என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    `தேவி' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் பிரபுதேவா தனது அடுத்த படத்தில் பிரபல காமெடியெனுடன் மீண்டும் இணைய உள்ளார். அது யார் என்பதை கீழே பார்க்கலாம்.
    நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா தமிழில் நடித்து வெளிவந்த ‘தேவி’ படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும்  ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் பிரபுதேவா. அந்த வரிசையில்  தற்போது புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இயக்குநரும்  நடிகருமான தங்கர் பச்சான் முக்கிய கதாபாத்தரத்தில் நடிக்க உள்ளார்.

    பிரபுதேவாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 1970-80 காலகட்டத்தில் உள்ள கதையை மையமாக  கொண்டு நகைச்சுவையுடன் எடுக்கப்பட உள்ள இப்படத்தில் பிரபுதேவாவுடன் ஆர்.ஜே.பாலாஜியும் நடிக்க உள்ளாராம்.  முன்னதாக தேவி படத்தில் பிரபுதேவா-ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்திருந்தனர்.

    இப்படத்தை வாசன்ஸ் விஸ்யூவல் வென்சர் தலைப்பில் கே.எஸ்.ஸ்ரீனிவாசன். கே.எஸ்.சிவராமன் தயாரிக்க உள்ளனர்.

    ஆர்.ஜே.பாலாஜி தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் `காற்றுவெளியடை', ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும்  புதிய படம், சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்', ஜுவாவின் `கீ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
    ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கிசான், சோணு சுட் நடிப்பில் வெளியாகியுள்ள `குங்பூ யோகா' படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
    சீனாவில் மிகப்பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் ஜாக்கிசான். இந்திய ராஜவம்சத்தை சேர்ந்த திஷா பதானி  இவரை நேரில் சந்திக்கிறார். அப்போது, 1000 வருடங்களுக்கு முன் சீனா-இந்தியா உறவு நல்லமுறையில் இருந்தபோது,  இந்தியாவில் இருந்து மரகதத்தால் செய்யப்பட்ட சாவி ஒன்றை சீனாவுக்கு கொண்டு வரும்போது, எல்லையில் பனிமலை  சரிவில் சிக்கி, அந்த மரகத சாவி தொலைந்து விட்டதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியும் கோருகிறார்.

    ஜாக்கிசானும், தன்னுடைய உதவியாளர்களை அழைத்துக் கொண்டு பனிமலையில் காணாமல்போனதாக கூறப்படும் மரகதச்  சாவியை தேடி புறப்படுகிறார். அதேநேரத்தில், இந்தியாவில் மற்றொரு ராஜ வம்சத்தை சேர்ந்த சோனு சூட், இவர்கள் மரகத  சாவியை தேடி செல்வதை அறிந்து, அதை அடைவதற்காக தன்னுடைய ஆட்களை அனுப்பி அவர்களை வேவு பார்க்க  வைக்கிறார். ஒருகட்டத்தில், அந்த மரகத சாவியை தேடிக்கண்டுபிடிக்கும் ஜாக்கிசான் மற்றும் அவரது உதவியாளர்களை சோனு  சூட்டின் ஆட்கள் அடித்துப்போட்டுவிட்டு அந்த சாவியை அடைய பார்க்கிறார்கள்.

    ஆனால், அதற்குள் ஜாக்கிசானின் உதவியாளர்களில் ஒருவன் அந்த மரகத சாவியை எடுத்துக் கொண்டு துபாய்க்கு  சென்றுவிடுகிறான். அங்கு சென்று அந்த சாவியை அவன் ஏலம் விட பார்க்கிறான். இதை அறிந்த ஜாக்கிசானும், திஷா  பாண்டேவும் துபாய்க்கு சென்று அந்த சாவியை ஏலம் எடுக்க நினைக்கிறார்கள். அதேநேரத்தில் சோனு சூட்டும் அந்த ஏலத்தில்  கலந்துகொள்கிறார்.

    அப்போது, சோனு சூட்டை விட அதிக விலை கொடுத்து ஜாக்கிசான் அந்த சாவியை ஏலத்தில் எடுத்துவிடுகிறார். இதனால்  கோபமடைந்த சோனுசூட், மீண்டும் அந்த சாவியை அவர்களிடமிருந்து அபகரிக்க முயற்சிக்கிறார். அப்போது நடக்கும்  சண்டையில், அந்த சாவி திஷா பதானி கைவசம் செல்ல, அதை அவள் எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிடுகிறாள்.

