என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    சினிமாவில் நடிக்க வரும் முன்னரே மூர்த்திக்கு நடிகர் நாகேஷ் பழக்கமாகியிருந்தார், மூர்த்தி. அப்போது சட்டக் கல்லூரி மாணவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். தி.நகரில் உள்ள `கிளப் அவுசில்' அறை எடுத்து தங்கினார்.
    சினிமாவில் நடிக்க வரும் முன்னரே மூர்த்திக்கு நடிகர் நாகேஷ் பழக்கமாகியிருந்தார், மூர்த்தி. அப்போது சட்டக் கல்லூரி மாணவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். தி.நகரில் உள்ள `கிளப் அவுசில்' அறை எடுத்து தங்கினார்.

    இந்த கிளப் அவுசில் கேரம்போர்டு விளையாட நடிகர்கள் நாகேஷ், ஸ்ரீகாந்த், கவிஞர் வாலி ஆகியோர் வருவதுண்டு. அப்போது இவர்களுடன் ஏற்பட்ட நட்பு, இன்றும் இவர்களை நல்ல நண்பர்களாக வைத்திருக்கிறது.

    அதுபற்றி மூர்த்தி கூறுகிறார்:-

    "நாகேஷ் சார் அப்போது ரெயில்வேயில் பணியாற்றிய வேலையை விட்டுவிட்டு, நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கிளப் அவுசுக்கு வருவார். அவரும், ஸ்ரீகாந்தும், வாலியும் கேரம் போர்டில் ரொம்பவும் ஆர்வம் காட்டுவார்கள். மாலைப் பொழுது முழுக்க இவர்களுடன்தான் போகும்.

    சாதாரணமாக ஆரம்பித்த எங்கள் நட்பை, கேரம் போர்டு நெருக்கமாக்கியது. நாகேஷ் சார் அப்போதே என்னை உரிமையுடன் `வாடா போடா' என்பார். இரவு லேட்டானால் கிளப் அவுசில் உள்ள எனது அறையில் தங்கிச் செல்வார்.

    சில வருடங்கள் சந்திக்கவில்லை. நானும் சட்டம் முடித்து சினிமாவுக்கு வந்தேன். மறுபடி நாங்கள் சந்தித்தது முக்தா சீனிவாசனின் `தேன்மழை' படத்தில். இந்தப் படத்தில் நாகேஷ் சார் நடித்தார். நானும் இருந்தேன்.

    முதல் நாள் படப்பிடிப்பில் நாகேஷ் சாருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க விரும்பிய டைரக்டர் முக்தா சீனிவாசன், என்னை அழைத்துக்கொண்டு நாகேஷ் சாரிடம் சென்றார். நாகேஷ் சாரை நெருங்கியதும், "மூர்த்தி! நாகேஷ் சாரை தெரியுமா? இவர்தான்'' என்று சரளமாக பேசியவர், நாகேஷிடம், "நாகேஷ்! இவர்தான் மூர்த்தி. நம்ம படத்தில் நடிக்கிறார்'' என்றார்.

    பார்த்த மாத்திரத்தில் என்னை நாகேஷ் தெரிந்து கொண்டார். பிறகு டைரக்டரிடம் "ஓய்! எனக்கு மூர்த்தியை அறிமுகப்படுத்துகிறீராக்கும்?'' என்று சொல்லிச் சிரித்தவர், எங்கள் `கிளப் அவுஸ்' கால நட்பு பற்றி விலாவாரியாக சொன்னார். டைரக்டர் மட்டுமல்ல, செட்டில் இருந்தவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

    தமிழ் சினிமாவில் அதுவரை `டான்ஸ்' ஆடத் தெரிந்த நகைச்சுவை நடிகர் என்றால் சந்திரபாபு என்ற நிலைமை இருந்தது. நாகேஷ் நடிக்க வந்த பிறகு, அந்த நிலைமை மாறிற்று. நடனத்திலும் அற்புதமான கோணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த அண்ணன் எம்.ஜி.ஆர்., அண்ணன் சிவாஜி இருவரின் படங்களிலும் இவர்தான் காமெடி என்கிற அளவுக்கு சினிமாவில் மிகப் பெரிய இடம் பிடித்தார்.

    அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 3 கால்ஷீட் கூட கொடுத்தார். ஒரு கால்ஷீட் என்பது 8 மணி நேரம்.

    3 கால்ஷீட் என்னும்போது ஒரு நாள் முழுக்க ஓய்வேயில்லாமல் நடித்துக் கொடுக்க வேண்டும். அதாவது, தூங்கப் போகும் நேரத்தில் கூட ஏதாவது ஒரு செட்டில் நடித்துக் கொண்டிருப்பார். அந்த மாதிரி உழைத்து யாரையும் நான் பார்த்ததில்லை. ஷாட் இடைவேளையில் கிடைக்கிற அரை மணி, ஒரு மணி `கேப்'பில் தூங்கினால்தான் உண்டு. அப்படியும்கூட இவரை பார்க்கும் இயக்குனர்கள், `சார்! ஒரு மணி நேரம் வந்துட்டு போனீங்கன்னா உங்க போர்ஷனை முடிச்சிடுவேன்' என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். நடிப்பில் தனி மேனரிசத்தைக் கையாண்டு ரசிகர்களை சிரிக்க வைத்ததற்குப் பின்னணியில் இவரது கடுமையான உழைப்பு உண்டு.

    நடிகர் தேங்காய் சீனிவாசன் நகைச்சுவையில் புது ஸ்டைல் மூலம் தன்னை நிலை நிறுத்தியவர். என் மீது ரொம்பவே பிரியம் கொண்டவர். ஒருமுறை என் ஆரோக்கியம் வேண்டி கீழ் திருப்பதியில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு நடந்தே சென்று வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். இதுபற்றி தெரிய வந்தபோது, நெகிழ்ந்து போனேன். கூப்பிட்டு உரிமையுடன் கண்டித்தபோது, என் கண்டிப்பை கண்டுகொள்ளவே இல்லை. அவருக்கே உரிய சிரிப்புடன் நகர்ந்து போய்விட்டார்.

    சினிமாவில் நான் உருவாக்கிய ஸ்டைலை, தேங்காய் சீனிவாசனும் பின்னாளில் செய்தார். ஆனால் அதை அவருக்கே உரிய ஸ்டைலில் செய்தபோது ரசிகர்கள் பெரிய அளவில் ரசித்தார்கள்.

    நடிகர் வி.கே.ஆர். சாரை (வி.கே.ராமசாமி) நடிப்புக்கு மட்டுமின்றி அவரது தலைசிறந்த பண்புக்காகவும் நேசித்திருக்கிறேன். தன்னைவிட சிறு வயதுக்காரர்களைக் கூட `வாங்க' என்று மரியாதையுடன் அழைப்பது அவருக்கே உரிய பண்பு.

    ஒருமுறை அவருடன் மைசூரில் படப்பிடிப்புக்கு போயிருந்தபோது பழைய கால கதைகளை சுவாரசியத்துடன் அவர் சொன்ன அழகு, இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. என்போன்ற நகைச்சுவை நடிகர்களில் பலரும் கதைக்குள் நுழைகிறபோதுதான் காமெடி வரும். இவரோ சாதாரணமாய் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட காமெடி இவரிடம் இருந்து அருவியாய் கொட்டும்.

    இன்றைக்கு `ஆச்சி' என்ற அடைமொழியுடன் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் `ஆச்சி' மனோரமாவுடன் சில படங்கள் சேர்ந்து நடித்திருக்கிறேன். செட்டில் நடிக்கும்போது இவரது நடிப்பைப் பார்த்தாலே புதியவர்களும் நடிப்பு கற்றுக்கொள்ளலாம்.

    ஒரு சீனில் தனது நடிப்பு பிடிக்கவில்லையானால் திரும்பவும் அந்த காட்சியில் நடித்துக் கொடுப்பார். சில காட்சிகளில் இயக்குனரே திருப்தி ஏற்பட்டு, "போதும்'' என்று சொன்னாலும் உடன்படமாட்டார். "எனக்கு ஏதோ ஒண்ணு திருப்தியில்லாமல் தெரிந்தது. என் திருப்திக்கு இன்னொரு `டேக்' எடுத்துடுங்களேன்'' என்று கேட்டு நடித்துக் கொடுப்பார். தொழிலில் இன்றைக்கும் அவருக்கு இருக்கும் இந்த ஈடுபாடுதான் இப்போதும் அவரை ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக்கி இருக்கிறது.

    அதுமாதிரி டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம். மேக்கப்பிலும் தனி கவனம் செலுத்துவார். அகில இந்திய அளவில் சிறந்த நடிகைகளாக, தொழில் பக்தியில் தேர்ந்தவர்களாக ஏழெட்டு நடிகையரை பட்டியல் போட்டால் இந்த பட்டியலில் மனோரமாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு.

    மனோரமா தவிர என்னுடன் ஜோடி சேர்ந்து காமெடி செய்தவர்களில் காந்திமதி, கோவை சரளா ஆகியோருக்கும் தமிழ் சினிமா நகைச்சுவைப் பட்டியலில் இடம் உண்டு. காந்திமதியின் தனித்துவ உச்சரிப்பு, அவருக்கே உரியது. கோவை சரளாவிடம் சுறுசுறுப்பு அதிகம். கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம்.

    சினிமாவில் நான் வியந்து பார்த்த ஒரு நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள். எந்த கேரக்டரானாலும், அதில் இவர் வெளிப்படுகிற விதம் பிரமிப்பாகவே இருக்கும்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ஒரு படத்திலாவது இவருடன் நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். `சீர்வரிசை' என்ற படத்தில் அப்படியொரு வாய்ப்பு வந்தது. ஆனாலும் என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்தப் படத்தில் நடித்த நேரத்தில் மரணம் அவரை அழைத்துக்கொண்டுவிட்டது. பிறகு அவர் கேரக்டரில் டி.கே.பகவதி நடித்தார்.

    எஸ்.வி.ரங்காராவ் மாதிரியே கொடுத்த கேரக்டருக்குள் தன்னை மறைத்துக் கொண்டு கேரக்டராகவே மாறிவிடும் இன்னொரு நடிகர் எஸ்.வி.சுப்பையா. பூக்காரி, சமையல்காரன் என 2 படங்களில் சேர்ந்து நடிக்கும்போது, `எப்பேர்ப்பட்ட கலைஞருடன் சேர்ந்து நடிக்கிறோம்' என்ற பிரமிப்பு ஏற்பட்டது.

    பட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.
    பட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.

    வசனம் பேசிக்கொண்டிருக்கும் போதே இடைச் செருகலாக புதிய வார்த்தைகள் எதையாவது கோர்த்து விடுவார், மூர்த்தி. நாளடைவில் ரசிகர்கள் அதை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு படத்தில் மூர்த்தியைப் பார்க்கும்போதும், இந்தப் படத்தில் அதுமாதிரி புதுசாக என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

    இதுபற்றி மூர்த்தி கூறுகிறார்:-

    "சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் "சுமதி என் சுந்தரி'' படத்தில் சகோதரி ஜெயலலிதா ஒரு சினிமா நடிகையாகவே வருவார். படத்தில் அவருக்கு நான் செகரட்டரி.

    இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, வசனத்தில் புதிதாக எதையாவது சேர்த்து புதுமை செய்யலாம் என்று தோன்றியது. அதற்கான முதல் அடி மட்டும் எடுத்து வைத்தேன். நான் சரியாகச் செய்யவில்லையோ அல்லது ரசிகர்களிடம் என் புதுமுயற்சி சேரவில்லையோ, அந்தப் படத்தில் நான் காட்டிய வித்தியாசம் எடுபடாமல் போய்விட்டது.

