என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    “ரஜினிகாந்த் வற்புறுத்தியதால், 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தேன்” என்று நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    தெலுங்கு பட உலகில் 1970 முதல் 2007 வரை அதிக படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சிரஞ்சீவி புதிய கட்சி தொடங்கி அரசியலில் குதித்தார். பின்னர் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் இணைந்து மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார். அரசியல் பிரவேசத்தால் 10 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தமிழில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ‘கைதி எண் 150’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்து அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்து மீண்டும் திரையுலகுக்கு வந்து இருக்கிறார்.

    திரையரங்குகளில் ரசிகர்கள் நிரம்பி வழிய பலத்த எதிர்பார்ப்போடு நேற்று இந்த படம் திரைக்கு வந்தது. பெங்களூருவில் ஒரு தியேட்டரில் முதல் காட்சிக்கான 3 டிக்கெட்டுகளை ஏலம் போட்டனர். அந்த டிக்கெட்டுகளை சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் ஒருவர் ரூ.36 லட்சத்துக்கு வாங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த தொகையை சமூக சேவை பணிக்காக தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்போவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    மீண்டும் நடிக்க வந்தது குறித்து சிரஞ்சீவி அளித்த பேட்டி வருமாறு:-

    “அரசியலுக்கு வந்த பிறகு வயது முதிர்ச்சியால் இனிமேல் சினிமா நமக்கு சரிபட்டு வராது என்று கருதி அதை விட்டு விலகி இருந்தேன். ஆனால் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். அமிதாப்பச்சன், ‘அரசியலில் எனக்கு நடிக்க தெரியாததால் திரும்பவும் சினிமாவுக்கே வந்து விட்டேன் நீங்களும் வந்து விடுங்கள்’ என்றார்.

    அவர்கள் இருவரின் வற்புறுத்தல் காரணமாக தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் தயாரித்து நடிக்க முடிவு எடுத்தேன். அந்த படத்தின் தெலுங்கு உரிமை எனக்கு கிடைக்க விஜய் உதவி செய்தார். ரஜினிகாந்த் என்னிடம், ‘உங்களுக்கு ரசிகர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி உங்களை திரையில் பார்க்க விரும்புகிறார்களோ அதுபோன்று காட்ட திறமையான டைரக்டரை தேர்வு செய்து நடியுங்கள்’ என்றார்.

    ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆலோசனைகளை ஏற்று நடித்து படமும் இப்போது திரைக்கு வந்துவிட்டது. எனது மனைவிக்கு மீண்டும் நான் நடிக்க வந்ததில் சந்தோஷம். ஆந்திரா இரண்டாக பிரிந்தபோது மந்திரி பதவியில் இருந்த நான் அதை தடுக்கவில்லை என்று ஆத்திரப்பட்டு பலர் எனது வீட்டின் முன்னால் புடவைகள், வளையல், பூ போன்றவற்றை வைத்துச்சென்றார்கள். அதைப் பார்த்து மனைவியும் குடும்பத்தினரும் வருத்தப்பட்டனர். சினிமாவுக்கு வந்த பிறகு அதுபோன்ற கவலைகள் எதுவும் இனிமேல் இல்லை.”

    இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.
    விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கி வெளிவந்துள்ள ‘பைரவா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஒய்.ஜி.மகேந்திரன் மேனேஜராக பணிபுரியும் தனியார் வங்கியில், வராத கடன் தொகையை வசூலித்து கொடுப்பவராக பணிபுரிந்து வருபவர்தான் விஜய். இவருடன் சதீஷும் சேர்ந்து அதே பணியை செய்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் பணத்தை மைம் கோபி அந்த பணத்தை திருப்புக்கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார்.

    இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொடுக்கிறார்.

    அதன்பின்னர், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறாள். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் விஜய். பின்னர், அவளையே சுற்றி சுற்றி வருகிறார்.

    திருமணம் முடிந்து, கீர்த்தி சுரேஷ் ஊருக்கு திரும்பும் வேளையில், பஸ் நிலையத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்த நினைக்கிறார் விஜய். ஆனால், அப்போது கீர்த்தி சுரேஷை ரவுடி கும்பல் ஒன்று தீர்த்துக்கட்ட வருகிறது. பின்னர், ஒரு டெலிபோன் அழைப்பு வந்ததும், அந்த ரவுடி கும்பல் கீர்த்தி சுரேஷை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு சென்றுவிடுகிறது.

