என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிகர் விஷாலுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    தான் இயக்கும் படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயக்குனர் மிஷ்கின் வழக்கம். ஏற்கனவே தான் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் பிரசன்னாவை வில்லனாக்கி அழகு பார்த்தார். அந்த வரிசையில் விஷாலை வைத்து தான் இயக்கும் 'துப்பறிவாளன்' படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜை வில்லனாக்கியிருக்கிறார்.

    கதாநாயகனாக நடித்து வந்த இயக்குனர் கே.பாக்யராஜ் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பாக்யராஜ் ஒப்புக்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்யராஜ் வில்லனாக நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    விஷாலுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன், ஆண்ட்ரியா இருவரும் நடிக்க முக்கிய வேடங்களில் வினய், பிரசன்னா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 'துப்பறிவாளன்' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரஜினி ரசிகர்கள் 5000 பேர் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
    தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இது தமிழ்நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    தற்போது அவரது நினைவிடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் 5000 பேர் இன்று ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து ரஜினி ரசிகர் ஒருவர் கூறுகையில் " நடிகர் சங்கம் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்திய அஞ்சலியில் தலைவர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ஜெயலலிதா குறித்து சில மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. அதனால் அவரின் ரசிகர்களாகிய நாங்கள் சேப்பாக்கம் மாளிகையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினோம்" என்றார்.

    சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷாலுமேனன், அவரது தாயார் கலாதேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
    கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக தனியார் நிறுவனங்களிடம் பல கோடி மோசடி செய்ததாக புகார் கிளம்பியது.

    இது தொடர்பாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    இதில் சஜித் என்பவர் தொடர்ந்த வழக்கில் சரிதாநாயரும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனும் சோலார் பேனல் அமைத்து தருவதாகவும், நாகர்கோவிலில் காற்றாலை அமைப்பதாகவும் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இந்த மோசடியில் நடிகை ஷாலுமேனன், அவரது தாயார் கலாதேவி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார்.

    இது தொடர்பான வழக்கு பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சரிதா நாயருக்கும், அவரது கணவர் பிஜுராதாகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷாலுமேனன், அவரது தாயார் கலாதேவி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

    மேலும் தண்டனை வழங்கப்பட்ட இருவரும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்த காலத்தை தண்டனை காலத்தில் கழித்து விட்டு மீதி நாட்களை தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறி இருந்தார்.

    அதோடு தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்யவும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்திருந்தார். ஏற்கனவே இது தொடர்பான இன்னொரு வழக்கில் சரிதாநாயருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து சரிதாநாயர் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.

    அதுபோல இந்த வழக்கிலும் அவர் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வார் என தெரிகிறது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார். சரிதாநாயரின் கணவர் பிஜுராதாகிருஷ்ணன் முதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக தற்போது ஜெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இளைய தளபதி விஜய்யுடன், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நேரடியாக மோதவிருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'கடவுள் இருக்கான் குமாரு' படத்திற்குப் பின் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'புரூஸ்லீ'. அறிமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தனா நடித்திருக்கிறார்.

    இந்நிலையில் பொங்கல் ரிலீசாக இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழு நேற்று அறிவித்திருக்கிறது. இதுதவிர அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குற்றம் 23', கிருஷ்ணாவின் 'யாக்கை', கலையரசனின் 'அதே கண்கள்', ஜெய்யின் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

    விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பைரவா' பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் மேலும் 5 படங்கள் வெளியாவது சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்கிறது.

    எனினும் டிக்கெட்  முன்பதிவு மற்றும் தியேட்டர்களைப் பொறுத்தவரையில் விஜய்யின் 'பைரவா'வுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதால் இந்த போட்டியிலிருந்து ஒருசில படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை என்று நடிகை நிகிஷா பட்டேல் கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ, நகுலுடன் நாரதன், மற்றும் தலைவன், கரையோரம் ஆகிய படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தற்போது ஷக்தி ஜோடியாக ‘7 நாட்கள்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். நிகிஷா பட்டேல் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    “நான் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பெண். எனது மூதாதையர்கள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். எனது சித்தி கேரளாவில் இருக்கிறார். சிறுவயதிலேயே எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்தது. இதற்காக மாடலிங் செய்தேன். அழகி போட்டிகளில் கலந்துகொண்டேன். நடிப்பு பயிற்சியும் எடுத்தேன்.

