என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் தயாரிப்பாளர்களிடம், சம்பளத்துக்கு வரி கட்டி பணத்தை வெள்ளையாக தரும்படி நயன்தாரா, அனுஷ்கா வற்புறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். வளர்ந்த கதாநாயகிகள் பலரின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடும். படம் வெற்றி பெற்றால் சம்பள தொகை ஏறுவதும், தோல்வி அடைந்தால் இறங்குவதும் வழக்கம்.

    ஆனால் நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரின் சம்பளம் மட்டும் ஏறுமுகமாகவே இருக்கிறது. நயன்தாரா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கதாநாயகியாக அறிமுகமான புதிதில் இவரது சம்பளம் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வசூல் குவித்ததால் சம்பளம் மளமளவென உயர்ந்தது.

    தற்போது ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘கைதி எண்.150’ படத்தில் நடிக்க அவரை அணுகி ரூ.3½ கோடி சம்பளம் தருவதாக பேசினார்கள். ஆனால் அவருடன் நடிக்க மறுத்து விட்டார்.

    பழைய மாதிரி காதல் கதையம்சம் உள்ள படங்களை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறார். அவர் நடித்துக் கொண்டு இருக்கும் டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம் ஆகிய மூன்றுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள்.

    இந்த படங்களில் பெரிய கதாநாயகர்கள் இல்லாததால் நயன்தாராவுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் தயங்கவில்லை.

    அதிக சம்பளம் வாங்குவதில் நயன்தாராவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வாங்கி வந்த இவருக்கு தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘பாக்மதி’ தெலுங்கு படத்துக்கு ரூ.2¼ கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளது.

    அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி படங்களில் வித்தியாசமாக நடித்து ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ள அனுஷ்கா சம்பளத்தில் நயன்தாராவை பின்னுக்கு தள்ள தீவிர முயற்சி எடுக்கிறார். ஆனாலும் இளம் ரசிகர்கள் நயன்தாராவுக்கு பெருமளவு இருப்பதால் அவரை முந்த முடியவில்லை.

    1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதால் நயன்தாராவும், அனுஷ்காவும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்துக்கு வரி கட்டி வெள்ளையாக தரும்படி நிபந்தனை விதித்து இருப்பதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    திருப்பூரில், தோழி வர்ஷா வீட்டில் கைது செய்யப்பட்ட பட அதிபர் மதன் வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
    பட அதிபர் மதன் தற்கொலை செய்துகொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 5½ மாதமாக தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனது தோழி வர்ஷாவின் பங்களா வீட்டில் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மதனை கடந்த 21-ந் தேதி சென்னை போலீசார் கைது செய்தனர்.

    மே மாதம் இறுதியில் தலைமறைவான மதன், திருப்பூர் வருவதை கடந்த ஜூலை மாதம் தனது தோழி வர்ஷாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இறுதியில் மதனுக்காக ரூ.1¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை வர்ஷா தனது பெயரில் வாங்கியதாக தெரிகிறது. இந்த மோட்டார் சைக்கிள் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி தான் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, அந்த மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டில் தனது மகனின் பெயரை எழுதியுள்ளார்.

    அதன்பிறகு மதன் தான் திட்டமிட்ட படி வர்ஷாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மதன் பதுங்குவதற்கு வசதியாக அந்த பங்களாவில் செப்டம்பர் மாதம் வடமாநில தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோரை கொண்டு இரவு, பகலாக உள் அலங்கார வேலை நடந்துள்ளது. அப்போது தான், மதன் பதுங்குவதற்கான ரகசிய இடத்தை தனது வீட்டில் வர்ஷா அமைத்து இருக்கலாம் என்று அக்கம், பக்கத்தினர் தெரிவித்தனர்.