    டைரக்டர் மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தில் அடுத்த முயற்சியைத் தொடங்கினேன். அப்போது தோன்றிய `தம்ரி' என்ற வார்த்தையை மேனரிசத்துடன் செய்தேன். இந்த சவுண்டு `டெவலப்' ஆகி, அதுமுதல் என் புதிய படங்களிலும் அது மாதிரி ஏதாவது செய்தால்தான் ஆயிற்று என்கிற அளவுக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது.

    ஒருகட்டத்தில் இதை விட்டுவிட முடிவுசெய்தேன். ஆனால் படத்தின் டைரக்டர்கள் விடவில்லை. "மூர்த்தி சார்! வழக்கமான உங்கள் ஸ்டைல் வார்த்தைகள் வர்ற மாதிரியும் பேசிடுங்க'' என்பார்கள். கடைசியில் ரசிகர்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமும் என்று இருந்துவிட்டேன்.''

    இவ்வாறு கூறினார், மூர்த்தி.

    மூர்த்திக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருந்தாலும் அவரது மகன் மனோ நடிகர் அர்ஜ×னின் தீவிர ரசிகர். தீவிர சைவரான மூர்த்தி, மகனை மட்டும் இது விஷயத்தில் கட்டுப்படுத்தவில்லை. விளைவு, சென்னையில் உள்ள சைனீஷ் ஓட்டல் ஒன்றில் மனோ நிரந்தர வாடிக்கையாளர். இங்குதான் நடிகர் அர்ஜ×னை சந்தித்திருக்கிறார் மனோ. சாப்பாட்டு வேளை, அவர்களின் நட்பு வேளையும் ஆயிற்று. அர்ஜ×னின் அதிரடி ஆக்ஷன் படங்கள் பார்த்ததில் அர்ஜ×னின் தீவிர ரசிகர் என்ற வட்டத்திலும் மனோ நெருங்கியிருந்தார்.

    இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-

    "பி.எஸ்.வி. பிக்சர்சின் ஒரு படத்தில் அர்ஜ×னுடன் நானும் நடித்தேன். அப்போது ஏற்பட்ட நட்பில் அர்ஜ×ன் எங்கள் வீட்டுக்கும் வருவார். என் மகனின் பழக்கவழக்கங்கள், அணுகுமுறை என அத்தனையும் அவருக்கு தெரியவர, மனோ மீது அதிகப்படியான அன்பு செலுத்தினார். தனது நண்பர்களிடம், "பிள்ளை வளர்த்தால் மூர்த்தி சார் மாதிரி வளர்க்கணும்'' என்று சொல்கிற அளவுக்கு மனோவின் நட்பும், நடவடிக்கையும் அவருக்கு பிடித்துப்போயிருக்கிறது.

    மகன் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார். மகன் மூலம் இறுகிய எங்கள் நட்பு, தொழிலிலும் எங்களை இணைத்தது. அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சமீபத்திய `வேதம்' படத்தில்கூட எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.''

    இவ்வாறு சொன்னார், மூர்த்தி.

    சினிமாவில் "பிரிக்க முடியாதது எதுவோ?'' என்று சிவபெருமான் - தருமி திருவிளையாடல் பாணியில் கேட்டால் - "நடிகர்களும் சம்பளப் பாக்கியும்'' என்று சொல்லலாம். இந்த பாக்கியை அடுத்தடுத்த படங்களில் கொடுத்து சரி செய்து விடும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். சம்பளம் பாக்கி வரவேண்டியிருக்கிறது என்பதை சொல்லாமலே மோப்பம் பிடித்து தேடி வந்து `பாக்கியை' கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

    மூர்த்திக்கும் இப்படி இரண்டொரு `இன்ப அதிர்ச்சி' இருக்கவே இருக்கிறது. அது பற்றி கூறுகிறார்:-

    டைரக்டர் பாசில் தயாரிப்பாளராகவும் மாறி உருவாக்கிய படம், `அரங்கேற்றவேளை.' இந்தப் படத்தில் நடிக்க பாசிலின் சகோதரர்தான் எனக்கு சம்பளம் பேசினார். சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் வரவேண்டியிருந்தது. டப்பிங் பேசப்போனபோது, பாக்கி பணத்தை கொடுத்துவிட்டார்கள்.

    நான் டப்பிங் பேசி முடித்து டப்பிங் தியேட்டரில் இருந்து புறப்பட்ட நேரத்தில், டைரக்டரும் தயாரிப்பாளருமான பாசில் என்னை அழைப்பதாக பாசிலின் உதவியாளர் சொன்னார். அவரை சந்தித்தேன். "படத்தில் எனக்கு நல்லவிதமாக ஒத்துழைச்சீங்க. அதுக்கு என்னோட சின்ன அன்பளிப்பு'' என்று கூறிய பாசில், சட்டென என் கையில் 5 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டார். சரியாக ஐயாயிரம். எனக்கு இன்ப அதிர்ச்சி. எனக்கு வரவேண்டிய பாக்கியாக இருந்த 5 ஆயிரத்தை கொடுத்திருந்தால், நான் வாங்கிக்கொள்ள முடியாது. கொஞ்சம் முன்னாடிதான் பாக்கி தொகையை வாங்கியிருக்கிறேன். எனவே நான் பதறியபடி, "என்ன சார் நீங்க? எனக்கு சம்பள பாக்கி கிடையாது. டப்பிங்குக்கு வந்ததுமே தரவேண்டியிருந்த 5 ஆயிரத்தையும் கொடுத்து விட்டார்கள்'' என்று சொல்லி பணத்தை அவரிடம் திரும்பவும் கொடுக்க முயன்றேன்.

    ஆனால் பாசிலோ பிடிவாதமாக, "நோ! நோ! இது நானாக உங்களுக்கு கொடுக்கிறேன் சார். படத்தில் உங்கள் ஈடுபாடு பார்த்து பிடித்து நானாகக் கொடுக்கிற இந்த அன்பளிப்பை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று சொல்லிவிட்டார்.

    இவர் மாதிரியே டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் தயாரிப்பாளராக இருந்த "ஏணிப்படிகள்'' படத்திலும் நடந்தது. சிவகுமார் - ஷோபா நடித்த அந்தப் படத்தை டைரக்டர் பி.மாதவன் இயக்கினார். படம் ரிலீசாகப் போகிற சமயத்தில் என்னை வரச்சொல்லி சேதுமாதவன் சந்தித்தார். "நம்ம படம் ரிலீசாகப் போகுது. உங்களுக்கு எங்க தயாரிப்பு நிர்வாகி ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாரா?'' என்று

    கேட்டார்.எனக்கு 3 ஆயிரம் மட்டும் வரவேண்டியிருந்தது. அதைச் சொன்னேன். "இருக்கட்டும் சார்! அப்புறமா வாங்கிக்கறேன்''

    என்றேன்.ஆனால் சேதுமாதவன் விடவில்லை. "உங்கள் விஷயம் என் காதுக்கு வரவில்லை. அதனால்தான் கேட்டு தெரிந்து கொண்டேன். பாக்கி தொகை 3 ஆயிரத்தையும் நீங்கள் பெற்றுக்கொண்டால்தான் படத்தின் தயாரிப்பாளரான எனக்கு சந்தோஷம்'' என்றார். அவரது பெருந்தன்மைக்கு தலைவணங்கி பணத்தை பெற்றுக்கொண்டேன்.

    டைரக்டர் ராம.நாராயணன் இயக்க வந்த புதிதில் `சிவப்பு மல்லி' என்ற படத்துக்கு என்னை அழைத்திருந்தார்கள். சின்ன பட்ஜெட் படம் என கேள்விப் பட்டிருந்ததால் சம்பளத்தை கம்மியாக கேட்டேன். படம் முடிந்த பிறகு ராம.நாராயணன் என்னை அழைத்துப் பேசினார். "ஒரு தயாரிப்பு நிறுவனம் நன்றாக இருக்கணும் என்கிற மனசு உங்களுக்கு இருக்கு. அடுத்து நான் டைரக்ட் பண்ற படங்களில் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. படத்துக்கு படம் உங்கள் சம்பளமும் அதிகமாகும் என்றார். ராம.நாராயணன் இயக்கிய படங்களில் நான் அதிகமாக நடித்த பின்னணியும் இதுதான்.''

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியே டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
    வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியே டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், இருவரும் ஜோதிடம் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு, இருவருக்குமே ஜோதிடத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையும் இருந்தது.

    அதே நேரத்தில், படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் பம்பரமாய் சுழலும் கோபாலகிருஷ்ணனை `அவரா இவர்!' என்கிற ரீதியில் ஆச்சரியப்பார்வை பார்ப்பார், மூர்த்தி.

    அதுபற்றி கூறுகிறார்:

    "படப்பிடிப்பு என்று வந்துவிட்டால், டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வேகம் பார்க்க பிரமிப்பாக இருக்கும். பெரும்பாலும் அவர் மனதில் உருவாகிற கதைகளையே திரைக்கதையாக்குவதால் படத்தின் கேரக்டர்கள் அத்தனையும் அவருக்கு அத்துப்படியாகி விடும்.

    படப்பிடிப்புக்கு முன் ஒத்திகையின்போது கேரக்டர்களின் வசனங்களை கோர்வையாக சொல்லிக்கொண்டு வருவார். அப்போது புதிது புதிதாக வசனங்களை சேர்ப்பார். இதன் பிறகு அந்த வசனங்களை முன்னும் பின்னுமாக சேர்ப்பார். இப்போது வசனங்கள் இன்னும் அழுத்தமாக அமைந்து விடும். ஆனாலும் படத்தில் நடிப்பவர்கள்தான் வசனச் சுமைகளால் திணறிப்போவார்கள்.

    தான் எதிர்பார்த்த மாதிரி காட்சி அமைந்து விட்டால் `டக்'கென்று உற்சாகமாக முதுகில் தட்டிக்கொடுப்பார். கொஞ்சம் வலிக்கிற அளவுக்கு இந்த `தட்டல்' இருக்கும்.

    டைரக்டர் ராமண்ணா: கோபம் இருக்கிற இடத்தில்தான் குணமும் இருக்கும் என்கிற பழமொழியை பொய்யாக்கியவர் இவர். ஆளும் அழகு. குணமும் அருமை. அப்படியிருந்தும் இவரிடம் கோபமே குடிகொண்டதில்லை என்பது நான் அறிந்த உண்மை.

    படப்பிடிப்பு நேரத்தில் ஒரு டைரக்டர் எவ்வளவு டென்ஷனாக இருப்பார்? ஆனால் இவரோ `டென்ஷன்' என்றால் என்ன என்று நம்மிடமே கேட்பார். அத்தனை அமைதி. `அணுகுண்டு போட்டாலும் அசர மாட்டார்' என்று ஊரில் யாரையாவது சொல்வார்கள். அந்த ஒப்பீடு இவருக்கும் அப்படியே பொருந்தும்.

    ஒரு சமயம் இவரது படப்பிடிப்பில் முக்கியமான நடிகர் வரவில்லை. அவர் வரவில்லை என்று இவரிடம் சொல்லப்பட்டதும், "அப்படியானால் இப்போது அவர் தேவைப்படாத காட்சிகளை படமாக்குவோம்'' என்று சாதாரணமாக கூறிவிட்டு அதற்கான வேலைகளை முடுக்கி விட்டார். இவர் இயக்கத்தில் குப்பத்து ராஜா, நீச்சல் குளம் உள்பட 5 படங்களில் காமெடி டிராக்கில் நடித்திருக்கிறேன்.

