங்கை நடத்தினோம்.

    படத்திற்கு கதை வசனம் எழுதிய மதுவுக்கு, தீவிபத்தை பார்த்ததும், வலிப்பு வந்துவிட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்துவிட்டு, நடிகை சுலக்சனாவை வைத்து படப்பிடிப்பை நடத்தினோம். அவர் நடிக்கத்தொடங்கியதும், அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது! உண்மையாகவே ரத்தம் வருகிறது என்பது தெரியாமல், "இந்த சீனில் ரத்தம் கிடையாதே'' என்றேன்! பின்னர் அவரையும் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தோம்.

    "கிழக்கு வாசல்'' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் எடுக்கவேண்டி இருந்தது. நான் ஆனைமலையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டு இருந்தேன். அந்த சமயம் என்கல்லூரி நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் என்னை தங்களது காரில் ஏற்றிக்கொண்டனர்.

    நாங்கள் சென்று கொண்டு இருந்தபோது கார்விபத்து ஏற்பட்டு கார் 13 முறை உருண்டது. எனது உதவியாளர் மணிகண்டன், உதவி டைரக்டர் தரணி ஆகியோர் என்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர்.

    எனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நான் நினைவு இழந்தேன்.

    நான் உயிர் பிழைப்பேனா என்பதே சந்தேகமாகிவிட்டது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், 1ஷி மாதம் "கோமா''வில் கிடந்தேன்.

    இந்த சமயத்தில்தான் இந்த உலகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொண்டேன். டைரக்ட் செய்வதற்காக எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த சில பட அதிபர்கள், ஆஸ்பத்திரிக்கு வந்து அட்வான்ஸ் பணத்தை திருப்பி வாங்கிச் சென்றார்கள். நான் பிழைக்கமாட்டேன் என்று அவர்கள் நினைத்துவிட்டனர்.

    டாக்டர்களின் தீவிர சிகிச்சையாலும், என் மனைவியின் மாங்கல்ய பலத்தாலும் அதிசயமாக உயிர் பிழைத்தேன்.

    கொஞ்சம் குணம் அடைந்ததும், "கிழக்கு வாசல்'' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து படத்தை முடிக்க ஏற்பாடு செய்தேன். சிலர், "உங்களுக்கு இன்னும் பூரண குணம் ஆகவில்லை. ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? வேறு யாரையாவது வைத்து, கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து விடலாம்'' என்று யோசனை கூறினார்கள்.

    "உயிரே போனாலும் சரி. நான்தான் கிளைமாக்ஸ் காட்சியை எடுப்பேன்'' என்று கூறிவிட்டு, காதிலும், மூக்கிலும் பஞ்சை வைத்துக்கொண்டு, உச்சகட்ட காட்சியைப் படமாக்கினேன்.

    இதுபற்றி கேள்விப்பட்டு, ரஜினிகாந்த் ஆச்சரியப்பட்டார்.

    "கிழக்குவாசல்'' படம் வெற்றிகரமாக ஓடி, 175-வது நாள் விழாவைக் கொண்டாடியது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போதிலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்திருக்கிறார், உதயகுமார். இது மாதிரி ஆட்கள் இருப்பதால்தான் சினிமாத் தொழில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்றார்.

    பிறகு, "தயவு செய்து, உங்கள் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்'' என்றார். நான் திகைத்துப் போய்விட்டேன். "நீங்கள் சான்ஸ் கேட்கும் நிலையில் நான் இல்லை. நான்தான் உங்களிடம் சான்ஸ் கேட்கும் நிலையில் இருக்கிறேன்'' என்று கூறி, என் கெடிகாரத்தை கழற்றி ரஜினியின் கையில் கட்டிவிட்டேன்.

    நான் அவர் மீது கொண்டிருந்த பாசம், அவர் என் மீது கொண்ட அன்பு ஆகியவை காரணமாகத்தான், பிற்காலத்தில் "எஜமான்'' படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
    ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த "புதிய வானம்'' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.
    ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

    "புதிய வானம்'' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், "எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை'' என்ற வரிகள் வருகின்றன.

    அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

    பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், "இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!'' என்றார்.

    "ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்'' என்று உதயகுமார் கூறினார்.

    பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

    அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

    "எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    பாடல் முழுவதும் முடிந்ததும், "புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?'' என்று கேட்டார்.

    "இல்லை. நானாகத்தான் எழுதினேன்'' என்று நான் பதில் அளித்தேன். "இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று சிவாஜி கூறினார்.

    அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.''

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    "புதிய வானம்'' வெற்றிப்படமாக அமைந்தது.

    இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

    உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் "கில்லி'', "தூள்'' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

    1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் "உறுதிமொழி'' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

    இந்தப்படத்திலேயே "கிராபிக்ஸ்'' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

    உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக "கிழக்கு வாசல்'' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

    "கிழக்கு வாசல்'' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார்.
    எம்.ஜி.ஆர். படங்களையே தயாரித்து வந்த சத்யா மூவிஸ், சிவாஜிகணேசனை வைத்து "புதிய வானம்'' என்ற படத்தைத் தயாரித்தது.
    எம்.ஜி.ஆர். படங்களையே தயாரித்து வந்த சத்யா மூவிஸ், சிவாஜிகணேசனை வைத்து "புதிய வானம்'' என்ற படத்தைத் தயாரித்தது. அந்தப் படத்தையும், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் படங்களையும் ஆர்.வி.உதயகுமார் இயக்கினார்.

    ஆர்.வி.உதயகுமாரின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள முல்லைப்பாளையம் கிராமம். தந்தை பெயர் வெங்கடசாமி. தாயார் கண்ணம்மாள். விவசாய குடும்பம்.

    சத்தியமங்கலம் மங்களாபுதூர் பள்ளியில் பள்ளிப்படிப்பை தொடங்கிய ஆர்.வி.உதயகுமார் கோபி கலைக்கல்லூரியில் `பி.ï.சி.' படித்தார். பின்னர் கோவை அரசு கலைக்கல்லூரியில் `பி.எஸ்.'சி.' பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து 1980-ம் ஆண்டு சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்து டைரக்டர் துறைக்கு பயிற்சி பெற்றார்.

    திரைப்பட கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது "பாரதியின் கவிக்கனவு'' என்ற குறும்படத்தை டைரக்ட் செய்தார்.

    அதன் பிறகு "நினைவுப் பாதையில் ஒரு பயணம்'' என்ற ஆங்கில குறும்படத்தை டைரக்ட் செய்தார்.

    1983-ம் ஆண்டு எடிட்டர் வெள்ளைச்சாமியின் "நேரம்வந்தாச்சு'' என்ற படத்திற்கு துணை டைரக்டராக பணிபுரிந்தார். இதற்கிடையே பழனியப்பன் ராமசாமி சிபாரிசில் ஜெமினியில் வேலை கிடைத்தது. அப்போது தயாரிக்கப்பட்ட "ஜனனி'' படத்திற்கு ஆசோசியேட் டைரக்டராகவும், தயாரிப்பு மேற்பார்வையாளராகவும் பணிசெய்தார்.

    1985-ம் ஆண்டு ஆபாவாணனின் "ஊமைவிழிகள்'' என்ற படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் ஆர்.வி.உதயகுமாருக்கு படவாய்ப்புகள் வரத்தொடங்கின. 1986-ம் ஆண்டு "கடைக்கண் பார்வை'' என்ற படத்தில் உதயகுமார் ஒரு பாடலை எழுதினார். "நான் நெஞ்சுக்குள் உன்னை வைத்தேன். நீ என்மனதை கிள்ளி வைத்தாய்'' என்ற அந்த பாடல் மூலம் புகழ்பெற்றார்.

    இந்த சமயத்தில் பட அதிபர் மணி அய்யர் தயாரித்த "உரிமைகீதம்'' படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு உதயகுமாருக்கு கிடைத்தது. இப்படத்தில் பிரபு, கார்த்திக் ஆகியோர் நடித்தனர்.

    இந்தப்படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, உதயகுமாருக்கு திருமணம் நிச்சயமாயிற்று. இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.கணேசனின் மகள்தான் மணமகள். இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் நண்பர்தான் எஸ்.எஸ்.கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண் பார்க்கும் நிகழ்ச்சியின்போது, மணப்பெண்ணிடம் தனியே பேச விரும்பினார், உதயகுமார். அதன்படி இருவரும் பேசினர்.

    "நான் இப்போதுதான் ஒரு படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறேன். படம் ஓடினாலும் ஓடலாம்; ஓடாமலும் போகலாம். என்னை பெரிய டைரக்டர் என்று நினைத்து திருமணத்துக்கு சம்மதித்து விடாதே! அதே சமயம், எந்த நிலையிலும் உன்னை வைத்துக் காப்பாற்ற என்னால் முடியும்'' என்று உதயகுமார் வாக்குறுதி அளித்தார்.

    திருமண வரவேற்புக்கு சிவாஜிகணேசன், விஜயகாந்த் ஆகியோர் வந்திருந்தார்கள். ஆர்.எம்.வீரப்பனும் வந்திருந்தார்.

    அவர் உதயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், "நீங்கள் டைரக்ட் செய்துள்ள படத்தின் காட்சிகளைப் பார்த்தேன். நன்றாக இருந்தன. என்னுடைய அடுத்த படத்தை நீங்கள்தான் டைரக்ட் செய்ய வேண்டும்'' என்று கூறியதோடு, ரூ.1 லட்சத்துக்கான `செக்'கை அட்வான்சாகக் கொடுத்தார்.

    இதுபற்றி உதயகுமார் குறிப்பிடுகையில், "என் திருமண வரவேற்பின்போது, ஆர்.எம்.வீரப்பன் சார் வந்து ரூ.1 லட்சத்திற்கான `செக்'கை கொடுத்தது, நான் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி ஆகும். அதை வைத்துத்தான் என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அவர் உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது'' என்றார்.

    ஆர்.வி.உதயகுமாரின் "உதய கீதம்'' 1988-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

    அடுத்தபடியாக, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிசுக்காக "புதிய வானம்'' படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    இந்தப்படத்தில் சிவாஜிகணேசன் நடிக்க வேண்டும் என்று ஆர்.எம்.வீரப்பன் விரும்பினார். அதன் பேரில், சிவாஜியை போய்ப் பார்த்தார், உதயகுமார்.

    அப்போது நடந்தது பற்றி அவர் கூறியதாவது:-

    "சிவாஜியை நான் `அப்பா' என்றுதான் கூப்பிடுவேன். புதிய வானம் படத்தில் அவரை நடிக்கச் செய்ய, அவரை போய்ப்பார்த்தேன்.