    மேலும் திருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நீண்ட தூரத்துக்கு பாதுகாப்பாக செல்ல முடியாது என்பதால், மதன் ஒரு சொகுசுகாரை வாங்க திட்டமிட்டுள்ளார். தனது பெயரில் கார் வாங்கினால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்பதால், அவர் தனது தோழி வர்ஷா பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.18 லட்சம் மதிப்பிலான சொகுசுகார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரும் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி வர்ஷா பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் வர்ஷாவும், மதனும் கோவை, கோவா போன்ற பகுதிகளுக்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அந்த பங்களாவில் மதன் தங்கி இருந்த நேரத்தில், திருப்பூரில் இருந்து அவர் வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர், பாபநாசம் போன்ற சில திரைப்படங்களை பார்த்து, சென்னையில் இருந்து வெளிமாநிலங்களில் எங்கெங்கு செல்வது? எவ்வாறு செல்வது? எங்கு தங்குவது? பின்னர் அங்கிருந்து எங்கு செல்வது? என்பது போன்று முன்பே திட்டமிட்டு இருக்கிறார்.

    திருப்பூரில் தங்கி இருந்த மதன், வர்ஷாவின் வீட்டில் இருந்த நோட்டில், எங்கு செல்வது? எங்கு தங்குவது போன்ற தனது திட்டத்தை எழுதி இருந்ததாக தெரிகிறது. அந்த குறிப்பில் ஒவ்வொரு ஊருக்கு கீழும் அம்புக்குறி போட்டு குறித்துள்ளார். அதுபோல் திருப்பூர் என்று எழுதப்பட்டு இருந்ததற்கு கீழும் அம்புக்குறி போட்டுள்ளார்.

    இந்தநிலையில் மதன் திருப்பூரில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் வரவே அவர்கள் கடந்த வார இறுதியில் திருப்பூருக்கு வந்து விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். போலீசார் வந்ததை அறிந்த மதன், தான் எழுதி வைத்து இருந்த குறிப்புகள், தான் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்ததற்கான ஆவணங்களை கிழித்து போட்டுள்ளார். மேலும் தனது செல்போன் எண்களை போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க அவர் ஏராளமான சிம்கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளார்.

    அந்த சிம்கார்டுகளின் கவர்களையும் அவர் குப்பையில் போட்டுள்ளார். பின்னர் அந்த குப்பைகளை வீட்டுக்கு பின்பகுதியில் செல்லும் நல்லாற்றங்கரையோரம் போட்டு, அவற்றுக்கு தீவைத்து எரித்துள்ளார். ஆனால் அவற்றில் சில குறிப்புகள் எழுதி இருந்த தாள்களும், சிம்கார்டு கவர்களும் முழுவதும் எரியாமல் கிடந்தன.

    அத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் மற்றும் கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர வில்லாவில் வழங்கப்பட்ட குளியல் பொருட்களின் அட்டை பெட்டிகளும், சிகரெட் பெட்டிகளும் குப்பையில் எரியாமல் கிடந்தன. இதனால் மதன், திருப்பூரில் இருந்து தனது தோழியுடன் கோவா மற்றும் கேரள மாநிலத்துக்கு சென்றுவந்து இருக்கலாம் என்றும், அங்கு ஓட்டலில் தங்காமல் தனி பங்களாவில் தங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குப்பையில் ஆவணங்கள் எரிந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே வர்ஷா வீட்டில் உள்ளவர்கள் யாரும் வெளியில் வருவதே இல்லை. வீட்டின் அழைப்பு மணியை அடித்தாலும் யாரும் வெளியே வரவில்லை. வீட்டின் வேலைகார பெண் மட்டும், வாசல் தெளித்து கோலம் போட்டு வேலைகளை கவனித்து வருகிறார். மேலும் மதனின் தோழி வர்ஷா தனது முகநூல்(பேஸ்புக்) கணக்கை அழித்து விட்டார். அதுபோல் வர்ஷாவின் துணிக்கடையும் திறக்கவில்லை.

    சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) பொதுச் செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஜி.சிவா மீது, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் அபாண்டமாக குற்றம் சாட்டி காவல் துறையினரிடம் புகார் வழங்கியதை கண்டித்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    படப்பிடிப்புகள், பாடல் பதிவு, எடிட்டிங், டப்பிங் ஆகிய சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் எதுவும் நடைபெறாது. நேற்று நடந்த செயற்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    நவிமும்பை மாநகராட்சி சார்பில் ‘தூய்மை நவிமும்பை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நகரை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்தநிலையில், தூய்மை நவிமும்பை திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த திட்டத்திற்கான தூதராக பாடகர் சங்கர் மகாதேவனை நவிமும்பை மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டே அறிவித்து உள்ளார்.

