என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    விழாவில் தனது மருமகள் ஐஸ்வர்யா ராயை நடிகர் அமிதாப்பச்சன் சிரிக்க வைத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் ஐஸ்வர்யாராய் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்தார். இதனால் அமிதாப்பச்சன் அவரது மருமகள் ஐஸ்வர்யாராயுடன் கோபமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அதில் அந்த வித உண்மையும் இல்லை என்பதை, சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழா ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

    அந்த சம்பவம் இது தான்...மும்பையில் சமீபத்தில் ‘ஸ்டார் டஸ்ட்’ விருது வழங்கும் விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, கரண்ஜோஹர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அப்போது அமிதாப்பச்சன் அடித்த ஜோக்கை கேட்ட ஐஸ்வர்யா தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார். அமிதாப்பச்சன் தொடர்ந்து ஜோக் அடிக்கவே முகத்தை மூடிக்கொண்டு நீண்ட நேரம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அமிதாப்பச்சன் பின் வரிசையில் இருந்த கரன்ஜோஹரையும் பார்த்து ஜோக் அடிக்கவே ஐஸ்வர்யா ராய் சிரிப்பை அடிக்கவே முடியாமல் தவித்தார்.

    சமீபத்தில் கணவர் அபிஷேக்பச்சன், மகள்ஆரத்யா ஆகியோருடன் ஐஸ்வர்யாராய் வெளிநாடு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். இதனால் ஐஸ்வர்யாராயுடன் அமிதாப் குடும்பத்தினர் கோபம் என்ற வதந்தி புஸ்வாணம் ஆகி இருக்கிறது.
    தற்கால சூழலுக்கு ஏற்ப மீண்டும் உருவாகியுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஊர்வசி, ஊர்வசி’ பாடல் வரும் 14-ம் தேதி எம்.டி.வி. சேனலில் ஒளிபரப்பாகவுள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் ஷங்கரின் படைப்பிலும், பிரபு தேவாவின் அசத்தலான நடிப்பிலும் 1994-ம் ஆண்டு வெளியான ‘காதலன்’ திரைப்படம் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான பாடல்களுக்காகவே வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

    குறிப்பாக, கவலையே தெரியாத வாலிப வயதில் அரட்டை அடிக்கும் கும்பலை கவரும் வகையில் வைரமுத்துவின் வரிகளில் வெளியான ‘ஊர்வசி, ஊர்வசி’ என்ற பாடல் அப்போது பட்டி தொட்டிகளில் எல்லாம் மிகப் பிரபலமானது.

    எப்படிப்பட்ட கவலை வந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி, ‘ஊர்வசி, ஊர்வசி - டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் எழுதப்பட்டிருந்தது.

    இந்தப் பாடல் வெளியாகி சுமார் 23 ஆண்டுகள் ஆகும் நிலையில் மீண்டும் இதே மெட்டுக்கு வரிமாற்றம் செய்து ‘ஊர்வசி, ஊர்வசி’க்கு மீண்டும் புத்துயிர் அளிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தீர்மானித்தார்.

    இதன் எதிரொலியாக, இந்தியாவில் பண ஒழிப்பு, அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சி மாற்றம் உள்ளிட்ட தற்கால சங்கதிகளை உள்ளடக்கி புதிய ‘ஊர்வசி, ஊர்வசி’ பாடல் உருவாகியுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தனது பிறந்தநாளான இன்று (6-1-2017) ஏ.ஆர். ரஹ்மான் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி எம்.டி.வி. சேனலில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் இந்தப் பாடல் வெளியாகிறது.

    தற்கால சூழலுக்கு ஏற்ப, இந்தப் புதிய பாடலுக்கு வரிவடிவத்தை இளைய தலைமுறையினர் பலர் கொடுத்துள்ளனர்.

    அவற்றில், ‘பெல்ட்டு போட்டும் வேஷ்டி அவுந்தா - டேக் இட் ஈசி பாலிசி’, ‘ஹெல்மெட் போட்டும் மாமா புடிச்சா - டேக் இட் ஈசி பாலிசி’, ‘கடலை நடுவில் பாட்டரி தீர்ந்தா - டேக் இட் ஈசி பாலிசி’, ‘கிழிஞ்ச பேண்ட்டை பேஷன்னு சொன்னா - டேக் இட் ஈசி பாலிசி’ போன்ற வரிகள் இன்றைய தலைமுறை கூட்டத்தை நிச்சயமாக கவரும் என எதிர்பார்க்கலாம்.
    'துப்பறிவாளன்' படத்தில் அக்‌ஷராவுக்கு பதிலாக ஆண்ட்ரியா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    நடிகர் விஷால் - மிஷ்கின் முதன்முறையாக இணையும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் வி்ஷாலுக்கு வில்லனாக இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நடித்து வருகிறார்.