    ஸ்ரீதர்: என்னைக் கண்டுபிடித்தவர் என்பதால் எப்போதும் இவர் மீது மரியாதை அதிகம். இவர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை தவிர சிவந்த மண், அவளுக்கென்றோர் மனம், குளிர்கால மேகங்கள், நானும் ஒரு தொழிலாளி என 4 படங்களில் நடித்திருக்கிறேன்.

    வித்தியாசமான சிந்தனையாளர் `வசன' சினிமாவை `காட்சி' சினிமாவாக்கி, தமிழ் சினிமாவை புதிய தளத்திற்குள் கொண்டு சென்றவர். புது நடிகர் - நடிகைகளை நடிக்க வைப்பது என்பது எவ்வளவு சிரமமான காரியம்! இருந்தாலும் தான் எதிர்பார்க்கிற நடிப்பையும் வாங்கிவிட்டு, அவர்களையும் புகழேணியில் ஏற்றி விடுவதென்பது இவர் மாதிரியான பிறவிக் கலைஞர்களுக்கே சாத்தியம்.

    டி.ராஜேந்தர்: `ராகம் தேடும் பல்லவி' படத்தில் நடிக்கிறப்பதான் டைரக்டர் டி.ராஜேந்தர் எனக்கு அறிமுகம். அந்தப் படத்தில்கூட தயாரிப்பு நிர்வாகிதான் என்னை நடிக்க ஒப்பந்தம் செய்தார். `ஒருதலைராகம்' படம் மூலமாகத்தான் இவர் சினிமாவுக்கு வந்தார். அந்தப்படத்தை இவரே டைரக்ட் செய்தார்னு நினைத்து, அவரிடம் இந்தப்பட செட்டில் வாழ்த்து சொன்னேன். அந்தப் படத்துக்கு நான் டைரக்டர் இல்லை என்று வாழ்த்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

    இவர்கிட்ட நான் ஆச்சரியப்பட்ட விஷயம், எப்பவுமே வசனத்தை எழுதி வெச்சு சொல்லித்தரமாட்டார். நடிக்கிறபோதுதான் மளமளன்னு வாயாலே வசனத்தை சொல்லித் தருவார். ஒரு சீன்ல நடிக்கிறப்ப இவர் கொடுத்திருந்த வசனத்துடன் ஒரு வரி சேர்த்து பேசிட்டேன். கரெக்டா கண்டுபிடித்தவர், "இது என் வசனத்தில் இல்லியே!'' என்றார். பதிலுக்கு நான், "காட்சியில் பேசறப்ப என்னையறியாம அந்த வசனமும் சேர்ந்து வந்துட்டுது. வேணாம்னா அந்த வசனத்தை நீக்கிடுங்க சார்'' என்றேன். "இருக்கட்டும்'' என்று அனுமதித்தார்.

    அடுத்த சீன்லயும் அவர் தராத ஒரு வசனம் என்னிடம் வந்துவிழ, அதுக்கும் எதுவுமே சொல்லலை. பிறகு நானா வசனம் ஏதாவது சேர்த்து சொன்னால் சிரிக்க ஆரம்பிச்சிடுவார். இவர் நாக்கில் சரசுவதி இருக்கிறாள். இவரிடம் பழகிய பிறகுதான், என் மாதிரியே இவரும் ஜாதக நம்பிக்கை உள்ளவர்னு தெரிஞ்சது. அப்ப தொடங்கி இப்ப வரை அதாவது "ராகம் தேடும் பல்லவி'' தொடங்கி, லேட்டஸ்டா அவர் டைரக்ட் செய்த "வீராசாமி'' வரை அவரோட படத்துல தொடர்ந்து நான் இருக்கிறேன் என்றால், அதுக்கு என் மீதான அவரோட அன்புதான் காரணம்

    ராமசுந்தரம்: நான் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. படித்தபோது என்னுடன் படித்தவர் ராமசுந்தரம். கல்லூரிக் காலத்திலேயே இவர் என் நல்ல நண்பர். சேலத்தில் புகழ் பெற்ற சினிமாக் கம்பெனியான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் மகன் இவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் இவர் திரைப்படத் துறைக்குள் வந்துவிட்டார். நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி. சகுந்தலா என 2 படங்களை இயக்கவும் செய்தார். பழைய நட்பை மறக்காமல் இந்த 2 படத்திலும் என்னை நடிக்க வைத்தார். இரண்டுமே வெற்றிப் படங்களாயின. சி.ஐ.டி. சங்கர் படத்தில் நடிகை சகுந்தலா நாயகியாக நடித்ததால் அவருடன் `சி.ஐ.டி' என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.

    இந்தப் படங்களைத் தொடர்ந்து ராமசுந்தரம், "வல்லவன் ஒருவன்'', "ஜஸ்டிஸ் விஸ்வநாத்'' என மேலும் 2 படங்களை இயக்கினார். இவையும் வெற்றிப்படமே. உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து அவர் படங்களை இயக்கவில்லை.

    ராம.நாராயணன்: டைரக்டர் ராம.நாராயணன் என் மீது தனி அக்கறை கொண்டவர். அவரது இயக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். டென்ஷன் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தும் இயக்குனர். இவரது இயக்கத்தில் "நாகபாலம்மா'' என்ற தெலுங்குப் படத்திலும் நடித்திருக்கிறேன். "குறைந்த பட்ஜெட், குறுகிய நாட்கள் படப்பிடிப்பு, வெற்றிப்படம்'' என்ற  இவரது `பார்முலா' தமிழ் சினிமாவில் ரொம்பவே பிரபலம்.

    கலைமணி: டைரக்டர் கலைமணி தமிழ் சினிமாவில் சிறந்த எழுத்தாளர் என்று தெரியும். `மனைவி சொல்லே மந்திரம்' படம் மூலம் சிறந்த தயாரிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தரப்பில் தயாரிப்பு நிர்வாகி என்னை

    அணுகினார்."சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். எழுத்தாளர் படம் எடுக்கிறார் என்றதும் சாதாரண சம்பளம் கேட்டேன். இதுபற்றிய தகவல் கலைமணிக்கு தெரியவந்ததும், எப்படி இவ்வளவு கம்மியா சம்பளம் கேட்டீங்க?'' என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார். நியாயமான சம்பளம் தருவேன் என்றவர், அவரே எனக்கு சம்பளம் நிர்ணயித்தார். இவர் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த `ஏழை ஜாதி'' படத்திலும் நான் நடித்தேன். அப்போது பட உலகில் எதிர்பாராத விதமாய் ஸ்டிரைக் வந்துவிட்டது. ஸ்டிரைக் இன்று முடியும். நாளை முடியும் என்று எதிர்பார்த்து நாட்களை நகர்த்தினால், ஸ்டிரைக் மட்டும் முடிவுக்கு வருவதாக இல்லை. இருந்தாலும் அவ்வப்போது கலைமணி சாருக்கு போன் செய்து, "எப்ப சார் ஸ்டிரைக் முடியும்?'' என்று கேட்டுக்கொண்டிருப்பேன்.

    இப்படி பட உலகம் ஸ்தம்பித்துப்போன ஒரு நாளில் திடீரென கலைமணி சார் எங்கள் வீட்டுக்கு வந்தார். "ஷூட்டிங் தள்ளிப்போச்சுல்ல. ஒரு மாசமா படப்பிடிப்பு எதுவும் நடக்கலை. அதுதான் உங்களை பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்'' என்று சொன்னவர்,  கொஞ்சமும் எதிர்பாராமல் ஆயிரம் ரூபாயை எடுத்து என் கைகளுக்குள் வைத்துவிட்டார். "தப்பா நினைக்கக் கூடாது. எவ்வளவோ செலவு இருக்கும். தற்சமயத்துக்கு வெச்சுக்குங்க'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    எனக்கு நிஜமாகவே அதிர்ச்சி. படப்பிடிப்பு நின்று போன நிலையில் அவருக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அப்படியிருந்தும் படத்தில் நடிக்கிற கலைஞர்கள் பற்றிய சிந்தனையும் அவர் மனதில் ஓடியிருக்கிறதே... உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதே! எத்தனை பெரிய மனசு. படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களுக்கும் அவர் இது மாதிரி அவசரத் தேவைக்கு உதவியதாக பின்னாளில் அறிந்தேன்.

    டைரக்டர் மனோபாலா இயக்கிய பல படங்களில் நான் இருப்பேன். நடிகர் அர்ஜ×ன் தயாரித்த 3 படங்களிலும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்.

    பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.
    பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.

    காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் -நடிகை என்ற முறையில் `ஹலோ' சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய, நட்பு ஆனது.

    5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு, திருமணத்தில் முடிந்தது. 1970-ம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார், மூர்த்தி.

    இதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படிச் சொன்னார்:

    "பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம். சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.

    மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், "இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே'' என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ'வும் இருந்ததில்லை. அதனால் "நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்'' என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

    மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.

    திருமணத்துக்கு முன்னதாக, எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். நடிகர்கள் ஜெமினிகணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள். நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.

    நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ளமாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி, எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.

    திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு `மனோ' என்று ஒரே மகன். என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக்குழந்தையும் உண்டு.

    மனோவின் மனைவி சபிதா, கம்ப்ïட்டர் என்ஜினீயர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவர். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.

    மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா -மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட, ஒரு சின்ன தப்புகூட அவனைப்பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

    கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட, உடனே போன் பண்ணி `இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்' என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.

    மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருஷத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், "அப்பா! அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா'' என்றான். எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது. "அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா... எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்'' என்றேன். நான் இப்படிச் சொன்னபோது, அவனும் கண் கலங்கிவிட்டான்.

    திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை, டைரக்டர் கே.பாலசந்தர் "சிந்து பைரவி'' படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வர்ற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலசந்தரின் "சஹானா'' சீரியலிலும் நடிச்சாங்க. இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட, என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க.''

    இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

    மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும், மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

    வைஜயந்தி மாலா நடித்த "வாழ்க்கை''யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து "எல்லைக்கோடு'' படத்தில் காமெடி செய்திருக்கிறார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று பரிமாணங்களிலும் வெளிப்பட்டவர். அவருடனும் "சமையல்காரன்'' படத்தில் நடித்தார், மூர்த்தி.

    டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் `சித்ராலயா' என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார். இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார், மூர்த்தி.

    3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார், மூர்த்தி.

    வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும். ஏற்றி, இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டு புரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.

    "எப்படி பார்க்கிறது? பட்ஜெட் சொல்லுங்க'' என்கிறார், புரோக்கர். `சின்ன வீடா' இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர். அவர் "சின்னவீடு'' என்பதை தனது பட்ஜெட் அடிப்படையில் சொன்னார். இதுவே `சின்னவீடு' என்ற வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?

    அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக, அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும், நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும். நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே.''

    இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி. 
    தனக்கு ஜோதிடர் சொன்ன ஜோதிடம் பலித்ததால், ஜோதிடக் கலையைக் கற்றுத் தேர்ந்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி. "நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள்'' என்று ரஜினிகாந்துக்கு ஜோதிடம் சொன்னார்.
    தனக்கு ஜோதிடர் சொன்ன ஜோதிடம் பலித்ததால், ஜோதிடக் கலையைக் கற்றுத் தேர்ந்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி. "நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள்'' என்று ரஜினிகாந்துக்கு ஜோதிடம் சொன்னார்.

