என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    யாரோ ஒருத்தர் தனுசை எனது மகன் என்கிறார். அது எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளதாக கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். அது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
    சென்னை வடபழனியில் நடந்த வி.கே.மாதவன் தயாரித்து ஜெய் செந்தில்குமார் இயக்கத்தில் அர்ஷா-சாரா ஜோடியாக நடித்துள்ள ‘பார்க்க தோணுதே’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கலந்து கொண்டார். அப்போது தனுஷ் பற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்து கஸ்தூரிராஜா பேசியதாவது:-

    “நடிகர் தனுஷ் எனது மகன்தான். இதில் சந்தேகம் இல்லை. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 4 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கிடைத்தது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. எங்களுக்கு செல்வராகவனும் தனுசும் மகன்களாக பிறந்தார்கள். ஒரு மகளும் உள்ளார். செல்வராகவனுக்கு நடிக்க ஆசை இருந்தது. ஆனால் அவர் இயக்குனராகி விட்டார்.

    தனுசுக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. பள்ளியில் தனுஷ் படித்துக்கொண்டு இருந்தபோது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுக்க தயாரானேன். அந்த படத்தில் தனுசை நடிக்க வைக்க முடிவு செய்தேன். தனுசிடம் அதில் நடிக்கும் படி கேட்டபோது எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லி ஒதுங்கினார். ஆனாலும் வற்புறுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தேன்.

    சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. பெயர் புகழ். பணம் எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் அப்போதைய மகிழ்ச்சி இல்லை. யாரோ ஒருத்தர் தனுசை எனது மகன் என்கிறார். தனுஷ் எனது மகன். என்னுடைய மகனேதான்.”

    இவ்வாறு கஸ்தூரி ராஜா பேசினார்.
    டெலிவிஷனில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு அடிக்க பாய்ந்தது தவறு. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை ரஞ்சனி கூறியுள்ளார்
    நடிகைகள் குஷ்புவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் டெலிவிஷன்களில் குடும்ப தகராறுகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கணவன்-மனைவி தகராறு, வரதட்சணை பிரச்சினைகள், காதல் விவகாரம் என்று பல்வேறு குடும்ப பிரச்சினைகளை இதில் அலசி விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் காரசார வாக்குவாதம், அழுகை, அடிதடி என்றெல்லாம் போவது உண்டு.

    சமீபத்தில் குஷ்பு நடத்திய பஞ்சாயத்தில் தகராறு மூண்டு அதில் கலந்து கொண்ட ஒருவரை அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அடிக்க பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிகளுக்கு தற்போது திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    நடிகைகள் பஞ்சாயத்தை விமர்சித்து நடிகை ஸ்ரீப்ரியாவும் கருத்து வெளியிட்டார். அவர் கூறும்போது, “குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த நடிகைகளுக்கு தகுதி இல்லை. குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் இருக்கிறார்கள்.” என்றார்.

    தற்போது முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள முன்னாள் கதாநாயகி ரஞ்சனியும், குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டித்து உள்ளார்.

    டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

    கவுன்சிலிங் கொடுக்கிறேன் என்று பல்வேறு மொழிகளில் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனை வெட்கக்கேடான நிகழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். தாக்குதல், பாலின பாகுபாடு, பொதுமக்களுக்கான தொல்லைகளாகவே இவை இருக்கின்றன. நடிகைகள் இந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதன்மூலம் குடும்ப கவுரவம் குறைக்கப்படுகிறது. அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

    ஏழைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடிகைகளுக்கு தகுதி இல்லை. அந்த பணிகளை செய்ய தொண்டு அமைப்புகளும் கோர்ட்டுகளும் இருக்கின்றன. நடிகை குஷ்பு இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து ஆவேசமாக பேசி இருக்கிறார். இதுதான் கவுன்சிலிங்கா? அந்த நபர் கோர்ட்டுக்கு செல்லும் முன்பு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்

    இந்த பிரச்சினை குறித்து நிகழ்ச்சியிடமும், எங்களிடமும் நம்பிக்கை இருப்பதால்தான் எங்களை தேடி மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதுதான் எங்கள் நோக்கம். ஒருசில விஷயங்களை போலீசிடம் ஒப்படைப்போம், ஒருசில விஷயங்களுக்கு வக்கீலை ஏற்பாடு செய்து தருகிறோம்.

