என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜெயலலிதா மரணம் பற்றி பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து கேட்டதால் பேட்டியை பாதியிலேயே முடித்துவிட்டு கவுதமி கிளம்பினார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    கமலுடன் 13 ஆண்டுகள் வாழ்ந்த கவுதமி சமீபத்தில் கமலை விட்டு பிரிந்தார். ஆனால் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.  ‘எனது மகள் சுப்புலட்சுமிக்கு நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன்’ என்று மட்டும் கூறி இருந்தார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அதில் சந்தேகம் இருப்பதாகவும், அதுபற்றிய உண்மையை  வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அவரது கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கவுதமி ஒரு பண்பலை வானொலியில் பேட்டி அளிக்க சென்றார். அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “நீங்கள்  ஏன் உலகநாயகன் கமல்ஹாசனை பிரிந்தீர்கள்?” இதை கேட்ட உடனே கவுதமி லேசாக கோபப்படத் தொடங்கினார்.

    அடுத்து, “ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது விளம்பரம்  தேடத்தானே?” என்று கேட்டது தான் தாமதம், ஆவேசம் அடைந்த கவுதமி கோபம் அடைந்து பாதியிலேயே பேட்டியை  முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க ஆதரவு பெருகி வரும் நிலையில், சிவகார்த்திகேயனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற இளைஞர்கள் பேரணியில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் இயக்குநர் அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வளர்ந்து வரும் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் "ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு.. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்" என்று தெரிவித்துள்ளார். 
    கவுதம் - நிவின் பாலி - விக்ரம் கூட்டணி என கடந்த வாரத்தில் பரவிய தகவல் குறித்து கவுதம் மேனன் பதிலளித்துள்ளார். இதுகுறித்த தகவலை காணலாம்.
    'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக உள்ள கவுதம் மேனன், விக்ரமுடன் இணைந்து 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வருகிறார். கவுதம் மேனனின் கனவு படமான இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. மேலும் தினமும் ‘துருவ நட்சத்திரம்’ குறித்த ருசீகர தகவல் டுவிட்டரில் வெளியிடப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்னதாக கடந்த வாரத்தில், கவுதம் மேனன் - 'பிரேமம்' புகழ் நிவின் பாலியும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதற்காக கவுதம், நிவினிடம் கதை கூறியதாகவும், இதில் நிவின் பாலி இருவேடத்தில்  நடிக்கவிருப்பதாகவும், நிவினுக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க கவுதம் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

    இந்த தகவலுக்கு கவுதம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, விக்ரம்-நிவின்பாலியை வைத்து நான் புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே. நான் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் தனித்தனியாக படங்களை எடுக்க முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் பிரித்விராஜ், கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஆகியோரை வைத்து இயக்கவுள்ளதாகவும், தமிழில் ஜெயம் ரவி, தெலுங்கில் தருண் தேஜா ஆகியோரை வைத்து இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    `2.0' படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் படத்தில் மீண்டும் மும்பை டானாக சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    ரஜினி தற்போது ஷங்கரின் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் முன்னதாக வெளியான `எந்திரன்'  மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அதன் அடுத்த வெர்ஷனாக `2.0' என்ற படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.  இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமாரும் நடித்து வருகிறார்.

    இப்படத்திற்கு பிறகு ரஜினி, மீண்டும் கபாலி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தை  தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான ‘கபாலி’  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்தின் மீதும் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து  வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி மீண்டும் டானாக நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. `கபாலி' படத்தில்  மலேசியா டானாக வந்த ரஜினி இந்த படத்தில் மும்பை டானாக வருகிறாராம்.

    மும்பையில் உள்ள குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு ஆதரவாக போராடும் ஒருவராக ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்கள்  கசிந்துள்ளன. இதற்காக சில நாட்களுக்கு முன்னர், மும்பை சென்ற பா.ரஞ்சித் படப்பிடிப்பிற்கான இடங்களை தேர்வு  செய்துள்ளார். ஏற்கனவே ரஜனி `பாட்ஷா' படத்தில் மும்பை டானாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    கட்டாய விடுமுறை தினங்கள் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை காணலாம்.
    கட்டாய விடுமுறை தினங்கள் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நேற்று மத்திய அரசு நீக்கியது. நாடு முழுவதும்  பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும், பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம்  என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே  ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு  வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்,  நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷீம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர்  பக்கத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி, தனது கண்டத்தை தெரிவித்துள்ளார்.
    நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா ஆகியோர் தங்களுடைய புதிய படங்களில் வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
    கதாநாயகர்கள், தங்கள் படங்களில் உடம்பை ஏற்றியும் இறக்கியும் முகத்துக்கு ‘மேக்கப்’ போட்டு வித்தியாசப்படுத்தியும் கஷ்டப்பட்டு நடித்து ரசிகர்களை கவர்வது உண்டு. கதாநாயகிகள் காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளில் அரைகுறை ஆடைகளில் வந்து நடனம் ஆடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.

