என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    2.0 படப்பிடிப்பில் ரஜினிகாந்தின் ஆத்மார்த்தமான பேச்சும் பணிவும் என்னை வியக்க வைத்தது என்று நடிகை எமிஜாக்சன் கூறியுள்ளார்.
    மதராச பட்டனம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார்.

    இந்தி நடிகர் சல்மான்கானுடன் எமிஜாக்சனுக்கு நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளன. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம், சல்மான்கான் கிசுகிசுக்கள் பற்றி மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற எமிஜாக்சனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    “ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். அந்த படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சியை சமீபத்தில் மும்பையில் நடத்தி முடித்தனர். அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால் நானும் ரஜினிகாந்தும் ‘2.0’ படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம்.

    அப்போது அவரிடம் ‘2.0’ படவிழாவில் கலந்து கொள்ளப்போவதை நினைத்து நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘எமி நான் நிஜமாகவே அந்த விழாவை நினைத்து மிகவும் பதற்றமாக இருக்கிறேன். ஊடகங்கள் கவனிக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளும்போதெல்லாம் இந்த பதற்றம் எனக்கு வந்து விடுகிறது.’ என்றார். நான் அவரிடம், நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். எனவே அப்படி பதற்றப்படக்கூடாது என்றேன்.

    அதற்கு அவர் அது உண்மைதான். ஆனாலும் எனக்கு பதற்றம் வருகிறது என்றார். இதன்மூலம் ரஜினிகாந்த் எந்த அளவுக்கு பணிவான மனிதர் என்பதை அறிய முடியும். எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக பழகுவார். அவருடைய பணிவான நடவடிக்கைகளை பார்த்து நான் வியந்து போகிறேன்.

    சல்மான்கானை எல்லோருக்குமே பிடிக்கும். நான் யாரையும் காதலிக்கவில்லை. இந்தியில் கட்டுக்கோப்பாக உடலை வைத்துள்ள நடிகர் யார் என்று கேட்டால் அக்‌ஷய்குமார் என்பேன். அவர் உடலை நன்றாக வைத்துக்கொள்ள கடும் உடற்பயிற்சிகள் செய்கிறார்.”

    இவ்வாறு எமிஜாக்சன் கூறினார்.
    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.
    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:-

    "அதுவரையில் நான் இசையமைத்த படங்களில்கூட பாடல் உருவாகும் சந்தர்ப்பங்களில் கங்கை அமரன் பற்றிய நினைவே வரவில்லை. இத்தனைக்கும் எல்லா கம்போசிங்கின்போதும், ரெக்கார்டிங்கிலும் அவன் கூடவே இருந்தான். அவனை என்னோடு இருக்கும் ஒருவனாகத்தான் எண்ணினேனே தவிர, அவனுக்கு பாடல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கவே வாய்ப்பில்லாமல் போயிற்று.

    ஆனால், பாரதி அப்படியில்லை. உடனிருப்பவர்களை விட்டுவிடாது, அவரவர் திறமைக்கேற்ப அவர்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமருக்கு பாட்டெழுத அவர் கொடுத்த வாய்ப்பு.

    அமரும் டிïனைக் கேட்டுவிட்டு "செந்தூரப்பூவே'' பாடலை எழுதினான். பாடுவதற்கு, டிïனோடு நன்றாக இருந்தது.

    "செந்தூரப்பூவே'' பாடலை எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது.

    செந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்? அப்படியொரு பூ இருக்கிறதா?

    இப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம். அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான்.

    "சரி சரி! அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம் என்று `செந்தூரப்பூ' சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம். இந்த வகையில் கங்கை அமரனை திரைப்பட பாடலாசிரியர் ஆக்கிய வகையில், அவன் ஜென்ம ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தவேண்டியது பாரதிக்குத்தானே தவிர, எனக்கல்ல.

    படம் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்கும் நிறைவு பெற்று, பின்னணி இசை சேர்ப்புக்கு வந்தது.