    மேலும் முக்கிய வேடங்களில் பிரசன்னா, வினய் ராய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். விஷாலுக்கு ஜோடியாக ஆக்ஷன் ஹீரோ பிஜு புகழ் அனு இம்மானுவேல் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

    படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருப்பதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 'தல 57' படத்தில் அக்‌ஷரா பிசியாக இருப்பதால், அவருக்கு பதில் ஆண்ட்ரியாவை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஷாலுடன் நடிக்கும் வாய்ப்பை அக்ஷரா ஹாசன் நழுவவிட்டிருக்கிறார்.
    அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் 2ம் பாகம் குறித்து கவுதம் மேனன் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்ப்போம்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015ல் வெளியான மெகா ஹிட் படம் 'என்னை அறிந்தால்'. அஜித் கேரியரில்  முக்கியமான படமாக அமைந்த 'என்னை அறிந்தால்' ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் அஜித் ஜோடியாக  த்ரிஷாவும், காமெடியனாக விவேக் மற்றும் வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான  பாடல்களும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில், 'என்னை அறிந்தால்'  படத்தின் 2ம் பாகம் குறித்து அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கவுதம் மேனன் கூறியுள்ளார். இது அஜித்  ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது, 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன், அடுத்து விக்ரமுடன் இணைந்து  'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் 'என்னை அறிந்தால் 2'-ல் அஜித்துடன் மீண்டும்  இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடிகர் ஆர்.கே.வுடன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பின் 'கத்தி சண்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் 'சிவலிங்கா' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதுதவிர '23-ம் புலிகேசி'யின் 2--வது பாகத்திலும் வடிவேலு நடிக்கவிருக்கிறார்.

    இந்நிலையில் நடிகர் ஆர்.கே.வுடன் இணைந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமொன்றில் வடிவேலு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் ஆர்.கே.வுடன், வடிவேலு சேர்ந்து நடித்த 'அழகர் மலை', 'எல்லாம் அவன் செயல்' படங்களின் காமெடி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுபோல இப்படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகவிருக்கிறதாம்.

    தற்போது இப்படத்துக்கு 'நீயும் நானும் நடுவுல பேயும்' என படக்குழு தலைப்பு வைத்திருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தி நடிகர் ஓம்புரி மும்பையில் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
    அரியானா மாநிலத்தில் வாழ்ந்துவந்த பஞ்சாபி குடும்பத்தில் 18-10-1950 அன்று பிறந்த ஓம்புரி, பாலிவுட்டில் தயாரான இந்திப் படங்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான், பிரிட்டன், மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

    பல்வேறு கலைப்படங்களிலும் தனது நடிப்பு முத்திரையை பதித்துள்ள ஓம்புரி தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவராவார்.

    1970-களில் இந்திய திரைப்படத் துறையில் ‘கலைப்படங்கள்’ எனப்படும் ‘ஆர்ட் பிலிம்ஸ்’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த ஓம்புரி, சுமார் நூறு திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர பாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை நிரூபித்துள்ளார்.

    குறிப்பாக, பாவ்னி பவாய், அர்த் சத்யா, சட்காட்டி, மிர்ச் மசாலா, தாராவி மற்றும் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ‘சாச்சி-420’ (அவ்வை சண்முகியின் தழுவல்) ஆகியப் படங்களில் இவரது தனித்தன்மையான நடிப்பை காணலாம்.



    இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் நான்கு படங்களில் நடித்து வந்தார்.

    வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு பிலிம்பேர் விருதுகளையும், இருமுறை தேசிய விருதுகளையும், சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதையும், பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ள ஓம்புரி, இன்று காலை மாரடைப்பால் மும்பையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், பல்வேறு துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    ரஜினி நடிப்பில் டிஜிட்டலாக்கப்பட்டுள்ள ‘பாட்ஷா’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் ‘பாட்ஷா’. மும்பை டான்,  ஆட்டோக்காரர் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார் பாட்ஷா. ரஜினி நடித்த படங்களில் ‘பாட்ஷா’  படமும் ஒரு மிகப்பெரிய உச்சத்தை தொட்ட படம் என்று சொல்லலாம்.

