என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    திரைப்படங்களின் வசூல் அடிப்படையில் போர்ப்ஸ் வணிக பத்திரிகை தயாரித்து இருக்கும் புதிய பட்டியல் ஒன்றில் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள் இடம் பிடித்துள்ளனர்.
    போர்ப்ஸ் வணிக பத்திரிகை, 2016-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்களுக்கு பின்புலமாக இருந்த முன்னணி 10 ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளது.

    நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் வெளியான கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட திரைப்படங்கள் 120 கோடி டாலர் வசூலை அள்ளி இருக்கிறது. இவர் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

    அடுத்து கிரிஸ் இவான்ஸ் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகிய நடிகர்கள் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். இவர்கள் நடித்த திரைப்படங்கள் தலா 115 கோடி டாலர் வசூல் செய்துள்ளன. நடிகை மார்காட் ரோபீ நடித்த படங்கள் 110 கோடி டாலரை அள்ளி இருக்கின்றன. எமி ஆடம்ஸ் படங்கள் 104 கோடி டாலர் ஈட்டி உள்ளன. இதனையடுத்து போர்ப்ஸ் பட்டியலில் இவர்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

    பென்அஃப்லெக் நடித்து வெளிவந்த படங்கள் 102 கோடி டாலர் வசூல் செய்துள்ளன. இவர் ஆறாவது இடத்தில் இருக்கிறார். நடிகர் ஹென்றி கவில் ஏழாவது இடத்தில் உள்ளார். இவரது திரைப்படங்கள் 87 கோடி டாலர் வசூல் செய்திருக்கின்றன.

    ரயன் ரினால்ட்ஸ் நடித்த படங்களின் டிக்கெட் விற்பனை 82 கோடி டாலரை எட்டியதை அடுத்து போர்ப்ஸ் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். பெலிசிட்டி ஜோன்ஸ் படங்கள் 80 கோடி டாலரும், வில்ஸ்மித் படங்கள் 77 கோடி டாலரும் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. இவர்கள் இருவரும் முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளனர்.

    போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2016 செப்டம்பர் வரையிலான ஓராண்டில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில், வருவாய் அடிப்படையில் (ரூ.270 கோடி) பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்தில் உள்ளார்.
    கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். பெண் சித்தர் வேடத்தில் அவர் வருகிறார். இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
    தமிழ் பட உலகில் 1960 மற்றும் 70-களில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கே.ஆர்.விஜயா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டார். கே.ஆர்.விஜயாவுக்கு தற்போது 68 வயது ஆகிறது.

    கடந்த 15 வருடங்களாக கே.ஆர்.விஜயா சினிமாவில் தீவிரமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். ரஜினிகாந்தின் சந்திரமுகி, கமல்ஹாசனின் தசாவதாரம் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் ஓரிரு காட்சிகளில் குணசித்ர வேடங்களில் தலைகாட்டினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர்.விஜயா ‘மாயமோகினி’ என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

    இந்த படத்தில் அவர் பெண் சித்தராக வருகிறார். அவர் நடித்த காட்சிகள் வந்தவாசி அருகே படமாக்கப்பட்டு உள்ளன. இந்த படத்தை ராசா விக்ரம் டைரக்டு செய்கிறார். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக கே.ஆர்.விஜயா தெரிவித்தார்.

    மாயமோகினி படம் பற்றி டைரக்டர் ராசா விக்ரம் கூறியதாவது:-

    “விட்டலாச்சாரியார் பாணியில் திகில் படமாக மாயமோகினி தயாராகி உள்ளது. முன் ஜென்மத்தில் காதல் கைகூடாமல் இறந்த இளம்பெண் மோகினியாக மாறி இந்த ஜென்மத்தில் அவளுடைய காதலனை அடைய முயற்சிப்பதும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை.

