என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ரூ.84 கோடி மோசடி வழக்கில் படஅதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    ரூ.84 கோடி மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பட அதிபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். திருப்பூரில் தனது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்த போது அவர் சிக்கினார்.

    கைது செய்யப்பட்ட மதன் சென்னை கொண்டு வரப்பட்டு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    பட அதிபர் மதன் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக, ராதாகிருஷ்ணனுக்கு உதவியாக கூடுதல் துணை கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்குமார் ஆகியோரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நியமித்தார். அவர்கள் இருவரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    மோசடி பணத்தை மதன் என்ன செய்தார்? எங்கு முதலீடு செய்தார்? என்பது குறித்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி பணம் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.

    மேலும் சினிமாவில் முதலீடு செய்ததில் ரூ.50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வேந்தர் மூவிஸ் சார்பில் மதன் 7 சினிமா படங்களை தயாரித்துள்ளார். 10 படங்களுக்கு வினியோகஸ்தராகவும் செயல்பட்டுள்ளார். சினிமாவில் அவரது முதலீடுகள் பற்றி அவரது சினிமா உலக நண்பர்களிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

    அதனடிப்படையில் மதனின் நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான சிவா மற்றும் பாலகுரு ஆகியோரை போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்தனர். அதனடிப்படையில் அவர்கள் இருவரும் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் முன்னிலையில் ஆஜரானார்கள்.

    மதனின் சினிமா முதலீடு பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் சினிமா பிரமுகர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன். எனது ரசிகர்களும், தொண்டர்களும் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
    சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின் படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

    தற்காலிக நீக்கம் செய்திருப்பதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நீக்கம் என்று கூறுவது சட்டத்திற்கு உட்பட்டதல்ல.

    என்னை இன்று தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கும் இயக்கத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி.

    அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதி மன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம்.

    எனவே எனது அன்புக்கினிய ரசிகர்களும், தொண்டர்களும் எந்த ஒரு பதற்றமும் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

    சரத்குமார் மனைவியும், நடிகையுமான ராதிகா இந்த முடிவை எதிர்த்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று(நேற்று) நடந்தது பொதுக்குழுவே அல்ல. இது(நிரந்தர நீக்கம்) சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளார்.
    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.
    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:-

    "அதுவரையில் நான் இசையமைத்த படங்களில் கூட பாடல் உருவாகும் சந்தர்ப்பங்களில் கங்கை அமரன் பற்றிய நினைவே வரவில்லை. இத்தனைக்கும் எல்லா கம்போசிங்கின்போதும், ரெக்கார்டிங்கிலும் அவன் கூடவே இருந்தான். அவனை என்னோடு இருக்கும் ஒருவனாகத்தான் எண்ணினேனே தவிர, அவனுக்கு பாடல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கவே வாய்ப்பில்லாமல் போயிற்று.

    ஆனால், பாரதி அப்படியில்லை. உடனிருப்பவர்களை விட்டுவிடாது, அவரவர் திறமைக்கேற்ப அவர்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமருக்கு பாட்டெழுத அவர் கொடுத்த வாய்ப்பு.

    அமரும் டியுனைக் கேட்டுவிட்டு "செந்தூரப்பூவே'' பாடலை எழுதினான். பாடுவதற்கு, டியுனோடு நன்றாக இருந்தது.

    "செந்தூரப்பூவே'' பாடலை எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது.

    செந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்? அப்படியொரு பூ இருக்கிறதா?

    இப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம். அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான்.

    "சரி சரி! அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம் என்று `செந்தூரப்பூ' சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம். இந்த வகையில் கங்கை அமரனை திரைப்பட பாடலாசிரியர் ஆக்கிய வகையில், அவன் ஜென்ம ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தவேண்டியது பாரதிக்குத்தானே தவிர, எனக்கல்ல.

    படம் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்கும் நிறைவு பெற்று, பின்னணி இசை சேர்ப்புக்கு வந்தது.

    படத்தைப் பார்த்தேன்.

    `அடடே! பாரதிக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருக்கிறானா?' என்று பிரமித்துப் போனேன்.

