என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    2014-ல் ஹாலிவுட்டில் வெளிவந்த ‘3 days to kill’ சினிமா தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு உல்ப் தலைமையில் இயங்கும் பயங்கரவாத கும்பலை கண்டுபிடிக்க 10 வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. உல்ப் எப்படி இருப்பான் என்பது சிஐஏ அமைப்புக்கு தெரியாது. இருப்பினும், அவனது கும்பலின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது சிஐஏ. அதன்படி, ஜெர்மனியில் உல்ப் கும்பல் அணு ஆயுதங்களை கைமாற்றப் போவதாக செய்திகள் கிடைக்கிறது.

    அவனையும் அவனது கும்பலையும் பிடிக்க கெவின் கான்ஸ்டர் தலைமையில் குழு களமிறங்குகிறது. ஜெர்மனியில் உல்ப் கும்பலைப் பிடிக்க முற்படும்போது, இருவருக்கும் மிகப்பெரிய சண்டை நடக்கிறது. இதில் உல்ப் கும்பல் அனைவரையும் தாக்கிவிட்டு, தப்பிக்க நினைக்கிறது. அப்போது கெவின் தனியொரு ஆளாக இருந்து அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்.

    இதில், ஒருவன் மட்டும் தப்பித்துச் செல்கிறான். அந்த நேரத்தில் கெவினின் உடல்நிலையும் மோசமாகி மயக்கமடைகிறார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சிஐஏ அவரை பணியில் இருந்து விலக்குகிறது. மேலும், டாக்டர்களும் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும் கூடிய விரைவில் அவர் இறந்துவிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.

    இந்நிலையில், கெவின் தனது வாழ்நாளின் கடைசியில் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். இதற்காக தன்னை விட்டு பிரிந்துசென்ற மனைவியையும், குழந்தையும் தேடி செல்கிறார். அவர்களை சந்தித்து இனிமேல் சிஐஏ வேலைக்கு செல்லமாட்டேன் என்ற வாக்குறுதியோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், உல்ப்பை தேடிக் கண்டுபிடிக்க சிஐஏ அமைப்பால் நியமிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கெவினை சந்திக்கிறாள். அவள் கெவினை வற்புறுத்தி உல்ப்பை கண்டுபிடிக்க உதவி கோருகிறார். முதலில் இதற்கு கெவின் மறுக்கிறார். ஆனால், அவளோ கெவியின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக விலையுயர்ந்த மருந்து ஒன்றை தான் வைத்திருப்பதாகவும், அந்த மருந்து வேண்டுமானால், தனக்கு உதவி செய்யவேண்டும் என்று கூறுகிறாள்.

    தனது வாழ்நாளை நீட்டிக் கொள்வதற்காக அவளுக்கு உதவி செய்வதற்கு கெவின் முன்வருகிறார். ஆனால், இந்த விஷயம் தனது குடும்பத்துக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்.

    கடைசியில் கெவின் எப்படி தனது குடும்பத்தை சமாளித்து உல்ப்பை தேடும் பணியை செய்து முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கெவின் காஸ்ட்னர் செண்டிமென்ட், ஆக்ஷன் என இரண்டிலும் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உல்ப்பை தேடும் காட்சிகளிலும், அதேநேரத்தில் தனது குடும்பத்திலிருந்து அழைப்பு வந்ததும், அந்த பணியை அப்படியே விட்டுவிட்டு ஓடி வருவதும் என ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்.

    மனைவியாக வரும் கோனி நீல்சன், மிகவும் அழகாக வந்து போயிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். இவர்களுக்கு குழந்தையாக நடித்திருப்பவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக செண்டிமென்ட் காட்சிகளை வைத்து ஓரளவுக்கு ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோசப் மெக்கிண்டி நிக்கோல். சண்டை காட்சிகளை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஓரளவுக்கே திருப்தி ஏற்படும். மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.

    தியரி ஆர்போகஸ்ட் ஒளிப்பதிவு படத்தில் நேர்த்தியாக இருக்கிறது. ரச்செலின் இசையும் மிரட்டல்.

    மொத்தத்தில் ‘த்ரி டேஸ் டு கில்’ ரசிக்கலாம்.
    சினிமாவில் இருந்து தன்னை ஒதுக்குவதாக நடிகை இலியானா கூறியுள்ளார். அதை பற்றி விவரமாக கீழே பார்க்கலாம்.
    விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இலியானாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. 2 இந்தி படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைகளுக்கு பிறகு டைரக்டர்கள் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில் தனது நீச்சல் உடை படங்களை அவர் பரவ விட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் இலியானா வருத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “கடந்த 2 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எனக்கு படங்கள் இல்லை. இந்தியில் மட்டுமே ஓரிரு படங்களில் நடிக்கிறேன். டைரக்டர்கள் என்னை ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் இதுதான் எனக்கு கடைசி படம் என்ற உணர்விலேயே நடிக்க வேண்டி உள்ளது.

