என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும். அவர்களை குறைவாக எடை போட கூடாது என்று நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். அதை பற்றி விவரமாக கீழே பார்க்கலாம்.
    இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சினிமாத்துறைகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரபலங்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன். இதில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், ரசிகர்கள் கதையின் கருவை பார்க்கிறார்கள் என்பது தான். ஆகையால், நடிகர்கள் காலையில் எழுந்ததும் ரசிகர்களை மதிக்க வேண்டும்.

    இதை தவிர்த்து, ரசிகர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள், என்னுடைய படத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர்களை குறைவாக எடை போடாதீர்கள். ரசிகர்களால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று நான் கருதுகிறேன்.

    ஒருவரது வேலைக்கு மதிப்பு கொடுங்கள். எனக்கு கூடுதல் நம்பிக்கை எல்லாம் கிடையாது. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். மேடைக்கு பின்னால் இருப்பவர்களின் தயவை தான் பெறுகிறேன். நான் மேடை ஏறும்போது, ஏராளமான விஷயங்களை சேகரித்து கொண்டு, தயாராகவே செல்கிறேன். இந்திய சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம்.

    இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.
    ரிச்சர்டு, மனோ சித்ரா நடிப்பில் வெளிவந்துள்ள அந்தமான் படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
    அந்தமானில் இருந்து சென்னை வரும் விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது, அதில் பயணம் செய்த ஒரு கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கிறது. தாய் இறந்துவிட, குழந்தையை தலைவாசல் விஜய் தனது காப்பகத்தில் வைத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைதான் நாயகன் ரிச்சர்டு. வளர்ந்து பெரியவனாகும் ரிச்சர்டு, மண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார்.

    ரிச்சர்டு தனது ஆராய்ச்சியின் மூலம் ஒரு மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார். மண்ணின் தன்மை பற்றி அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அந்த மெஷினை உருவாக்கி வருகிறார். இதற்கிடையில், நாயகியை எதேச்சையாக சந்திக்கும் நாயகன் முதலில் அவளுடன் நட்பாக பழகிறார். பிறகு, அந்த நட்பு காதலாகிறது.

    இந்நிலையில், பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்துவிழுந்து நிறைய பேர் இறக்கிறார்கள். இடிந்து விழுந்த கட்டிடம் எழுப்பப்பட்ட இடத்தின் மண்ணை நாயகன் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த இடத்தில் கட்டிடமே எழுப்ப முடியாத அளவில் மண்ணின் தன்மை இருப்பதை கண்டறிகிறார். இந்த விபத்துக்கு காரணமான வில்லனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, கமிஷனரிடம் புகாராக கொடுக்கிறார்.

    கமிஷனரும் வில்லனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். அதன்படி, வில்லனும் கைதாகிறார். பின்னர், தனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் சிறையில் இருந்து வெளியே வரும் வில்லன், தனது ஆட்களை வைத்து தனக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிய ரிச்சர்ட்டை அடித்து துவம்சம் செய்கிறார்.

    ரிச்சர்டு இறந்துவிட்டதாக வில்லன் நினைத்துக் கொண்டிருக்கையில், அவனை காப்பாற்றி தலைவாசல் விஜய்யும், நாயகியும் அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்தமானுக்கு செல்லும் நாயகன், அங்கேயும் வில்லன் சட்டவிரோதமாக போதை மருந்து கடத்திக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். இதையறியும் வில்லன், நாயகன் உயிரோடு இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.

    இதிலிருந்து நாயகன் தப்பித்தாரா? தனது காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் ரிச்சர்டு கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு படம். இப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆராய்ச்சி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகி மனோசித்ரா பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.

    தலைவாசல் விஜய், மனோபாலா, கிரேன் மனோகர், சாம்ஸ், போண்டா மணி உள்ளிட்டோருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இருப்பினும், தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் ஆதவன் உண்மைக் கதையோடு சேர்ந்த சமூகத்திற்கு அத்தியாவசியமான கருத்தை படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார். நடிகர்களை இன்னும் கொஞ்சம் அழகாக வேலை வாங்கியிருக்கலாம். திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

    செல்வாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். செல்வதாசனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘அந்தமான்’ பார்க்கலாம்.
    பிரேமம் பட நாயகி ஒருவர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    ‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் ‘வாலு’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது.

    இந்நிலையில், தற்போது, இப்படத்தின் நாயகியாக ‘பிரேமம்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருந்ததாக வெளிவந்த செய்திக்கு படக்குழுவினர் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருவதாகவும், இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறியிருந்தனர்.

    தற்போது, சாய் பல்லவியையே இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது. ‘பீமா’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் கேங்ஸ்டர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சில்வர் லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

    ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி ஒரேகட்டமாக நடத்தி முடித்து, மார்ச் மாதத்தில் முடிக்க முடிவு செய்துள்ளனர்.
    புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விருகம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் சிவாவுக்கு நான்கு நண்பர்கள். நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறார்கள். இந்நிலையில், நண்பர்களில் ஒருவர் கதை எழுதுவதில் வல்லவர். அவருக்கு தினமும் இரவில் மர்ம நபர் ஒருவர் தனது நண்பர்களை கொலை செய்வது போல் கனவு வருகிறது.