    `அடடே! பாரதிக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருக்கிறானா?' என்று பிரமித்துப் போனேன்.

    அவர் கூடவேதான் இருந்தோம்; ஒன்றாகத்தான் வளர்ந்தோம். ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருக்கிறாரே என்று வியந்து போனேன்.

    இந்தப்படம் `ரெயான்ஸ் டாட்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கமல் உள்பட பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அது, பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்த மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வடிக்கப்பட்ட கற்பனைக் கதைதான். அங்கே கூட அது உண்மையாக நடந்த கதை இல்லை. அதோடு ஆங்கிலப் படத்தின் தழுவலும் இல்லை.

    இந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப்படம்தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்க வைத்தது.

    இந்தப் படத்தில் இருந்துதான் பின்னணி இசையைப் பற்றிய எனது அணுகுமுறையே முற்றிலும் மாறியது. இது அடுத்த சாதாரண படங்களிலும்கூட, வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையை கொடுத்துப் பார்க்க வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.

    16 வயதினிலே படத்தில் பார்த்தீர்களானால் ஒரு காட்சியில் கமல் அங்கும் இங்குமாக போய்ப் பேசுவார்.

    கேமரா டிராலி கமலுடனே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமும், வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமும் போகும். இதற்கு எந்த இசையும் போடவில்லை.

    அந்த ரீலுக்கு மற்ற இடங்களில் இசையமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது.

    இசையில் யாரும் மாற்றம் செய்யச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. தாறுமாறாக கோபம் வரும். ஒரு காட்சியில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த அமர், "அண்ணா அந்த இடத்துல கொஞ்சம் இப்படி இருந்தா, அதாவது அடுத்த ஷாட்டில் மிïசிக்கை `ஸ்டார்ட்' பண்ணினா...'' என்று சொல்ல வந்தான்.

    பதிலுக்கு நான், "என்ன... என்ன? என்னடா எந்த இடத்துல?'' என்று வேகமாய் கேட்க, என் கேள்வியின் தோரணை அவனை கொஞ்சம் தயங்க வைத்துவிட்டது.

    அமர் தயங்கியபடி "இல்லே! இப்ப ஸ்டார்ட் பண்ணின ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டில்...'' என்று நிறுத்த...

    அவன் சொன்னது நல்ல ஐடியாவாகப்பட்டது.

    "இது உன் ஐடியாவா?''

    "இல்ல... பாரதியுடையது!''

    திரும்பிப் பார்த்தேன். என்ஜினீயர் ரூமிற்குப் போகும் கதவருகில் பாரதி நின்றிருந்தார். நான் பாரதியிடம், "ஏன்யா! ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன?'' என்று கேட்டேன்.

    "ஒங்கிட்டயா? நானா? சொன்னா சும்மா விட்டுருவியாக்கும்? உனக்கு என்னய்யா மிïசிக் பற்றி தெரியும் என்று இவ்வளவு பேருக்கு முன்னால் கேட்டால் நான் என்ன பண்ணுவேன்! மானம் போயிடாது!'' என்று சொன்னார், பாரதி.

    புதுமுக நடிகர் சஞ்சய், அருந்ததி நாயர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஹீரோ சஞ்சய், தனது நண்பன் முருகதாஸ் மூலமாக வட்டிக்கு பணம் கொடுக்கும் சங்கிலியிடம் சென்று ஐந்து லட்சம் ரூபாய் கடனாக வாங்குகிறார். விரைவில், வங்கியில் கேட்டிருக்கும் லோன் கைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், ஐந்து லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்துவிடுகிறார்.

    வங்கியிலிருந்து லோன் பணம் வரும் என்று பார்த்தால், லோன் அப்ளிகேஷனை அவரது அப்பா கிழித்துவிடுகிறார். இதனால், வங்கியிலிருந்து பணம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கிடையே வாங்கிய பணத்துக்கு வட்டி கேட்டு வரும் சங்கிலி, நாயகனுக்கு கியாரண்டி கொடுத்த முருகதாஸை அடித்து துவம்சம் செய்கிறார்.