    இதையடுத்து, திஷா பதானியை தேடி ஜாக்கிசானும், சோனு சூட்டும் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்தியாவுக்கு வந்து திஷா  பதானியை சந்திக்கும் ஜாக்கிசானிடம், அந்த சாவி, ஒரு கோவிலில் இருக்கும் புதையல் அறைக்குண்டான சாவி என்பதை  கூறுகிறாள். அந்த புதையலை வைத்து தான் நல்லது செய்ய நினைப்பதாகவும் கூறும் திஷாபதானிக்கு ஜாக்கிசான் உதவ  நினைக்கும் நேரத்தில், சோனு சூட், ஜாக்கிசானின் உதவியாளர்களை கடத்தி வைத்துக் கொண்டு அந்த புதையலை கண்டுபிடித்து  தருமாறு கேட்கிறார்.

    இறுதியில், அந்த புதையலை கண்டுபிடித்தார்களா? அந்த புதையல் யார் கைவசம் சென்றது? என்பதே மீதிக்கதை.

    ஜாக்கிசான் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரு காமெடி கலந்து ஆக்ஷன் படத்தில் நடித்து நம்மை எல்லோரையும் சிரிக்க வைத்து  ரசிக்க வைத்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் சிறுவர்கள் கவரும்படி அமைந்திருப்பது சிறப்பு. தனக்கு மட்டுமில்லாமல், பிற  நடிகர்களுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை பாராட்டியே ஆகவேண்டும்.

    குறிப்பாக, காருக்குள் சிங்கத்துடன் பயணிக்கும்போது, பயந்துகொண்டே இவர் செய்யும் முகபாவனைகள் எல்லாம் ரசிக்க  வைக்கின்றன. அதேபோல், பனிக் குகைக்குள் இவர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை  கவர்ந்திருக்கின்றன. அதேபோல், சண்டைக் காட்சியிலும் ஒரு நகைச்சுவை இருக்கும்படி தனது வழக்கமான நடிப்பை கொடுத்து  ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியிருக்கிறார். அதேபோல், இந்தியர்களுடன் சேர்ந்து இவர் ஆடும் காட்சிகளில் அவர்களுக்கு  இணையாக நடனமாடி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

    தோனி படத்தின் மூலம் பிரபலமான திஷா பதானி, இந்த படத்தில் ஒரு ஹாலிவுட் ஹீரோயின் அளவுக்கு தனது உடல்வாகை  வைத்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் சண்டைக் காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு  தங்கையாக வரும் அனேகன் பட நாயகி அமைரா தஸ்தூரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக  செய்திருக்கிறார்.

    வில்லனாக வரும் சோனு சூட்டுக்கு, மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரம். அதை அவர்  சிறப்பாக செய்திருக்கிறார். டான்ஸ், ஆக்ஷன் என எல்லாவற்றையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

    இயக்குனர் ஸ்டான்லி டாங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்  என்றுதான் சொல்லவேண்டும். ஜாக்கிசான் ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு கதையை  நகர்த்தி, அதில் ஆக்ஷன், நகைச்சுவை என கலந்து எந்த இடத்திலும் போரடிக்காதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

    கதைப்படி இப்படம் சீனா, இந்தியா, துபாய் என பயணமாகி இறுதியில் இந்தியாவில் வந்தே முடிகிறது. இந்திய கலைகளை இந்த  படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஹாலிவுட் படம் என்ற வரைமுறைகளை தாண்டி இப்படம் இந்திய  ரசிகர்களையும் கவரும் படி எடுத்திருப்பது மிகவும் சிறப்பு.

    நாதன் வாங் இசையில் படத்தில் ஒரேயொரு பாடல்தான். இசைக்கு மொழி கிடையாது என்பதற்கு இந்த பாடலே சாட்சி.  அந்தளவுக்கு ஹாலிவுட் இசைக்கலைஞராக இருந்தாலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த பாடலை கொடுத்து, அதை  காட்சியப்படுத்திய விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார். பின்னணி இசையிலும் தனது திறமையை  நிரூபித்திருக்கிறார்.

