என் மலர்

  சினிமா

  அண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்
  X

  அண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.
  அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

  குரு என்று தனியாக யாரும் இல்லாமலே, ஆர்மோனியத்தை கற்றுக்கொள்ளத் தொடங்கினார்,  இளையராஜா. கொஞ்சம் பழகிய நிலையில் கச்சேரியில் அவர் வாசிப்புக்கு கிடைத்த கைத்தட்டல், இதை முழுமையாக கற்றே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அவரை உந்தித் தள்ளியது.

  இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

  "கச்சேரியில் கிடைத்த கரகோஷம் எனக்குள் புது உத்வேகம் ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் நான் ஆர்மோனியம் வாசிக்கப் பழகும் நேரம் அதிகமானது.

  இதில் கூட இன்னொரு வித சிக்கல் இருந்தது. வாசித்து வாசித்துப் பழகி வந்தாலும் ராகங்களின் பெயர்கள் தெரிந்தாலும், ஸப்த ஸ்வரத்தில் எது `ஸ, ரி, க' என்று தெரியாது. எந்த ஸ்ருதியில் வாசிக்கிறோமோ அதுதான் `ஸ' என்று எண்ணிக் கொள்வேன். தெள்ளத் தெளிவாக தெரியாது. ஆனால் ஒரு முறைக்கு இரு முறை ஒரு பாடலைக் கேட்டால் போதும். முழுவதையும் வாசித்து விடுவேன்.

  பிராக்டீசில் அதிக கவனம் இருந்ததால் சாதாரணமாகவே என் கைவிரல்கள் ஏதாவது பாடலுக்குத்தக்கபடி அசைந்து கொண்டிருக்கும். இது நாளடைவில் அதிகமாகி, ஒரு கட்டத்தில் நெஞ்சை ஆர்மோனியக் கட்டைகளாக நினைத்து, விரல்கள் அதில் மேலும் கீழும் போய்வரும் அளவுக்கு ஐக்கியமாகிவிட்டேன்.

  தூங்கும்போதும் இது தொடர, ஒரு நாள் அம்மா கவனித்திருக்கிறார். காலையில் விடிந்ததும் விடியாததுமாக என்னிடம் வந்தவர், "ஏம்ப்பா! நேத்து தூங்கும்போது உன் நெஞ்சு மேலே விரலு மேலும் கீழுமா போச்சுதே! ஏதாவது ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரி கனவு கண்டியா?'' என்று கேட்டார்.

  அம்மாவை சமாளித்து அனுப்பினேன். தூக்கத்திலும் என் பிராக்டீஸ் தொடர்ந்திருக்கிறது என்பது புரிந்தது.

  நாங்கள் ஒரு குழுவாக ஆரம்பித்து, எங்கள் காலடி படாத சிற்றூரே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு, எல்லா இடங்களிலும் அண்ணனோடு எங்கள் இசை ஒலித்திருக்கிறது. அப்போது நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் எண்ணப் பிரதிபலிப்பை கண்ட பிறகுதான், எந்த மாதிரியான இசை விருப்பம் அவர்களுடையது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சினிமாவுக்கு வந்த பிறகு இசையால் மக்களைக் கவர, எது எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு பிடிமானம் கிடைத்தது.

  எனக்கு கிடைத்த, அதாவது தானாக அமைந்த இந்த அனுபவங்கள், உலகின் எந்தவொரு இசைக் கலைஞனுக்கும் இதுவரை கிடைத்திராது. இனிமேல் எவருக்கும் கிடைக்காது என்று கூட சொல்வேன்.

  கச்சேரியில் படிப்படியாக பக்குவப்பட்டேன். வழக்கமாக கச்சேரியில் அண்ணன் பாடும் ஒரு குறிப்பிட்ட ஸ்ருதியில்தான் நன்றாக பிராக்டீஸ் செய்து வைத்திருப்பேன். அதை வேறு ஏதாவது ஸ்ருதியில் வாசிக்கச் சொன்னால் தப்பும் தவறுமாகத்தான் வரும். ஆர்மோனியத்திலோ, பியானாவிலோ ஒரு ஸ்ருதிக்கு வந்த `விரல்வித்தை' இன்னொரு ஸ்ருதிக்கு வராது.

  ஆனால் எல்லா ஸ்ருதியிலும் என்னைப் பழக்க, இசையே எனக்கொரு பரீட்சை வைத்தது.

  எங்கள் கச்சேரி முதல் நாள் நாகர்கோவிலில் இருக்கும். மறுநாள் ஊட்டியில் இருக்கும். நாகர்கோவிலில் இரவு 10 மணிக்கு கச்சேரி முடிந்தால் அதற்கு மேல் ஊட்டி பஸ் இருக்காது. எப்படியோ அடித்துப் பிடித்து காலை 5 மணி பஸ்சைப் பிடித்து, திண்டுக்கல், அங்கிருந்து கோவை, அங்கிருந்து ஊட்டி என்று விழுந்தடித்து மாலை ஆறுமணிக்குள்ளாக போய்ச் சேர்ந்து விடுவோம்.