    பணப்பிரச்சினைக்கு என்ன செய்யலாம் என்று நாயகன் சஞ்சய் முழித்துக் கொண்டிருக்கும் நிலையில், சினிமா எடுக்கவரும் தம்பி ராமையா ரூபத்தில் அவருக்கு உதவி வருகிறது. தன் படத்தில் சஞ்சய் ஆறு நாள் நடித்துக் கொடுத்தால் ஆறு லட்சம் தருவதாக கூறும் தம்பிராமையாவின் பேச்சை கேட்டு அதில் நடித்தும் கொடுக்கிறார். அப்போது, வழியில் பார்க்கும் அருந்ததி நாயரை இவர்கள் ஹீரோயினாக முடிவு செய்து, அவருக்கு தெரியாமலேயே அவரை வைத்து படம் எடுத்து முடிக்கிறார்கள்.

    படம் முடிந்ததும் தம்பிராமையா நாயகனுக்கு 6 லட்ச ரூபாய்க்கான காசோலையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்று விடுகிறார். அந்த காசோலையை சங்கிலியிடம் கொடுத்துவிட்டு வரும் சஞ்சய்க்கு வீட்டில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அருந்ததி நாயரின் குடும்பம், சஞ்சய்யை தேடி அவரது வீட்டுக்கு வந்து நிற்கிறது.

    அருந்ததி நாயரும், சஞ்சய்யும் காதலிப்பதுபோல் தம்பிராமையா எடுத்த படம் யூடியூப்பில் வெளியானதால் அதைப்பார்த்து அருந்ததி நாயரை காணவில்லை என்று கூறி, அவரை எங்கு வைத்திருக்கிறாய் என்று சஞ்சயிடம் கேட்கிறார்கள். சஞ்சய் நடந்தவற்றையெல்லாம் சொல்கிறார். ஆனால், அவர்களோ நம்ப மறுக்கின்றனர். இந்நிலையில், தம்பி ராமையா கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வருகிறது.

    இறுதியில், அருந்ததி நாயர் எங்கு சென்றார்? அவள் தன்னுடைய காதலி இல்லை என்பதை சஞ்சய் எப்படி நிரூபித்தார்? சங்கிலியிடமிருந்து நாயகன் தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

    படத்தின் ஹீரோவான சஞ்சய் மிகவும் கஷ்டப்பட்டு, ஏனோ, தானோவென்று நடித்திருக்கிறார். புதுமுகம் என்பதால் அவரிடம் இருந்து பெரிதாக நடிப்பு வரவில்லை. அருந்ததி நாயர் அழகாக இருக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பிச்சைக்காரர் முதற்கொண்டு பஸ் டிக்கெட் வரை எல்லாவற்றுக்கும் செக் எழுதிக் கொடுக்கும் மோசடிக்காரர் வேடத்தில் தம்பி ராமையா அழகாக பளிச்சிடுகிறார். வழக்கம்போல் தனது அனுபவ நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சங்கிலியின் கையாளாக வரும் யோகி பாபு கொடுக்கும் சின்ன சின்ன கவுண்டர் வசனங்கள்கூட பலமாக சிரிக்க வைக்கிறது.

    நாயகனின் நண்பனாக வரும் முருகதாஸ், மயில்சாமி, ரோபோ ஷங்கர் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விஜய் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்கியிருக்கும் இந்த படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்றே தெரியவில்லை. படத்தின் நிறைய காமெடியன்களை இறக்கிவிட்டால் போதும், கதையில் எதுவும் வேண்டாம் என்று இருந்துவிட்டார் போலும். படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் சம்பந்தப்படுத்துவதற்காக ஒரு காட்சியை வைத்து முடித்திருக்கிறார்கள். நிறைய காட்சிகள் திணிக்கப்பட்டதுபோன்றே தெரிகிறது