    இந்தநிலையில், நேற்று சங்கர் மகாதேவன் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கமிஷனர் துக்காராம் முண்டேவை சந்தித்தார். அப்போது அவரை கமிஷனர் துக்காராம் முண்டே கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் தூய்மை நவிமும்பை திட்டத்திற்கு வலுசேர்க்கும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.
    தனது 45-வது பிறந்தநாள் அன்று மதன் சிறைக்கு சென்றதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.
    சென்னை:

    தனது 45-வது பிறந்தநாள் அன்று மதன் சிறைக்கு சென்றதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

    பட அதிபர் மதனின் தலைமறைவு வாழ்க்கை பற்றி தினமும் ருசிகரமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலையில் திருப்பூரில் உள்ள அவரது தோழி வர்ஷா வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
    ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், உதவி கமிஷனர் நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் மில்லர், சந்திரசேகர், ஆல்வின் ராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் வர்ஷா வீட்டை மாறுவேடத்தில் கண்காணித்தப்படி இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வர்ஷா திடீரென்று காரில் வெளியே புறப்பட்டு சென்றார். தனிப்படை போலீசாரும் இன்னொரு காரில் பின் தொடர்ந்து சென்றனர்.

    வர்ஷா திருப்பூர் கடைவீதிக்கு சென்று கேக், ஐஸ்கீரிம் மற்றும் ஏராளமான இனிப்பு வகைகளை வாங்கினார். ஒரு பூச்செண்டு ஒன்றையும் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் போலீசார் அதிரடியாக வர்ஷாவின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    வீட்டின் மேல்மாடியிலும், தரைதளத்திலும் போலீசார் சோதனை போட்டபோது, மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சோர்ந்து போன போலீசார் வெளியே வந்துவிட்டனர். அடுத்து அதிகாலையில் மீண்டும் வர்ஷாவின் வீட்டுக்குள் சென்று சோதனை போட்டனர். தூங்கிக்கொண்டிருந்த வர்ஷா, அவருடைய மகன்கள், தாயார் ஆகியோரை வீட்டின் கீழ் தளத்தில் வைத்து விசாரித்தனர். மதன் அங்கு இல்லை என்று வர்ஷா தொடர்ந்து சாதித்தபடி இருந்தார். திடீரென்று வர்ஷா கையில் வைத்திருந்த செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர்.

    செல்போனில் மதனோடு வர்ஷா எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்கள் காணப்பட்டன. அந்த புகைப்படங்களை காட்டி இந்த படங்கள் எப்போது எடுத்தது என்று வர்ஷாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி போட்டனர்.

    போலீசாரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வர்ஷா திணறினார். செல்போனில் மதனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்கள் வர்ஷாவை போலீசாரிடம் சிக்க வைத்துவிட்டன. வர்ஷா வேறுவழி இல்லாமல் மேல் மாடியில் மதன் தங்கி இருப்பதை ஒப்புக்கொண்டார். உடனே போலீஸ் அதிகாரிகள் மேல் மாடிக்கு சென்றனர்.

    தரை தளத்தில் போலீசார் விசாரித்தபோது, மதன் கழிவறைக்குள் இருந்துள்ளார். போலீசார் வந்ததை தெரிந்துகொண்டதும் அவசரமாக வர்ஷாவின் பாவாடையை லுங்கி போல் கட்டிக்கொண்டு ரகசிய அறைக்குள் சென்று பதுங்கி உள்ளார்.

    மதன் ரகசிய அறையில் இருப்பதை வர்ஷா போலீசாருக்கு காட்டிக்கொடுத்துவிட்டார். அதன்பிறகு தான் போலீசார் மதனை ரகசிய அறையில் வைத்து கைது செய்தனர்.

