என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    வில்லாதி வில்லன் படத்தின் மூலம் சத்யராஜ் டைரக்டராக ஆனார்
    "வில்லாதி வில்லன்'' படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்தார்.நடிக்க வந்த புதிதில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், டைரக்டராக ஆக விரும்பினார், சத்யராஜ். அதற்காக ஒரு கதையையும் தயார் செய்தார். அந்தக் கதை தெலுங்கில் படமாகி வெற்றியும் பெற்றது.

    இதற்குள் சத்யராஜ் நடிப்பில் வெற்றி பெற்று பிசியாகிவிட்டதால், டைரக்ஷன் ஆசையை தள்ளி வைத்தார்.

    நடிப்பில் நூறு படங்களை தாண்டிவிட்ட பின்னர், மீண்டும் டைரக்ஷன் ஆசை துளிர்க்க, துணிச்சலாக அவர் இயக்க முன்வந்த படமே "வில்லாதி வில்லன்.''

    டைரக்ஷன் அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "அமைதிப்படை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு பலரும் என்னிடம் "இனிமேல் நீங்க என்ன நடிச்சிடப் போறீங்க?'' என்று கேட்டார்கள்.

    இந்த நேரத்தில் `நாமே ஒரு படத்தை டைரக்ட் செய்யலாமே' என்று தோன்றியது. அதோடு எனது 125-வது படமாக அமைய இருந்ததால் என் எண்ணம் உறுதிப்பட்டது. `படம் பேசப்பட வேண்டும்; என் நடிப்புக்காக மட்டுமின்றி, டைரக்ஷனுக்காகவும் பேசப்பட வேண்டும்' என்று விரும்பினேன். அப்படியொரு கதையையும் தயார் செய்தேன்.

    ஒரு வக்கீல். அவருக்கு கால் நடக்க வராது. வீல் சேரில் தான் வாழ்க்கைப் பயணம். ஒரு வில்லன். ஒரு கண் பார்வை கிடையாது. அடுத்தது இளைஞன். பெரியார், அம்பேத்கார் கொள்கைகளில் ஊறித் திளைத்தவன். இந்த இளைஞன் அம்பேத்கார் மன்ற தலைவனாகவும் இருப்பான். இப்படி மாறுபட்ட 3 கேரக்டர்களின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கினேன்.

    படத்தில் பம்பாய் மாமி கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, `சட்'டென நினைவுக்கு வந்தவர், ராதிகா. அவருக்கு போன் போட்டு பேசினேன். "நான் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்கிறீங்க. கதை கேட்க எப்ப வர்றீங்க?'' என்று கேட்டேன். "இப்பவே வர்றேன்'' என்று புறப்பட்டு வந்தார்.

    நான், "கதை சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தபோது, "நீங்க என்ன கதை சொல்றது? நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நான் நடிக்கிறேன். போதுமா?'' என்று சொல்லி முதல் ஆனந்த அதிர்ச்சி கொடுத்துவிட்டார், ராதிகா.

    கவிஞர் வைரமுத்துவிடம் விஷயம் சொன்னபோது, வீட்டுக்கே வந்தார். நான் முதன் முதலில் டைரக்ட் செய்யும் படம் என்பதால் பெரியாரும், எம்.ஜி.ஆரும் வருகிற மாதிரி ஒரு பாட்டு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். வைரமுத்து கொஞ்சமும் தயங்கவில்லை. `புறப்படு தமிழா புறப்படு' என்று எழுதிய பாட்டில் `சொல்லித் தருவேன் தந்தை பெரியார் போல்', அள்ளித்தருவேன் வள்ளல் எம்.ஜி.ஆர். போல்' என்று பொருத்தமாக இணைத்து விட்டார்.

    படத்தின் `கிளாமர் நாயகி'யாக நக்மாவை ஒப்பந்தம் செய்தேன். அப்போது கிளாமரில் நக்மா கலக்கிய படம் இதுதான்.

    இந்தப் படத்தின் சண்டைக் காட்சியிலும் இதுவரை யாரும் செய்திராத புதுமையை புகுத்த விரும்பினேன்.

