என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜல்லிக்கட்டு வேண்டி நடத்திய அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. மாணவர்கள் வீடு திரும்புங்கள் என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை காணலாம்.
    ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை தொடங்கினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வந்தது. பொதுமக்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை கொண்டு வருவதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்நிலையில், நிரந்தர தீர்வு வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்த வந்தனர்.

    இந்நிலையில், இன்று காலை போராக்காரர்களை போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து விடுவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் ஒருசிலர் போலீசாருடன் கல்வீச்சு, தள்ளுமுள்ளு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டோம். தற்போது நாம் கொண்டாட வேண்டிய தருணம். போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் ஆர்ஜே பாலாஜியும் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறியதாவது,

    அறவழியில் போராட்டத்தை தொடங்கிய நாம் வெற்றி பெற்றுவிட்டோம். யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். போராட்டத்தை கைவிடுங்கள். நமது போராட்டத்தின் போது நமக்கு உறுதுணையாக, கண்ணியமாக நம்முடனேயே இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்.

    அறவழியில் தொடங்கி பாரட்டுக்களை பெற்ற நமது போராட்டத்தை வன்முறையில் ஈடுபட்டு இறுதியில் கெட்டபெயரை வாங்க வேண்டாம். இந்த போராட்டம் மாபெரும் வெற்றி என்பதைதாண்டி கேவலமான போராட்டம் என்ற கலங்கத்துடன் முடிய வேண்டாம். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் வீடு திரும்பிங்கள். போராட்டம் முடிந்தது என்று கூறியுள்ளார்.
    தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக விஷால் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், கடந்த ஆகஸ்டு மாதம் வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இதையடுத்து தயாரிப் பாளர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நடிகர் விஷாலை 3 மாதத்துக்கு இடைநீக்கம் செய்து அச்சங்கத்தின் தலைவர் தாணு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மனுவில், அவதூறாக எந்த கருத்தையும் தான் தெரிவிக்கவில்லை என்றும் தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘தான் தெரிவித்த கருத்துக்கு விஷால் வருத்தம் தெரிவித்தால், அவரது இடை நீக்கம் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீ லிக்கப்படும்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

    இதையடுத்து நடிகர் விஷால், தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து ஒரு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, விஷாலை இடைநீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், வருத்தம் தெரிவிப்பதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த விஷால், ஏற்கனவே தெரிவித்த தரக்குறைவான, அவதூறான கருத்துக்களை மீண்டும் ஒரு டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரது இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்ற விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    ஜல்லிக்கட்டுக்காக போராடிய நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் இரவு பகலாக தங்கியிருந்து ஜல்லிக்கட்டு போராட்டக்காரரர்களுக்கு லாரன்ஸ் ஆதரவு தெரிவித்து வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டதோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். மெரினாவில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் லாரன்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து விடுவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், மாணவர்களுக்கு லாரன்ஸ் அளித்துள்ள பேட்டி,

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு வெற்றி கிடைத்து விட்டது. தமிழக பொறுப்பு ஆளுநர் இதனை உறுதி செய்துள்ளார். எனவே யாரும் கடலுக்கு அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.  இந்த தருணம் நாம் கொண்டாட வேண்டிய தருணம் என்று லாரன்ஸ் கூறியுள்ளார். 7 நாட்களாக ஒரே இடத்தில் கஷ்டங்கள், வலிகளை அனுபவித்து நாம் பெற்ற வெற்றி இது. எனவே இதனை நாம் கொண்டாட வேண்டும். இன்று இரவு மெரினாவில் அனைவரும் கூடி கொண்டாடுவோம் என்றும் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
    தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கமல், மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலுக்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் கடற்கரைக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசாரின் வலுக்கட்டாய நடவடிக்கை தவறானது. மேலும் மாணவர்களின் மீதான இத்தகைய ஆக்ரோஷமான தாக்குதல் நல்ல முடிவை தராது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் `அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    உலக நாயகன் கமல்ஹாசன் தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பித்தக்கது.
    யாருடைய ஆதரவும், ஆலோசனையும் தேவையில்லை, ஒற்றுமையே முக்கியம் என்று போராக்காரர்களுக்கு நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    சினிமா நடிகர்கள், பிரபலங்கள் என பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இதில் குறிப்பாக லாரன்ஸ், ஆரி, சவுந்தர், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் மெரினாவிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். சிம்புவும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது,

    ஜல்லிக்கட்டு நடத்த அறவழியில் தொடங்கப்பட்ட போராட்டம் அந்நிய சக்திகளால் வேறுவழிக்கு போகாமல் தடுப்பதற்காக நாம்ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நம்மை பிரிக்க நடக்கும் சூழ்ச்சிகளில் மாட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.