    கேக் மற்றும் ஐஸ்கீரிம், பூச்செண்டு போன்றவற்றை ஏன்? வாங்கினீர்கள் என்று வர்ஷாவிடம் போலீசார் விசாரித்தனர். மதனுக்கு திங்கட்கிழமை 45-வது பிறந்தநாள் என்றும், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக கேக் வாங்கியதாகவும், மதனுக்கு வாழ்த்து சொல்வதற்காக பூச்செண்டு வாங்கியதாகவும் வர்ஷா போலீசாரிடம் கூறினார்.

    மதன் தனது 45-வது பிறந்தநாளில் போலீசார் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    6 மாத காலம் தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு தனது பிறந்தநாளில் மதன் சிறைக்கு சென்றுள்ளார். மதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கி உள்ளது.

    மதனை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவில் விசாரணை நடத்தினார். மோசடி செய்த பணத்தை எந்தெந்த வகையில் செலவழித்தார். எங்கெங்கு சொத்துகள் வாங்கி உள்ளார் என்பது பற்றிய விவரங்களை மதனிடம் நேற்று இரவு விசாரித்தனர்.
    "அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.
    "அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.

    அவரது இரண்டாவது படமான `பாலூட்டி வளர்த்த கிளி' சரியாகப் போகவில்லை. என்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த "கொலை கொலையா முந்திரிக்கா'' பாடல் ஹிட்டாகி, இளையராஜா பெயரை தக்க வைத்துக்கொண்டது.

    இரண்டாவது படம் வெளியான பிறகும் இளையராஜா தொடர்ந்து `இசை' கற்றுக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். இதற்கென சுவாமி தட்சிணாமூர்த்தி என்ற இசை அமைப்பாளரிடம் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "சினிமாத்துறையில் காலெடுத்து வைத்த நேரத்திலேயே சுவாமி தட்சிணாமூர்த்தியின் சங்கீதம் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. இப்போது இரண்டு படங்களுக்கு இசையமைத்துவிட்ட நிலையிலும் அவரிடம் கற்றுக்கொள்ளும் ஆசை எனக்குள் இருந்தே வந்தது. இனியும் தள்ளிப்போடலாகாது என்ற முடிவுக்கு வந்து, சென்னை மந்தைவெளியில் இருந்த அவரது வீட்டுக்குப்போய் கேட்டேன்.

    என் ஆர்வம் புரிந்து கொண்டவர், "நாளையில் இருந்து பாடம் தொடங்கலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    மறுநாளே பூ, பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு தட்டுடன் போனேன்.

    அவர் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை முடித்து, எனக்கு பாடம் தொடங்கினார்.

    ஆரம்பப் பாடமான சரளி வரிசையில் இருந்து பாடத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தேன்.

    அவரோ ஏதோவொரு கீர்த்தனையைத் தொடங்கி விட்டார். அவர் சொல்லித் தரும் பாடங்களை குறித்துக்கொள்ள `நோட்டு' கொண்டு போயிருந்தேன். கீர்த்தனையில் இருந்து தொடங்கி விட்டதால் எழுதும் வேலை ஒன்றும் இல்லை.

    பாடினார். அதையே என்னைத் திரும்பப் பாடச் சொன்னார். அவர் பாடிய மாதிரி வரவில்லை.

    சரி செய்தார். மறுபடியும் பாடினேன்.

    ஊஹும். அவர் மாதிரி வரவேயில்லை. அன்றைய பாடம் இப்படியே முடிந்தது.

    அன்று மட்டுமில்லை. அடுத்து நான் போன மூன்று மாதங்களிலும் இதே தான் என் நிலை. அவர் பாடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று. என்றாலும் அவர் பாடுவதும், அவர் பாட்டுக்கு நான் பாடிப்பார்ப்பதுமாக 6 மாதங்கள் ஓடிப்போயிற்று.

    சுவாமி அப்போது, "நந்தா என் நிலா'', "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'' போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.

    நானும் இரண்டொரு படங்களுக்கு இசையமைப்பை தொடர்ந்ததோடு, ஜி.கே.வி.யிடமும் பிசியாக இருந்தேன்.