    அவர் கூடவேதான் இருந்தோம்; ஒன்றாகத்தான் வளர்ந்தோம். ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருக்கிறாரே என்று வியந்து போனேன்.

    இந்தப்படம் `ரெயான்ஸ் டாட்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கமல் உள்பட பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அது, பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்த மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வடிக்கப்பட்ட கற்பனைக் கதைதான். அங்கே கூட அது உண்மையாக நடந்த கதை இல்லை. அதோடு ஆங்கிலப் படத்தின் தழுவலும் இல்லை.

    இந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப்படம் தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியது தான் என்ற முடிவை எடுக்க வைத்தது.

    இந்தப் படத்தில் இருந்துதான் பின்னணி இசையைப் பற்றிய எனது அணுகுமுறையே முற்றிலும் மாறியது. இது அடுத்த சாதாரண படங்களிலும்கூட, வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையை கொடுத்துப் பார்க்க வித்திட்டது என்றே சொல்ல வேண்டும்.

    16 வயதினிலே படத்தில் பார்த்தீர்களானால் ஒரு காட்சியில் கமல் அங்கும் இங்குமாக போய்ப் பேசுவார்.

    கேமரா டிராலி கமலுடனே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமும், வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமும் போகும். இதற்கு எந்த இசையும் போடவில்லை.

    அந்த ரீலுக்கு மற்ற இடங்களில் இசையமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது.

    இசையில் யாரும் மாற்றம் செய்யச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. தாறுமாறாக கோபம் வரும். ஒரு காட்சியில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த அமர், "அண்ணா அந்த இடத்துல கொஞ்சம் இப்படி இருந்தா, அதாவது அடுத்த ஷாட்டில் மியுசிக்கை `ஸ்டார்ட்' பண்ணினா...'' என்று சொல்ல வந்தான்.

    பதிலுக்கு நான், "என்ன... என்ன? என்னடா எந்த இடத்துல?'' என்று வேகமாய் கேட்க, என் கேள்வியின் தோரணை அவனை கொஞ்சம் தயங்க வைத்துவிட்டது.

    அமர் தயங்கியபடி "இல்லே! இப்ப ஸ்டார்ட் பண்ணின ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டில்...'' என்று நிறுத்த...

    அவன் சொன்னது நல்ல ஐடியாவாகப்பட்டது.

    "இது உன் ஐடியாவா?''

    "இல்ல... பாரதியுடையது!''

    திரும்பிப் பார்த்தேன். என்ஜினீயர் ரூமிற்குப் போகும் கதவருகில் பாரதி நின்றிருந்தார். நான் பாரதியிடம், "ஏன்யா! ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன?'' என்று கேட்டேன்.

    "ஒங்கிட்டயா? நானா? சொன்னா சும்மா விட்டுருவியாக்கும்? உனக்கு என்னய்யா மியுசிக் பற்றி தெரியும் என்று இவ்வளவு பேருக்கு முன்னால் கேட்டால் நான் என்ன பண்ணுவேன்! மானம் போயிடாது!'' என்று சொன்னார், பாரதி.

    நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    தென் இந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் கூடியது. நடிகர் சங்க வளாகத்தில் தொடங்கிய இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    அப்போது ஏற்கனவே தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக நீக்கம் செய்ய பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த ராதிகா சரத்குமார், ‘‘சட்டப்படி இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது’’ என்றார்.

    பின்னர் விஷால் பேட்டி அளிக்கையில் பொதுக்குழு கூட்டம்  சட்டப்படி தான்  நடைபெற்றது என்று கூறினார்.
    “சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார்.
    ஐதராபாத்:

    “சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார்.

    நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

    “ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவ வேண்டும். சமூக சேவைகளில் நிறைய பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் அந்த பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் எல்லோருமே சம்பாதிக்கிறார்கள். சிலருக்கு லட்சங்களிலும், இன்னும் சிலருக்கு கோடிகளிலும் வருமானம் வருகிறது.