    நாடகங்களில் நடித்த அனுபவத்தில் "வெண்ணிற ஆடை'' மூர்த்தியும் ஒரு நாடகம் உருவாக்கினார். "லட்சுமி கல்யாண வைபோகமே'' என்ற அந்த நாடகத்தில் பழமை மாறாத ஒரு கிராமத்தை கண்முன் நிறுத்தினார். இந்த நாடகம் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளிலும் நடந்தது.

    இந்த நாடகம் நூறாவது நாளாக மேடையேறியபோது, டைரக்டர் கே.பாலசந்தர், கவிஞர் வைரமுத்து போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

    வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவுக்காக 2 கதைகள் எழுதினார். "மாலை சூடவா'' என்ற கதை, கமலஹாசன் நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் படமானது.

    "ருசி'' என்ற பெயரில் எழுதிய இன்னொரு கதையில் மோகன் நடிக்க, "அன்னக்கிளி'' டைரக்டர்கள் தேவராஜ் - மோகனில் ஒருவரான மோகன் இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் வசனமும் எழுதினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

    இந்த காலகட்டத்தில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையும் மூர்த்திக்கு பெரிய அளவில் வந்துவிட்டது. ஜோதிடம் தொடர்பாக புத்தகங்களை கருத்தூன்றி படித்து, அதில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். தனக்கு நடிக்கும் வாய்ப்பு தேடிவரும் என்று சொன்ன ஜோதிடர் `பண்டிட்' கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அடிக்கடி சந்தித்து, ஜோதிடம் தொடர்பான புதுப்புது விவரங்களை தெரிந்து கொண்டார். இந்த முயற்சியில் ஜோதிடம் தொடர்பான 2 கட்டுரைகளை ஜோதிடர் ஆசிரியராக இருந்த பத்திரிகையிலேயே எழுதினார். ஒருநாள் அந்த ஜோதிடரே இவரிடம், "உனக்கு ஜோதிடம் நன்றாக வருகிறது. அதிலும் உன்னை வளர்த்துக்கொள்'' என்றிருக்கிறார்.

    வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஜோதிடமும் அத்துப்படியான நேரத்தில் ரஜினியின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார். அப்போது ரஜினியின் சினிமா எதிர்காலம் பற்றி தெளிவாக சொன்னார். அதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது:-

    "ரஜினியுடன் நான் "முள்ளும் மலரும்'' படத்தில் சேர்ந்து நடித்தேன். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, "சிகப்பு சூரியன்'' படத்தில் நடித்தோம். அப்போது அவர் நடிப்பில் வளர்ந்து வந்த நேரம். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி தனது ஜாதகத்தை என்னிடம் காட்டினார். அதைப்பார்த்த நான், "நடிப்பில் பெரும் புகழ் உங்களை வந்து சேரும். பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்துடுவீங்க'' என்றேன். ரஜினி சிரித்துக்கொண்டார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வந்த படங்கள் பெரிய அளவில் வசூலைத்தர, ஜோதிடம் சொன்னது போலவே சூப்பர் ஸ்டாராகி விட்டார்.

    அதுமாதிரி நடிகர் திலகம் சிவாஜியுடனும் எனக்கு ஒரு ஜோதிட அனுபவம் உண்டு. சிவாஜி சார் நடித்த "அஞ்சல் பெட்டி-520'' படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என்னிடம் பிரியமாக பேசுவார். "யோவ்! காமெடியன்! இங்கே வாய்யா'' என்றுதான் அழைப்பார்.

    நான் ஜோதிடக் கலையை கற்றுத் தேர்ந்த நேரத்தில் ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தேன்.

    "வணக்கம் சார்! நல்லா இருக்கீங்களா?'' என்று கேட்டேன்.

    "உனக்கு ஜோசியம் தெரியுமாமே'' என்று கேட்டார், சிவாஜி.

    "தெரியும் சார்'' என்றேன்.

    "உன் ஜோசியம் எனக்கு என்னய்யா சொல்லுது?'' - கேட்டார் சிவாஜி.

    நான் அவரிடம் ஜாலியாக, "ஜோசியம் பார்த்தால் எல்லாரும் பணம் கொடுப்பாங்க. நீங்க என்ன கொடுப்பீங்க?'' என்று கேட்டேன்.

    "என்னடா நீ! வம்பு பிடிச்ச ஆளா இருப்பே போலிருக்கே'' என்று சிரித்த சிவாஜியிடம், "இல்ல சார்! உங்களுக்கு பார்த்து சொல்றதைவிட பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது?'' என்று சொன்னவன், அவர் ஜாதகத்தை வரவழைத்து அப்போதே  பார்த்தேன்.

    நான் அவரிடம், "அரசியலில் உங்களுக்கு ஒரு பதவி வர இருக்கிறது'' என்றேன்.

    நான் சொன்னதை நம்பவில்லை என்பதை அவரது கண்கள் காட்டிக் கொடுத்தன.

    ஆனால் ஜோதிடம் பொய்யாகவில்லை. சில நாட்களிலேயே ராஜ்யசபா எம்.பி.யாக சிவாஜியை நியமித்து அறிவிப்பு

    வந்தது.''

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற ஏக்கம் மூர்த்திக்கு இருந்தது. எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை'' படத்தில் அப்படியொரு வாய்ப்பும் வந்தது. ஆனால் துரதிருஷ்டம்! கதையுடன் ஒட்டவில்லை என்று கூறி வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காமெடிக் காட்சிகளையே நீக்கி விட்டார்கள்!

    இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-

     "எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டேன். ஆனாலும் செட்டில் அவர் நடித்த நாட்களில் எனக்கு ஷூட்டிங் இருக்காது. எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்து

    2 நாட்களுக்குப் பிறகே என்னை அழைத்தார்கள். டி.எஸ்.பாலையா, ஜெயலலிதா நடித்த காட்சியில் நானும் நடித்தேன். நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்பது படம் ரிலீசான பிறகே எனக்குத் தெரியும்.

    அவர் படத்தில் நான் இல்லையே தவிர, நான் நடித்த நாடகம் ஒன்றில் என் நடிப்பை மனதார பாராட்டிய வள்ளல் அவர். மேஜர் சுந்தர்ராஜன் நடத்திய "தீர்ப்பு'' என்ற நாடகம் நூறாவது நாள் கண்டது. நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார். அவர் பேசும்போது, "மேஜர் சுந்தர்ராஜன் நன்றாக நடிப்பார் என்பது எனக்குத் தெரியும். இந்த நாடகத்தில் `ராமு' என்ற கேரக்டரில் நடித்தவரின் நடிப்பை நான் இதுவரை பார்த்ததில்லை. அருமையாக நடிக்கிறார். என் தாயின் ஆசியோடு சொல்கிறேன். அவர் நல்லா வருவார்'' என்றார்.

    நாடகத்தில் `ராமு'வாக நடித்தது நான்தான். அவரின் மனப்பூர்வ பாராட்டு எனக்கு `ஆசி'யாக அமைந்தது. நடிப்பில் எனக்கு வளர்ச்சியாகவும் அமைந்தது.

    எம்.ஜி.ஆர். அவர்களின் பாராட்டுக்கு இணையான பாராட்டு நான் நடிக்க வரும் முன்பே எனக்கு கிடைத்து விட்டது. அப்போது என்னைப் பாராட்டியவர் நகைச்சுவை மாமேதை `கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன்.

    அப்போது நான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி விழாவில் நாங்கள் "ஐம்பதும் அறுபதும்'' என்ற பெயரில் ஒரு காமெடி நாடகம் போட்டோம். கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் தம்பதிகள் வந்திருந்தார்கள். எங்கள் நாடகத்தை பார்த்த தம்பதியர் இருவருமே பாராட்டினார்கள். மதுரம் அம்மா பேசும்போது, என்னை சுட்டிக்காட்டி, "இந்தப் பையன் ரொம்ப நல்லா `ஆக்ட்' பண்றான்'' என்றார். கலைவாணர் என்னை அழைத்து, "நல்லா படிப்பா. படிப்பை பூர்த்தி பண்ணிட்டு அப்புறமா சினிமாவுக்கு வா'' என்று கூறினார்.

    நான் சினிமா பற்றி சிந்திக்காத அந்தக் காலத்தில், என்னை நடிக்க வரச்சொல்லி வாழ்த்திய கலைவாணரின் ஆசியும் எனக்கு கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன்.''

    இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

    வெண்ணிற ஆடை படம் 1965-ல் வெளியானது. படத்தில் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த் என அமைந்த அறிமுகப்பட்டியலில் மூர்த்தியும் இருந்தார்.
    வெண்ணிற ஆடை படம் 1965-ல் வெளியானது. படத்தில் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த் என அமைந்த அறிமுகப்பட்டியலில் மூர்த்தியும் இருந்தார்.

    இந்தப்படம் மூலம் நிர்மலா, `வெண்ணிற ஆடை நிர்மலா'வாகவும், மூர்த்தி, `வெண்ணிற ஆடை மூர்த்தி'யாகவும் மாறிப்போனார்கள். படத்தின் பெயர், இருவரிடமும் இணைபிரியாமல் ஒட்டிக்கொண்டு விட்டது.

    வக்கீலுக்குப் படித்த மகன், அதற்காக பிராக்டீஸ் செய்வதை தவிர்த்து, விற்பனைப் பிரதிநிதியாக மாறி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்ததுதான் அப்பாவுக்குத் தெரியும். அதன்பிறகு ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' படம் மூலம் காமெடி நடிகராக தமிழ் ரசிகர்களிடம் அறியப்பட்ட மூர்த்தி, படம் வெளிவரும்வரை பெற்றோரிடமும்கூட சொல்லவில்லை.

    படம் வெளிவந்த பிறகும் மறைத்தால் சரியாக இருக்காது. யாராவது அப்பாவிடம் தவறாக சொல்லி அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நாமே சொல்லி விடுவது என முடிவு செய்தார், மூர்த்தி. ஊருக்கு வந்து அப்பாவை சந்தித்த அவர், பேச்சினூடே தனக்கு கிடைத்த நடிப்பு வாய்ப்பு பற்றியும், நடிப்பிலும் எதிர்காலப் பிரகாசம் இருப்பது பற்றியும் நாசூக்காக சொல்லிவிட்டார். சொல்லி முடித்த பிறகு அப்பாவிடம் இருந்து பெரிய பிரளயத்தை எதிர்பார்த்தார். ஆனால் பலவீனமான அப்பாவிடம் இருந்து வெளிப்பட்டது அவரது உதடுகளில் இருந்து புன்னகைக்கீற்றுதான். "நல்லது கெட்டது தெரிஞ்சுக்கிற வயது உனக்கு வந்தாச்சு. எதில் ஆர்வமோ அதில் சாதிக்கப்பார்'' என்று சொன்னார் அப்பா.

    ஆனால் மூர்த்தியின் அப்பாவால் மகன் நடித்த `வெண்ணிற ஆடை' படத்தை பார்க்க இயலவில்லை. உடல் நலம் குன்றி அக்டோபரில் காலமாகி விட்டார். அம்மாவும் அப்போது அந்தப் படத்தை பார்க்காமலே இருந்து விட்டார். அதன் பிறகு டிவியில் ஒளிபரப்பியபோது மகனை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

    `வெண்ணிற ஆடை' வெற்றிப்பட பட்டியலில் நிச்சயம் சேரும் என்று நம்பினார் டைரக்டர் ஸ்ரீதர். ஆனால் கதைக்காக "ஏ'' சர்டிபிகேட் பெற்ற படத்தில், ரசிகர்கள் `எதிர்பார்த்த அம்சங்கள்' இல்லாததால் ஆரம்பத்தில் சரியாக ஓடவில்லை. பிறகு `பிக்அப்' ஆகி, நூறு நாட்கள் ஓடியது.