    இதில் கதாநாயகனாக குஷ்புவின் சகோதரர் அப்துல்லாவும், மோகினியாக சாரிகாவும் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் தங்கவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தில் பெண் சித்தராக நடிக்க வேண்டும் என்று கே.ஆர்.விஜயாவை அணுகினோம். அவரும் கதையை கேட்டு பிடித்துப்போய் நடிக்க சம்மதித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அவர் நடித்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்தி நடிகர் அர்ஜூன் கபூரின் பங்களா வீட்டில் உள்ள சட்டவிரோத கட்டுமானத்தை இடித்து தள்ளுவதற்கு மாநகராட்சி அவருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.
    இந்தியில் வெளியான இஸ்க்ஜாடே, அவுரங்கசீப், குண்டே, 2 ஸ்டேட்ஸ், ஹீ அண்டு ஹா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அர்ஜூன் கபூர். இவர் ஜூகுவில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார்.

    நடிகர் அர்ஜூன் கபூர் தனது பங்களா வீட்டில் மாநகராட்சியின் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு வீட்டில் மாற்றங்கள் செய்து உள்ளார்.

    இதுபற்றி மாநகராட்சிக்கு புகார் வந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதமே இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி தரப்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரையிலும் நடிகர் அர்ஜூன் கபூர் மாநகராட்சிக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    இதையடுத்து அர்ஜூன் கபூர் வீட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை இடித்து தள்ள மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக மீண்டும் அர்ஜூன் கபூருக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பி இருக்கிறது. அதில் உங்களது வீட்டில் (அர்ஜூன் கபூர்) சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானத்தை இடிப்பதற்கு மாநகராட்சி ஊழியர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அவரது வீட்டில் கண்டறியப்பட்டுள்ள சட்டவிரோதமாக கட்டுமானம் ஒரு வாரத்தில் இடித்து தள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    அ.தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜுக்கு போனில் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளராக நடிகர் ஆனந்தராஜ் இருந்தார். அவருடைய வீடு சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே லேக் ஏரியாவில் உள்ளது.

    முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவையொட்டி அவர் மீது பாசம் வைத்திருந்ததாகவும் அதனால் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாகவும் நடிகர் ஆனந்தராஜ் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று அவருடைய செல்போனுக்கு கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ். மூலம் வந்தது. இதையொட்டி ஆனந்தராஜ் நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    கொலை மிரட்டல் காரணமாக உடனடியாக நடிகர் ஆனந்தராஜ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இதையொட்டி நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது:-

    நான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது அதிகம் பாசம் வைத்திருந்தேன். அவர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை விட்டு விலகினேன். நான் யார் மனதையும் புண்படுத்தவில்லை. இந்த நிலையில் ஒரு நடிகருடன் சுற்றிக்கொண்டிருக்கும் நபர் எனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் அல்ல.

    எனக்கு கொலை மிரட்டல் வந்ததையொட்டி உயர் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கொலை மிரட்டல் குறித்து கேட்டறிந்தனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விசாலும் கொலை மிரட்டல் குறித்து விசாரித்தார். எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ரஜினியும், யுவன் சங்கர் ராஜாவும் ஒரே மேடையில் இணையப்போகிறார்கள். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ராம் இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள படம் ‘தரமணி’. இப்படத்தில் வசந்த் ரவி - ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர், டிரைலர் ஏற்கெனவே வெளியானதைத் தொடர்ந்து பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஏனென்றால், இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார்.

    ராம்-யுவன்-நா.முத்துக்குமார் ஆகியோர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. இவர்கள் கூட்டணியில் ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் தேசிய விருது பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

    இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் ரஜினி வெளியிடப் போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது. யுவன்-ரஜினி-ராம் இணைந்து ஒரே மேடையில் இந்த பாடல்களை வெளியிடப்போவதாக தெரிகிறது.

    ‘தரமணி’ படத்தின் பாடல்களை ஏற்கெனவே ஒரு மேடையில் நா.முத்துக்குமார் புகழ்ந்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரகுமான் நடிப்பில் கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘துருவங்கள் பதினாறு’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது.

    துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா? என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.

    இறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

    ஒரு சாதாரண கதையை இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கொடுக்கமுடியுமா? என்று வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

    அதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்திருப்பது சிறப்பு.

    சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி காட்டி, படம் முழுக்க புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.

    காவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க அலட்டல் இல்லாத, ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

    அதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படைக்கும் வரலாறு.

    தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
    தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.

    தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று 350 படங்களை தாண்டியிருக்கிறார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் `தொடர் நாயகியாக' உலா வந்த பெருமை இவருக்கு உண்டு.

    ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக்கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்ரீபிரியாவின் பெரியப்பா. இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.

    பெரியப்பாவின் நடனப்பின்னணியில் ஸ்ரீபிரியாவின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.

    ஜெமினி தயாரித்த "மூன்று பிள்ளைகள்'' படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.

    `ஸ்ரீபிரியா' என்பது சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர். நிஜப்பெயர் அலமேலு.

    டைரக்டர் பி.மாதவன் இயக்கிய "முருகன் காட்டிய வழி'' என்ற படம் மூலம்தான் ஸ்ரீபிரியா சினிமாவில் அறிமுகமானார். ஆனால், டைரக்டர் ஏ.பி.நாகராஜன் இயக்கி சிவாஜி -சாவித்திரி சிவன்- பார்வதியாக நடித்த "திருவிளையாடல்'' படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர்.

    அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "அப்போது எனக்கு 6 வயது இருக்கும். `திருவிளையாடல்' படத்தில் பாலமுருகனாக நடிக்க சிறுவர்- சிறுமி தேவை என்று, `தினத்தந்தி'யில் விளம்பரம் வந்திருந்தது. என் பெரியப்பா, அந்தப் படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அவர் என்னிடம் "பாலமுருகனாக நடிக்க ஆலு (ஸ்ரீபிரியா) நீ வேணும்னா முயற்சி பண்ணேன்'' என்றார்.

    பெரியப்பா இப்படிச் சொன்னதும், எனக்கும் ஆசை வந்துவிட்டது. நடிக்கும் ஆசை அல்ல; சினிமாவில் நடிக்கப்போனால் ஸ்கூலுக்கு லீவு போடலாமே என்ற ஆசைதான்!

    முருகனாக நடிப்பதற்காக அம்மா என்னை அழைத்துப்போனார். அங்கே போனால், என் வயதில் சுமார் 200 பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் `மேக்கப் டெஸ்ட்' நடந்தது. அதில் என்னை மட்டுமே தேர்வு செய்தார்கள். என்னிடம் ஒரு வசனத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னார்கள்.

    அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் படிக்கத் தெரியாது! நான் படித்த `சர்ச் பார்க்' கான்வென்டில் ஆங்கிலம்தான் பிரதானம். அதோடு நான் சிறப்புப்பாடமாக இந்தியை எடுத்திருந்தேன்.

    எனக்கு, தமிழ் தெரியாவிட்டாலும் வசனத்தை எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

    பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு மலைக்குப்போன முருகனை அவ்வையார் சந்தித்து, சாந்தப்படுத்த முயற்சிக்கிற காட்சி அது.

    முருகன் தங்கியிருக்கும் மலைக்கு அவ்வையார் சென்று, "முருகா! ஞானபண்டிதா!'' என்று அழைக்க, பதிலுக்கு முருகன், "ஓ அவ்வையா!'' என்று கேட்க வேண்டும்.

    இந்தக் காட்சி பற்றி விளக்கி எனக்கான வசனத்தையும் சொல்லிக் கொடுத்து என்னை நடிக்க வைத்தார்கள். அது ஒத்திகை என்று கூட அப்போது எனக்குத் தெரியாது. என் நடிப்பு டைரக்டர் ஏ.பி.நாகராஜனுக்கு பிடித்துப்போக, மறுநாள் வருமாறு சொன்னார்கள். `கார் வரும்' என்றார்கள்.

