search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எம்.ஜி.ஆருடன் வாலியின் அனுபவங்கள்
    X

    எம்.ஜி.ஆருடன் வாலியின் அனுபவங்கள்

    எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.
    எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

    இதுபற்றி வாலி கூறியதாவது:-

    "ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

    "வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

    "என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

    "நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.

    "ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.

    எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:

    "வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.

    உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''

    எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.

    "அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.

    தி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். விலகாதிருந்த நாளில் (1972) கலைஞரின் மகன் மு.க.முத்துவைக் கதாநாயகனாகக் கொண்டு "பிள்ளையோ பிள்ளை'' என்னும் வண்ணப் படத்தை பூம்புகார் புரொடக்ஷன்சார் தயாரித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, நான் பாடல்களை எழுதினேன்.

    படம் தயாரானதும், அந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சி ஒன்று, தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு நாள் காலைப் பொழுதில் ஏற்பாடாகியிருந்தது.

    படத்தைப் பார்க்க முதல்வர் கலைஞரோடு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளையில் மு.க.முத்துவின் நடிப்பை எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாகத் தந்து வாழ்த்தினார்.

    நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, எம்.ஜி.ஆர். என்னை அவருடைய தோட்டத்திற்கு மறுநாள் காலை சிற்றுண்டிக்கு வரச்சொன்னார்.

    மறுநாள், நான் தோட்டத்திற்கு சென்றேன்.

    விருந்தோம்பலில் எம்.ஜி.ஆருக்கு இணையே கிடையாது. இட்லிகளும், தோசைகளும் அவர் கையாலேயே எனக்குப் பரிமாறப்பட்டன.

    சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். என்னிடம் மெல்லப் பேசத்தொடங்கினார். "என்னங்க வாலி! மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானா?''

    இப்படி எம்.ஜி.ஆர். என்னைக்கேட்டதும், அவரது மனதில் உள்ளது என்னவென்று மறுவினாடியே எனக்குப் புரிந்துவிட்டது.

    "பிள்ளையோ பிள்ளை'' படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு. திரு.பஞ்சு மூலம், கலைஞர், தன் மகன் முத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார்.

    அதன் காரணமாகப் படத்தின் கதாநாயகி, கதாநாயகனைப் பார்த்து - "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!'' என்று பாடுவதாக பாடலைப் புனைந்தேன்.

    எம்.எஸ்.வி.யும், சாருகேசி ராகத்தில் அந்த பாடலுக்கு அற்புதமாக இசையமைத்திருந்தார்.

    இதைப் படத்தில் பார்த்துவிட்டுத்தான் எம்.ஜி.ஆர். என்னிடம் "மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துக்கிட்டதானா? என்று என்னைக் கேட்டார்.

    "அண்ணே! மு.க.முத்து வளர வேண்டிய இளம் கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்னுடைய தமிழ் எல்லாரையும் வாழ்த்துவதாக இருக்க வேண்டும் என்று நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க... அதனாலதான் அப்படி எழுதினேன்'' என்று நான் சொன்ன விளக்கத்தை எம்.ஜி.ஆர். நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று.

    மேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக அளவு பிரபல்யம் அடைந்திருக்கக்கூடும் என்பதை, எனக்கு அவர் சொல்லாமலேயே சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.

    இதற்கு முன் (1970) மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய "எங்கள் தங்கம்'' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.

    இதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.

    இதில் "நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா'' என்று ஒரு பாடலை எழுதினேன்.

    எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.

    முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.

    மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.

    அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.

    முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.

    எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.

    "வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.

    (அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது'')

    இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.

    படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், "நான் அளவோடு ரசிப்பவன்...'' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் "எங்கள் தங்கம்'' படத்தில் எழுதினேன்.

    "நான் அளவோடு ரசிப்பவன்'' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், "வாலி! இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே!'' என்று என்னிடம் சொன்னார்.

    நான் அவ்வாறே எழுதினேன்.

    இப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.

    இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.

    அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.

    "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'', "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'', "நான் செத்துப் பிழைச்சவண்டா'', "நான் ஆணையிட்டால்'' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.

    இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.

    அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.''

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
    Next Story
    ×