என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பங்களாவுக்கு அதிகப்படியான மின்கட்டணம் விதிக்கப்பட்டதாக ஆஷா போஸ்லே குற்றம்சாட்டி இருக்கிறார். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவுக்கு பசுமை கொஞ்சும் புனே லோனவாலா பகுதியில் துங்கர்லி ஏரி அருகே பங்களா வீடு ஒன்று உள்ளது. இந்த பங்களாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வழக்கத்தை விட அதிகப்படியான மின்கட்டணம் விதிக்கப்பட்டதாக ஆஷா போஸ்லே குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும், இந்த பங்களாவை தான் அதிகமாக பயன்படுத்தப்படுத்தாத போதிலும், இவ்வாறு விதிக்கப்பட்ட மின்கட்டண தொகை, தன்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விவகாரத்தை மும்பை நகர பாரதீய ஜனதா தலைவர் ஆசிஷ் ஷெலார், மின்சாரத்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலேயிடம் கொண்டு சென்றார். இதன்பேரில், ஆஷா போஸ்லேயின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சந்திரசேகர் பவன்குலே உத்தரவிட்டார்.

    இதனிடையே, ஆசிஷ் ஷெலார் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பரில் ஆஷா போஸ்லே பங்களாவுக்கு ரூ.16 ஆயிரத்து 411 மின்கட்டணம் ஆனதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், முந்தைய மாதங்களில் அவர் ரூ.37 ஆயிரத்து 168 பாக்கி வைத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
    திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்தி நடிகை கத்ரீனா கைப் பேசியுள்ளார். அதை பற்றி கீழே பார்க்கலாம்.
    மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகை கத்ரீனா கைப் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வன்முறைகளை பெண்கள் அமைதியாக சந்திக்க கூடாது. திருமண கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து பெண்கள் கட்டாயம் பேச வேண்டும். சில சமயங்களில், படித்த பெண்கள் கூட சமுதாய நெறிகள் காரணமாக உயிர் இழக்க நேரிடுகிறது.

    திருமண கற்பழிப்பை குற்றம் என அங்கீகரிக்க பெரும்பாலான சமுதாயம் தவறுகிறது. இதுபற்றி ஏராளமான பெண்கள் பேச வேண்டும். பெண்கள் தங்களை தாழ்வாகவும், பலவீனமாகவும் கருதுவது சரி அல்ல. ஏனென்றால், நாம் பலவீனமான பாலினம் இல்லை.

    இந்த உலகம் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளும், வன்முறைகளை எதிர்கொண்ட பெண்கள், அதனை வெளிப்படையாக பேசாமல் மவுனம் காத்தனர். மாநிலங்களில் பெண் முதல்-மந்திரிகளை கொண்ட ஒரு நாட்டில், பாலின வேறுபாடு நிகழ்வது வருத்தம் அளிக்கிறது.

    பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களை கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தினசரி அடிப்படையில் வந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

    இவ்வாறு கத்ரீனா கைப் தெரிவித்தார்.
    ‘கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது’ என்று ஜெயலலிதா மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து உள்ளார்.
    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர், வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.

    அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை.

    ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை.

    திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை.

    கலையுலகில் ‘அம்மு’ என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை.

    தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர் வேட்பாளர்’ என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை.

    போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப்பெருமையைக் கரைத்துக்கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.

    உறுதி என்பது அவர் உடன்பிறந்தது. ஒருமுறை கர்நாடகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது, கன்னடப் போராளிகளால் சூழப்பட்டார். ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். ‘கன்னடம் வாழ்க’ என்று சொன்னாலும் செல்வேனே தவிர எந்த நிலையிலும் ‘தமிழ் ஒழிக’ என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர் மொழிமாறாதவர் ஜெயலலிதா.

    கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை, அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆடமுடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது.

    ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு சவுந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். ‘ஆயிரத்தில் ஒருவனில்’ அவரது அழகு சந்தனச் சிலையா? சந்திர கலையா? என்று சொக்க வைக்கும்.

    சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார், இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோருக்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்ற துயரம் இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது.

    மறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக என் அஞ்சலிப் பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் நடிகர் அஜீத் இன்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் நடிகர் அஜீத் இன்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு நேற்று திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    படப்பிடிப்புக்காக பல்கேரியா நாட்டுக்கு சென்றிருந்த நடிகர் அஜீத், நேரடி விமானம் கிடைக்காததால் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும், பல்கேரியாவில் இருந்து அஜீத் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், பல்கேரியாவில் இருந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் அஜீத், தனது மனைவி ஷாலினி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் மவுனமாக நின்று அஞ்சலி செலுத்திய அவர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான ‘சோ’ ராமசாமி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை காலமான செய்தியை அறிந்த அஜீத் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சோவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

    ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே, படப்பிடிப்புக்கு இடையில் பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு வந்த அஜீத், இன்றுமாலை மீண்டும் பல்கேரியா புறப்பட்டுச் சென்று படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொள்கிறார்.

    அஞ்சலி செலுத்துவதற்காக அஜித் வந்தபோது எடுத்த வீடியோ...

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி இன்று காலமானார்.
    சென்னை:

    துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சோ ராமசாமியின் உயிர் சிகிச்சை பலனின்றி இன்று பிரிந்தது. அவருக்கு வயது 82. அதிகாலை 4.40 மணிக்கு சோ உயிர் பிரிந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    சோ காலமானதை அவரது மருத்துவர் விஜய்சங்கர் உறுதி செய்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு நாட்கள் முழுமையாக முடிவதற்குள் சோ ராமசாமி உயிரிழந்துள்ளார்.

    ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மாஸ்டருக்கு உடல் நலக்குறைவு என்று கேள்விப்பட்டதும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து 3 நாட்கள் தங்கியிருந்து அவரை கவனித்துக் கொண்டார் இளையராஜா.
    தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா. மாஸ்டருக்கு உடல் நலக்குறைவு என்று கேள்விப்பட்டதும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து 3 நாட்கள் தங்கியிருந்து அவரை கவனித்துக் கொண்டார்.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மூகாம்பிகை மீது நான் பாடிய கன்னடப் பாடல்களை, சினிமாவில் எனக்கு இசையமைப்பாளர் அங்கீகாரம் கொடுத்த பஞ்சு அருணாசலம் சாரிடமும் போட்டுக்காட்ட விரும்பினேன்.

    அப்போதே இரவு 10-30 மணி ஆகியிருந்தது. இருந்தாலும் போனேன். பாடல்களைக் கேட்டவர் பிரமை பிடித்தவர் போலானார். "பக்திப்பாடல் இப்படிக்கூட ஜீவனை உலுக்குவதாக அமையுமா என்ன? இதுபோல பக்திப்பாடல் வருவது இதுதான் முதல் தடவை. இது முற்றிலும் உண்மையான தெய்வீக நிலையில் பாடிய பாடல்கள் என்றார்.

    அங்கேயே அண்ணி (பஞ்சு அருணாசலத்தின் மனைவி) இருவருக்குமாக டிபன் எடுத்துக்கொண்டு வந்து பரிமாறினார்கள். சாப்பிடத் துவங்கும்முன் அவரிடம், "அண்ணி! இந்தப் பாடல்களை கேட்டீர்களா?'' என்று கேட்டேன்.

    "அய்யோ! கேட்கும்போதே உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது'' என்றார்.

    நான் அவர்களிடம், "அண்ணி! அது யாருன்னு நினைச்சீங்க? அது என் அம்மா'' என்றேன். அதோடு நில்லாமல், "நான் கூப்பிட்டால் இப்ப இங்கே வருவாங்க'' என்று விரலை சொடுக்கினேன்.

    நான் விரலை சொடுக்கிய அந்த வினாடியில் அண்ணிக்கு ஆவேசம் வந்துவிட்டது. சத்தமாக "ஏய் நான்தாம்ப்பா அது'' என்று குரல் கொடுத்தார்கள்.