    வெண்ணிற ஆடை படம் ரிலீசாகி 6 மாதம் ஆகியும் மூர்த்தியை தேடி ஒரு தயாரிப்பாளர்கூட வரவில்லை. இதனால் தவறான பாதையில் அடியெடுத்து வைத்து விட்டோமோ என்று மூர்த்தி கூட கலக்கமுற்றார். உள் மனதில், பேசாமல் "சீனியர் வக்கீல் யாரிடமாவது ஜுனியராக சேர்ந்து விடுவோமா?'' என்றுகூட யோசித்தார். பிறகு எப்போதுதான் அடுத்த பட வாய்ப்பு வந்தது! அதுபற்றி `வெண்ணிற ஆடை' மூர்த்தி கூறியதாவது:-

    டைரக்டர் டி.என். பாலு அப்போது கதாசிரியராக இருந்தார். அவர் எழுதிய `காதல் படுத்தும்பாடு' கதையை டைரக்டர் ஜோசப் தளியத் படமாக எடுக்கிறார் என்பதை அறிந்தேன். படத்தில் தங்கவேலு சாருடன் கூடவே வருகிற ஒரு கேரக்டரில் நடிக்க ஆள் தேடிக்கொண்டிருப்பதை தெரிந்து கொண்டேன். இதனால் டைரக்டர் ஜோசப் தளியத்தை சந்தித்து பேசினேன்.

    நான் ஏற்கனவே டைரக்டர் ஸ்ரீதர் சாரின் படத்தில் நடித்திருப்பதை சொல்லி `சான்ஸ்' கேட்டேன். அவர் என்னிடம் "அந்தப்படத்தில் நீ நடித்த காமெடி போர்ஷனை மட்டும் வாங்கி வர முடியுமா?'' என்று கேட்டார். (விசிடி வராத காலம் அது) நான் ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது அவர்களும் பெருந்தன்மையாக நான் நடித்த ரீலை கொடுத்து அனுப்பினர்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் ஜோசப் தளியத், என் நடிப்பில் திருப்தியடைந்து அவரது படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார். தங்கவேலு சாருடன் வருகிற அந்த ஜாலி கேரக்டரும் எனக்கு பெயர் வாங்கித் தந்தது.

    டைரக்டர் ஜோசப் தளியத் ரொம்பவே பெருந்தன்மையானவர். படத்தை தயாரிப்பதும் அவரே என்பதால் சகல விஷயத்திலும் அவரது நேரடிப் பார்வை இருக்கும். சின்னவொரு விஷயத்தில்கூட அவரது அணுகுமுறை நமக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும். செட்டில் தங்கவேலு சாருடன் நடித்துக் கொண்டிருந்தேன். `லஞ்ச் பிரேக்' வந்தது. தங்கவேலு சாரை தனியறைக்கு சாப்பிட அழைத்துப் போனார்கள்.

    என்னையோ கம்பெனி ஆட்கள் சாப்பிடுகிற இடத்துக்கு அழைத்துப்போனார்கள். இதை பார்த்துவிட்ட டைரக்டர் ஜோசப் தளியத் தனது தயாரிப்பு நிர்வாகியை உடனடியாக அழைத்து, "மூர்த்தியை நடிகர் தங்கவேலு சாப்பிடப்போகும் அதே அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிட வையுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். நடிப்பில் வளரும் முன்பே எனக்கு அவர் மூலம் கிடைத்த இந்த மரியாதை என்னை நெகிழச் செய்தது.''

    இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

    படத்தில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கொண்டிருந்தாலும், மூர்த்தியை நாடக உலகமும் கவர்ந்திழுத்தது. `சித்ராலயா' கோபுவுடன் சேர்ந்து நாடகங்களையும் நடத்த ஆரம்பித்தார். கோபுவுடன் சேர்ந்து `காசேதான் கடவுளடா', `வீட்டுக்கு வீடு', `ஸ்ரீமதி' போன்ற நாடகங்களை நடத்தினார். இதில் ஒரு ஆங்கில புத்தகத்தில் மூர்த்தி படித்த ஒரு கதையை கோபுவிடம் சொல்ல, அவர் அதையே நாடகமாக்கினார்.அதுவே"காசேதான் கடவுளடா'' நாடகம்.

    இந்த "காசேதான் கடவுளடா'' நாடகம், பார்ப்பவர்கள் அத்தனை பேரையும் விலா நோகச் சிரிக்க வைத்தது. மனம் விட்டுச் சிரித்தவர்கள் மறுபடி மறுபடி நாடகம் பார்க்க வந்தார்கள்.

    ஒருநாள் இந்த நாடகத்தை பார்க்க ஏவி.மெய்யப்ப செட்டியார் வந்தார். நாடகம் பிடித்துப்போக, அதை படமாக்கும் முடிவுக்கு வந்தார். கோபு உள்ளிட்ட பலருக்கும் அப்போது அட்வான்ஸ் கொடுத்தார். எல்லோரும் உற்சாகத்தில் துள்ளினார்கள்.

    இந்தப்படத்தில் மூர்த்திக்கும் இடம் கிடைத்தது. படத்தில் நடித்ததற்காக 5 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இது மூர்த்தியை ரொம்பவே உற்சாகப்படுத்தியது.

    காரணம், அதுவரை படங் களுக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் தான் வாங்கினார். செட்டியார் உபயத்தில் 2 ஆயிரம் உயர்ந்தது.

    ஆனால் "காசேதான் கடவுளடா'' நாடகம் பல தடவைகள் மேடையேறியதால், நாடகத்தின் மூலமாக மட்டும் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பளமாக கிடைத்தது, மூர்த்திக்கு.

    தமிழ்த்திரை உலகில், நகைச்சுவை நடிகர்களில் நீண்ட காலமாக வெற்றிநடை போடுகிறவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. 42 ஆண்டுகளில் 810 படங்களில் நடித்து முடித்துவிட்டு, 1000-வது படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
    தமிழ்த்திரை உலகில், நகைச்சுவை நடிகர்களில் நீண்ட காலமாக வெற்றிநடை போடுகிறவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. 42 ஆண்டுகளில் 810 படங்களில் நடித்து முடித்துவிட்டு, 1000-வது படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

    மூர்த்தி, எடுத்த எடுப்பிலேயே நடிக்க வந்துவிடவில்லை. வக்கீல் வேலைக்கு படித்தார். கோர்ட்டில் தனது கட்சிக்காரர்களுக்காக `யுவர் ஆனர்' என்று ஆரம்பித்திருக்க வேண்டிய இவரது `சட்ட' வாழ்க்கை, சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு கலைத்துறைக்குள் பயணிக்க நேர்ந்தது முற்றிலும் எதிர்பாராத விஷயம்.

    சொந்த ஊர் சிதம்பரம். அப்பா கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிரிமினல் வக்கீலாக இருந்தார். அப்பா, தன் வழியில் மகன் மூர்த்தியையும் வக்கீலாக்கிப் பார்க்க விரும்பியிருக்கிறார்.

    தனக்கென்று வேறு எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில், மூர்த்தியும் வக்கீலுக்கு படித்து பாஸ் செய்தார்.

    அப்பாவிடமே ஜுனியராக சேர்ந்திருந்தால் கடலூர் மாவட்டத்துக்கு இன்னொரு பிரபல கிரிமினல் வக்கீல் கிடைத்திருப்பார். ஆனால் மூர்த்தி சட்டப்படிப்பை முடித்த நேரத்தில் அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் போக, வேறொரு சீனியரிடம் ஜுனியராக பிராக்டிஸ் செய்ய மூர்த்தியின் மனம் ஒப்பவில்லை. இதனால் அப்போது சர்வதேச அளவில் வியாபித்திருந்த "ரெமிங்டன்'' டைப்ரைட்டர் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலைக்குப் போனார். ஒரு வருடம் இந்தப் பணி தொடர்ந்திருக்கிறது.

    பிறகு எப்படி மூர்த்தி நடிகரானார்? இந்த வகையில் அவரை நடிப்பு பக்கம் திருப்பியதே ஜாதகம்தான்.

    அதுபற்றி மூர்த்தி கூறுகிறார்: "ரெமிங்டன் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலையில் ஊர் ஊராக சுற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படி `நாளொரு பயணம்; பொழுதொரு ஊர்' என்ற நிலை எனக்கு ஒத்துவரவில்லை. அதனால் அந்த வேலையை விட்டு விட்டு, சுமார் 6 மாதம் சும்மா இருந்தேன்.

    அப்போது நான் சென்னையில் "ஒய்.எம்.சி.ஏ'' விடுதியில் தங்கியிருந்தேன். ஒருநாள் சாப்பிட்டு முடித்துவிட்டு கடைத்தெரு வழியாக வரும்போது ஜோதிடம் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகம் என் கண்ணில் பட்டது. வாங்கி படித்தேன்.

    அதில் ஜோதிடரிடம் ஒருவர் "எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?'' என்று கேட்டிருந்தார். பதிலுக்கு அந்த ஜோதிடர் "வருகிற ஜுலை மாதம் 10-ந்தேதிக்குள் திருமணம் நடந்தே தீரும்'' என்று எழுதியிருந்தார்.

    எனக்கு ஆச்சரியம். இத்தனை தெளிவாக தேதி வாரியாக ஒருவரின் வாழ்க்கை நிலையை தீர்மானிக்க ஜோதிடத்தால் முடியுமா? இந்தக் கேள்வியை அந்த ஜோதிடரிடம் நேரில் சென்று கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அந்தப் பத்திரிகையில் அவர் கொடுத்திருந்த போன் நம்பரில் தொடர்பு கொண்டேன். "உங்களை சந்திக்க வேண்டும்'' என்றேன். "சைதாப்பேட்டையில் இருக்கிறேன். மதியம் வாருங்கள்'' என்றார்.

    போனேன். சாதாரண ஓட்டு வீட்டில் இருந்தார். அறை முழுக்க ஜோதிட புத்தகங்கள். பார்த்த மாத்திரத்தில் மரியாதை தரும்

    தோற்றம்.என்னைப் பார்த்ததும், "நீங்கதான் போன் பண்ணினீங்களா?'' என்று கேட்டார். பேச்சு சகஜமாக வளரத் தொடங்கிய நேரத்தில், "ஒருத்தருக்கு கல்யாணம் எப்போ நடக்கும்? வேலை எப்ப கிடைக்கும்? இதெல்லாம் ஜோதிடம் எப்படி முடிவு செய்ய முடியும்? நீங்கள் இதில் இன்னும் ஒருபடி மேலே போய் "இந்த தேதிக்குள் நடக்கும் என்று சொல்வதெல்லாம் சரிதானா?'' என்று கேட்டேன்.

    என் கேள்வியை புரிந்து கொண்டவர் என்னிடம், "தம்பி! ஜோதிடம் என்பது மேஜிக் விஷயம் அல்ல. அது கணிதம். சரியாக குறித்தோமானால் நேரம் தப்பாது'' என்றார்.

    "அப்படியானால், எதிர்காலத்தில் நான் என்னவாக வருவேன் என்பதை சொல்ல முடியுமா, உங்களால்?'' என்று கேட்டேன்.

    "உன் ராசி, லக்னத்தை சொல்லு'' என்றார்.

    நானும் "கன்யா ராசி; துலாம் லக்னம்'' என்று சொன்னேன்.