    இந்தி படத்தில் அறிமுகமாவது கனவாக இருந்தது. இதற்காக இந்தியா வந்து வாய்ப்பு தேடினேன். அப்போது எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் தயாரான புலி படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க அழைத்தார். தென்னிந்திய மொழி படங்கள் வேண்டாம் என்று சொல்லி அதை மறுத்தேன். ஆனாலும் அவர் பிடிவாதமாக வற்புறுத்தி அதில் நடிக்க வைத்து விட்டார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது.

    அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. என்னை ஒதுக்கினார்கள். சிறிய படங்களில் மட்டுமே நடித்தேன். பல வருட போராட்டத்துக்கு பிறகு இப்போது நல்ல படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தமிழில் 7 நாட்கள் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    திருமணம் பற்றி சிந்திக்கவில்லை. இந்த காலத்தில் நிறைய பேர் திருமணம் செய்து கொள்வதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை என்பது எனது கருத்து. திருமணம் செய்த அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

    2030-ம் ஆண்டு, நாட்டில் திருமண முறை என்பதே இருக்காது. தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வார்கள். நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஆனால் எனக்கு பிடித்த பையனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வேன். எல்லோரையும் சிரிக்க வைக்கும்படி பேசும் ஆண்களை எனக்கு பிடிக்கும்.

    கல்லூரியில் படித்தபோது அழகான ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதலித்த அனுபவம் இருக்கிறது. ஆனால் இப்போது அழகு பெரிய விஷயம் இல்லை. அதையும் தாண்டி வேறு சில குணங்கள் ஆண்களுக்கு தேவை என்று உணர்ந்து இருக்கிறேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை.”

    இவ்வாறு நிகிஷா பட்டேல் கூறினார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பிப்ரவரி 5-ந் தேதி நடக்க உள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர்களாக கதிரேசன், தேனப்பன் பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.

    தற்போது, இவர்கள் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிப்ரவரி 5-ந் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    சங்கத்தில் ஆயிரத்து 201 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு போட்டு தலைவர், 2 துணை தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள்.
    ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஷ் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ். தலப்பாவு, கேரளா கபே, நாயகன், ரெட் சில்லீஸ், பிரணாயம் உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள அவர், திருடி, வீரமும் ஈரமும் ஆகிய தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இது தவிர விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார்.

    இவர் கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜான் ஜேக்கப்பின் குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் நடிகை தன்யா இயக்குனராக உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பல இடங்களில் ஜான் ஜேக்கப்பின் கட்டுமான நிறுவனம் சார்பில் கடந்த 2011–ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனி வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

    இதில் 20 தனி வீடுகள் மற்றும் 500 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்ய இருப்பதாகவும், அவற்றை 2 ஆண்டுகளில் ஒப்படைப்பதாகவும் கூறி பலரிடம் ரூ.100 கோடி வசூல் செய்தனர். மேலும் கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.30 கோடி பணத்தையும் கட்டுமான நிறுவனத்தினர் வாங்கி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குடியிருப்பையும், பணத்தையும் வழங்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் நடிகை தன்யா மற்றும் கணவர் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து தலைமறைவான நடிகை தன்யா அவரது கணவர் ஜான் ஜேக்கப் மற்றும் கணவரின் தம்பி சாமுவேல் ஜேக்கப் ஆகியோரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பெங்களூரு, மும்பை மற்றும் கேரளாவில் சில ஊர்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் நடிகை தன்யா உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதேபோல் தன்யாவின் மாமனார் ஜேக்கப் ஜான்சனை ஏற்கனவை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    "கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.
    "கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.

    இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்டர் ஸ்ரீதரின் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்துக்கும் இசை வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் ஹிட்டாகி பாடல்களும் ஹிட்டானதில் மகிழ்ச்சி.

    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "கடவுள் அமைத்த மேடை''படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.

    அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.

    அதை உடனே செய்யலாம் என்ற எண்ணத்தில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன ஒரு டூயட்டிற்கு ஹம்சத்வனி ராகத்தில் கிராமியத்தனமான மெட்டமைத்தேன். பாடலை வாலி எழுதினார். "மயிலே மயிலே உன் தோகை எங்கே?'' என்ற அந்தப் பாடல்தான் இந்தப் பரிசோதனை முயற்சியில் உருவான பாடல்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜென்சியும் இந்தப் பாடலை பாடியிருந்தார்கள்.

    இதே படத்தில்தான், பி.பி.சீனிவாசும் முதன் முதலாக என் இசைக்கு பாடினார். அதுவும் ஒரு சிறிய கஜல் போன்ற பாடல். "தென்றலே நீ பேசு'' என்பது அதன் பல்லவி.

    பஞ்சு சார் கமல், ரஜினி இரண்டு பேரையும் தனித்தனியாக போட்டு படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது கமல் - ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த நேரம்.

    கமலை வைத்து "கல்யாணராமன்'', ரஜினியை வைத்து "ஆறில் இருந்து அறுபதுவரை'' ஆகிய படங்களை எடுத்தார்.

    இரண்டுமே வெற்றி பெற்றன.

    கல்யாணராமன் படத்தில் `ஆஹா வந்துருச்சு' பாடலும், அதற்கு கமல் ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன.

    பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

    என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

    சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

    ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

    ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

    ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

    இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

    "என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.

    "நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

    "லட்சுமி'' படத்தில் கிராமிய சந்தத்தை வேகமாக அமைத்துப் பாடிய பாடல் "தென்ன மரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே.''

    நானும் பி.சுசீலாவும் பாடினோம். இந்த வகையில் இது சுசீலா அவர்களுடன் நான் சேர்ந்து பாடிய முதல் பாடல்.

    பண்ணைபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில், தம்புராவுடன் சுசீலா இருக்கும் படத்தை பிரேம் போட்டு நான் மாட்டி வைத்திருந்தது, இந்தப் பாடலை அவருடன் பாடும்போது நினைவுக்கு வந்தது.

    கோவை செழியன் தயாரிப்பில் வந்த "முதல் இரவு'' படத்தில், "மஞ்சள் நிலாவுக்கு இன்று முதல் இரவு'' என்ற பாடல் பிரபலமானது. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப் பாடலை கேட்டு என்னை மிகவும் பாராட்டினார்.

    பாரதிராஜா டைரக்ஷனில் "நிறம் மாறாத பூக்கள்'' படத்துக்கு பாடல் பதிவுடன் பூஜை.

    ஒரு ஓட்டலில் கதையை பாக்யராஜை சொல்லச் சொன்னார், பாரதி. கோர்வையாக,அதே நேரம் நகைச்சுவை கலந்து நன்றா கவே கதை சொன்ன பாக்யராஜை பாராட்டினேன். பாரதியும், "அதனால்தான் அவனையே சொல்லச்சொன் னேன். நல்ல திறமைசாலி'' என்று பாராட்டினார்.

    இடைவேளைக்குப்பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.

    பூஜைக்கு இரு நாயகியரும் கதாநாயகனும் பாடுகிற மாதிரி ஒரு பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லிவிட்டார்கள்.

    தயாரிப்பாளர் வீட்டிலேயே கம்போசிங் நடந்தது. அப்போது அவர் தயாரிப்பில் வெளிவந்த "வருவான் வடிவேலன்'' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

    கவியரசர் கண்ணதாசன் அதுவரை காலை 10 மணிக்கு முன்னதாக பாட்டெழுத வந்தது கிடையாது. எனக்கு 9 மணிக்கு பின்னணி இசை வேலை இருந்ததால் கவியரசர் முதன் முதலாக எனக்காக காலை 71/2 மணிக்கு பாட்டெழுத வந்துவிட்டார்.