    அவர்கள் சத்தமாக `ஏய்' என்ற நொடியில் என் கைகள் தானாக கூப்பியது. கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது. உள்ளம் கரைந்து கசிந்தது. சிறிது நேரம் அப்படியே இருந்து மனம் சாந்தமானதும் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

    இந்தப் பாடல்களை வருடத்தின் முதல் நாள் அம்மாவின் சன்னதியில் ஒலிக்கச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். இதற்காக டிசம்பர் 31-ந்தேதி மூகாம்பிகை போய்விட்டேன். இரவு தங்கி காலை 4 மணிக்கு சவுபர்ணிகாவில் குளித்து, நிர்மால்ய சேவை பார்த்துவிட்டு காலை 6 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு டேப் ரிக்கார்டருடன் போனேன்.

    அங்கே தரிசனத்துக்கு நிற்கும் பகுதியையொட்டிய திண்ணையில் ஒரு பக்கத்தில் டேப் ரிக்கார்டரை வைத்து அந்த பாடலில் இரண்டு பாடல்களை போட்டேன். சிறிதளவே பக்தர்கள் இருந்த அந்த சூழ்நிலையில் மனம் ரம்மியமானது. உள்ளம் அன்னையிடம் ஏங்கியது. "அம்மா! இந்தப் பாடலை நீ ஏற்றுக்கொண்டாயா என்பதை எனக்குப் புரியுமாறு நீ தெரிவிக்க வேண்டும்'' என வேண்டிக்கொண்டேன்.

    இந்நிலையில் இரண்டாவது பாடல் முடிந்து `டேப்'பை `ஆப்' செய்தேன்.

    ஆனால் நான் பாடிய ஸ்ருதி மட்டும் என் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இது எங்கிருந்து கேட்கிறது என்று யோசித்தேன். அப்போதுதான் கோவிலில் காலை 7 மணியை அறிவிக்கும் கோவில் மணியை அடிக்கிறார்கள்; அந்த ஓசை அடங்காது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்தது.

    அடடா! அம்மா அல்லவா என் வேண்டுகோளுக்கு பதில் சொல்லி இருக்கிறாள். "பார்த்தாயா நீ பாடிய ஸ்ருதி என் கோவிலின் மணிச்சுருதியில் இருந்து இம்மிகூடப் பிசகாமல் அப்படியே பின்னிப் பிணைந்திருப்பதை!'' என்று எனக்கு உணர்த்துவதைப் போலிருந்தது.

    மெதுவாக கேட்ட அந்த கோவில் மணி ஓசையின் ஸ்ருதியை என் பாடலுடன் இணைத்துப் பார்த்தேன். ஆச்சரியம். எள்ளளவும் பிசகாத அதே

    ஸ்ருதி.அம்மாவின் கருணையை எண்ணி ஆனந்தமானேன்.''

    இவ்வாறு கூறினார், இளையராஜா.

    தனது இசை குரு தன்ராஜ் மாஸ்டருக்கு சேவை செய்த அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தன்ராஜ் மாஸ்டருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்ற செய்தி வந்தது. நானும் `வயலின்' கல்யாணமும் போனோம். அவர் உட்கார பயன்படுத்தும் ஈஸி சேரில் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்திருந்தார். அதிலேயே `பாத்ரூம்' வேறு போயிருந்தார். கைத்தாங்கலாக பிடித்து அருகில் இருந்த பெஞ்சில் படுக்க வைத்தோம்.

    நோய் உபாதையிலும் இசைக்குள் ஆழ்ந்துபோன அவரது குணநலன் வெளிப்பட்டது. அவரைத் தூக்கும்போது `மெதுவாக மெதுவாக' என்பதற்கு பதில் `அன்டான்டே அன்டான்டே' என்றார். இது, "இசையில் மெதுவாக வாசிக்கவும்'' என்பதை குறிக்கும் இத்தாலிய மொழிச்சொல்.

    இசையை மட்டுமே அறிந்த அவர், உடல் செயலிழந்து போனாலும், உயிரில் கலந்து போன இசையைக்கொண்டே தனது தேவையை சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.