    எஸ்.கே.மைக்கேல் தனது ஒளிப்பதிவில் படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். . தேவராஜனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சில நேரம் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

    மொத்தத்தில் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ சோகம்.
    சாமி நடிகர் ஒருவர் சினிமாவில் நடிப்பதற்கு சில நிபந்தனைகளை விதிக்கிறாராம். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து தற்போது வில்லனாக மாறியுள்ள சாமி நடிகர், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தனக்கு மீண்டும் வாய்ப்புகள் அதிகம் தேடிவர ஆரம்பித்துள்ளதால், சாமி நடிகர் தற்போது தன்னிடம் கதை சொல்ல வருபவர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறாராம்.

    அதுஎன்னவென்றால், தன்னிடம் கதை சொல்பவர்கள் அந்த கதையை ஒரே வரியில் சொல்லக்கூடாதாம். வசனம் எப்படியிருக்கிறது, திரைக்கதை எப்படி அமைக்கப் போகிறோம் மற்றும் முழு கதையும் அவரிடம் சொல்லவேண்டுமாம். அப்படி சொன்ன கதை அவருக்கு பிடித்தால்தான் அதில் நடிக்கவே சம்மதிப்பாராம்.

    இதில் ஏதாவது ஒன்று சரியில்லை என்றால் உடனே வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவிடுவாராம். இவருடைய இந்த நிபந்தனையால் இவருக்கு கதை சொல்லவே பெரும்பாலான இயக்குனர்கள் மிகவும் தயங்குகிறார்களாம். நடிகரும் கிடைத்த வரைக்கும் வந்தால் போதும் என்பதுபோல் தன்னுடைய நிபந்தனையில் எந்த மாற்றமும் செய்து கொள்ளவில்லையாம்.
    ரஜினியும், விஜய்யும் திடீரென நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்புக்கு என்ன காரணம் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

    பரதன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் “பைரவா”. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். “பைரவா” படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு சென்னை எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடந்து முடிந்தது.

    படப்பிடிப்பு நிறைவு நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியின் ‘2.0’ படப் பிடிப்பும் இதே இடத்தில் நேற்று நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

    இதை அறிந்ததும் விஜய் ‘2.0’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று ரஜினியை சந்தித்தார். இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். ரஜினி ‘2.0’ படத்தில் வரும் ‘கெட்-அப்’பில் இருந்தார். எனவே, புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.

    விஜய் ஏற்கனவே ரஜினியின் “அண்ணாமலை” படத்தை ‘ரீமேக்’ செய்யப் போவதாகவும், அதில் விஜய் நடிக்க விரும்புவதாகவும் முன்பு தகவல்கள் வெளியாகின. அது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது. இப்போது ரஜினியை விஜய் திடீர் என்று சந்தித்து பேசி இருப்பதால் “அண்ணாமலை” ரீமேக் அனுமதி தொடர்பாக அவர் பேசி இருக்கலாம் என்று மீண்டும் ரசிகர்களி டம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ரெமோ’ படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வசூல் மழையை பொழிந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த படக்குழுவினர் கூறிய கருத்தை கீழே பார்ப்போம்.
    தெலுங்கு திரையுலகிற்கு சிவகார்த்திகேயனை முதல் முதலாக அறிமுகபடுத்தி இருக்கும் திரைப்படம் ‘ரெமோ’. இந்த திரைப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா வழங்கி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிட்டு இருக்கிறார் தில் ராஜு.

    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் ‘ரெமோ’, கடந்த நவம்பர் 25-ஆம் தேதி அன்று தெலுங்கில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை தெலுங்கு ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்று வருவது மட்டுமில்லாமல், தரமான விமர்சனங்களையும் ‘ரெமோ’ பெற்று வருகிறது.