    `உன் படம் ("உதயகீதம்'') நன்றாகப் போகிறதாமே' என்று என்னிடம் கேட்டார், சிவாஜி.

    "ஆம், அப்பா! என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள்தான் நடிக்கவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன். `ஹீக்குமத்'' என்ற இந்திப்படத்தைப் போட்டுக்காட்டி, அதில் ஷம்பிகபூர் நடித்த வேடத்தில் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன். அவர் ஒப்புக்கொண்டார்.

    "பட அதிபர் யார்?'' என்று கேட்டார். "ஆர்.எம்.வீ'' என்றதும், "அவர் என்னை வைத்து படம் எடுக்க மாட்டாரே'' என்றார். "இல்லை, இல்லை. அவர்தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார்'' என்று நான் சொன்னேன்.

    அதன் பேரில் புதிய வானம் படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொண்டார்.

    வெண்ணிற ஆடை மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமான நிர்மலா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.
    உண்மையில், "வெண்ணிற ஆடை''யில் நடித்தபின் மேற்கொண்டு நடிக்க நிர்மலா விரும்பவில்லை.

    இதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தனியாக 10-ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் செய்து விட்டு, கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாவது காரணம், "வெண்ணிற ஆடை''யில் தன்னுடைய நடிப்பு நிர்மலாவுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, பட உலகையே விட்டு ஒதுங்கிவிட எண்ணினார்.

    இந்த சமயத்தில் பிரபல மலையாள டைரக்டர் குஞ்சாகோ, தான் எடுக்கும் "காட்டு துளசி'' என்ற படத்தில் நிர்மலாவை நடிக்க வைக்க விரும்பினார்.

    ஆனால் நிர்மலா நடிக்க மறுத்தார். "என் முதல் படத்திலேயே என் நடிப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, எனக்கு நடிக்க விருப்பம் இல்லை'' என்று கூறினார்.

    ஆனால் குஞ்சாகோ விடுவதாக இல்லை. "உங்களிடம் மறைந்திருக்கும் நடிப்புத் திறமையை வெளியே கொண்டுவர என்னால் முடியும். `காட்டுத்துளசி', உங்களுக்கு ஏற்ற அருமையான கதை. இதில் நடித்தால், உங்களுக்கு பெரும் புகழ் கிடைப்பது உறுதி'' என்று கூறினார்.

    அவருடைய வற்புறுத்தல் காரணமாக, "காட்டுத்துளசி''யில் நிர்மலா நடித்தார்.

    அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாளப்பட உலகில் நிர்மலா பெரும் புகழ் பெற்றார். நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன.

    இதனால், மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தை கைவிட்டு மலையாளப் படங்களில் நடிக்கலானார்.

    இதன்பின் 1968-ம் ஆண்டு, சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த "லட்சுமி கல்யாணம்'' படத்தில் நடிக்க, நிர்மலாவுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று, நிர்மலா நடித்தார்.

    எம்.ஜி.ஆர். நடித்த "ரகசிய போலீஸ் 115'' என்ற படத்தில், எம்.ஜி.ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து "கண்ணில் தெரிகின்ற வானம், கையில் வராதோ'' என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.

    தொடர்ந்து, "பூவா தலையா'', "மன்னிப்பு'', "வைராக்கியம்'', "வீட்டுக்கு வீடு'', "அன்புக்கு ஒரு அண்ணன்'', "சுடரும் சூறாவளியும்'', "நீதிதேவன்'', "தங்கச்சுரங்கம்'', "எங்கமாமா'', "தங்கைக்காக'', "அன்பு சகோதரர்கள்'', "வெகுளிப்பெண்'', "இன்றுபோல் என்றும் வாழ்க'', "இதயக்கனி'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    1972-ல் இந்தியில் "தோரகா'' என்ற படம் வெளிவந்தது. துணிச்சலான கதை அமைப்பைக் கொண்ட "புதிய அலை'' படம்.

    இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தை, "அவள்'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். கதாநாயகியாக நிர்மலாவும், கதாநாயகனாக சசிகுமாரும், வில்லனாக ஸ்ரீகாந்த்தும் நடித்தனர்.

    இந்தப் படத்தில் நிர்மலா பணக்கார வீட்டுப்பெண். அவரை சசிகுமார் காதலித்து மணப்பார். சசிகுமாரின் நண்பரான ஸ்ரீகாந்த், நிர்மலா மீது மோகம் கொள்வார்.

    ஒரு விருந்தில், எல்லோரும் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, நிர்மலாவை ஸ்ரீகாந்த் கெடுத்துவிடுவார். விடிந்த பிறகுதான் நிர்மலாவுக்கு உண்மை தெரியும்.

    இந்த படம் பரபரப்பாக ஓடியது. எனினும் இத்தகைய கதையை படமாக்கலாமா என்று பட்டிமன்றமே நடந்தது. "படம் ஆபாசம்'' என்று சிலர் கூறினார்கள். "குடிப்பழக்கத்தின் தீமையை, இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது'' என்று வேறு சிலர் வாதம் செய்தனர்.

    1974-ம் ஆண்டு "அவளுக்கு நிகர் அவளே'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார், நிர்மலா. இதில் மூன்று வேடங்களில் நடித்தார்.

    இப்படத்தின் கதாநாயகன் ரவிச்சந்திரன். வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன்.

    200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த நிர்மலா, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருதும், "நாட்டிய திலகம்'' என்ற பட்டமும் பெற்றவர்.

    "ஆடிவரும் தேனே'', "கற்பகம்'', "கல்கி'' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நிர்மலா நடித்துள்ளார்.

    தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-

    "எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன்.

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் குணம், என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவவேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது.

    சினிமாவில் நடிப்பதை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தொலைக்காட்சி தொடர்கள் எனக்கு ஒத்து வரவில்லை. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.''

    இவ்வாறு நிர்மலா கூறினார்.

    வெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
    நிர்மலாவின் சொந்த ஊர் கும்பகோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக்மணி.

    பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்றத்தில் "ஜுரி''யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு "ஜுரி'' என்று பெயர். செல்வாக்கு மிக்க செல்வந்தர்களை இப்பதவியில் நியமிப்பார்கள்.

    நிர்மலாவின் முன்னோர்கள் செல்வந்தர்கள். "அரண்மனைக்குடும்பம்'' என்று பட்டப்பெயர் பெற்றவர்கள்.

    நிர்மலாவின் குடும்பத்துக்கும், கலைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிர்மலா சினிமாவில் சேர்ந்தது எதிர்பாராமல் நடந்தது.

    ஒருநாள் நிர்மலாவின் தந்தை ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச்சுவடிகளை ஆராய்வதற்காக மைசூரில் இருந்து வந்து கொண்டிருந்த வாசுதேவாச்சாரியார் என்பவரை சந்தித்தார். அவர் பரத நாட்டியம் பற்றி உயர்வாகப் பேசினார். "ராஜராஜசோழனே தன் மகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்தார்'' என்று கூறினார்.

    இதனால், பாலகிருஷ்ணனுக்கு நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டது. நிர்மலாவுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். இதை உறவினர்கள் எதிர்த்தனர். ஆனால், பாலகிருஷ்ணன் பின்வாங்கவில்லை. கும்பகோணம் சண்முகசுந்தரம்பிள்ளை என்ற நடனக் கலைஞரிடம் நிர்மலா நடனம் பயில ஏற்பாடு செய்தார்.

    நிர்மலாவின் 6-வது வயதில் அவரது நடன அரங்கேற்றம், கும்பகோணத்தில் நடைபெற்றது.

    பின்னர், சென்னையில் அவரது நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கூட்டம் வரவில்லை. இதனால் நிர்மலாவின் தந்தை வருத்தம் அடைந்தார்.

    "சினிமாவில் நடித்தால்தான் புகழ் பெறமுடியும். பெரிய கூட்டமும் வரும்'' என்று சபாவைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

    நிர்மலா, நடனத்தில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, அப்போது வைஜயந்திமாலா நடத்தி வந்த "நாட்டியாலயா'' என்ற நடனப்பள்ளியில், நிர்மலாவை அவர் தந்தை சேர்த்து விட்டார்.

    பண்டரிபாயை கதாநாயகியாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கவும் ஏற்பாடு செய்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் வரை செலவு செய்து, சில ஆயிரம் அடி வரை படத்தை எடுத்தார். ஆனால், "படம் எடுக்கக்கூடாது'' என்று அண்ணன் எதிர்த்ததால், மேற்கொண்டு படத்தயாரிப்பைத் தொடராமல் பாதியில் கைவிட்டார், பாலகிருஷ்ணன்.

    இந்த சமயத்தில், முற்றிலும் புதுமுகங்களை வைத்து, "வெண்ணிற ஆடை'' என்ற படத்தைத் தயாரிக்க டைரக்டர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பொருத்தமான புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தார்.

    பத்திரிகையாளர் நவீனன், வைஜயந்திமாலாவின் நடனப் பள்ளியில் நிர்மலாவைப் பார்த்தார். "இவ்வளவு அழகான பெண், சினிமாவில் நடித்தால் நிச்சயம் புகழ் பெறுவார்'' என்று எண்ணினார். நிர்மலாவின் தந்தையை சந்தித்து, "டைரக்டர் ஸ்ரீதர், புதுமுகங்களை வைத்து ஒரு படம் தயாரிக்கப்போகிறார். நீங்கள் அவரை சந்தியுங்கள். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்'' என்று கூறினார்.

    நிர்மலாவின் தந்தைக்கு, சினிமா என்றால் பிடிக்காது. எனினும், நிர்மலாவின் நடனத் திறமையை வெளிப்படுத்த சினிமா உதவும் என்று எண்ணினார். நிர்மலாவுடன் சென்று, ஸ்ரீதரை சந்தித்தார்.

    "மேக்கப்'' டெஸ்ட்டில் நிர்மலா வெற்றி பெற்றார். "வெண்ணிற ஆடை''யில் நிர்மலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

    1965-ம் ஆண்டு "வெண்ணிற ஆடை'' வெளிவந்தது. இப்படத்தில்தான் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமானார். அவருக்கு அடுத்த முக்கிய வேடம் நிர்மலாவுக்கு.

    மற்றும் ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரும் இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்கள். முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம், ஸ்ரீதர் டைரக்ட் செய்த படம் என்பதால் "வெண்ணிற ஆடை''பரபரப்பாக ஓடியது.

    நிர்மலாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்தன.

    "நிர்மலா'' என்ற பெயர் பட உலகில் பலருக்கு இருந்ததால், `வெண்ணிற ஆடை' நிர்மலா என்று குறிப்பிடப்பட்டார்.