    அவரை பெஞ்சில் படுக்க வைத்து ஈஸி சேரை சுத்தம் செய்து காயப்போட்டோம். ரூமில் இருந்த பேனை வேகமாக ஓடவிட்டோம். காலை அமுக்கிவிடச் சொன்ன வார்த்தைகள் முனகல் போல கேட்டது. கண்களை மூடியபடியே படுத்திருந்தார்.

    வலது காலை நானும், இடது காலை கல்யாணமும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தோம். விரல்களை பிடித்து விடுமாறு சொன்னார். பெருவிரலை பிடித்தேன். `அன்டாண்டே' என்றார். மெதுவாக பிடித்து விடவேண்டுமாம்!

    அப்படியே அடுத்த விரல்களை பிடித்து விட்டேன். "டேய் இ ஸ்ட்ரிங்' என்றார். "சார்'' என்றேன். அவர் சொல்ல வருவதை முழுமையாக புரிந்து கொள்ளும் நோக்கில்.

    "கிட்டாரில் ஓப்பன் ஸ்ட்ரிங் எது?'' என்று கேட்டார்.

    "இ ஸ்ட்ரிங் சார்'' என்றேன்.

    "ம்... அதை பிடித்துவிடு'' என்றார்.

    அவரது, கால் பெருவிரல்தான் கிட்டாரின் கீழ் ஸ்தாயி கணக்கில் `இ ஸ்ட்ரிங்'காம். இந்த வகையில் சுண்டு விரல் முதல் ஸ்ட்ரிங்காம். விரல்கள் எல்லாமே கிட்டார் வாத்தியத்தின் தந்திகள் ஆகிவிட்டன!

    உலகத்தின் எந்த இசை மேதை வாழ்விலும் இப்படியொரு சம்பவத்தை நான் அறிந்ததில்லை.

    நாங்கள் அங்கிருந்த நேரத்தில் சாயி லாட்ஜ் முதலாளி, மாஸ்டரை பார்க்க வந்திருந்தார். அவர் எங்களிடம், "நீங்கள் இவரை அவசியம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல வேண்டும். இது சாதாரணமாக வரும் தேக அசவுகர்யம் இல்லை. அதிகமாக குடித்ததால் சேரியில் எங்கேயோ விழுந்து கிடந்திருக்கிறார். சேரி ஆட்கள் தூக்கி வந்து வீட்டில் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். காலில் அடிபட்டிருக்கிறது. கைகளைப் பாருங்கள், சிராய்ப்பு எப்படி இருக்கிறது? ஆஸ்பத்திரிக்குப் போனால்தான் "ஈரல்'' ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்'' என்றார். தொடர்ந்து அவரே, "உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்'' என்றும் யோசனை சொன்னார்.

    நாங்களும் தாமதிக்கவில்லை. ஒரு டாக்சியை வரவழைத்தோம். ரூமில் இருந்து அவரை தூக்கி குறுகலான படிகள் வழியாக இறக்கி, டாக்சியில் ஏற்றுவதற்குள்ளாகவே சிரமப்பட்டுப் போனோம்.

    மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நானும் கல்யாணும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் உடனிருந்து மாஸ்டரை

    கவனித்துக்கொண்டோம்.மறுபடியும் அவரை சாயி லாட்ஜ் 13-ம் நம்பர் அறையில் கொண்டு போய் சேர்த்தோம்.

    உடல் நலிவு சரியாகிவிட்டது. ஆனால் சோர்வாக இருந்தார். ஆனால் இன்னும் அன்டாண்டே, அடாஜியோ போன்ற இத்தாலிய இசைக் குறிப்பு வார்த்தைகள் அவரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன.

    அன்டாண்டே என்றால் `மெதுவாக' என்று சொல்லிவிட்டேன். அடாஜியோ என்றால் என்னவென்று தெரிய வேண்டுமல்லவா, அதற்கு `இன்னும் மெதுவாக' என்று அர்த்தம்.