    ஸ்ரீப்ரியா, தொகுப்பாளரின் ஆடை ஆடம்பரத்தை பற்றி பேசியிருக்கிறார். அரைகுறையாக ஆடை அணிந்து ஒழுக்கமில்லாமல் உடலைகாட்டி உட்காருவதுதான் தவறு. ‘டீஸண்டாக’ நல்ல ‘டிரஸ்’ பண்ணியிருப்பதில் எந்த தவறும் இல்லை. அதனால், அவர் என்னுடையை ஆடை அலங்காரத்தை குறித்து பேசக்கூடாது.

    இவ்வாறு லட்சுமி ராம கிருஷ்ணன் கூறியுள்ளார்.
    விவாகரத்து வழக்கு விசாரணைக்காக நடிகை மலாய்கா அரோரா கான், நடிகர் அர்பாஷ்கான் தம்பதி பாந்திரா குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார்கள்.
    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான ‘உயிரே’ படத்தில் ‘தக்க தைய தைய தையா’ என்ற பாடலில் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர், நடிகை மலாய்கா அரோரா கான். இவரது கணவர் நடிகர் அர்பாஷ் கான்.

    இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்தனர். இந்தநிலையில், இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் பொருட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து 43 வயது நடிகை மலாய்கா அரோரா கான் விலகினார்.

    மேலும், கணவன்- மனைவி இருவரும் பரஸ்பர சம்மதத்தின்பேரில், விவாகரத்து கோரி பாந்திரா குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இந்த வழக்கின் விசாரணைக்காக மேற்படி இருவரும் கடந்த 29-ந் தேதி குடும்பநல கோர்ட்டில் ஆஜராகியது தெரியவந்து உள்ளது. அப்போது முதல்கட்டமாக அவர்களுக்கு நீதிபதி முன்னிலையில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு மே மாதம் நீதிபதி தள்ளிவைத்தார்.

    நடிகை மலாய்கா அரோரா கான், நடிகர் சல்மான்கானுக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பட அதிபர் மதனிடம் போலீஸ் காவல் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. நீதிமன்ற காவலில் அவர் மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக கூறி 127 மாணவ-மாணவிகளிடம் ரூ.84.27 கோடி மோசடி செய்ததாக பட அதிபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகியிருந்த அவர் கடந்த மாதம் 21-ந் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

    திருப்பூரில் அவரது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்தபோது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரை 9 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் மதன் சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    மாஜிஸ்திரேட்டு பிரகாஷ்குமார் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் மாணவ-மாணவிகளிடம் பணம் வசூலித்ததை மதன் ஒப்புகொண்டுவிட்டார். வசூல் செய்த பணத்தில் 80 சதவீதத்தை எஸ்.ஆர்.எம். நிறுவனத்திடமும், அதன் தொடர்புடைய நிறுவனங்களிடமும் ஒப்படைத்துவிட்டதாக மதன் போலீஸ் காவல் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதனடிப்படையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட 127 மாணவ-மாணவிகளிடமும் உரிய பணத்தை கண்டிப்பாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    "16 வயதினிலே'' படத்தின் மூலம், தமிழ் சினிமா உலகில் புதிய வரலாற்றை பாரதிராஜா தொடங்கி வைத்தார் என்று இளையராஜா கூறினார்.
    "16 வயதினிலே'' படத்தின் மூலம், தமிழ் சினிமா உலகில் புதிய வரலாற்றை பாரதிராஜா தொடங்கி வைத்தார் என்று இளையராஜா கூறினார்.