    அப்படி இவர் கனவில் கொல்லப்படும் ஒவ்வொரு நண்பனும் மறுநாள் காணாமல் போகிறார்கள். இதனால் பயந்துபோன அவர், இதுபற்றி நாயகன் சிவாவிடம் கூறுகிறார். சிவாவும் தனது நண்பனின் கனவில் தோன்றிய இடத்திற்கு சென்று அங்கு ஏதாவது தடயம் இருக்கிறதா? என்று தேடிப் பார்க்கிறார்.

    ஆனால், அப்படி அவர்கள் கொலை செய்யப்பட்டதற்காக தடயங்கள் எதுவுமே அந்த இடத்தில் இருப்பதில்லை. உண்மையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதையையே ‘விருகம்’ படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. இவரே நாயகனாகவும் படத்தில் நடித்திருப்பதால், இவரிடமிருந்து நடிப்பாவது புதிதாக வரும் என்றால் அதுவும் இல்லை. நடிப்பை முகத்தில் கொண்டுவர ரொம்பவுமே சிரமப்பட்டிருக்கிறார். ஆக்ரோஷம், ரொமான்ஸ் என எதுவுமே இவரிடமிருந்து பெரிதாக வெளித் தெரியவில்லை.

    நாயகியாக ஜென்னிஸ், ஒரு சில காட்சிகள் வந்தாலும், மனதில் பதிய மறுக்கிறார். நடிப்பிலும் சுமார் ரகம்தான். நண்பர்களாக வருபவர்களும் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடமிருந்தும் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்கமுடியவில்லை. இயக்குனர் சிவா, திரில்லர் கதையில் இன்னும் ஏதாவது புதுமையை புகுத்தியிருக்கலாம். அதேபோல், கதாபாத்திரங்களையும், இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு வேலை வாங்கி நடிக்க வைத்திருக்கலாம்.

    பிரபுவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் திரில்லிங் பிரதிபலிக்கவில்லை. எஸ்.ஏ.ராஜீன் ஒளிப்பதிவும் பெரிதாக எடுபடவில்லை.

    மொத்தத்தில் ‘விருகம்’ வெறுமை.
    இந்த வருடத்தில் நல்ல படங்களில் நடித்த திருப்தி எனக்கு இருக்கிறது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார் அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    தமன்னா, இந்த வருடம் தர்மதுரை, தோழா, தேவி, கத்தி சண்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் தோழா படம் தெலுங்கிலும் தேவி படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளிவந்தது. இந்த வருட படங்கள் திருப்தி அளித்ததா? அடுத்த வருடத்துக்கு என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்? என்று தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    “நான் இந்த வருடத்தில் நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு திருப்தியை தந்தன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தேன். தர்மதுரையில் எனது நடிப்பு பேசப்பட்டது. தேவி படம் எதிர்பார்த்த வசூல் தரவில்லை என்கின்றனர். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. அந்த படத்தில் பிரபுதேவா எனது நடிப்பு திறமையை பிரமாதமாக வெளிக்கொண்டு வந்து இருந்தார்.

    நான் வெற்றி தோல்விகளை கவனத்தில் எடுப்பது இல்லை. கதை, கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறேன். அப்படிப்பட்ட படங்களில் முழு ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பது முக்கியம். ரசிகர்களை கவரும் படங்கள்தான் வெற்றி படங்கள்.

    படங்கள் வெற்றி பெறும்போது மகிழ்ச்சி அடைகிறேன். தோல்வி அடையும்போது அது பாடமாக மாறி நிறைய கற்றுக்கொடுக்கிறது. இரண்டு படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். எனக்கு நடனம் ரொம்ப பிடிக்கும். எனக்குள் இருக்கும் நடன திறமையை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டேன்.

    புத்தாண்டில் எந்த திட்டமும் இல்லை. சினிமாவில் திட்டம்போட்டு எதையும் செய்ய முடியாது. நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கும். பாகுபலி இரண்டாம் பாகம் படத்தை மட்டும் புத்தாண்டில் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். இந்த படம் அதில் பணியாற்றிய நடிகர்-நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்குமே முக்கிய படம். அது எல்லோருக்கும் பெயர் வாங்கி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியில் நல்ல கதை வந்தால் மீண்டும் நடிப்பேன்.”

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    கார்த்தி போலீஸ் அதிகாரியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    கார்த்தி ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் கார்த்தி நடித்திருந்தாலும், போலீஸ் வேடம் ஏற்று நடித்ததில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ இயக்குனர் வினோத் இயக்கவிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது. முழுக்க முழுக்க சென்னையிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் நடத்தி முடிக்கவுள்ளனர். மேலும், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    பழம் பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    பழம் பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா மும்பை ஜூகுவில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் மதியம் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், வயிற்று கோளாறு காரணமாக வாந்தி மற்றும் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் வேகமாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
    இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.
    இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.

    அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    "எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்'' என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், "இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!'' என்ற எண்ணம்தான்.

    இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.

    அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!

    அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் "ஒரு கை ஓசை'' (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

    இப்படி, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை'' என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் "புதிய பாதை''); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: "சிகரம்.''

    சாருசித்ரா சீனுவாசன், "தீஸ்ரி மஞ்ஜில்'' என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் - ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.

    படம் முடிந்ததும், "இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.

    சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.

    சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று - நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.

    என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.

    கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.

    பாரதிராஜா அவரது "காதல் ஓவியம்'' படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.

    நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், "படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்'' என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.

    நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்' அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.

    படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், "படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்'' என்றேன். "சரி'' என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.

    திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, "ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!'' என்றார்.

    "அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!'' என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.

    படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.

    பாரதி என்னிடம் வந்து, "வா, குருவாïர் போய் வரலாம்'' என்றார். "படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!'' என்று கூறிவிட்டேன்.

    "காதல் ஓவியம்'' படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.

    "பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்'' என்றேன்.

    "உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!'' என்றார்.

    அதற்கு நான், "யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் "ஜெகன்மோகினி'' படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்'' என்றேன்.

    ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

    ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த "வாலிபமே வா வா.'' படம் ஓடவில்லை.

    "அலைகள் ஓய்வதில்லை'' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, "அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது'' என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.

    நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.

    அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!''

    இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.
    அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள் . இதில் நயன்தாரா மகளாக பேபி மானஸ்வி நடிக்கிறது.

    அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் நயன்தாரா தம்பியாக அதர்வா நடிக்கிறார். இந்த படத்தில் போலீசாக வரும் நயன்தாரா 4-வயது குழந்தையின் அம்மாவாகவும் நடிக்கிறார்.

    அவருடைய குழந்தையாக நடிப்பது பேபிமானஸ்வி. இந்த குழந்தை நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள். ‘சதுரங்கவேட்டை-2’, ‘ஏதோவானிலை மாறுதே’ படங்களில் நடித்து வரும் இந்த குழந்தை நட்சத்திரம், இப்போது ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்து வருகிறாள்.

    நயன்தாராவின் மகளாக நடிக்கும் மானஸ்வியை சுற்றி இந்த படத்தில் கதை நகரும் விதத்தில் முக்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் இந்த குழந்தை நட்சத்திரத்துக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிகுமார் ஜோடியாக தான்யா நடிக்கிறார். இந்த படத்தில் அவர் டப்பிங் பேசி இருக்கிறார்.

    பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா.இவர் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 23-ந்தேதி திரைக்கு வருகிறது.

    பெரும்பாலும் மலையாளம், தெலுங்கு,கன்னடம், இந்தி பேசும் நடிகைகள் தான் தமிழ் படங்களில் கதாநாயகியாக அறிமுகமாவார்கள்.

    இந்த படத்தில் தமிழ் பேசும் தான்யாவே கதாநாயகி ஆகி இருக்கிறார். முதல் படமான ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் ‘டப்பிங்’கும் இவர் தான் பேசி இருக்கிறார்.

    திருட்டு விசிடியை தடுக்க பஸ் அதிபர்கள் உதவ வேண்டும் என்று நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பஸ் அதிபர்களுக்கு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள்...

    “என் அன்புமிக்க சகோதர்களுக்கு வணக்கம்.

    வருகின்ற 23ஆம் தேதி நான் நடித்த ‘கத்திசண்டை’ திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். திரைப்பட உலகில் அனைத்துதர மக்களின் உழைப்புடன் ஒரு திரைப்படம் வெளிவருகிறது. அத்திரைப்படம் ஒரு சில வி‌ஷமிகளின் இழிச்செயலால் திருட்டு விசிடியாக வெளிவருகிறது. அவ்வாறு வெளிவரும் அதை உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்தில் திரையிடுகின்றனர். அவர்களுடைய இச்செயலால் திரைப்பட உலகில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

    திருட்டு விசிடிக்கு எதிராக நான் பல முறை குரல்கொடுத்து இருப்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இம் முறை நான் உங்களுடன் கைகோர்த்து குரல்கொடுக்க விரும்புகிறேன். எனவே, நீங்கள் உங்களுடைய வாகனத்தில் புதிய படங்களை திரையிடாமல் இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டிக்கொள்கிறேன். இதன் மூலம் திரையுலகை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளிபெருக வழி பிறக்கும். எங்களில் நீங்களும் ஒருவராக இருந்து செயல்பட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.

    பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போல இருந்தது. இந்த படத்தில் நடிக்க உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார் நடிகை தமன்னா.

    ‘பாகுபலி’ படத்தில் நடித்த தமன்னா, தற்போது ‘பாகுபலி-2’ல் நடித்து வருகிறார். இது பற்றி கூறிய அவர்...

    “என்னுடைய திரைஉலக நிலைமை மோசமானதாக இருந்த போது, பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் ‘பாகுபலி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போல இருந்தது. ‘பாகுபலி’ பட வாய்ப்பு நான் எதிர்பாராதது. என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகுபலி 2-ம் பாகத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.

    ‘பாகுபலி-2’ படப்பிடிப்பு இந்த மாதம் முடிந்து விடும். பாகுபலி படத்தில் நடிக்க உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

    ×