    ஆனால் அந்த நிலைமைகள் தற்போது மாறி வருகிறது. முன்னணி கதாநாயகிகள் தங்களுக்கும் கதாநாயகர்களுக்கு இணையாக கதைகளில் முக்கியத்துவம் கேட்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லாத படங்களை உதறித்தள்ளுகிறார்கள். புதுமுக நடிகர்கள் படங்களில் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கூட அவர்களுடன் நடிக்க தாராளமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

    இதனால் பெரிய கதாநாயகர்கள் புதிதாக வரும் இளம் கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து அவர்களை காதல் காட்சிகளுக்கு பயன்படுத்தும் நிலைமை இருக்கிறது.

    இப்படி பெரிய கதாநாயகர்களை ஒதுக்கி விட்டு தங்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடிக்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா ஆகியோரை பார்க்க முடிகிறது.

    நயன்தாரா, ‘மாயா’ படத்தில் பேயாகவும், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காதுகேட்காத பெண்ணாகவும் வந்து திறமை காட்டினார். தற்போது டோரா, இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் ஆகிய திகில் படங்களில் நடித்து வருகிறார். அறம் என்ற படத்தில் துணிச்சலான கலெக்டர் வேடம் ஏற்றுள்ளார். இந்த படங்கள் எதிலும் பெரிய கதாநாயகர்கள் இல்லை என்பது விசேஷம்.

    அனுஷ்கா அருந்ததி படத்திலேயே திறமையை வெளிப்படுத்தினார். இஞ்சி இடுப்பழகியில் உடல் எடையை மேலும் இருபது கிலோ ஏற்றி குண்டு பெண்ணாகவும் ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் வாள் வீசி ஆண்கள் தலைகளை கொய்யும் ராணியாகவும் வந்து அசத்தினார். தற்போது திருப்பதி வெங்கடேச பெருமாள் மகிமைகளை மையப்படுத்தி தயாராகும் பக்தி படமான ‘ஓம்நமோ வெங்கடேசாய’ படத்தில் கிருஷ்ணம்மா என்ற பெண் பக்தை வேடத்தில் வருகிறார். பாகுபலி இரண்டாம் பாகத்தில் ராணியாக நடிக்கிறார்.

    திரிஷா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படும் மோகினி என்ற திகில் படத்திலும், சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை மையப்படுத்தி உருவாகும் ‘1818’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பயங்கரவாதிகளுடன் ஆக்ரோஷமாக மோதி அவர்கள் பிடியில் பணயக்கைதிகளாக இருக்கும் அப்பாவி மக்களை மீட்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ஸ்ரேயா கவுதமி புத்ர சதாகர்னி என்ற படத்தில் ராணி வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. வினியோகஸ்தர்களும் இவற்றை வாங்கி வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.
    காசநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது வழங்கியது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    இந்தி நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரது மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு விருது வழங்க இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் முடிவு செய்தது.

    அதன்படி, மும்பையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா, 74 வயது நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க அரசின் விருதினை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் திரையுலக பிரமுகர்களும், இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்த நடிகர் அமிதாப்பச்சன், அதில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா உடன் தனக்கு ஏற்பட்ட நட்பை நினைவுகூர்ந்தார். இதுகுறித்து அமிதாப்பச்சன் பேசியதாவது:-

    நான் 2015-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்ற ஒரு வாரத்துக்குள், அமெரிக்க தூதரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், இந்தியாவில் காசநோய் விழிப்புணர்வுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம். இந்த பணியில் நீங்கள் ஈடுபடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர். உடனடியாக அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

    இந்தியாவில் காசநோய் பாதிப்பு அதிகம் இருப்பது என்னை தர்மச்சங்கடத்தில் ஆழ்த்துகிறது. 2002-ம் ஆண்டில் எனது முதுகெலும்பில் காசநோய் பாதிப்பு இருந்தது பொது பரிசோதனையில் தெரியவந்தது.