    இந்த படத்தை வெளியிட்ட தில்ராஜு கூறும்போது,  ‘ரெமோ’ திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் அமோக வசூல் செய்துள்ளது. இன்னும் நிலையான வசூல் பயணத்தில் தான் ‘ரெமோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

    தற்போது நிலவி வரும் 500, 1000 பிரச்சனையில், வர்த்தக ரீதியாக நல்லதொரு வெற்றியை ரெமோ தழுவி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. தெலுங்கில் அறிமுகமாகி இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அனைத்து தெலுங்கு ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    ஆர்.டி.ராஜா கூறும்போது, ‘ரெமோ’ தமிழிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் வலுவான கதைக்களம். சிறந்த கதையம்சம், புத்தம் புதிய விளம்பர ஏற்பாடுகள். இவை இரண்டும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று இருக்கிறது. நிச்சயமாக அவர்களின் ரசனைகளை பூர்த்தி செய்து, அவர்கள் விரும்பக்கூடிய ஒரு திரைப்படமாக ‘ரெமோ’ இருக்கும் என்று நாங்கள் எண்ணினோம்.

    ஆனால் நினைத்ததைவிட மிக பெரிய வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் எங்களுக்கு தேடி கொடுத்திருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகில், ஒரு தரமான திரைப்படத்தை கொண்டு கால் பதித்து இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தெலுங்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் அன்பையும், ஆதரவையும் அளித்து வருகிறார்கள். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
    கலைகளுக்கு மட்டும் நாம் நடுவர்களாக இருப்போம் என்று நடிகை ஸ்ரீப்ரியா லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சில தனியார் தொலைக்காட்சிகளில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாக கூறி, நடிகைகளை வைத்து பஞ்சாயத்து நடத்தி அவர்களுக்குள் சண்டையிட வைத்து சமாதானம் செய்து வைக்கிறார்கள். இவற்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

    அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை குஷ்புவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு சொல்வதாக கூறி ஒரு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி ஒன்றில் கைகலப்பு ஏற்பட்டது. இது பலராலும் விமர்சிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “கணவன், மனைவி இடையே பிரச்சனை என்றால் அதை தீர்க்க குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. அவர்கள் மீது ஏதேனும் குற்றம் இருந்தால் அவர்களை தண்டிக்க குற்றவியல் சட்டங்களும் உள்ளன. அவற்றை விடுத்து நடிகர்களான நாம் தொலைக்காட்சியில் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு தீர்ப்பு வழங்குவது சரியல்ல.

    அப்படி அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நினைத்தால் கேமரா முன் பேசாமல் நீதிமன்றத்தை அணுகும் சரியான வழிமுறையை காட்டுங்கள். நாம் கற்ற நமக்கு தெரிந்த கலைக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

    ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகித்சவா, சதீஷ், அபர்ணா வினோத், பாப்ரி கோஷ், மைம் கோபி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

    60-க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜய புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இதையடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற விருக்கிறது. விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.
    பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    பிரபல பாடகியும், வீணை இசைக்கலைருமான வைக்கம் விஜயலட்சுமி, கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு 35 வயது ஆகிறது. இந்நிலையில், இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக் கலைஞருக்கும் டிசம்பர் மாதம் 13-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் 29-ந் தேதி இவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது.

    பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும் போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

    இவர் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரசிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    திரையரங்குகளில் இனி தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..
    நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பாக புகை பிடிப்பதின் தீங்கு குறித்த விழிப்புணர்வு வீடியோவை திரையிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஒவ்வொரு திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேசிய கீதத்தை படம் தொடங்குவதற்கு முன்பாக இசைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும். தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையரங்குக்குள் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில் வணிகரீதியான ஆதாயம் எதுவும் தேடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், இந்த உத்தரவை ஏற்று தேசிய கீதம் இசையமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்தபிறகு திரையரங்குகளில் இனி படம் திரையிடப்படுவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்படும்.
    நடிகராவதற்கு முன்பு சூர்யா அதிகமாக கஷ்டப்பட்டதாக நடிகர் சிவகுமார் பட விழாவில் கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    அசோக் செல்வன்-பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ள படம், ‘கூட்டத்தில் ஒருத்தன்.’ டி.ஜே.ஞானவேல் டைரக்டு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, ரமணியம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    “வாழ்க்கையில் முன்னேறிய பல புதியவர்களை இங்கு பார்க்கிறேன். அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறார்கள். சூர்யா நடிகராவதற்கு முன்பு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். அந்த நிறுவனத்தினரிடம் நான் நடிகர் சிவகுமார் மகன் என்று சொல்லவில்லை. எனது பெயரை பயன்படுத்தாமலேயே பல மாதங்கள் அங்கு வேலை செய்து இருக்கிறார்.