    கொஞ்சம் அவர் பழைய நிலைக்கு திரும்பும்வரை சாயி லாட்ஜில் இருந்து விட்டு, டாக்டர் கொடுத்த மருந்துகளை எந்த நேரத்தில் உபயோகிக்க வேண்டும் என்று விளக்கி சொல்லிவிட்டு விடை பெற்றோம். சாயி லாட்ஜ் மானேஜரிடமும் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    குரு பக்தி ஒருபுறம் இப்படி என்றால், `அம்மா' மூகாம்பிகை மீதான பக்தி இன்னொரு புறம் ஆழமாக போய்க்கொண்டிருந்தது. அம்மா மீதான பக்தி மேலீடு அதிகரித்த பிறகு தனது இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டார், இளையராஜா.

    அதுபற்றி கூறுகிறார்:-

    "அம்மா மீதான என் ஈடுபாடு அதிகரித்த பிறகு திரை வாழ்விலான என் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன் யாரிடமும் உற்சாகமாக உரையாடுவது, நகைச்சுவை விஷயங்களை சிலாகித்து மகிழ்வது என்றிருந்த என் போக்கு அடியோடு மாறிற்று. நடை, உடை, பாவனைகளில் கூட மாறுதல் தெரிந்தது.

    கதை சொல்ல டைரக்டர் என்று யார் வந்தாலும், கதையுடன் `பாடல் சிச்சுவேஷன்' கேட்பதோடு சரி. பேச்சுவார்த்தை முடிந்து

    போகும்.அம்மா பக்தியில் என் ஆன்ம பலம் கூடியிருந்த போதிலும், திரை வாழ்க்கையில் என் வேலையிலும் கவனமாகவே இருந்தேன். கவிக்குயிலை தொடர்ந்து, அவர் எனக்கே சொந்தம், உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி என படங்கள் தொடர்ந்தன. ஒவ்வொன்றிலும் புதிதாக செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்பேன்.

    கவிக்குயில் படத்தில் `சின்னக்கண்ணன் அழைக்கிறான்' பாடல் இருந்தாலும், "காதல் ஓவியம் கண்டேன்'' என்றொரு பாடலை படத்தின் பிற்பகுதியில் சேர்க்க பஞ்சு சார் விரும்பினார். இந்தப் பாடலை சுஜாதா என்ற 10 வயது சிறுமியைக்கொண்டு பாட வைத்தோம். குழந்தைதானே தவிர, குரல் என்னவோ பி.சுசிலா, எஸ்.ஜானகி போல பெரியவர்களின் தரத்தை ஒத்திருந்தது.

    இந்தப் பாடலில்தான் முதன் முதலாக இசை மேதை `பாக்'கின் காலத்திய இசையைப்போல கொடுத்து, அதன் மேல் நம் நாட்டு இசையான `வீணை'யை வாசிக்க வைத்து பாடலை பதிவு செய்திருந்தேன். சினிமா இசையில் இரு வேறு பாணி இசைகள் ஒன்றாக கலந்தது அதுவே முதல் முறை. அது நன்றாகவும் அமைந்ததில் வெற்றி கிடைத்தது.

    ஆனால், இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே வினியோகஸ்தர்கள் சிலர் கேட்டுவிட்டு, "படத்தில் இந்தப்பாடல் வரும்போது, ரசிகர்கள் புகை பிடிக்க வெளியே போய் விடுவார்கள்'' என்று கமெண்ட் அடித்தார்கள்.

    அதோடு நின்று விடாமல் "அவர்கள் புகை பிடிப்பதற்காக நாம் ஏன் பாடல் போடவேண்டும்?'' என்று படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு சாரிடமும் கேட்டுவிட்டார்கள்.

    இது விஷயம் என் காதுக்கு வந்தபோது நொந்து போனேன். புதிய விஷயம் ஒன்று கிடைத்துவிட்டது என்று நான் உற்சாகமாக பணிபுரிந்த நேரத்தில், மட்டமான அவர்கள் பேச்சு என் இதயத்தில் குத்துவது போல் இருந்தது.
    மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகினரும், கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
    சென்னை:

    சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.

    ஜெயலலிதா உடலுக்கு நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதனிடையே , நடிகர்கள் ராதாரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரையுலகினர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவையொட்டி தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா நேற்றிரவு( திங்கள் கிழமை) காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    சென்னை,

    தமிழக முதல் அமைச்சராக  இருந்த ஜெயலலிதா நேற்றிரவு( திங்கள் கிழமை) காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு மட்டுமல்ல. இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது.