    "16 வயதினிலே'' படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "16 வயதினிலே'' படத்தில், மயிலின் (ஸ்ரீதேவி) கன்னத்தில் சப்பாணி (கமலஹாசன்) அறையும் காட்சி முடிந்ததும், "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா'' என்ற பாடல் காட்சி வரும்.

    பாடலுக்கு முன்னால் வரும் அந்த சீனுக்கு, மிïசிக் கம்போஸ் நடந்தது. குறிப்பிட்ட `ஷாட்'டுகளுக்காக போடப்பட்ட இசை, அந்த ஷாட்டுகளில் அமையவில்லை.

    அது கொஞ்சம் முன்னால் போய்விடும். அல்லது அந்த ஷாட் முடிந்து லேட்டாகி விடும். இதை `கண்டக்ட்' செய்து கொண்டிருந்த கோவர்த்தன் சாரிடம், "அண்ணே! நீங்க உள்ளே வாங்க, நானே `கண்டக்ட்' செய்கிறேன்'' என்று உள்ளே போனேன்.

    ஒரு ரிகர்சல் `கண்டக்ட்' செய்தேன். எல்லாம் அதனதன் இடத்தில் உட்கார்ந்தது. ஆர்க்கெஸ்ட்ராவுக்கு குஷி.

    டேக் தொடங்கியது.

    கட்... கட்...

    கண்டக்ட் செய்யத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் டப்பிங் தியேட்டரில் உட்கார்ந்திருந்த யாரோ ஒருவர், "கட்! கட்!'' என்றார்.

    நான் திரும்பிப் பார்த்தேன். பாரதி டென்ஷனாகி உள்ளே வந்துவிட்டார்.

    "யாருய்யா கட் சொன்னது?'' என்று பாரதியிடம் கோபமாக கேட்டேன்.

    பாரதிக்கு, அவரது அசிஸ்டெண்ட் யாரோ `கட்' சொன்னது தெரிந்து போயிற்று. அந்த அசிஸ்டெண்ட் யாரென்பதும் தெரிந்து போயிற்று.

    நான் அவரிடம், "எதுக்குய்யா கட் சொன்னே?'' என்று கேட்டேன்.

    அவரோ என்னையும், பாரதியையும் மாறி மாறிப் பார்த்தார். பிறகு, "டேக்கில் டயலாக் வரலை சார். டயலாக் இல்லாம டேக் எப்படி சார்?'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னதும் அந்தக் கோபத்திலும், எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

    அதாவது ரிகர்சல் பார்க்கும்போது திரையில் டயலாக் போகும். அதோடு இசைக் குழுவினரை வாசிக்க வைத்துப் பார்ப்போம்.

    டேக் போகும்போது அந்த ஸ்கிரீனுக்கு பின் இருக்கும் ஸ்பீக்கரில் டயலாக் வந்தால், அதுவும் மைக்கில் பிக்அப் ஆகி, வாத்தியங்களில் இசை கேட்காமல் போகும் அல்லவா? அதற்காக அதை `கட்' பண்ணி கண்டக்டரின் ஹெட்போனில் மட்டும் கொடுப்பார்கள். அதைத்தான் இவர் டேக்கில் டயலாக்கை கட் பண்ணிவிட்டார்கள் என்று எண்ணி, `கட்' சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தது.

    பாரதி அவரைப் பார்த்து, "இங்கே இருக்காதே! உள்ளே போய் உட்கார்!'' என்று உள்ளே அனுப்பி வைத்தார்.

    பிறகு அந்த உதவியாளர் பற்றி பாரதி பேசும்போது, "எக்ஸ்போஸ் பண்ணின பிலிம் டப்பாவை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திறந்து பார்க்கப் போனவன் இவன்!'' என்று சொல்லி, அதுபற்றி விவரித்தார்.