    மறுநாள் காரும் வரவில்லை; அழைப்பும் வரவில்லை. என்ன நடந்தது என்று போய்ப்பார்த்தால், நான் நடிக்க வேண்டிய அந்த பாலமுருகன் வேடத்தில் இன்னொரு பெண் நடித்துக் கொண்டிருந்தாள்! பிறகுதான் அந்த பாலமுருகன் வேடத்துக்கு, சிவாஜி சார் சிபாரிசு செய்த பெண்ணைப் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

    பின்னாளில் நான் கதாநாயகியாக நிறைய படங்களில் நடித்தபோது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து "நவரத்தினம்'' என்ற படத்தை இயக்கினார். அதில் 9 கதாநாயகிகளில் நானும் இருந்தேன். இந்தப்படத்தில் நடித்துவிட்டு வரும்போது, ஏ.பி.நாகராஜனிடம் "சார்! நான் படத்தில் நடித்த இந்தக்காட்சி இருக்குமா? அல்லது திருவிளையாடல் படத்தில் `ஓ.கே' பண்ணிய பிறகு என்னை விலக்கியது மாதிரி இதிலும் செய்து விடுவீர்களா?'' என்று விளையாட்டாகக் கேட்டேன். அவரோ, பதறியபடி, "என்னம்மா நீ! சின்ன வயதில் நடந்ததைக் கூடவா இப்படி நினைவில் வைத்திருப்பாய்!'' என்று சொன்னார்.

    ஸ்ரீபிரியா எட்டாவது படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. நடன நிகழ்ச்சிகளை பிரபல `ஸ்டில் போட்டோகிராபர்' நாகராஜராவ் படம் எடுத்தார். விழாவைப் பார்க்க வந்த ஸ்ரீபிரியா நாகராஜராவ் எடுத்த படங்களில் விழுந்திருந்தார்.

    படங்களை நாகராஜராவ் பிரிண்ட் போட்டு தயார் நிலையில் வைத்திருந்தபோது, டைரக்டர் பி.மாதவன் அங்கு வந்தார். தற்செயலாக ஸ்ரீபிரியாவின் படத்தைப் பார்த்த மாதவன் `நாம் எடுக்கும் படத்துக்கு இந்தப்பெண்ணும் சரியாக இருப்பாள்' என்று நினைத்தார். அன்று மதியமே ஸ்ரீபிரியா படித்த சர்ச்பார்க் பள்ளிக்கு சினிமா கம்பெனி கார் போயிற்று.

    "அப்போது எனக்கு நடிப்பில் எல்லாம் ஆர்வம் கிடையாது. ஏற்கனவே சிறு வயதில் ஏற்பட்ட சினிமா அனுபவம், `அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு' என்ற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திருந்தது. அதோடு அப்போது ஸ்கூலில் `த்ரோபால்', `நெட்பால்' என்று விளையாட்டுகளில் `நம்பர் ஒன்'னாக இருந்தேன். என் `ஸ்போர்ட்ஸ்' ஆர்வம் என்னை `கேம்ஸ் டீச்சர்' ஆகவேண்டும் என்ற கனவில் வைத்திருந்தது. இப்படியிருக்கும்போது, தேடி வந்த நடிப்பு வாய்ப்பை ஏற்கத் தயங்கினேன்'' என்று கூறுகிறார், ஸ்ரீபிரியா.

    ஆனால் அவர் தாயாரோ, "மாதவன் சார் பெரிய டைரக்டர். நீ நடிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் அதை நேரில் போய் சொன்னால்தான் மரியாதை'' என்று சொல்ல, அம்மாவுடன் போய் டைரக்டர் மாதவனை பார்த்தார்.