  பயணத்தின்போது அண்ணனால் சரிவரத் தூங்க முடியாமல் சமயத்தில் குரல் சரியில்லாமல் போகும். இப்படி குரல் சரியில்லாத நாட்களில் `ஒரு அரைக்கட்டை கம்மி பண்ணு' என்று ஸ்ருதியை குறைக்கச் சொல்வார்.

  அவருக்கு பிரச்சினை இல்லை. தபேலா வாசிக்கும் பாஸ்கருக்கும் பிரச்சினை இல்லை. எந்த ஸ்ருதி என்றாலும், கட்டையை தட்டி சேர்த்து விட்டால், தபேலாவில் விரல் அசைவு மாறப்போவதில்லை. நான்தான் மாட்டிக்கொள்வேன். தப்பும் தவறுமாக அந்த கச்சேரியை எப்படியாவது சமாளித்து விட்டு, அடுத்த நாள் பகல் முழுவதும் அந்த மாறிய `ஸ்ருதி'யில் பிராக்டீஸ் செய்வேன். ஓரளவு தயார் ஆகிவிடுவேன்.

  இப்படியே கொஞ்ச நாள் ஓடும். பிறகு இன்னும் அரைக் கட்டை குறையும். அதிலும் இதே கதைதான்.

  இதற்குள் புதிய பாடல்கள் ஏதாவது எழுதிச் சேர்த்தால், குறைந்த ஸ்ருதியிலேயே பிராக்டீஸ் செய்து கரெக்டாக ரெடியாகி இருப்பேன். அன்றைக்கென்று பார்த்து அண்ணன் "ஸ்ருதியை, பழைய ஸ்ருதிக்கு ஏற்றி வை'' என்பார்.

  வம்புதான். மறுபடி அவசர கதியில் பதட்டமும் பரபரப்புமாய் `மாற்றல்' வேலையை தொடர்வேன்.

  இன்றைக்கு என்னுடைய பல பாடல்களில் உருகி, கண்ணீர் விட்டு, துன்பமடைந்து, ஆறுதலடையும் ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இசையால், ஸ்ருதியால், வாசிக்க இயலாமையால் நான் எவ்வளவு துன்பப்பட்டு, தூக்கம் கெட்டு நொந்திருந்தேன் என்பது உங்களில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  பெரும்பாலும் எங்கள் கச்சேரியில் சினிமா டிïன்களில்தான் அண்ணன் பாடல் எழுதிப்பாடுவார். இடையிடையே அவர் இசையமைத்த பாடல்களும் இடம் பெறும்.

  என் வாழ்வில் அதிகப் படிப்பினைகள் தொடங்கிய நேரம் இதுதான் என்பேன்.

  அண்ணனின் இசை நிகழ்ச்சிகளை மதுரை மாவட்ட கம்ïனிஸ்டு கட்சி அலுவலகம்தான் முடிவு செய்யும். கிரி என்பவர் அதை உறுதி செய்வார். அதன் பிறகே கச்சேரி நடக்கும். இதனால் கச்சேரி நடத்துவதில் ஒரு ஒழுங்கு ஏற்பட்டது. ஒரு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் ஆறேழு இடங்களில் கச்சேரி நடந்தால், அடுத்த வாரம் இன்னொரு மாவட்டம்.

  தொடர்ந்து இப்படி இரண்டு மாவட்டங்களில் 15 நாட்கள் கச்சேரி செய்து விட்டு, அடுத்த கச்சேரிக்கான இடைவெளி நேரத்தில் எங்கள் ஊருக்கு (பண்ணைபுரம்) வந்து போவோம்.

  அந்த நேரத்தில் அண்ணன் தன்னிடம் இருக்கும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பார். அம்மா அதை வீட்டுச் செலவுக்கு வைத்துக்

  கொள்வார்கள்.அண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் சில நேரங்களில் அம்மாவிடம் பணம் கொடுக்க மறந்தோ அல்லது முடியாமலோ போனால் அம்மா வருந்துவார். ஒரு கட்டத்தில் இந்த வருத்தம், கோபத்தில் கொண்டு விட்டது. அண்ணன் பணம் கொடுக்காத ஒரு நாளில் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் வாக்குவாதம் வலுத்து, மனத்தாங்கலில் முடிந்த நேரத்தில், "இனி உன் பணத்தை என்னிடம் தரவேண்டாம். கச்சேரிக்காக நீ வாங்கும் பணத்தில் பாஸ்கருக்கும், ராஜையாவுக்கும் உள்ள பங்கை மட்டும் கொடுத்தால் போதும்'' என்று சொல்லி விட்டார்

  அம்மா.அண்ணனுக்கும் அது நியாயமாகப் பட்டதால், அடுத்த கச்சேரியில் இருந்து அது அமுலுக்கு வந்தது. பாஸ்கருக்கும் எனக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு என்று ஒதுக்கப்பட்டது. அது பாஸ்கர் கையில் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஊர் வரும்போது அதை அம்மாவிடம் பாஸ்கர் கொடுத்துவிடுவான்.

  Next Story
  ×