    இதைப் பார்க்கும் விஜய், அந்த ரவுடி கும்பலுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் என்ன சம்பந்தம் என்று அவளிடமே கேட்கிறார். அப்போது, கீர்த்தி சுரேஷ் தான் திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரியில் படித்து வருவதாகவும், தன்னுடன் படித்து வந்த சக தோழியான அபர்ணா வினோத்தை கல்லூரியின் முதல்வரான ஜெகபதி பாபு ஆட்களை வைத்து கொலை செய்துவிட்டு, அவள்மீது தவறான பழியை சுமத்தி விட்டதாகவும் கூறுகிறாள். மேலும், இந்த கொலை சம்பந்தமாக ஜெகபதி பாபு மீது தான் வழக்கு தொடர்ந்திருப்பதால் எனக்கும், என்னுடைய குடும்பத்துக்கும் ஜெகபதி பாபுவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறுகிறாள்.

    இதைக்கேட்ட விஜய், ஜெகபதி பாபுவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் முயற்சியில் களமிறங்குகிறார். இதில் விஜய் வெற்றி பெற்றாரா? நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

    விஜய்யின் படத்தில் அறிமுகமாகும் காட்சியே மிகப்பெரிய மாஸாக உள்ளது. முதல் ஆக்ஷன் காட்சியில் மைம் கோபியின் ஆட்களை கிரிக்கெட் விளையாடியே துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளக்கிறது. கீர்த்தி சுரேஷிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடன் லூட்டி அடிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

    ஜெகபதி பாபுவுக்கு விஜய் தான் யார் என்பதை அறிமுகம் செய்யும் காட்சியிலிருந்து, ஜெகபதி பாபு கொடுக்கும் ஒவ்வொரு இடையூறுகளையும் தகர்ந்தெறிந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் விஜய் மாஸ் காட்டியிருக்கிறார். இளமையான தோற்றம், ஸ்டைலான நடிப்பு, பவர்புல் வசனங்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் என விஜய் தனியொரு ஆளாக படத்தை தாங்கிச் சென்றிருக்கிறார்.

    கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார். புடவையில் பார்க்கும்போது வழக்கம்போல கொள்ளை அழகு. விஜய்க்கு ஏற்ற ஜோடியாக இவர் அமைந்திருக்கிறார். ‘பாப்பா பாப்பா’ பாடலில் விஜய்யுக்கு இணையாக ஆட்டம் போட்டு கலக்கியிருக்கிறார். அந்த பாடலில் இவருடைய முக பாவணைகள் எல்லாம் மிகவும் ரசிக்க வைக்கிறது.

    வில்லன்களாக வரும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். ஜெகபதி பாபுவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜியும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    காமெடிக்கு சதீஷ், தம்பி ராமையா, ஸ்ரீமன், நான் கடவுள் ராஜேந்திரன் என நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், படத்தில் பெரிதாக காமெடி எடுபடவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதேபோல், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

    இயக்குனர் பரதன், நாட்டுக்கு முக்கியமானது மருத்துவம். அந்த மருத்துவத்தை சொல்லிக் கொடுக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் தகுதியான நபர்களிடம் இருக்கிறதா? என்பதை சுட்டிக்காட்டும்படியான படமாக இதை கொடுத்திருக்கிறார். விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு தன்னால் என்ன கொடுக்கமுடியுமோ? அந்தளவுக்கு கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இவருடைய வசனங்கள்தான் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பஞ்ச் டயலாக்குகள் மட்டுமில்லாமல், சாதாரண வசனங்களிலும் ஒரு பஞ்ச் இருப்பது சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியை கொடுக்கும் என்று நம்பலாம். படத்திற்கு தேவையில்லாத காட்சிகள் ஆங்காங்கே இருப்பது படத்தின் வேகத்திற்கு தடை போடுகிறது. அந்த காட்சிகளை கொஞ்சம் நீக்கிவிட்டு பார்த்தால் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

    சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. ஆனால், சில பாடல்கள் சரியான இடங்களில் அமையாதது சிறிது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிக்கட்டும் வகையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறது.

    அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் எல்லாம் புத்தம் புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும், சத்யாவின் ஆடை வடிவமைப்பும் கலர்புல்லாக இருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளில் தனித்துவம் காட்டியிருக்கிறது. பிரவின் கே.எல். எடிட்டிங் படத்திற்கு இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.  