    சம்பாதிக்கும் தொகை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைப்பது சுயநலம். அந்த பணத்துக்கு மதிப்போ மரியாதையோ கிடையாது. அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பதில்தான் பொது நலமும் சந்தோஷமும் இருக்கிறது. சமூகத்தில் நிறைய மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை தூக்கி விட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    1 கோடி ரூபாய் சம்பாதித்தால் அனைத்தையும் தானே சாப்பிட வேண்டும் என்று சுயநலமாக சிந்திக்காமல் ஏழைகளுக்கும் கொடுத்து உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் தன்னிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு உயரும். சமூக சேவைகள் செய்யும் போது கிடைக்கும் திருப்தியே தனி. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

    ஏழைகள் பசியை தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. சமூக சேவைகளில்தான் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. உதவிகள் செய்யும்போதுதான் நம்மீதே நமக்கு அளவு கடந்த மரியாதை ஏற்படுகிறது. இந்த விஷயத்தை நான் தெரிந்து வைத்து இருப்பதால்தான் சமூக சேவைகளில் ஆர்வமாக ஈடுபடுகிறேன்.”

    இவ்வாறு சமந்தா கூறினார். 
    கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை என்று நடிகை மீரா ஜாஸ்மின் கூறி உள்ளார்.
    திருவனந்தபுரம்:

    பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‘பத்து கல்பனாக்கள்’ என்ற மலையாள படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்து உள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக இருப்பதையொட்டி கேரள மாநிலம், கொச்சி நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த மீரா ஜாஸ்மின், மேற்கண்டவாறு கூறினார்.

    கற்பழிப்பு குற்றங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    பாலியல்ரீதியாக பெண்களை தாக்குபவர்களுக்கு வலிமிகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதைப்போன்ற நபர்களுக்கு ஆண்மைத்தன்மையை நீக்குவது ஒன்றுதான் சரியான வழியாக இருக்க முடியும்.

    அப்படி தண்டிக்கப்பட்ட பின்னர், தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபெண்ணை தொடுவதற்கான தைரியம் அவர்களுக்கு வராது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தப் பேட்டியின்போது அவருடன் நடிகர் அனூப் மேனன், பெரும்பாவூர் என்ற இடத்தில் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் ஆகியோர் உடனிருந்தனர்.
    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.
    "16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில் தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன்.

    நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு எழுதிட்டு வரலாம்'' என்று புறப்பட்டு நேராக வந்து விட்டார்.

    பாடல் வரவேண்டிய இடத்துக்கான காட்சியை கவிஞரிடம் பாரதி விவரித்து சொன்னார். உடனே என்னைப் பார்த்த கவிஞர் "என்ன டியுன்?'' என்று கேட்டார்.

    நான் பக்கவாத்தியங்களோடு அந்த மெட்டை பாடிக்காட்டினேன். பாரதி, அரைகுறை மனதுடன் "ஓகே'' செய்த மெட்டு அது.

    "16 வயதினிலே'' கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதை மனதில் கொண்ட கவிஞர், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சின்னக்கா'' என்று எழுதினார்.

    இரண்டாவது பாடல், மயிலிடம் சப்பாணி பாடுவதுபோல் வருகிறது. சந்தைக்குப் போகும் சப்பாணியும் மயிலும் நடந்து போகும் வழியில் பாடும் பாட்டு. மயில் வருத்தத்தில் இருக்க அவளை சப்பாணி சந்தோஷப்படுத்த முயற்சிக்கிற மாதிரியான பாட்டு.

    இதில் சப்பாணி (கமலஹாசன்) பாடிக்கொண்டே போக, இடையில் ஒரு ஹம்மிங்கோடு ஒரு பெண் குரல் ஒன்று ஒலிக்கிறது.

    மயிலும் சப்பாணியும் எங்கிருந்து வருகிறது அந்தப் பெண் குரல் என்று தேடித்தேடி பார்க்கிறார்கள். கடைசியில் ஒரு கிழவி பாடுவதாக காட்டப்படும் என்று பாரதி, கவிஞரிடம் விளக்கினார்.

    நானும் பாரதியும் ஏற்கனவே இந்தப் பாட்டி பற்றி யோசித்து வைத்திருந்தோம். "என்ன பாட்டி! மஞ்சக் குளிச்சிருக்கியே!'' என்று கேட்டு, "பழைய நினைப்புடா பேராண்டி'' என்று சொல்லும் கிராமத்துப் பேச்சை நினைவில் வைத்திருந்தோம். அதாவது, இப்படி கிழவி சொல்கிற மாதிரி முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதை கவிஞரிடம் சொல்லவில்லை.

