என் மலர்

  சினிமா

  அன்னக்கிளி படத்துக்குப் பிறகும் தொடர்ந்து இசை பயின்றார் இளையராஜா
  X

  அன்னக்கிளி படத்துக்குப் பிறகும் தொடர்ந்து இசை பயின்றார் இளையராஜா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  "அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.
  "அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.

  அவரது இரண்டாவது படமான `பாலூட்டி வளர்த்த கிளி' சரியாகப் போகவில்லை. என்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த "கொலை கொலையா முந்திரிக்கா'' பாடல் ஹிட்டாகி, இளையராஜா பெயரை தக்க வைத்துக்கொண்டது.

  இரண்டாவது படம் வெளியான பிறகும் இளையராஜா தொடர்ந்து `இசை' கற்றுக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். இதற்கென சுவாமி தட்சிணாமூர்த்தி என்ற இசை அமைப்பாளரிடம் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

  இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

  "சினிமாத்துறையில் காலெடுத்து வைத்த நேரத்திலேயே சுவாமி தட்சிணாமூர்த்தியின் சங்கீதம் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. இப்போது இரண்டு படங்களுக்கு இசையமைத்துவிட்ட நிலையிலும் அவரிடம் கற்றுக்கொள்ளும் ஆசை எனக்குள் இருந்தே வந்தது. இனியும் தள்ளிப்போடலாகாது என்ற முடிவுக்கு வந்து, சென்னை மந்தைவெளியில் இருந்த அவரது வீட்டுக்குப்போய் கேட்டேன்.

  என் ஆர்வம் புரிந்து கொண்டவர், "நாளையில் இருந்து பாடம் தொடங்கலாம்'' என்று சொல்லிவிட்டார்.

  மறுநாளே பூ, பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு தட்டுடன் போனேன்.

  அவர் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை முடித்து, எனக்கு பாடம் தொடங்கினார்.

  ஆரம்பப் பாடமான சரளி வரிசையில் இருந்து பாடத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தேன்.

  அவரோ ஏதோவொரு கீர்த்தனையைத் தொடங்கி விட்டார். அவர் சொல்லித் தரும் பாடங்களை குறித்துக்கொள்ள `நோட்டு' கொண்டு போயிருந்தேன். கீர்த்தனையில் இருந்து தொடங்கி விட்டதால் எழுதும் வேலை ஒன்றும் இல்லை.

  பாடினார். அதையே என்னைத் திரும்பப் பாடச் சொன்னார். அவர் பாடிய மாதிரி வரவில்லை.

  சரி செய்தார். மறுபடியும் பாடினேன்.

  ஊஹும். அவர் மாதிரி வரவேயில்லை. அன்றைய பாடம் இப்படியே முடிந்தது.

  அன்று மட்டுமில்லை. அடுத்து நான் போன மூன்று மாதங்களிலும் இதே தான் என் நிலை. அவர் பாடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று. என்றாலும் அவர் பாடுவதும், அவர் பாட்டுக்கு நான் பாடிப்பார்ப்பதுமாக 6 மாதங்கள் ஓடிப்போயிற்று.

  சுவாமி அப்போது, "நந்தா என் நிலா'', "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'' போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.

  நானும் இரண்டொரு படங்களுக்கு இசையமைப்பை தொடர்ந்ததோடு, ஜி.கே.வி.யிடமும் பிசியாக இருந்தேன்.

  இதற்கிடையே சுவாமி ஒருநாள் என்னிடம் தனது படம் ஒன்று பின்னணி இசை சேர்ப்புக்கு (ரீரிகார்டிங்) வந்துவிட்டதாகவும், அதற்கு `காம்போ' (இசைக் கருவி) வாசிக்க யாரும் கிடைக்கவில்லை என்றும் என்னிடம் சொன்னார்.

  நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், "அதனாலென்ன சுவாமி! நான் இல்லையா? நீங்க சொல்றப்போ வந்துடறேன்'' என்றேன்.

  சொன்னது போலவே அவரது படத்துக்கு `கம்போ' வாசிக்கப்போனேன். படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராக என்னை உணர்ந்தவர்களுக்கு, நான் ஒரு உதவியாளர் நிலையில் காம்போ வாசிக்க வந்தது அதிர்ச்சியாக இருந்தது போலும். அங்கிருந்த எல்லாரும் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

  ஸ்டூடியோவில் வேலை செய்வோருக்கும் ஷூட்டிங் புளோருக்கு வந்தவர்களுக்கும், பக்கத்து ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் வந்தவர்களுக்கும் தகவல் பரவ, என்னை வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள். நான் "காம்போ'' வாசித்த நாலு நாட்களும் இந்த வேடிக்கை தொடர்ந்தது.