    இதுபற்றி நிர்மலா கூறுகையில், "வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல். அதை உங்கள் பெயருக்கு முன் போடாதீர்கள் என்று பலர் கூறினார்கள். நானும், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடும்படி பட அதிபர்களிடம் கூறினேன். ஆனால், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடாமல் எந்த நிர்மலா என்று தெரியாது என்று கூறி, வெண்ணிற ஆடை என்று போட்டார்கள். அதுவே பிரபலமாகி விட்டது'' என்று குறிப்பிட்டார்.
    படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்த தன் மகன் சிபி, நடிக்க வந்தது எப்படி என்பதை நடிகர் சத்யராஜ் விளக்கினார்.
    சத்யராஜ் குடும்பத்தில் எல்லோருமே படித்து பட்டம் பெற்றவர்கள்.

    சத்யராஜ் கோவை அரசு கலைக்கல்லூரியில் "பி.எஸ்சி'' பட்டப்படிப்பை முடித்தவர். அதன் பிறகே நடிக்க வந்தார். மனைவி மகேஸ்வரி, உடுமலைப்பேட்டை விசாலாட்சி கல்லூரியில் "பி.ஏ'' பட்டம் பெற்றார். `கல்லூரியில் படிப்பை முடித்து செல்லும் சிறந்த மாணவி'யாக கல்லூரி நிர்வாகம் இவரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்தது.

    சத்யராஜ் தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன்.

    மகள் திவ்யாவும் நிறைய படித்தவர். அயல்நாட்டு வர்த்தகப் படிப்பு, மனிதவள மேலாண்மைத் துறை படிப்பு, அதோடு மனோதத்துவ கவுன்சிலிங்கில் எம்.பில். முடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரி நாட்களில் படிப்பில் முதல் மாணவியாகவே இருந்திருக்கிறார்.

    மகள் பற்றி சத்யராஜ் கூறும்போது, "பெரியார் கண்ட புதுமைப்பெண் என்று திவ்யாவை தாராளமாக சொல்லலாம். இன்றைய சமுதாயத்தின் பெண்ணியவாதியாகவும் பார்க்க முடிகிறது'' என்றார், பெருமிதத்துடன்.

    "மகன் சிபி நடிக்க வந்தது எதிர்பாராதது'' என்கிறார், சத்யராஜ். அப்படியானால் நடிப்பு ஆர்வம் சிபிக்குள் எப்போது, எப்படி வந்தது?

    சத்யராஜ் கூறுகிறார்:-

    "எங்கள் வீட்டில் படிப்பை சாதாரணமாக நினைத்துக் கொண்டது நான் மட்டும்தான். பார்டரில் பாஸ் பண்ணினால் போதும் என்பதுதான், சிறுவயது முதலே என் `கல்விக் கொள்கை'யாக இருந்தது.

    நான் பள்ளியில் சேர்ந்ததே இரண்டாம் வகுப்பில் இருந்துதான். முதல் வகுப்புக்கு போகவில்லை. வயது அடிப்படையில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். நிறைய மார்க், முதல் மாணவன் என்ற கனவெல்லாம் கிடையாது. ஒருமுறை பள்ளியில் பரீட்சை வந்தது. முதல் பரீட்சை கணக்குப் பரீட்சை. ஒரு மணி நேரம் வரை கணக்கு போட்டுக்கொண்டிருந்த நான், அதுவரை போட்ட கணக்குகளுக்கு எவ்வளவு மார்க் கிடைக்கும் என்று கூட்டிப்பார்த்தேன். 40 மார்க்குக்கு மேல் வரும் என்பது தெரிந்ததும் உடனே பேப்பரை மடித்து ஆசிரியர் கையில் கொடுத்து விட்டு வீட்டுக்குப் போய்விட்டேன்.

    பரீட்சை தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள் நான் வீட்டுக்குப் போனது அம்மாவுக்கு அதிர்ச்சியாகி விட்டது. நானாகவே அம்மாவுக்கு விளக்கம் கொடுத்தேன். "மொத்தம் நூறு மார்க்குக்கு 40 மார்க் வரை சரியாக எழுதிட்டேன். பாஸ் ஆனா போதாதா? அதுதான் பேப்பரை ஆசிரியர் கிட்ட கொடுத்துட்டு வந்திட்டேன்'' என்றேன்.

    படிப்பில் நான் இப்படி என்றால், சிபி எனக்கு நேர் எதிர். எப்போதும் முதல் ரேங்க்தான் வாங்குவான். அவன் படிப்பில் `நம்பர் ஒன்'னாக இருந்ததால் 6-ம் வகுப்பில் டபுள் புரமோஷன் கொடுத்தார்கள். அதன்படி 7-வது வகுப்புக்கு போகாமலே 8-வது வகுப்புக்கு போய்விடலாம். ஆனால் சிபி அப்படிப்போக மறுத்துவிட்டான்.

    "போயிருக்கலாமே'' என்று நான் சொன்னபோது, சிபியோ, "வரிசையாகவே வரேன். இப்ப நான் `திடுதிப்'பென 8-வது போய்விட்டால் அங்கே இதுவரை முதல் இடத்தில் இருக்கிற பையனோடு படிப்பில் மல்லுக்கட்ட வேண்டிவரலாம்'' என்றான்.

    ஒருமுறை எப்படியோ முதல் ரேங்க் மிஸ்சாகி இரண்டாவது ரேங்க் வந்தான். அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. நான் சமாதானப்படுத்திப் பார்த்தேன். அவன் கேட்பதாயில்லை. கட்டிலில் புரண்டு புரண்டு அப்படி ஒரு அழுகை அழுதான். அடுத்த பரீட்சையில் முதலிடம் வந்த பிறகே முகத்தில் மறுபடியும் மலர்ச்சியை பார்க்க முடிந்தது.

    படிக்கிற நாட்களில் விஜய் ரசிகனாக இருந்தான். ஆனால் நடிப்பு அவனை எப்படி, எப்போது ஈர்த்தது என்பது எங்களுக்கே ஆச்சரியம். கல்லூரியில் `பி.காம்' மூன்றாம் ஆண்டு படிக்கிறபோதுதான் அவனது நடிப்பு ஆர்வம் தெரியவந்தது. தனது நடிப்பு ஆசையை சிபியே எங்களிடம் சொன்னபிறகுதான், மகனுக்குள் இருந்த நடிகனை பார்க்க முடிந்தது.

    நடிக்க வரும்போது சினிமாவுக்கான நடனம், சண்டைப்பயிற்சி என அவரே தயாராகிக் கொண்டார். தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர். நடித்து பெரும் வெற்றியை எட்டிய `ஸ்டூடண்ட் நம்பர் ஒன்' படத்தை தமிழில் ரீமேக் செய்தார், டைரக்டர் செல்வா. கல்லூரி, இளமை, காதல் என்று அமைந்து இளைஞர்களின் விருப்பப்படமாகிய இந்தப்படம் சிபிக்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைக்கச் செய்தது.

    தொடர்ந்து `ஜோர்', `மண்ணின் மைந்தன்', `வெற்றிவேல் சக்திவேல்', `கோவை பிரதர்ஸ்', `லீ' என எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான கேரக்டர்கள்.

    சிபிக்கு முழுக்க ஆக்ஷன் பரிவாரங்களுடன் ராம.நாராயணன் டைரக்ஷனில் அமைந்த படம் `மண்ணின் மைந்தன்! இந்தப் படத்தில் நடிக்கும்போது சிபிக்கு 22 வயது. படத்தின் தொடக்க விழா கலைஞர் தலைமையில் நடந்தது. படத்தின் நாயகன் என்ற முறையில் சிபியும் மேடையில் பேசவேண்டி வந்தது.

    மேடையில் பேச தயங்கிய சிபியிடம், "கலைஞர் இருக்கிற மேடையில் மட்டும் தைரியமாக பேசி விட்டால், உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் உன்னால் பேசமுடியும்'' என்று சொன்னேன். இன்று சிபி சினிமா மேடைகளில் சகஜமாக பேசக்காரணமே, அன்று கலைஞர் இருந்த மேடையில் பேசியதால் கிடைத்த தைரியம்தான்.

    படிக்கிற நாட்களில் சிபியிடம் ஒரு வேகம் இருந்தது. நடிக்க வந்த பிறகு, வேகத்தோடு விவேகமும் சேர்ந்திருக்கிறது. இப்போது கதை விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டுகிறார். ஒரு விளையாட்டு வீரனின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலித்த "லீ'' படம் சிபிக்கு திருப்பு முனையாகவே அமைந்தது.

    "லீ'' படத்துக்குப் பிறகு கேட்டு வந்த பத்து பதினைந்து படங்களை தவிர்த்திருக்கிறார். கதையும் நன்றாக அமைந்து அதில் தானும் வெளிப்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். கதை அவருக்குப் பிடித்தால் என்னிடம் அந்தக் கதை பற்றி விவாதிக்கிறார். எனக்கும் திருப்தி என்றால் ஒப்புக் கொண்டு விடுகிறார்.

    இப்போது வி.என்.சுந்தர் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து டைரக்டர்கள் செல்வா, ஜான் (`சச்சின்' இயக்குனர்) படங்களையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

    இந்தியிலும், தெலுங்கிலும் புகழ் பெற்ற தயாரிப்பாளர் - டைரக்டர் ராம்கோபால் வர்மா, சிபியை ஹீரோவாக்கி தமிழிலும் தெலுங்கிலும் ஒரு படம் தயாரிக்கிறார். மிகப்பெரிய அளவில் பேசப்படும் படமாகவும் சிபியை ஆக்ஷனில் முன்னிறுத்தும் படமாகவும் இது அமையும்.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    சத்யராஜ் இப்போது `தங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து

    கூறியதாவது:-"பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' படங்களில் நடித்த பிறகு இனி புதுசாக என்ன நடித்துவிடப்போகிறீர்கள் என்று என்னிடம் கூட நண்பர்கள் கேட்டார்கள். சமீபத்தில் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் என்னை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சேர்ந்திருந்ததால் ஏற்பட்ட கேள்வி இது. எல்லாவித நடிப்பிலும் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்பவனே நல்ல கலைஞன்.

    இதை மனதில் வைத்து "வேலை கிடைச்சிடுச்சு'' மாதிரியான கதைப் பின்னணியில் காமெடி இணைத்து டைரக்டர் கிச்சா சொன்ன "தங்கம்'' படத்தில் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கவுண்டமணி அண்ணனும் என்னுடன் காமெடிக் கூட்டணி போடுகிறார்.