    கவிஞரோ பாடலை "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' என்று தொடங்குவதாக அமைத்து கிழவி காட்டப்படும்போது "பழைய நினைப்புடா பேராண்டி... பழைய நினைப்புடா!'' என்று அவள் சொல்வது போல் முடித்தார்.

    நாங்கள் சொல்லாமலே, கவிஞர் எங்கள் மனதில் இருந்ததை எழுதியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கவிஞருக்கு இருந்த சரஸ்வதி கடாட்சம் அது.

    மறுநாள் பூஜை.

    "செவ்வந்தி பூ முடிச்ச'' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைக்கலாம் என்று முடிவு செய்து, ரிகர்சலுக்கு அழைத்தோம். பாலு வந்தார். ரிகர்சல் எல்லாம் முடிந்து கிளம்பும்போது பாலுவை தனியாக அழைத்தேன். "பாலு ராத்திரியெல்லாம் வெளியே சுத்தறதை விட்டுடு. நண்பர்களுக்காக வெளியே போனேன். விடிய விடிய ஊர் சுத்தினதுல தொண்டை கட்டிக்கிட்டுதுன்னு சொல்லாதே. இல்லேன்னா இந்தப் பாடல் வேறு யாருக்காவது போய்விடும்'' என்று சொன்னேன்.

    பாலுவும் `சரி' என்று சொல்லிப் போனதோடு சரி.

    மறுநாள் காலை 7 மணிக்கு ஏவி.எம்.மில் பாடலுக்கான மியுசிக்கையெல்லாம் கம்போஸ் செய்து விட்டேன். `டிபன் பிரேக்'கை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பூஜை தொடங்கியது.

    ரிகர்சல் தொடங்கி பாடலுக்கான வடிவங்களை தயார் செய்த நிலையில் 11 மணி.

    பாலு அப்போதும் வரவில்லை. ஆளாளுக்கு தேடினோம். 11-30 மணிக்கு பாலு என்னிடம் நேராக வந்து, "டேய்! தொண்டையெல்லாம் கட்டிப் போச்சுடா...'' என்று, கட்டைக்குரலில் விஷயத்தை சொன்னான்.

    "பார்த்தியா? நேத்தே நான் சொன்னேன் இல்லையா? அதையே செஞ்சிட்டு வந்து நிக்கறியே'' என்றேன்.

    என்னிடமும் பாரதியிடமும் `சாரிடா' என்று சொல்லிவிட்டு பாலு கிளம்பிவிட்டான்.

    எல்லாம் ரெடியாகிவிட்டது. ஜானகி கோரஸ் ரிகர்சல் கூட முடிந்து விட்டது.

    பாலுவுக்குப்பதிலாக யாரை பாட வைப்பது? அப்போது  `டிராக்'கை தனியாக ரெக்கார்டு செய்யும் பழக்கம் கிடையாது. மேலும் அது பூஜையின்போது பதிவு செய்யப்படும் பாட்டு. பாடுபவர் இருக்க வேண்டும்.

    யோசித்தேன். என் கண்ணில் பூஜைக்கு வந்த மலேசியா வாசுதேவன் பட்டார்.

    மலேசியா வாசுதேவனை அழைத்தேன். "இந்தப் பாட்டை கத்துக்கோ'' என்று பாடலை சொல்லிக் கொடுத்தேன்.

    அதன்படி வாசுவும் பாட, பாடலை பதிவு செய்தேன்.

    மதிய உணவுக்குப்பிறகு, "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' பாடலை பதிவு செய்ய வேண்டும்.

    இதை சப்பாணி போலவே பாட வைக்க வாசுவை தயார் செய்தேன்.

