search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாலசந்தர் படங்களை பார்த்துப் பாராட்டிய அண்ணா
    X

    பாலசந்தர் படங்களை பார்த்துப் பாராட்டிய அண்ணா

    டைரக்டர் கே.பாலசந்தரின் படங்கள் பலவற்றை, பேரறிஞர் அண்ணா பார்த்து பாராட்டியுள்ளார். அவர் மறைவதற்கு முன் பார்த்த படம் 'எதிர்நீச்சல்'.
    டைரக்டர் கே.பாலசந்தரின் படங்கள் பலவற்றை, பேரறிஞர் அண்ணா பார்த்து பாராட்டியுள்ளார். அவர் மறைவதற்கு முன் பார்த்த படம் "எதிர்நீச்சல்.''

    அண்ணா மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் பாலசந்தர். சிறு வயதில் இருந்தே, அண்ணாவின் நாடகங்களுக்கும், படங்களுக்கும் அவர் ரசிகர்.

    இதுபற்றி பாலசந்தர் எழுதியிருப்பதாவது:-

    "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை நான் கேட்டேன். தி.மு.கழகம் கூடத் தோன்றியிராத நேரம் அது. பொதுக்கூட்டங்களிலும், மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தபோதெல்லாம், இவர் நிச்சயம் ஒரு பெரிய தலைவராக வரப்போகிறார் என்று நான் கருதுவேன்.

    அதே நேரத்தில் அண்ணா தீட்டிய "வேலைக்காரி'' நாடகமும் மேடையேறி மிகவும் பரபரப்பாக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்தது. "வேலைக்காரி'' நாடகத்தை நானும் ஆவலுடன் சென்று பார்த்தேன்.

    என் உள்ளத்தில் நாடகச் சிந்தனை வளர்வதற்கு இந்த நாடகம்தான் முக்கிய காரணம். அதற்கு முன்னால் நான் நாடகங்களில் சிறிய அளவில் பங்கு கொண்டிருந்தேன். "வேலைக்காரி'' நாடகத்தைப் பார்த்த பிறகு என் முயற்சியில் புது வேகமும், மெருகும் ஏற்பட்டன. "வேலைக்காரி''யில் சீர்திருத்த பாணியில் அமைந்த கதைக்கரு, வசன நடையில் காணப்பட்ட புதுமை. கதையுடன் ஒன்றிக் கலந்த உயரிய நகைச்சுவை ஆகியவை மின்னலைச் சொடுக்கிவிட்ட மாதிரி அமைந்திருந்தன.

    அண்ணாவின் அரசியல் எழுச்சியையும், கலையுலக எழுச்சியையும் தள்ளி நின்று ரசித்த பல்லாயிரக்கணக்கான பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

    அடுத்து "நல்லதம்பி'' படம் பார்த்தேன். தன் புதுமைக் கருத்துக்களால் சிரிப்போடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்த கலைவாணரும், அண்ணாவும் சேர்ந்து அளித்த அந்தப் படமும் சொல்லப்பட்ட கருத்தும் என்னைப் பிரமிக்க வைத்தன.

    அதில் ஒரு காட்சி வருகிறது. தாயையும், மகளையும் காண ஒருவர் அவர்களது குடிசைக்கு வருகிறார். ஆனாலும், இருவரையும் சேர்ந்தாற்போல் காண முடிவதில்லை, அவரால். ஒருவர் வீட்டிற்குள் போனபின்தான் ஒருவர் வரமுடியும் என்ற நிலை. அதற்குக் காரணம், அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே சேலைதான் வீட்டிலிருந்தது!

    இதற்குமேல் வறுமையின் கொடுமையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்ட யாராலும் முடியாது. இந்தக் காட்சியை இவ்விதம் படமெடுத்த டைரக்டர்கள் கிருஷ்ணன், பஞ்சுவானாலும் இக்காட்சியை அமைத்த கலைவாணராக இருந்தாலும், வசனம் தீட்டிய அண்ணாவாக இருந்தாலும், பார்ப்பவர்களின் நெஞ்சங்களில் பசுமரத்தாணி பதிந்தது போல் "நல்லதம்பி'' படத்தில் வந்த இக்காட்சி என் மனதில் பதிந்து விட்டது. பின்னர் படத்துறைக்கு வந்த எனக்கு, இந்த "நல்லதம்பி'' படக்காட்சியே முன்னோடியாக இருந்தது.

    1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி பாரத நாடு, சுதந்திரத் திருநாடாக ஆகியது. அந்த ஆகஸ்டு 15-ம் நாளை, சுதந்திரத் திருநாளாகக் கொண்டாட வேண்டாம் என்று பெரியார் ஈ.வெ.ரா. கருத்து தெரிவித்தார்.

    ஆனால், முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட அண்ணாவோ "நாடு விடுதலையடையும் நாளைக் கொண்டாடத்தான் வேண்டும்'' என்று பெரியாருக்கு எதிரான கருத்தைப் பிரகடனப்படுத்திப் பேசினார்; எழுதினார்.

    அந்த ஒரு நிகழ்ச்சியால் அதுவரை மாநிலத் தலைவராக மட்டுமே இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் மதிப்பு தேசிய அளவில் வளர்ந்து விட்டது. அவர் மீது என் தனிப்பட்ட மதிப்பும் மேலும் உயர்ந்தது.

