என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சூரிய மின் உற்பத்திக்கான சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் 8 மாத சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுதலையானார். இவர் மீது திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, பெரும்பாவூர், கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெரும்பாவூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கபட்டு உள்ளது. இது, சோலார் பேனல் வழக்கில் வழங்கப்பட்ட முதல் தண்டனையாகும்.
    மலையாளத்தில் ‘ஆடுபுலியாட்டம்’ என்ற பெயரில் ஜெயராம் - ரம்யா கிருஷ்ணன் நடித்த படமே தமிழில் ‘செண்பக கோட்டை’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    காட்டுவழியாக செல்லும் அரசர் வேடர் குலத்தை சேர்ந்த பெண்ணை பார்த்தவுடன் காதல்வயப்படுகிறார். அந்த பெண்ணின் தந்தையிடம் பேசி அவளை திருமணமும் செய்துகொள்கிறார். பின்னர் அவளுக்காக அந்த காட்டுக்குள்ளேயே செண்பக கோட்டை ஒன்றை கட்டிக் கொடுத்து, அவளை அதற்கு அரசியாக முடிசூட்டி விட்டு தனது நாட்டுக்கு திரும்புகிறார்.

    இவர் சென்ற நேரம், எதிரிகள் இவரது நாட்டை சூழ்ந்துவிடுகின்றனர். இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றன சூழ்நிலை உருவாகிறது. இதனால், உயிரை காப்பாற்றிக் கொள்ள செண்பக கோட்டைக்கு வருகிறார். செண்பக கோட்டையில் அரசியாக இருக்கும் வேடர் குலத்து பெண், அரசனின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டு, பேயாக மாறி அந்த கோட்டையையும் மன்னனையும் காப்பாற்றி வருகிறாள்.

    பின்னர், பல நூறு வருடங்களுக்கு பிறகு கதை நகர்கிறது. செண்பகக் கோட்டையில் வசித்து வந்த அனைவரும் இறந்துபோக அந்த கோட்டையே பாழடைந்து போகிறது. ஆனால், அந்த பெண்ணின் ஆவி மட்டும் அந்த கோட்டையை சுற்றி வருகிறது. இந்நிலையில், அந்த ஆவியை சாந்தப்படுத்துவதற்காக கோட்டையின் வாயிலில் காளி கோவில் ஒன்றை நிறுவி, அந்த கோவிலில் பூஜை செய்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

    கணவனை இழந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், செண்பக கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை அபகரிக்க நினைக்கும் நரேன், அதை செய்ய முடியாததால் ஜெயராம் உதவியை நாடுகிறார். ஜெயராமும் பணத்துக்காக அதை செய்ய முடிவெடுக்கிறார்.

    அதற்காக செண்பகக் கோட்டைக்கு செல்லும் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவளது குழந்தையிடம் நல்ல விதமாக பழகி அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார். ஒருகட்டத்தில் ரம்யா கிருஷ்ணனையும் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு செண்பகக் கோட்டைக்கு சொந்தமான நிலங்களின் பத்திரங்களை எல்லாம் தன் பெயரில் மாற்றிக் கொண்டு இவர்களை விட்டு செல்கிறார்.

    ஜெயராம் சென்றதும் ரம்யா கிருஷ்ணனின் மகள் இறந்து போகிறாள். ரம்யா கிருஷ்ணனும் என்ன ஆனாள் என்று தெரியவில்லை. சில ஆண்டுகள் கழிந்த நிலையில், ஜெயராமுக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், ஒரு ஆவி இவர்களது குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. இதனால், சாமியாரான ஓம் பூரியை நாடுகிறார் ஜெயராம். அவர் மூலமாக, ரம்யா கிருஷ்ணன் மகளுடைய ஆவிதான் இவரது குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்.

    இறுதியில், அந்த ஆவியிடமிருந்து ஜெயராம் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அல்லது ஆவி இவரது குடும்பத்தை பழி வாங்கியதா? என்பதே மீதிக்கதை.