    ஆனால் வாசுவோ ரிகர்சலில் எல்லாம் சரியாக பாடிவிட்டு, "டேக் போகும்போது மாற்றி பாடிவிட்டார். `பாடத் தெரியாதவன் போல் பாடினால் நமக்கு பாடத்தெரியாது என்று எல்லோரும் நினைத்து விடுவார்களோ' எனப்பயந்து, சாதாரண பின்னணி பாடகர் போல

    பாடிவிட்டார்.இதுவரை வராத பாடலாக இருக்க வேண்டும் என நான் எடுத்த முயற்சியெல்லாம் இப்போது விழலுக்கிறைத்த

    நீராகிவிட்டது.இப்போதும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஒரு அறியாத பட்டிக்காட்டான் பாட்டில் வரும் எளிமைத்தனம் அதில் இருக்காது. விவரம் புரிந்த கிராமத்தான் பாடுவது போல்தான் இருக்கும்.

    இதுபோன்ற இழப்புகள் ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஏராளம்.

    அடுத்த பாடல் ரெக்கார்டிங் செய்யவேண்டிய நேரம் வந்தது.

    மயில் (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மனநிலையில் பாடும் பாட்டு என்று பாரதி சொன்னார்.

    அப்போதெல்லாம் எந்த டைரக்டரும் இசையமைப்பாளரிடம் `இந்தப்பாடல் இதுபோல இருக்கலாம். அல்லது இந்த மாதிரி இருக்கலாம்' என்று அபிப்ராயமோ, ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கிவிட்டு, அத்துடன் விட்டுவிடுவார்கள். இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

    தேவைப்பட்டால் சிறுசிறு மாற்றம் வேண்டுமென்று கேட்பார்கள். அதை அவர்களும் உடனே செய்து விடுவார்கள்.

    அந்தப் பாடல் காட்சிக்கு சில டியுன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டியுனை போட்டு, "பாரதி! இது நன்றாக இருக்கும்'' என்று வற்புறுத்தினேன். அதுதான் "செந்தூரப்பூவே...'' பாடல் மெட்டு. மெட்டு நன்றாக அமைந்துவிட்டதால் மேற்கொண்டு `டியுன்' எதுவும் கம்போஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். அதனால் அந்த டியுன்தான் அந்தக் காட்சிக்கென்று முடிவாகிவிட்டது.

    "இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து பாட்டு எழுதச் சொல்லலாமா?'' என்று பாரதியிடம் கேட்டேன். "புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம்'' என்றார் பாரதி. அதோடு நில்லாமல், "ஏன் அமரனே எழுதட்டுமே'' என்றார்.

    அமர் உள்பட எங்கள் எல்லோருக்குமே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே கவிஞராகத் தெரிந்தாரேயன்றி, வேறு யாரையும் கவிஞராகக் கருத முடியவில்லை. `அமரன் எழுதட்டும்' என்று பாரதி சொன்னதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அமரன் வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை.
    லயோலா கல்லூரியில் வைத்து நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தின் இடம் மாற்றப்பெற்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழு கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ‘லயோலா கல்லூரி’ வளாகத்தில் அமைந்துள்ள பெட்ராம் ஹாலில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வந்தது. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அதே நாளில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழா மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டையுடன் வரும்படி நடிகர் சங்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், திடீரென, லயோலா கல்லூரி தங்கள் வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த அளித்திருந்த அனுமதியை ரத்து செய்தது. இதனை காரணம் காட்டி, காவல்துறையும் அங்கு பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது.

    இதனால் அதிச்சி அடைந்த நடிகர் சங்க நிர்வாகிகள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்த முடிவு செய்தனர்.

    இதுபற்றி நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இன்று மாலை நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    நாளை லயோலா கல்லூரியில் உள்ள பெட்ரம் ஹாலில் வைத்து நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் வைத்து மிகப்பெரிய அளவில் காவல் துறையின் பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.

    இதில் நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடிகர் சங்க பொது குழு கூட்டம் நடைபெறுவது இதுவே முதன் முறை. பொது குழு ஏற்கனவே கூறியது போல் அதே நேரத்தில் நடைபெறவுள்ளது.