    சினிமாவில் கம்புச் சண்டை, கத்திச்சண்டை என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். சண்டைக் காட்சிகளில் அவர் மாதிரி லாவகம் யாருக்குமே வராது. இந்த கத்தி, கம்பு என 2 வகை சண்டைகளையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பினேன். அதாவது ஒரு கையில் கம்பு, அடுத்த கையில் கத்தி! கம்புச் சண்டையின்போது, சிலம்ப வீச்சின் வேகம் இருக்க வேண்டும்; அதே நேரம் அடுத்த கையில் உள்ள கத்தியைக் கொண்டும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடவேண்டும்.

    படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரிடம் எனது இந்த `கம்பு - கத்தி' சண்டை பற்றி விவரித்து, "முடியுமா?'' என்று கேட்டேன். நான் சொன்ன விஷயம் அத்தனை சாத்தியமில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் முடியாததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து விட்டால் வெற்றியே கிடைக்கும்.

    ராம்போ ராஜ்குமார் ஒருகணம் யோசித்தார். என் கையில் சிலம்பம் வீசும்போது தப்பாத கால் வரிசை, அடுத்த கையில் கத்தி சுழற்றும்போது முன்னேறிப் போவது போன்ற வேகம் இந்த இரண்டும் ஒரே சண்டைக் காட்சியில் சாத்தியமா என்ற யோசனை அவர் மனதில் ஓடியிருக்கிறது. என் ஆர்வத்தில் இருந்த தீவிரம் அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும். "சரி சார்! செய்யலாம்'' என்று ஒப்புக்கொண்டார்.

    இதற்குப்பிறகு நாங்கள் எடுத்த முயற்சிகள் வேகமானவை. எம்.ஜி.ஆர். படங்களில் கத்திச்சண்டை போடும் படங்கள், சிலம்பம் வீசும் படங்களை தேடிப்பிடித்து பார்த்தோம். 6 மாத இடைவிடாப் பயிற்சியில் இரண்டு கைகளிலும் இரண்டு வித்தைகள் பக்குவப்பட்டன.

    இந்த சண்டைக் காட்சி படமானபோது, எங்கள் ïனிட்டில் உள்ளவர்கள் கூட ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

    டைரக்ஷனோடு படத்துக்கு கதை-வசனமும் நானே எழுதினேன். படத்தை என் மானேஜர் ராமநாதன் தயாரித்தார்.

    டைரக்டர் பொறுப்பு என்பது, எத்தனை முக்கியமானது என்பதை இந்தப்படம் என்னை உணரவைத்தது. படத்தின் ஒரு காட்சி பற்றிய சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஹேர் டிரஸ்ஸர் வருவார். `சார்' தில்லாலே பாடல் சீனுக்கு நக்மாவுக்கு கொண்டை போடலாமா? ஜடை பின்னலாமா? அல்லது முடியை அவிழ்த்து விடலாமா?' என்று கேட்பார். அவருக்கு பதில் சொல்லி அனுப்புவதற்குள் ஆர்ட் டைரக்டர் வந்து, "சார் நாளைக்கு எடுக்கிற சீனில் ஸ்கிரீன் போடவா?'' என்று கேட்டு வந்து நிற்பார். இதற்குள் உதவி இயக்குனர் வந்து, "சார்! 3 மணிக்கு விட்டுட முடியுமான்னு அந்த ஆர்ட்டிஸ்ட் கேட்கிறார்'' என்று சொல்லி பதில் எதிர்பார்ப்பார்.

    இதற்கிடையே புரொடக்ஷனில் இருந்து, "சார்! டப்பிங் தியேட்டர் எப்ப புக் பண்றது?'' என்று கேட்டுக்கொண்டு வந்து நிற்பார்கள். அத்தனை பேருக்கும் பதில் சொல்லி முடிப்பதற்குள், "சார்! நான் டிஸ்ட்ரிபிïட்டர் பேசறேன். திருச்சிக்கு இந்த விலைக்கு படத்தை கொடுக்கலாமா?'' என்று அடுத்த பதிலுக்கான கேள்வி தயாராக இருக்கும்.