    படப்பிடிப்பு முடிந்து வந்த பிலிம்கேனை திறந்து, படம் பிடித்த எல்லாக் காட்சிகளும் இருக்கிறதா என்று பார்க்கப்போனவராம் இவர்! நல்லவேளையாக பாரதி இதைப் பார்த்துவிட, பிலிம் ரோல் தப்பியிருக்கிறது.

    இப்படி பாரதியிடம் திட்டு வாங்கியவர் வேறு யாருமல்ல; பிற்காலத்தில் பெரிய டைரக்டராக உயர்ந்த கே.பாக்யராஜ்தான்!

    "16 வயதினிலே'' படம் 15-9-1977-ல் ரிலீசானது.

    வழக்கமாக வரும் படங்களைப் போல இல்லாமல் மாறுபட்டு இருந்ததால், படத்தைப்பற்றி என்ன கருத்து சொல்வது என்று சினிமா வட்டாரத்தினருக்குப் புரியவில்லை.

    கமலஹாசனின் உதவியாளராக இருந்த சேஷு என்பவர் "இந்தப் படம் ஒருவாரம்தான் ஓடும். மிட்லண்ட் தியேட்டரில் படம் பார்க்கும் ஜனங்கள் கிண்டல் செய்கிறார்கள். இது போதாதென்று, டைட்டிலிலேயே சினிமாவுக்குப் பொருத்தம் இல்லாத குரலில் இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருக்கிறார். இது ஜனங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது'' என்று படத்தை கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தார்.

    ஆனால் ஒரு இரும்புக் கதவை ஒரு சாதாரண சோளக் குச்சியால் தகர்த்த மாதிரியாகிவிட்டது. அதாவது "16 வயதினிலே'' படம் இமாலய வெற்றி பெற்றுவிட்டது.

    அதுவரை, ஸ்டூடியோவிலேயே செயற்கையான செட்டுகளில் படங்களை எடுத்துக்கொண்டிருந்த முறையை அடியோடு மாற்றி இப்படத்தை எடுத்திருந்தார், பாரதி.

    விரிந்து கிடந்த அழகான மூலை மூடுக்குகளை கலை நயத்தோடு மக்களுக்கு காட்டி, அவர்களின் இதயங்களில் அழியாத இடம் பிடித்தார்.

    பாரதிராஜாவை, மாபெரும் கலைஞனாக உலகம் ஏற்றுக்கொண்டது.

    இந்தக் காலக்கட்டத்தில் இருந்துதான், திரை உலகில் பெரிய மாற்றங்கள் தொடங்கின. இதை ஒரு புதிய சினிமா வரலாற்றின் தொடக்கம் என்றும் குறிப்பிடலாம்.

    இன்றைய மாற்றங்களுக்கெல்லாம், அன்றே அடிக்கல் நாட்டியவர் பாரதிராஜா. நான் அவரை வெளிப்படையாக புகழ்ந்து இதுபோல் பேசியதே இல்லை. அது பேசப்படாமலே போய்விடக்கூடாது என்பதற்காகத்தான், இப்போது சொல்கிறேன்.

    அதே நேரம் இதுபோன்ற முயற்சிகளுக்கு அடித்தளம் இட்டது `அன்னக்கிளி' படம்தான். அந்த அடித்தளம் வேண்டுமானால் சிறிய அளவில் இருக்கலாம். ஆனால் அதை இல்லை என்று தள்ளுவதற்கில்லை.

    அன்னக்கிளியில் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியரும், கிராமத்து மருத்துவச்சியும்தான் நாயகன்- நாயகி.

    இதேபோல் "16 வயதினிலே'' படத்தில் கிராமத்து இளம்பெண், கால்நடை மருத்துவர், சப்பாணி, வெட்டியாக ஊரைச்சுற்றும் இளம் சண்டியர்கள் என சாதாரணமானவர்களே பாத்திரப் படைப்புகள். அதோடு திரையுலகம் சந்தித்திராத திரைக்கதை வடிவமைப்பு. இன்றும் இந்தப் படத்தைப் பார்த்தால் எவருக்கும் சலிப்பு ஏற்படாது.