    பொது குழு கூட்டம் லயோலா கல்லூரியில் வைத்து நடைபெறாததற்கு போதுமான பாதுகாப்பு இல்லாதது தான் காரணம். மற்றும் இதில் சங்க நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் இருந்து வந்து கலந்து கொள்ளவுள்ளனர். இப்பொதுக்குழுவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆகியவை சிறப்பாக நடைபெறவுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஜூலியன் பிரகாஷ் இயக்கத்தில் சுமார் 300 ஆண்டுக்கு முந்தைய சாயலுடன் எடுக்கப்பட்ட ‘இளமி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
    1715 ஆம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே சுமார் 200 ஆண்டுகளாக குல தெய்வத்தை யார் வைத்திருப்பது என்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. இதில் ஒரு ஊர் தலைவராக ரவி மரியா இருக்கிறார். இவரின் மகள் நாயகி அனுகிருஷ்ணா. இவர்கள் ஊரில் காளையை அடக்குபவர்களுக்குத்தான் பெண் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ரவிமரியாவின் காளையை யாரும் அடக்க முடியாததால் இவரே வெற்றி பெற்று வருகிறார்.

    மற்றொரு ஊரில் நாயகன்கள் யுவனும், அகிலும் வசிக்கிறார்கள். இதில் யுவன் விலங்குகளை வேட்டையாடுவதில் வல்லவர். அகில், காளையை சூழ்ச்சி செய்து தந்திரமாக அடக்குவதில் கில்லாடி. யுவனும் அனுகிருஷ்ணாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ரவிமரியாவின் ஊரில் திருவிழா ஏற்பாடு நடக்கிறது. இரண்டு ஊருக்கும் ஒரே சாமி என்பதால், யுவன், அகில் இருக்கும் கிராமத்திற்கு மரியாதை கொடுக்காததால் கோபம் அடைகிறார்கள். குல தெய்வத்தை தங்களுடைய கிராமத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும், ரவிமரியாவின் காளையை அடக்கி அவரது மகளை திருமணம் செய்யவும் திட்டம் போட்டு சூழ்ச்சி செய்கிறார் அகில்.

    முதலில் கிராம மக்களை ரவிமரியாவிற்கு எதிராக திருப்பி, திருவிழாவிற்கு வைத்திருக்கும் கலசத்தை திருடி கொண்டுவந்து விடுகிறார் அகில். இதனால் கோபத்தோடு கிராம மக்களோடு வரும் ரவிமரியாவிடம் ‘கலசத்தை தரவேண்டும் என்றால், உன் காளையை எங்கள் கிராம மக்கள் அடக்கி விட்டால், குலதெய்வத்தை ஒப்படைப்பதுடன், உன் மகள் அனுகிருஷ்ணாவை திருமணம் செய்து தரவேண்டும்’ என சவால் விடுகிறார்கள். இந்த சவாலை ரவிமரியாவும் ஏற்கிறார். இந்த போட்டியில் குதிக்கும் யுவன், அனுகிருஷ்ணாவை திருமணம் செய்யும் ஆசையில் காளையை அடக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

    இறுதியில், ரவிமரியாவின் காளையை அடக்கியது யார்? யுவனும், அனுகிருஷ்ணாவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யுவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 18ம் நூற்றாண்டு பின்னணியில் கதை நகர்வதால், அந்த காலத்து இளைஞன் தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அனுகிருஷ்ணாவுடன் காதல் காட்சி, காளையை அடக்க பயிற்சி பெறுவது என நடிப்பில் திறமையை காண்பித்திருக்கிறார்.

    மற்றொரு நாயகனாக வரும் அகில், கம்பீரமான வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார் அகில். நாயகியாக வரும் அனுகிருஷ்ணாவின் நடிப்பு அபாரம். யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஊர் தலைவராக வரும் ரவிமரியா, தளபதியாக வரும் கிஷோர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

    ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படத்தில் ஜல்லிக்கட்டின் வரலாற்றையும், அதன் பெருமையையும் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ். காளையை அடக்குவதை தத்ரூபமாக காட்சிப்படுத்த முடியாததால், கிராபிக்ஸ் மூலம் அக்காட்சிகளை அழகாக சேர்த்திருக்கிறார். எந்த கதாபாத்திரங்களையும் குறை சொல்ல முடியாதளவிற்கு வேலை வாங்கியிருக்கிறார். ஜல்லிக்கட்டு மையமாக இருக்கும் படத்தில் காதலை புகுத்தி அதில் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் வைத்திருப்பது சிறப்பு.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் அனைத்து கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். யுகாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘இளமி’ இளமை இனிமை.
    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டது குறித்து சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் பதிவு ரத்து குறித்து விளக்க அளிக்கை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைப் பற்றி முரண்பாடான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய காலத்தில் இ-பார்ம்களை பதிவு செய்யாததால் சங்கப்பதிவு ரத்தாகியுள்ளது. இதைப்பற்றி தகவல் தெரிந்தவுடன் எங்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்கே.செல்வமணி, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்.