    அத்தனை பேருக்கும் அவர்கள் தேவைக்கான பதில்களை சொல்லும் அதே நேரத்தில், படம் தொடர்பான பணிகளும் நடந்தாக வேண்டும். ஒரு டைரக்டரின் பொறுப்பு என்பது எந்த அளவுக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லாத அளவுக்கு பொறுப்பானது என்பதற்காக இதைச் சொல்ல

    வந்தேன்.டைரக்ஷனோடு நானே மூன்று வேடத்திலும் என்னை வெளிப்படுத்தியாகவேண்டும். என்னுடன் நடிப்பவர்கள் எப்படி நடித்தால் காட்சிக்கு கனம் சேர்க்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அதுவும் நடந்தது.

    படத்துக்கு வித்யா சாகர் இசை அமைத்தார். `பம்பாய் மாமி', `தில்லாலங்கடி தில்லாலே' பாடல்கள் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாயின.

    நண்பர் மணிவண்ணனுக்கு இந்த நேரத்தில் ஒரு சின்ன ஆபரேஷன் நடந்தது. படத்தில் அவரும் நடிக்கவிருந்தார். எனவே, அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை மட்டும் 2 மாதம் `வெயிட்' பண்ணி எடுத்தேன்.

    முழுப் படத்தையும் எடுத்து முடிக்க 110 நாட்கள் ஆனது. `பில்லா' படத்தை இயக்கிய `பில்லா கிருஷ்ணமூர்த்தி' டைரக்ஷன் விஷயத்தில் எனக்கு பயனுள்ள பல ஆலோசனைகள் கூறினார். இது விஷயத்தில் அவர் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர் புரொடக்ஷன் மானேஜராக இருந்து இயக்குனர் ஆனவர் என்பதால், தயாரிப்பில் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்பட்டன.

    படத்துக்கு மொத்தம் 110 பிரிண்டுகள் போட்டோம். ஒரு படத்துக்கு அதுவரை இல்லாமல் அதிக பிரிண்டுகள் போட்ட முதல் படம் இதுதான். அதுமாதிரி சென்னை அண்ணா சாலையில் 2 தியேட்டர்களில் அடுத்தடுத்து ரிலீசான முதல் படமும் இதுதான்.

    படம் நன்றாக ஓடியதுடன், மலையாளத்தில் `டப்' செய்யப்பட்டு, பெரிய வெற்றி பெற்றது. அதோடு நான் எதிர்பார்த்த மாதிரியே ஒரே நேரத்தில் நான் போட்ட கத்தி - கம்பு சண்டைக்கும், பெரிய வரவேற்பு கிடைத்தது.

    மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ஒரு மலையாளப் படத்தின் ஒரு காட்சியை கேரள பார்டரில் உள்ள ஒரு `டூரிங்' தியேட்டரில் எடுத்திருக்கிறார்கள். அந்த தியேட்டரில் ஹீரோ படம் பார்க்கிற மாதிரி காட்சி. இந்த படப்பிடிப்புக்கு மோகன்லால் வந்த நேரத்தில், நான் நடித்த `வில்லாதி வில்லன்' படம் அங்கு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அதுவும் ஒரு கையில் கத்தியும் மறு கையில் கம்புமாக நான் வில்லன்களுடன் மோதுகிற காட்சி அந்த நேரம் திரையில் ஓட, மோகன்லால் அதை பிரமிப்பாக பார்த்திருக்கிறார்.

