search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்ரீலதா, ரோஜா ஆனது எப்படி? பாரதிராஜா பெயர் சூட்டினார்
    X

    ஸ்ரீலதா, ரோஜா ஆனது எப்படி? பாரதிராஜா பெயர் சூட்டினார்

    10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.
    10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.

    தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்தவர் நடிகை ரோஜா.

    1991-ம் ஆண்டில் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய "செம்பருத்தி'' படத்தில் அறிமுகமான ரோஜா, தொடர்ந்து 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்றவர். தமிழிலும், தெலுங்கிலுமாக 140-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

    திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீலதா தான் சினிமாவுக்கு வந்த பிறகு `ரோஜா'வாகியிருக்கிறார். அப்பா ஒய்.என். ரெட்டி. அம்மா லலிதா.

    உடன் பிறந்தோர் 2 அண்ணன்கள் மட்டும். மூத்த அண்ணன் குமாரசாமி ரெட்டி. அடுத்த அண்ணன் ராம்பிரசாத் ரெட்டி.

    ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கிடைக்கும் என்பார்கள். ரோஜாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப செல்லம். அதற்குக் காரணம் ரோஜாவே சொல்கிறார்:

    "அப்பாவுக்கு அக்கா, தங்கை யாரும் கிடையாது. தாத்தாவுக்கும் அக்கா -தங்கை கிடையாது. இதனால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் ஆளாளுக்கு என்னை கொண்டாடினார்கள். பாசம் கொட்டினார்கள். ஆனாலும் நான் பையன் மாதிரிதான் வளர்ந்தேன். எப்போதும் யாரையாவது சீண்டியபடி ஜாலி ஜாலி ஜாலிதான். தாத்தா ஒருத்தருக்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன்.'' சொல்லிச் சிரிக்கிறார் ரோஜா.

    பள்ளிப் பருவத்தில் கூட ரோஜாவுக்குள் நடிப்பு வாசனை வீசவில்லை. நடிகையாக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ஆனால், நம்பர் ஒன் சினிமா ரசிகையாக இருந்திருக்கிறார். அதுபற்றி ரோஜா கூறுகிறார்:

    "பள்ளி நாட்களில் எல்லாம் ஒரு சினிமா விடமாட்டேன். ஸ்கூலுக்கு `கட்' அடித்து விட்டு தோழிகளுடன் போய் விடுவேன். ஆனால் அப்போதுகூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்த்ததே இல்லை.''

    இப்படிச் சொல்லும் ரோஜாவுக்கு `நடிகை அந்தஸ்து' எப்போதுதான் வந்தது?

    "அப்பா, சாரதி ஸ்டூடியோவில் சவுண்டு என்ஜினீயராக இருந்தார். சினிமா இயக்கும் ஆசை அவருக்கு இருந்தது. இதனால் வேலையை விட்டு விட்டு முதலில் `கொத்தடி பொம்மா பூர்ணமா' என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கினார்.

    இதில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கோடி.ராமகிருஷ்ணாவின் மனைவியை நாயகியாக நடிக்க வைத்தார். அவரது மகளாக நடிக்க 10 வயதுப்பெண் தேவைப்பட்டபோது அப்பாவின் பார்வை என் மீது. அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம், "நாளை நீ பள்ளிக்குப் போகவேண்டாம்'' என்றார், அப்பா.

    "ஏன்?'' என்று கேட்டேன்.

    "நான் ஒரு டாகுமெண்டரி படம் இயக்குகிறேன் அல்லவா? அதில் உன் வயதுப்பெண் நடிக்க தேவைப்படுகிறாள். அது ஏன் நீயாக இருக்கக்கூடாது?'' என்று கேட்டார் அப்பா.

    "நடிப்பதா? நானா? எனக்கு என்ன தெரியும் டாடி?'' என்று திருப்பிக் கேட்டேன்.

    "இதுவும் பாடம் மாதிரிதான். நான் சொல்லித் தருவதை அப்படியே செய்தால் போதும்'' என்றார் அப்பா. படப்பிடிப்பில் அப்பா சொன்னதைச் செய்தேன். அவ்வளவுதான். அத்தோடு நடித்ததைக்கூட மறந்து மறுபடியும் மாணவியாகிவிட்டேன்.''

    இவ்வாறு கூறினார், ரோஜா.

    ரோஜாவுக்கு சினிமா வாய்ப்பு மறுபடியும் தேடி வந்தது கல்லூரிப் பருவத்தில்தான். திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பெண்கள் கல்லூரியில் முதலாண்டு மாணவியாக இருந்த நேரத்தில் `நடிப்பு' தேடிவந்து அழைத்திருக்கிறது. அதுபற்றி ரோஜா கூறுகிறார்:

    "அப்பாவின் நண்பர் எங்கள் கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப்பார்த்த அவருக்குள் என்னை நடிக்க வைக்கும் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. இதை அவர் எங்கள் வீட்டில் சொன்னபோது அம்மா, அண்ணன்கள் பயங்கர எதிர்ப்பு. அப்பாதான், "நடித்தால்தான் என்ன?'' என்று கேட்டு, நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.

    அப்பாவின் நண்பர் என்னை நிறைய படங்கள் எடுத்தார். அப்போது எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். நான் "ஒன்றுமில்லை'' என்று கூறி சமாளித்து விட்டேன். ஆனால் அந்தப் படங்களில் ஒன்று, ஒரு தெலுங்கு சினிமா பத்திரிகையின் அட்டையில் வர, அதுதான் தமிழில் என்னை நாயகியாக்கியது.

    அதுகூட உடனடியாக இல்லை. தெலுங்குப் படம் எடுக்க முன்னேற்பாடுகளை செய்த அப்பாவின் நண்பர், தமிழில் பிரபலமாக இருந்த டைரக்டர் பாரதிராஜாவுக்கும் நண்பராக இருந்திருக்கிறார். அவரை தனது படப்பிடிப்புக்கு அழைத்த அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு சினிமா பெயரை சூட்டும்படி பாரதிராஜாவை கேட்டிருக்கிறார். என்னைப் பார்த்தது ஒரு நொடிதான். உடனே, "ரோஜா'' என்று பெயர் வைத்துவிட்டார்.

    எனக்குப் பெயர் வைத்ததையே பாரதிராஜா மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அவருக்கு சம்பவம். எனக்கு சரித்திரம் அல்லவா! பின்னாளில் அவரது டைரக்ஷனில் தமிழ்ச்செல்வன் படத்தில் நடித்தபோது நான் இந்த பெயர் சூட்டிய சம்பவத்தை சொன்னேன். "அடடா! எனக்கு நினைவில்லையே?'' என்று ஆச்சரியப்பட்டார் அவர்.

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    Next Story
    ×