    இந்தப்படத்தில் அமரன் எழுதி எஸ்.ஜானகி பாடிய "செந்தூரப்பூவே'' பாட்டுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. ஜானகிக்கு சிறந்த பாடகி என்ற தேசிய விருதை பெற்றுத்தந்தது இந்தப்பாட்டு.

    தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் "கவிக்குயில்'' என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதை கதாநாயகனால் இசைத்துக்காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார்.

    நாயகனோ அந்த இசையை புல்லாங்குழலில் வாசித்து, பிறகு பாட்டாகவும் பாடிக்காட்டி நாயகியின் மனதில் இடம் பிடிப்பான்.

    இதற்கு ஒரு டிïன் கம்போஸ் செய்தேன். அதைக்கேட்ட பஞ்சு சார், "இதை பாலமுரளிகிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்'' என்று சொன்னார்.

    தொடர்ந்து பாலமுரளிகிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.

    `பாலமுரளிகிருஷ்ணா பாடப்போகிறார்' என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது.
    பிரபல இயக்குனரும், நடிகருமான விசு தனுஷ், கஸ்தூரி ராஜாவின் மகன் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..
    நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளனர்.

    தனுஷ் எங்களுடைய மகன் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் நாங்கள் தயார் என கூறுகின்றனர் அந்த திடீர் பெற்றோர்கள். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு அளித்த பேட்டியில் தனுஷ் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தான் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

    அவர் கூறுகையில், என்னிடம் 15 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரி ராஜா வேலை செய்தார். இவரின் குடும்பம் ஏழ்மையில் இருந்தபோதிலிருந்து பார்த்து வருகிறேன். தனுஷை நான் சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் என்று அடித்து கூறுகிறார். மேலும் அவர் தன்னுடன் தனுஷ் குடும்பம் இருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அதில் சிறு வயது தனுஷும் உள்ளார்.
    விஜய் ஆண்டனி - அருந்ததி நாயர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புடம் வெளிவந்திருக்கும் ‘சைத்தான்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கும், அருந்ததி நாயருக்கும் திருமணம் ஆகிறது. திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனிக்கு மட்டும் அடிக்கடி ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் அவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.

    இந்த வசியக் குரலின் தாக்கத்தால் பலமுறை விஜய் ஆண்டனி தற்கொலைக்கு முயல்கிறார். ஒவ்வொருமுறையும் அவரது நண்பர்கள் அவரை காப்பாற்றி விடுகின்றனர். இந்நிலையில், தனது நண்பர் முருகதாஸுடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, விஜய் ஆண்டனியை அந்த குரல் மீண்டும் தற்கொலைக்கு தூண்டுகிறது.

    அப்போது காரை விபத்துக்குள்ளாக்குகிறார் விஜய் ஆண்டனி. இந்த விபத்தில் நண்பன் முருகதாஸ் இறந்துபோக, விஜய் ஆண்டனி மட்டும் தப்பிக்கிறார். அதன்பிறகு, தனக்கு மட்டும் கேட்கும் அந்த குரலைப் பற்றி தனது அலுவலக மேலதிகாரியான ஒய்.ஜி.மகேந்திரனிடம் சொல்கிறார் விஜய் ஆண்டனி.

    ஒய்.ஜி.மகேந்திரன், விஜய் ஆண்டனியை மனோதத்துவ நிபுணரான கிட்டுவிடம் அழைத்துச் செல்கிறார். கிட்டு, விஜய் ஆண்டனியின் ஆழ்மனத்திற்குள் ஊடுருவி விசாரிக்கையில், பூர்வ ஜென்மத்தில் விஜய் ஆண்டனி, ஆசிரியராக இருந்ததாகவும், அவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்ததாகவும் அவள் விஜய் ஆண்டனிக்கு துரோகம் செய்துவிட்டு, அவரை கொன்றுவிட்டதாகவும் தெரிய வருகிறது.