    படத்தில் நாங்கள் பண்ணும் ஒவ்வொரு காமெடி அலம்பலுக்கும் ரசிகர்கள் வெடிச்சிரிப்பில் குலுங்கப் போகிறார்கள். `கரகாட்டக்காரன்' படத்தில் இடம் பெற்று இன்றைக்கும் பேசப்படும் "வாழைப்பழ காமெடி'' மாதிரி இந்தப் படத்திலும் ஒரு காமெடி இருக்கிறது. இந்தக் காட்சியில் நடித்த போது எங்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷலாக எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன்'' படப்பாடலான "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த'' பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். கெட்டப்பிலேயே நடிக்கிறேன். கதைப்படி, தங்கை மீது உயிரையே வைத்திருக்கிற நான், தங்கையின் திருமணம் சிறப்பாக நடப்பதாக காணும் கனவே இந்தப்பாட்டு. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். மேக்கப்பில் வர அவர் நடித்த காலங்களில் பயன்படுத்திய அதே வகை பான்கேக்கை பயன்படுத்தி மேக்கப் போட்டேன். பொருத்தமாக அமைந்தது மேக்கப். பாடல் காட்சியிலும் "நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆரை'' பார்க்க முடியும்.

    நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அந்த உரிமையில் அவர் பாடிய பாடலுக்கு அவர் தோற்றத்தில் நான் ஆடுவதை எனக்குக் கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்.

    நடிப்பை பொறுத்தவரையில் ரசிகர்கள் விரும்புகிற நடிகனாக நடிப்பேன்; நீடிப்பேன் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு.''

    உற்சாகமாகவே சொல்கிறார், சத்யராஜ்.

    சத்யராஜக்கு ஓவியம் வரையவும் தெரியும். "வசந்தமாளிகை'' வந்தபோது, அதில் சிவாஜியின் நடிப்பில் மனதைப் பறிகொடுத்த சத்யராஜ் தீட்டிய சிவாஜியின் படம் இது.

    "ஒன்பது ரூபாய் நோட்டு'' படத்தில் மாதவ படையாச்சியாக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ்.
    படப்பிடிப்பின்போதும், படம் வெளியான பிறகும் அவருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவங்கள் பல.

    அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார், சத்யராஜ்:

    "பெரியார் படத்தில் நடித்த காலகட்டத்திலேயே `கண்ணாமூச்சி ஏனடா' என்றொரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். கதையும், அதில் என் கேரக்டரும் வித்தியாசமாக இருந்ததால் ஒப்புக்கொண்டு நடித்தேன்.

    இந்தப் படத்தின் தனிச்சிறப்பே, அதில் பெண்களுக்கு கிடைத்த அதிகபட்ச இடஒதுக்கீடுதான்! படத்தின் தயாரிப்பாளர் ராதிகா, டைரக்டர் பிரியா, கேமராக் கலைஞர் பிரீத்தா -இப்படி முக்கிய பொறுப்புகளை பெண்களே சுமந்த படம்.

    இவர்களில் குறிப்பாக கேமரா கலைஞர் பிரீத்தா கேமராவை தோளில் சுமந்தபடி பல காட்சிகளை உற்சாகமாக படம் பிடித்தபோது, தொழிலை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது புரிந்தது. இந்த வகையில் கலைப்பங்களிப்பிலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதை படத்தின் வெற்றியிலும் இவர்கள் நிரூபித்தார்கள்.

    ஒரு படத்தில் என் நடிப்பு சிறப்பாக அமைகிறதென்றால், அதற்குப் பின்னணியில் தயாரிப்பு, டைரக்ஷன், கேமரா மற்றும் டெக்னிஷியன்கள் என்று பலரும் இந்த சிறப்புக்கு முன்னாகவும், பின்னாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த வகையில் பல்வேறு கேரக்டர்கள் மூலம் என்னை வார்த்தெடுத்த "அமைதிப்படை'', "வால்டர் வெற்றிவேல்'', "காக்கிச்சட்டை'', "பூவிழி வாசலிலே'', "பெரியார்'' போன்ற படங்களின் வரிசைக்குப்பின் நிச்சயமாய் அந்தப் படங்களின் இயக்குனர்கள் இருக்கிறார்கள். எனவே எதையும் என் வெற்றி என்று சொல்வதற்கில்லை. ஒரு கூட்டு முயற்சியில் விளைகிற வெற்றி என்றே இதை சொல்வேன்.

    "கண்ணாமூச்சி ஏனடா'' என்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தியது என்றால், என்னை ரசிகர்களிடம் உணர்ச்சிபூர்வமாக கொண்டு சேர்த்த படம் "ஒன்பது ரூபாய் நோட்டு.'' 3 வருடத்துக்கு முன்பே, தங்கர்பச்சானின் இந்தக் கதையை ஆஸ்கார் மூவிஸ் சார்பில் எம்.பாஸ்கர் தயாரிக்க இருந்தார்.

    அந்த சமயத்தில் ஒரு நாள் இரவு 11 மணிக்கு என்னை போனில் தொடர்பு கொண்ட இயக்குனர் தங்கர்பச்சான், "உங்களை பார்க்க வேண்டுமே'' என்றார். "உடனே வாருங்கள்'' என்றேன். வந்தவர் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து, "இது நான் எழுதிய `ஒன்பது ரூபாய் நோட்டு' நாவல். இதில் வருகிற மாதவபடையாச்சி கேரக்டரில் நீங்கள் நடித்தால் என் கற்பனைக்கு உயிர் கிடைக்கும்'' என்றார்.

    நான் அவரிடம், "கதை என்னன்னு சொல்லுங்க. எனக்கு முடிவு சொல்ல வசதியாய் இருக்கும்'' என்றேன். அவரோ விடாப்பிடியாக, "இல்லண்ணே! படிச்சுப்பாருங்க. இதுல வர்ற குடும்பத் தலைவர் மாதவபடையாச்சி கேரக்டர் உங்களை கவர்ந்தால் நடிக்கிறீங்க'' என்றார்.

    ஒரு தலைசிறந்த படைப்பாளி மட்டுமே தான் வாழ்கிற சூழ்நிலையை அப்படியே தனது படைப்புகளில் கொண்டுவரமுடியும். அதை "ஒன்பது ரூபாய் நோட்டு'' நாவலை படித்தபோது என்னால் முழுமையாக உணர முடிந்தது.

    நிஜமாகவே `மண்ணின் மைந்தர்' என்று கொண்டாடும் அளவுக்கு உயிரோட்டமான ஒரு உணர்வுக் குவியலை படைத்திருந்தார், தங்கர்பச்சான். நான் அவரிடம், "பெரியார் படத்தில் நடிக்கும்போது எனக்கு சில பொறுப்புகள் இருந்தன. பெரியாரை சுவாசிக்கும் கலைஞரை திருப்திப்படுத்த வேண்டும். பெரியாரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் வீரமணியை திருப்திப்படுத்தவேண்டும்.

    பெரியாரின் தொண்டர்களை திருப்திப்படுத்தவேண்டும். பெரியார் படத்தில் இது எல்லாமே நிறைவாக அமைந்தது. நான் 30 வருடத்தில் 170 படம் நடித்து முடித்திருக்கிறேன். என்றாலும் "மாதவ படையாச்சி'' எனக்குப் புதுமுகம்தான். நீங்கள் `வா' என்றால் வருவேன். `போ' என்றால் போவேன். `திரும்பு' என்றால் திரும்புவேன். மாதவபடையாச்சிக்கான இலக்கணம் அப்போதுதான் முழுமையாகும்'' என்றேன்.

    கோவை, ஈரோடு மாவட்டங்களில் பேசப்படும் `கொங்குத்தமிழை' பெரியார் படத்தில் பேசினேன். நான் கோவை மாவட்டத்துக்காரன் என்பதால் இப்படிப்பேச எளிதாய் இருந்தது. அதுமாதிரி முந்தைய படங்களில் நெல்லைத்தமிழ், சென்னைத்தமிழ் பேசியிருக்கிறேன். நண்பர் விஜயகாந்த், வடிவேல் போன்றவர்களுடன் பேசிப்பேசி மதுரைத்தமிழ் அத்துப்படியாகி விட்டது. "மந்திரப்புன்னகை'' படத்துக்காக வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் நெல்லைத் தமிழ் கற்றுத்தந்தார்.

    முதன் முதலாக தென்தமிழகத்தில் இருந்து விலகி வட தமிழகப் பகுதியில் நடக்கிற கதை. அவர்களின் தமிழ் உச்சரிப்பு முற்றிலும் எனக்குப் புதுசு. நெல்லையில் `என்ன' என்பதை சென்னை பாஷையில் `இன்னா' என்கிறார்கள். இந்தக் கதையில் வருகிற கேரக்டர்களோ `இன்ஞா' (அதாவது நா-ஞா இரண்டு உச்சரிப்புக்கும் இடைப்பட்ட கலவை) என்கிறார்கள். இந்த உச்சரிப்புக்குள் பழகும்வரை கொஞ்சம் சிரமப்படவே செய்தேன். ஆனாலும் கதைக்குள் வந்த பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை.

    பத்திரக்கோட்டை மண்ணில் விழுந்து நான் அழுகிற காட்சியைத்தான் முதலில் படமாக்கினார் தங்கர்பச்சான். காட்சி படமானதும் ஓடிவந்து என் கையை பிடித்துக்கொண்டவர், "அண்ணா! எனக்கு என் மாதவ படையாச்சி கிடைச்சிட்டார்'' என்றார், குதூகலக் குரலில்.

    அடுத்து நான் கோவணம் கட்டி கிராமத்து குழாயடியில் குளிக்கிற காட்சி. இந்த காட்சியை எடுப்பதற்காக ஊரின் மெயின்ரோட்டில் குழாய் பதித்து விட்டார் தங்கர். இரவு 10 மணிக்கு மேல் இந்த காட்சியை எடுக்கிறார்கள்.

    நான் படப்பிடிப்புக்கு புறப்படும்போது என் உதவியாளர் ஓடிவருகிறார். என் காதருகே, "சார்! இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க ஜனங்கள் கயிறு கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். எப்படியும் ஆயிரத்துக்கு மேல் இருப்பார்கள். அதோடு படப்பிடிப்பை பார்க்க பஸ், லாரிகளில் இருந்தும் நிறைய பேர் வந்து `திருவிழா' தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்'' என்றார்.

    உதவியாளர் எதற்காக இதைச் சொல்கிறார் என்பது எனக்குத் தெரியும். நான் என் உதவியாளரிடம், "கோவணம் தமிழனின் பூர்வீக உடைதானே! அப்படி நடிக்க நான் ஏன் வெட்கப்படணும்? இந்த உடையில்தானே நம்ம ஊர் விவசாயி `ஏர்' பிடித்து உழுகிறார்! எனவே கோவணம் அணிந்து நடிப்பதில் நான் பெருமைதான் படணும்'' என்றேன்.

