search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    விஜயகுமார் கதாநாயகனாக நடித்த முதல் படம் வெற்றி
    X

    விஜயகுமார் கதாநாயகனாக நடித்த முதல் படம் வெற்றி

    "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட நடிகர் விஜயகுமார், தொடர்ந்து வந்த வாய்ப்புகளில் `பிசி'யாகி விட்டார். அவர் நடிப்பில் ஒரே நாளில் 2 படங்கள் கூட பூஜை போடப்பட்டன.
    "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட நடிகர் விஜயகுமார், தொடர்ந்து வந்த வாய்ப்புகளில் `பிசி'யாகி விட்டார். அவர் நடிப்பில் ஒரே நாளில் 2 படங்கள் கூட பூஜை போடப்பட்டன.

    பி.மாதவன் டைரக்ஷனில் சிவகுமாரும், விஜயகுமாரும் இரண்டு நாயகர்களாக நடித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' படம் 2-6-1973-ல் வெளிவந்து, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக ஓடியது. இதனால் பட அதிபர்களின் பார்வை புது நாயகன் விஜயகுமார் மீது திரும்பியது. டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை'' படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அந்தப்படம் `வெள்ளி விழா' கொண்டாடியதில் விஜயகுமாரும் பிரபலம் ஆனார்.

    டைரக்டர் பி.மாதவனும் அவர் இயக்கிய "சங்கர் சலீம் சைமன்'', "என் கேள்விக்கு என்ன பதில்'' என்று தொடர்ந்து விஜயகுமாரை நடிக்க வைத்தார். இதில் சிவாஜி - ஜெயலலிதாவை வைத்து அவர் இயக்கிய "பாட்டும் பரதமும்'' படமும் அடங்கும்.

    விஜயகுமார் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய நேரத்தில், கமலஹாசனும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். சமகால ஹீரோ என்ற முறையில் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் நண்பர்களை ரொம்பவும் நெருக்கமாகியது.

    அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "நடிக்கத் தொடங்கிய புதிதில், கமல் எனக்கு நண்பரானார். திறமை எங்கிருந்தாலும் அதை தேடிக் கண்டுபிடித்து பாராட்டும் குணம் அவருக்கு உண்டு.

    படப்பிடிப்பில் ஏற்பட்ட எங்கள் நட்பு, நான் அவரது வீட்டுக்கு போய்வரும் அளவுக்கு வளர்ந்தது. காலையில் நானும் கமலும் வாக்கிங் போய்வருவோம். கமலின் அம்மா என்னிடம் மிகவும் அன்பு காட்டுவார்.

    ஒரு முறை கமல் இரட்டைப்புலி நகம் கோர்த்த சங்கிலி அணிந்திருந்தார். அது அவருக்கு அழகாக இருந்தது. `எனக்கும் இது மாதிரி ஒன்று கிடைக்குமா?' என்று ஒரு ஆர்வத்தில் வாய்விட்டுக் கேட்டுவிட்டேன். இது கமலின் அம்மாவுக்கும் கேட்டுவிட்டது. உடனே அவர் கமலிடம், "தம்பிக்கும் இதுமாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுப்பா'' என்றார். தாய் சொல்லைத் தட்டாத கமலும் மறுநாளே புலி நகம் கோர்த்த தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கி என் கழுத்தில் போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    கமலின் அண்ணன் சாருஹாசன் என்ன "மாப்பிள்ளை'' என்றே கூப்பிடுவார். அதனால் கமலுக்கும் நான் "மாப்பிள்ளை'' ஆனேன்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'' படத்தில் இரண்டு பேருக்குமே பெயர் வரக்கூடிய கேரக்டர்கள் அமைந்தன.

    புதுமுகங்கள் நடித்த படங்கள், பெரும்பாலும் வித்தியாசமான கதைக் களத்தில் அமைந்திருந்ததால், ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது. தயாரிப்பாளர்களுக்கு லாபமும் வந்தன.

    இதனால் புதிய தயாரிப்பாளர்கள் வரத் தொடங்கினார்கள். அப்போது நான் நடிக்கிற படங்களே ஒரு நாளைக்கு 2 படங்களுக்கு பூஜை என்கிற அளவுக்கு உயர்ந்தது.

    இதற்காக, ஒருநாள் கமல் என்னிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார். "மாப்ளே! இந்த மாதிரி தப்பு பண்ணாதீங்க'' என்றார்.

    அவர் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தது. அதன் பிறகு நல்ல கம்பெனியா என்று பார்த்து, படங்களை ஒப்புக்கொள்ளத்

    தொடங்கினேன்.எத்தனையோ வருடங்கள் கடந்து போனாலும், இன்றைக்கும் என் நல்ல நண்பர் கமல்.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    தொடர்ந்து நடித்து வந்த படங்களில் விஜயகுமாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் "தீபம்.''

    நடிகர் பாலாஜி தயாரித்த இந்தப்படத்தில் சிவாஜியின் தம்பியாக நடித்தார் விஜயகுமார். கதைப்படி, விஜயகுமார் தனது தம்பி என்பது சிவாஜிக்கு தெரியாது. தம்பியை சுஜாதா காதலித்தது தெரியாமல், சுஜாதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவார் சிவாஜி. இந்த காதல் போராட்டத்தில், அண்ணன் - தம்பி பாசப் போராட்டமும் கலந்து கொண்டது. அதனால் படம் சூப்பர் ஹிட்.

    இந்தப் படத்தில் நடிக்கும்போது, நடிகர் திலகம் சிவாஜியிடம் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது, விஜயகுமாருக்கு.