    மரியாதைக்குரிய நம்முதல்வரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனக்கூறியுள்ளார்.
    மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.
    மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இரட்டையர்களில், தேவராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். "சிட்டுக்குருவி'' படத்தில் காதலனும், காதலியும் தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு சூழ்நிலையில் ஒரு பஸ்சில் இருவரும் அருகருகே அமர்ந்து போகிறார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

    இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் `கவுண்ட்டர் பாயிண்ட்'டை உபயோகிக்க முடிவு செய்தேன்.

    இதுபற்றி தேவராஜிடம் விளக்கி சம்மதமும் வாங்கிவிட்டேன்.

    கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது டிïனை வாசிக்கச் சொல்லி கேட்டார். "ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "அண்ணே! இரண்டு டிïனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டிïனுக்கு இன்னொரு டிïன் பதில் போலவும், அமையவேண்டும். அந்த பதில் டிïனும் தனியாகப்பாடினால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல் ஒரே பாடலாக ஒலிக்கவேண்டும்'' என்றேன்.

    பதிலுக்கு வாலி, "என்னய்யா நீ! இந்த நட்ட நடு ராத்திரியில `சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே! முதல்ல ஒரு "மாதிரி'' பாடலை சொல்லு!'' என்றார்.

    உடனே வேறு ஒரு பாடலைப்பாடி விளக்கினேன். நான் ஒரு டிïனையும், அமர் ஒரு டிïனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.

    ஆண்: பொன்

    பெண்: மஞ்சம்

    ஆண்: தான்

    பெண்: அருகில்

    ஆண்: நீ

    பெண்: வருவாயோ?

    - இப்படி பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதை தனியாகவும், பெண் பாடுவதை தனியாகவும் பிரித்துப் படித்தால் தனித்தனி அர்த்தம் வரும்.

    அதாவது `பொன் தான் நீ' என்கிறான் ஆண்.

    `மஞ்சம் அருகில் வருவாயோ' என்கிறாள், பெண்.

    சேர்ந்து பாடும்போது `பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ' என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.

    `சரி' என்று புரிந்ததாக தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பிறகு கையில் பேடை எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென எழுதினார்.

    இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்ததில் எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று.

    இந்தப் பாடலை ரெக்கார்டு செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாடவேண்டும் அல்லவா.

    இதை எப்படி ரெக்கார்டு செய்வது?

    ஏவி.எம். சம்பத் சாரிடம் "ஒரு குரல் பாடுவதை மட்டும் முதலில் ரெக்கார்டு செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி "பிளே'' செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு ரெக்கார்டரில் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.

    டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இருவரில், மோகன் சாருக்கு கம்போசிங் சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் "உம்''மென்றே காணப்பட்டார்.

    `எப்படி வருமோ?' என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.

    தேவராஜோ உற்சாகமாக இருந்தார். "இந்த மாதிரி ஐடியா வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்? இப்படிச் செய்கிற நேரத்தில் அதைப்பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் `கலைஞனாக' இருப்பதற்கு அர்த்தம் என்ன?'' என்று பேசினார்.

    இந்தப் பாடலின் இடையிடையே, பஸ்சில் கண்டக்டர் "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்... இறங்கு!'', "இந்தாம்மா கருவாட்டுக்கூடை! முன்னாடி போ!'' என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரை பேச வைத்தேன்.

    அந்தப் பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பை பெற்றது.''

    - இப்படிச் சொன்ன இளையராஜா, மூகாம்பிகை அம்மன் பேரில் கொண்ட பக்தியால் 4 பாடல்களை அதுவும் கன்னடப் பாடல்களை பாடி அன்றைய இசை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அதுபற்றி கூறியதாவது:-

    "என்னதான் பாடல்கள் இசையமைப்பு, பாட்டுப் பயிற்சி என்று பிசியாக இருந்தாலும் அம்மா மூகாம்பிகை மீது எனக்கு ஒரு கவனம் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மூகாம்பிகை போவதும், யார் வந்தாலும் என் செலவில் அழைத்துப்போவதும் தொடர்ந்தது.

