என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் 7 விருதுகளை வென்று லாலா லாண்ட் படக்குழு சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த தகலை காணலாம்.
    உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் பெவர்லி ஹில்சில் நடைபெற்று வருகிறது. 2017ம்  ஆண்டுக்கான 74வது கோல்டன் குளோப் விருது விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு  செய்யப்பட்ட `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்றுள்ளது. இதில் கோல்டன் குளோப் சிறந்த நடிகராக ரியான்  கோஸ்லிங்கும், சிறந்த நடிகையாக எம்மா ஜோன்சும் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் `லாலா லாண்ட்' என்ற இசை மற்றும்  காமெடி கலந்த படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    `லாலா லாண்ட்' படக்குழு மொத்தமாக பரிந்துரை செய்யப்பட்ட 7 பிரிவிலும் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை  படைத்துள்ளது. லாலா லாண்ட் வென்றுள்ள விருதுகளாவன,

    கோல்டன் குளோப் சிறந்த படம் - லாலா லாண்ட்
    கோல்டன் குளோப் சிறந்த இயக்குநர் - டேமியன் சேஷல்
    கோல்டன் குளோப் சிறந்த திரைக்கதை - டேமியன் சேஷல்
    கோல்டன் குளோப் சிறந்த நடிகர் - ரியான் கோஸ்லிங்
    கோல்டன் குளோப் சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன்
    கோல்டன் குளோப் சிறந்த இசையமைப்பாளர் - ஜஸ்டின் ஃகுர்விட்ஸ்
    கோல்டன் குளோப் சிறந்த பாடலாசிரியைர் - பென்ஞ் ஹாசக், ஜஸ்டின் பால்

    உள்ளிட்ட 7 பிரிவுகளில் லாலா லாண்ட் படக்குழுவினர் விருது வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதர  முக்கிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் விருதுகள் வருமாறு:

    கோல்டன் குளோப் சிறந்த அனிமேசன் படம் - சூடோபியா
    கோல்டன் குளோப் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - எல்லி- பிரான்ஸ்
    கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகை- வியோலா டேலிஸ் பென்சஸ்
    கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகர் ஆரோன் டெய்லர் -ஜான்சன், நாக்டர்னல் அனிமல்ஸ்
    கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி தொடர் தி க்ரவுண்
    கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகர் - பில்லி பாப் தோர்டன் - கோலியத்
    கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகை க்ளேய்ர் ஃபாய் - தி க்ரவுண்
    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தின் போது ஹெல்மட் அணியாதவரை மோட்டார் சைக்கிளில் இருந்து நடிகர் ரன்வீர் சிங் இறக்கிவிட்டார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானேயில் மோட்டார் சைக்கிளில் பேரணி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தானே வட்டார போக்குவரத்து அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த பேரணியை தொடங்கி வைப்பதற்காக இந்தி நடிகர் ரன்வீர் சிங் வந்திருந்தார். அவர் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைப்பதற்காக சென்றபோது, அதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஒருவர் ஹெல்மட் அணியாமல் இருப்பதை கண்டார். இதையடுத்து ரன்வீர் சிங் அவரிடம் சென்று ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லவேண்டாம் என கூறி அவரை இறங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதையடுத்து அவர் இறங்கி சென்றார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்பட்ட பல்வேறு விபத்து சம்பவங்களையும், அதனால் உயிரிழந்தவர்களையும் மேற்கொள்காட்டி பேசினார். மேலும், இளைஞர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், “சாலை விதிமுறைகளை முறைப்படி பின்பற்றுவது விபத்துகளின் எண்ணிக்கையையும், இறப்புகளையும் கணிசமாக குறைக்கிறது ” என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் தானே போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது.
    திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஷோபி தலைமை தாங்கினார். நடன இயக்குனர்கள் சுந்தரம், புலியூர் சரோஜா, ஜான்பாபு, கிரிஜா ரகுராம், தருண், சீனு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு திரைப்பட தொலைக் காட்சி நடன கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கம் என்று மாற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. சங்கத்தின் 50-வது ஆண்டு விழாவை விரைவில் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடுவது என்றும் அதில் மூத்த நடன இயக்குனர்கள் 60 பேரை பாராட்டி விருதுகள் வழங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கலை நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டு நடனம் ஆட இருக்கிறார்கள். சங்கத்துக்கு புதிய முத்திரையும் அறிமுகம் செய்யப்பட்டது. சங்கத்தின் வரவு-செலவு கணக்கு விவரங்களும் பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டது.
    மலையாள பட உலகில் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மோதலால் வேலை நிறுத்தம் 23-வது நாளாக நீடிக்கிறது. இதனால் விஜய், சூர்யா படங்கள் அங்கு வெளியாகுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
    மலையாள பட உலகில் தற்போது, படங்கள் திரைக்கு வரும்போது அவற்றின் வசூலில் 60 சதவீதத்தை தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் எடுத்துக்கொண்டு 40 சதவீதத்தை திரையரங்கு உரிமையாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள். அந்த தொகை போதாது என்றும் தங்களுக்கு வசூலில் 50 சதவீதம் வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