    உடனே தனது படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம், "நம்ம படத்தில் இப்படி ஒரு `பைட்' ரெடி பண்ண முடியுமா?'' என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு மாஸ்டர் அவரிடம், "இது மாதிரி ஒரிஜினலாக எடுக்கணும்னா குறைஞ்சது 6 மாசமாவது பயிற்சி பெறவேண்டிவரும். அவசரமா எடுத்தே ஆகணும்னு நினைத்து ஏதாவது `டிரிக்ஸ்' பண்ணினா, தெரிஞ்சுப்போயிடும்'' என்று கூறியிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டாரையே `ஆசைப்பட வைத்த' சண்டைக் காட்சியை படத்திற்கு தந்த வகையில், ஒரு டைரக்டராகவும் எனக்கு பெருமை.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    தாய்மாமன் படத்தில் சத்யராஜ் பேசிய அதிரடி அரசியல் வசனங்களால் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    "தாய் மாமன்'' படத்தில், அரசியல்வாதிகளை சகட்டு மேனிக்கு தாக்கி வசனம் பேசினார் சத்யராஜ். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குருதனபால் டைரக்ஷனில் உருவான "தாய்மாமன்'' படத்தில், படம் முழுவதும் கறுப்புத்துண்டு போட்டு நடித்தார், சத்யராஜ்.

    சத்யராஜின் ஜோடியாக நடிகை மீனா நடித்த முதல் படம் இதுதான். இந்த வகையில் சத்யராஜின் உயரமான கதாநாயகிகள் பட்டியலில் மீனாவும் இடம் பெற்றார்.

    இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்.பாஸ்கர் "தீர்ப்புகள் திருத்தப்படலாம்'' என்ற படத்தை எடுத்தபோது சிவகுமார் நாயகன். நான் வில்லன். இந்தப் படத்தில் குழந்தையாக நடித்தவர் மீனா.

    கால ஓட்டத்தில் "தாய்மாமன்'' படத்தில் மீனா எனக்கு ஜோடியாகி விட்டார்.

    இந்தப்படத்தை இயக்கிய குருதனபால் என் பாணியில் தயார் செய்த இந்தக் கதையும் ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பை பெற்று, படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது. அமைதிப்படையில் நானும் மணிவண்ணனும் காமெடியில் கலக்கியது போல, இந்தப் படத்தில் என்னுடன் காமெடிக்கு கைகோர்த்தவர் கவுண்டமணி அண்ணன்.

    படத்தை முடிக்கும்போது அதுவரை யாரும் செய்திராத ஒரு புரட்சியையும் டைரக்டர் செய்திருந்தார். எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடலான `உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்'' என்ற பாடலில் வரும் `மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்குமாலைகள் விழவேண்டும்' என்ற வரிகளுடன் படத்தை முடித்தார். இது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

    படம் வெளிவந்தபோது பார்த்த ஒரு பிரபல ஹீரோ எனக்கு போன் செய்து, "என்ன இப்படி பண்ணிட்டீங்க?'' என்று கேட்டார். படத்தில் நான் பேசிய அரசியல் தொடர்பான வசனங்கள் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

    இப்படி படத்தில் காரசாரமான வசனங்கள் இருப்பது ரஜினி சாருக்கு தெரியவர, ஒரு மாலை நேரம் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். நான் உங்க `தாய்மாமன்' படம் பார்க்கணுமே என்றார்.

    ஒரு படம் பேசப்படுகிறது என்றால், அந்தப் படத்தை பார்க்க ரஜினி சார் விரும்புவார். `அமைதிப்படை' படத்தில் நான் வில்லனாகவும் நடித்தது தெரியவந்ததும் இதே மாதிரி என்னிடம் கேட்டுக்கொண்டு அந்தப் படத்தை பார்த்தார். படம் முடிந்ததும், "இப்ப எனக்கே மறுபடியும் வில்லனாக நடிக்கும் ஆசை வந்திருக்கு'' என்று பாராட்டினார்.

    இப்போது `தாய்மாமன்' படம் பற்றி கேள்விப்பட்டு பார்க்க விரும்ப, உடனடியாக பிலிம் சேம்பர் திரையரங்கில் ஏற்பாடு செய்தேன்.

    படம் முடிந்ததும் என் கைகளை பற்றிக் கொண்டவர், "ரொம்ப ஓவர் தைரியம் உங்களுக்கு! இந்த மாதிரி வசனங்களை பேசும்போது பயம் ஏற்படவில்லையா?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "நான் ஏன் சார் பயப்படணும்? நான் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இருந்தால் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் நான் அவர்களை தாக்கியதாக எண்ணிக் கொள்வார்கள். நான்தான் எந்தக் கட்சியிலும் இல்லையே! எனவே படத்தில் நான் பேசிய வசனங்களை கதையோடு ஒட்டிய விஷயங்களாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்'' என்றேன்.