    படப்பிடிப்பு முடிந்து `டப்பிங்' பேசும்போது டப்பிங் தியேட்டருக்கு நடிகை அர்ச்சனாவும் வந்திருந்தார். படத்தில் என் மனைவியாக நடித்தது அவர்தானே. நான் நடித்த காட்சிகளை டப்பிங் தியேட்டரில் அவர் பார்த்தபோது, கண் கலங்கி விட்டார். அப்போது அவர் என் கையை பிடித்துக்கொண்டு "உங்களுக்கு எல்லா விருதுகளும் கிடைக்கும்'' என்றார், குரல் தழுதழுக்க.

    நான் பல படங்களில் சிறப்பாக நடித்து முடித்திருந்தாலும்கூட, எனக்கு தேசிய விருது பெற்றுத்தரும் நடிப்புக்கான அளவுகோல் தெரியாது. ஆனால் அர்ச்சனாவோ சிறந்த நடிப்புக்காக 2 முறை தேசிய விருது பெற்றவர். அவர் உணர்ச்சிவசப்பட்டு என்னை பாராட்டியபோது, படத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களுக்கும் அப்போதே விருது கிடைத்த சந்தோஷம் எனக்குள்.

    படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் என் பேரன் பசியால் துடிக்கிற காட்சியை நடுராத்திரி முந்திரிக்காட்டுக்குள் படமாக்கினார் தங்கர்பச்சான். செருப்புகூட இல்லாமல் மறுபடி சொந்த ஊருக்கு வரும் மாதவபடையாச்சி, பசியால் கதறும் பேரனை பார்த்து கண்கலங்குவது காட்சி. சுற்றிலும் காட்டுப்பகுதியான அந்த இடத்தில், ஒரு குடிசை போட்டு காட்சியை படமாக்கினார்கள். காட்சிக்கு முன் தங்கர்பச்சான் என்னிடம், "சார்! இருட்டில் உங்கள் காலுக்குக்கீழ் ஏதாவது நெளிவதாக உணர்ந்தால் உடனே காலை உதறி விடுங்கள்'' என்றார்.

    நான் எதற்காக அப்படிச் சொல்கிறார் என்பது புரியாமல் அவரை பார்க்க, அவரோ, "முந்திரிக்காட்டுப்பகுதி அல்லவா? தேள், பாம்பு, நட்டுவக்காலி எல்லாம் சர்வசாதாரணமாக நடமாடும். அதனால்தான் சொன்னேன்'' என்றார். எனக்கு திகிலாகிவிட்டது. ஆனாலும் பயப்படாமல் (அல்லது பயப்படுவதை காட்டிக்கொள்ளாமல்) நடித்தேன்.

    என்றாலும் `பாம்பு' பயத்தையும் தாண்டி அந்தக்காட்சியில் நடித்தபோது, ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு பசியாற்ற முடியாத மாதவபடையாச்சி உணர்வு என்னை பாதிக்க, நானும் அழுதுவிட்டேன்.

    படம் தயாரானபோது, கலைஞர் பார்த்தார். படம் முடிந்து வந்தபோது அவர் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்தேன். கலைஞருடன் வந்திருந்த நடிகர் நெப்போலியன், என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறிவிட்டார்.

    ரஜினி சார் பார்த்துவிட்டு, "படத்தில் பங்கேற்ற எல்லோருக்குமே விருது நிச்சயம். குறிப்பாக உங்களுக்கு விருது உறுதி'' என்று வாழ்த்தினார்.

    நடிகர் பிரபு படம் பார்த்துவிட்டு, "தலைவரே! உங்களுக்கு எல்லா விருதுகளும் கிடைக்க உங்கள் சார்பில் நான் கடவுளை வேண்டிக்கிறேன்'' என்றார்.

    கம்ïனிஸ்டு தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு ஆகியோரும் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

    படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டும், வரவேற்பும் கிடைத்திருப்பதை பார்க்கும்போது `மாதவ படையாச்சி'யாக வாழ்ந்ததற்கு கிடைத்த வெகுமதியாகவே அதை உணர்கிறேன்''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    பெரியார் படத்தயாரிப்பு அரசு நிதி உதவி கிடைத்தது குறித்து சத்யராஜ் இது எதிர்பாராத ஒன்று என கூறினார்
    "பெரியார்'' படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-

    "1967-ல், தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நேரத்தில், ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த அண்ணா, திருச்சியில் உள்ள "பெரியார் மாளிகை''யில் தனது அமைச்சரவை சகாக்களுடன் சென்று பெரியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சம்பவத்தை, அதே பெரியார் மாளிகையில் படமாக்கியபோது, படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே உணர்ச்சிமயமாகி

    இருந்தோம்.அண்ணாவாக, நாவலராக, பேராசிரியராக, கலைஞராக என்று தலைவர்களின் அன்றைய தோற்றத்துக்கு பொருத்தமானவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார், இயக்குனர் ஞானராஜசேகரன். இப்படி தலைவர்கள் வருகிற காட்சி படமாகும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட நடிகர்களின் பெயரைச் சொல்லாமல் அவர்கள் ஏற்றிருந்த தலைவர்களின் பெயர்களைச் சொல்லியே நடிப்பதற்கு அழைத்தார்கள். குறிப்பாக அண்ணாவாக நடித்தவர் டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி. `ஷாட்' ரெடியானதும் அவர் பெயரைச் சொல்லாமல், "அண்ணாவை வரச்சொல்லுங்க'' என்பார், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான். இப்படி அழைத்தது அந்த சூழ்நிலைக்கு இன்னும் கனம் சேர்த்தது.

    வயது முதிர்ந்த காலகட்டத்தில் பெரியாரை அடிக்கடி புரட்டியெடுத்த நோய் வயிற்று வலி.

    மேடையில் உட்கார்ந்த நிலையில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென இந்த வயிற்றுவலி வந்து விடும் என்றார்கள். சிறுநீர்பையில் இருந்து நீர் பிரிவது சிரமமாக இருக்கவே ஒரு டிïப் இணைத்திருக்கிறார்கள். என்றாலும் சிறுநீர் பிரியும்போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பெரியாரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்திருக்கிறது. பல நேரங்களில் இந்த வலி தாங்காமல் மேடையிலேயே உருண்டு புரண்டிருக்கிறார்.

    இப்போது, பெரியாராக நானே அந்த வலியை நடிப்பில் கொண்டுவர வேண்டிய கட்டாயம். அதனால், இப்படி பெரியாரின் வயிற்றுவலி வேதனையை நேரில் பார்த்த தொண்டர்கள் யாராவது சொன்னால் அதை முடிந்தவரை என் நடிப்பிலும் கொண்டு வரமுடியும் என்று எண்ணினேன்.

    ஆனால், நான் எதிர்பார்த்த மாதிரி அப்படியொரு தொண்டர் எனக்குக் கிடைக்கவில்லை. ஆசிரியர் வீரமணியிடம் இதுபற்றி கூறினேன். "உங்களுக்கு தெரிந்த தொண்டர் இருந்தால் சொல்லுங்கள். அவர் சொல்வதை என் நடிப்பில் கொண்டு வருகிறேன்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதும், ஆசிரியர் வீரமணி என்னிடம், "என்னைவிட பெரியாரின் தொண்டர் வேறு யாருங்க?'' என்று கேட்டார். "தந்தை பெரியாரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு பெற்ற தொண்டன் என்ற முறையில், பெரியாரின் வயிற்று வலியும், அதற்காக அவர் துடித்த துடிப்பும் நான் அறிவேன்'' என்றவர், அப்போதே பெரியாரின் வயிற்று வலி காட்சிகளை கண்முன் கொண்டு வந்தார்.

    அறையில் அவர் வயிற்று வலிக்காக உருண்டு புரண்டு வேதனையை வெளிப்படுத்தியது நடிப்பு என்றாலும், என் கண்கள் கலங்கிப் போயின. மக்களின் அறியாமை இருளை அகற்ற வந்த பகலவன், தன் வேதனைகளை தாங்கிக்கொண்டு மக்களுக்காக பாடுபட்டாரே, எப்படிப்பட்ட மக்கள் தலைவர் அவர்'' என்று எண்ணியபோது, என் கண்கள் கலங்கிவிட்டன.

    சிறுவயதில் இருந்தே வசதியாக வாழ்ந்து பழகியவன் நான். எனக்கு ஏழ்மை பற்றி தெரியாது. நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்து வாய்ப்புக்காக பல இடங்களுக்கும் பஸ்சில் போக நேர்ந்தபோதுதான், நடுத்தர வர்க்கம், அதற்கும் கீழே ஒரு வர்க்கம் என மக்களின் பொருளாதாரப் போராட்டம் புரிய ஆரம்பித்தது.

    ஆனால், என்னைவிட பலமடங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெரியார், தன்னை வருத்திக்கொண்டு மக்களின் மூடநம்பிக்கைகள் அகல்வதற்காகப் போராடினாரே, அந்த போராட்ட குணம்தான் அவரை உயர்த்தியிருக்கிறது.

    என் தந்தையாக நடிக்கும் சத்யநாராயணா (இவர் தெலுங்கில் பெரிய நடிகர்) வெங்காயமண்டியில் என்னை செருப்பால் அடிக்கிற காட்சியில், என்னை அடிக்க மறுத்துவிட்டார். படத்தில் மிக முக்கியமான காட்சி அது. டைரக்டரும், கேமராமேனும் எவ்வளவோ சொல்லியும், செருப்பை தூக்கிய அவரது கை, என் மீது படாமல் அப்படியே அசைவற்று நின்றது!

    அவர் தயங்குவதைப் பார்த்ததும், எனக்கு பயம் வந்துவிட்டது. "சத்யநாராயணா சார்! தந்தை பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் இது. பெரியாரின் தந்தை தன் மகனை செருப்பால் அடிக்கிறார். எனவே `நடிப்பு' என்பதை மறந்துவிட்டு நிஜமாகவே அடியுங்கள். ஆனால் ஒரே `டேக்'கில் சரியாக அடித்து விடுங்கள். அடுத்தடுத்து செருப்பு அடி வாங்கினால், என் உடம்பு தாங்காது'' என்றேன்.

    அப்படியும் அவர் தயங்கி, பிறகு வேறு வழியின்றி நடித்தார். அதாவது என்னை செருப்பால் அடித்தார்! ஒரே `டேக்'கில் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததால், என் கன்னம் அதிக சேதாரமின்றி தப்பியது!

    படம் வளரத் தொடங்கியபோது செலவைப்பற்றி தயாரிப்பு தரப்பு கவலைப்படவேயில்லை.