    அப்போது இ-பார்ம்களை புதுப்பிக்காத நினைவூட்டல் கடிதங்களும், இ-பார்ம்களை புதுப்பிக்கவில்லை என்ற சோகாஸ் நோட்டீசும் எங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்கள். மேலும், அந்த முகவரியில் அதுபோல் ஒரு சங்கமே இல்லை என கடிதங்கள் திரும்பி வந்து விட்டதால் சங்கப்பதிவை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில், அந்த கடிதங்கள் அனைத்தும் எங்கள் சங்கம் வடபழனியில் இயங்கி வந்த பழைய வாடகை அலுவலக விலாசத்திற்கு சென்றுள்ளதென தெரியவந்தது. எங்கள் சங்க அலுவலகம் புதிய விலாசத்திற்கு மாறியபின்பு 2013-ல் ஊதிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிலாளர் நல ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அத்துடன் 2013 -ஆம் ஆண்டு ஊதிய உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கான அழைப்பு கடிதங்கள் அனைத்தும் தற்போது நாங்கள் இயங்கிவரும் வளசரவாக்கம் அந்தோணி சாலையில் உள்ள புதிய அலுவலக விலாசத்திற்கு வந்துள்ளன.

    ஆனால் தற்போது 2016-ல் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதங்கள் நாங்கள் வடபழனியில் இயங்கி வந்த பழைய சங்க அலுவலக விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தவறினை சுட்டிக்காட்டி நினைவூட்டல் கடிதம் மற்றும் சோகாஸ் நோட்டீஸ் இதுவரை எங்கள் நிர்வாகத்திற்கு வரவில்லை என தெளிவுப்படுத்தினார் பொதுச்செயலாளர்.

    24.11.2016 அன்று எங்களது சங்க செயற்குழு கூடி நடந்த தவறுகளை விளக்கமாக எழுதி எங்கள் சங்கத்தின் “ரத்து செய்த ஆணையை” ரத்து செய்திட வேண்டும் என வேண்டுகோள் கடிதம் தொழிலாளார் நல ஆணைய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எங்களது வேண்டுகோளை பரிசீலித்து நல்ல முடிவை தருவார்கள் என நம்புகிறோம்.

    தற்போது எங்கள் சங்கத்தில் சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தினமும் 100 நபர்கள் உறுப்பினர்களாக வேண்டும் என விண்ணப்பிக்க வருகிறார்கள். தற்போது, டிஜிட்டல் கேமிராக்கள் வந்து விட்ட நிலையில் ஏராளமானவர்கள் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களாக வர ஆரம்பித்துள்ளார்கள்.

    புதிதாக சேர வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அவர்களின் தரத்தை ஒழுங்குப்படுத்தவும், எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழு சில விதிமுறைகளை நிறைவேற்றியது. சங்க பொதுக்குழுவின் விதிமுறைகளால் சங்கத்தில் உறுப்பினராக சேர முடியாத சிலர், அவதூறாக சேற்றை வாரி எங்கள் மீது இறைக்கிறார்கள். எங்கள் சங்கத்திற்கு பங்கம் உண்டாக்கவும் முயற்சிக்கிறார்கள்.

    பொதுவாக நிர்வாக காரணங்களுக்காக சங்கப்பதிவு ரத்து ஆவது பல்வேறு சங்கங்களில் பலமுறை நிகழ்ந்துள்ளது. அவ்வாறு ரத்தான சங்கங்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இதே காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தமிழ் திரைப்படத்துறையில் அனைத்து சங்கங்களையும் விட சீரிய சங்கமாக மாண்புடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அவ்வாறே சீறும் சிறப்புமாக இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
    நானும் திலீப்பும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். அவர்கள் விருப்பம் இப்போது நிறைவேறிவிட்டது என்று காவ்யா மாதவன் போட்டியளித்துள்ளார்.
    மலையாள நடிகர் திலீப் - காவ்யா மாதவன் இருவரும் நேற்று மறுமணம் செய்து கொண்டார்கள்.