    இதற்கிடையே சுவாமி ஒருநாள் என்னிடம் தனது படம் ஒன்று பின்னணி இசை சேர்ப்புக்கு (ரீரிகார்டிங்) வந்துவிட்டதாகவும், அதற்கு `காம்போ' (இசைக் கருவி) வாசிக்க யாரும் கிடைக்கவில்லை என்றும் என்னிடம் சொன்னார்.

    நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், "அதனாலென்ன சுவாமி! நான் இல்லையா? நீங்க சொல்றப்போ வந்துடறேன்'' என்றேன்.

    சொன்னது போலவே அவரது படத்துக்கு `கம்போ' வாசிக்கப்போனேன். படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராக என்னை உணர்ந்தவர்களுக்கு, நான் ஒரு உதவியாளர் நிலையில் காம்போ வாசிக்க வந்தது அதிர்ச்சியாக இருந்தது போலும். அங்கிருந்த எல்லாரும் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

    ஸ்டூடியோவில் வேலை செய்வோருக்கும் ஷூட்டிங் புளோருக்கு வந்தவர்களுக்கும், பக்கத்து ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் வந்தவர்களுக்கும் தகவல் பரவ, என்னை வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள். நான் "காம்போ'' வாசித்த நாலு நாட்களும் இந்த வேடிக்கை தொடர்ந்தது.

    இப்படி பார்த்துப் போனவர்களில் ஒருவரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இன்று என்னைப் பார்த்தால்கூட அந்த சம்பவம் பற்றி வியந்து பேசுவார்.

    சுவாமிக்கும் என் மீது பிரியம் அதிகமாகிவிட்டது. `இத்தனை பெயர் வாங்கியிருந்தாலும் இன்னும் இந்தப் பையன் பெரியவர்களை மதிக்கும் பண்போடு இருக்கிறானே என்று ஏற்பட்ட ஆச்சரியம்தான் என்மேல் அவருக்கான அன்பை கூட்டிற்று என்றும் சொல்லலாம்.

    அப்புறம் அந்த இசைப் பயிற்சி என்னாயிற்று என்று கேட்பீர்கள். அது அவ்வளவுதான்.

    இந்த நேரத்தில் மாஸ்டர் தன்ராஜை பார்க்க விரும்பினேன். தன்னிடம் இசை கற்றுக்கொண்டவர்களில் ஒருவராவது தன்னை வந்து பார்க்கவில்லை என்று அவர் குறைப்பட்டுக் கொள்வதை கவனித்திருக்கிறேன்.

    ஜோசப்பிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து மாஸ்டரின் தொடர்பு நின்று போனது. இருந்தாலும் அவர் மீதான மரியாதையும் அன்பும் குறையவே இல்லை.

    ஒருநாள் கையில் ஒரு ஐயாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்கப்போனேன்.

    என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், "நீ ரொம்பவும் பிசியா இருப்பதை கேள்விப்பட்டேன். இருந்தாலும் இசையில் மேற்கொண்டு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்குங்கறதை மறந்துடக்கூடாது. உனக்கு இதுக்காக எப்ப `டைம்' ஒதுக்கி வர முடியுமோ வா. நான் இருக்கிறேன்'' என்றார்.

    அவர் கையில் ஐயாயிரம் ரூபாய் பணத்தை வைத்தேன். இப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர் போலானார். "என்கிட்ட எத்தனையோ பசங்க கத்துக்கிட்டு சினிமாவில் நல்லா சம்பாதிக்கிறானுக. இதில் ஒருத்தன்கூட என்னை கவனிக்கணும்னோ, பார்க்கணும்னோ நினைச்சது கிடையாது. பிசியா இருக்கிற நீ என்னை பார்க்க வந்ததே பெரிசு. பணம், காசு கிடக்கட்டும். ஆனா ராஜா நீ `கிரேட்'டுடா!''

    இப்படி  அவர் சொன்னது எனக்கு  ஆசீர்வாதமாகவே  பட்டது.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    தொடர்ந்து வந்த படங்களுக்கான இசையமைப்பின்போது "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்'' என்ற பாடல், ஒத்திகையின்போது சின்னதாய் ஒரு சிக்கலை ஏற்படுத்தியது இளையராஜாவுக்கு.

