search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வெண்ணிற ஆடை மூர்த்தி சின்னத்திரையில் சாதனை
    X

    வெண்ணிற ஆடை மூர்த்தி சின்னத்திரையில் சாதனை

    சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.
    சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.

    இப்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும், பெரிய திரையிலும் ஜொலித்தவர்கள். இவர்களில் சிலர், சின்னத்திரை உதயமான நேரத்தில் அதைப்பற்றி வெளிப்படையாக கிண்டல் செய்தவர்கள், பெரிய திரையில் தொடர்ந்து நீடிக்க முடியாத நேரத்தில், சின்னத்திரைக்கு வந்து, "இதுதான் அதிக அளவில் மக்களை சென்றடைகிறது'' என்று முழங்கவும் செய்தார்கள்.

    ஆனால், தொடக்கம் முதலே சின்னத்திரையின் சக்தியைப் புரிந்து கொண்டு நல்ல புகழோடு இருந்த நேரத்திலேயே சின்னத்திரையிலும் தனது படைப்பு மூலமாக புகழ் பெற்றவர் டைரக்டர் கே.பாலசந்தர். நடிகர்களில் "வெண்ணிற ஆடை'' மூர்த்தி.

    சென்னை டெலிவிஷனின் ஆரம்ப காலத்தில், எஸ்.வி.ரமணனின் `தினேஷ் - கணேஷ்' தொடராக ஒளிபரப்பானது. இதில் காமெடி செய்தார், மூர்த்தி.

    மூர்த்தியிடம் எழுத்தாற்றலும் இருந்ததால் அவரே கதை, வசனம் எழுதி, "ஜுலை-7'' என்ற திகில் சீரியலை இயக்கினார். சன் டி.வி.யில் 13 வாரங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல், மூர்த்தியின் இயக்கும் திறனுக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்தது.

    தொடர்ந்து `ஜிஇசி' டி.வி.யில் "கேரி ஆன் கிட்டு'' என்ற நகைச்சுவை தொடரை இயக்கி நடித்தார்.

    இப்படி திகில், காமெடி இரண்டிலும் தன்னை வெளிப்படுத்திய மூர்த்திக்கு, அடுத்து வந்த சின்னத்திரை வாய்ப்பு முற்றிலும் அவரே எதிர்பாராதது. ஜோதிடத்தில் அவரது ஆற்றலை அறிந்த ஜெயா டிவி, ஜோதிட நிகழ்ச்சியை வழங்க அழைத்தது.

    ஜோதிடம், வாஸ்து தொடர்பான இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 13 வாரம் வழங்கினார், மூர்த்தி. இதில்கூட வெறும் ஜோதிடத்தை கூறுவதுடன் நில்லாமல், இடையிடையே புராணக்கதைகளையும் சுவாரஸ்யமாக கலந்து டி.வி. ரசிகர்களை கவர்ந்தார்.

    தொடர்ந்து பல சீரியல்களில் நடிப்பைத் தொடர்ந்தவருக்கு, தேடி வந்த `ஜாக்பாட்' அதிர்ஷ்டம்தான் "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' நிகழ்ச்சி. இது "சன் டிவி''யில் ஒளிபரப்பாகி, மூர்த்தியின் நகைச்சுவை கீர்த்தியை பிரபலப்படுத்தியது.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    "ஐந்தாண்டுகளாக ரசிகர்களின் உணர்வோடு கலந்து போன ஒரு நிகழ்ச்சியாக, மீண்டும் மீண்டும் சிரிப்பு'' நிகழ்ச்சி அமைந்து விட்டது. ஒரு எபிசோடில் நகைச்சுவைப் பின்னணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு நல்ல மெசேஜ் வருகிற மாதிரி முடிக்க வேண்டும்.

    தொடக்கத்தில் இது பெரிய சவாலாகவே தெரிந்தது. என்றாலும் போகப்போக பழகிவிட்டது. நான் தொடர்ந்து 210 எபிசோடுகளை உருவாக்கினேன். நடப்பு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதால், அந்தப் பின்னணியில் காட்சிகளை உருவாக்குவது சிரமமாக இல்லை. இதற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் கைகொடுத்தார். அவர் 350 எபிசோடுகள் வரை உருவாக்கினார். சமீபத்தில் இந்த தொடர் சன் டிவி.யில் நிறைவு பெற்றது.

    நான் டி.வி.யிலும் நிகழ்ச்சிகள் வழங்கியதை பாராட்டி விருது கொடுத்தார்கள். தமிழ்நாடு சினிமா கலைமன்றம் முதன் முதலாக எனக்கு `நகைச்சுவை களஞ்சியம்' விருது கொடுத்து பாராட்டியது. இந்த பாராட்டு தந்த உற்சாகத்தில் சின்னத்திரைக்குள் இன்னும் தீவிரமானேன்.

    இந்த வகையில் தூர்தர்ஷனில் கதை வசனம் எழுதி, 5 சீரியல்களை இயக்கியிருக்கிறேன். தனியார் டி.வி.யில் 24 சீரியல்களில்

    நடித்திருக்கிறேன்.1992-ல் தமிழக அரசின் "கலைமாமணி'' விருது கிடைத்து, என் கலைப் பொறுப்பை அதிகமாக்கியது.''

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    கலைவாணர் விருது, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது ஆகியவற்றோடு தெலுங்கின் பிரபல விருதான பிரகாசம் விருதையும் பெற்றவர், மூர்த்தி.

    சென்சார் போர்டு உறுப்பினராக 2 ஆண்டுகள், பட்ஜெட் படங்களை தீர்மானிக்கும் குழுவில் 2 ஆண்டுகள் சிறந்த படங் களை தேர்வு செய்யும் குழுவில் 2 ஆண்டுகள் என மத்திய, மாநில அரசுகளின் கவுரவப் பொறுப்புகளிலும் நீடித்திருக்கிறார்.