    இதனால், ஒவ்வொரு நாளும் 8-9 வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொண்டு உயிர்வாழ்ந்தேன். வெட்கத்தை விட்டு சொல்வது என்றால், எனக்கே காசநோய் வருகிறது என்றால், மற்றவர்களுக்கும் எளிதில் வரலாம். சரியான நேரத்தில் அது கண்டறியப்பட்டால், காசநோயை குணப்படுத்தி விடலாம்.

    இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்தார்.

    காசநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் அமெரிக்க அரசு இந்தியாவுடன் இணைந்து 20 ஆண்டுக்கும் மேலாக செயலாற்றி வருவதாக அந்நாட்டு தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா குறிப்பிட்டார்.
    `சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்க உள்ளது. இதுகுறித்த தகவலை காணலாம்.
    மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு  முடிந்துள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இப்படத்தைத் தொடர்ந்து, `சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில்  கார்த்தி நடிக்க உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக  ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

    'மாயா' படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 'சிறுத்தை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள கார்த்தி இப்படத்திற்காக காவல்துறை சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் தேதி துவங்க உள்ளது.
    சபரிமலையில் வரும் 14-ந்தேதி பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை வாய்ந்த கங்கை அமரனுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்படுகிறது.
    மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை காப்பதில் சிறந்த பங்களிப்பை நல்குவோருக்கு கேரள அரசு ஆண்டுதோறும் ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதரவில் வழங்கப்படும் இந்த விருது ரூ.1 லட்சம் பணமும், ஒரு சான்றிதழும் அடங்கியதாகும்.

    இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை வாய்ந்த கங்கை அமரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சபரிமலையில் 14-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கேரள சுற்றுலா மற்றும் தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், கங்கை அமரனுக்கு இந்த விருதை வழங்குகிறார்.

    தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்துக்கு கங்கை அமரன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுவதாக கேரள அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    ஆர்யா, கேத்ரீனா தெரசா நடித்துள்ள `கடம்பன்' படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
    ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யா முதன்முறையாக பழங்குடி இனமக்களுடன் இணைந்து, காட்டுவாசியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ உள்ளிட்ட படங்களின் நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்துவிட்டது. தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில்,  பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.

    இப்படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை பிப்ரவரியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    `துருவ நட்சத்திரம்' படத்திற்கு பின்னர் கவுதம் மேனன் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை காணலாம்.
    'என்னை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன் அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து  `துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்துள்ளார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், நேற்று முன்தினம்  பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் விக்ரம் கோட் & ஷீட்டில் கையில் செய்தித்தாளை வைத்தபடி  ஷ்டைலிஷாக போஸ் கொடுக்கிறார். மேலும் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தினமும் மாலை 6 மணிக்கு  படக்குழு சார்பில் டுவிட்டரில் வெளியிடப்படுகிறது. `துருவ நட்சத்திரம்' படத்தை 2017 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    `துருவ நட்சத்திரம்' படத்திற்கு பின்னர், தனது தயாரிப்பான ஒன்ராகா எண்டெர்டைன்மெண்ட் மூலம் தமிழ், தெலுங்கு,  மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உள்ள நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க கவுதம்  முடிவு செய்துள்ளாராம். இந்த படத்திற்காக, ஏற்கனவே மலையாளத்தில் பிரித்விராஜ், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின்  ஒப்புதல் கிடைத்துவிட்டதாம்.

    மேலும் தமிழில் ஜெயம் ரவியும், தெலுங்கில் சாய் தரண் தேஜாவையும் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.  இவர்களுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் அனுஷ்காவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    4 தென்னிந்திய மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும்  தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன. 
    ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து நடித்தார்.
    ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து

    நடித்தார்."குலதய்வம்'' வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்ப்பட உலகில் நிரந்தரமான ஓர் இடத்தை விஜயகுமாரி தேடிக்கொண்டார்.

    ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், புத்தா பிலிம்ஸ் போன்ற பெரிய பட நிறுவனங்களில் இருந்து விஜயகுமாரிக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் ஏவி.எம். நிறுவனத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தினால், மற்ற படங்களில் நடிக்க முடியாத நிலை இருந்தது.

    இதை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், விஜயகுமாரியை அழைத்து, "உனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதற்கு, நாங்கள் போட்ட ஒப்பந்தம் தடையாக இருக்கக்கூடாது. எனவே அதை ரத்து செய்து விடுகிறோம். இனி நீ எல்லாப் படங்களிலும் நடிக்கலாம். நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று கூறினார்.

    நெகிழ்ந்து போன விஜயகுமாரி, அவர் காலைத்தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.

    ஜெமினியின் "வஞ்சிக்கோட்டை வாலிபன்'' படத்தில், ஜெமினிகணேசனின் தங்கையாக நடித்தார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அதே படத்தை, இந்தியிலும் ஜெமினி எடுத்தது. தமிழில் நடித்த அதே வேடத்தில், இந்தியிலும் விஜயகுமாரி நடித்தார். இதுவும் பெரிய வெற்றிப்படம்.

    விஜயகுமாரிக்கு இந்திப் படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அவர் கவனம் முழுவதும், தமிழில் சிறந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் அவர் இந்திப்பட உலகின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் நடித்த ஒரே இந்திப்படம், "ராஜ்திலக்'' (வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்திப்பதிப்பு) மட்டுமே.

    புத்தா பிலிம்ஸ் தயாரித்த "பதிபக்தி''யில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.என்.ராஜம் ஆகியோருடன் விஜயகுமாரியும் நடித்தார். இதில், விஜயகுமாரிக்கு, ஜெமினிகணேசனின் முறைப்பெண் வேடம்.

    பீம்சிங் டைரக்ட் செய்த இந்தப்படம் மெகா ஹிட் படமாகும்.

    கதை-வசன கர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், முதல் முதலாக டைரக்ட் செய்த படம் "கல்யாணப்பரிசு.'' தமிழ்ப்பட உலகில், ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த படம் இது.

    ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில், விஜயகுமாரியும், சரோஜாதேவியும் அக்கா - தங்கையாக நடித்தனர். விஜயகுமாரிக்காக சரோஜாதேவி தன் காதலை தியாகம் செய்வார்.

    திருப்பங்கள் நிறைந்த இந்த முக்கோணக் காதல் கதையை, ஒரு காவியமாக உருவாக்கியிருந்தார், ஸ்ரீதர். 9-4-1959-ல் வெளிவந்து வெள்ளி விழா கண்ட இப்படத்தின் மூலம், விஜயகுமாரி மேலும் புகழ் பெற்றார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இணைந்து நடித்தனர். மனோகர், பண்டரிபாய் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். பாடல்கள், படப்பிடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தபோதிலும் படம் வெற்றி பெறவில்லை.

    இந்தக் காலக்கட்டத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து, விஜயகுமாரி பல நாடகங்களிலும் நடித்தார்.

    அதுபற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

    "நாங்கள் நடித்த நாடகங்களில் கலைஞர் எழுதிய "மணி மகுடம்'' பெரும் புகழ் பெற்றது. மற்றும் "தென்பாண்டிய வீரன்'', "புதுவெள்ளம்'', "முதலாளி'', "முத்து மண்டபம்'' போன்ற நாடகங்களை நாங்கள் நடத்தினோம்.

    நாடகங்களில் நடித்துக் கொண்டே "மனைவியே மனிதனின் மாணிக்கம்'', "கைதியின் காதலி'', "தங்க மனசு தங்கம்'' போன்ற படங்களிலும் நடித்தேன்.

    அந்த சமயத்தில் நாங்கள் "தங்கரத்தினம்'' என்ற படத்தை தயாரித்தோம். இந்தப்படத்தில் நான் ஆதிதிராவிடப் பெண்ணாக நடித்தேன். சாதியில் ஏற்ற தாழ்வு கிடையாது, எல்லோருடைய உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான். எல்லோரும் மனிதசாதி'' என்ற தத்துவத்தை சொல்லும் கதை.

    இந்த படத்தில், அப்போது பழனியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் அண்ணா பேசுவது, கலைஞர் பேசுவது முதலான காட்சிகள் இடம் பெற்றன. மக்கள் இதை மிகவும் வரவேற்றார்கள்.