    இதற்கு தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் சம்மதிக்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை புதிய படங்களை திரையிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதியில் இருந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரைக்கு வர இருந்த மோகன்லாலின் ‘முந்திரி வள்ளிகள் தளிர்க்கும்போல்,’ மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஜேமோண்டே சுவிசேஷங்கள்,’ பிரிதிவிராஜ் நடித்துள்ள ‘எஸ்றா’ ஆகிய படங்கள் முடங்கி உள்ளன. ஜெயசூர்யா நடித்த பக்ரி படமும் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இருதரப்புக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தைகள் நடந்து, திரையரங்கு உரிமையாளர்கள் பிடிவாதமாக இருந்ததால் தோல்வி அடைந்து விட்டது. இந்த நிலையில் விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர் நடித்து வருகிற 12-ந்தேதி திரைக்கு வர உள்ள ‘பைரவா’ படத்தை கேரளாவில் 75 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

    இதுபோல் சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் 3-ம் பாகமான சி-3 படத்தையும் வருகிற 26-ந்தேதி கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. போராட்டம் காரணமாக இந்த 2 படங்களும் அங்கு வெளியாவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

    பைரவா படத்தை திரையரங்கு உரிமையாளர்களில் சிலர் எதிர்ப்பை மீறி திரையிட முடிவு செய்து இருப்பதாகவும் இதனால் 12-ந்தேதி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இரண்டாக உடையும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கேரளா முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் `ஏகே 57' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை பார்க்காலம்.
    `வீரம்', `வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் `ஏகே 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அஜித்-சிவா கூட்டணி பல்கேரியாவில் படத்தை எடுத்து வருவதாக தகவல் வந்துள்ளது.

    நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் `ஏகே 57' படத்தில், ஆபத்தான ஸ்டன்ட்களை டூப் ஏதுமின்றி அஜித்தே செய்வது வருகிறாராம். மேலும் அஜித் நடித்துள்ள படங்களிலேயே `ஏகே 57' படமே அதிக பொருட்செலவில் சுமார் ரூ.100 கோடியை   தாண்டி உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே, வழக்கம்போல `ஏகே 57' படத்திலும் அஜித்திற்கு மாஸ் தொடக்கம் அமையும்  என்பதில் சந்தேகமில்லை. 

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் `ஏகே 57' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய்   நடித்து வருகிறார்.

    இந்நிலையில், `ஏகே 57' படம் ரிலீசாகும் தேதி தள்ளிப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. படத்தை ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. எனினும், படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    சென்னையில் நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் ராஜேஷ், பிரசன்னா, கோவை சரளா, பூச்சிமுருகன், மனோபாலா, நந்தா, உதயா, சங்கீதா, சோனியா, தினேஷ், ஜூனியர் பாலையா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை மாற்றுவது குறித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த சிலையை மெரினா கடற்கரையில் மாற்றி வைப்பதற்கு அரசிடம் வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கடற்கரையில் அமைக்காவிட்டால் கோயம்பேடு, கத்திப்பாரா சந்திப்பு போன்ற மக்கள் கூடும் ஏதேனும் ஒரு இடத்தில் வைப்பதற்கு அரசிடம் மனு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு தேவையான நிதியை எவ்வாறு திரட்டுவது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் செயல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பைரவா' படம் பொங்கலுக்கு வரும் 12ம் தேதி 55 நாடுகளில் வெளியாகி சாதனை படைக்க உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்ப்போம்.
    பொங்கல் பண்டிகையில் 'பைரவா', 'கோடிட்ட இடங்களை நிரப்புக', 'புரியாத புதிர்' ஆகிய 3 படங்கள் மட்டுமே திரைக்கு வருகிறது. இதில் விஜயின் 'பைரவா' படத்திற்கு மாஸ் ஓப்பனிங் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 'பைரவா' படத்தில் விஜய் 'அழகிய தமிழ்மகன்' இயக்குநர் பரதனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு  இசையமைத்துள்ளார்.