    தென்னிந்திய மொழியில் ஒரு பட வாய்ப்பு வந்தது. டைரக்டர் கதையை சொல்லிவிட்டு நான்தான் கதாநாயகி என்று உறுதி அளித்து விட்டு போனார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் கைநழுவி விட்டது. வேறு ஒரு கதாநாயகியை அதற்கு ஒப்பந்தம் செய்து விட்டனர். அந்த டைரக்டரை போனில் தொடர்பு கொண்டு ஏன் என்னை நீக்கினீர்கள்? என்று கோபப்பட்டேன். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

    இப்படித்தான் பட வாய்ப்புகள் பறிபோகின்றன. நான் நடித்த அனைத்து படங்களுமே விரும்பி செய்தவைதான். அரை மனதுடன் படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்தியில் பர்பி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. ரஷ்டம் படத்தில் அக்‌ஷய்குமாருடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.

    காட்சிகளில் நடித்து முடித்ததும் டைரக்டர் முகத்தைதான் பார்ப்பேன். அவர் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக நடித்து இருக்கிறேன் என்ற திருப்தி ஏற்படும். அதுமட்டும் எனக்கு போதும். வெற்றி, வசூல் போன்றவை குறித்து கவலைப்படுவது இல்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க நல்ல கதைகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.”

    இவ்வாறு இலியானா கூறினார்.
    நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு நடிகர் ராணா அளித்த பதிலை கீழே விரிவாக பார்க்கலாம்.
    திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

    திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது.

    இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பேசப்படுகிறது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் இருவரும் ஜோடியாகவே சென்று வந்தார்கள்.

    இந்த காதல் கிசுகிசுக்களுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த ராணா இப்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    “திரிஷாவையும் என்னையும் இணைத்து செய்திகள் வருகின்றன. நாங்கள் காதலிப்பதாக பேசுகிறார்கள். நான் திரிஷாவை காதலிக்கவில்லை. வேறு யாருடனும் எனக்கு காதல் இல்லை. நான் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே தீவிர கவனமாக இருக்கிறேன். வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை.

    தற்போதைய சூழ்நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் மற்றவர்கள் போல் இல்லை. எனது வாழ்க்கை முறை அசாதாரணமானது. நான் இந்தி படங்களில் நடிக்கும்போது 6 மாதங்கள் மும்பையிலேயே தங்கி இருக்க வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் பல மாதங்கள் ஐதராபாத்தில் இருக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.

    அடுத்த வருடம் டி.வி. நிகழ்ச்சிக்காக 3 மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி இருக்கிறது. நான் திருமணம் செய்து கொண்டால் இப்படி பல மாதங்கள் வெளியூர்களில் தங்கி இருக்க முடியாது. எனக்கு மனைவியாக வரும் பெண் முதலில் இப்படிப்பட்ட எனது வாழ்க்கை முறைகளை அனுசரித்து செல்ல தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் எனக்கு திருமணம் இல்லை. எப்போதுமே திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பேன் என்று சொல்லவில்லை. ஒரு நிலையான இடத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வேன்.”

    இவ்வாறு ராணா கூறினார்.
    பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தி ரூ.1½ லட்சம் சுருட்டப்பட்டுள்ளது. அதை பற்றிய விரிவாக செய்தியை கீழே பார்க்கலாம்.
    பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னிகிருஷ்ணன் சென்னை ராயப்பேட்டை ‘வெஸ்ட்காட்’ சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவரிடம் சர்வதேச அளவில் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு உள்ளது. அந்த கிரெடிட் கார்டை தவறாகப்பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் ரூ.1½ லட்சம் பணத்தை சுருட்டிவிட்டனர்.

    பணம் எடுக்கப்பட்ட தகவல் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் உன்னிகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அவரது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்க முடியாதபடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    உன்னிகிருஷ்ணனின் கிரெடிட் கார்டில், மொரீசியஸ் நாட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலி கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அண்ணாசாலை குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக பாடகர் உன்னிகிருஷ்ணனிடம் கருத்து கேட்பதற்காக செல்போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டனர். ‘வங்கி அதிகாரிகள் வங்கியில் இருந்து குறிப்பிட்ட பணத்தை தருவதாக தெரிவித்துவிட்டனர். வங்கி அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் நான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.’ என்று உன்னிகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    இந்தி நடிகை கரீனா கபூருக்கு மும்பையில் உள்ள பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் நேற்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    கரீனா கபூர் கடந்த 2012-ம் ஆண்டில், இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் கர்ப்பமானார். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. நிறைமாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு நேற்று காலை 7 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தைக்கு, ‘தைமுர் அலிகான் பட்டோடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குழந்தை பிறந்தது பற்றி கரீனா கபூர்-சயீப் அலிகான் ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:-

    “எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு தைமுர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் நலம் விரும்பிகளுக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.”