    குறித்துக் கொண்டவர், என் பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றையும் கேட்டுக்கொண்டார். பிறகு ஏதேதோ கணக்கு மாதிரி எழுதினார். `என்ன சொல்லப் போகிறாரோ' என்ற ஆர்வத்தில் இருந்த என்னிடம், "தம்பி! உங்களுக்கு `மேக்கப்' வாழ்க்கைதான் அமையும். சினிமாவில் நடிப்பீங்க. ஜனங்களை சிரிக்க வைப்பீங்க. ஆனால் அதுல நம்பர் ஒன்ல வரமாட்டீங்க. நம்பர் டூ-திரிக்குள் இருப்பீங்க. வயதாகி குச்சி ஊன்றும் காலம் வரை நடிப்பில் உங்கள் இடம் நிரந்தரமாக இருக்கும்'' என்றார்.

    நான் நடிப்பேனா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது! பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகத்தில் நடித்த அனுபவம் மட்டுமே இருக்கிறது. அப்புறமாய் அதைக்கூட மறந்தாச்சு. பிறகு எப்படி நடிக்க வாய்ப்பு? அதுவும் சினிமாவில்?

    இந்த மாதிரி கேள்விகள் எனக்குள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்த நேரத்தில்கூட அவரை விடவில்லை. "நீங்கள் சொன்னதை எனக்கு எழுதித்தர வேண்டும். அதுவும் எவ்வளவு நாளைக்குள் இது நடக்கும் என்று எழுதித் தரவேண்டும்'' என்றேன்.

    "ஏன், என் மேல் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார் ஜோதிடர்.

    "நீங்கள் சொன்ன தேதிக்குள் நடிகனாகி விட்டால் உங்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டுமே. அதற்குத்தான் தேதி கேட்டேன்'' என்றேன்.

    நான் ஜோதிடரை சந்தித்தது 1964-ம் ஆண்டு பிப்ரவரியில்.

    அவர் என்னிடம் "வருகிற அக்டோபர் 30-ந்தேதிக்குள் நடிகனாகி விடுவாய்'' என்று எழுதி கையெழுத்து போட்டு தந்தார். அவர் சொன்னதை விடவும் 7 நாளுக்கு முன்பே அதாவது அக்டோபர் 23-ந்தேதியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. டைரக்டர் ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' படம்தான் என் ஜோதிடத்தை மெய்யாக்கி என்னையும் நடிகனாக்கி விட்டது. ஒரு 7 நாள் தள்ளிப் போயிருந்தால் சினிமா உலகம்  தப்பிச்சிருக்கும்!''

    நகைச்சுவையாகவே சொன்னார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

    மூர்த்திக்கு ஸ்ரீதர் சினிமா வாய்ப்பு அளித்தது எப்படி?

    மூர்த்தி, ஜோதிடரை சந்தித்த சில நாட்களுக்குப்பிறகு, ஸ்ரீதரின் உதவியாளராக இருந்த என்.சி.சக்ரவர்த்தியை தற்செயலாக சந்தித்திருக்கிறார். அப்போது அவர் ஸ்ரீதரின் உதவியாளர் என்று தெரிந்ததும், "டைரக்டர் ஸ்ரீதரிடம் ஒருநாள் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள்'' என்று

    கேட்டார்.`அதற்கென்ன' என்று சர்வசாதாரணமாக சொன்ன சக்ரவர்த்தி, அடுத்த சந்திப்பிலேயே மூர்த்தியை ஸ்ரீதர் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்.

    நடிக்க வேண்டும் என்று நினைத்ததுமே டைரக்டர் ஸ்ரீதரின் பட வாய்ப்பு கிடைத்து விடும் போலிருக்கிறதே என்று மூர்த்திக்கும் ஆச்சரியம்.

    "இப்போது நான் எடுப்பது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம். உங்களுக்கு எந்த மாதிரி நடிப்பு வரும்?'' என்று ஸ்ரீதர் கேட்டார்.

    "எனக்கு காமெடி நல்லா வரும்னு நினைக்கிறேன்'' என்றார் மூர்த்தி.

    "நீங்கள் வக்கீலுக்கு படித்திருக்கிறீர்கள். உங்கள் முகத்தில்கூட `படித்தவர்' என்ற களை தெரியுது. நீங்கள் எப்படி நடிப்பில் சிரிக்க வைக்க முடியும்?'' என்று கேட்டார், ஸ்ரீதர்.

    தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று மூர்த்திக்கு புரிந்து விட்டது. "பரவாயில்லை சார்! எனக்கு வாய்ப்பு தருவதாக இருந்தால் உங்க மானேஜர் மூலமாக எனக்கு தெரியப்படுத்துங்கள்'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

    அப்போதுதான் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட்டது. அதை மூர்த்தியே சொல்கிறார்:

    "நடிக்க வாய்ப்பு இல்லை, ஆனால் முகத்தில் நல்ல `களை' இருக்கிறது என்று ஸ்ரீதர் சார் சொன்னது என் மனதில் ஆழப்பதிந்து விட்டது. எனவே, அவரிடம் விடைபெற்று வாசல் வரை வந்தபோது மறுபடியும் அவர் பக்கமாக திரும்பினேன். "சார்! `ஒருத்தருக்கு நல்ல முகம் அமைஞ்சா அதுவே அதிர்ஷ்டமாகவும் ஆகிவிடும்' என்பது ஆங்கிலப் பழமொழி. ஆனால், என் விஷயத்தில் மட்டும் இந்தப் பழமொழி பொய்யாகி விட்டது. பரவாயில்லை சார். நான் வருகிறேன்'' என்று அறைக் கதவை திறந்தேன்.

    நான் சொன்னது ஸ்ரீதர் சாரை பாதித்து விட்டது போலும். எனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். எனக்கு மீசை வைத்து மேக்கப் போட்டு, படம் எடுத்தார்கள். அப்போது நான் `திருதிரு'வென விழித்ததில், எனக்குள் இருந்த காமெடி நடிகனை கண்டு கொண்டார், ஸ்ரீதர். ஸ்ரீதர் சாரின் `வெண்ணிற ஆடை' படம் மூலம் காமெடி நடிகன் ஆனேன். சாதாரண மூர்த்தி `வெண்ணிற ஆடை' மூர்த்தி ஆனது

    இப்படித்தான்.''இவ்வாறு "வெண்ணிற ஆடை'' மூர்த்தி கூறினார்.

    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    சொந்தப்படம் எடுத்ததால் சொத்துக்களை இழந்த மருதகாசி, எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு மறுபிரவேசம் செய்தார். தன்னம்பிக்கையுடன், குடும்பத்தாருடன் மீண்டும் சென்னையில் குடியேறினார்.

    தேவர் படங்களுக்கு பாட்டு எழுதினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "தசாவதாரம்'', "காஞ்சி காமாட்சி'', "நாயக்கரின் மகள்'' ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

    மறுபிரவேசத்தில், டப்பிங் படங்கள் உள்பட சுமார் 100 படங்களுக்கு பாடல் எழுதினார்.

    இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்.''

    இதில் இடம் பெற்ற "நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு'' என்ற பாடல் மருதகாசி எழுதியதாகும்.

    பொதுவாக, பட உலகில் ஒரு முறை தோற்றவர்கள் மீண்டும் தலை தூக்குவது மிகவும் கடினம். மருதகாசி அயராது உழைத்து, இழந்தவற்றை மீண்டும் பெற்றார். பழைய புகழோடு, 1989-ம் ஆண்டு, நவம்பர் 29-ந்தேதி காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 69.

    மருதகாசிக்கு 6 மகன்கள். 3 மகள்கள்.

    மூத்த மகன் இளங்கோவன் விவசாயத்தை கவனிக்கிறார். இரண்டாவது மகன் ராமதாஸ் "பி.ஏ'' பட்டதாரி. குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாவது மகன் பொன்முடி, ஓவியர்.

    4-வது மகன் மதிவாணன் "மெட்ரோ வாட்டர்'' நிறுவனத்திலும், அடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார்கள்.

    6-வது மகன் மருதபரணி, தந்தையின் திரை உலக வாரிசாக விளங்குகிறார். பிற மொழிப் படங்களை தமிழில் மொழி மாற்றம் ("டப்பிங்'') செய்து வருகிறார். இவர் மனைவி உமா பரணி திரைப்படங்களுக்கு, பின்னணியில் குரல் கொடுக்கிறார்.

    மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும், கடந்த மே மாதம் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 லட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    மருதகாசியுடன் நெருங்கிப் பழகியவரான பட அதிபர் ஏ.கே.வேலன் கூறியதாவது:-

    "வியாபார நோக்கமின்றி, கலை நோக்குடன் சினிமாவுக்கு பாடல்களை எழுதியவர் மருதகாசி. கற்பனை வளம் மிகுந்தவர்.

    அவர் எழுத்திலே தமிழ் மரபு இருக்கும்; தமிழின் தரம் இருக்கும்; புதிய பார்வையும் இருக்கும்.

    என்னுடைய "தை பிறந்தால் வழி பிறக்கும்'' படத்துக்கு அவர் எழுதிய "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடல், ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிக்கிறது.''

    இவ்வாறு ஏ.கே.வேலன் கூறினார்.

    கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:-

    "கவிஞர் மருதகாசி என்ற பெயர், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய பெயர்.

    இன்றைய புதிய விளைச்சல்களுக்கு எல்லாம், முன்னோடியாய் இருந்த நாடறிந்த நாற்றங்கால்.

    அவருடைய பாடல்கள், காற்றையும், காலத்தையும் வென்று, இன்றும் அன்றலர்ந்த மலர்களைப் போல நின்று நிலவுகின்றன.

    கவிஞர் மருதகாசி அவர்கள், திரை உலகில் ஒரு சகாப்தம் படைத்தவர்.

    கால் சட்டை போட்ட பருவம் முதல் இன்று வரை இவரது திரை இசைப் பாடல்களில் எனக்கொரு சுக மயக்கம் உண்டு. மருதகாசியின் பெயர், காற்றைப் போல காலம் எல்லாம் நிலைத்து நிற்கும்.''

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
    சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.
    சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

    இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

    "1950-ம் ஆண்டில் என் அண்ணன் "மந்திரிகுமாரி''க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.

    அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

    கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

    கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.

    1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.

    1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். "பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்'' என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.

    அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். "நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் "மறுபிறவி.'' எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

    "மறுபிறவி'' படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, "தேர்த்திருவிழா'' படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

    தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.

    எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.''

    இவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.

    மருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில் மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள். பிறகு தனித்தனியாக எழுதினார்கள்.

    தமிழரசு கழகத்தின் முக்கிய பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.

    புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.

    ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி "தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு, "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடலை மருதகாசி எழுதினார்.

    அதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை மருதகாசி எழுதினார். "பொன்னித்திருநாள்'' என்ற படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார்.

    உடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. "என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது'' என்று மனந்திறந்து பாராட்டுவார்.

    அத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க மறுத்த சந்தர்ப்பங்களில், "இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை எழுதச் சொல்லுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.

    குறிப்பாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த "தசாவதாரம்'' படத்துக்கு பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர், "மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறிவிட்டார்.

    இதன் காரணமாக "தசாவதாரம்'' படத்துக்கு எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார்.

    ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.
    ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.

    "கல்யாணப்பரிசு'' படத்தை இயக்கி, புகழின் சிகரத்தைத் தொட்ட ஸ்ரீதர், "சித்ராலயா'' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி "தேன் நிலவு'' படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். இதற்கு இசை அமைக்க ஏ.எம்.ராஜாவும், பாடல்கள் எழுத மருதகாசியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

    இந்தப் படத்துக்காக, 3 பாடல்களையும் மருதகாசி எழுதிக் கொடுத்து விட்டார்.