    தணிக்கைக் குழு சோதனையில் 'யு' சான்றிதழை பெற்ற 'பைரவா' உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீசாகிறது. வெளிநாடுகளுகளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ரைட்ஸை ஏ & பி குரூப் நிறுவனம் பெற்றுள்ளது. இதனையடுத்து அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: 'பைரவா' படம் பொங்கலுக்கு முன்பாக வரும் 12ம் தேதி வெளியாகிறது. இதில் தமிழ் படத்திலேயே 'பைரவா' படமே முதன்முறையாக ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, கென்யா, உகாண்டா,  சாம்பியா, தான்சானியா, போட்ஸ்வானா, காங்கோ, உக்ரைன், அல்பேனியா, மெக்ஸிக்கோ, லிதுவேனியா, லாட்வியா, போலந்து,  எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட 55 நாடுகளில் ரிலீசாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

    தமிழகத்தில் அதிகளவிலான (சுமார்  450) திரையரங்குகளில் 'பைரவா' வெளியாக உள்ளது. இதன்மூலம் முதல்நாள் வசூலில்  'கபாலி', 'வேதாளம்', 'தெறி' படங்களின் வசூலை 'பைரவா' முந்த வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    'கத்தி' படத்தின் ரீமேக்கில் நடித்துள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் 'கத்தி'. முழுக்க முழுக்க  விவசாயிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்க்கு  ஜோடியாக  சமந்தா நடித்திருந்தார்.

    இதனையடுத்து, கத்தி ரீமேக்கில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடித்து 'கைதி நம்பர் 150' படம் ஜனவரி 11ம் தேதி  ரிலீசாகிறது. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், வில்லனாக தருண் அரோராவும் நடித்துள்ளனர். மேலும்  இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க, ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடிகை ராய் லக்‌ஷ்மி, சிரஞ்சீவியுடன்  நடனமாடியுள்ளார்.

    இந்நிலையில், 'கைதி நம்பர் 150' படத்தின் ப்ரீரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, என்னுடைய ரீ-என்ட்ரி படத்துக்காக   நிறைய கதைகள் கேட்டேன். இதில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கத்தி' படமே என்னை கவர்ந்தது. இப்படம்  பார்த்த பிறகு, இதுதான் தனக்கு சரியான ரீ-என்ட்ரி படம் என்று முடிவு செய்தேன் என்றார். 'கத்தி' பொழுதுபோக்கு, காமெடி,  என அனைத்தும் கலந்த கலவையுடன், முக்கிய சமூக நலனை தெரிவிக்கும் படமாகவும் இருப்பதால், இப்படமே தனக்கு  150வது படமாக அமைய வேண்டும் என முடிவு செய்தேன் என்றார்.

    இதுகுறித்து, 'கத்தி' ரீமேக்கில் நான் நடிக்கிறேன் என்று கேட்ட போது, தெலுங்கு ரைட்சை தானே பெற்று தருவதாக கூறிய  நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
    ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம். விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர்.
    ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம். விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர். ஏவி.எம். நிர்வாகி வாசுமேனனை சந்தித்தனர்.

    "நாளை உனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப் போகிறோம். நாளைக்கு நீ பேசவேண்டிய வசனம் இந்த பேப்பரில் இருக்கிறது. நன்றாகப் படித்துவிட்டு வா. எப்படி நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் சொல்லித் தருகிறோம்'' என்றார், வாசுமேனன்.

    விஜயகுமாரி, வசனத்தை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு, மறுநாள் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப்போனார். அங்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடந்தது. சிரிக்கச் சொல்லியும், கோபம், சோகம் முதலான முக பாவங்களை வெளிப்படுத்தியும் படம் எடுத்தார்கள்.

    முதல் நாள் கொடுத்த வசனங்களை பேசி நடிக்கச் சொன்னார்கள். அதன்படி பேசி நடித்தார். "பரவாயில்லை; நன்றாக நடிக்கிறாய்'' என்று வாசுமேனன் பாராட்டினார்.

    "இன்னும் இரண்டு நாட்கள் நீங்கள் எல்லோரும் சென்னையிலேயே தங்கியிருங்கள்'' என்று, வாசுமேனன் கூறினார். அதன்படி, பெற்றோருடன் விஜயகுமாரி 2 நாட்கள் சென்னையில் தங்கினார்.

    2 நாட்களுக்குப்பின் ஏவி.எம்.மில் இருந்து கார் அனுப்பினார்கள். அதில் விஜயகுமாரியும், பெற்றோர்களும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றார்கள்.