    ஜெயராம் இரு விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணனுடன் வரும்போது இளமையான தோற்றத்திலும், அதன்பிறகு, ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு தாடி லுக்கிலும் பார்க்க ரொம்பவும் அழகாகவே இருக்கிறார். தனக்கே உரித்த தனி பாணியில் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

    ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மன் வேடமேற்று நடிப்பதற்கு சொல்லித்தர தேவையில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் வழக்கம்போல் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயராமின் குழந்தையாக நடித்துள்ள சிறுமியும், ரம்யா கிருஷ்ணனின் குழந்தையாக வரும் சிறுமியும் குறை சொல்லமுடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    ‘ஆடுகளம்’ நரேன் ஒரேயொரு காட்சியில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். சம்பத்துக்கும் பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும், அழகான கதாபாத்திரம், அதை உணர்ந்து செய்திருக்கிறார். சாமியாராக வரும் ஓம் பூரி ஆர்ப்பாட்டமில்லாத, அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

    இப்படத்தில் மூன்று விதமான கதைகளை சொல்லி, அதை ஒவ்வொன்றுக்கும் தொடர்புபடுத்தியிருக்கிறார் இயக்குனர் தாமரைக்குளம் கண்ணன். படத்தின் முதல் பாதியிலேயே கதையை சொல்லி முடித்துவிடுகிறார். அதன்பிறகு, படத்தில் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தால், ரம்யா கிருஷ்ணன் - ஜெயராம் காதல், அதைத் தொடர்ந்து துரோகம், திரில் என படத்தை கொண்டு போய் ரசிக்க வைத்திருக்கிறார்.

    ரத்தீஷ் வேகாவின் இசையில் ரம்யா கிருஷ்ணன் ஆடிப் பாடும் சாமி பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜித்து தாமோதரின் ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் அழகாக படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘செண்பகக் கோட்டை’ சுற்றி பார்க்கலாம்.

    தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளதால் கேரளாவில் புதிய படங்கள் வெளியாகவில்லை. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.

    கேரளாவில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருதிவிராஜ் உள்பட பலர் நடித்த சினிமா திரையிடப்பட்டு வருகிறது.

    மேலும் கேரள தியேட்டர்களில் தமிழ் திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் படங்களும் அதிகளவில் திரையிடப்படுகிறது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்றோர் படங்களுக்கும் மலையாள ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

    தற்போது கேரளாவில் உள்ள சினிமா தியேட்டர் களில் திரையிடப்படும் மலையாள படங்களை பொறுத்தவரையில் அதன் வசூலில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு 60 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதி உள்ள 40 சதவீதம் தியேட்டர் அதிபர்களுக்கு செல்லும்.

    இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வசூல் தொகையை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை மலையாள பட தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஏற்கவில்லை. இதைதொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் இடையே வசூலை பிரிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    ஆனால் இதில் தியேட்டர் உரிமையாளர்கள் பிடிவாதமாக தங்களுக்கு வசூல் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று கூறியதாலும் அதை தயாரிப்பாளர்கள் ஏற்காததாலும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதைதொடர்ந்து தியேட்டர் அதிபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று முதல் மலையாள சினிமா படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புதிய மலையாள திரைப் படங்களையும் திரையிடமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

    சினிமா தயாரிப்பாளர்கள் போராட்டம் காரணமாக மோகன்லால், பிருதிவிராஜ், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆகியோரின் புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான சினிமா தொழிலாளர்களும் வேலை இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இதனால் ஏற்கனவே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பழைய மலையாள சினிமாக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள சிங்கம்-3 தமிழ் சினிமாவை வெளியிடுவதிலும் மலையாள தியேட்டர் அதிபர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இதனால் அதிக தியேட்டர்களில் சிங்கம்-3 கேரளாவில் வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    அரசியல்வாதிகளின் சர்ச்சைக்குரிய மறுபக்கத்தை திரைப்படங்களாக தயாரித்து கடும் விமர்சனக் கணைகளை எதிர்கொள்வதில் பேர்போன இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘சசிகலா’ என்ற தலைப்பை ஒருபடத்துகாக தேர்வு செய்து, பதிவும் செய்து வைத்துள்ளார்.
    ஆந்திர மாநில அரசியல் களத்தில் நிலவிவரும் ரவுடியிசத்தை மையப்படுத்தி ‘ரத்தச் சரித்ரா’, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில போலீசாருக்கு சிம்மசொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியை விவரிக்கும் ‘கில்லிங் வீரப்பன்’ உள்பட சர்ச்சையை கிளப்புவதற்கென்றே படம் இயக்குவதில் பேர்போனவர் ராம்கோபால் வர்மா.

    தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பின்னர் இங்கு அ.தி.மு.க.வின் தலைமை பதவியை ஏற்கப்போவது யார்? என்பதை ஒட்டுமொத்த நாடும் உற்றுப்பார்க்க தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், பாலிவுட் திரையுலகமும் தமிழ்நாட்டு அரசியலில் நிகழவுள்ள திடீர் திருப்பங்களை கண்கொட்டாமல் கவனித்து வருவது தற்போது உறுதியாகியுள்ளது.

    இதை தெளிவுப்படுத்தும் விதமாக, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான ‘சசிகலா’ என்ற பெயரை தனது அடுத்தப் படத்துக்கான தலைப்பாக தேர்வு செய்து அதை பதிவும் செய்து வைத்துள்ளதாக நேற்று பின்னிரவு ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.



    ராம்கோபால் வர்மா முன்னாள் முதல்வர் கையால் நந்தி விருதை பெறும் காட்சி

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது உண்மையாகவே மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், அதற்கும் மேலான மரியாதையை அவரது தோழி சசிகலா மீது வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதாவே மற்றவர்களைவிட சசிகலா மீது அதிக மரியாதை வைத்திருந்ததால்தான் எனது படத்துக்கு ‘சசிகலா’ என்று பெயரிட தீர்மானித்தேன் என்றும் ராம்கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

    ராம்கோபால் வர்மாவின் இந்த அறிவிப்புக்கு டுவிட்டரில் சிலர், “சசிகலா’ படத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் ‘சின்ன அம்மா’ என்று பெயர் வைத்தால் நிச்சயமாக வரிவிலக்கு உண்டு என்று கமெண்ட் அடித்துள்ளனர்.
    செக் மோசடி வழக்கில் ஆஜராகாத நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு சேலம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் டாக்டர் சீனிவாசன். இவர் அக்கு பஞ்சர் டாக்டர் தொழில் செய்து வந்தவர். பின்னர், சொந்தமாக ‘லத்திகா’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடித்தார். பின்னர் ஐ, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பன உள்பட பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார்.

    கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தனது நண்பரான சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர் அர்த்தநாரியிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. தான் பெற்ற கடனுக்காக, நடிகர் சீனிவாசன் தலா ரூ.1 லட்சம் என 5 செக்குகளை அர்த்தநாரியிடம் வழங்கியுள்ளார்.

    அந்த செக்குகள் வங்கிகள் பணம் இருப்பு இல்லை என செக் திரும்ப வந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசன் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து அர்த்தநாரி, சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு கணேசன் முன்னிலையில் ‘செக்‘ மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6-ந் தேதி மும்பை பாந்திரா லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் வீக்கம் ஏற்பட்டதால், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.

    அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து 94 வயது திலீப்குமார் டிஸ்சார்ஜ் ஆனார். தற்போது, அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும், அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் அவருடைய மனைவி சாய்ரா பானு நிருபர்களிடம் கூறினார்.

    திலீப்குமார் ஆஸ்பத்திரியில் இருந்தவாறு கடந்த 11-ந்தேதி தன்னுடைய 94-வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.
    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.

