search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா வாழ்க்கைப்பாதை - பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம்
    X

    இளையராஜா வாழ்க்கைப்பாதை - பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம்

    சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.
    சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், பாவலரை ஏற்கனவே அறிந்திருந்த கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் ஒரு டேப் ரிக்கார்டரை கொடுத்தார்.

    "இந்த டேப் ரிக்கார்டர் உங்களிடமே இருக்கட்டும்'' என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கொடுத்தார். இது அவருக்கு கோவை விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி.நாயுடு கொடுத்தது என்பதையும் அறிந்து கொண்டோம்.

    இந்த டேப் ரிக்கார்டர் வந்த பிறகு, எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகி விட்டது. தலைவர்களின் பேச்சையும், எங்களின் கச்சேரியையும் போட்டுப் போட்டுக் கேட்போம். கைதட்டல் ஒலி ஆரவாரத்துடன் எங்கள் கச்சேரிக்கு மக்கள் அளித்த வரவேற்பை `டேப்' வாயிலாக கேட்க நேர்ந்தபோது, உற்சாகம் அதிகமானது.

    வீட்டில் அந்த டேப் ரிக்கார்டர் இருந்தபோது கிடார், புல்புல்தாரா, ஆர்மோனியம், பாங்கோ சகிதம் ஏதோவொன்றை வாசிப்பேன். அதை டேப்பில் பதிவு செய்து திரும்பக் கேட்கும்போது வேறு ஏதோ மாதிரி இருக்கும்.

    இது எனக்குள் ஒரு புதிய இசைப்பரிமாணத்தை கொண்டு வந்தது. அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகளை டேப்பில் தொடர்ந்தேன்.

    ஆனால், இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. "தலைவர் ஜீவானந்தம் கொடுத்த டேப் ரிக்கார்டரை கட்சி ஆபீசில் ஒப்படைக்கவும்'' என்று கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து கடிதம் வந்தது. அதே வேகத்தில், டேப் ரிக்கார்டரையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.

    அது வீட்டில் இருந்தபோது நானும் பாஸ்கரும் "மனோகரா'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'' படங்களில் சிவாஜி பேசிய வசனங்களை எங்கள் ஆக்ரோஷ குரலில் பேசி பதிவு செய்து கொள்வோம். பிறகு போட்டுக் கேட்போம். இதில் பாரதிராஜாவும் அவரது நண்பர் `டெய்லர்' மணியுடன் வந்து சேர்ந்து கொள்வார். பாரதிராஜா எழுதிய வசனத்தை அவரும், `டெய்லர்' மணியும் பேசி பதிவு செய்து போட்டுக்

    கேட்பார்கள்.இப்படியெல்லாம் வசனம் பேசி, வசனம் பேசி கேட்டுப் பழகியதால்தான் அவருக்கு நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.

    இதற்குப் பின்பே பழனி செட்டிப்பட்டி கோவில் திருவிழாவிலும், அல்லி நகரம் (பாரதிராஜாவின் சொந்த ஊர்) கோவில் திருவிழாவிலும் இரண்டு நாடகங்களை நடத்தினார், பாரதிராஜா.

    நாடகத்தில் பாரதிராஜா நடிக்கவும் செய்தார். பாரதிராஜா மதுரை நடிகையுடன் பாடி நடிப்பதற்காக, சிவாஜி - பானுமதி நடித்த `அம்பிகாபதி' படப்பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'' என்ற பாடலை தேர்ந்தெடுத்தோம். நாடகத்தில் அப்போதெல்லாம் பெரும்பாலும் சினிமாப் பாடல்களையே பயன்படுத்துவார்கள்.

    அல்லி நகரத்தில் நடந்த நாடகத்தில் மதுரையில் இருந்து நடிகைகள் சீன் செட்டிங்ஸ் மேக்கப்பிற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு பள்ளிக்கூடத்திலும், அரியநாயகம் என்பவர் வீட்டிலும் ஒத்திகை பார்த்தோம். "பூட் மேக்கர் பி.ஏ'' என்பது நாடகத்தின் பெயர். எனக்குத் தெரிந்து இதுதான் பாரதிராஜாவின் முதல் நாடக அரங்கேற்றம்.

    பாரதிராஜா ஹீரோவாக - செருப்பு தைக்கும் "பி.ஏ'' பட்டதாரி இளைஞராக நடித்தார். நாடகத்தில் அவர் ரோட்டில் ஷூ பாலீஷ் போடுவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களை தவிர்த்து புதிதாக ஒரு பாடல் கம்போஸ் செய்யச் சொன்னார்.

    சட்டென பாட்டு பிறந்தது. `பாலீஷ் பூட் பாலிஷ்' என்று தொடங்கி, "செருப்பப்பா இது செருப்பு! சுறுசுறுப்பா எனக்கிருப்பு'' என்று ஒரு பாடலை கம்போஸ் செய்தேன்.

    இந்த காலக்கட்டத்தில் பாவலர் அண்ணனுடன் இடைவிடாத கச்சேரி இருக்கும். இப்படிப் போகும் ஊர்களில் புதிய நவநாகரீகம் எங்கள் உடைகளில் வெளிப்படும். புதிதாக உடையிலும், ஹேர்ஸ்டைலிலும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதற்கேற்ப நாங்கள் மாறி விடுவோம். அதாவது `லேட்டஸ்ட் பேஷன்' எது என்பதை எங்கள் ஆடை, தலைமுடி அறிவிக்கும். கவுபாய் பேண்ட், சம்மர் கிராப் போன்றவை அப்போது ஏற்பட்ட மாற்றங்கள்.

    இப்படி லேட்டஸ்ட்டாக ஒரு "டீ'' சர்ட் அணிந்து நாடகத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். என் `டிசர்ட்' பாரதிராஜாவை கவர்ந்திருக்க வேண்டும். ஒரு சீனில் நடிக்கும்போது மேடையில் தோன்ற எனது `டிசர்ட்'டை கழற்றித் தரும்படி கேட்டார்.

    நான் இதற்கு உடன்படுவேனா? ஷர்ட்டை கழற்றிவிட்டு வெறும் பனியனோடு ஆர்மோனியம் வாசிப்பதாவது? அதுவும் மதுரை நடிகைகள்

    முன்பாக?ஷர்ட்டை தருவதற்கில்லை என்று நான் மறுக்க, பாரதி விடாப்பிடியாக ஷர்ட் வேண்டும் என்று அடம் பிடிக்க, ஒரு கட்டத்தில் என் பிடிவாதத்தைவிட பாரதிராஜாவின் பிடிவாதம் அதிகமாக ஷர்ட்டை கழற்றிக் கொடுத்தேன். ஆசைப்பட்டபடியே ஒரு சீனில் என் டிஷர்ட்டை போட்டு நடித்து விட்டு வந்தார் பாரதிராஜா.

    இப்போது, எனக்கு புதுக்கவலை. இந்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டுதானே நாளை அல்லி நகர வீதிகளில் நடக்கவேண்டும். அப்படி யாராவது பார்த்தால், `இது பாரதிராஜாவின் ஷர்ட். அவர்தானே நாடகத்தில் இந்த ஷர்ட்டுடன் தோன்றினார்' என்று எண்ணி, என்னை "இரவல் சட்டைக்காரன்'' என்று நினைத்துவிட்டால் என்னாவது?

    இதோ இப்போதே இது என் ஷர்ட்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கொரு ஐடியாவும் வந்தது.
    Next Story
    ×