    அப்போதும் அவருக்கு மனது கேட்கவில்லை. என் நடிப்பு வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமோ என்று கவலை தெரிவித்தார். இப்போது நான் தெளிவாக, "நான் பொதுவானவன். போதுமானவன் என்றேன். கட்சி எதையும் சாராமல் பொதுவாக நான் பேசிய இந்த வசனங்கள் என் நடிப்பு வாழ்க்கையை பாதித்தால் அதற்காக எனக்கு கவலையில்லை. இதுவரை நடித்து சம்பாதித்தது போதும் என்ற மன நிறைவுடன் இருந்து விடுவேன்'' என்றேன்.

    ரஜினி சார் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் கைகுலுக்கி, தோளில் தட்டிக்கொடுத்து விட்டு சென்றார். அவரைப் பொறுத்தவரையில் நண்பர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புபவர். நான் "ஓஷோ'' புத்தகங்களை விரும்பி படிப்பதை தெரிந்து கொண்டவர் வீட்டுக்கு வரவழைத்து "ஓஷோ'' தத்துவங்களுடன் கூடிய வீடியோ கேசட்டை கொடுத்தார். அதோடு `லைனிங் வித் எ ஹிமாலயா மாஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தையும் தந்து அனுப்பினார்.

    நாலே நாளில் எனக்கு போன் செய்தவர், "புத்தகம் படித்தீர்களா? எப்படி இருந்தது?'' என்று கேட்டார்.

    நமக்குத்தான் இங்கிலீஷ் தட்டுத்தடுமாறுமே! மெதுவாக நிதானமாக படித்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதனால் அவரிடம் "சார்! இங்கிலீஷ் புத்தகம்னா கொஞ்சம் டைம் எடுத்தே படிக்கணும். அதனால ஒரு மூணு மாசமாவது கொடுங்க'' என்றேன். எதிர்முனையில் ரஜினி சார் சிரித்தது கேட்டது.

    இந்தப் படத்தை பார்க்க வைகோவும் விரும்பினார். குட்லக் தியேட்டரில் படம் பார்க்க வந்த அவரை வரவேற்க தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். படம் தொடங்கும் நேரம் வரை அவர் வரவில்லை. அப்புறம் விசாரித்தபோதுதான், `வைகோ வந்து அரை மணி நேரம் ஆயிற்று' என்றார்கள். வழக்கமாக வேட்டி - சட்டை - கறுப்புத்துண்டு சகிதம் வருவார் என்று எதிர்பார்த்து நான் நிற்க, அவரோ சாம்பல் கலர் சபாரி உடையில் வந்திருக்கிறார். என்னைக் கடந்துதான் தியேட்டருக்குள் போயிருக்கிறார். நான் கவனிக்கவில்லை.

    அவரை சந்தித்து நான் வருத்தம் தெரிவித்தபோது, "நானும் உங்களை பார்க்க முடியாததால்தான் தியேட்டரின் முதல் மாடிக்கு வந்துவிட்டேன்'' என்று சிரித்தார். படத்தைப் பார்த்துவிட்டு அவர் ரொம்பவும் பாராட்டியது தனிக்கதை.

    டைரக்டர் குருதனபாலின் அடுத்த படமான "மாமன் மகள்'' படத்திலும் மீனாவே என் ஜோடியாக நடித்தார். இந்தப் படமும் வெற்றி பெற்றது. இதே டைரக்டர் பின்னாளில் தயாரிப்பாளராகி என்னை இயக்கிய `பெரிய மனுஷன்' படம் பெரிதாக ஓடவில்லை. அதுவும் `லொள்ளு ஜொள்ளு' படம்தான். ஆனால் `ஜொள்ளு' அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் எண்ணினார்களோ என்னவோ!''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    ×