    இசை அனுபவங்கள் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பழசை நினைத்துப் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. இன்றைக்கு, ஒரு இசையமைப்பாளராக என்னை ரசிகர்கள் அங்கீகரித்துக் கொண்டால்கூட, ஊரில் இருந்து நான் வரும்போது இந்த நம்பிக்கை இருந்ததா என்றால், "இல்லை'' என்பதுதான் என் பதிலாக இருக்கும்.

    "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பாடல்கள் பதிவான நிலையில் ஒரு நாள் அண்ணன் பாஸ்கரிடம் மனம் விட்டுப் பேசினேன். "அண்ணா! நாம் கிராமத்தை விட்டு வரும்போது அம்மா நம்மிடம் `பட்டணத்தில் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். பதிலுக்கு நாம், "அப்படி ஒருவேளை எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என்றால், பிளாட்பாரத்தில் - தெருவில் உட்கார்ந்து ஜனங்கள் முன்பு வாசிப்போம். எங்களுக்கென்ன கவலை!'' என்று சொன்னோமல்லவா! அப்படி வாசிக்கும் நிலைமை ஏற்படவில்லையென்றாலும், கடற்கரையில் உட்கார்ந்து வாசிப்பது போல ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்வோமா?'' என்று கேட்டேன்.

    பாஸ்கருக்கு என் யோசனை பிடித்தது. "போகலாமே'' என்றார்.

    பீச்சுக்குப்போனால் அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்காக கமல் நடிக்க பாரதிராஜா டைரக்ட் செய்து கொண்டிருந்தார்.

    தானாகக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா?

    நாங்கள் பிளாட்பாரத்தில் வாசிப்பது போலவும், கமலும் பாரதியும் எங்கள் பாட்டை கேட்டுக்கொண்டே தரையில் விரித்திருந்த துண்டில் காசு போடுவது போலும் படங்கள் எடுத்துக்கொண்டோம்!

    "சிகப்பு ரோஜாக்கள்'' படம் பின்னணி இசைக்காக என்னிடம் வந்தது.

    பாரதிராஜா தனது தாயாருடன் தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் இருந்தபோது நானும் பாரதியும் அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. காலேஜ் வரை நடந்து போய் வருவோம். சில சமயம் இரவு 9 மணியைக் கடந்து வீட்டுக்குத் திரும்புவோம்.

    இப்படி ஒரு நாள் `வாக்கிங்' போன நேரத்தில், பாரதி ஒரு கதை சொன்னார். அது புகழ் பெற்ற ஆலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் படம் போல இருந்தது.

    நாங்கள் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே பாழடைந்த பங்களா ஒன்று எங்கள் கண்ணில்படும். அதை பார்த்துத்தான் அந்தக் கதை தன் மனதில் உருவானதாக பாரதி சொன்னார். அந்தக் கதைதான், அவரது டைரக்ஷனில் `சிகப்பு ரோஜாக்கள்' ஆகியிருந்தது. பாரதிராஜா என்றால் கிராமத்துக் கதைகளை மட்டுமே டைரக்ட் செய்வார் என்று அப்போது ஒரு பேச்சு இருந்தது. அதற்குப் பதிலடி தருகிற விதத்தில் இந்தப் படம் வந்திருப்பதை ரெக்கார்டிங்கின் போதே தெரிந்து கொண்டேன்.

    பின்னணி இசைக்கு பொதுவாக எல்லாப் படத்துக்கும் 6 கால்ஷீட்டுகள் தேவைப்படும். ஆனால் இந்தப் படத்துக்கோ 4 கால்ஷீட்டுகளே தேவைப்பட்டது. அதாவது மூன்று நாளில் ஐந்தே பேர்தான் இசைக்குழு. நான்காவது கால்ஷீட்டில் 12 வயலின், 2 செல்லோ அவ்வளவுதான்.

    சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பின்னணி இசைக்கு மொத்தப் பில்லும் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.

    இந்தப் படத்தின் வெற்றி, இதை இந்திக்கும் கொண்டு போனது. இந்தி `ரீமேக்'கில் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார்.