    ஏற்கனவே, இவர்கள் நெருக்கமாக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்வதுபோல நேற்று இந்த ஜோடி திடீர் திருமணம் செய்து கொண்டது.

    இதுபற்றி காவ்யா மாதவன் செய்தியாளர்களிடம் கூறியது....

    “என்னையும் திலீப்பையும் பற்றி கிசுகிசுப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். நானும் திலீப்பும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மலையாள ரசிகர்கள் விரும்பினார்கள். அவர்கள் விருப்பம் இப்போது நிறைவேறிவிட்டது”.

    திலீப் இதுபற்றி கூறும்போது, “ என் வாழ்வில் நடந்த சில பிரச்சினைகளுக்கு காவ்யா மாதவன் பொறுப்பு அல்ல” என்றார்.

    திலீப்-காவ்யா மாதவன் இருவரும் 18 படங்களுக்கு மேல் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்போது வித்தியாசமான சூழ்நிலையில் இருவரும் திருமண வாழ்க்கையில் ஜோடி சேர்த்திருக்கிறார்கள்.

    வழக்கமான சினிமா போல அல்லாமல் இருவரும் இறுதி வரை இணைந்து வாழ வேண்டும் என்பதே இவர்களுடைய ரசிகர்களின் விருப்பம். அதுவும் நிறைவேறினால் ரசிகர்கள் வாழ்த்துவார்கள்.
    தனுஷ் என் மகன்தான் என்று அனைவருக்கும் தெரியும் என்று டைரக்டர் கஸ்தூரிராஜா பேட்டி அளித்துள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    மதுரை மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி மீனாட்சி.

    இவர்கள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், “பிரபல நடிகர் தனுஷ் 7.11.1985-ல் எங்கள் மகனாக பிறந்தார். கலைச்செல்வன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தோம்.

    எங்கள் மகன் ஒன்று முதல் 8-வது வகுப்பு வரை மேலூர் தனியார் பள்ளியிலும், 9, 10-வது வகுப்புகளை மேலூர் அரசு பள்ளியிலும் படித்தான். 11-வது வகுப்பை திருப்பத்தூர் அரசு பள்ளியில் படித்தான். பாதியிலேயே படிப்பை நிறுத்திய எங்கள் மகன் சென்னை சென்று இயக்குனர் கஸ்தூரிராஜாவிடம் பணிபுரிந்தான்.

    பின்னர் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகர் ஆனார். இதையடுத்து எங்கள் மகனை பார்க்க சென்னை சென்றோம். ஆனால் கஸ்தூரிராஜா அனுமதிக்கவில்லை. எனவே மகன் தனுசுடன் எங்களை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்த வழக்கு வருகிற 12.1.2017 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனுஷ் அப்பா திரைப்பட டைரக்டர் கஸ்தூரிராஜாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இதுபோன்ற ஒரு செய்தியை கேள்விப்படுவதே எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது பதில் சொல்ல தகுதியான வி‌ஷயம் அல்ல.

    என்னை எனது நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் 40 வருடங்களாக தெரியும். சிறு வயதில் இருந்தே எனது மகன் தனுசை எல்லோருக்கும் நன்றாக தெரியும். அவருடன் இங்கு படித்த நண்பர்கள் இருக்கிறார்கள்.

    மக்களுக்கு பயன்பட வேண்டிய நீதி துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய்யான வழக்குகளால் வீணாகிறதே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.

    நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான பல பிரச்சினைகளை நீதிமன்றம் தீர்க்க வேண்டியது இருக்கிறது. அவற்றை செய்ய விடாமல் இது போன்ற வழக்குகளுக்கு நேரம் வீணடிக்கப்படுகிறதே என்பது எனது கவலை. நீதித்துறையை நான் மதிக்கிறேன். வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.

    இவ்வாறு கஸ்தூரிராஜா கூறினார்.
    ×