    இதற்கிடையே சிவாஜி பிலிம்சின் இன்னொரு நிறுவனமான பிரபுராம் பிக்சர்ஸ் சார்பில், "விடிவெள்ளி'' என்ற படம் தயாராகி வந்தது. சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடித்த இந்தப் படத்தை ஸ்ரீதர்தான் டைரக்ட் செய்தார். இசை ஏ.எம்.ராஜா. பாடல்கள் மருதகாசி.

    இந்தப் படத்தில் மருதகாசி எழுதிய "கொடுத்துப்பார் பார் உண்மை அன்பை'' என்ற பாட்டு இடம் பெற்றது. அந்த பாட்டுக்கான மெட்டு அடிக்கடி மாற்றப்பட்டது. இதனால் பட அதிபர்களுக்கும், ஏ.எம்.ராஜாவுக்கும் உரசல் ஏற்பட்டது. இதில், மருதகாசியும் பங்கு கொள்ள நேரிட்டதால், ஏ.எம்.ராஜாவுக்கும், மருதகாசிக்கும் மோதல் ஏற்பட்டது. "இனி ஏ.எம்.ராஜா இசை அமைக்கும் படங்களுக்கு பாடல் எழுதமாட்டேன்'' என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார், மருதகாசி.

    டைரக்டர் ஸ்ரீதர், ஜெமினிகணேசன் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மருதகாசி தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

    இதன் காரணமாக, "தேன்நிலவு'' படத்தில் அவர் பணியாற்ற முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே எழுதிக்கொடுத்த 3 பாடல்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று மருதகாசி கூறிவிட்டார்.

    1956-ம் ஆண்டு, ஏ.பி.நாகராஜன் பட உலகில் முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் ïனிட்டில் கே.சோமு (டைரக்ஷன்), கோபண்ணா (கேமரா), டி.விஜயரங்கம் (எடிட்டிங்), கே.வி.மகாதேவன் (இசை), மருதகாசி (பாடல்) ஆகியோர் இருந்தார்கள்.

    இந்த ïனிட் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக, ஏ.பி.நாகராஜன் கதை- வசனத்தில் பல்வேறு கம்பெனிகளின் பெயர்களில் படங்கள் தயாரிக்கப்பட்டன.

    மருதகாசி, கே.வி.மகாதேவன், வி.கே.ராமசாமியின் தம்பி முத்துராமலிங்கம், "வயலின்'' மகாதேவன் ஆகிய 4 பேரையும் பங்குதாரர்களாகக் கொண்ட "எம்.எம்.புரொடக்ஷன்ஸ்'' என்ற படக்கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தக் கம்பெனி சார்பில் "அல்லி பெற்ற பிள்ளை'' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய "டாங்கா வாலா'' என்ற படத்தின் கதையை தழுவி, திரைக்கதை அமைக்கப்பட்டது.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். திரைக்கதை -வசனம் ஏ.பி.நாகராஜன். டைரக்ஷன் கே.சோமு. பாடல்களை மருதகாசி எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், ஒரு குதிரை முக்கிய கதாபாத்திரமாக நடித்தது. மருதகாசி மங்களூர் சென்று, ஒரு வெள்ளைக்குதிரையை வாங்கி வந்தார். குதிரையைப் பார்த்த சின்னப்ப தேவர், "குதிரைக்கு சுழி சரியில்லையே! விற்றுவிடுங்கள்'' என்றார்.

    ஆனால் திட்டமிட்டபடி, குதிரையை படத்தில் நடிக்க வைத்தார்.

    ஒரு குழந்தை தொட்டிலில் படுத்திருக்க, தொட்டில் கயிற்றை குதிரை தன் வாயினால் இழுத்து, குழந்தையை தூங்க வைக்கும். அப்போது குதிரையின் மன நிலையை விளக்கும் விதமாக, "எஜமான் பெற்ற செல்வமே'' என்ற பாடலை மருதகாசி எழுதினார். அவரும், கே.வி.மகாதேவனும் விரும்பிக் கேட்டுக்கொண்டதால், பாடலை பிரபல இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் பின்னணியில் பாடினார்.

    6 மாத காலத்தில் படத்தை முடித்து ரிலீஸ் செய்வதாக விநியோகஸ்தர்களுடன் படக்கம்பெனி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் படம் முடியவில்லை. படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போயிற்று. கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே இருந்தன.

    பாடல் எழுதுவதில் மருதகாசி `பிசி'யாக இருந்த நேரம். ஆனால், அவருக்கு வேண்டாத சிலர், "மருதகாசி சொந்தப் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இனி வெளிப்படங்களுக்கு குறிப்பிட்ட நாளில் பாடல் எழுதித்தர மாட்டார்'' என்று பிரசாரம் செய்தனர்.

    இதனால் புதுப்பட வாய்ப்புகள் குறைந்தன.

    இரண்டு ஆண்டு காலம் தயாரிப்பில் இருந்த "அல்லி பெற்ற பிள்ளை'' 31-7-1959-ல் வெளிவந்தது. படம் ஓரளவு நன்றாக இருந்தும், தோல்வியைத் தழுவியது.

    மருதகாசியின் தம்பி அ.முத்தையன், கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். "மருதகாசியின் திரையுலகச் சாதனைகள்'' என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.

    மருதகாசியின் சொந்தப்பட அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    "என் அண்ணன் ஒரே ஒரு படம் எடுத்தார். குசேலர் ஆனார்.

    இந்த காலக்கட்டத்தில் அவர் ஒரு மகத்தான தவறு செய்தார். ஒரு சீமைப்பசுவை வாங்கி வைத்திருந்த அவர், இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் புதிதாக கட்டிய வீட்டின் கிரகப்பிரவேச விழாவின்போது, அதை பரிசாகக் கொடுத்து விட்டார்.

    இப்படி பசுவை தானமாகக் கொடுப்பது சரியல்ல என்றும், ஜோதிடப்படி ஏதாவது கிரகக் கோளாறு ஏற்படும்போதுதான் இப்படி செய்வார்கள் என்றும், பசுவை தானம் செய்வது நமது லட்சுமியை அடுத்தவர் வீட்டில் கொண்டுபோய் விடுவதற்குச் சமம் என்றும் டைரக்டர் கே.சோமு என்னிடம் சொன்னார்.

    அவர் சொன்னது போலவே நடந்து விட்டது.

    "அல்லி பெற்ற பிள்ளை'' படத்தினால் என் சகோதரர் நஷ்டம் அடைந்ததை அறிந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், என் அண்ணனை சந்தித்து "தூண்டா மணிவிளக்கு'' என்ற கதையை கொடுத்து, அதை படமாக்கச் சொன்னார். என் சகோதரரும் சம்மதித்து, கதைக்கு அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

    பூஜை போட்டு, நடிகர் -நடிகைகளுக்கு அட்வான்சும் கொடுக்கப்பட்டது. படத்தில் சிவாஜிகணேசன், சாவித்திரி, ரங்காராவ், அசோகன், தாம்பரம் லலிதா போன்றோர் நடிக்க இருந்தார்கள். ஆனால் ஏனோ, கடைசியில் என் சகோதரர் பின்வாங்கி விட்டார்.

    பின்னர் இந்தக் கதையை கோபாலகிருஷ்ணனே சொந்தமாகத் தயாரித்தார். அந்தப்படம்தான் "கற்பகம்.'' அந்தப் படம் வெள்ளி விழா கண்டது. அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, கோபாலகிருஷ்ணன் "கற்பகம்'' ஸ்டூடியோவை கட்டினார்.''

    இவ்வாறு முத்தையன் கூறினார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார், மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது.
    மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார், மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது. பிறகு உண்மையை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்'' படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுத வாய்ப்பளித்தார்.

    கவிஞர் மருதகாசியும், சாண்டோ சின்னப்பதேவரும் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றியபோதே நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பிறகு தேவர் சென்னைக்கு வந்து, `தேவர் பிலிம்ஸ்' படக்கம்பெனியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து "தாய்க்குப்பின் தாரம்'' என்ற படத்தைத் தயாரிக்கத் தீர்மானித்தார்.

    மருதகாசியை அழைத்து, "எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, புரட்சிகரமான கருத்துக்களுடன் ஒரு பாடலை எழுதுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். அதன்படி மருதகாசி எழுதிய பாடல்தான், "மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே'' என்ற பாடல்.

    1955-ல் சிவாஜிகணேசனும், பத்மினியும் நடித்த "மங்கையர் திலகம்'' படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இதில், சிவாஜிக்கு அண்ணியாக, குணச்சித்திர வேடத்தில் பத்மினி நடித்தார்.

    இப்படத்தில் மருதகாசி எழுதிய "நீலவண்ண கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!'' என்ற பாடலை, பத்மினிக்காக பாலசரஸ்வதி பாடினார். கருத்தாழம் மிக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி.

    இதே படத்தில், சிவாஜி பாடுவது போல் அமைந்த "நீ வரவில்லை எனில் ஆதரவேது?'' என்ற பாடலையும் மருதகாசி எழுதினார். உருக்கமான இந்தப்பாடலை தெலுங்குப்பாடகர் சத்யம் பாடினார்.

    எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி நடிக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படம் சரியாக ஓடவில்லை. ஆனால், இப்படத்தில், மருதகாசி எழுதிய "தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும், கண்கள் உறங்கிடுமா?'' என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

    ஸ்ரீதரின் திரைக்கதை -வசனத்தில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த "உத்தமபுத்திரன்'' படத்தில், சிவாஜியும், பத்மினியும் படகில் செல்லும்போது பாடுவதுபோல அமைந்த "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே'' என்ற பாடலை, ஜி.ராமநாதன் இசை அமைப்பில் மருதகாசி எழுதினார். ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியது இப்பாடல்.

    இதே காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன்'' படத்தில் எம்.ஜி.ஆர். பாட அதற்கேற்ப பத்மினி நடனம் ஆடும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் -ராமமூர்த்தி அமைத்து விட்டனர். ஆனால் அந்த மெட்டுக்கு பல்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள், எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.

    பிறகு, விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் அழைப்பின் பேரில், "ஆடாத மனமும் உண்டோ?'' என்ற பாடலை, மருதகாசி எழுதினார். அது எம்.ஜி.ஆருக்கு பிடித்துவிட, பாடல் பதிவு செய்யப்பட்டு, காட்சியும் படமாக்கப்பட்டது.

    ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து "லட்சுமி பிக்சர்ஸ்'' என்ற படக்கம்பெனியை தொடங்கி, "மக்களைப் பெற்ற மகராசி'' படத்தைத் தயாரித்தனர். இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

    இந்தப்படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக, "மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி'' என்ற பாட்டு, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இது.

    சிவாஜிகணேசன் பரதனாகவும், என்.டி.ராமராவ் ராமராகவும், பத்மினி சீதையாகவும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்த படம் "சம்பூர்ண ராமாயணம்.'' கே.சோமு டைரக்ஷனில் எம்.ஏ.வேணு தயாரித்தார்.

    இந்தப் படத்துக்கான எல்லாப் பாடல்களையும், கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எழுதியவர் மருதகாசி. அனைத்துப் பாடல்களும் நன்றாய் அமைந்தன.

    குறிப்பாக சிதம்பரம் ஜெயராமன், டி.கே.பகவதிக்காக பாடிய "இன்று போய் நாளை வாராய்...'' என்ற பாடலும், ஒவ்வொரு ராகத்தையும் எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்த "சங்கீத சவுபாக்கியமே'' என்ற பாடலும் பெரும் புகழ் பெற்றவை.