    மொத்தத்தில் ‘பைரவா’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
    நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.
    சென்னை:

    'அழகிய தமிழ்மகன்' இயக்குநர் பரதன் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்து நடித்துள்ள பைரவா படம் இன்று ரலீஸாகிறது.

    இதனிடையே, ரசிகர்களுக்காக பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு(சற்று முன்பு) இந்த காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.

    திரையரங்கு முழுவதும் பேனர்களும், விஜய் ரசிகர் மன்ற கொடிகளும் கட்டப்பட்டு இருந்தது. தியேட்டர் வளாகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.


    முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 
    கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.
    கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.

    அண்மையில் வெளியான "சிவாஜி'' படத்தில், சிகப்பான இரு பெண்கள் கறுப்பு `மேக்கப்'பில் அங்கவை, சங்கவை என்ற வேடங்களில் நடித்திருக்கிறார்கள் அல்லவா?

    1963-ம் ஆண்டிலேயே, ஏவி.எம். தயாரித்த "நானும் ஒரு பெண்'' படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயகுமாரி, படம் முழுக்க கறுப்பு மேக்கப்பில் நடித்து, சிறந்த நடிகை என்று புகழ் பெற்றார்.

    படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, `இப்படி கறுப்பு நிறத்தில் நடித்தால், ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். இதுவரை கஷ்டப்பட்டு சம்பாதித்த பேரும், புகழும் பறிபோய்விடும்' என்று பலரும் பயமுறுத்தினார்கள். விஜயகுமாரிக்கும் அச்சம் ஏற்பட்டது.

    இதையெல்லாம் மீறி அவர் கறுப்புப் பெண்ணாக நடித்தது எப்படி?

    அதில் சுவையான கதையே அடங்கியிருக்கிறது. அதுபற்றி விஜயகுமாரியே கூறுகிறார்:-

    "நானும் ஒரு பெண் படப்பிடிப்பு தொடங்கிய வேளையில்,  "வசந்தி'' படத்தின் பூஜை, சாரதா ஸ்டூடியோவில் நடந்தது. இது ஏ.எல்.எஸ். தயாரிப்பு. நானும் அந்தப் படத்தில் நடித்ததால், பூஜைக்குச் செல்லத் தீர்மானித்தேன். "நானும் ஒரு பெண்'' படத்துக்காகப் போட்ட கறுப்பு `மேக்கப்'புடன் சென்றேன்.

    என்னைப் பார்த்தவர்கள் எல்லோரும், "நடிகைகளை அழகாகப் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். நீ இந்த கறுப்பு மேக்கப்பில் நடித்து உன் பெயரையே கெடுத்துக் கொள்ளப் போகிறாய்!'' என்று சொன்னார்கள்.

    கறுப்பு நிறத்துடன் நடிப்பதை, நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால், எல்லோரும் சேர்ந்து பயமுறுத்தியதால் எனக்கும் அச்சம் ஏற்பட்டது. `எதிர்காலம் பாதிக்கப்படுமோ!' என்று பயந்தேன்.

    நான் மனக்கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தபோது, சிவாஜிகணேசன் அங்கே வந்தார்.

    "இந்த மேக்கப் எந்தப் படத்துக்கு?'' என்று கேட்டார். "ஏவி.எம். தயாரிக்கும் நானும் ஒரு பெண் படத்தில் இப்படி நடிக்கிறேன்'' என்று சொன்னேன்.

    உடனே சிவாஜி, "விஜி! உன்னைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் பெண்ணாக இருந்திருந்தால் ஏவி.எம். செட்டியார் அவர்களிடம் போய், இந்த வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்குக் கொடுங்கள் என்று கேட்டிருப்பேன்'' என்றார். அத்துடன், "விஜி, இந்த கறுப்பு வேடம் உனக்கு பெரிய புகழை கொடுக்கப்போகிறது. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு மனதை குழப்பிக்கொள்ளாமல் தைரியமாக நடி!'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்தியது போலவே "நானும் ஒரு பெண்'' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், சிறந்த படத்துக்கான மத்திய அரசின் விருதையும், (வெள்ளிப்பதக்கம்) பெற்றது.

    இதில் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடியாக நான் நடித்திருந்தேன். எஸ்.வி.ரங்காராவ், ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். திருலோகசந்தர் டைரக்டு செய்திருந்தார்.

    இந்தப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு பெண்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டி ஏராளமான கடிதங்கள் வந்தன.