    அதுபற்றி கூறுகிறார்:

    `அன்னக்கிளி' டைரக்டர்கள் தேவராஜ் - மோகன், "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்துக்குப் பிறகு "உறவாடும் நெஞ்சம்'' என்ற படத்தை இயக்கினார்கள். இதே நேரத்தில் பஞ்சுவின் "அவர் எனக்கே சொந்தம்'' படமும், காரைக்குடி நாராயணனின் `துர்காதேவி' படம் சங்கரய்யர் டைரக்ஷனிலும் தொடங்கியது.

    "உறவாடும் நெஞ்சம்'' படத்தில் "ஒருநாள், உன்னோடு ஒரு நாள்'' பாடல் பதிவாகும் போது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. பின்னணி இசையில் வயலினோடு ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கம்போஸ் செய்யப்பட்ட இசை, ஒரு ஒத்திகையிலும் சரியாக வரவில்லை. நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது.

    கோவர்த்தன் மாஸ்டர், "சரிய்யா, டேக் போகலாம். அதற்குள் எப்படியாவது பிராக்டீஸ் செய்து வாசிப்பார்கள். சரியாக வந்துவிடும்'' என்று நம்பிக்கை கொடுத்தார்.

    `டேக்' போய் விட்டோம். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் - ஜானகியும் பாடிக்கொண்டிருந்தார்கள். நிறைய டேக்குகள் ஆகிக்கொண்டிருந்ததே தவிர, மிïசிக் சரியாக வரவில்லை.

    கடைசியாக ஒரேயொரு டேக்கில் மிகவும் சரியாக வாசித்து விட்டார்கள். அதுதான் இசைத் தட்டில் இன்றும் இருப்பது.

    இதுபோல எத்தனை பாடல்களில் ஒரேயொரு டேக்கில் மட்டும் சரியாகப் பாடியிருப்பார்கள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.''

    2017-ஆம் ஆண்டு தனக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும் என்று விமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்...
    விமல் நடிப்பில் இந்த வருடம் ‘அஞ்சல’, ‘மாப்ள சிங்கம்’ என இரண்டு படங்களே வெளிவந்திருக்கின்றன. இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரெண்டாவது படம்’ முடிவடைந்தும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

    இதையடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்து வரும் ‘மன்னர் வகையறா’ படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், தனக்கு அடுத்த வருடம் மகிழ்ச்சி தரக்கூடிய ஆண்டாக அமையும் என்று விமல் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது,

    என்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து சுசீந்திரன் தயாரிப்பில் அவரது உதவியாளர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்த படத்துக்கு இமான் இசை அமைக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார்.

    இதையடுத்து, ‘ராஜதந்திரம்’ இயக்குனர் அமீத் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இத்துடன் இன்னும் நான்கு முக்கிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. 2017 ம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். எனக்கு புதுத் தெம்பை தருவதாக இருக்கும் என்றார்.
    விஐபி இசையமைப்பாளர் ஒருவரின் காதலை சமத்தான நடிகை போட்டு உடைத்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    விஐபி இசையமைப்பாளருக்கு சமீபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டது. இதற்கு விஐபி இசையமைப்பாளர் யாரையும் தான் காதலிக்கவும் இல்லை. இப்போதைக்கு திருமணமும் இல்லை என்பதுபோல் ஒரு பதிலை சொல்லியிருந்தார். ஆனால், இவருடைய இசையில் இரண்டு படங்களில் நடித்த சமத்தான அந்த நடிகை இவரிடம் ஒளிந்து கிடந்த உண்மையை இரண்டே வார்த்தையில் வெளிக் கொண்டு வந்துவிட்டார்.