    இதேபோல், என்.டி.ராமராவ் -அஞ்சலிதேவி நடித்த "லவகுசா'' படத்திற்கும் எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். அதில், லவனும், குசனும் பாடுவதுபோல் அமைந்த "ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே - உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே'' என்ற பாடலை, இப்போதும்கூட தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது.

    மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசி மீது அதிக அன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் மருதகாசி பாடல் எழுதுவது வழக்கம்.

    ஒருமுறை டி.ஆர்.சுந்தரம் வெளிநாடு சென்றிருந்தபோது, மருதகாசியிடம் பொறாமை கொண்டிருந்த ஸ்டூடியோ நிர்வாகி ஒருவர், வேறொரு கவிஞருக்கு அதிக தொகையும், மருதகாசிக்கு குறைந்த தொகையும் கொடுத்தார். இதனால் மனம் நொந்த மருதகாசி, "இனி மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை'' என்ற முடிவுடன் சென்னைக்குத் திரும்பினார்.

    வெளிநாடு சென்றிருந்த டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்ததும், எம்.ஜி.ஆரையும், பானுமதியையும் வைத்து "அலிபாபாவும் 40 திருடர்களும்'' படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவு செய்தார். "அலிபாபா'' படம் ஏற்கனவே இந்தியில் வெளிவந்திருந்தது. புதிதாக ஒரு பாடலை இசை அமைப்பது என்றும், 9 பாடல்களுக்கு இந்தி அலிபாபா படத்தின் மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்வது என்றும் சுந்தரம் தீர்மானித்தார்.

    பாடல்களை எழுத மருதகாசியை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் நிர்வாகியோ, "மருதகாசி முன்போல் இங்கு வருவதில்லை. சென்னை கம்பெனிகளுக்கு பாட்டு எழுதுவதில் பிசியாக இருக்கிறார்!'' என்று கூறிவிட்டார்.

    உடனே சுந்தரம், "அப்படியானால் உடுமலை நாராயணகவிக்கு போன் செய்து, பாடல்களை எழுத உடனே இங்கே வரச்சொல்லுங்கள்'' என்று உத்தரவிட்டார்.

    சுந்தரம் வரச்சொன்னார் என்று அறிந்ததுமே, அவருடன் உடுமலை நாராயணகவி டெலிபோனில் தொடர்பு கொண்டார். மருதகாசியிடம் சகோதர அன்பு கொண்டவர் உடுமலை நாராயணகவி. மருதகாசிக்கும், நிர்வாகிக்கும் ஏற்பட்ட தகராறை சுந்தரத்திடம் அவர் கூறினார். "சரி. அவரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்றார், சுந்தரம்.

    டி.ஆர்.சுந்தரத்தை உடுமலை நாராயணகவியும், மருதகாசியும் சந்தித்தனர்.

    "அலிபாபாவில் வரும் பாடல்களுக்கு, இந்தி அலிபாபா மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்'' என்று கூறிய சுந்தரம், சில இந்தி இசைத்தட்டுகளை கவிராயரிடம் கொடுத்தார்.

    உடனே கவிராயர், "மெட்டுக்கு பாட்டு அமைப்பது எனக்கு சரிப்படாது. புதிதாக பாட்டு எழுதுவதானால் எழுதுகிறேன். மெட்டுக்கு பாட்டு என்றால், அது மருதகாசிக்கு கைவந்த கலை'' என்றார்.

    இதனால், "மாசில்லா உண்மைக் காதலே'', "அழகான பொண்ணுதான்... அதற்கேற்ற கண்ணுதான்...'' உள்பட 9 பாடல்களையும் மருதகாசியே எழுதினார்.

    மாடர்ன் தியேட்டர்சுடன் மருதகாசிக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்தது.

    மாடர்ன் தியேட்டர் "பாசவலை'' படத்தை தயாரித்தபோது, பாடல் எழுத மருதகாசிக்கு அவசர அழைப்பு அனுப்பினார்கள். அப்போது சென்னையில் இரவு - பகலாக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார்.

    உடனே அவர் டி.ஆர்.சுந்தரத்துக்கு போன் செய்து, "உடனடியாக தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பி வைக்கிறேன். அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். மிக நன்றாக பாட்டு எழுதக்கூடியவர். நான் நாலைந்து நாட்களுக்குப்பின் வந்து கலந்து கொள்கிறேன்'' என்று சொன்னார்.

    அதன்படி, பல பாட்டுகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். "குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்'' என்ற பாடல் மூலம், கல்யாணசுந்தரம் பெரும் புகழ் பெற்றார்.

    "அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை'' என்ற  மருதகாசியின் பாடலும் `ஹிட்' ஆயிற்று.

    உடுமலை நாராயணகவியை தன் அண்ணன் போலவும், கல்யாணசுந்தரத்தை தம்பி போலவும் கருதி பாசம் செலுத்தியவர் மருதகாசி.

    டைரக்டர் பீம்சிங் இயக்கத்தில் தயாரான "பதிபக்தி'' படத்துக்கு "ரெண்டும் கெட்டான் உலகம் - இதில் நித்தமும் எத்தனை கலகம்'' என்ற பாட்டை எழுதினார். இந்த பாடல் பீம்சிங்குக்கு பிடிக்கவில்லை. "இன்னும் சிறந்த பல்லவி வேண்டும்'' என்றார். மருதகாசி சிறிது யோசித்துவிட்டு, "அண்ணே! நீங்கள் எதிர்பார்ப்பது போல எழுதக்கூடியவர் தம்பி கல்யாணசுந்தரம். அவரை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்'' என்று கூறி, ஒதுங்கிக்கொண்டார்.
    எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர், மருதகாசி. "திரைக்கவி திலகம்'' என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
    எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர், மருதகாசி. "திரைக்கவி திலகம்'' என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

    திருச்சி மாட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் 13-2-1920-ல் பிறந்தவர் மருதகாசி. தந்தை அய்யம்பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள்.

    உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து, "இன்டர்மீடியேட்'' வரை படித்தார்.

    1940-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் தனக்கோடி அம்மாள்.

    மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார்.

    கல்லூரி படிப்புக்குப்பிறகு, குடந்தையில் முகாமிட்டிருந்த "தேவி நாடக சபை''யின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். அப்போது, இன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து, கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி'' போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகராக திருச்சி லோகநாதன் கொடிகட்டிப் பறந்தார். "வானவில்'' என்ற நாடகத்தின் பாடலுக்கு அவர் இசை அமைத்தபோது, மருதகாசியின் கவியாற்றலை நேரில் கண்டார். இதுபற்றி, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்தார்.

    உடனே டி.ஆர்.சுந்தரம் மருதகாசியை சேலத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த சமயத்தில், மருதகாசியுடன் கவி. கா.மு.ஷெரீப் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு சேலம் சென்றார், மருதகாசி.

    அப்போது (1949) சேலம் மாடர்ன் தியேட்டர்சார் "மாயாவதி'' என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி.ஆர்.மகாலிங்கமும், அஞ்சலிதேவியும் இணைந்து நடித்த இந்தப்படத்தை டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்து வந்தார்.

    இந்தப் படத்திற்கு தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். "பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ...'' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

    இவ்வாறாக மருதகாசியின் திரை உலகப் பயணம், மாடர்ன் தியேட்டர்ஸ் "மாயாவதி'' மூலமாகத் தொடங்கியது.

    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய "எதிர்பாராத முத்தம்'' என்ற குறுங்காவியத்தை, "பொன்முடி'' என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சார் திரைப்படமாகத் தயாரித்தனர். வசனத்தை பாரதிதாசன் எழுதினார்.

    இந்தப் பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். கதாநாயகனாக நரசிம்மபாரதியும், கதாநாயகியாக மாதுரிதேவியும் நடித்தனர்.

    1950 பொங்கலுக்கு வெளிவந்த "பொன்முடி'' படத்தின் பாடல்கள் ஹிட் ஆயின.

    இதன் பிறகு கருணாநிதியின் கதை-வசனத்தில் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த படம் மந்திரிகுமாரி. இந்தப்படம் மாபெரும் வெற்றி

    பெற்றது.இந்தப் படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக "வாராய்... நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!'' என்ற கிளைமாக்ஸ் பாடலும், "உலவும் தென்றல் காற்றினிலே'' என்ற பாடலும் மிகப்பிரமாதமாக அமைந்தன. இந்த டூயட் பாடல்களைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன் - ஜிக்கி.

    இந்தக் காலக்கட்டத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும், இசை இலாகாவில் மருதகாசியும் பணிபுரிந்தது

    குறிப்பிடத்தக்கது.

    மந்திரிகுமாரியில் மருதகாசி எழுதிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை வெகுவாகக் கவர்ந்தன. சுரதாவின் கதை-வசனத்திலும், எப்.நாகூர் டைரக்ஷனிலும் உருவாகி வந்த தனது "அமரகவி'' படத்துக்கு பாடல் எழுத மருதகாசியை அழைத்தார்.

    அதன்படியே, சில பாடல்களை மருதகாசி எழுதினார்.

    அருணா பிலிம்ஸ் பட நிறுவனம் "ராஜாம்பாள்'' என்ற துப்பறியும் கதையை படமாக்கியது. இந்தப் படத்தில்தான் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக அறிமுகமானார்.

    இந்தப் படத்துக்கு மருதகாசி எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    அதைத்தொடர்ந்து அருணா பிலிம்ஸ் அடுத்து தயாரித்த "தூக்குத்தூக்கி'' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பை மருதகாசி பெற்றார்.

    இந்தப் படத்தில் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி.எஸ்.பாலையா என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது. ஆர்.எம்.கிருஷ்ணசாமி டைரக்ட் செய்த இந்த படத்துக்கு, ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், சிவாஜிகணேசனுக்கு யாரைப் பின்னணியில் பாட வைப்பது என்ற கேள்வி எழுந்தது. "மந்திரிகுமாரி''யில், "அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே...'' என்று தொடங்கும் பாடலை, வெகு சிறப்பாக டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார். அவரைப் பாடச் சொல்லலாம் என்று மருதகாசியும், டைரக்டர் ஆர்.எம்.கிருஷ்ணசாமியும் கூறினார்கள். ஆனால், சிதம்பரம் ஜெயராமனைப் போடும்படி, சிவாஜி கூறினார்.

    முடிவில் "3 பாடல்களை சவுந்தரராஜனை வைத்து பதிவு செய்வோம். சிவாஜிக்கு பிடிக்கிறதா என்று பார்த்து இறுதி முடிவு எடுப்போம்'' என்று மருதகாசியும், கிருஷ்ணசாமியும் தீர்மானித்தார்கள்.

    அதன்படியே, மூன்று பாடல்களை பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்கள். டி.எம்.சவுந்தரராஜனின் குரல் சிவாஜிக்குப் பிடித்து விட்டது. அன்று முதல், சிவாஜிக்கு தொடர்ந்து டி.எம்.சவுந்தரராஜன் பாடலானார்.

    26-8-1954-ல் வெளியான "தூக்குத்தூக்கி'', மகத்தான வெற்றிப்படமாக அமைந்து, வசூல் மழை கொட்டியது. எங்கு திரும்பினாலும், அந்தப் படத்தின் பாடல்கள் எதிரொலித்தன. மருதகாசிக்கு பல்வேறு படக்கம்பெனிகளில் இருந்து அழைப்பு வந்தது.

    மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் மருதகாசி வல்லவர். எனவே, இசை அமைப்பாளர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.

    அந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.
    ×