    விங் ஹாங் வோங் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. இவரது கேமரா படத்தின் ஒவ்வொரு  காட்சிகளையும் கலர் புல்லாக காட்டியிருக்கிறது. சண்டைக் காட்சிகளில் இவரது கேமராக்களின் கோணம் ரசிகர்களை  வியப்படைய வைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘குங்பூ யோகா’ ஆரோக்கியம்.
    பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு கமல் படத்தின் தலைப்பை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
    சிபி சத்யராஜ் நடிப்பில் `கட்டப்பாவ காணோம்' படம் திரையில் ரிலீசாக தயாராகி உள்ள நிலையில், சிபிராஜின் அடுத்த படம்  குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    `சைத்தான்' புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ள இப்படத்தை சத்யராஜ் அவரது தயாரிப்பு நிறுவனமான  நாதாம்பாள் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தெலுங்கில் `ஷனம்' என்ற பெயரில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தின் ரீமேக்காக இப்படம்  தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1998-ஆம் ஆண்டு வெளியான `சத்யா' படத்தின்  தலைப்பை சிபிராஜ் படக்குழுவினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் போஸ்டரையும் படக்குழு  வெளியிட்டது.

    இறுதிகட்ட படப்படிப்பில் இருக்கும் `சத்யா' படத்தில் சிபிராஜுடன் இணைந்து ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு,  சதீஷ், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர்.
    ஆண்டர்சன் இயக்கத்தில் ஹாலிவுட் பிரபலம் மிலா ஜோவோவிச் நடிப்பில் வெளியான ரெசிடென்ட் ஈவில் - பைனல் சேப்டர் படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ரக்கூன் சிட்டியில் அமைந்திருக்கும் அம்பெர்லா கார்ப்பரேஷனின் நிறுவனரான விஞ்ஞானி மார்கஸ் கண்டுபிடித்த ‘டி-வைரஸால்’  பாதிக்கப்பட்ட பலர் மிருக மனிதர்களாக சுற்றித் திரியும் நேரத்தில், இந்த வைரஸால் அதிக பலம் கொண்ட ஆலிஷ், அந்த மிருக  மனிதர்களையெல்லாம் கொன்று அழிக்கிறாள். இந்த கதைக்கருவுடன், ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான புதுப்புது ஆக்சன்  காட்சியமைப்புடன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ரெசிடெண்ட் ஈவில் படங்கள். அந்த வரிசையில் தற்போது  வெளியாகியிருக்கிறது ரெசிடென்ட் ஈவில் - பைனல் சேப்டர்.

    ரக்கூன் சிட்டியில் உள்ள அம்பெர்லா கார்ப்பரேஷனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரெட் குயின் என்ற சூப்பர் கம்யூட்டர்  இதுவரையில் ஆலிஷ்-க்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில், இந்த பாகத்தில் அந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஆலிஷ்-க்கு  ஆதரவாக திரும்புகிறது.

    இந்நிலையில், அம்பெர்லா கார்ப்பரேஷன் வழியாக காற்று மூலமாக பரவக்கூடிய ஆன்ட்டி வைரஸ் ஒன்று பரவி, மிருக  மனிதர்களும், சாதாரண மக்களும் இறக்கப்போவதாக சூப்பர் கம்ப்யூட்டர் ஆலிஷை எச்சரிக்கிறது. அந்த ஆன்ட்டி வைரஸ் 48  மணி நேரத்திற்குள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், அம்பெர்லா கார்ப்பரேஷனை நோக்கி ஆலிஷ் பயணப்படுகிறாள்.  அப்போது, அவளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.

    அதையெல்லாம் மீறி அம்பெர்லா கார்ப்பரேஷனை ஆலிஷ் அடைந்து, ஆன்ட்டி வைரஸ் பரவாமல் தடுத்தாரா? இல்லையா?  என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ஆலிஷாக வரும் மிலா ஜோவோவிச்சை சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவருடைய  சண்டைக் காட்சிகள் பெரிய வரவேற்பை பெறும், அதேபோல் இந்த பாகத்திலும் இவருடைய சண்டைக் காட்சிகள் எல்லாம்  பிரம்மாண்டமாகவும், அனைவரும் ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. மிலா ஜோவோவிச் படத்தின் முழு பலத்தையும்  தனது தோளில் சுமந்து அதற்கு வலு சேர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    பேய் படங்களில் ஒரு பில்லியன் டாலர் வசூலை திரட்டிய முதல் படவரிசைக்கான பெருமை இந்த ரெசிடெண்ட் ஈவில்  படங்களுக்கு உண்டு. அந்த வரிசையில் கடைசியாக வெளிவந்த இந்த படத்தில் கதை பெரிதளவில் இல்லாவிட்டாலும், இந்த  படங்களுக்கே உண்டான தனித்துவமான ரசிகர்களால், அந்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றி பெற்று, வசூலை  வாரிக்குவித்தன.