    இவ்வாறு கரீனா கபூர், சயீப் அலிகான் ஆகிய இருவரும் கூறியிருக்கிறார்கள்.
    கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    நடிகை டாப்சி இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

    “நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன்மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. அப்போதும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடித்தேன். ஒருகட்டத்தில் சினிமா பிடித்தது. அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டேன்.

    எனக்கு தன்னம்பிகை அதிகம். எதற்கும் பயப்படமாட்டேன். மாடலிங் செய்தபோது எனது தந்தை தூக்கம் இன்றி தவித்தார். மற்றவர்கள் தவறாக பேசுவார்களோ என்று பயந்தார். எனது படங்கள் விளம்பரங்களில் வெளியாகி நண்பர்கள் அவரை பாராட்டிய பிறகுதான் நிம்மதியானார்.

    சுற்றி இருப்பவர்களுக்கு பயந்துதான் பெற்றோர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தே வந்து இருக்கிறேன். பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது வரை வெளியுலகம் பற்றி எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வந்த பிறகு நண்பர்கள் மற்றும் வெளியாட்களுடன் பழகிய பிறகுதான் உலகத்தை பார்த்தேன். இப்போது எனது பெற்றோர் நான் சொல்வதை கேட்கிறார்கள். பெண்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்பதையும் நம்புகிறார்கள்.

    கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது. மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பதை விட்டுவிட வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையில் சந்தோஷம் வரும். நம்மை பற்றி சிந்திக்காமல் மற்றவர்கள் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

    சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும் எனது படங்கள் வசூல் குவிக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை. மனதுக்கு மகிழ்ச்சி தருவதால் நடிக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகி விடுவேன். தமிழ், தெலுங்கு பட உலகில் வாய்ப்புகள் குறைந்து விட்டன. நல்ல கதைகள் வரும்போது அந்த மொழிகளில் நடிப்பேன். எனது திருமணத்துக்கு அவசரப் படவில்லை. இந்த விஞ்ஞான யுகத்தில் 60 வயதில் கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். பிடித்தமானவரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்வேன்.”

    இவ்வாறு டாப்சி கூறினார்.
    இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.
    இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.

    "மெல்லத் திறந்தது கதவு'' படம் 1986 செப்டம்பர் 12-ந்தேதி வெளியாயிற்று. இதை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்தனர்.

    இதில் இடம் பெற்ற முக்கிய பாடல்கள்:-

    1. "ஊரு சனம் தூங்கிருச்சு... ஊதக்காத்தும் அடிச்சிருச்சு!''

    2. "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா?''

    3. "தேடும் கண் பார்வை தவிக்க...''

    4. "வா வெண்ணிலா... உன்னைத்தானே வானம் தேடுது!''

    5. "தில் தில் தில்... மனதில் ஒரு தல் தல் தல் காதல்''

    "மெல்லத் திறந்தது கதவு'' படத்தை ஏவி.எம். தயாரிக்க நேர்ந்ததே ஒரு சுவையான கதை.

    அதுபற்றி ஏவி.எம். சரவணன் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

    "1985-ம் ஆண்டு ஒரு நாள் எனக்கு திடீரென்று பாரதிராஜா டெலிபோன் செய்தார். "சார்... நானும் இளையராஜாவும் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறோம்'' என்றார்.

    "எம்.எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்று யோசனை சொன்னார்கள். அப்போது நாங்கள் நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த யோசனையை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.

    என் தந்தையாருக்கு மெல்லிசை மன்னரின் பாட்டுகள் மட்டுமல்ல, அவரது பண்புகளும் மிகவும் பிடிக்கும். அவரது மனதில் நிறைந்திருந்த மனிதர்களில் எம்.எஸ்.வியும் ஒருவர்.

    ஒருமுறை அப்பச்சி (ஏவி.எம்) என்னை அழைத்து "விஸ்வநாதனை மட்டும் என்றைக்கும் விட்டு விடாதே. அவருக்கு எப்போது எந்தச் சிரமம் ஏற்பட்டு அது உனக்குத் தெரிய வந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே'' என்று சொன்னார். மெல்லிசை மன்னரை எனக்கும் பிடிக்கும். அவர் மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு.