    அதில் ஒரு கடிதத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த கடிதம் ஒரு பெண் ரசிகை எழுதியது. அதில், "நான் கறுப்பாக இருக்கிறேன் என்பதால் என் கணவர் என்னை வெறுத்தார். கல்யாணம் ஆகியும், கன்னியாகவே வைத்திருந்தார். இந்நிலையில், நீங்கள் நடித்திருந்த "நானும் ஒரு பெண்'' படத்தை அவர் பார்த்துவிட்டு வந்தார். அதன்பின் அவர் மனம் மாறி என் மீது அன்பு காட்டினார். எங்கள் வாழ்வும் மலர்ந்தது. நாங்கள் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இதற்கு காரணம் "நானும் ஒரு பெண்'' படத்தில் நீங்கள் கறுப்பாக நடித்ததுதான்!'' என்று எழுதி, அதில் "நன்றி'' என்பதை அவருடைய ரத்தத்தில் எழுதி இருந்தார்.

    ஒரு பெண் வாழ்க்கை மலர்வதற்கு நான் காரணமாக இருந்தேன் என்பதை நினைக்கும்போது, அந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    "நானும் ஒரு பெண்'' படத்திற்கான விருதை வாங்க டெல்லிக்கு சென்றோம். அங்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கையில் பரிசைப் பெற்றேன்.

    அடுத்த நாள் நானும் என் கணவரும் பாராளுமன்றத்திற்குச் சென்றோம். அப்போது அங்கு நேருவை பார்த்தோம். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், என் கணவர் தி.மு.கழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். எல்லோரும் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தும் இன்று வரை தமிழ்நாடு சட்டசபைக்கு நான் சென்றதில்லை. டி.வி.''யில்தான் சட்டசபை எப்படி நடக்கிறது என்று பார்த்திருக்கிறேனே தவிர, ஒருநாளும் நேரில் பார்த்ததில்லை!

    அடுத்து, நான் நடித்த படம் பீம்சிங் டைரக்ட் செய்த "பார் மகளே பார்.'' இந்தப்படத்தில், சிவாஜிகணேசன், சவுகார் ஜானகி எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, முத்துராமன் நான் எல்லோரும் நடித்தோம். இதில் முத்துராமன், ஜோடியாக நான் நடித்தேன். இதுவும் ஒரு வெற்றிப்படம்.

    ஏவி.எம். தயாரித்த "காக்கும் கரங்கள்'' படத்தில் நானும், என் கணவரும் நடித்தோம். இதன் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர். இந்தப் படத்தில்தான் சிவகுமார், முதன் முதலாக திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவும் வெற்றிப்படம்தான்.''

    - இவ்வாறு கூறினார் விஜயகுமாரி.
    ஜல்லிக்கட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பில் திரிஷா இருப்பது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்புவும், ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும்விதமாக இன்று பத்திரிகையாளர்கள் முன்பு தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

    அப்போது, பத்திரிகையாளர்கள் சிம்புவிடம், சக நடிகையான திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பது குறித்த கேள்வியை கேட்டனர். அதற்கு சிம்பு பதிலளிக்கும்போது, திரிஷா, ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்து அதை பராமரித்து வருகிறார். ஆனால், யாரும் அதைப்பற்றி பேசுவதும் இல்லை, அவரை பாராட்டுவதும் இல்லை. அப்படியிருக்கையில் இதை மட்டும் அவரிடம் கேட்டால் எந்தவிதத்தில் நியாயம் என்று கூறினார்.

    மேலும், சக நடிகரான ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று கேட்டுள்ளாரே? அவருக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவருக்கு அதை புரிய வைக்கவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று கூறினார்.

    சிம்பு - திரிஷாவும் ‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் இதுபற்றி முடிவெடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. எனினும், தமிழகத்திற்கு நம்பிக்கையான வார்த்தைகளை பா.ஜ.க. தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

    இந்த சூழ்நிலையில், சென்னையில் நடிகர் சிம்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவர் பேசியதாவது:-

    தமிழை தாய்மொழியாக கொண்டதில் நான் மிகப்பெரிய பெருமை அடைகிறேன். இதுதான் என் வீடு, என் நாடு. தமிழ்தான் எனக்கு எல்லாமுமே. நான் முதலில் தமிழன், பிறகு தான் நான் இந்தியன். என்னை இந்த அளவுக்கு வளர்த்தது தமிழ். எனக்கு சொத்து, புகழ் அனைத்தும் அளித்தது எல்லாமே தமிழ்தான்.