    இந்த ஜென்மத்திலும் ஜெயலட்சுமிதான் விஜய் ஆண்டனியை கொலை செய்வதற்காக இதுமாதிரியான சம்பவங்களெல்லாம் நடப்பதாக தெரிய வருகிறது. அந்த ஜெயலட்சுமி தஞ்சாவூரில் இருப்பதாக அறிந்து அவரைத் தேடி அங்கு செல்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது, அங்கு பழைய ஜெயலட்சுமியின் போட்டோ இவருக்கு கிடைக்கிறது. அந்த ஜெயலட்சுமியின் புகைப்படம் தன்னுடைய மனைவியின் முகத்தோடு ஒத்துப்போவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் விஜய் ஆண்டனி.

    இறுதியில், விஜய் ஆண்டனி அந்த ஜெயலட்சுமி யார் என்பதை கண்டறிந்தாரா? உண்மையிலேயே அவரால்தான் விஜய் ஆண்டனிக்கு தற்கொலை தொந்தரவு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதை திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.

    படம் முழுக்க விஜய் ஆண்டனியை மையப்படுத்தியே கதை நகர்கிறது. இதனால், படத்தின் மொத்த பாரத்தையும் விஜய் ஆண்டனியே தனது தோளில் தாங்கி நடித்திருக்கிறார். பதட்டமான காட்சிகளில் எல்லாம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பூர்வ ஜென்மத்தில் வரும் ஆசிரியராகட்டும், இன்றைய ஜென்மத்தில் வரும் சாப்ட்வேர் இன்ஜினியராகட்டும் இரு வேறு கதாபாத்திரத்தின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார். இனிவரும் படங்களில் அவற்றை சரிசெய்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

    அருந்ததி நாயர் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். திருமணமான பிறகு விஜய் ஆண்டனியிடம் ரொமான்ஸ் கலந்து இவர் பேசும் வசனங்கள் எல்லாம் கிளுகிளுப்பு ஊட்டியிருக்கிறது. கிட்டு, ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ் என படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தனது முதல் படத்திலேயே வித்தியாசமான ஒரு புது முயற்சியை கையிலெடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என்ற பதைபதைப்பை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். முதல்பாதியில் போடும் முடிச்சுகளுக்கு இரண்டாம் பாதியில் பதில் வருகிறது. அந்த பதில் நிறைய படங்களில் நாம் பார்த்திருப்பதுதான் என்றாலும், அது சரியானதுதான் என்பதுபோல் ஒத்துக்கொள்ள முடிகிறது. படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் சிறப்பான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

    விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படத்தின் முதல் பத்து நிமிட காட்சி வெளியிட்டபோதே அதில் வந்த பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. அதை படம் முழுக்க பார்க்கும்போது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ‘ஜெயலட்சுமி’ என்று சொல்லும்விதத்தையே வித்தியாசமான முறையில் திரையில் அலறவிட்டிருப்பது சிறப்பு.

    பிரதீப் கலிபுரயாத்தின் ஒளிப்பதிவும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியதுதான். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் தேவைக்கேற்ற ஒளியமைப்பை வைத்து பார்ப்பவர்களுக்கு எந்த நெருடலும் இல்லாதவாறு கதையை நகர்த்துவதற்கு இவரது கேமரா ஒத்துழைத்துள்ளது.

    மொத்தத்தில் ‘சைத்தான்’ அனைவருக்கும் பிடிக்கும்.
    “தணிக்கை செய்யப்பட்ட நிலையில், 400-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன” என்று நடிகர் சங்க தலைவர் நாசர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
    தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் லுத்புதீன், ‘பறந்து செல்ல வா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தனபால் பத்மனாபன் டைரக்டு செய்திருக்கிறார். பி.அருமை சந்திரன் தயாரித்து இருக்கிறார். கலைப்புலி இண்டர்நேஷனல் சார்பில் எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடந்தது.