    மாதவன் அப்போது கதாசிரியர் பாலமுருகன் தயாரித்த "மாணிக்கத் தொட்டில்'' என்ற படத்தை டைரக்ட் செய்ய இருந்தார். அதில் ஜெமினிகணேசனின் 5 மகள்களில் ஒருவராக ஸ்ரீபிரியாவை நடிக்க வைக்கும் முடிவில்தான் அழைத்திருந்தார். எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை தட்டிக்கழிக்க விரும்பிய ஸ்ரீபிரியா, "5 பேரில்  ஒருவராக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை'' என்று கூறினார்.

    "பொண்ணுக்குத் தங்கமனசு'' என்ற வெற்றிப்படத்தை மாதவன் இயக்கியிருந்த நேரம் அது. அந்தப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. "அப்படி ஒரு படத்தை தயாரிக்கும்போது, அழைப்பு அனுப்புகிறேன்'' என்று கூறினார், மாதவன். சொன்னதைச் செய்தார்.
    அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    நடிகர் ஆனந்தராஜ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இப்போதும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான். செங்கோட்டையன், பொன்னையன் போன்றோரின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. ஒருவரை உயர்த்துவதன் மூலம் ஜெயலலிதாவை இழிவுபடுத்த வேண்டாம்.

    ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் அவருடன் யாரையும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    மக்கள்தான் யார் தலைவர்? என சொல்லவேண்டும். தொண்டர்கள் விரும்புகிற தலைமை வரவேண்டும். நாளை பொதுக்குழுவில் யார் பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டாலும் வாழ்த்துக்கள். அ.தி.மு.க.வில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கு முறைப்படி கடிதம் அனுப்பிவிட்டேன்.

    வாய்ப்பு கிடைத்தால் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திப்பேன். 
    9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
    செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முதன்மை செயலாளர் லட்சுமி நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை 8 நாட்கள் பெங்களூரு மற்றும் மைசூருவில் நடைபெற உள்ளது. பெங்களூருவில் 11 திரையரங்குகள் மற்றும் மைசூருவில் 4 திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும். இதில் சுமார் 50 நாடுகளை சேர்ந்த 180 திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன.

    ஆசிய திரைப்படங்கள் போட்டி, இந்திய திரைப்படங்கள் போட்டி, கன்னட திரைப்படங்கள் போட்டி மற்றும் கன்னட ஜனரஞ்சகமான படங்கள் போட்டி என 4 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இது தவிர நகைச்சுவை, மகளிர் பிரிவில் பெண்கள் இயக்கிய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆவண படங்கள் பிரிவிலும் ஏராளமான படங்கள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளன.

    இவ்வாறு லட்சுமி நாராயண் கூறினார்.

    அதைத்தொடர்ந்து கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் ராஜேந்திரசிங்பாபு கூறுகையில், “சினிமாத்துறையினரின் குறைகளை போக்க மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் திரையரங்குகளை அமைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்“ என்றார்.
    ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களின் ஹீரோயினான புகழ்பெற்ற நடிகை கேர்ரி ஃபிஷர் லண்டன் நகரில் உயிரிழந்துள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவை சேர்ந்த நடிகை கேர்ரி ஃபிஷர், உலகப் புகழ் பெற்ற ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் இளவரசி லியா கதாபாத்திரத்தில் நன்கு அறியப்பட்டவர்.

    நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட கேர்ரி ஃபிஷர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

    பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்த போது கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸுக்கு கொண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று காலை 8 மணியளவில்(அமெரிக்க நேரப்படி) அவர் மரணமடைந்தார்.

    அவரது மகள், குடும்ப செய்தி தொடர்பாளர் வழியாக இந்த தகவலை தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பழக்கத்தாலும், தொடர் பணிச் சுமை காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

    ஃபிஷர் கதையாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா மற்றும் பேச்சாளர் என்ற பல்வேறு பரிணாமங்களை கொண்டவர். 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1969 முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
    கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.
    கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.