    இந்த நேரத்தில் அம்மாவைப் பற்றி கன்னடத்தில் பக்திப்பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே தாமதமின்றி கன்னடப் பாடலாசிரியர் உதயசங்கரை சந்தித்தேன். "மூகாம்பிகை அம்மன் பற்றி 4 பக்திப்பாடல்கள் எழுதித்தர வேண்டும்'' என்று கேட்டேன்.

    அவரோ பிசியாக இருப்பதாகவும், இன்னொரு நாள் எழுதித் தருவதாகவும் சொல்லிவிட்டார்.

    நான் அவரை விட பிசியாக இருந்தும், குறிப்பிட்ட அந்த நாளில் அந்த 4 பாடல்களையும் ரெக்கார்டு செய்தே தீருவது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.

    என் பிடிவாதம் தெரிந்து கொண்ட உதயசங்கர், "எப்படியாவது பாடல்களை எழுதித்தந்து விடுகிறேன். ஆனால் நான் ரெக்கார்டிங்கிற்கு வரமுடியாது. என்னுடைய உதவியாளரை அனுப்புகிறேன். ஆனால் உன்னால் கன்னடத்தில் பிழையின்றி பாடமுடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கன்னடம் சரியில்லை என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

    "பரவாயில்லை; முயற்சி செய்து பார்க்கிறேன்'' என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட நாளில் ரெக்கார்டிங் தொடங்கி விட்டேன். டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் புதல்வர் கே.எஸ்.ரமணனின் "ஜெயஸ்ரீ ரெக்கார்டிங் தியேட்டரில்'', குறைந்த வாத்தியங்களை வைத்துக்கொண்டு பாடினேன்.

    அப்போது என் மனமெல்லாம் அம்பாளின் திருவடியிலேயே ஒன்றியிருந்தது. பாடும்போது உடலெங்கும் ஒரு அதிர்வு இருந்து கொண்டிருந்தது.

    4 பாடல்களையும் ரெக்கார்டு செய்து முடிக்கும் நேரம் உதயசங்கர் வந்தார். பாடலின் கன்னட உச்சரிப்பில் தவறு ஏதும் இருக்கிறதா என்பதை கேட்பதற்காக வந்தார்.

    பாடலைக் கேட்டவர்: "கன்னடப் பாடகர்களே பாடினாலும் இத்தனை தெளிவான கன்னடமாக இருக்காது. அவ்வளவு நன்றாக பாடிவிட்டீர்கள்'' என்று பாராட்டினார்.

    அந்த டேப்பை ஜி.கே.வி.யிடம் போட்டுக்காட்ட அவர் வீட்டுக்குப்போனேன். என்னைப் பார்த்ததும், "வாடா ராஜா!'' என்றார். அவருக்கு பாடல்களை போட்டுக் காட்டினேன். "இது நீ பாடலைடா? அம்பாளே வந்து பாடியிருக்கா'' என்று பாராட்டினார்.

    அண்ணியும் (ஜி.கே.வி.யின் மனைவி) உடனிருந்து பாடலை கேட்டார். "அண்ணி! எப்படி இருக்கிறது?'' என்று கேட்டேன்.

    "ஐயோ அதைக் கேட்காதப்பா? எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது'' என்றார்கள்.
    வெற்றி தோல்வி பற்றி தனக்கு கவலை இல்லை என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    ஜீவா - காஜல்அகர்வால் நடித்த ‘கவலை வேண்டாம்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில்ல, இதுகுறித்து ஜீவா கூறும்போது, நான் இதுவரை 26 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் எத்தனை படங்கள் வெற்றி, எத்தனை தோல்வி என்று எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவலைப்படுவதும் இல்லை.

    எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் சந்தோ‌ஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். சினிமாவுக்கு நான் வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது.

    என்னை ஒரு நடிகனாக்கியது, அமீரின் ‘ராம்’ படம். அவர் மதுரைக்காரர். மதுரை ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்துவிட்டால் அதுவெற்றி என்பது எனது கணிப்பு என்றார்.