    விழாவில் நாசர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    “இங்கே நான் ஒரு தகப்பன் என்ற முறையிலோ அல்லது தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் என்ற முறையிலோ பேச வரவில்லை. தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டை கடந்தவன் என்ற முறையில், திரைத்துறை எப்படியெல்லாம் வளர்ந்தது, எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட சினிமா மீது காதல் கொண்டவன் என்ற முறையில் பேசுகிறேன்.

    நான், 4 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் பேசுகிறேன். படம் எடுப்பது சிரமமே இல்லை. பத்தாயிரத்திலும் எடுக்கலாம். பத்து லட்சத்திலும் எடுக்கலாம். பத்து கோடியிலும் எடுக்கலாம். நூறு கோடியிலும் எடுக்கலாம். எல்லா பட அதிபர்களும் படம் தயாரிப்பதை விட, வெளியிடுவதற்குத்தான் கஷ்டப்படுகிறார்கள்.

    400-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில், தாணு போன்ற தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட முன்வருவது, பெரிய விஷயம். இந்த படம் பிரச்சினை இல்லாமல் வெளிவர வேண்டும் என்று விரும்பினேன். அது நிறைவேறியதில், மகிழ்ச்சி. தற்போது உதவிக்கரம் நீட்டுபவர்கள்தான் சினிமாவுக்கு தேவை.

    என் மகன் லுத்புதீனை பல நடிப்பு பட்டறைகளுக்கு அனுப்பி கடுமையான பயிற்சிகளை பெற்ற பின்தான் நடிக்க வைத்தேன். அவனுடைய வளர்ச்சிக்கு உதவுபவர்களுக்கு நன்றி.”

    இவ்வாறு நாசர் பேசினார்.

    விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, படத்தின் கதாநாயகன் லுத்புதீன், நகைச்சுவை நடிகர் சதீஷ், சிங்கப்பூர் நடிகை நரேல் கெங் மற்றும் படக்குழுவினரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
    விக்டோரியா அரங்கை தமிழ் திரைப்பட ஆவண காப்பகமாக அறிவிக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளான திரைப்பட நடிகை ரோகிணி, இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், வசந்த் மற்றும் ராஜீமுருகன் ஆகியோர் சென்னை ரிப்பன் மாளிகைக்கு நேற்று வந்தனர். அங்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டி.கார்த்திக்கேயனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

    அந்த மனுவில் “தமிழ் திரைப்படத்துக்கு இந்தாண்டு நூறாவது ஆண்டாகும் சென்னையில் முதன்முதலில் 1897-ம் ஆண்டு விக்டோரியா பொது அரங்கில் குறும்படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் திரைப்பட நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் ரிப்பன் மாளிகை அருகேயுள்ள விக்டோரியா பொது அரங்கை தமிழ் திரைப்பட ஆவண காப்பகமாக உருவாக்க வேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மனுவை பெற்று கொண்ட மாநகராட்சி கமிஷனர் கார்த்திக்கேயன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன் பின்னர் நிருபர்களிடம் நடிகை ரோகிணி கூறியதாவது:-

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழா ஒரு வருட காலத்துக்கு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி விக்டோரியா பொது அரங்கு தமிழ் திரைப்பட ஆவண காப்பகமாக அறிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கணவர்-குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்வதாக நடிகை பாபிலோனா சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
    பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா மந்திரவாதியிடம் சிக்கியிருப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் என்றும் அவரது பாட்டி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அந்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை பாபிலோனா கூறும்போது, எனது பாட்டி கொடுத்த புகார் மனு பொய்யானது, அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனது கணவர் சுந்தருடன் நான் சந்தோஷமாக வாழ்கிறேன். 6 நாட்களுக்கு முன் எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்துள்ளதால் என்னால் நடக்க முடியவில்லை. இதனால் என்னுடைய புகார் மனுவை எனது கணவர் சுந்தர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுப்பார்” என்று கூறினார்.

