என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அஜித் காலதாமதம் ஆனது ஏன்? என்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 5-ந் தேதி ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி கேட்டதும் அதிர்ச்சியடைந்த அஜித், உடனடியாக அங்கிருந்து சென்னை புறப்பட தயாராகினார்.

    பல்கேரியாவில் வெர்னா என்ற இடத்தில் இருந்து அவர் விமான நிலையம் அமைந்திருக்கும் ருமேனியாவின் தலைநகரான புகாரெஸ்ட்டுக்கு வருவதற்கு 5.30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்துள்ளது. அங்கிருந்து விமானத்தில் ஒன்றை மணி நேரம் பயணம் செய்து ஏதென்ஸ் நகரை வந்தடைந்துள்ளார்.

    ஏதென்சில் இருந்து விமானம் மூலம் அடுத்த 4.30 மணி நேரத்தில் அபுதாபிக்கு வந்தடைந்து, அங்கிருந்து 5 மணி நேரம் பயணம் செய்து சென்னைக்கு வந்தடைந்துள்ளார். கிட்டத்தட்ட பல்கேரியாவில் இருந்து 16.30 மணி நேரம் பயணம் செய்து நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடைந்துள்ளார்.

    மறைந்த ஜெயலலிதாவின் முகத்தை அஜித்தால் நேரில் பார்க்கமுடியாவிட்டாலும், அவரது உடல் புதைக்கப்பட்டுள்ள சென்னை மெரீனா கடற்கரைக்கு தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், எழுத்தாளரும், நடிகருமான சோ காலமான செய்தி கேட்டு நேரடியாக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவருக்கும் அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக பல்கேரியா புறப்பட்டு சென்றார்.
    சூர்யா தெலுங்கு நடிகர் ராம் சரணுக்காக ஒரு விஷயத்தை விட்டுக் கொடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சி 3’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்கள். மேலும், கிரிஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 23-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.

    டிசம்பர் 9-ம் தேதி தெலுங்கில் ராம் சரண் நடித்த ‘துருவா’ படம் வெளியாக இருக்கிறது. அன்றைய தினத்தில் சூர்யாவின் ‘சிங்கம் 3’ படம் வெளியானால், வசூல் பாதிக்கப்படும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சூர்யா கூறும்போது, ‘ராம் சரணின் படங்கள் எங்கள் குடும்பப் படம் போன்றது. அதனால் தான் சிங்கம் 3 படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றினோம்’ என்றார்.

    ‘துருவா’ படம் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘தனி ஒருவன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்துள்ளார். அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

    கலையுலக அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "பாடல்களில் புதுமை என்பது எனக்குப் பிடித்த விஷயம். கிடைக்கிற வாய்ப்புக்களில், அதற்காக முயற்சிக்கவும் செய்வேன். ஆனால் அம்மாதிரி முயற்சிகளுக்கு வார்த்தைகள் மூலம் முதலிலேயே முட்டுக்கட்டை போடுவதும் தொடர்ந்தே நடந்தது.

    ஆரம்பத்தில் ஜி.கே.வி.யிடம் கன்னடப்படங்களுக்கு பணியாற்றியபோதும், இம்மாதிரி நிறைய அனுபவங்கள் உண்டு. அழகான இலக்கியத் தரம் வாய்ந்த பாடல் அமையும்போது, வினியோகஸ்தர்கள் யாராவது தற்செயலாக வந்து கேட்க நேர்ந்தால், அப்போது அவர்கள் அடிக்கும் கமெண்ட் மிகவும் மட்டமாக இருக்கும்.

    கன்னடத்தில், "உச்சா ஹாடு நமகு யாத்தக்கே?'' (இது மூத்திரப்பாட்டு - நமக்கெதற்கு) என்பார்கள்.

    அதாவது, தியேட்டரில் படம் பார்ப்பவர்களை, பாத்ரூமுக்குப் போகவைக்கும் பாட்டாம்.

    ஒரு சமயம் பஞ்சு சாரையும், என்னையும் பார்த்த ஒருவர், "இந்த `மச்சானைப் பார்த்தீங்களா?' மாதிரி ஒரு டாப் கிளாஸ் பாடல் ஒண்ணு போடலாமே'' என்றார்.

    "அந்தப் பாடலை யாரும் கேட்காமல் நாமே தானே போட்டோம்'' என்று நானும் பஞ்சு சாரும் பேசிக்கொண்டோம். அதை இவர் போன்றோருக்கு எப்படிப் புரியவைப்பது?