    ஆனால், தமிழர்களுக்கு தொடர்ந்து பிரச்சினை இருந்துகொண்டே வருகிறது. அனைத்து பிரச்சினைகளையும் கண்டு தமிழர்கள் பொறுமை காத்து வருகின்றன்ர். தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பிரிந்து கிடப்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி எங்களை அனாதை ஆக்கிவிட்டீர்கள். அனைத்தையும் ஏற்றுக்கொள்வதுதான் தமிழர்களின் பலம் மற்றும் பலவீனம். அனைத்தையும் ஏற்றுக் கொண்டோம். ஆனால், எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து பாரம்பரியம், கலாச்சாரத்தில் கை வைத்தால் பொறுமையாக இருக்க முடியுமா?

    தமிழகம் என்ன தனி நாடா? தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது? தமிழகத்தின் மீது தொடர்ந்து பாரபட்சம் காட்டுவது ஏன்? நம்ம ஊரில் பிறந்தவர்கள்கூட ஜல்லிக்கட்டுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறார்கள். சிலம்பாட்டம் படத்தில் காளையுடன் பழக மிகவும் கஷ்டப்பட்டேன். காளையை பழக்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும்.

    ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களை கண்டு பெருமைப்படுகிறேன். இளைஞர்கள் போராட என்ன அவசியம் உள்ளது? தமிழக போலீஸைவிட சிறந்த காவலர்கள் உலகில் யாரும் கிடையாது. ஆனால், அந்த காவல்துறை இளைஞர்களை அடிக்கிறது.

    தமிழர்கள் அனாதைகள் இல்லை, கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்தீர்களா? ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப வெளிநாட்டு அமைப்புக்கு என்ன அருகதை உள்ளது? பசுக்களை துன்புறுத்தி கறக்கப்படும் பாலை குடித்தவர்களே காளை மீதான அக்கறை பற்றி பேசுகின்றனர். எந்த மிருகத்தையும் துன்புறுத்தக்கூடாது என்றால் நீங்கள் எதையுமே சாப்பிடமுடியாது.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து 10 நிமிடம் காந்திய வழியில் மவுன போராட்டம் நடத்தவுள்ளேன். தமிழ் உணர்வு உள்ளவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அனைவரும் இதேபோன்று நாளை மாலை அவரவர் இருக்கும் இடத்திலேயே 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள். எனக்காக நிற்க வேண்டாம். நம் இனத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நில்லுங்கள். பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஒன்றிணைந்து போராடுவோம்.

    எது எதற்கோ செல்பி எடுத்து பேஸ்புக்கில் போடுகிறவர்கள், தமிழுக்காகவும், தமிழன் என்ற உணர்வுக்காகவும் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்துங்கள். இதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு சிம்பு கூறினார்.
    பொங்கல் ரேசில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘பைரவா’, விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’,  பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ஜி.வி.பிரகாஷின் ‘புருஸ் லீ‘ ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷின் ‘புருஸ் லீ’ படம் பொங்கல் ரேசிலிருந்து பின் வாங்கியது.

    இந்நிலையில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ‘பைரவா’ வெளியாகும் நிலையில், பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’ படம் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது, இந்த படமும் பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இதனால், தற்போது பொங்கல் ரேசில் விஜய்யின் ‘பைரவா’ படமும், பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் மட்டுமே களமிறங்கியுள்ளது. இதில், ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும் திட்டமிட்டபடி ரிலீசாகுமா? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் நிலவியுள்ளது. இன்னும் இரண்டு தினங்கள் உள்ள நிலையில், இதுகுறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    பாரம்பரியமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும் என்ற ஆர்வம் தற்போது மாணவர்களிடையே எழுந்துள்ளது. இந்த எழுச்சியின் காரணமாக சென்னை மெரினாவில் திரளான மாணவர்கள் பொங்கி எழுந்தனர். இந்த போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களிடையே வலுப்பெற்று வருகிறது. அதேபோல், நடிகர், நடிகைகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற மாணவர்கள் மீது போலீசார் திடீர் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் மீது பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிம்புவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே, சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில், தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை ஏற்க முடியாது என்று குரல் கொடுத்துள்ளார். மேலும், அவர்களுக்காக தான் இருப்பதாகவும் உற்சாக குரல் எழுப்பியுள்ளார்.