    அந்த பொண்ணு நல்ல பொண்ணுதானே, அவளிடம் என்ன பிரச்சினை என்று கேட்டதுதான் தற்போது விஐபி இசையமைப்பாளருக்கு பெரிய பிரச்சினையாய் வந்து நிற்கிறது. சமத்தான நடிகை சொன்ன பொண்ணு யார்? விஐபி இசையமைப்பாளர் யாரையாவது காதலித்து வருகிறாரா? அல்லது அவருக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அது தோல்வியில் முடிந்ததா? என்ற கேள்விகள்தான் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

    ஆனால், சமத்தான நடிகையின் கேள்விக்கு விஐபி இசையமைப்பாளர் இதுவரை மௌனமே காத்து வருகிறார். இந்த மௌனம் எந்த உண்மையை வெளியே கொண்டு வரப் போகிறதோ? என்றுதான் தெரியவில்லை. 
    சரத்குமார், ராதாரவிக்கு நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இவர்கள் பதவி ஏற்றவுடன், நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையிலும், நடிகர் சங்கத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை சங்கத்தில் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்கள்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சரத்குமார், ராதாரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருகிற 27-ந் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் எங்களை பங்கேற்ற அனு மதிக்கும்படி, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு உத்தரவிடவேண்டும்’ என்று சரத்குமார், ராதாரவி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு நடிகர் சங்கத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவர்கள் இருவரையும் பொதுக்குழுவில் அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    மறைந்த பால முரளி கிருஷ்ணாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    கர்நாடக இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் உள்ள கனகஸ்ரீ நகரில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

    திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், இன்று மாலை அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அவரது வீட்டார் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று மாலை 3 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    இந்த இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் நோக்கி நகர்ந்து 3.50 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்தது. பின்னர், அவரது உடலை மின் மயானத்தில் எரியூட்டினர். பால முரளி கிருஷ்ணாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் விளங்கி வருகிறார். இதுமட்டுமில்லாமல், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலமும் இவர் பிரபலமானார். இவர் சமூக இணையதளங்களான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளத்தில் தான் நடித்து வரும் படங்கள் மற்றும் தன்னுடைய படத்தின் புரோமோஷன்களையும், நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட செய்திகளையும் பதிவிட்டு வந்தார்.

    மேலும், ரசிகர்களுடனும் தனது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டு வந்தார். இவரை சமூக வலைத்தளத்தில் நிறைய பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் வலைத்தளத்தில் இவரது நிகழ்ச்சியை கிண்டல் செய்து பலரும் பலவிதமான முறையில் பதிவிட்டு வந்தனர்.

    இது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. இந்நிலையில், இன்று முதல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்தில் இருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதுவரை, தனக்கு ஆதரவு கொடுத்தவர்கள் நன்றி. மேலும், என்னை காயப்படுத்தியவர்களுக்கும், அவமானப்படுத்தியவர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றுள்ளார்.

    லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த முடிவுக்கு பலர் ஆட்சேபனை தெரிவித்திருந்தாலும், ஒரு சிலர் வரவேற்பும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ தெலுங்கில் 500 திரையரங்குகளில் வெளியாகப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கீழே பார்ப்போம்.
    சிவகார்த்திகேயன்- கீர்த்திசுரேஷ் நடித்த ‘ரெமோ’ கடந்த மாதம் 7-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தை தெலுங்கில் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. கடந்த 1-ந் தேதி ‘ரெமோ’ தெலுங்கு பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.

    பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜூ, தமிழில் இதை தயாரித்த ‘24 ஏ.எம் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ரெமோ’ வை தெலுங்கில் வெளியிடுகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அந்த படத்துக்கும் அனிருத் இசை அமைக்கிறார்.

    இதனால் தெலுங்கு ரசிகர்களிடையே ‘ரெமோ’ படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர தமிழைப் போலவே தெலுங்கு பதிப்புக்கும் பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்துள்ளனர். தெலுங்கில் ‘டப்பிங்’ செய்யப்பட்டுள்ள இது தெலுங்கில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் படமாக இருந்தாலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 500 தியேட்டர்களில் ‘ரிலீஸ்’ ஆக இருக்கிறது. வருகிற 25-ந் தேதி தெலுங்கு ‘ரெமோ’ அங்கு திரைக்கு வருகிறது.
    ×