    அதுமாதிரி "கவிக்குயில்'' படம் ரிலீசானபோது இந்த கசப்பை நான் அனுபவிக்க நேர்ந்தது. படத்தில் `காதல் ஓவியம் கண்டேன்' என்ற அந்தப் பாடலை தியேட்டர் ஆபரேட்டரிடம் சொல்லி வெட்டி வைத்து விட்டுத்தான் ஓட்டினார்கள்.

    `இவர்கள் இப்படித்தான் மட்டம் தட்டுவார்கள்' என தெரிந்து வைத்திருந்ததால் பொருட்படுத்தாமல் இருப்போம். அதோடு நிறைய வேலை இருந்ததால், இதையெல்லாம் கேட்டு வருத்தப்படவும் நேரமில்லை. நாங்கள் பாட்டுக்கு காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகு போல, சினிமா வெள்ளத்தில் விழுந்து வெற்றி அலைகளுக்கு எழும்புவதும், தோல்விப் பள்ளங்களில் வீழ்வதும் இல்லாது, மணற்பாங்கான பகுதியில் அமைதியாக ஓடும் ஆறு போல ஒரே சீராக போய்க்கொண்டிருந்தோம்.

    ஆரம்ப காலங்களில் என் நண்பன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தால், மைக் முன்னால் ரிகர்சலின் போது ஒரு காரியம் செய்வான். அன்று அவன் பாட வேண்டிய பாட்டு எந்த ஸ்ருதியில் என்ன ராகத்தில் இருக்கிறதோ, அதே ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் கம்போஸ் செய்த பாடலை பாடிக்காட்டுவான்.

    எனக்கோ, இதை நான் எம்.எஸ்.வி.யிடம் இருந்து காப்பியடித்து விட்டேன் என்று சொல்வது போல குத்தும்.

    இப்படி நான் நினைக்க காரணமிருக்கிறது. சிறு வயதில் பாவலர் அண்ணன் கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த பாடலை வாசிக்க, ஜனங்கள் கை தட்டினால், இந்த கைதட்டல்கள், பாராட்டுகள் எல்லாம் இதை இசை அமைத்தவர்களுக்குத்தான் போய்ச் சேரவேண்டும், ஜனங்கள் எனக்காக கைதட்டவில்லை என்பதில் தெளிவாக இருந்தவன் நான்.

    இன்னொருவரின் டிïனை நான் காப்பியடித்தால் அதனால் எனக்கு எப்படி பெயர் வரும்? கம்போஸ் பண்ணியவருக்கல்லவா அது போய்ச்சேரும். அந்த ஸ்ருதியில் இருக்கும் பாடல் என்ற ஒரே காரணத்துக்காக, அதன் காப்பி என்று எஸ்.பி.பி. சொல்கிறானோ என்று மனம் துக்கப்படும்.

    பாடல் வெளிவந்து ஜனங்கள் பாராட்டியவுடன் அவனே வந்து, "டேய்! அந்தப் பாடல் ரொம்பப் பிரமாதம், அதைப் பாடும்போது இப்படி வரும் என்று தெரியாது'' என்று நல்லபடியாகப் பேசிவிடுவான்.

    இசையில் புதுப்புது முயற்சிகளுக்கு நான் தயாராக இருந்ததால், நாளடைவில் எஸ்.பி.பி.யும், எஸ்.ஜானகியும் கூட, `ராஜா! உங்க ரெக்கார்டிங்கிற்கு வருவதாக இருந்தால் பரீட்சைக்கு போகும் மாணவன் மாதிரி பயந்து கொண்டே வரவேண்டியிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள்.  எல்லாம் ஜாலியாகத்தான். புதுமை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்போது அவர்களுக்கும்தானே பெயர்!

    ஆனால் இன்று வரை நான் யாருக்கும் பரீட்சை வைக்கவில்லை. எனக்கு நானே ஒவ்வொரு படத்திலும் பரீட்சை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்திலும் கற்றது எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்கிறேன்.''

    அண்ணன் பாஸ்கர் அடிக்கடி போய் சந்திக்கும் நண்பர்களில் ஒருவர் கலைஞானம். அவர் அப்போது தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தார். அங்கே அவருடன் தூயவன், மகேந்திரன் ஆகியோரும் இருந்தார்கள்.