    அம்பத்தூரில் உள்ள கம்பெனியில் இருந்து சோழிங்கநல்லூர் வரை மோட்டார் சைக்கிளிலேயே பொருட்களை ஏற்றி சென்று இருக்கிறார். சில நேரங்களில் அந்த கம்பெனியில் தரையை கூட சுத்தம் செய்து இருக்கிறார். அப்படி கஷ்டப்பட்டு பின்னர் நடிகரானார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களும் ஏற்றுமதி தொடர்பான வேலைகள் பார்த்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்துள்ளனர்.

    டைரக்டர் மணிரத்னத்திடம், நீங்கள் பேசக்கூடாது உங்கள் படங்கள்தான் பேச வேண்டும் என்று நான் சொல்வது உண்டு. சிறந்த டைரக்டர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். படங்களை பேச வைக்க வேண்டும். தெளிவான படங்களை எடுக்க வேண்டும்.

    நான் இந்த வயதிலும் ஆரோக்கியத்தோடு இருப்பது எப்படி? என்று பலர் கேட்கிறார்கள். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுகிறேன். 5 மணிவரை யோகா செய்கிறேன். தொடர்ந்து 6.30 மணிவரை நடைபயிற்சி செய்கிறேன். ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சிகள் அவசியம். இந்த படத்தின் டைரக்டர் ஞானவேல் திறமையானவர். அகரம் பவுண்டேஷனை சிறப்பாக நிர்வகித்து வருகிறார். ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் வெற்றி பெறும்.

    இவ்வாறு சிவகுமார் பேசினார்.

    நடிகர் சூர்யா பேசும்போது, “அகரம் பவுண்டேஷன் மூலம் 1,500 பேரை படிக்க வைத்து எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்து கொடுத்து இருக்கிறோம். அவர்களுக்கு ரூ.60 கோடி செலவு ஆகியிருக்கும். ஆனால் இந்த படத்தின் டைரக்டர் பலரிடம் பேசி அதை ரூ.10 கோடியாக குறைக்கவைத்தார். மேலும் 3 ஆயிரம் பேர் அகரம் மூலம் கல்வி உதவி பெற்று வருகிறார்கள்” என்றார்.

    விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், டைரக்டர்கள் தரணி, ராதாமோகன், ராஜுமுருகன், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பாளர் பிரகாஷ்பாபு, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    சங்கத்தை புதுப்பித்து தரக்கோரி அமைச்சரிடம், திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, தலைவர் விக்கிரமன், மற்றும் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ்கண்ணா ஆகியோர் மனு கொடுத்துள்ளனர்.
    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தலைவர் விக்கிரமன், மற்றும் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ்கண்ணா ஆகியோர் சென்னை கோட்டையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய திரைப்பட இயக்குனர்கள் சங்க அலுவலகம் வடபழனி குமரன் நகரில் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தை வளசரவாக்கத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டோம். இதனால் சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பான கடிதம் பழைய முகவரிக்கு சென்றதால் எங்கள் கவனத்துக்கு வராமலே இருந்துவிட்டது. இதனால் சங்கத்தை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது புதிய முகவரியில் செயல்படும் எங்கள் சங்கத்தை புதுப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்,

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.
    ×