    எப்படி இந்த பின்னணி இசையை கிரியேட் செய்தேன் என்று என்னிடம் அவரே கேட்டு வியந்தார்.

    இந்தப் படத்துக்கு அவர் அமைத்த இசையில் சரியான `எபெக்ட்' வராமல் இருந்திருக்கிறது. இதனால் தமிழில் நான் இசையமைத்த "மிïசிக்'' டிராக்குகளை தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம் கேட்டிருக்கிறார், பாரதி.

    கே.ஆர்.ஜி. என்னிடம் வந்து "கொடுக்கலாமா?'' என்று கேட்டார். நான் கே.ஆர்.ஜி.யிடம், "என்னைவிட நன்றாக இசையமைப்பார் என்றுதானே ஆர்.டி.பர்மனிடம் பாரதி போனார்! அவரே போடட்டும். டிராக்குகளை கொடுக்கவேண்டாம்'' என்று கூறிவிட்டேன். டிராக்குகளை கொடுத்திருந்தாலும் டைட்டிலில் என் பெயர் வராதல்லவா!''

    நடிகர் பாலாஜி தயாரிப்பாளராகவும் மாறி, படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார். "தியாகம்'' என்ற படத்தை அப்போது தயாரித்தார். சிவாஜி நடித்த இந்தப் படத்தில், "வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள், கலைந்திடும் கனவுகள்' கண்ணீர் சிந்தும் உறவுகள்'' என்ற கவியரசு கண்ணதாசனின் அற்புதமான சிந்தனையுடன் கூடிய பாடல் இடம் பெற்றது.

    இதே படத்தில் சிவாஜி பாடுவதாக வரும் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு'' என்ற பாடலும் காலத்தில் அழியாதது.

    "நதி வெள்ளம் காய்ந்து விட்டால்

    நதி செய்த குற்றம் இல்லை!

    விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா!

    மனிதனம்மா மயங்குகிறேன்''

    - இப்படி போகும் பாடலில் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக சொல்லியிருந்தார் கவியரசர்.

    தமிழில் சிவாஜி நடித்த "வாழ நினைத்தால் வாழலாம்'', "வட்டத்துக்குள் சதுரம்'' என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில், `வயசு பிடிசிந்தி' என்ற தெலுங்குப் பட வாய்ப்பும் வந்தது. இந்த வகையில் என் முதல் தெலுங்குப்படம் இது.

    இதே சமயத்தில் `வ்யா மோஹம்' என்ற மலையாள படத்துக்கும் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. எனது இசையில் வந்த இந்த முதல் மலையாளப்படம் தமிழில் ஸ்ரீதர் டைரக்ட் செய்த "போலீஸ்காரன் மகள்'' என்ற படத்தின் ரீமேக்.

    தேவர் பிலிம்ஸ் "அன்னை ஓர் ஆலயம்'' என்றொரு படம் எடுத்தார்கள். ரஜினி முதன் முதலாக தேவர் பிலிம்சில் நடித்த படம்.

    இந்தப் படத்துக்கு முன்னால் ஒரு முறை திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம் என்று போயிருந்தேன். பெயர், புகழ் என்று எந்த செல்வாக்கையும் உபயோகிக்காமல் சாதாரண பக்தனாக போய் வந்தேன். என்னுடன் மனைவி, குழந்தைகளும் வந்திருந்தார்கள்.

    அப்படிப் போனபோது தரிசனம் செய்யக்கூட விடாமல், பிடித்துத் தள்ளுவதும், ஆட்கள் நெருக்குவதுமாக மிகவும் வருந்தும்படியான தரிசனமாகியது. அப்போது நான் பெருமாளிடம், "சந்நிதியில் சாதாரணமாக வந்தேன். உன்னை தரிசிக்க இயலவில்லை. இனிமேல் உன்னைப் பார்க்க வரமாட்டேன்'' என்று சபதம் செய்து விட்டு வந்துவிட்டேன்.