    சிம்புவின் இந்த பேச்சால் மாணவர்களிடையே உற்சாகம் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. 
    முப்பரிமாணம் படத்தில் சாந்தனு நடிகர் மட்டுமில்லை என்று இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    சாந்தனு நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் புதிய படம் ‘முப்பரிமாணம்’. இயக்குனர்கள் பாலா, கதிர் ஆகியோருடன் பணியாற்றிய அதிரூபன் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

    இந்நிலையில், ‘முப்பரிமாணம்’ குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் அதிரூபன் கூறும்போது, நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அதனால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம்தான் ‘முப்பரிமாணம்’.

    இப்படத்தில் சாந்தனு இரண்டு, மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சாந்தனுவை, இந்த படத்தில் வேறு விதமாக பார்க்கலாம். இந்த படத்திற்காக அவர் ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். அவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு டெக்னிஷியனாகவும் கீழே இறங்கி வேலை பார்த்தார்.

    அதேபோல், இதுவரையிலான படங்களில் துறுதுறுவென கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, இப்படத்தில் பெரிய நடிகைகள் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து இசையமைக்க ஒத்துக் கொண்டார்.

    இப்படத்தில் ஒரு பார்ட்டி சாங் ஒன்றை அவர் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட 3 மாத காலம் நேரம் ஒதுக்கி, நிறைய டியூன்களை போட்டு கடைசியில் ஒன்றை தேர்வு செய்தோம். இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், விவேக், ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, பிரசன்னா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட 27 நடிகர்களை ஒன்று சேர்த்து படத்திற்காக புரோமோ சாங் ஒன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், இப்படத்தின் பின்னணி இசைக்காக 85 நாட்கள் செலவிட்டுள்ளோம்.

    இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். வருகிற பிப்ரவரியில் படத்தை வெளிக்கொண்டுவர முயற்சிகள் செய்து வருகிறோம் என்றார்.
    திரிஷா நடித்து வரும் கர்ஜனை படத்திற்காக சண்டை பயிற்சி மேற்கொள்ளவிருக்கிறாராம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    திரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘கர்ஜனை’ படத்தில் திரிஷா ஆக்ஷனுக்கு முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இதனால், ‘கோலி சோடா’, ‘பத்து எண்ணுதுக்குள்ள’ ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த சுப்ரீம் சுந்தர், திரிஷாவுக்கு சண்டை பயிற்சி கொடுத்து வருகிறாராம். இப்படம் வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார். அமித் பார்கவ் என்பவர் இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கொடி’ படத்தில் வில்லத்தனத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வாள மீனுக்கும்... விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பிரபலம் கானா உலகநாதன் புதிய படத்தில் காமெடி தாதாவாக நடிக்க உள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாள மீனுக்கும்... விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ பாடலை பாடி  பிரபலமானவர் கானா உலக நாதன். படத்தில் வரும் அந்த காட்சியில் அவரே நடித்தார்.

    தற்போது ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்ற படத்தில் வடசென்னையை சேர்ந்த காமெடி தாதாவாக நடிக்கிறார்.  ‘வேட்டி-டி‌ஷர்ட் கெட்-அப்பில் புதுமையான ஹேர் ஸ்டைலில் நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில்  நடிக்க திட்டமிட்டுள்ளார்.
    மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்துள்ள காவ்யா மாதவன் படத்தில் நடிக்க மாட்டேன் என்றுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    மலையாள நடிகர் திலீப் முதலில் மஞ்சுவாரியரை காதலித்து திருமணம் செய்தார். அப்போது மஞ்சுவாரியரை ஒருபடத்தில் நடிக்க  வைக்க பிரியதர்‌ஷன் முயற்சி செய்தார். அதற்கு திலீப் ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பிறகு மஞ்சுவாரியர் நடிக்கவில்லை.

    மஞ்சுவாரியர் பிரிந்த பிறகு, இரண்டாவதாக காவ்யா மாதவனை திலீப் மணந்தார். சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது. அதன்  பிறகு எந்த படத்திலும் நடிக்க காவ்யா மாதவன் ஒப்புக் கொள்ளவில்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதை அவர்  தவிர்த்து வருகிறார்.

    முதல் கணவரான நிஷால் சந்திராவை திருமணம் செய்ய இருந்த போதும் காவ்யா மாதவன் திருமணத்துக்குப் பிறகு நடிக்க  மாட்டேன் என்றார். எனவே, இப்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஒரு திறமையான நடிகை நடிப்பை கைவிட்டு  இருப்பது வேதனையானது என்று மலையாள ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
    ×