    நடிப்பில் தன்னை பல கோணங்களில் வெளிப்படுத்திய மூர்த்தி, நாணயங்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்திய நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் 3 ஆயிரத்துக்கு மேல் இவர் கலெக்ஷனில் உள்ளன.

    பேசி சிரிக்க வைத்தவர் எழுதியும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ் டயரி'' பாகம்-1, பாகம்-2 என்ற பெயரில் 2 புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது. "சூப்பர் மார்க்கெட்'' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

    `குட், பேட், அக்ளி' என்ற ஆங்கிலப் புத்தகம் வெளிவரும் தறுவாயில் இருக்கிறது.

    அமெரிக்காவில் இயங்கி வரும் "வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டணி'', நடிகர் நாகேஷையும், மூர்த்தியையும் அழைத்து கவுரவித்திருக்கிறது.

    வெளிநாடுகளில் "நட்சத்திர இரவு'' கலை நிகழ்ச்சிகளுக்கு `பிள்ளையார் சுழி' போட்டவரும் இவரே. அன்றைய பிரபலம் மோகன் - அமலா ஆகியோரை பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ராஜசுலோசனா, சி.ஐ.டி.சகுந்தலா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்று வந்தார்.

    தென்னாப்பிரிக்காவிலும் தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்த கலைக்குழுவினர் 30 நாட்களில் 26 மேடை நிகழ்ச்சிகள் நடத்தி அங்குள்ள தமிழர்களை பரவசப்படுத்தினார்கள்.

    "நம் நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் மக்களை ஜோதிட மோகம் பிடித்து ஆட்டுகிறது'' என்கிறார், மூர்த்தி. அதற்கு உதாரணமாக அமெரிக்க சம்பவம் ஒன்றை சொன்னார்:

    "நம் நாட்டில் தாயத்தில் தொடங்கி நவரத்ன கற்கள் வரை ஜோதிட நம்பிக்கைக்கு ஆதாரங்களாக இருப்பது போல அமெரிக்காவிலும் இருக்கவே செய்கிறது. அங்கும் ஜோதிட நிலையங்கள் உள்ளன. பிரபல ஜோதிடர்கள் இதை நடத்துகிறார்கள்.

    சான்பிரான்சிஸ்கோவில் என் மகன் இருக்கும் பகுதியில்கூட "சைக்கிக் ஐ'' என்ற பெரிய ஜோதிட நிலையம் இயங்கி வருகிறது. ஒருநாள் என் மகன் மனு என்னிடம், "அப்பா! நீங்கள் பெரிய ஜோதிட நிபுணர் ஆயிற்றே! இங்குள்ள ஒரு ஜோதிடரை சந்தித்தால் என்ன?'' என்று கேட்டான். எனக்கும் அது சரியாகப்பட்டதால் சம்மதம் சொன்னேன். மகனே சந்திக்கும் நேரத்தை உறுதிப்படுத்தினான்.

    நான் ஜோதிட நிலையத்துக்குள் போய் அதன் தலைவரை சந்திக்க போனபோது, அங்கிருந்தவர் தலைவர் அல்ல; தலைவி!  கொஞ்சமே கொஞ்சமான வெளிச்சத்தில் அந்த ஜோதிட பெண்மணி அமர்ந்திருந்தார். என்னை சந்தித்ததும் எழுந்து கைகுலுக்கி வரவேற்றார். உடனே நான் அவரிடம், "மேடம்! நீங்கள் சிம்ம ராசிதானே?'' என்று கேட்டேன்.

    அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். "சரிதான்! எப்படிச் சொன்னீர்கள்?'' என்று வியப்பை கண்களில் வெளிப்படுத்தினார்.

    நான் அவரிடம், "இது என் ஜோதிட குருநாதர் பண்டிட் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்திய `உத்தி.' ஒருவரை நாம் சந்திக்கும் நேரத்தை வைத்தே அவரது ராசியை கணக்கிட்டு விடலாம். அந்த அடிப்படையில்தான் உங்கள் ராசியை கணக்கிட்டேன்'' என்றேன். நான் விடைபெறும் வரை அவர் அந்த ஆச்சரியத்தில் இருந்து விடுபடவே இல்லை.

    அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வந்தது. புஷ்சை எதிர்த்து அல்கோரி போட்டியிட்டார். நவம்பரில் தேர்தல். நான்  ஜோதிடக் கணித அடிப்படையில் கணக்கிட்டு, "புஷ்தான் ஜனாதிபதியாவார்'' என்று என் மகனிடம் எழுதிக் கொடுத்தேன்.

    தேர்தலில் புஷ் வென்று, ஜனாதிபதியானார். ஆச்சரியப்பட்ட என் மகன், "அப்பா! இதை இங்குள்ள ஏதேனும் ஒரு `நெட்' மூலமாக வெளிப்படுத்தியிருந்தால் உங்கள் சரியான கணிப்புக்காக ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றிருப்பீர்கள்'' என்றான்.

    நான் அவனிடம் "இருக்கலாம். அதன் பிறகு தேர்தலில் நிற்கும் உலகத் தலைவர்கள் என்னை வேலை பார்க்க விடமாட்டார்களே! ஏற்கனவே கலைத்துறை மூலம் உலகம் முழுக்க உள்ள கலா ரசிகர்களுக்கு தெரிந்தவனாக, அவர்களால் கொண்டாடப்படுகிறவனாக இருக்கிறேனே! அந்த சந்தோஷம், அந்தப் புகழ் மட்டுமே போதும் என்றேன்.''

    புன்னகை முகமாய் சொல்லி முடித்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி.
    Next Story
    ×