    "அன்னை ஓர் ஆலயம்'' படத்தின் இசை அமைப்பாளர் என்ற முறையில் என்னை படத்தின் டைரக்டர் தியாகராஜன் சந்தித்தார். "ராஜா சார்! அன்னை ஓர் ஆலயம்'' கம்போசிங்கிற்கு திருப்பதி போகலாமா?'' என்று கேட்டார்.

    மூகாம்பிகை போய் என் வாழ்க்கை முறை முற்றிலுமாய் மாறியிருந்த நேரம் அது. எனவே வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ எதுவும் சொல்லாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்தேன்.

    "அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமை போகலாமா?'' என்று கேட்டார்.

    அதற்கும் தலையசைப்பில் சரி சொன்னேன்.

    அப்போது திருப்பதியில் ஒரு பத்து காட்டேஜ்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.

    ஐந்து காட்டேஜ்களில் ஒன்றில் நானும், இன்னொன்றில் கவிஞர் வாலியும், என் உதவியாளர்கள் இன்னொன்றிலுமாக இருந்தோம். டைரக்டர் தியாகராஜன், அவரது ïனிட் ஆட்கள் அடுத்த 2 காட்டேஜ்களில் தங்கினார்கள்.

    முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு ராஜதரிசனம் என்று சொல்லி தேவஸ்தானத்தில் இருந்து அழைத்துப் போனார்கள்.

    நானும் போனேன். தரிசனம் நன்றாக நடந்தது. என்னிடம் மட்டும் "என்ன! வரமாட்டேன் என்றாயே... வரவைத்துவிட்டேன் பார்த்தாயா?'' என்று சுவாமி கேட்பது போலிருந்தது.

    நானும் மானசீகமாய்ப் பேசினேன். "நீ தரிசனம் கொடுத்தாலும் நீதான் பெரும் ஆள்! தரிசனம் கொடுக்காவிட்டாலும் நீதானே பெரும் ஆள்! இதில் என் மனம் போல் தரிசனம் கிடைத்தால் என்னைப்பற்றி நான் பெருமைப்பட என்ன இருக்கிறது? நீ கொடுத்தால்தானே கிடைக்கும். கொடுத்தாலும் நீயே. கொடுக்காவிட்டாலும் நீயே!'' என்று மனதுக்குள் கூறிக்கொண்டேன்.

    அங்கிருந்த ஒரு வாரமும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி இருப்பார். தினசரி காலை 4 மணிக்கு எங்களை அழைப்பார். தரிசனம் கொடுப்பார். எங்களை பெருமைப்பட வைப்பார். அதைப் பார்த்து ரசிப்பார்.

    ரெக்கார்டிங் சமயத்தில்தான் இதை வாலியிடம் சொன்னேன். அதிசயப்பட்டார். "யோவ் நீ பெருமாளுக்கு அடியார்யா! அதனால்தான் உன்னை அழைத்து வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.
    அஜித்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வரும் சமயத்தில் அங்குள்ள பைக் ரேசரை அஜித் அசர வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சொந்தமாக பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வைத்துள்ளார். உலகின் எந்த விலையுயர்ந்த பைக்கையும் ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் தல 57 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.

    இப்படத்தில் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் போட்ட பல்கேரிய பைக் ரேசரும், ஸ்டண்ட் கலைஞருமான ஜோரியன் பொனமரெப் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ஜோரியன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பைக் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

    அந்த புகைப்படத்தை எடுத்தது அஜித் தானாம். அவர் பைக் வீலிங் செய்தபோது அஜித் அந்த புகைப்படத்தை எடுத்து, இவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதைப் பார்த்து வியந்துபோன ஜோரியன், அஜித் சிறந்த மனிதர். என்னுடைய பைக்கில் பயங்கரமான ஸ்டண்ட்களை செய்துள்ளார். அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

    இப்படத்தில் அஜித் இண்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷரா ஹாசனும் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    சசிகுமார் தான் நடித்திருக்கும் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தை பற்றி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதை கீழே பார்ப்போம்....
    சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘பலே வெள்ளையத்தேவா’. பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். மேலும், இப்படத்தில் கோவை சரளா, சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சோலை பிரகாஷ் என்பவர் இயக்கியிருக்கிறார்.