    கலைஞானம் நல்ல கதை ஞானம் உள்ளவர். அவர் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும், டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த பாஸ்கர் டைரக்ட் செய்யப் போவதாகவும், படத்தில் ரஜினி - ஸ்ரீபிரியா ஜோடியாக நடிப்பதாகவும் கூறினார். இந்தப் படத்துக்கு இசையமைத்துத்தர என்னைக் கேட்டார். ஒப்புக்கொண்டேன்.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் செட்டில் ரஜினியை பார்த்துப் பேசினேன். அன்றைய தினம், கால் நொண்டியானதும் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    டைரக்டர் கே.பாலசந்தர் சாரிடம் இரண்டு ஹீரோக்களாக கமலும், ரஜினியும் நடித்துக் கொண்டிருந்தவர்கள், தனித்தனியாக நடிக்க முடிவெடுத்த நேரத்தில் ரஜினிக்கு இந்தப் படம் வந்திருந்தது.

    இது தனி ஹீரோ படம். அடுத்து "புவனா ஒரு கேள்விக்குறி'' என்ற படத்தில் சிவகுமாருடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் என்றும் ஒரு செய்தி வந்தது.

    ரஜினியை ஷூட்டிங்கில் பார்த்தபோது, ஒரு நெருப்பு கனன்று கொண்டிருப்பது போல் தெரிந்தது. எனக்குள்ளும் தான் அப்படியொரு `நெருப்பு' ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் இருவருடைய பேச்சும், சாதிக்க வேண்டிய இலக்கு பற்றியே வெறியோடு இருந்தது.

    "பைரவி'' பட செட்டில் கலைஞானமும் பாஸ்கரும் என்னிடம், "தேவையான பாடலை உடனடியாக ரெக்கார்டு செய்ய வேண்டும்'' எனச்சொன்னார்கள்.

    கவிதா ஓட்டலில் கவியரசர் கண்ணதாசனுடன் கம்போசிங்கிற்கு போனோம்.

    டைரக்டர் பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, "நண்டூருது நரிïருது'' என்று கிராமப்புறத்தில் பாடப்படும் குழந்தைகளின் விளையாட்டுப் பாடலை பல்லவியாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே டிïனை `நண்டூருது நரிïருது' என்ற சந்தத்தை வைத்தே தொடங்கியிருந்தேன்.

    கண்ணதாசனும் `நண்டூருது' என்றே தொடங்கி, தங்கையை இழந்து நிற்கும் அண்ணன், தங்கையை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் சரணத்தில், உச்சஸ்தாயியில் "ஏழைக்கு வாழ்வு என்று எழுதியவன் எங்கே?'' என்று எழுதியவுடன், பாடலின் வல்லமை எங்கேயோ உயரத்துக்குப்

    போய்விட்டது.இந்தப் பாடலுக்கான காட்சி படமாக்கப்படும்போது, நான் இருந்தேன். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய அந்த அருமையான ஆண்மைக் குரலின் வார்த்தைகளுக்கு, ரஜினி காலிழந்து கட்டைகளோடு நிற்க, ஒரு டிராலி ஷாட் போட்டு ரஜினியிடம் காமிரா போய் நிற்பதாக எடுத்தார், டைரக்டர் பாஸ்கர்.

    எடுக்கும்போதே அந்த `ஸ்பிரிட்' தெரிந்தது. அது படத்தின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.

    இந்தப் படத்திலேயே `கட்டப்புள்ள குட்டப்புள்ள' என்ற கிராமியப் பாடலையும் டைரக்டரும், கலைஞானமும் போடச் சொன்னார்கள். கவிதா ஓட்டலில் கம்போஸ் நடந்தபோது, கலைஞானம் என்னைக் கேட்காமல் வினியோகஸ்தர்கள் சிலரை வரவழைத்து விட்டார். அதில் குடந்தையைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார்.

    அவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே கவிக்குயில் பாடல் பதிவின்போது ஏற்பட்ட சம்பவம் நினைவுக்கு வர, இவர்கள் நம் பாடல் இப்படித்தான் வரவேண்டும் என்று தீர்மானம் செய்தால், நாம் புதிதாய் எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து போயிற்று. எனவே யாராவது "பாடலை பாடிக்காட்டுங்கள்'' என்று கேட்டால், பாடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

    பாடல்களை கவியரசரும் எழுதிவிட்டார். எல்லாவற்றையும் முழுமையாக பாடிவிட்டேன்.

    இந்த நேரத்தில் கலைஞானம், வினியோகஸ்தர்களை அழைத்து வந்தார். கவியரசருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு என்னைப் பார்த்து "பாடலைக் கொஞ்சம் வாசித்துக் காட்டுங்கள்'' என்றார்.

