என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கிரண் பேடி பேசிய பேச்சுக்கு ஆர்.ஜே.பாலாஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

    ஜல்லிக்கட்டை நடத்தியே தீர்வது என்பதில் அரசியல் பிரமுகர்கள், சினிமா கலைஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது.

    இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடி, நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, நடிகர் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கிரண்பேடி, “ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. எனவே சுப்ரீம் கோர்ட்டு தடை செய்தது சரிதான்” என்றார்.

    இதற்கு பதில் அளித்த ஆர்.ஜே. பாலாஜி,” நான் குஜராத் சென்றிருந்தேன். அங்கு ஒட்டகங்கள் மீது கடுமையான சுமைகள், மூட்டைகள் ஏற்றப்படுகின்றன. அது சித்ரவதை இல்லையா? என்று கேள்வி தொடுத்தார். அதற்கு கிரண்பேடி, “ கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும்” என்றார்.

    உடனே குறுக்கிட்ட ஆர்.ஜே.பாலாஜி, “சரி... நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு மாநிலம் இந்த உத்தரவை ஏற்க மறுக்கிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்” என்றார்.

    கிரண்பேடி பதில் சொல்ல முடியாமல் கீழே பார்க்க, ஆர்.ஜே.பாலாஜி தொடர்ந்தார். “உங்கள் காலில் நீங்கள் அணிந்திருக்கும் செருப்பு தோல் எதில் இருந்து வந்தது. மாட்டை அறுத்து அதன் தோலை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடைசெய்யுங்கள்... அது சித்ரவதை இல்லையா? என்றார்.

    ஆர்.ஜே. பாலாஜியின் நியாயமான கேள்வியால் கிறங்கிப்போன கிரண்பேடி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசிக்க தொடங்கினார்.

    சபாஷ் பாலாஜி.

    வீன் டீசலுடன் நடித்த 'xXx' படத்தின் சண்டை காட்சிகள் சவால் ஆக அமைந்திருந்ததாக நடிகை தீபிகா படுகோன் குறிப்பிட்டுள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள "xXx: Return of Xander Cage" என்ற படம் உலகம் முழுவதும் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் முன்கூட்டியே ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் அறிமுகவிழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நாயகன் 'வின் டீசல்' மும்பை வந்துள்ளார். அறிமுக விழாவின்போது நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது அங்கு ஒலிபரப்பான பாடலின் இசைக்கேற்ப வின் டீசலும் தீபிகாவுடன் சேர்ந்து ‘லுங்கி டான்ஸ்’ ஆடி அசத்தினார்.

    இந்த படத்தில் நடித்த அனுபவம் தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த தீபிகா படுகோன், சண்டை காட்சிகளில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படாமல் போனாலும், சண்டை காட்சி தொடர்பான ஒவ்வொரு படப்பிடிப்புக்கு பின்னரும் உடல்வலி ஒருவாரம் வரை நீடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
    ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ பட நாயகி பார்வதி நாயர் தான் தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதிநாயர். இவர் நாளை வெளியாகும் ‘கோடிட்ட இடங்களை  நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார்.

    பார்த்திபன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவுடன் நடித்த அனுவம்பற்றி கூறிய பார்வதி நாயர்...

    “இந்த படத்தில் ‘மோகினி’ என்ற மலையாள பெண் கதாபாத்திரத்தில் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் நடித்து இருக்கிறேன்.  பார்த்திபன் சார் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து, என்னுள் இருக்கும் நடிப்பு திறமையை மிக அழகாக வெளி கொண்டு வந்து  இருக்கிறார். ஒத்திகை எதுவும் இல்லாமல் ஒரு மாத காலத்தில் நாங்கள் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் படப்பிடிப்பை  நிறைவு செய்து இருக்கிறோம்.

    இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே, இந்த மோகினி கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.  என்னுடன் இணைந்து பணியாற்றிய சாந்தனு, எனக்கு பக்கபலமாய் இருந்தார். இந்த படத்தில் நிச்சயமாக எங்கள் இருவரின்  நடிப்பும், பொருத்தமும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று பெரிதும் நம்புகிறேன். தமிழ்நாட்டில் தங்கி இருந்து, தமிழ் படத்தில் நடித்திருப்பது என்னை ஒரு தமிழ் பெண்ணாகவே மாற்றி இருக்கிறது. நாளை கோடிட்ட இடங்களுக்கு ரசிகர்கள்  எழுத இருக்கும் பதிலுக்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
    த்ரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    த்ரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது  ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    இதில் ‘கர்ஜனை’ படம் வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு  வருகிறது. இந்த படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார். அமித் பார்கவ் என்பவர் இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிவகங்கை அருகே நேமத்தம்பட்டியில் இப்படத்தின் படப்பிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. த்ரிஷா பீட்டா அமைப்பை வளர்த்து விடுவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள்  கர்ஜனை படத்தின் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரிஷா, ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்து அதை பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ‘துருவங்கள் பதினாறு’ வெற்றியால் தேசிய விருது பெறும் ஆர்வம் வந்திருப்பதாக நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    சமீபத்தில் திரைக்கு வந்த ‘துருவங்கள் பதினாறு’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரகுமான் நடிப்பு பெரிதும் பேசப்படுகிறது. இதுகுறித்து ரகுமான் அளித்த பேட்டி....

    “இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று கேட்டபோது நான் உடனே  ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இந்த படத்தில் நான் போலீஸ் ‘கெட்டஆப்’பில் நடிக்க வேண்டும்  என்றது. மற்றொன்று இதன் இயக்குனருக்கு 21 வயது தான் ஆகிறது. அனுபவம் இல்லாத ஒருவர் இயக்கத்தில் நான் நடித்து படம்  பாதியில் நின்றால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்று கருதினேன்.

    ஆனால் அவர் கதை எழுதி இருந்தவிதமும், அதில் நான் நடிக்க வேண்டும் என்ற படத்தின் ஒட்டு மொத்த குழுவின் வற்புறுத்தலும்  இயக்குனர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. திரில் கதையை அவர் சொல்லி இருந்த விதமும் நான் நடிக்க காரணம். இந்த படத்தின் இயக்குனர் உள்ளிட்ட இளைஞர்கள் அனைவரும் திறமையானவர்கள்.

    படம் தயாரான பிறகு தான் ஒரு அற்புதமான படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது தெரிந்தது. என் நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதில் நடித்ததற்காக எனக்கு சில விருதுகளையும் அறிவித்து இருக்கிறார்கள்.

    ‘துருவங்கள் பதினாறு’ உண்மையாகவே எனக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. அடுத்து தேசிய விருது பெற  வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த படம் தான்” என்றார்.
    விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்பது ‘ஒரு நாள் கூத்து’ நிவேதா பெத்துராஜின் ஆசையாம். இதுகுறித்த செய்தியை கீழே காணலாம்.
    ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். கோவில்பட்டியை சேர்ந்த இவர் துபாயில் வளர்ந்தவர். தற்போது  உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். அடுத்து ஜெயம் ரவியுடன்  ‘டிக் டிக் டிக்‘ மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வேறு சில வாய்ப்புகளும் வந்துள்ளன.

    இது குறித்து நிவேதா பெத்து ராஜ் இடம் கேட்ட போது....

    ‘ ஒரு நாள் கூத்து’ படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. அதில் ஒன்றி நடித்ததால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அதைப்பார்த்து தான் ‘ பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்கள். எனது முதல் படத்தில் நாகரீக பெண்ணாக நடித்தேன். இந்த படத்தில் தேனி பகுதியில் உள்ள கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். நகரத்தில் வளர்ந்த எனக்கு கிராமத்து பெண்களுக்குரிய பாவாடை, தாவணி அணிந்து நடித்தது புதுமையாக இருந்தது. இந்த வேடத்தை ரசித்து  நடித்திருக்கிறேன்.

    அடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக்.. டிக்.. டிக்’ படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இனி விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை”  என்றார்.
    தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13-ந் தேதி (இன்று), 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சிகள்) நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13-ந் தேதி (இன்று), 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சிகள்) நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களான 14, 15, 16 ஆகிய தேதிகளிலும் ஏற்கனவே உள்ள அரசாணையின்படி அதிகப்படியாக ஒரு காட்சி காலை 9 மணிக்கு நடத்திக்கொள்ளலாம்.

    அதுபோல் நடமாடும் திரையரங்குகள் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலைக்காட்சி 9 மணிக்கும், 13, 17, 18 மற்றும் 19-ந் தேதிகளில் ‘மேட்னி’ காட்சியாக மதியம் 2.30 மணிக்கும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பி.வாசு இயக்கத்தில் வெளியாகவுள்ள `சிவலிங்கா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு நடித்திருக்கும் படம் `சிவலிங்கா'. கன்னடத்தில் பி.வாசு  இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் பிப்ரவரியில் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், `சிவலிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமன் இசையில் `சிவலிங்கா' படத்தின் பாடல்கள் பொங்கல் ட்ரீட்டாக நேற்று வெளியானது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன்  பிரபு, சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதில், சிவலிங்கா படத்தின் `ரங்கு ரக்கரா' பாடலுக்கு லாரன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் செமையான குத்தாட்டம் போட்டனர்.  இதன்பின்னர் பேசிய லாரன்ஸ், சிவகார்த்தியன் நடித்து வரும் புதிய படத்தில், ஒரு பாடலை அவர் வடிவமைப்பதாக தெரிவித்தார்.
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்த திரைப்படத்துறையினர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்தனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு திரைப்படத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை 12-1-2017 அன்று (நேற்று), திரைப்பட இயக்குனர்களான பி.பாரதிராஜா, கே.பாக்யராஜ்;


    சசிகலாவை திரைப்பட இயக்குனர்கள் சந்தித்து பேசியபோது எடுத்த படம்.

    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர் லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான மனோஜ்குமார், ரமேஷ் கண்ணா, சி.ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணைத் தலைவர் கதிரேசன்; தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கட்ரகட பிரஜாத்; சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்; தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், முருகேசன்; சென்னை- செங்கல்பட்டு-திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, சாகுல் அமீது, பிரசாத், வெங்கட்; தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் சிவா, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரன்; தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார்; திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் செல்வின் ராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி டைமண்ட் பாபு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் நேரில் சந்தித்தனர்.


    திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேசிய காட்சி.

    அப்போது, தமிழ்நாடு திரைப்படத்துறையின் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி, ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்து, முதல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கலந்துகொண்டு துவக்கி வைத்து சிறப்பிக்குமாறு தமிழ்நாடு திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் அழைப்பு விடுத்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வருகிற 17-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைக்க இருப்பதாக திரைப்படத்துறையினர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
    நடிப்பு துறையில் யாரோடும் நான் போட்டியில் இல்லை என பாலிவுட் கதாநாயகன் அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார்.
    நடிப்பு துறையில் யாரோடும் நான் போட்டியில் இல்லை என பாலிவுட் கதாநாயகன் அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார்.

    மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமீர் கான் கூறியதாவது:-

    நான் யாரோடாவது போட்டியிடுகிறேன் என்றால், அது என்னோடு நான் போட்டியிடுவதாக மட்டுமே இருக்க முடியும். இதை வைத்து, ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோரை நான் பெரிய நடிகர்களாக மதிக்கவில்லை என்று அர்த்தப்படுத்த கூடாது. அவர்கள் பிரமாதமானவர்கள்.