    சமீபகாலமாக சிவாஜி, எம்.ஜி.ஆர்., நடித்த பழைய படங்கள் தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீசாகி வரும்  நிலையில், ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படமும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடப்போவதாக அறிவி்க்கப்பட்டது. இது ரஜினி  ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியது.

    ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள நிலையில், டிஜிட்டலுக்கு  மாற்றப்பட்டுள்ள பாட்ஷா, ஜனவரி 10ம் தேதி சத்யம் சினிமாசில் மீண்டும் வெளியாக உள்ளது.

    ‘பாட்ஷா’ படத்தையும் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா  இயக்கியிருந்தார். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    “செல்போன், வாட்ஸ்-அப் வசதி இல்லாத பழைய காலத்து காதலே உயர்வானது” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
    நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    “இந்த காலத்து காதல் செல்போன்-வாட்ஸ்அப் யுகத்துக்கு மாறி, காதலர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழைய காலத்து காதல் எப்படி இருந்தது என்பதை எனது தந்தை கமல்ஹாசன் சொல்லி கேள்விப்பட்டபோது வியப்பாக இருந்தது.

    போன் வசதி இல்லாத அந்த காலத்து காதலர்கள் சந்தித்து பேசுவது சுலபமானதாக இருக்கவில்லை. எப்போதாவது ஒருமுறைதான் அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். நேரில் பேசித்தான் காதலை வளர்த்தார்கள். அருகருகே நின்று பேசும்போது ஒருவருக்கொருவர் அன்பான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வார்கள். அப்போது அவர்களின் முகபாவங்கள் மாறுவதையும் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் நேரில் பார்ப்பது அலாதியான சுகமானது.

    உயிரோட்டமான காதலாகவும் அது இருந்தது. அவற்றை எல்லாம் பார்த்துதான் நிறைய காதல் கதைகள் உருவானதாக என் தந்தை கூறி இருக்கிறார். அதன்பிறகு வீட்டில் இருக்கும் ‘லேண்ட்லைன்’ போனுக்கு காதல் மாறியது. போனில் மணி அடிக்கும்போது அதை அம்மாவோ, அப்பாவோ எடுத்து விடக்கூடாது என்று மனம் பதைபதைக்கும். பயமும் இருக்கும்.

    எப்போதும் போன் பக்கத்திலேயே காதலனும் காதலியும் போன் அழைப்புகளை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அது சுவாரஸ்யமானதாக இருக்கும். அது ஒரு காலம். செல்போன், வாட்ஸ்-அப் காதலுக்கு மாறி உள்ள இந்த காலத்து இளைஞர்கள் பழைய காலத்தில் இருந்த அந்த ஜீவனுள்ள காதலை இழந்து விட்டார்கள் என்றுதான் நான் சொல்லுவேன்.

    எனக்கு பழைய காலத்து காதல்தான் பிடித்து இருக்கிறது.”

    இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
    “சந்தோஷம் தராத திருமண வாழ்க்கையில் நீடிப்பது தவறு. அதில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும்” என்று நடிகை அமலாபால் கூறினார். இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
    நடிகை அமலாபால் அளித்த பேட்டி வருமாறு:-

    “நான் 7 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வருடமே அவை அனைத்தும் திரைக்கு வந்து விடும். திருமண வாழ்க்கை எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. அதனால் விவாகரத்துக்கு சென்றேன். விரைவில் விவாகரத்து கிடைத்து விடும். திருமணம் என்பது சிறுவயதில் நான் எடுத்த முடிவு. இப்போது பிரிவு ஏற்பட்டது கூட நல்லதுக்கு என்றே நினைத்துக் கொள்கிறேன்.

    திருமண வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்காதபோது, அதில் இருந்து விலகுவதற்கு தயங்க கூடாது. மகிழ்ச்சி இல்லாத அந்த சடங்குக்குள் வறட்டு கவுரவத்துக்காக நீடித்து இருப்பது தவறு. வெளியேறி விட வேண்டும். என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் எனக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் எனது குடும்பத்தினர் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருந்து அந்த வேதனையில் இருந்து என்னை மீட்டு விட்டார்கள்.

    விவாகரத்து நிகழ்வுகள் எனது சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் முன்பு போலவே என்னை வரவேற்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு கூட, நான் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகும் தொடர்ந்து நடித்தேன். இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன.

    வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். சுதிப் ஜோடியாக கன்னட படமொன்றில் நடித்து கன்னட திரையுலகிலும் அறிமுகமாகி இருக்கிறேன். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.