    கதையைச் சொல்லி டிïனை வாசித்த உடனே,

    "ஆயிரம் மலர்களே மலருங்கள்!

    அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்''

    என்று எழுதினார். பாரதி உள்பட அனைவருக்கும் பிடித்திருந்தது. பாரதிராஜா இயக்கிய இந்த நான்காவது படமும் நன்றாக ஓடியது.

    "ஊர்வசி நீனே நன்ன ப்ரேயசி'' என்ற கன்னடப்படம் தெலுங்கிலுமாக இரு மொழிப்படமாக வந்தது. இதன் மலையாளம் டைரக்டர் ஐ.வி.சசி இயக்கிய "பகலில் ஓர் இரவு'' படம். ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

    பாம்குரோவ் ஓட்டலில் கம்போசிங் நடந்தது கவியரசர் "இளமையெனும் பூங்காற்று'' என்று எழுதினார்.

    இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். கவியரசர் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.

    முதல் வரி தொடங்க, அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும்.

    உதாரணமாக,

    "எட்டடுக்கு மாளிகையில்

    ஏற்றி வைத்த என் தலைவன்

    விட்டு விட்டுச் சென்றானடி

    வேறு பட்டு நின்றானடி''

    "கண்ணன் என்னும் மன்னன்

    பேரைச் சொல்லச் சொல்ல

    கல்லும் முள்ளும் பூவாய்

    மாறும் மெல்ல மெல்ல''

    - இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும்.

    மாற்றம்

    இதை நான் மாற்ற எண்ணினேன்

    ஒரு அடிபோல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், `இங்கே நான் நிறுத்த வேண்டும் - இங்கே நீட்ட வேண்டும்' என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டுமென்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.

    "இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு

    ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

    ஒரே வீணை ஒரே நாதம்''

    இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது.

    இதில் இன்னும் ஒரு பாடல் பரிசோதனை முயற்சியாக, "தாம்த தீம்த'' என்று தொடங்கும் பாடலில், ஆண் - பெண் கோரசை வைத்தே, இசைக்குழு இல்லாமல், பாடலுக்கு இடையில் வரும் இசையை கோரசே இசைப்பது போல அமைத்திருந்தேன்.

    நன்றாக இருந்தாலும் வெளியே தெரியாமல் போன காரணம் தெரியவில்லை.

    `பஞ்ச பூதாலு' என்ற தெலுங்குப்படம் தமிழில் சிவாஜி நடிக்க "பட்டாக்கத்தி பைரவன்' ஆனது. இந்தப் படத்தை நினைத்தாலே "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பாடல்தான் மனதில் ஓடிவரும்.

    என் முதல் படமான "அன்னக்கிளி''யின் கதையை எழுதிய செல்வராஜ், முதன் முதலில் "பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் எல்லாப் பாடல்களுமே என்றைக்கும் கேட்க சுகமானவை.

    "ஓரம்போ''

    "சாமக்கோழி கூவுதம்மா''

    "ஒனக்கெனத்தானே இந்நேரமா''

    - போன்ற படத்தின் எல்லாப் பாடல்களையும் அமர்தான் எழுதினான்.
    சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைப்பது மகிழ்ச்சி அடைய வைக்கிறது என்று ஹன்சிகா கூறினார்.

    நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். தங்களுடைய தகவல்களையும், கருத்துக்களையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்கள் இவர்களை இந்த சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கிறார்கள்.

    ஹன்சிகாவை பேஸ்புக்கில் 60 லட்சம் பேர் தொடர்கிறார்கள். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்காக ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து ஹன்சிகா கூறியதாவது....

    “ பேஸ்புக்கில் 60 லட்சம் ரசிகர்கள் என்னை தொடர்கிறார்கள். நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரசிகர்கள் மனதில் எனக்கு உயர்வான இடம் அளித்திருக்கிறார்கள். இதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வாழ்க்கையில் எத்தனை கோடி சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு ரசிகர்கள் நமக்கு இருக்கிறார்கள் என்பதில் தான் உண்மையான சந்தோ‌ஷம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது”.