    இந்தப்படம் முடியும்போது நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தேன்.

    அதனால் நாடகங்களில் நடிக்க முடியவில்லை. எனவே, "மணிமகுடம்'' நாடகத்தில் எனக்கு பதிலாக நடிக்க கோவையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவரால் கலைஞர் எழுதிய வசனங்களை பேச முடியவில்லை. ஆகவே மணிமகுடம் நாடகத்திற்குப் பதிலாக "தென்பாண்டிய வீரன்'' என்ற நாடகத்தை நடத்தினோம்.

    அந்தப் புது நடிகை யார் தெரியுமா? பிற்காலத்தில் மலையாள பட உலகில் கொடிகட்டிப் பறந்த "செம்மீன்'' பட நாயகி ஷீலாதான்!

    மருத்துவமனையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்கு டாக்டர் வாதிராஜம் அவருடைய மனைவியும்தான் பெயர் சூட்டினார்கள். என் கணவரின் முதல் எழுத்தான "ர'', என்னுடைய பெயரின் முதல் எழுத்தான "வி'' இந்த இரண்டையும் சேர்த்து ரவிக்குமார் என்ற பெயர் வைத்தார்கள்.

    குழந்தை பிறப்பதற்கு முன் வீமண்ண முதலி கார்டனில் குடியிருந்தேன். இது எனக்கு சொந்த வீடு. குழந்தை பிறந்த பிறகு, என் கணவர் அவருடைய முதல் மனைவி பங்கஜம் அக்காளுடன் இருந்த தேனாம்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    அந்த காம்பவுண்டுக்குள் மூன்று வீடுகள். அடுத்தடுத்து இருந்தன. அதில் ஒரு வீட்டில், என் கணவரின் முதல் மனைவி பங்கஜம் அக்காள் அவர்களுடைய குழந்தைகளும், மற்றொரு வீட்டில் என் கணவரின் தங்கையும் அவருடைய கணவர் டி.வி.நாராயணசாமியும் அடுத்த வீட்டில் நானும் என் மகனும் இருந்தோம். அப்பா, பாட்டி, அக்காள், தங்கை, அக்காளுடைய மகள் ஆகியோரும் என்னுடன் இருந்தார்கள்.

    நாங்கள் தனித்தனி வீட்டில் இருந்தாலும், எல்லோரும் ஒரே குடும்பத்தில் இருப்பதுபோல், ஒற்றுமையாக - சந்தோஷமாக இருந்தோம். அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனதில்  இன்னும் நிழலாடுகின்றன.

    தைப்பொங்கல் வந்துவிட்டால் எங்கள் வீடு திருவிழா கோலம் பூண்டுவிடும். என் கணவரும், நானும் பொங்கல் அன்று காலை 6 மணிக்கு போர்ட்டிகோவில் வந்து நிற்போம். நாடக கம்பெனியில் உள்ளவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள், ரசிகர் மன்றத்தினர், நரிக்குறவர்கள் கூடியிருப்பார்கள். ஒருபக்கம் நாதஸ்வரம் ஒலி ஒலித்துக்கொண்டிருக்கும்.

    பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகஆட்டம் என்று வீடே கலகலப்பாக இருக்கும், பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுச்

    செல்வார்கள்.இதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத இனிய நிகழ்ச்சியாகும்.

    அறிஞர் அண்ணா அவர்களின் 50-வது பிறந்த நாள் விழாவை எங்கள் வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஒரு வெள்ளித்தட்டில் 50 தங்கக் காசுகளை வைத்து அண்ணா அவர்களிடம் என் கணவர் கொடுத்தார்.

    எனக்கு குழந்தை பிறந்து 2 மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாடர்ன் தியேட்டர் படம் "குமுதம்'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். எனக்கு ஜோடி என் கணவர். இதில் ரங்காராவ், பி.எஸ்.சரோஜா, சவுகார்ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம்.

    சுப்பையா டைரக்ட் செய்ய, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார்.

    இந்தப் படத்தில் எனக்கு வக்கீல் வேடம். காதலனுக்காகவும், காதலன் மனைவிக்காகவும் கோர்டடில் என் தந்தையை எதிர்த்து வாதாடி ஜெயித்து, தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் கதை.

    இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முதல்தர நாயகி அந்தஸ்தை எனக்குத் தேடித்தந்தது.

    - இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.

    ×