    என்னை அணுகும் டைரக்டர்களிடம் படத்தின் கதை மற்றும் எனது கதாபாத்திரம் பற்றி மட்டுமே கேட்கிறேன். கதாநாயகன் யார் என்று கேட்பது இல்லை. திருமணம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் எனக்கு சந்தோஷத்தையே அளித்துள்ளன. நான் நடித்த படத்தை பல வருடங்கள் கழித்து திரும்பி பார்க்கும் போதும் இப்படி ஒரு நல்ல படத்தில் நடித்து இருக்கிறேனே என்ற சந்தோஷத்தை தரவேண்டும்.

    அப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். நான் மாடர்னாக உடை அணிவதை சிலர் விமர்சிக்கிறார்கள். அந்த நபர்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை.”

    இவ்வாறு அமலாபால் கூறினார்.
    நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மனைவி கீதாமணி நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மனைவி கீதாமணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று கீதாமணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, கீதாமணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

    கீதாமணியின் உடல் ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    மரணம் அடைந்த கீதாமணிக்கு நிர்மல்ஹாசன் என்ற மகனும், அனுஹாசன் என்ற மகளும் உள்ளனர்.

    விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் 'பைரவா' படத்தில் மற்றொரு பாடல் இணைக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பைரவா'. 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன்  இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    முன்னதாக, 'பைரவா' படத்தின் 5 பாடல்கள் கொண்ட ஆல்பத்தை படக்குழு வெளியிட்டிருந்தது. பாடல்கள் வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ''வரலாம் வா வரலாம் வா பைரவா'' பாடல் ரசிகர்கள் விரும்பிக்  கேட்கும் பாடலாக அமைந்தது.

    இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் எழுதிய மற்றொரு மெலடி பாடலும் ஆல்பத்துடன் இணைக்கப்படுவதாக அவர் தனது  டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 4 பாடல்களுக்கு வைரமுத்துவும், ஒரு பாடலுக்கு அருண்ராஜா காமராஜும் பாடல்  வரிகளை எழுதியுள்ளனர்.

    தணிக்கைக்குழு சோதனையில் 'யு' சான்றிதழை பெற்ற இப்படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது.
    சென்னையில், சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் 150 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவை டைரக்டர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.
    சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா தமிழக அரசு ஆதரவுடன் வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 50 நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    ஐநாக்ஸ், கேசினோ, ரஷியா கலாசார மையம், பெலாஷோ தியேட்டர், ஆர்.கே.வி. திரைப்பட பள்ளி திரையரங்கம் ஆகிய 5 தியேட்டர்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த படங்கள் திரையிடப்படுகின்றன.

    இந்த திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்களும் திரையிடப்படுகின்றன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சூரியகாந்தி’ ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.

    சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி சத்யம் திரையரங்கில் நடந்தது. டைரக்டர் பாரதிராஜா இதில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில், அவர் பேசியதாவது:-

    தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களால் கவரப்பட்டேன். சினிமாவை சொர்க்க பூமியாக கருதி ஒரு மாய மானை போல, இந்த துறைக்கு ஓடிவந்தேன். இங்கு வந்த பிறகு தான் சினிமா என்பது சொர்க்க பூமி அல்ல, ஒரு சமூக ஊடகம் என்பது புரிந்தது.

    உலகிலேயே வலிமையான ஊடகம் சினிமா தான். சினிமாவின் கலாசார பரிவர்த்தனைகள் மூலம் உலகமே சுருங்கிவிட்டது. 14 வருடங்களாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருவது பெரிய விஷயம்.

    தமிழ் திரைப்பட துறையில் இருப்பவர்கள் தொழில்நுட்பத்தில் உலக அளவில் போட்டிபோடும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள். சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வெளிநாட்டு படங்களை பார்த்து தொழில்நுட்ப அறிவை அவர்கள் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும். அதேநேரம் நமது கலாசாரம், பண்பாட்டை வெளிநாட்டவர்களுக்கு சொல்லவேண்டும்.

    இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

    விழாவில், டைரக்டர் பாக்யராஜுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, நடிகைகள் சுஹாசினி, ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் அருள்பதி, கல்யாண், காட்றகட்ட பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்தோசினி அப்ரிசியேஷன்ஸ் அமைப்பின் தலைவர் கண்ணன் வரவேற்றார். தங்கராஜ் நன்றி கூறினார்.
    ×