    அதேபோல், இந்த பாகத்திலும் பெரிய கதையம்சம் என்று இல்லாமல், வழக்கம்போல், எல்லா பாகங்களைப்போலவே  ஹீரோயின் மிருக மனிதர்களை கொல்வது, எதிரிகளை அழிக்க செல்லும் வழியில் ஏற்படும் பிரச்சினைகள், இறுதியில்  எதிரிகளை அழித்து, அடுத்த பாகத்திற்கு வழிகொடுப்பது போலவே முடிவடைந்திருக்கிறது.

    நூல் அளவுதான் கதை என்றாலும், இந்த படத்தின் முந்தைய பாகங்களைப்போலவே ஆக்ஷன் காட்சிகள், புதுப்புது வடிவிலும்,  உருவத்திலும் வரும். மிருக மனிதர்கள், விறுவிறுப்பான காட்சியமைப்புகள், ரொம்பவும் ஷார்ப்பான எடிட்டிங் என படத்தில்  ரசிக்கும்படியான அம்சங்களும் உண்டு. இதை இயக்குனர் பால் ஆண்டர்சன் அழகாக கையாண்டிருக்கிறார்.

    இந்த படங்களை விரும்பும் ரசிகர்களின் மனநிலையை புரிந்து, அவர்களுக்கேற்றார்போல் படமாக்கியிருக்கிறார் ஆண்டர்சன். 2  நாட்களில் நடக்கும் கதையென்பதால், இந்த கதைக்குள் நிறைய புதுமையான காட்சிகளை புகுத்தமுடியாமல் போனது  வருத்தமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சியையும் ரொம்பவும் சாதாரணமாக முடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை  ஏற்படுத்துகிறது.  

    மொத்தத்தில் ரெசிடெண்ட் ஈவில்-பைனல் சேப்டர் ‘மரணயுத்தம்’
    ராஜா ரங்குஸ்கி' படத்தில் ஒரு முத்தத்துக்கு நடிகர் சிரிஷ் 19 டேக் எடுத்ததாக அப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
    `ஜாக்சன் துரை' படத்திற்கு தரணிதரன் இயக்கி வரும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. இந்தப் படத்தில் 'மெட்ரோ' புகழ் சிரிஷ்  நாயகனாகவும், `சித்து +2', புகழ் சந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ்  இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    குற்றப் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட  படப்பிடிப்பு வரும் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், ராஜா ரங்குஸ்கி படம் குறித்து தரணிதரன் கூறியதாவது,

    கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் இதே வேகத்தில் முடிக்க  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிரிஷ் முத்தக்காட்சியில் நடிக்க மட்டும் பதட்டப்படுகிறார்.  படத்தின் ஒரு காட்சியில் சாந்தினியை முத்தமிட வேண்டும். அந்த முத்தக்காட்சிக்காக சிரிஷ் சுமார் 19 டேக் எடுத்ததாக  தரணிதரன் தெரிவித்தார். 19 முறை முத்தமிட்டதை வேண்டுமென்றே செய்தாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும்  என்றும் தரணிதரன் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
    கேரளா வந்தபோது ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவியை பொதுமேடையில் ஹிருத்திக்ரோ‌ஷன் தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக்ரோ‌ஷன். சமீபத்தில் இவர் பார்வையற்றவராக நடித்த புதிய இந்தி படம் வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ‘பலம்’ என்ற பெயரில் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

    ஹிருத்திக்ரோ‌ஷனுக்கு இந்தி திரையுலகில் மட்டும் அல்லாமல் தமிழகம், கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில்  இவருக்கு ரசிகைகள் ஆதரவு அதிகம்.

    நடிகர் ஹிருத்திக்ரோ‌ஷன் பல்வேறு தனியார் நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் உள்ளார். இதன்படி ஒரு தனியார்  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு ஹிருத்திக்ரோ‌ஷன் வந்தார்.

    அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்களும் அந்த நிகழ்ச்சியில் திரண்டனர். நிகழ்ச்சியின் போது மேடை ஏறிய ரசிகர்கள்  அவருடன் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஒரு கல்லூரி மாணவி செல்பி எடுத்த போது அவரை  ஹிருத்திக்ரோ‌ஷன் அலேக்காக தூக்கினார். இதனால் அந்த மாணவி இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார். ரசிகர்களும் இதை பார்த்து  கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு தொடர்ந்து ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த நடிகர் ஹிருத்திக்  ரோ‌ஷன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
    அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னேற விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
    இந்தி நடிகை சோனம்கபூர் நடித்த ‘நீரஜா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் நடித்த சோனம்கபூருக்கு பாராட்டுகளும்,  பலவிருதுகளும் கிடைத்தன.

    இவர் டெல்லியை சேர்ந்த ஆனந்த் அஹீஜாவை காதலிக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக  வலைத்தளங்களில் வெளியிடுகிறார். ஆனால் அது பற்றி எந்த விவரங்களையும் சொல்ல அவர் தயாராக இல்லை.

    சோனம்கபூரிடம் அவருடைய காதல், திரைஉலக அனுபவம் பற்றி கேட்ட போது அளித்த பேட்டி....

    “என்னுடைய படங்களைப்பற்றி தான் மக்கள் பேச வேண்டும். என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அல்ல. நான் யாரை  காதலிக்கிறேன். என்பது பெரிய வி‌ஷயம் அல்ல. என்னைப்பற்றி யாரும் கிசு கிசுப்பதை நான் விரும்பவில்லை.

    அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. கவுரவமாக நடந்து கொள்ளவே  விரும்புகிறேன்.

    நான் எந்த போட்டியிலும் இல்லை. சினிமாவில் பணிபுரிகிறேன். எனக்குப்பிடித்த படங்களில் நடிக்கிறேன் அவ்வளவு தான்”.
    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் நக்கலாக விமர்சித்து பேசியதற்காக விஷாலை, தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்தது. இந்த சஸ்பெண்டை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கையை ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரித்தது.

    இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் விஷால் மேல் முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷாலை மீண்டும் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து, தயாரிப்பாளர்கள் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது.

    இந்நிலையில், வருகிற மார்ச் 5-ந் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் இதுவரையில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்ததால், இந்த தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. அவருக்கு பதிலாக ஏற்கெனவே, இவர்கள் அணிக்கு குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தற்போது விஷால் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனெவே, தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருந்த குஷ்பு, பொருளாளர் பதவிக்கும், ஞானவேல்ராஜா செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.

    இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி, ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி என நான்கு முனை போட்டிகள் நடைபெறவிருக்கிறது. நடிகர் சங்க தேர்தல் போல் இந்த தேர்தலும் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

    இளம் வயதில்பெண் குழந்தை சந்திக்கும் சவலைலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘நிசப்தம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்துள்ள படம் ‘நிசப்தம்’. இந்த படத்தில் நாயகனாக புதுமுகம் அஜய்,  அவருடைய ஜோடியாக அபிநயா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பேபி சாதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன்  ‌ஷபிதா ரெட்டி, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், பழனி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஷான் ஜேஸீஸ் இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு-எஸ்.ஜே.ஸ்டார், எடிட்டர்-லாரன்ஸ், பாடல்கள்-நா.முத்துக்குமார், ஆடியோ  கிராப்-யுவராஜ், தயாரிப்பு-ஏஞ்சலின் டாவின்சி, இயக்கம்-மைக்கேல் அருண்.

    “இது பெங்களூரில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வு பற்றிய கதை. இந்த குடும்பத்தில் உள்ள பெண்  குழந்தைக்கு ஒரு பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கு தீர்வு காண சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களும் சேர்ந்து  உதவுகிறார்கள்.

    ஜாதி-மதத்தை கடந்து அனைவரும் அந்த குழந்தையை மாமூல் வாழ்க்கை வாழ வைக்கிறார்கள். இந்த கதை முழுவதும் இந்த  சிறுமியை சுற்றியே வருகிறது. இறுதியில் அந்த குழந்தை எடுக்கும் முடிவு உச்சக்கட்டம்.

    அஜய்-அபிநயா இருவரும் காதல் வாழ்க்கை, கணவன்-மனைவி, ஒரு குழந்தையின் பெற்றோர் என்று முப்பரிமாணத்தில்  நடித்திருக்கிறார்கள். அபிநயா, பேபி சாதன்யா நடிப்பு அற்புதம். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கே.ஜே.ஸ்டார் என் தம்பி. படம்  தயாரித்த ஏஞ்சலின் டாவின்சி என் தங்கை. இது மனிதம், மனித நேயம் ஆகியவற்றை முக்கியப்படுத்தும் வாழ்க்கையை  சொல்லும் விழிப்புணர்வு கதை” என்றார்.
    பிரபல நடிகைகள் யாரும் உண்மை பேசுவது இல்லை என்று முன்னணி நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே படிக்கலாம்.
    இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். இது குறித்து  மற்றொரு இந்தி முன்னணி நடிகை கங்கனா ரனாவத்திடம் கேட்டபோது...