    பாரதிராஜாவும், இளையராஜாவும் சொன்னதும், எம்.எஸ்.வி.க்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் "மெல்லத்திறந்தது கதவு.''

    இளையராஜாதான் அந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்தது. "நானும் எம்.எஸ்.வி.யும் சேர்ந்து இப்படத்துக்கு மிïசிக் பண்றோமே'' என்று ராஜா கேட்டபோது எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. இரண்டு இசை மேதைகளும் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினார்கள் என்பது ஒரு தனிச்சிறப்பாக அமைந்தது.

    பாடல்களுக்கான டிïனை எம்.எஸ்.வி. அவர்கள் போட்டார். ஆர்க்கெஸ்ட்ராவை இளையராஜா நடத்தினார்.

    பாடல்கள் மிக இனிமையாக அமைந்தன. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மதித்துப் பணியாற்றிய விதமும் இனிமையாக இருந்தது.

    படம் வெளியானதும் முதலில் சுமாராகத்தான் போயிற்று. நாட்கள் ஆக ஆகத்தான் பிக் அப் ஆயிற்று.

    நடுவில் ஒரு தமாஷ் நடந்தது.

    மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது. எங்களுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    மதுரையில் இப்படி படத்தை முன்னும் பின்னுமாக மாற்றிப்போட்டு அது வரவேற்பைப் பெற்றது என்ற விவரம் தியேட்டர் வட்டாரங்களில் வேகமாக கசிந்து, மற்ற தியேட்டர்காரர்களும் அப்படியே செய்யத் தொடங்கி விட்டார்கள்.

    இதனால் பின்னர் பிரச்சினை ஏதும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தியேட்டரில் காண்பித்துக் கொண்டிருந்த மாதிரியே மாற்றிப்போட்டு படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினோம்.

    "இது தேவைதானா'' என்று அதிகாரிகளே கேட்டார்கள்.

    "படத்துக்குத்தான் சர்டிபிகேட் ஏற்கனவே கொடுத்தாயிற்றே. எப்படிக் காட்டினால் என்ன?'' என்று அவர்கள்

    அபிப்பிராயப்பட்டார்கள்.நாங்கள்தான் வற்புறுத்தி மீண்டும் ஒரு சர்டிபிகேட் வாங்கினோம்.

    அப்போது குறும்புக்கார அதிகாரி ஒருவர், "தலைப்பு எப்படி? `மெல்லத் திறந்தது கதவு' என்றுதான் இருக்கப் போகிறதா? இல்லை, `கதவு திறந்தது மெல்ல' என்று மாற்றப் போகிறீர்களா?'' என்று கிண்டலடித்தார்.''

    இவ்வாறு சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
    ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    இந்தி நடிகர் அமீர்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “எனது படங்கள் வசூல் குவிப்பதாகவும், நல்ல கதைகள் எனக்கு அமைவதாகவும் பலரும் பேசுகிறார்கள். நான் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன். டைரக்டர்கள் கதை சொல்லும்போது ஒரு ரசிகன் மாதிரி கேட்பேன். எனக்குள் இருக்கும் அந்த ரசிகனை கதை திருப்தி செய்தால் உடனே நடிக்க ஒப்புக்கொள்வேன். அதுமட்டுமன்றி டைரக்டர்களும் என்னை மனதில் வைத்து கதை எழுதுகிறார்கள். அதனால்தான் நல்ல படங்கள் அமைகின்றன.

    ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடலை கூட்டவும் குறைக்கவும் செய்து தோற்றத்தை மாற்றி நடிக்கிறேன். இப்படியெல்லாம் உடம்பை வருத்தி நடிக்க வேண்டாம் என்று எனது மனைவியும், தாயும் கடுமையாக கண்டிக்கிறார்கள்.

    உங்களை வெவ்வேறு தோற்றங்களில் பார்த்து ஒரிஜினல் உருவம் மறந்து விட்டது என்று என் மனைவி கூறுகிறார். நான் விருதுகள், வசூல் என்று கவனம் செலுத்துவது இல்லை. ரசிகர்கள் இதயத்தை எனது படங்கள் தொட்டால் போதும்.

    ரஜினிகாந்தை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகன். ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன். தெலுங்கில் சிரஞ்சீவி, பவன்கல்யாண் ஆகியோருடன் நடிக்க ஆசை. தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி திறமையானவர். ஒவ்வொரு படத்தையும் பிரமாண்டமாக எடுக்கிறார். விரைவில் மகாபாரதம் கதையை அவர் படமாக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

    அந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன், கர்ணன் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தவர். சிறந்த போர் வீரர். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது சிரமம், கிருஷ்ணர் கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ராஜமவுலி வாய்ப்பு தந்தால் நடிப்பேன்.”