    அவர்கள் மட்டுமல்ல, அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்பிர் கபூர், ரன்பிர் சிங், ஹிரிதிக் ரோஷன் போன்றவர்களும் உயர்ந்த நடிகர்கள்தான். பிறருடைய நல்ல வேலையை பார்த்து அவர்களுடன் போட்டியிட நினைக்க மாட்டேன்.

    ‘சுல்தான்’, ‘தபாங்’ ஆகியப் படங்களை பார்த்தபோது அவற்றை மிகவும் விரும்பி, ரசித்தேன். ‘முன்னாபாய்’ படத்தை பார்த்தபோது சஞ்சய் தத்தை விரும்பினேன். எனது சகநடிகர்கள் சிறப்பாக நடிக்கும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் உழைப்பு என்னை ஊக்கப்படுத்துகிறது.

    போட்டியிடுவது என்பது ஒரு விசித்திரமான உலகம். யாரோடும் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை. என்னோடு போட்டியிட மட்டுமே முயற்சித்து வருகிறேன். என்னை நானே சிறப்பாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறேன். ஒரு படைப்பாளியாக, ஒரு கலைஞனாக என்னை முன்னேற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். வர்த்தக ரீதியாக இல்லாமல் ஒரு படைப்பாளியாக சிறந்ததை செய்யவும் முயற்சித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சகோதரர் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி நடிகை ரம்பாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
    தமிழ் பட உலகில் 1990 முதல் 2000-ம் ஆண்டுவரை முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி, காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

    ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரனுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர் கனடாவில் குடியேறினார். தற்போது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். ரம்பாவின் சகோதரர் வாசுவின் மனைவி பல்லவி ஐதராபாத்தில் வசிக்கிறார்.

    இவர் ஏற்கனவே ரம்பா மீதும், வாசு மீதும் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி கோர்ட்டில் வரதட்சணை கேட்டு தன்னை இருவரும் கொடுமைப்படுத்துவதாகவும் இதனால் கடந்த சில வருடங்களாக தனியாக வசித்து வருவதாகவும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரம்பா மீதும், அவரது அண்ணன் வாசு மீதும் வழக்குப்பதிவு செய்யும்படி ஐதராபாத் பன்சாரா ஹில்ஸ் போலீசுக்கு உத்தரவிட்டது.

    வாசு இது பொய் வழக்கு என்று மறுத்தார். மனைவியும் நானும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம். ரம்பா திருமணத்துக்கு பிறகு கணவருடன் கனடாவில் வசித்தார். அவர் எப்படி வரதட்சணை கேட்டு என் மனைவியை கொடுமைப்படுத்தி இருக்க முடியும்? இந்த புகாரில் உண்மை இல்லை என்று அவர் கூறினார்.

    ஆனாலும் இருவர் மீதும் கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரம்பா கனடாவில் இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.

    இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக ரம்பா ஐதராபாத் வந்து இருந்தார். அவர் ஐதராபாத் வந்த தகவல் அறிந்ததும் வரதட்சணை கொடுமை வழக்கில் உடனடியாக கோர்ட்டில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    தமிழ் திரையுலகத்தின் மூத்த இசைமேதையும் பின்னணிப் பாடகருமான டி.எம்.சவுந்தரராஜன் நினைவாக மத்திய அரசு தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
    தமிழ் திரையுலகத்தின் மூத்த இசைமேதையும் பின்னணிப் பாடகருமான டி.எம்.சவுந்தரராஜன் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இவர், மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், நாகேஷ், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் என பல கதாநாயகர்களுக்கு தன் சொந்தக்குரலில் கடந்த 40 ஆண்டுகளாக பாடி திரையுலகில் ஆட்சி செய்தவர்.

    1950-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களும், 3 ஆயிரம் ஆன்மிக பாடல்களும் இவர் பாடி ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

    அவரை கவுரவிக்கும் வகையில் தற்போது தபால் தலை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு, அவருடைய குடும்பத்தினர் சார்பிலும், ரசிகர்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×