    ஆனால், நானோ எல்லாரும் ஆவலுடன் பாட்டை எதிர்பார்த்தும் ஆர்மோனியத்தை மூடிவிட்டு எழுந்து விட்டேன்.

    எழுந்தவன் கலைஞானம் அவர்களிடம் கூலாக, "இங்கே பாடினா ஒன்றும் புரியாது. டி.எம்.எஸ் - சுசிலாவை பாட வைத்து மிïசிக்கோடு ரெக்கார்டு செய்து போட்டுக் காட்டிவிடுவோம். அப்போது நன்றாக இருக்கும்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த யாருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.

    கண்ணதாசன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்பது அவர் எங்களைப் பார்த்த பார்வையில் இருந்தே புரிந்து போயிற்று.

    ரிக்கார்டிங் சமயத்தில் எனக்கும் கலைஞானத்துக்கும் ஒரு தகராறு.

    "மூன்று நாளைக்குள் ரிக்கார்டிங்கை முடிக்கத்தான் பணம் இருக்கிறது. அதனால் எப்படியாவது மூன்று நாளைக்குள் முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதுவரை இதுபோன்றதொரு பிரச்சினையை சந்தித்து இராததால், கலைஞானம் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம்

    வந்துவிட்டது.
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த வருடமும் டிசம்பர் 15-ந் தேதி முதல் டிசம்பர் 22-ந் தேதி வரை 14-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல மொழிகளை சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி, சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். அதன்படி, ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திரைப்பட விழாவில் ‘24’, ‘அம்மா கணக்கு’, ‘தேவி’, ‘தர்மதுரை’, ‘இறைவி’, ‘ஜோக்கர்’, ‘கர்மா’, ‘நானும் ரௌடிதான்’, ‘பசங்க 2’, ‘ரூபாய்’, ‘சில சமயங்களில்’, ‘உறியடி’ ஆகிய தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். அவரது உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரைப்பட நட்சத்திரங்களும், ஏராளமான பொதுமக்களும் நேரில் சென்று ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து பல்வேறு பிரமுகர்களும் மறைந்த ஜெயலலிதாவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகுமார் தனது குடும்பத்துடன் நேற்று ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று, அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் கூறும்போது, மனித இனம் தோன்றிய நாள் முதல் நாம் பெண்களை கொத்தடிமைகளாக, சம்பளமில்லாத வேலைக்காரிகளாக, பிள்ளை பெறும் எந்திரமாகவே நடத்தி வந்திருக்கிறோம். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், டெமஸ்தனிஸ், டால்ஸ்டாய், காந்திஜி உள்பட பல மேதைகள் பெண்களை இரண்டாம் தரத்தில் வைத்தே பார்த்திருக்கிறார்கள்.

    அந்தப் பெண் இனத்தில், கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இடம்பிடித்த அபூர்வப் பெண்மணி ஜெ. அம்மையார். இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர், இந்திய பிரதமர் இந்திரா காந்தி வரிசையில் இன்னொரு இரும்பு பெண்மணியாக மதிக்கப்பட்டார்.

    திரையுலகில் கதாநாயகியாகவே துவக்கத்திலிருந்து நடித்து ராணியாகவே வாழ்ந்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் 116 படங்களில் நடித்தார். அதில் எட்டுப் படங்களில் அவரோடு நானும் நடித்திருக்கிறேன். 'கந்தன் கருணை'யில் அவர் வள்ளியாகவும் நான் முருகனாகவும், 'கிருஷ்ண லீலா' வில் அவர் பாமாவாகவும் நான் கிருஷ்ணனாகவும் நடித்தோம்.

    40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சக கலைஞனை மதித்து, என் குழந்தைகள் மூவரின் திருமணத்திற்கும் தவறாது வந்து ஆசி கூறிச் சென்றார். அரசியலில் கால்பதித்து 34 ஆண்டுகள் ஆகின்றன. அதில் 15 ஆண்டுகள் பதவியில் இருந்திருக்கிறார். அம்மா, அப்பா உயிரோடு இல்லை. சொந்த பந்தம் என்று சொல்லிக் கொள்கிறாற் போல, அவரோடு கூட யாரும் இல்லை.