    இவர்களை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் வாசுமேனன் அழைத்துச் சென்றார்.

    "உனக்குப் பாடத் தெரியுமா?'' என்று விஜயகுமாரியிடம் ஏவி.எம். கேட்டார். "தெரியாது'' என்று விஜயகுமாரி பதில் அளித்தார்.

    "பரத நாட்டியம் தெரியுமா?'', "நாடகங்களில் நடித்திருக்கிறாயா?'' - இப்படி ஏவி.எம். கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விஜயகுமாரி அளித்த பதில் "தெரியாது'', "இல்லை'' என்பதே!

    இந்த பதில்களைக் கேட்டு ஏவி.எம். சிரித்துவிட்டார். "எதுவுமே தெரியாத உன்னிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. ஸ்டூடியோவில் உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு, உனக்கு மாதச் சம்பளம் கொடுக்கப்படும்'' என்று ஏவி.எம். கூறினார்.

    இதற்கான ஒப்பந்தத்தில் விஜயகுமாரியும், அவருடைய அப்பாவும் கையெழுத்துப் போட்டனர்.

    ஏவி.எம். காலில் விழுந்து வணங்கினார், விஜயகுமாரி.

    "நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று ஏவி.எம். வாழ்த்தினார்.

    பின்னர் விஜயகுமாரியிடம் வாசுமேனன், "நீ இனிமேல் சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தினமும் இங்கு வந்து, டான்ஸ், பாட்டு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார். அதன்படி பெற்றோருடன் சென்னையில் குடியேறினார், விஜயகுமாரி.

    தினமும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்று, நடிப்பு, நடனம், வசனம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

    ஏவி.எம். தயாரித்த "குலதெய்வம்'' என்ற படத்தில் விஜயகுமாரி அறிமுகமானார். இதற்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன். அவருக்கும் இது முதல் படம். கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர்.

    எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, எம்.என்.ராஜம், மைனாவதி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்ற ராஜகோபால், பின்னர் "குலதெய்வம் ராஜகோபால்'' என்று அழைக்கப்பட்டார்.

    தன் முதல் திரைப்பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "நான் முதன் முதலில் கால் வைத்த இடம் ஏவி.எம். கலைக்கூடம். முதல் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டபோது, முதன் முதலாக பேசச்சொன்ன வசனம் கலைஞர் அவர்கள் எழுதி- நடிகர் திலகம் சிவாஜி அவர்களால் பேசப்பட்ட வசனம்- "ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்...'' என்பது. இதெல்லாம் எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்கள்.

    "குலதெய்வம்'' என்ற அருமையான படத்தில் என்னை ஏவி.எம். நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தார்.

    எந்தத் தாய் நான் சினிமாவில் நடிப்பதை ஆரம்பத்தில் எதிர்த்தாரோ, அதே தாயார் என் படம் எப்போது வரும் என்று தினமும் ஆவலோடு கேட்டு வந்தார்.

    இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் விதி விளையாடியது. என் தாயாரின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.

    தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்ப்பது, பிறகு ஸ்டூடியோவுக்கு செல்வது என்று நாட்கள் ஓடின.

    "குலதெய்வம்'' படம் முடிவடைவதற்கு முன்பே என் தாயார் காலமாகிவிட்டார்கள். என் அம்மாவை உயிரற்ற உடலாக வீட்டுக்குக் கொண்டு வந்தபோது, என் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்தது. என் அப்பா, நான், பாட்டி, அக்காள், தங்கை, அக்காள் மகள் எல்லோரும் கதறினோம்.

    நாங்கள் சென்னைக்கு புதிது. இங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது. ஆறுதல் சொல்வதற்குக்கூட யாரும் இல்லை.

    இந்த சமயத்தில் எங்கள் அம்மா இறந்த செய்தியைக் கேட்டு எஸ்.எஸ்.ஆர். வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொன்னார். என் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்தார்.

    என் அம்மாவின் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு "குலதெய்வம்'' படத்தில் தொடர்ந்து நடித்து வந்தேன். முன்பெல்லாம் என் துணைக்கு அப்பாவும், அம்மாவும் வருவார்கள். இப்போது அப்பா மட்டும் வந்தார்.

    "குலதெய்வம்'' 1956 செப்டம்பர் 29-ந்தேதி வெளிவந்தது. வெளியிட்ட எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக ஓடி, 100-வது நாள் விழாவை கொண்டாடியது.