    பெரியார் சென்று வந்த ரஷியாவிற்கு சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றதும் உடனே பயண ஏற்பாடு செய்தார்கள். பெரியாரின் ரஷிய அனுபவங்களை ரஷியாவிலேயே தங்கி படம் பிடித்தோம்.

    ஆங்கிலமே தெரியாத - பேசாத ஒரு நாடு ரஷியா. தங்கள் தாய்மொழிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தாய்மொழிக்கான மரியாதை நம்மிடையே குறைந்து வருவதை அங்கே இருந்த நாட்களில் ஒப்பிட்டுப் பார்த்தபோது வேதனைதான் மிஞ்சியது.

    மக்கள் தலைவர் பற்றிய படம் என்பதால், அரசிடம் உதவி கேட்கலாம் என்று நட்பு முறையில் சில யோசனை கூறினார்கள். ஆனால், கேட்காமலேயே பெரியார் படத்துக்கு 95 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு சார்பில் வழங்கினார், முதல்வர் கலைஞர். காரைக்குடியில் நடிகை ரகசியாவின் நடனக்காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் வீரமணியிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அவர்தான் இந்த சந்தோஷத் தகவலை முதன் முதலாக என்னிடம் சொன்னார்.

    "பெரியார்'' படத்துக்கு, அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர் கலைஞர், "மகன், தந்தைக்குச் செய்யும் உதவி'' என்று ஒரே வரியில் பதில் சொல்லி, கேள்விக்கு முற்றுப்புள்ளி

    படம் முடிந்து ஏவி.எம். ஏ.சி. தியேட்டரில் `டபுள் பாசிடிவ்' பார்த்தார் கலைஞர். பின்னணி இசை, எடிட்டிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படாமல் இருக்கும் `டபுள் பாசிடிவ்' 4ஷி மணி நேரம் வரை திரையில் ஓடும்.

    அதை பொறுமையாய் கலைஞர் பார்த்து முடித்தபோது, இரவு 11 மணி. படம் முடிந்ததும் உடனே அவர் வீட்டுக்குப் போகவில்லை. ஏ.சி. தியேட்டருக்கு வெளியே நின்று, காட்சிகள் பற்றி ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கிறார். தியேட்டருக்கு வெளியே கொசுக்கள் தொல்லை வேறு. கொசுக்கடியையும் தாங்கிக்கொண்டு, படம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்து துணைவியார் போன் வந்தது. "சாப்பிட வரவில்லையே'' என்பது போன் வழிச்செய்தி. "வந்துவிடுகிறேன்'' என்றார் முதல்வர். அதோடு, "பெரியார் படம் பார்க்க வந்தேன். படம் முடிந்து இயக்குனர் ஞானராஜசேகரன், வீரமணி, வைரமுத்து, சத்யராஜ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்'' என்ற தகவலையும் தெரிவித்தார்.

    தன் சாப்பாட்டு நேரத்தைக்கூட துறந்து, "பெரியார்'' நினைவுகளுடன் ஐக்கியமாகி விட்டார், கலைஞர். நாங்கள்தான் `பசியோடு இருக்கிறீர்கள்' என்று நினைவூட்டி அவரை அனுப்ப வேண்டியதாயிற்று. அவர் புறப்படும்போதுகூட, "படத்தில் பெரியாரின் இறுதி ஊர்வலக் காட்சியை சேர்க்க மறந்து விடாதீர்கள். அதை சேர்த்தால்தான் சிறப்பாக இருக்கும்'' என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

    "பெரியார்'' படம் வரும்போது மட்டுமின்றி, பெரியார் காலமானபோதும் அவர்தான் முதல்வர். பெரியார் காலமான தகவல் முதல்வர் கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டதும், அரசு மரியாதைக்கு உத்தரவிட்டார். அப்போதிருந்த தலைமைச் செயலாளர், "பெரியார் எந்த அரசுப் பதவியிலும் இல்லாதவர். அவருக்கு அரசு மரியாதை கொடுக்க அரசு விதிகளில் இடமில்லை'' என்று சொல்லியிருக்கிறார்.

    அப்போதும்கூட கலைஞர் விடவில்லை. "தேசத்தந்தை என்று நாம் கொண்டாடும் மகாத்மா காந்தி எந்த அரசு பதவி வகித்தார்? அவர் இறந்தபோது, அரசு மரியாதை கொடுக்கப்படவில்லையா? சமூக சிந்தனையாளராய் மக்களின் மூடப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வாழ்நாளை அர்ப்பணித்த பெரியாருக்கு `அரசு மரியாதையுடன் அடக்கம்' என்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றால், அதற்காக என் பதவி போனால் கூட கவலையில்லை'' என்று சொல்லிவிட, அதன்பிறகே பெரியாரின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடந்து முடிந்தது.

    பெரியார் படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் பெரியாராக நடித்த சந்தோஷத்தை திரும்பவும் பெற்றேன். ஆசிரியர் வீரமணி கொடுத்த பெரியாரின் மோதிரத்தை என் விரலில் அணிவித்த கலைஞர், "பெரியாராக நடித்த தம்பி சத்யராஜ×க்கு எனக்கே கிடைத்திராத பெரியாரின் இந்த மோதிரத்தை பொறாமையுடன் வழங்குகிறேன்'' என்று சொல்லி பெரியார் மீதான அவரது பற்றை வெளிப்படுத்தினார்.

    சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, முதல் திரைப்படமாக ஒளிபரப்பானதும் "பெரியார்'' படம்தான். இதுவும் பெரியார் மீதான கலைஞரின் அன்பை - மரியாதையைத்தான் வெளிப்படுத்தியது.

    நான் வில்லனாக நடித்த "சட்டம் என் கையில்'' படத்துக்கும் எனக்கு விருது வழங்கியது கலைஞர்தான். நான் `பாலைவன ரோஜாக்கள்' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது விருது வழங்கியதும், பெரியார் படத்தில் நடித்ததற்காக விருது வழங்கியதும், `எம்.ஜி.ஆர். விருதை' வழங்கியதும் கலைஞர்தான். கடந்த ஆண்டு எனக்கு `பெரியார் விருது' வழங்கியதும் அவர்தான்.

    இப்படி என் நடிப்புலக வாழ்வில் கிடைத்த அத்தனை பெரிய விருதுகளும் கலைஞர் மூலம் கிடைத்திருப்பது எனக்கு காலம் கொடுத்த மிகப்பெரிய கொடை.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.
    பல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்' படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    `பாரதி' டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, "சார்! பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்'' என்றார்.

    எப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே! எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, "நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே'' என்றேன்.

    நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார், ஞானராஜசேகரன்.

    கம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், "யார் இந்த இளைஞர்? காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே?'' என்றேன், ஆச்சரியமாய்!

    ஞானராஜசேகரனோ, "சார்! பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது'' என்றார். "எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்'' என்றேன்.

    ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்' என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ!

    இதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா' என்றே அழைப்பேன். நான் அவரிடம் "பெரியார்'' படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.

    "தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்'' என்று அவர் முன்வந்தார். "பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்'' என்றார்.

    ஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது' என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

    சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்' கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.

    சிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், "பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்'' என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)

    "பெரியார்'' படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

    காஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்' படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.

    அப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, "கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு' பார்த்துக்குவார்'' என்றார்கள்.

    எட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு' என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று

    ஆச்சரியப்பட்டேன்.அதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. "யார் அந்த அன்பு'' என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு!

    சமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது!

    இப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் "பெரியார்'' படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.

    பெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி' படத்தின் மூலம் ஒரு `மகாகவி'யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது.
    அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.

    இப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்' இணைத்துவிட்டது.

    இந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்' அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை' சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

    பெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில் 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.

    அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது "சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க!'' என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க' வார்த்தையை சொல்லிக் காட்டினார்.

    1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.

    தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் "சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க'' என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

    இதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

    கலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை'யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா?''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.


    "மகாநடிகன்'' படத்தில், பித்தலாட்டம் செய்யும் நடிகராக சத்யராஜ் நடித்தபோது, சினிமா வட்டாரத்திலேயே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
    "மகாநடிகன்'' படத்தில், பித்தலாட்டம் செய்யும் நடிகராக சத்யராஜ் நடித்தபோது, சினிமா வட்டாரத்திலேயே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. "இது வெறும் நடிப்புதான்'' என்று கூறிவிட்டு, துணிச்சலாக அந்தக் கேரக்டரில் நடித்தார், சத்யராஜ்.

    "மகாநடிகன்'' படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "குரு தனபாலின் "பெரிய மனுஷன்'' படம் சரியாக ஓடாததால், என் நடிப்பு வாழ்க்கையில் மறுபடியும் சிறு தேக்க நிலை. இதை சரி செய்யக் கிடைத்தது டைரக்டர் சக்தி சிதம்பரத்தின் படங்கள். அவர் இயக்கிய "என்னம்மா கண்ணு'' படம் மூலம் மறுபடியும் `லொள்ளு' சமாச்சாரங்கள் தூவி விடப்பட்டன. ரசிகர்களும் அதை ரசிக்க, அது பெரிய வெற்றிப்படமானது. இந்தப் படத்தில் தேவயானி என் ஜோடியாக நடித்தார்.

    இதைத்தொடர்ந்து, சினிமா பின்னணியைக் கொண்ட "மகா நடிகன்'' என்ற கதையை உருவாக்கினார், சக்தி சிதம்பரம். ஒரு சாதாரண நடிகன் பல்வேறு தகிடு தத்தங்கள் மூலம் பெரிய நடிகனாகிற இந்தக் கதைக்கு, சினிமா வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பலாம் என்று தெரிந்தது. என்றாலும், அந்த கேரக்டர் மனிதாபிமானம் நிறைந்தது என்பதாக கதையில் முடிந்திருப்பதால், பிரச்சினை கிளம்பாது என்றும் நினைத்தோம்.

    படத்தை தயாரித்த முருகன், எனது டைரக்ஷனில் உருவான "வில்லாதி வில்லன்'' படத்திற்கு ஆர்ட் டைரக்டராக இருந்தவர். படம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே படத்தில் இடம் பெறும் காரசார வசனம் குறித்து அவருடன் பேசினேன்.

    "படத்தை இயக்கும் சக்தி சிதம்பரத்திடம் யாராவது கேட்டால், "நான் டைரக்டர் மட்டும்தான். வசனத்தை சத்யராஜ்தான் பேசினார்'' என்று என்னை கைகாட்டி விடுவார். என்னிடம் கேட்பவர்களிடம், "நான் என்ன செய்யட்டும்? டைரக்டர் சொல்கிறபடிதானே நடிகன் செய்ய முடியும்?'' என்று டைரக்டரை கைகாட்டிவிட்டு, நான் தப்பி விடுவேன்.