    இப்படம் வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில், படம் குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமார் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

    அவர் பேசும்போது, குடும்ப உறவுகளை முழுநீள காமெடியுடன் சொல்லும் படமாக ‘பலே வெள்ளையத்தேவா’ உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ரோகிணி எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். செல்பி காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்திருக்கிறார். படத்தின் போஸ்டர்களை பார்க்கும் போது ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படம்போல் இருப்பதாக சொல்கிறார். இந்த படத்தில் கோவை சரளா எனக்கு பாட்டியும் கிடையாது. அவருக்கு நான் பேரனும் கிடையாது.

    சங்கிலி முருகன், கோவை சரளாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் கோவை சரளா ராப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இப்படத்தின் கதையை கேட்டதும், அந்த பாட்டி கதாபாத்திரத்திற்கு மனோரமா ஆச்சிதான் பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்குள் தோன்றியது. ஆனால், இப்போது ஆச்சி நம்மிடத்தில் இல்லை என்பதால், அதற்கடுத்தபடியாக சேச்சி கோவை சரளாதான் இதற்கு சரியாக பொருந்துவார் என்று அவரை அணுகினோம். அவரும் உடனே ஒத்துக் கொண்டார்.

    படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைவிட கோவை சரளாவின் கதாபாத்திரம்தான் மிகவும் வலுவாக இருக்கும். தான்யா இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தற்போது நிறைய இருக்கிறார்கள். ஆனால், கதாநாயகிகள் கிடைப்பதுதான் மிகவும் அரிதாக இருக்கிறது என்றார். 
    புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்...
    நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார். இவருடைய இலக்கு 1 கோடி மரங்களை தமிழகத்தில் நடவேண்டும் என்பதுதான். அந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் சென்னையை தாக்கிய வர்தா புயல் ஏகப்பட்ட மரங்களை வேரோடு சாய்த்துள்ளது.

    பசுமையை இழந்து தவிக்கும் சென்னையை மீண்டும் பசுமையாக்குவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், விவேக் இன்று இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு விவேக் கூறும்போது, புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

    மேலும், அவ்வாறு நடப்படும் மரங்களில் அரச மரம், வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை அதிகளவில் நடவேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இவரது கோரிக்கையை முதல்வரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். 
    வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சென்னை 600 028’ இரண்டாம் பாகம் வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை உடனடியாக தொடங்கியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘சென்னை 600 028’ இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி வெங்கட் பிரபுவை உற்சாகப்படுத்தியுள்ளது. அந்த உற்சாகத்துடன் தன்னுடைய அடுத்த படத்திற்கான பூஜையையும் உடனடியாக போட்டு முடித்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள சென்னை 600 028 இரண்டாம் பாகத்தை அவரது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து டி.சிவா தயாரித்திருந்தார். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த புதிய படத்தையும் டி.சிவா தயாரிக்கிறார். இந்த அறிவிப்பை டி.சிவா ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் 8-வது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. 
    சூர்யாவின் இடத்தை விஷால் பிடித்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி உலாவி வருகிறது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
    சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சி-3’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் அதற்கு ‘யு’ சான்றிதழ் வாங்குவதற்காக போராடுவது ஒருபக்கம், மறுபக்கம், இப்படத்தின் காட்சிகளுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இப்படம் தள்ளிப்போனதால் அன்றைய தேதியில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலே வெள்ளையத்தேவா’ என்ற படம் மட்டுமே ரிலீசாகும் என்ற நிலை இருந்து வந்தது. இந்நிலையில், சூர்யா விட்டுச் சென்ற அந்த இடத்தை நிரப்ப விஷால் முன்வந்துள்ளார்.

    விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திச்சண்டை’ படத்தை டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படம் ஏற்கெனவே பொங்கல் தினத்தையொட்டி ஜனவரியில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

    ×