    என் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இதைக்காண என் அம்மா இல்லையே என்ற துயரமும் மனதில் நிறைந்திருந்தது.

    எப்படி என் மனதைத் தேற்றினாலும், அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து என்னை வாட்டியது. அழுதுகொண்டே இருப்பேன். அவ்வப்போது, எஸ்.எஸ்.ஆர். என் வீட்டிற்கு வந்து எனக்கு ஆறுதல் சொல்வார். அது எனக்கு மனதில் தெம்பைக் கொடுத்தது.

    ஒருநாள் என் வீட்டிற்கு எஸ்.எஸ்.ஆர். அவர்கள் வந்தார்கள். என்னைப் பார்த்து "உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்'' என்றார்கள். "சொல்லுங்கள்'' என்றேன். "நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார். நான் மவுனமாக இருந்தேன். "மவுனம் சம்மதம்'' என்ற முறையில்.

    எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவில்லை; மாலை மாற்றிக் கொள்ளவும் இல்லை. எங்கள் வீட்டில் அப்போது இருந்த பெரியவர்களுடைய ஆசியைப் பெற்று, அவர்கள் முன்னிலையில் நாங்கள் கணவன் - மனைவியாக இல்வாழ்க்கையைத்

    தொடங்கினோம்.''இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    ஜல்லிக்கட்டு, விவசாயிகளின் உயிரிழப்புக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமீர், மன்சூர்அலி கான் பங்கேற்றனர். இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசைக் கண்டித்தும், விவசாயிகளின் தொடர் மரணத்தை  கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து  சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் காலையிலேயே ஒன்றுதிரண்ட இளைஞர்கள்  பேரணி, பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை முற்றுகையிட்டது. மேலும் இதில் இயக்குநர் அமீர், நடிகர்  மன்சூர் அலி கான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

    இதில் பேசிய அமீர், முதன்முறையாக யார் தலைமையுமின்றி இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்று  திரண்டுள்ளனர். இத்தகைய இளைஞர் சக்தியை மதித்து, ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகள் மரணம் குறித்து அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மன்சூர் அலிகான் பேசுகையில், உழவர் திருநாளாம் பொங்கல் தினம்  நெருங்கும் வேளையில், விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். காமராஜர் முதல்வராக இருந்த போதே  கடைசியாக தமிழகத்தில் அணை கட்டப்பட்டது என்று குறிப்பிட்ட மன்சூர், தற்போதைய அரசியல்வாதிகள் நீ்ச்சல் குளங்களையே  கட்டி வருகின்றனர் என்றார். எனவே விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  குறிப்பிட்டார்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சென்னை நகரை குலுக்கிய இந்த வரலாற்று சிறப்பு மிக்க  பேரணி ’பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் #wedojallikattu என்ற தலைப்பின்கீழ்  வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
    மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட இந்தி நடிகர் ஓம்புரியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஓம்புரி மரணம் விபத்து சார்ந்த மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


    இந்தி நடிகர் ஓம்புரி (66) மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    அவரது முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், ஓம்புரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் திரைப்பட உலகிலும், அவரது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது தலையின் இடது பக்கத்தில் காயம் உள்ளதாகவும், அந்த காயத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஓம்புரியின் அறையில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் தான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் அவரது மரணத்தை விபத்து சார்ந்த மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓம்புரியின் உதவியாளர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    'ஏகே 57' படத்தில் ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் இல்லாமல் அஜித் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.
    'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 'ஏகே 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க  முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது அஜித்-சிவா கூட்டணி பல்கேரியாவில் படத்தை எடுத்து வருவதாக தகவல் வந்துள்ளது.

    நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் 'ஏகே 57' படத்தில், ஆபத்தான ஸ்டன்ட்களை டூப் ஏதுமின்றி அஜித்தே செய்வது  வருகிறாராம். குறிப்பாக தனது ரசிகர்களை கவரும் வகையில், ஒரு முக்கிய காட்சியில் சுமார் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்து அஜித் அசத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் அஜித் நடித்துள்ள  படங்களிலேயே 'ஏகே 57' படமே அதிக பொருட்செலவில் சுமார் ரூ.100 கோடியை தாண்டி உருவாக்கப்பட்டு வருவதாகவும்  மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

    எனவே, வழக்கம்போல 'ஏகே 57' படத்திலும் அஜித்திற்கு ஒரு மாஸ் தொடக்கம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஏகே 57' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல்  அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக்  ஓபராய் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் 'ஏகே 57' படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×