    குறைவான படங்களில் வந்தாலும் பெயர் சொல்லும் வேடங்களில் நடிக்க வேண்டும் இது தான் எனது ஆசையாக உள்ளது என்றார் ராஜகுமாரன்.

    ‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘காதலுடன்’ படங்களை இயக்கியவர் தேவயானியின் கணவர் ராஜகுமாரன். ‘திருமதி தமிழ்’ படத்தை இயக்கி இவரே கதாநாயகனாகவும் நடித்தார்.

    சமீபத்தில் சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். தற்போது விஜய் மில்டன் இயக்கும் ‘கடுகு’ படத்தில் புலிவேட கலைஞராக நடித்திருக்கிறர். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

    “ ‘கடுகு’ படத்தில் நான் நடித்திருக்கும் வேடம் எனக்கு பொருத்தமானது என்று விஜய் மில்டன் சொன்னதால் நடித்தேன். அவர் சொன்னது போலவே இந்த வேடம் எனக்கு பொருத்தமாகவும், திருப்தி அளிப்பதாகவும் அமைந்தது. ஒரு நல்ல வேடத்தில் நடித்த மன திருப்தியையும் கொடுத்திருக்கிறது.

    எனக்கு நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. குறைந்த எண்ணிக்கையில் நடித்தாலும், பெயர் சொல்லக்கூடிய வேடங்களில் நடிக்க வேண்டும். இது தான் எனது ஆசை”என்றார்.

    ஆஸ்கர் போட்டியில் விசாரணை தவறவிட்ட வாய்ப்பை மற்றொரு இந்திய திரைப்படம் பிடித்துள்ளது. அது எந்த படம்? என்பதை கீழே பார்ப்போம்.
    சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு இந்தியாவில் இருந்து ‘விசாரணை’ திரைப்படம் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் ‘விசாரணை’ படம் இடம்பெறவில்லை என்றதும் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.

    இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு இந்திய படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் மலையாளத்தில் உருவாகி வரும் ‘வீரம்’ படம் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுத்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஜெப் ரோன் என்பவர் இசையமைத்துள்ளார். காரி கிம்மெல் என்பவர் பாடியிருக்கிறார்.

    இப்படத்தின் பாடலுடன் மொத்தம் 91 பாடல்கள் ஆஸ்கர் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இத்தனை பாடல்களில் இந்த பாடல் ஆஸ்கருக்கு தேர்வாகுமா? என்பது வரும் ஜனவரி 24-ந் தேதிதான் தெரியவரும். ‘வீரம்’ படம் பிரபல ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய மாபெரும் காவியமான ‘மேக்பெத்’ (Macbeth)-ஐ தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் குணால் கபூர் நடித்துள்ளார். மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்திய அளவில் மும்மொழிகளில் உருவாகும் ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
    விக்ரம் பிரபு - ஷாமிலி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘வீரசிவாஜி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    பாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.

    வினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு, ரோபோ சங்கரின் மூலம் குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜான் விஜய்யை சந்திக்கிறார்.

    அவரிடம் தன்னிடம் இருக்கும் ரூ.5 லட்சத்தையும் கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜான் விஜய், மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகிறார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம் பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜான் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வேளையில், இவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது.

    இந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகிறது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்ததா? இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

    விக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க கலர்புல் உடையுடனே வருகிறார். இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வருகிறது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க திணறியிருக்கிறார்.

    குழந்தை நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகியாக மாறியிருக்கிறார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

    படத்திற்கு மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியின் காமெடிதான். ரமேஷ் - சுரேஷ் என வரும் இவர்களின் காமெடி படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம் போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகிறார்கள்.

    படத்தின் முதல்பாதியை மிகவும் கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். முதல் பாதி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமலே நகர்ந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூடு பிடிக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கடைசியில் படத்தை எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார் இயக்குனர்.

    இமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட வைக்கிறது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘வீர சிவாஜி’ வீரம் குறைவு
    ×