    தனியாளாக, அசாத்தியத் துணிச்சலுடன் ஆணாதிக்க அரசியல் உலகில் கால்பதித்து, கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று 5 முறை அவர் முதல்வரானது சரித்திர சாதனை. கண்ணீர் சிந்தும் கோடி மக்களில் இப்போது நானும் ஒருவனாய் நிற்கிறேன். இறுதி அஞ்சலி செலுத்த, குடும்பத்தினருடன் சென்றேன். சூர்யா, கார்த்தி சென்று மரியாதை செய்து வந்தனர். அவர் ஆத்மா சாந்தி அடைவதாக..

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    ஏ.வெங்கடேஷ் தனது 23-வது படமாக ‘நேத்ரா’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.

     ‘மகாபிரபு’, ‘ஏய்’, ‘பகவதி’, ‘குத்து’, ‘சாணக்யா’ உள்பட 22 படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இவரது 23-வது படம் ‘நேத்ரா’. இதில் வினய், சுமிக்ஷா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த்தேவா இசை அமைக்கிறார்.

    தமிழ் நாட்டில் இருந்து கனடா செல்லும் ஒரு இளம் தம்பதி விபரீதங்களை எதிர்கொள்ளும் கதை. கனடாவை சேர்ந்த பா.ராஜசிங்கம் இதை தயாரிக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு கனடாவில் நடக்கிறது.

    இதுபற்றி கூறிய இயக்குனர் வெங்கடேஷ், “இது திரில்லர், காமெடி கலந்த கதை. மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் இணைந்து காமெடியில் கலக்குகிறார்கள்” என்றார்.

    நடிகர், பத்திரிகையாளர் சோவின் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
    நடிகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் அறிக்கையையும் வெளியிட்டிருக்கின்றனர்.

    அதில், ‘சோ’ இந்த ஒற்றை வார்த்தைக்குப்பின் அடுக்கடுக்காய் பல படிமங்கள் தொகுத்து நிற்கின்றன. வழக்கறிஞராய், நாடகவியலாளராய், திரைப்பட நடிகராய், விமர்சகராய், பத்திரிகையாளராய் என நீண்டு கொண்டே போகின்றன. ஆனால் ஒவ்வொரு படிமமும் இதுவரை யாரும் பதித்திராத வகையில் தனக்கென தனியொரு பாணி வகுத்தவர்.

    மனதுக்கு பிடித்தோரை கண்முடித்தனமாய் பின்பற்றும் இன்றைய அரசியல் சூழலில், தான் ஆதரித்தோரை தவறு செய்யும் போது கடுமையாக விமர்சித்தும், விமர்சிக்கப்பட்டவர் சரியானதொரு காரியம் செய்யும்போது பெருமனதோடு ஆதரிப்பதும், பத்திரிகையாளராய் அவருடைய முதிர்ச்சி பாராட்டுக்குரியது, பின்பற்றக்கூடியது.

    அன்னாரை இழந்துவாடும், உற்றத்தார், சுற்றத்தார், நாடகம், திரைப்படம் சார்ந்தோர், பத்திரிகையாளர் அனைவரோடு தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை பிரிந்த துக்கத்தில் பங்கு கொள்கிறது. அவர் ஆன்மா சாந்தியடைவதாக.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் மரணத்திற்கு நடிகர் விக்ரம் தனது ஆழ்ந்த இரங்கலை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விவரத்தை கீழே பார்ப்போம்.
    மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தமிழ்நாட்டையே மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மரணத்திற்கு பிரபலங்களும் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெளிநாட்டுக்கு பயணமாகியிருந்த விக்ரம் ஒரு சில காரணங்களால் சென்னை திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அவரால் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

    தனது இயலாமையை வருத்தத்துடன் இரங்கல் செய்தியாக வெளியிட்டுள்ளார் விக்ரம். அதில் அவர் கூறும்போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த செய்தி கேள்விப்பட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, என்னைப்போன்ற பலகோடி ரசிகர்களின் கண்களுக்கு நட்சத்திரமாகவும் திகழ்ந்துள்ளார்.

    அவரது ஆளுமை, உள் வலிமை என அனைத்தையும் தவறவிட்டோம். அவருடைய இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை. இந்தியாவிற்கே பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
    ஜெயலலிதா இறுதிச்சடங்கின் போது கருணாஸ் செல்பிக்கு போஸ் கொடுத்த சம்பவம் தற்போது இணையதளங்களில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். முதன்முதலாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாஸ், சட்டசபையில் ஜெயலலிதாவை புகழ்ந்துப் பாடி, அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களும் நடந்ததுண்டு.

    இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்கு பிறகு, ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. தமிழகம் மட்டுமில்லாது உலகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

    குடியரசு தலைவர், பிரதமர், உலக நாடுகளின் தூதர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி தங்களது சோகத்தை பகிர்ந்துகொண்டனர். அதன்பின்னர், மாலை 6 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

    அப்போது, அந்த இடத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் சோகமயத்துடனும், அழுகை கலந்த முகத்துடனும் காணப்பட்டனர். ஆனால், இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட கருணாஸ், ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்திற்கும் ஆளாக்கியுள்ளது.

    கருணாஸ் சட்டசபையில் ஜெயலலிதாவை புகழ்ந்து பாடிய வீடியோ...

    இந்தி திரையுலகின் பழம்பெரும் கதாநாயகன் நடிகர் திலீப் குமார்(93) உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    மும்பை:

    மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்தவர் திலீப் குமார். இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படத்தை தழுவி எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படம் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.

    பாலிவுட் முன்னாள் கதாநாயகி சாய்ரா பானுவை திருமணம் செய்த திலீப் குமார், கடைசியாக 1998-ம் ஆண்டில் வெளியான ‘கிலா’ படத்தில் நடித்திருந்தார். 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் உள்ள வீட்டில் பூரண ஓய்வெடுத்து வந்த திலீப் குமாருக்கு திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

    வரும் 11-ம் தேதி 94-வது பிறந்தநாள் காணும் திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலைப்பட எதுவும் இல்லை என்றும் அவரது மனைவி சாய்ரா பானு குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய சினிமாத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பாபா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டிலும், மத்திய அரசின் மிகஉயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதினை கடந்த 2015-ம் ஆண்டும் திலீப் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    கவிஞர் வைரமுத்துவின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவல்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவரது மகன் கவிஞர் கபிலன், வதந்திகளை பரப்பும் ஊடகங்களை கண்டித்துள்ளார்.
    சென்னை:

    கவிஞர் வைரமுத்து ஆண்டுதோறும் ஒருமுறை வழக்கமாக செய்துகொள்ளும் வழக்கமான பரிசோதனைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில், அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பத்திரிகையாளரும் நடிகருமான சோ ஆகியோர் சமீபத்தில் அடுத்தடுத்து காலமானதௌ சுட்டிக்காட்டிய சில ஆன்லைன் ஊடகங்கள் கவிஞர் வைரமுத்து உடல் பரிசோதனைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்புப்படுத்தி விரும்பத்தகாத வகையில் தகவல்களை வெளியிட்டன.

    அந்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவத் தொடங்கியதும், கவிஞர் வைரமுத்து விளக்கம் தெரிவித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

    ’வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.

    நான் முழு உடல் நலத்தோடுஇருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது.

    பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம். என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கு என் வணக்கம்’ என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    தனது தந்தையை பற்றி பரவிய விரும்பத்தகாத வதந்திகளுக்கு அவரது மகனான கவிஞர் கபிலன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கபிலன், ’செய்தியை நிஜம் மாறாமல் ஒளிபரப்பும் நேர்மையான ஊடகங்களுக்கு மத்தியில் வதந்திகளை மட்டுமே ஒளிபரப்பும் சில ஊடகங்கள் இருப்பது வருத்தமளிக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
    பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர் சோ என்று அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபிறகு ரஜினிகாந்த் பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சோ வின் நெருங்கிய நண்பரும், சக நடிகருமான ரஜினி நேரில் வந்து சோ-வின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் பேசும்போது, 1978-ஆம் ஆண்டிலிருந்து எனக்கு சோ நல்ல நண்பர். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது அவரை சந்திப்பேன்.

    பத்திரிகை துறையில் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தவர். பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர். அவர் பொய் சொல்லி இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை. அவரது நட்பு வட்டாரம் தமிழகம் மட்டுமல்ல, டில்லி வரை வளர்ந்து கிடந்தது. மொராஜி தேசாய், வாஜ்பாயிலிருந்து இப்போது மோடி வரை அவருக்கு நன்கு பழக்கமானவர்கள். இவ்வளவு பெரிய மனிதரின் இழப்பு சாதாரணமானது இல்லை என்று கூறினார்.

    ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படம் வெளியானபிறகு, அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த ரஜினி முதன்முதலாக சோ ராமசாமியை நேரில் அழைத்து அவருக்கு ‘கபாலி’ படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×