    சென்னையில் அண்ணா அவர்களை சந்திக்கும் வாய்ப்பை எங்கள் நாடகக் குழுவின் மூலம் பெற்றேன். என்னுடைய நாடகமான மேஜர் சந்திரகாந்தை அண்ணா பார்த்தார். அதன் விழா ஒன்றிற்குத் தலைமை தாங்கி என் நாடகத்தைப் பாராட்டிப் பேசிய அந்நாள் என் வாழ்வில் ஒரு பொன்னாள். தொடர்ந்து என் நாடகங்கள் அனைத்திற்கும் அண்ணாவை அழைத்திருந்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை அமர்ந்து பார்த்திருக்கிறார்கள்.

    என்னுடைய நாடகங்களை ஐம்பதாவது, எழுபத்தைந்தாவது, நூறாவது நாடகம் வரை நடந்து சபாக்களில் அவை விழாக்களாக நடக்கும் பொழுதெல்லாம் அண்ணா தலைமை தாங்குவதை ஆவலோடு எதிர் நோக்குவேன். நாடக ஆசிரியரான என்னை மட்டுமல்ல, நாடகத்தில் பங்கு பெறும் கலைஞர்களையும், அவர்கள் ஏற்று நடிக்கும் கேரக்டர், நடிப்பு இவற்றையெல்லாம் விமர்சித்து, பாராட்டிப் பேசுவார். ஒப்புக்குத் தலைமை தாங்காமல் நாடகங்களை முழுவதும் ரசித்துப் பார்த்து அதைப் பாராட்டிப் பேசும் விதம், விமர்சிக்கும் விதம் அண்ணாவின் தனிச்சிறப்பாகும். நேற்றுதான் நடந்தது போல இவை எல்லாம் என் மனக்கண்ணில் அழகிய காட்சிகளாகத் தெரிகின்றன.

    இன்னொரு மகத்தான நிகழ்ச்சி. "தாமரை நெஞ்சம்'' படத்தை இயக்கி முடித்துவிட்டேன். அவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க விரும்பினேன். என் நண்பரான இராம.அரங்கண்ணலுடன் அண்ணா வீட்டிற்குச் சென்றேன். படம் பார்க்க அழைத்தோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

    "தாமரை நெஞ்சம்'' படத்தை அவருக்காக விசேடமாக கலைவாணர் அரங்கில் திரையிட்டுக் காண்பித்தோம். படத்தைப் பார்த்துவிட்டு அண்ணா தரப்போகும் தீர்ப்புக்காகக் காத்திருந்தேன். தனக்கே உரித்தான புன்முறுவலுடன் ஒரே ஒரு வாக்கியத்தைக் கூறிவிட்டு அண்ணா காரில் ஏறிப் போய்விட்டார்.

    அவர்கள் சொன்ன அந்த ஒரு வாக்கியம். "ஒரு காவியத்தைப் பார்த்த திருப்தி இன்று எனக்கிருக்கிறது.''

    அந்த ஒரு பாராட்டு என்னை எங்கேயோ சிறகடித்துப் பறக்க வைத்துவிட்டது. பூரித்துப் போனேன். அவருக்குத்தான் எத்தனை பெரிய பரந்த உள்ளம்!

    "எதிர்நீச்சல்'' படம் தயாராகி விட்டது. கால வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடித்து பல வெற்றிப் படிகளைத் தாண்டியவரான அந்தப் பேரறிஞரை எதிர்நீச்சல் படத்தைக் காணச்செய்யவும் பேரவாக் கொண்டோம். அப்பொழுது அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். தவிர, அமெரிக்கா சென்று புற்று நோய்க்காக சிகிச்சை செய்து கொண்டு தாயகம் திரும்பியிருந்த நேரம். நண்பர் அரங்கண்ணலுடன் சென்று நுங்கம்பாக்கம் அவென்ï ரோடிலுள்ள இல்லத்தில் அண்ணாவை சந்தித்தோம்.

    அவரிடம், "நீங்கள் எதிர்நீச்சல் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டேன். பைல்களைப் புரட்டிக்கொண்டே, "ம்... பார்த்துடுவோமே'' என்று பதில் அளித்தார்.

    சற்று தயங்கியபடியே, "இன்றுள்ள உடல் நிலையில் உங்களால் படம் பார்க்க வர இயலுமா?'' என்று என் சந்தேகத்தை மெல்லக் கேட்டேன். "நிச்சயமாக வருகிறேன்!'' என்றார் அண்ணா.

    கற்பகம் ஸ்டூடியோவில் படத்தைத் திரையிட உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று பொங்கல் திருநாள். கலைவாணர் என்.எஸ்.கே. சிலையை வாணி மகால் அருகே திறந்து வைத்த அன்றே "எதிர்நீச்சல்'' படத்தைப் பார்க்கவும் வந்திருந்தார்.

    கலைவாணர் சிலை திறப்பு விழாதான் அண்ணா சென்னையில் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. அவர் பார்த்த கடைசித் தமிழ்ப்படம் எதிர்நீச்சல்.

    அண்ணா இன்று நம்மிடையே இல்லை. ஆனால் இப்போதும் நான் ஒவ்வொரு புதுப்படத்தை எடுத்து முடிக்கும் பொழுதும், `இப்படத்தைப் பார்த்து அபிப்ராயம் சொல்ல அண்ணா இல்லையே' என்ற ஏக்கம் என் நெஞ்சைப் பெரும் சுமையாக அழுத்துவதுண்டு. என் கலையுலக வாழ்க்கையில் நான் மறக்க முடியாத அளவுக்கு அப்படியொரு தனியிடத்தைப் பிடித்திருந்தவர், அவர்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×