    பார்த்திபன் தனது குருநாதர் பாக்யராஜுக்கு பாராட்டு விழா எடுத்து, தனது அடுத்த படத்துக்கு புக் செய்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பார்த்திபனின் குருநாதரும், பிரபல இயக்குனருமான பாக்யராஜுக்கு ‘குரு வணக்கம்’ என்ற பெயரில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

    இந்த விழாவில் பாக்யராஜுக்கு நினைவு பரிசாக மிகப்பெரிய ‘மரப்பேனா’ ஒன்றை பாண்டியராஜன் உள்பட பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்கள் அனைவரும் இணைந்து வழங்கி கவுரவித்தனர். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாரதிராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சிவகுமார், வசந்த், சரண், ரமேஷ் கண்ணா, ஆர்.கே.சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், சேரன், சுகன்யா, சுசீந்திரன், தரணி, லிங்குசாமி, நளன் குமாரசாமி, கரு.பழனியப்பன், எஸ்.வி.சேகர், சசி, சுஹாசினி, நெப்போலியன், பி.வாசு, லட்சுமி ராமகிருஷ்ணன், பிரபு, ரேகா, பவர் ஸ்டார், கங்கை அமரன், மனோபாலா, பாண்டியராஜன், ஏ.வி.எம்.சரவணன், லிசி, டிரம்ஸ் சிவமணி, ரோகிணி, மோகன் ராஜா, எடிட்டர் மோகன், நாசர், விஷால், கார்த்தி, ஷங்கர், கார்த்திக் சுப்பராஜ், கலைப்புலி எஸ்.தாணு, சுந்தர்.சி., என திரையுலக பட்டாளமே திரண்டு வந்து பாக்யராஜை பாராட்டியது.

    இந்த விழா மேடையிலேயே பார்த்திபன் தனது குருநாதருக்கு மரியாதை செலுத்தும்விதமாக பாக்யராஜின் அடுத்த படத்தை தானே தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு விடுத்தார். அந்த படத்துக்கான அட்வான்ஸ் தொகையையும் பாக்யராஜிடம் பார்த்திபன் அளித்தார். பாக்யராஜ் இயக்கவிருக்கும் அந்த படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிப்பதாகவும் அந்த மேடையிலேயே அறிவிக்கப்பட்டது.

    ரேணிகுண்டா விமான நிலையத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவிடம் சுங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.10 லட்சம் பழைய நோட்டுகள் இருந்தது. இது குறித்த செய்தியை கீழே விரிவாக பார்க்கலாம்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் அவரின் மனைவி வசுந்தராதேவி உள்பட குடும்பத்தினர் 6 பேர் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு விமானம் மூலமாக ரேணிகுண்டாவில் வந்து இறங்கினர். நடிகர் பாலகிருஷ்ணா கொண்டு வந்த உடை மற்றும் உடைமைகளை ரேணிகுண்டா விமான நிலையத்தில் பணியாற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனைச் செய்தனர்.

    அப்போது அவர்களிடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.10 லட்சம் இருந்தது தெரிய வந்தது. ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரி சீனிவாசரெட்டி பறிமுதல் செய்தார். எதற்காக இவ்வளவு பணம் கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டு நடிகர் பாலகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினார். அதற்கு அவர், நான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தேன், உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.10 லட்சத்தை கொண்டு வந்தேன் என்று பதில் அளித்தார்.

    பணத்துக்குரிய ஆவணங்கள் இருந்தால், அதனை காண்பித்து விட்டு பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நடிகர் பாலகிருஷ்ணா உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு ரூ.10 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து நடிகர் பாலகிருஷ்ணா, மனைவி வசுந்தராதேவி மற்றும் குடும்பத்தினர் ரேணிகுண்டாவில் இருந்து காரில் புறப்பட்டு திருமலைக்கு வந்தனர். திருமலையில் அவர்கள் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் புஷ்கரணியில் நடந்த பஞ்சமி தீர்த்த உற்சவத்திலும் அவர்கள் பங்கேற்றுப் புனித நீராடினர்.
    ×