    இதை அடுத்து நேற்று பகல் 12 மணி அளவில் பாபிலோனாவின் கணவர் சுந்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பாபிலோனா கையெழுத்திட்ட மனு ஒன்றை கமிஷனர் அலுவலகத்தில் அவர் கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக எனது பாட்டி கிருஷ்ணகுமாரியோடு நான் வாழ்ந்து வந்தேன். அவர் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். இதனால் எனது பாட்டியின் கொடுமையிலிருந்து மீண்டு, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி சுந்தரை நான் திருமணம் செய்துகொண்டேன். எனது திருமண செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வந்தன.

    எனது திருமணத்தை எனது பாட்டி ஏற்கவில்லை. இதனால்தான் எனது கணவரை மந்திரவாதி என்று கூறி அவரது பிடியில் சிக்கியிருப்பதாக எனது பாட்டி தவறான புகார் மனு கொடுத்துள்ளார். எனது கணவர் மற்றும் குழந்தையுடன் நான் சந்தோஷமாக வாழ்கிறேன். தவறான புகார் கொடுத்த எனது பாட்டி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதுபோன்ற மனு விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

    பாபிலோனாவின் கணவர் சுந்தர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்) வடிவமைத்து கொடுக்கும் தொழில் செய்கிறேன். எனது ஆலோசனையின் பேரில் எனது மனைவி பாபிலோனா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இனிமேல் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார். ஆனால் பாபிலோனா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவரது பாட்டி விரும்புகிறார். அதனால்தான் என்னை பற்றியும், பாபிலோனா பற்றியும் தவறான புகார் கொடுத்துள்ளார். என்னிடமிருந்து பாபிலோனாவை பிரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சி பலிக்காது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    பட அதிபர் மதன் தனது வலது கையில் ‘வி’ என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருந்தார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    பட அதிபர் மதனை நேற்று போலீசார் திருப்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்திருந்தார். பத்திரிகையாளர்கள், டி.வி. நிருபர்கள் மதனை புகைப்படம் எடுக்க முண்டியடித்து போலீஸ் வேன் அருகே சென்றார்கள். இதை கவனித்த மதன், வேனின் ஜன்னல் அருகே வந்து புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக அமர்ந்தார். புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர்கள் மற்றும் நிருபர்களை பார்த்து புன்முறுவலுடன் காணப்பட்டார்.

    மதன் தனது வலது கையில் ‘வி’ என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருந்தார். வேந்தர் மூவிஸ் என்பதை குறிக்கும் வகையில் ‘வி’ என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருந்தாரா? அல்லது தனக்கு நெருக்கமானவரின் பெயரை குறிக்கும் வகையில் பச்சை குத்தியிருந்தாரா? என்பது தெரியவில்லை.
    நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்றும் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மணமகனாக பெற்றோர்கள் தேர்வு செய்துள்ளனர் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
    நடிகை அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். சம்பளம் ரூ.2½ கோடி கேட்கிறார். வயதானதால் இளம் நடிகர்களுடன் அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.

    அனுஷ்காவை பல கதாநாயகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. நடிகர்கள் ஆர்யா, நாகார்ஜுனா ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார். ஆந்திராவில் உள்ள வயதான தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது அவரது பெற்றோர்கள் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஒருவரை மணமகனாக தேர்வு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொழில் அதிபர் அனுஷ்கா குடும்பத்தினருக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்று கூறப்படுகிறது. இவர் பெங்களூருவிலும் ஐதராபாத்திலும் சொந்தமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்து இருக்கிறாராம். அனுஷ்காவுக்கும் ரியல் எஸ்டேட் அதிபருக்கும் அடுத்த வருடம் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விட அனுஷ்கா திட்டமிட்டு உள்ளார். தற்போது அவரது கைவசம் சி-3, பாகுபலி-2, பாக்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய 4 படங்கள் உள்ளன. திருமணத்துக்கு முன்பு இந்த படங்களை முடித்து கொடுத்து விட முடிவு செய்துள்ளார். வேறு புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை.
    ×