    கடைசியில் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்'' என்றேன். தயாரிப்பாளர் முருகனோ முகத்தில் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. "சார்! இந்தக் கதையின் பிற்பகுதியில் நாம் சொல்லப்போகும் மெசேஜ், முற்பகுதியில் ஏற்படும் அத்தனை சலசலப்புகளையும் சரி செய்துவிடும். அதையும் தாண்டி ஏதாவது பிரச்சினை என்றால் அதை நான் பார்த்துக்கொள்வேன்'' என்றார்.

    சொன்னதுபோலவே, படம் ரிலீசானபோது ஏற்பட்ட சலசலப்புகளுக்கு பயப்படாமல் படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார்.

    படத்தை நடிகர் பிரபு பார்த்து விட்டு, "தலைவா! இப்படியொரு படத்தில் நடிக்க உங்களால் மட்டுமே முடியும்'' என்றார்.

    படம் வெளிவந்தபோது என் நட்பு வட்டத்தில் கதை பற்றி கேட்கவே செய்தார்கள். `சினிமாவில் எத்தனையோ கேரக்டர்கள் வருகின்றன. இப்படத்தில் வருகிற நடிகரும் ஒரு கேரக்டர் அவ்வளவுதான்'' என்று அவர்களிடம் `என்னிலை' விளக்கம் அளித்தேன்!

    மகாநடிகன் படத்தைத் தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கிய "இங்கிலீஷ்காரன்'' படத்தில் நானும் என் மகன் சிபியும் நடித்தோம்.

    காமெடிக் கலக்கல் கதையில் பின்னப்பட்ட இந்தப் படத்தையும், ரசிகர்கள் வெற்றிபெறச் செய்தார்கள்.

    பத்துப்பதினைந்து வருஷங்களுக்கு முன்பே பெரியார் திடலில் வருஷா வருஷம் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருது கொடுத்து சிறப்பித்து வந்தார்கள். தமிழ் உணர்வுடன் கூடிய கலைஞர்கள் இந்த விழாக்களில் கவுரவிக்கப்பட்டார்கள். இப்படி எனக்கும் விருதுகள் வழங்கினார்கள்.

    நானும், தந்தை பெரியாரின் கொள்கைகளில் என்னை பிணைத்துக் கொண்டவன் என்ற முறையில், பெரியாரின் கொள்கைகள் மீதான என் ஈர்ப்பையும் இந்த மேடைகளில் வெளிப்படுத்தி வந்தேன்.

    இதனால் என் மீது அக்கறை கொண்டவர்கள் என்னிடம், "கடவுள் மறுப்பு என்பது உங்கள் கொள்கையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதை மேடை வரை ஏறி வெளிப்படுத்தணுமா?'' என்று கேட்டார்கள்.

    "மனதில் உள்ளதை வெளிப்படையாக வெளியில் சொல்வதில் என்ன தவறு?'' என்று அவர்களிடம் திருப்பிக் கேட்டேன்.

    "சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதால் உங்கள் மார்க்கெட் பாதிக்கப்படாதா?'' என்று அவர்கள் பக்க கவலையை சொன்னார்கள்.

    "நடிகவேள் எம்.ஆர்.ராதா குணசித்ரம், வில்லன் என்று எந்த வேடத்திலும் தன்னை புதிதாய் வெளிப்படுத்தியவர். "ரத்தக்கண்ணீர்'' படத்தில் ஹீரோவாக அவர் நடித்த நடிப்பு இன்று வரை பேசப்படுகிறதே! அப்படிப்பட்ட நடிகர் பெரியாரின் தொண்டராக மேடை தோறும் கடவுள் மறுப்பு கொள்கையை முழங்கினாரே! நாடக மேடையில் காட்சிக்கு காட்சி அதைத்தானே சொன்னார்! அதற்காக அவரை ரசிகர்கள் புறக்கணிக்கவா செய்தார்கள்? அவரது கொள்கையை விரும்பாதவர்கள் கூட, அவரது நடிப்புக்கு ரசிகர்களாகத்தானே இருந்தார்கள்'' என்று விளக்கம்

    அளித்தேன்."இந்த சமூகம் மீது எனக்கும் அக்கறை இருக்கிறது. ஒரு தொண்டை செய்வதன் மூலம் எனக்கு வருமான இழப்பு நேர்ந்தாலும் கவலைப்படாமல் தொண்டைத் தொடரவே செய்வேன்' என்று, தந்தை பெரியார் பொதுத் தொண்டுக்கு வந்த ஆரம்ப நாட்களிலேயே சொன்னார். அவர் வசதியாக வாழ்ந்தவர். தனது சொகுசான வாழ்க்கை, தனது மகிழ்ச்சி என்று மட்டுமே அவர் சுகபோகமாக வாழ்ந்திருக்க முடியும்.

    ஆனால் சமூக விழிப்புணர்வுக்காக தன்னை வருத்திக்கொண்டு மக்களின் அறியாமைக்காக வருந்தி இயக்கம் கண்டார். அவரது முயற்சிகளில்தான் சமூகம் தலைநிமிரத் தொடங்கியது. அது நல்லது என்பதை தெரிந்து கொண்ட பிறகே நானும் அவரது எண்ணங்களுடன் என்னைக் கலந்தேன். அதை மேடையில் வெளிப்படுத்துவதால் எனது மார்க்கெட்டே போனாலும் கவலைப்படுவதாக இல்லை'' என்றேன்.

    "மகாநடிகன்'' படம் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் பெரியார் திடலில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டேன். பெரியாரின் சிந்தனைகளுடன் ஒன்றிப்போனவன் என்ற முறையில் அந்த மேடையில், "ஒரு நடிகனாக என் லட்சியம் தந்தை பெரியாராக ஒரு படத்தில் நடிப்பதுதான். அப்படி பெரியார் வேடத்தில் நடிக்கும்போது, பணம் வாங்காமல் நடிப்பேன்'' என்றேன்.

    பெரியார் வேடம் எனக்கு பொருத்தமாக இருக்குமா என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. நடிகர் திலகம் சிவாஜியே நடிக்க ஆசைப்பட்ட வேடம். அதில் நான் நடிக்க ஆசைப்பட்டதுகூட பெரியாரின் சிந்தனைகள் என்னை முழு அளவில் ஆக்கிரமித்ததுதான் காரணமாக

    இருக்கும்.இப்படி நான் பெரியாராக நடிக்க ஆசைப்பட்டு ஒரு வருடம் ஆகியிருந்தது. "பெரியார் வேடத்தில் நடிக்க எண்ணிய ஆசை அவ்வளவுதானா?'' என்று எனக்குள் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஞானசேகரன் என்னை சந்தித்தார்.
    சத்யராஜ் நடித்த "வள்ளல்'' படம் வெளிவருவதற்கு தடங்கல் ஏற்பட்டபோது, விஜயகாந்த் தலையிட்டு, படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி புரிந்தார்
    சத்யராஜ் நடித்த "வள்ளல்'' படம் வெளிவருவதற்கு தடங்கல் ஏற்பட்டபோது, விஜயகாந்த் தலையிட்டு, படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி

    புரிந்தார்.சத்யராஜ×ம், விஜயகாந்தும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். அப்போது ஏற்பட்ட நட்பு, பெரிய நடிகர்களான பிறகும் அன்று போலவே இன்றும் தொடருகிறது.

    விஜயகாந்துடன் உள்ள நட்பு குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "1977 பீரியடில், நடிப்பதற்காக நான் கோவையில் இருந்து சென்னைக்கு வந்தேன்.

    இதே நாட்களில்தான் விஜயகாந்தும் மதுரையில் இருந்து ஹீரோவாகும் கனவுடன், சென்னையில் அடியெடுத்து வைத்திருந்தார். சினிமாவில் வாய்ப்பு தேடி விட்டு தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள ஒரு மிலிட்டரி ஓட்டலில், சாப்பாட்டு நேரத்தில் இருவரும் சந்திப்போம்.

    இரண்டு பேருமே சினிமாவை குறி வைத்திருப்பவர்கள் என்பது தவிர, வேறெந்தவிதமான பரிச்சயமும் எங்களுக்குள் அப்போது இல்லை. ஆனாலும் ஓட்டலில் பார்க்கும்போது ஒருவருக்கொருவர் லேசாக சிரித்துக் கொள்வோம். அத்தோடு சரி. சாப்பிட்டு முடித்து விட்டு அவரவர் முயற்சியை தொடரப்போய் விடுவோம்.

    அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சினிமா சான்ஸ் தேட `பைக்'கில் சதா சுற்றிக்கொண்டு இருப்பேன். என் மாதிரியே பிரம்மச்சாரியான விஜயகாந்தும் ஒரு பைக் வைத்திருந்தார். அதுவும் சினிமா சான்சுக்காக சூடு குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தது!

    அப்போது சிவகுமார் ஹீரோவாக நடித்த "சாமந்திப்பூ'' என்ற படத்தில் எங்கள் இருவருக்கும் சின்ன வேடங்கள் கிடைத்தன. என்னிடம் பேசிய படக்குழு நிர்வாகி, "சின்ன வேஷம் என்பதால், `டிரஸ்' தரமாட்டோம். நீங்களே கொண்டு வந்து விடுங்கள்'' என்று கறாராக சொல்லிவிட்டார்.

    நடிக்க வந்து, இரண்டு வருஷம் ஆகிவிட்டது. சில படங்களில் நடித்தும் விட்டேன். இன்னும் கம்பெனி டிரெஸ் தரப்படாமல் சொந்த டிரெஸ்சில் நடிக்க வேண்டியதிருக்கிறதே என்று மனசுக்குள்ளாக வருந்தியபடியே ஒரு தோல் பையில் டிரஸ்சை எடுத்துக்கொண்டு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்தேன்.

    நான் ஸ்டூடியோவுக்கு போன நேரத்தில் விஜயகாந்த் நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர் நடித்து முடித்து புறப்பட்டபோதுதான் அவரும் சொந்த டிரஸ்சில் நடிக்க வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். புறப்படும்போது கொண்டு போயிருந்த தோல் பையில், நடிக்க பயன்படுத்திய சட்டையை மடித்து வைத்து விட்டுப் புறப்பட்டார்.

    அவர் போகும்போது, தோல் பையுடன் வந்திருந்த என்னைப் பார்த்தார். இருவரும் சிரித்துக் கொண்டோம். அந்த நேரத்திலும் எனக்குள்ளாக ஒரு ஆறுதல், விஜயகாந்த்தும் சொந்த டிரெஸ் அணிந்து நடித்தது!