    இவ்வாறு அமீர்கான் கூறினார்.
    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவின் காரணமாக ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “விஜய் நடிக்கும் பைரவா படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சிறப்பான முறையில் விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவாலும் அவர் மீது கொண்டுள்ள மிகுந்த அனுதாபத்தாலும் அந்த விழா கைவிடப்பட்டு உள்ளது.

    எங்களுடைய விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயலலிதா ‘நம்நாடு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்துடன் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் அவரை மதித்து வந்தோம். அவரது இழப்பின் காரணமாக ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து விட்டோம். விஜய்யும் மேற்கண்ட காரணத்துக்காக இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதனால் வருகிற 23-ந் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.”

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    “எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது” என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    விஷால்-தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் கத்தி சண்டை. சுராஜ் டைரக்டு செய்துள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து விஷால் அளித்த பேட்டி வருமாறு:-

    “நான் நடித்துள்ள கத்தி சண்டை படம் தீபாவளிக்கு வர வேண்டியது. கார்த்தியின் காஷ்மோரா வந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது திரைக்கு வருகிறது. தமிழில் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் வெளியாகிறது.

    வடிவேல் சினிமாவில் ஒரு சகாப்தம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இல்லாமல் கத்தி சண்டை படம் இல்லை. கதையை கேட்டதும் ஒப்புக்கொண்டார். வடிவேலுவின் மறுபிரவேசத்தை எல்லோருமே ஆர்வமாக எதிர்பார்த்தனர். அது என் படம் மூலம் நடந்து இருப்பது பெருமை அளிக்கிறது. அவர் பூத்ரி என்ற மனோதத்துவ டாக்டராக இதில் வருகிறார்.

    நகைச்சுவைக்கு படத்தில் பஞ்சமே இருக்காது. முதல்பாதியில் சூரியும் இரண்டாம் பாதியில் வடிவேலுவும் வருகிறார்கள். தமன்னா அழகான நடிகை. எங்களுடைய ஜோடி இந்த படத்தில் புதுசாக இருக்கும். தமன்னா கவர்ச்சியாக வருகிறாரா? என்று கேட்கிறார்கள். அவர் கவர்ச்சியாகவோ நீச்சல் உடையிலோ இதில் நடிக்கவில்லை. பாடல் காட்சியில் எவ்வளவு கவர்ச்சி தேவையோ அந்த அளவுக்கு நடித்து இருக்கிறார்.

    எனது படங்களில் இதுவரை கதாநாயகிகளின் முகம் சுழிக்கும் ஆபாச காட்சிகள் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்காது. இந்த படத்தில் சமூக பிரச்சினை ஒன்றையும் வைத்து இருக்கிறோம். திரையரங்குகளுக்கு ஆட்டோக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் குடும்பத்தோடு படம் பார்க்க வர முடியவில்லை என்று ஆட்டோ டிரைவர்கள் பலர் என்னிடம் வருத்தப்பட்டனர். அனைத்து திரையரங்கு உரிமையாளர்களிடமும் பேசி ஆட்டோக்களை உள்ளே அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்ள இருக்கிறோம்.”

    இவ்வாறு விஷால் கூறினார்.
    சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.
    சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.

    அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-

    1. சிந்து பைரவி

    2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')

    3. ருத்ரவீணை.

    இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

    இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.

    ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.

    இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.

    சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.

    தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.

    தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான

    பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.

    தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    இயக்குனரை காமெடி நடிகர் ஒருவர் தெறிக்கவிட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வைகை காமெடி நடிகர் தற்போது தளபதி நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மூன்றெழுத்து லி இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு முந்தைய படத்தில் நடிக்கவும் இயக்குனர் வைகை காமெடியனை அணுகினாராம்.

    அந்த சமயத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தனக்கு ரீ-என்ட்ரி படமாக பெரிய நடிகரின் படம் இருப்பதை எண்ணாமல் வைகை காமெடி நடிகர் இயக்குனரிடம் தனக்கு சம்பளமாக ரூ.4 கோடி வரை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். இதனால், அதிர்ச்சியடைந்த லி இயக்குனர் தயாரிப்பாளரிடம் கேட்டுவிட்டு வருவதாக நைசாக அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.

    அதன்பிறகே, மொட்டை நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து அழகு பார்த்தாராம் இயக்குனர். தனது தவறை உணர்ந்துவிட்ட வைகை காமெடி நடிகர் அதற்கு பரிகாரமாக தற்போது லி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிப்பதாக சொல்லி ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். 
    ×