    டைரக்டர் பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை நாயகியாக்கி இயக்கிய படம் "பாரிஜாதம்.'' இந்தப் படத்தில் கதாநாயகன் பிருத்விராஜ×க்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ரோஜா.

    இந்தப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தபோது, ரோஜாவை அதுவரை நாயகியாக மட்டுமே பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தார்கள். தங்கள் இதயத்தில் `நாயகி'யாக குடிகொண்டிருக்கும் ரோஜா, அதற்குள் எப்படி அம்மாவாக நடிக்கலாம் என்று கோபப்பட்ட ரசிகர்கள் ஏராளம்.

    சிலர் கடிதங்கள் எழுதி திட்டினார்கள். சிலர் டெலிபோன் மூலம் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டினார்கள்.

    இதுபற்றி ரோஜா கூறும்போது, "எனக்கும் அம்மா கேரக்டரில் நடிப்பதில் உடன்பாடு இல்லைதான். ஹீரோ பிரித்விராஜ×க்கு அம்மா என்பதும் எனக்குத் தெரியாது. செட்டில் பிரிதிவிராஜை பார்த்தபோதுதான் `திக்'கென்றது. ஆனாலும், டைரக்டர் பாக்யராஜ் கேட்டு "முடியாது'' என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. எனவே, அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டியதாயிற்று. இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த அம்மா கேரக்டர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வருவது'' என்றார்.

    இந்த நட்பு பின்னணியில்தான் டைரக்டர் ராமநாராயணனின் "பாசக்கிளிகள்'' படத்தில் வில்லனின் மனைவியாக நடித்ததையும், விஜய் நடித்த "நெஞ்சினிலே'' படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட நேர்ந்ததையும் குறிப்பிட்டார்.

    ரோஜா அப்போது பிசியாக இருந்த நேரம். ஆனால் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடவேண்டும் என்று கேட்டு வந்த "நெஞ்சினிலே'' பட வாய்ப்பை அவரால் நிராகரிக்க முடியவில்லை.

    தவிரவும், இந்தப் பாடல் முழுக்க ரோஜாவை புகழ்ந்து எழுதப்பட்டது. அதுவும் விஜய்யே பாடியிருந்தார். "தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா'' என்று தொடங்கும் பாடலின் முதல் வரியே ரோஜாவை நடனக் காட்சிக்கு உடனடியாக தயார் செய்து விட்டது.

    தமிழ்ப்படங்களில் ரோஜா ஜோடி சேராத ஹீரோ என்று பார்த்தால், அதில் கமல் மட்டுமே இருக்கிறார்.

    கமலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதும், சூழ்நிலை காரணமாக அதை ஏற்கவில்லை.

    ஒரு கட்டத்தில் படங்கள் குறையத் தொடங்கியதும் ரோஜா ஆந்திர அரசியலோடு தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அணியில் ரோஜா முன்னணியில் இருக்கிறார். மேடையில் பேச அழைத்தால் போகிறார். தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கேட்க வீடு வீடாகச் செல்கிறார். மக்களுடன் சரளமாக உரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

    "குறுகிய காலத்தில், கட்சியில் முக்கிய இடத்தை பிடித்து விட்டீர்கள். `நடிகை' என்ற தகுதிதான் இதற்குக் காரணமா?'' என்று கேட்டதற்கு ரோஜா கூறினார்:

    "ஒரு தனி மனிதர் கட்சியில் சேருகிறார். படிப்படியாக வளருகிறார். கட்சியில் அவர் எல்லோருக்கும் தெரிந்த முகமாகி, முக்கிய பொறுப்புக்கு வருவதற்குள் கிட்டத்தட்ட 10 வருடமாகி விடுகிறது. என் போன்றவர்கள் சினிமா மூலம் ஏற்கனவே மக்களுக்கு தெரிந்தவர்களாகி விடுகிறோம். இதனால் கட்சி எங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கிறது. பொறுப்புக்களையும் தருகிறது.

    தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே என் மரியாதைக்குரியவர். என் திருமணம் திருப்பதியில் நடந்தபோது, அவர் ஆந்திர முதல்- மந்திரியாக இருந்தார். திருமணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டதும், சந்தோஷமாய் சம்மதித்தார். வந்து வாழ்த்தினார்.''

    இப்படிச் சொல்லும் ரோஜா, கட்சியில் சேர்ந்த புதிதில் சிவபிரசாத் என்ற வேட்பாளர் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டபோது அவருக்காக பிரசாரம் செய்து வெற்றியும் ஈட்டித் தந்தார்.

    கடந்த பொதுத்தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். 4 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். ரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவர். அவர் குறைந்த ஓட்டில்தான் ஜெயிக்க முடிந்திருக்கிறது.

    `அரசியலில் வெற்றி -தோல்வி சகஜம். அரசியலை தேர்ந்தெடுத்த பிறகு எக்காலத்திலும் அதில் இருந்து பின்வாங்குவதாக இல்லை' என்பதை, தனது அரசியல் கொள்கையாகவே வைத்திருக்கிறார், ரோஜா.

    அரசியலில் ஈடுபட்டாலும் நல்ல கேரக்டர் வந்தால் நடிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறார். சமீபத்தில் "மேக சந்தேசம்'' தெலுங்கு சீரியலில் நடிக்க நடிகை ராதிகா அழைத்திருந்தார். 4 பெரிய பையன்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்! மறுத்துவிட்டார், ரோஜா.

    "ரோஜா ரோஜாதான் என்று ரசிகர்கள் சொல்கிற மாதிரி கேரக்டர்கள் வரவேண்டும். முகத்தைக் காட்டிவிட்டுப் போகிற மாதிரியெல்லாம் நடிப்பது என்றால், அந்த வாய்ப்பு வேண்டவே வேண்டாம். பணத்தேவைக்காக நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை''- இப்படி தெளிவுபடுத்தும் ரோஜாவுக்கு அம்சவதனி என்ற 4 வயது மகளும், கிருஷ்ணகவுசிக் என்ற ஒரு வயது மகனும் வாரிசுகள்.

    "பிள்ளைகள் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, "இப்படித்தான் வரவேண்டும் என்ற திட்டமெல்லாம் வாழ்க்கைக்கு சரி வராது. அவர்களின் ஆர்வம் எதுவோ, முன்னேற்றம் எதுவோ அதிலே அவர்கள் நிச்சயம் வெளிப்படுவார்கள். பிள்ளைகளின் விஷயத்தில் எங்கள் ஆர்வத்தை திணிக்கிற பெற்றோராக நானும் செல்வாவும் ஒருபோதும் இருக்க மாட்டோம்'' என்றார், ரோஜா.
    கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்காக சமீபத்தில் சென்னை வந்த நடிகர் அஜித் குமார், போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்தாக வெளியான தகவலுக்கு அவரது செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
    பல்கேரியா நாட்டில் நடைபெற்றுவரும் படப்பிடிப்புக்கு இடையே கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்காக சமீபத்தில் சென்னை வந்த நடிகர் அஜித் குமார், நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றதாகவும், அங்கு அவரது ‘உடன்பிறவா சகோதரி’ சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.

    இந்த தகவல்களை சில ஊடகங்கள் செய்தியாகவும் வெளியிட்டிருந்தன. இந்த தகவலை அ.தி.மு.க. தலைமை நிலையத்தால் நிர்வகிக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான வலைத்தளமும் உறுதிப்படுத்தி இருந்தது.

    ஆனால், இன்றுகாலை மேற்கண்ட செய்திக்கு நேரெதிரான விளக்கத்தை நடிகரின் அஜித்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். அஜித் - சசிகலா இடையே எந்த சந்திப்பும் நடக்கவில்லை. இதுதொடர்பாக, வெளியாகிவரும் பொய்யான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என அவர் கேட்டுகொண்டுள்ளார்.
    ×