    இரண்டு பேரும் நட்பு ரீதியாக பேச ஆரம்பித்தது, பழகியதுஎல்லாம் இப்படியான படப்பிடிப்புகளின் போதுதான். அவர் அவரது முயற்சிகளை கூறுவார். நான் எனது முயற்சிகளை பகிர்ந்து கொள்வேன். நாளடைவில் எங்கள் நட்பு வலுப்பட்டது. நான் அவரை `விஜி' என்பேன். அவர் என்னை `சத்யராஜ்' என்று அழைப்பார்.

    படங்களில் ஓரளவு நான் வளரத்தொடங்கி, "24 மணி நேரம்'' படத்தின் மூலம் ரசிகர்களிடம் நிலைபெற்றேன். அந்தப் படத்தில் நான் பேசிய, "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' வசனம் பிரபலமாகி, என்னை பட்டிதொட்டி வரை கொண்டு சென்றது.

    என் முகம் திரையில் தெரியத் தெரிய அதை ஒரு ரசிகனாக நானும் பார்த்து என் நிறைகுறையை ஆராய்ந்தேன். அப்போது குளோசப் காட்சிகளின்போது தூக்கலாக இருக்கும் என் பற்கள் எனக்கு குறையாகப் பட்டது. இப்படி பல் தூக்கல் தெரியாமல் இருக்க, தாடை பகுதியில் ஏதாவது ஆபரேஷன் செய்து கொள்ள முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

    நடிகர் சிவகுமார் அண்ணன் ஓவியர் அல்லவா? அவரிடம் எனது இந்த யோசனையை சொன்னேன். அவரோ, "நானே ஒரு ஓவியன். என்னிடமே படம் வரைந்து காட்டுகிறாயா?'' என்று கேட்டுவிட்டார். ஆனாலும் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.

    அப்போது எனக்கு திருமணமாகி விட்டதால், மனைவியிடம் மட்டும் இந்த ஆபரேஷன் விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். ஆபரேஷனுக்குப் பிறகு முகம் ஏடாகூடம் ஆகிவிடுமோ என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தாததால், மனைவி தரப்பில் எதிர்ப்பில்லை.

    பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனிடம் இது விஷயமாய் பேசியபோது, தாடையின் முன்பக்கமாக சிலிக்கானை ஆபரேஷன் மூலம் பொருத்தி விட்டால் முகத்தோற்றம் இன்னும் அம்சமாக அமைய வாய்ப்பிருக்கிறது'' என்றார். பிளாஸ்டிக் சர்ஜரியில் அப்போதே அவர் புகழ் பெற்றிருந்தார். அவர் சொன்னதும் ஆபரேஷனுக்கு தயாரானேன். பட சம்பந்தப்பட்ட யாருக்கும் சொல்லவில்லை. குடும்பத்தில் கூட என் மனைவிக்கு மட்டுமே தெரியும். ஆபரேஷனில் சுண்டு விரல் அளவே உள்ள சிலிக்கானை என் முன்புற தாடையின் அடிப்பக்கமாக ஆபரேஷன் மூலம் பொருத்தினார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.

    ஆபரேஷன் முடிந்து தாடையில் கட்டுப்போட்டார். அப்போது அவர் என்னிடம் "ஒரு வாரத்துக்கு முகம் வீங்கி அகோரமாகத் தெரியும். பயந்துவிடவேண்டாம். ஒரு வாரத்துக்குப் பிறகு வீக்கம் வடிந்து முகம் இயல்பான நிலைக்கு வந்துவிடும்'' என்றார்.

    முகம் சரியான பிறகும் 3 மாதம் படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    டாக்டர் சொன்னது போலவே ஆபரேஷனுக்குப்பின் கட்டு அவிழ்த்தபோது முகம் பூதாகாரமாகத் தெரிந்தது. டாக்டர் சொன்னதை நம்பினபடியால் அதிர்ச்சி அடையாமல் வீக்கம் வடியும்வரை காத்திருந்தேன். வீக்கம் வடிந்து முகம் இயல்பானபோது எனக்கே ஆச்சரியம். முகத்தில் மெருகு கூடியிருந்தது. கண்ணாடியில் பார்த்தபோது `பல் துருத்தல்' தெரியாத நிலை. அதாவது என் முகத்தைப் பார்த்தபோது எனக்குள்ளே ஒரு சந்தோஷ நிலை!

    அப்போது "சந்தோஷக் கனவுகள்'' என்ற படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நான் வில்லன். படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடந்து கொண்டிருந்தது.

    என் சம்பந்தப்பட்ட காட்சிக்காக நான் நாகர்கோவில் படப்பிடிப்புக்குப் போனபோது, விஜயகாந்த் என்னை உன்னிப்பாக கவனித்திருக்கிறார். அதோடு நிற்காமல், "சத்யராஜிடம் ஏதோ ஒரு புது பெர்சனாலிடி கூடித் தெரியுதே'' என்று படப்பிடிப்பில் இருந்த நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். சண்டைக்காட்சிக்கு முன்னதாக என்னை சந்தித்த நேரத்தில், என்னிடமும் இதைக்கேட்டு விட்டார்.

    நண்பர் என்ற முறையில் நான் அவரிடம் உண்மையைச் சொல்லி விட்டேன். சண்டைக் காட்சியின்போது தாடையில் எதிர்பாராமல் அடிபட்டால் ஆபரேஷன் முயற்சி வீணாகிவிடும் என்பதையும் அப்போது சொன்னேன். டாக்டர் என்னிடம் மூன்று மாதத்துக்கு பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என சொல்லியும், நடிப்பு ஆர்வத்தில் இரண்டு மாதத்திலேயே படப்பிடிப்புக்கு வந்துவிட்ட தகவலையும் காதோடு போட்டு

    வைத்தேன்.அந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் என் விஷயம் சொல்லிய விஜயகாந்த், சண்டைக்காட்சியில் ரொம்பவே கவனமாக நடந்து கொண்டார். இந்த இடத்தில் விஜயகாந்தின் சண்டை போடும் ஆற்றல் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் ஒரு பாதுகாப்பான பைட்டர் ஹீரோ. அவர் அடிப்பதாகவோ குத்துவதாகவோ நடிக்கும் காட்சிகளில் ஒரு அடி கூட எதிரியின் மீது படாது. அத்தனை லாவகமாக செயல்படுவார். அன்றைய காட்சியிலும் அப்படியே நடித்து என் தாடையை காப்பாற்றினார்!

    இதற்குப் பிறகு நான் "சாவி'' படம் மூலம் ஹீரோவானேன். படம் சுமாராக ஓடியது. அடுத்து ஹீரோவாக நடித்த 2 படங்களும் கூட சரிவர போகவில்லை.

    அப்போது விஜயகாந்த் என்னை சந்திக்க முடியாமல் இருந்த போதும், என் மானேஜர் ராமநாதனை கூப்பிட்டு பேசியிருக்கிறார்.

    "பி அண்ட் சி'' ஏரியா ரசிகர்களையும் கவரக்கூடிய படத்தை தேர்வு செய்து நடிக்கச் சொல்லுங்கள். `பி அண்டு சி' ரசிகர்களிடம் பதிந்து விட்டால் சினிமாவில் நிரந்தர ஹீரோவாக நீடிக்க முடியும். அதோடு ரசிகர் மன்றங்களையும் `டெவலப்' பண்ணச் சொல்லுங்கள்'' என்றும் கூறியிருக்கிறார்.

    அவர் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. "ஈட்டி'' என்ற படத்தில் அவர் ஹீரோ. நான் வில்லன். சென்னை அடையார் பார்க் ஓட்டலில் படப்பிடிப்பு இரவு 2 மணி வரை நடந்து கொண்டிருந்தது. அப்போது விஜயகாந்த் டைரக்டரிடம் போய், "சீக்கிரம் விட்டுடுவீங்களா? நேரம் ஆகுமா?'' என்று கேட்டார்.

    இதை பார்க்கும் யாருக்கும் என்ன தோன்றும்? `சரி! தூக்கம் வந்து விட்டது போலிருக்கிறது. ஓய்வெடுக்க விரும்பி இப்படி கேட்கிறார்' என்றுதானே தோன்றும்! நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர் அதற்குப்பிறகு நடக்கும் `ஊமை விழிகள்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதற்காக அப்படி கேட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். இப்படி தூங்கும் நேரத்தைக்கூட, நடிப்பு நேரமாக மாற்றிக் கொண்டதால்தான் சினிமாவில் அவருக்கென்று ஒரு சிம்மாசனம் கிடைத்திருக்கிறது.

    ராஜ்கபூர் டைரக்ஷனில் நான் நடித்த "வள்ளல்'' படத்தை ரிலீசுக்கு தயார் நிலையில் என் மனைவியுடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் பார்த்திருக்கிறார். படம் பிரேமலதாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய் தனது கணவரிடமும் சொல்லியிருக்கிறார்.

    அந்தப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக திரைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டபோது, விஜயகாந்த் அவராகவே எனக்கு உதவ முன்வந்தார். என்னிடம் விஷயத்தை கேட்டுத் தெரிந்து கொண்டவர், "ஒரு நல்ல படம் பணப் பற்றாக்குறையால் திரைக்கு வராமல் இருந்துவிடக்கூடாது'' என்றதோடு படம் வெளிவர உதவவும் செய்தார்.

    நான் படப்பிடிப்பு இல்லாத நாளென்றால் காலை 8 மணி வரை கூட தூங்குவதுண்டு. ஆனால் பட ரிலீசுக்கு முந்தின தினத்தில் காலை 6 மணிக்கே எனக்கு போன் செய்தவர், "வாங்க! லேபுக்குப் போய் படம் ரிலீசுக்கான ஏற்பாடுகளை செய்வோம்'' என்று சொன்னார். எனக்கு முன்பாக லேபுக்கும் வந்துவிட்டார். அவரது கணிசமான உதவியால்தான் "வள்ளல்'' படம் வெளிவந்தது. படமும் விஜயகாந்த் கணித்தது போலவே, வெற்றி பெற்றது.

    என் மகன் சிபி நடிக்க வந்தபோது, `ஆக்ஷன் படமாக தேர்ந்தெடுத்து நடிக்க வையுங்கள். சீக்கிரமே ரசிகர்கள் மத்தியில் பாப்புலாரிட்டி கிடைக்கும்'' என்றார். சிபியை எப்போது பார்த்தாலும் அப்படியொரு பாசம்! அதோடு அக்கறையாக அவன் வளர்ச்சிக்கு ஆலோசனையும் சொல்வார்.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    ×