    மேலும், போராட்டத்திற்கு யாருடைய ஆதரவும், ஆலோசனையும் நமக்கு தேவையில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தைரியமாக இருக்க வேண்டும்.

    மேலும் படித்தவர்கள் மற்றும் உணர்ச்சிப் பூர்வமானவர்கள் போராட்டத்தை நல்லமுறையில் வழிநடத்தவும், நமக்கு நாமே சண்டையிடக்கூடாது என்றும் கூறிய சிம்பு போராட்டம் குறித்து என்ன முடிவு எடுத்தாலும் அனைவரும் கலந்தாலோசித்து எடுக்கும்படி கூறியுள்ளார்.
    மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நடிகர் லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் இரவு பகலாக தங்கியிருந்து ஜல்லிக்கட்டு போராட்டக்காரரர்களுக்கு லாரன்ஸ் ஆதரவு தெரிவித்து வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டததோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். மெரினாவில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் லாரன்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் “போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர், பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி மருத்துவமனையில் இருந்து மீண்டும் மெரீனாவுக்கு ராகவா லாரன்ஸ் சென்றார். அதன் பின்னர் 6-ம் நாளான நேற்று மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று இரவு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்.

    இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து விடுவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்தசம்பவம் குறித்து லாரன்ஸ் அளித்த பேட்டி,

    எங்களது அறவழிப் போராட்டம் குறித்து இன்று பேசி முடிவெடுக்க இருந்த நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் மெரீனாவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என அனைவரும் போலீசார் பலவந்தமாக அப்புறப்படுத்தியதால் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து மெரினாவுக்கு சென்ற லாரன்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய லாரன்சுக்கு கடைசிவரை அனுமதி கிடைக்கவில்லை. எனினும் தான் ஒரு மணிநேரத்தில் கடற்கரைக்கு வந்துவிடுவதாகவும், மாணவர்கள் யாரும் கடலில் இறங்க வேண்டாம் எனவும், தங்களது உயிரே முக்கியம் எனவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    மெரினாவுக்குள் நுழைய தடை: போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்ட ராக...

    மெரினாவுக்குள் நுழைய தடை: போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்ட ராகவா லாரன்ஸ் #Raghavalawrence #MarinaProtest #Justiceforjallikattu

    Posted by Maalaimalar தமிழ் on Sunday, 22 January 2017
    ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராக்காரர்களுக்கு நடிகர் விஜய் வச்ந்த் உதவி செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் 7வது நாளாக இன்றும் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், பிரபலங்கள் என எந்த பாகுபாடும் இன்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் அறவழிப் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

    மேலும் சினமா பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், ஒரு சில நடிகர்கள் களத்தில் இறங்கியும் வேலை செய்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் வசந்த்தும் இதில் இணைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு உதவியாக விஜய் வசந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து 10 மொபைல் டாய்லெட்களை மெரினாவில் நிறுவியுள்ளனர்.

    மேலும், போராட்டக்காரர்களுக்கு தேவைாயான மற்ற உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் விஜய் வசந்த் சார்பில் கூறியுள்ளார்.
    சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 5 சினிமா தியேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    சென்னையில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ் சினிமா தியேட்டர்களில் கட்டணம் வசூலிப்பதை கண்காணிப்பதற்காக வணிக வரித்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காணிப்புக்குழுவினர் தியேட்டர்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கட்டணம் வசூலிப்பதை நேரடியாக சென்று பார்வையிடுவார்கள். கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை நகரில் உள்ள சினிமா தியேட்டர்களில் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் வரை நடத்த அரசு அனுமதி வழங்கி இருந்தது. கண்காணிப்புக்குழு அதிகாரிகள் சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நேரடியாகச் சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின்போது அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மீறி 5 தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த தியேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், 4 தியேட்டர்கள் வடசென்னை பகுதியில் உள்ளவையாகும். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தியேட்டரின் மீது 3 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டால் அந்த தியேட்டரின் லைசென்சை ரத்துசெய்ய சிபாரிசு செய்யப்படும் என்று கண்காணிப்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    “நான் தமிழ் பொறுக்கிதான், டெல்லியில் பொறுக்க மாட்டேன். எனக்கு தன்மானம் இருக்கிறது” என்று நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நேற்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.

    திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன். திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம். இது தன்மானம். அரசியல் இல்லை.

    குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம். கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன். அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள்.

    எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையைச் சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.”

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    “நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலைப் போல் மறக்க முடியாதது.

    நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.”

    இவ்வாறு வைரமுத்து பேசினார்.

    டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘பீட்டா’ அமைப்பே டிரம்ப் ஆளும் அமெரிக்காவில் நடக்கிற காளை விளையாட்டை தடை செய். எங்கள் காளைகளை கட்டுப்படுத்த உங்களுக்கு தகுதி இல்லை. அரசர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டனர்.

    இறுதியாக மக்கள் உண்மையான ஜனநாயகத்தின் சுவையை அறிந்துகொண்டு விட்டனர். தலைவர்களுக்கான காலம் முடிந்துவிட்டது. சமுதாய சீர்திருத்தவாதிகளும், மக்களுக்கு வழிகாட்டும் எளிமையான தலைவர்களுமே எங்களுக்கு தேவை. அமெரிக்க சோடா கம்பெனிகள் ஜல்லிக்கட்டுக்கு விளம்பரதார்களாக வாய்ப்புண்டு. எச்சரிக்கை.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். 
    போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக விலகி விடுங்கள் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு இயக்குனர் சமுத்திரக்கனி பதிலளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மெரீனா போராட்டத்தை திசை திருப்ப சில சில அமைப்புகள், தீய சக்திகள் முயற்சித்து வருவதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி குற்றம்சாட்டி இருந்தார். 

    இது தொடர்பாக தமது பேஸ்புக் வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றின் மூலமாக போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றி கிடைத்து விட்டதாகவும், தேசத் தலைவர்களை ஆபாசமாக திட்டுவது சரியானதல்ல என்றும் கூறி இருந்தார்.

    இந்நிலையில், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் சமுத்திரக்கனி போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக விலகி விடுங்கள் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

    மேலும் அவர் கூறுகையில், “சினிமாக்கார்களையும், அரசியல்வாதிகளையும் மாணவர்கள் முற்றிலுமாக நிராகரித்தார்கள். வரவேண்டாம் என்று தான் சொன்னார்கள். ஹிப்ஹாப் தமிழாவையோ, லாரன்ஸ், நான் உள்ளிட்ட சிலரையோ அவர்கள் சினிமாகாரர்களாக அல்லாமல் தங்களது சகோதரர்களாக தான் ஏற்றுக் கொண்டார்கள். 

    10 லட்சம் பேர் கூடியுள்ள மெரினா கடற்கரையில் ஆதியின் பேச்சு குழப்பத்தை விளைவிக்கும். போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக அவர் விலகி இருக்கலாம். தமிழகம் முழுவதும் கண்ணியமான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

    அவர்களுக்கு நாம் உறுதுணையாக தான் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. 

    மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். யார் சூழ்ச்சி செய்தாலும் நாம் தான் அதனை முறியடிக்க வேண்டும்”  என்று தெரிவித்துள்ளார்.
    பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.
    காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் -நடிகை என்ற முறையில் `ஹலோ' சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய, நட்பு ஆனது.

    5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு, திருமணத்தில் முடிந்தது. 1970-ம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார், மூர்த்தி.

    இதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படிச் சொன்னார்:

    "பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம். சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.

    மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், "இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே'' என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ'வும் இருந்ததில்லை. அதனால் "நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்'' என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

    மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.

    திருமணத்துக்கு முன்னதாக, எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். நடிகர்கள் ஜெமினிகணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள். நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.

    நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ளமாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி, எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.

    திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு `மனோ' என்று ஒரே மகன். என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக்குழந்தையும் உண்டு.

    மனோவின் மனைவி சபிதா, கம்ப்ïட்டர் என்ஜினீயர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவர். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.

    மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா -மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட, ஒரு சின்ன தப்புகூட அவனைப்பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

    கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட, உடனே போன் பண்ணி `இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்' என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.

    மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருஷத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், "அப்பா! அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா'' என்றான். எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது. "அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா... எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்'' என்றேன். நான் இப்படிச் சொன்னபோது, அவனும் கண் கலங்கிவிட்டான்.

    திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை, டைரக்டர் கே.பாலசந்தர் "சிந்து பைரவி'' படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வர்ற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலசந்தரின் "சஹானா'' சீரியலிலும் நடிச்சாங்க. இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட, என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க.''

    இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

    மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும், மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

    வைஜயந்தி மாலா நடித்த "வாழ்க்கை''யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து "எல்லைக்கோடு'' படத்தில் காமெடி செய்திருக்கிறார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று பரிமாணங்களிலும் வெளிப்பட்டவர். அவருடனும் "சமையல்காரன்'' படத்தில் நடித்தார், மூர்த்தி.

    டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் `சித்ராலயா' என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார். இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார், மூர்த்தி.

    3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார், மூர்த்தி.

    வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும். ஏற்றி, இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டு புரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.

    "எப்படி பார்க்கிறது? பட்ஜெட் சொல்லுங்க'' என்கிறார், புரோக்கர். `சின்ன வீடா' இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர். அவர் "சின்னவீடு'' என்பதை தனது பட்ஜெட் அடிப்படையில் சொன்னார். இதுவே `சின்னவீடு' என்ற வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?

    அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக, அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும், நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும். நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே.''

    இவ்வாறு கூறினார்.
    ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறி செல்வதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டு பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இவர் எழுதி, பாடி வெளியிட்ட ‘டக்கரு டக்கரு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற அவசியத்தை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டியது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எடுத்துள்ள போராட்டத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியும் கைகொடுத்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும், அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைக்காக சமூக அக்கறை கொண்ட பாடல்களை உருவாக்கி அதை வெளியிட்டு வருகிறேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘டக்கரு டக்கரு’ என்ற ஆல்பத்தை வெளியிட்டு இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்கா நல்லூர், கோவை, மெரீனாவில் நடக்கும் போராட்டத்துக்கு நேரில் சென்று எனது ஆதரவை தெரிவித்துக் கொண்டேன்.

    ஆனால், கோவையில் நான் கலந்துகொண்டபோது அங்கே நடந்த சில விஷயங்கள் என்னை மிகவும் புண்படுத்திவிட்டது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நாங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது யாரென்று தெரியாத சிலபேர் இந்த போராட்டத்தை திசை திருப்பும் விதமாக தேச விரோத செயல்களை முன்னிறுத்தி கோஷமிடுகின்றனர். என்னையும் தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகிறேன். நான் ஒருபோதும் தேச விரோத செயல்களில் ஈடுபட மாட்டேன்.

    அதுதவிர, இந்து-முஸ்லீம் பிரச்சினைகளை பற்றியும் அங்கே பேச ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலபேர் கெட்ட வார்த்தைகளில் வாசகங்களை எழுதி, கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் குழுமியிருந்த வ.உ.சி. மைதானத்திற்கு வெளியே யாரென்றே தெரியாத சிலபேர் கெட்ட வார்த்தைகளால் மத்திய அரசை வசைபாடிக் கொண்டிருந்தனர்.

    எதற்காக ஆரம்பித்த போராட்டம் இப்படி திசையே தெரியாமல் போய் கொண்டிருக்கிறதே என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தற்போது வேறு திசையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறதே என்ற வருத்தத்திலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

    ஜல்லிக்கட்டு பிரச்சினையில் நல்லது நடக்கும் என்றும் நானும் வேண்டிக்கொண்டு இருக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும். இந்த பிரச்சினையை திசை திருப்பி விடாதீர்கள். ஜல்லிக்கட்டுக்கு வெற்றி கிடைத்தால்தான் இத்தனை இளைஞர்களின் போராட்டத்திற்கு மரியாதை கிடைக்கும்.

    இன்னும் சிலபேர் என்னை அரசியலுக்கு வாருங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு அரசியலுக்கு வருவதற்குண்டான அறிவோ தகுதியோ கிடையாது. எனக்கு தெரிந்த கருத்தை எடுத்துக் கொண்டு, அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாடுபடுகிறேன். ஆனால், அதை பயன்படுத்தி என்னை அரசியலுக்குள் வரச்சொல்வது எனக்கு பிடிக்காத ஒன்று. இந்த போராட்டத்தை அரசியல் நோக்கத்திற்காக நான் செய்யவில்லை. நல்ல விஷயத்துக்காக எடுக்கப்பட்ட போராட்டத்தில் அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
    ×