    அதுபற்றி கூறுகிறார்:-

    "சிவாஜி சாருடன் "பாட்டும் பரதமும்'' படத்தில் நடித்தபோது, நான் புதுமுகம். தவிரவும் என் போர்ஷனும் குறைவானது. ஆனால் `தீபம்' படத்தில் கிடைத்த வாய்ப்பு, அப்படிப்பட்டது அல்ல. அண்ணன் - தம்பிக்கான பாசப்பிணைப்புதான் கதை. அவர் அண்ணன்; நான் தம்பி. கதைப்படி அண்ணன் - தம்பி என்பது தெரியாமல் காட்சிகளில் ஒரு `கண்ணாமூச்சி' ஒளிந்திருக்கும். காட்சிகளும் நெகிழ்ச்சிïட்டுகிற விதத்தில்

    அமைந்திருந்தன.இந்தப் படப்பிடிப்பின்போது சிவாஜி சார் என்னிடம் பிரியமாக பேசுவார். "என்னடா விஜயா'' என்றுதான் அழைப்பார்.

    அப்போது நான் ஊரில் இருந்த மனைவியை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன். என்னிடம் லஞ்ச் பிரேக்கில் உரிமையுடன் "உங்க வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்திட்டு வாடா!'' என்பார். ஒரு முறை தயங்கித்தயங்கி அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்தபோது, உடனே என்னுடன் வந்துவிட்டார். அவர் வீட்டுக்கு என்னையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

    இப்படி நெருக்கமாகி விட்ட ஒருநாள் அவரிடம், நான் நடிக்க வருவதற்கு முன்னதாக கும்பகோணத்திற்கு நாடகத்தில் நடிக்க அவர் வந்தபோது மைல் கணக்கில் சைக்கிளில் வந்து மரத்தில் ஏறி நண்பர்களுடன் அவரைப் பார்த்து பிரமித்ததை சொன்னேன். ஒரு குழந்தை மாதிரி, ஆர்வத்துடன் நான் சொல்லி முடிக்கும்வரை கேட்டார். "நாடகத்தில் நடிக்க வந்தப்போ என்னைப் பார்க்க வந்த கூட்டம் பார்த்து நீ நடிக்க வந்திருக்கே. ஆனா நான் நடிக்க வந்த பின்னணியிலும் நாடகம்தானே இருக்கு விஜயா! வீரபாண்டிய கட்டபொம்மன் தெருக்கூத்து பார்த்தப்புறம்தானே எனக்கும் நடிக்க ஆசை துளிர் விட்டுச்சு'' என்றார்.

    டைரக்டர் மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் சிவாஜி சார் நடித்த "இளைய தலைமுறை'' படத்தில் நானும் நடித்தேன். இந்தப் படத்தில் சிவாஜி சார் கல்லூரிப் பேராசிரியர். நான் கல்லூரி மாணவன். கதைப்படி அவருக்கும் எனக்கும் ஒரு `பாக்ஸிங்' காட்சி இருந்தது. வாகினி ஸ்டூடியோவில் இதற்கான காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்தார்கள்.

    அந்த மேடை 9 அடி உயரத்தில் இருந்தது. சிவாஜி சார் பாக்ஸிங் மேடையில் ஏறியதும் என்னை அருகில் அழைத்தார். "டேய் விஜயா! நான் அடிச்சதும் நீ கீழே விழற சீனை "இப்ப எடுப்பாங்க. நான் அடிச்சதும் நீ கரெக்டா கீழே விழுந்துருவியா?'' என்று கேட்டார்.

    அந்தக் காட்சி பற்றி எனக்கும் முன்னரே சொல்லியிருந்தார்கள். கீழே விழும்போது எந்த மாதிரி விழவேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்கள். எனவே அந்த தைரியத்தில், "கரெக்டாக விழுந்திடுவேன் சார்'' என்றேன்.

    கேமரா ஓடத்தொடங்கியது. சிவாஜி சார் பாக்ஸிங் உடையில் தயாராக இருந்தார். டைரக்டர் `ஸ்டார்ட்' சொன்னதும் என் முகத்தில் குத்துகிற மாதிரி நடித்தார். குத்து என் முகத்தில் விழுந்ததாக எடுத்துக்கொண்டு நான் 9 அடி உயர மேடையில் இருந்து கீழே விழவேண்டும்.

    அப்படித்தான் விழுந்தேன். அனுபவமில்லாததாலும், ஆர்வக்கோளாறாலும் நான் விழப்போக, மேடையின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் என் கைகள் மாட்டிக்கொண்டு தோள்பட்டை இறங்கி விட்டது. வலியால் துடித்தேன்.

    படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன். மாவுக்கட்டு போட்டு அனுப்பினார்கள். கை சரியாகும் வரை வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயமாகி விட்டது. என்னைப் பார்த்த சிவாஜி சார், "என்னடா விஜயா!  அவ்வளவு சொன்னேன். சரியா பண்ணியிருக்கக் கூடாதா?'' என்று கேட்டு வருத்தப்பட்டார்.''

    - சிவாஜியின் அக்கறை கலந்த அன்பு பற்றி ஆச்சரியம் விலகாமல் சொல்லி முடித்தார், விஜயகுமார்.

    இப்படி மாவுக்கட்டுடன் ஓய்வெடுத்து தோள் பட்டை சரியான நேரத்தில் ஒரு பட வாய்ப்பு தேடி வந்தது. நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் எடுக்கும் சொந்தப்படத்தில் நடிக்க அழைத்தார்கள்.

    படப்பிடிப்புக்காக சத்யா ஸ்டூடியோ போனபோது எதிர்பாராத விதமாய் எம்.ஜி.ஆரை சந்தித்தார், விஜயகுமார். 
    Next Story
    ×