    ‘‘மேற்கத்திய நாடுகளில் சினிமா நொடிந்து கொண்டிருக்கிறது. ஆசியாவில் தான் சினிமா துறை நல்ல நிலையில் இருக்கிறது.

    15 ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் எப்படி இருந்ததோ, அதுபோல தற்போது ஆசியாவில் சினிமா உலகம் நன்றாக இருக்கிறது.  இது இந்தி பட உலகுக்கு நல்ல நேரம். எனவே,. நான் ஹாலிவுட்டை பார்த்து ஏமாற மாட்டேன். இந்த நேரத்தில் ஹாலிவுட்  செல்ல நான் முட்டாள் அல்ல. என்னைப் போன்று மற்ற நடிகைகள் உண்மையை சொல்ல அஞ்சுகிறார்கள். பின்விளைவுகளை  நினைத்து அவர்கள் அப்படி இருக்கிறார்கள். தேவையான சமயங்களில் கூட ஆதரவாக நிற்பது இல்லை.

    பிரபலமான நடிகைகள் உண்மை பேசினால் தன்னை எல்லோரும் வெறுப்பார்கள் என்று பயப்படுகிறார்கள். தங்களை  அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே, அவர்களுக்காக கூட உண்மையை பேசுவது இல்லை’’  என்று பதில் அளித்துள்ளார்.
    24 வருடங்களுக்கு பிறகு திலீப்புடன் இணைந்து மலையாள படத்தில் ராதிகா நடிக்க உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
    மலையாளத்தில் தீலிப் தற்போது நடித்து வரும் படம் ‘ராம்லீலா’. இது முழுக்க முழுக்க அரசியல் களத்தை பின்னணியாக  கொண்ட கதை. இதற்கு முன்பு ‘லயன்’ என்ற படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்த திலீப் இதில் நீண்ட  இடைவெளிக்குப்பிறகு மீண்டும் அரசியல் வாதியாக நடிக்கிறார். அவருக்கு எம்.எல். ஏ. வேடம். அது மட்டுமல்ல அவருடைய  அம்மாவும் பொது நலனில் தீவிர அக்கறையுடன் அரசியல் களத்தில் இறங்குபவராக கதை அமைக்கப்பட்டுள்ளது. அரசியலில்  ஒரு பக்கமாக சாயாமல் பொது மக்களுக்காக நடுநிலையில் நின்று குரல் கொடுக்கும் வேடம். இதில் அம்மாவாக ராதிகா  நடிக்கிறார்.

    கதாநாயகியாக வலம்வந்த ஆரம்பகாலத்தில் ராதிகா மலையாளத்தில் நடித்தார். இப்போது 24 வருட இடைவெளிக்குப் பிறகு  இந்த மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

    அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளக்கும் வேடம். தாயும்- மகனும் மோதும் காட்சிகளும் உண்டு.  இந்த படத்துக்கு சாச்சி கதை எழுத, அருள் கோபி இயக்குகிறார்.
    விஷால் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை ரத்து செய்வதாக தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை விமர்சித்து பேட்டி அளித்ததாக, நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டியது.

    இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து விஷால் வருத்தம் தெரிவித்ததால் அவர் மீதான நடவடிக்கை பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விஷால் வருத்தம் தெரிவித்து மனுதாக்கல் செய்தார். ஆனால், மீண்டும் விஷால் விமர்சனம் செய்வதாகவும், அவரது வருத்தத்தை தயாரிப்பாளர் சங்க செயற்குழு ஏற்கவில்லை எனவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் விஷால் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை சென்னை ஐகோர்ட்டுதலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது. அப்போது கருத்து கூறிய நீதிபதிகள், “பேச்சுரிமை அனைவருக்கும் உள்ளது. பேசுபவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமா? எனவே, விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டே முடிவு எடுக்கும்” என்று அறிவித்தனர்.

    கோர்ட்டின் உத்தரவை ஏற்று, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு பற்றி கோர்ட்டுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    ×