  இப்படி பார்த்துப் போனவர்களில் ஒருவரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இன்று என்னைப் பார்த்தால்கூட அந்த சம்பவம் பற்றி வியந்து பேசுவார்.

  சுவாமிக்கும் என் மீது பிரியம் அதிகமாகிவிட்டது. `இத்தனை பெயர் வாங்கியிருந்தாலும் இன்னும் இந்தப் பையன் பெரியவர்களை மதிக்கும் பண்போடு இருக்கிறானே என்று ஏற்பட்ட ஆச்சரியம்தான் என்மேல் அவருக்கான அன்பை கூட்டிற்று என்றும் சொல்லலாம்.

  அப்புறம் அந்த இசைப் பயிற்சி என்னாயிற்று என்று கேட்பீர்கள். அது அவ்வளவுதான்.

  இந்த நேரத்தில் மாஸ்டர் தன்ராஜை பார்க்க விரும்பினேன். தன்னிடம் இசை கற்றுக்கொண்டவர்களில் ஒருவராவது தன்னை வந்து பார்க்கவில்லை என்று அவர் குறைப்பட்டுக் கொள்வதை கவனித்திருக்கிறேன்.

  ஜோசப்பிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து மாஸ்டரின் தொடர்பு நின்று போனது. இருந்தாலும் அவர் மீதான மரியாதையும் அன்பும் குறையவே இல்லை.

  ஒருநாள் கையில் ஒரு ஐயாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்கப்போனேன்.

  என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், "நீ ரொம்பவும் பிசியா இருப்பதை கேள்விப்பட்டேன். இருந்தாலும் இசையில் மேற்கொண்டு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்குங்கறதை மறந்துடக்கூடாது. உனக்கு இதுக்காக எப்ப `டைம்' ஒதுக்கி வர முடியுமோ வா. நான் இருக்கிறேன்'' என்றார்.

  அவர் கையில் ஐயாயிரம் ரூபாய் பணத்தை வைத்தேன். இப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர் போலானார். "என்கிட்ட எத்தனையோ பசங்க கத்துக்கிட்டு சினிமாவில் நல்லா சம்பாதிக்கிறானுக. இதில் ஒருத்தன்கூட என்னை கவனிக்கணும்னோ, பார்க்கணும்னோ நினைச்சது கிடையாது. பிசியா இருக்கிற நீ என்னை பார்க்க வந்ததே பெரிசு. பணம், காசு கிடக்கட்டும். ஆனா ராஜா நீ `கிரேட்'டுடா!''

  இப்படி  அவர் சொன்னது எனக்கு  ஆசீர்வாதமாகவே  பட்டது.''

  இவ்வாறு இளையராஜா கூறினார்.

  தொடர்ந்து வந்த படங்களுக்கான இசையமைப்பின்போது "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்'' என்ற பாடல், ஒத்திகையின்போது சின்னதாய் ஒரு சிக்கலை ஏற்படுத்தியது இளையராஜாவுக்கு.

  அதுபற்றி கூறுகிறார்:

  `அன்னக்கிளி' டைரக்டர்கள் தேவராஜ் - மோகன், "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்துக்குப் பிறகு "உறவாடும் நெஞ்சம்'' என்ற படத்தை இயக்கினார்கள். இதே நேரத்தில் பஞ்சுவின் "அவர் எனக்கே சொந்தம்'' படமும், காரைக்குடி நாராயணனின் `துர்காதேவி' படம் சங்கரய்யர் டைரக்ஷனிலும் தொடங்கியது.

  "உறவாடும் நெஞ்சம்'' படத்தில் "ஒருநாள், உன்னோடு ஒரு நாள்'' பாடல் பதிவாகும் போது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. பின்னணி இசையில் வயலினோடு ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கம்போஸ் செய்யப்பட்ட இசை, ஒரு ஒத்திகையிலும் சரியாக வரவில்லை. நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது.

  கோவர்த்தன் மாஸ்டர், "சரிய்யா, டேக் போகலாம். அதற்குள் எப்படியாவது பிராக்டீஸ் செய்து வாசிப்பார்கள். சரியாக வந்துவிடும்'' என்று நம்பிக்கை கொடுத்தார்.

  `டேக்' போய் விட்டோம். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் - ஜானகியும் பாடிக்கொண்டிருந்தார்கள். நிறைய டேக்குகள் ஆகிக்கொண்டிருந்ததே தவிர, மிïசிக் சரியாக வரவில்லை.

  கடைசியாக ஒரேயொரு டேக்கில் மிகவும் சரியாக வாசித்து விட்டார்கள். அதுதான் இசைத் தட்டில் இன்றும் இருப்பது.

  இதுபோல எத்தனை பாடல்களில் ஒரேயொரு டேக்கில் மட்டும் சரியாகப் பாடியிருப்பார்கள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.''

  Next Story
  ×