என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘என்னோடு விளையாடு’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    அக்கவுண்டன்டாக இருக்கும் பரத்துக்கு குதிரைப் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். பந்தயத்தில் எந்த குதிரை தோற்கும், எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை தனது கணக்கு மூளையால் கணிப்பதில் வல்லவர். இருப்பினும், இந்த குதிரை பந்தயத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்திருப்பார். இதற்கான காரணத்தை யோசிக்கும்போது, குதிரை பந்தயத்தில் மேட்ச் பிக்சிங் நடப்பதை கண்டுபிடிக்கிறார்.

    ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த ராதாரவி, ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்காக மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வரும் ராதாரவி, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் யோக் ஜேப்பியிடம் பேரம் பேசுகிறார். இதை அறியும் பரத், அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார்.

    இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு முனையில் பெண்களே பிடிக்காத கதிர், வேலை விஷயமாக சென்னை வரும்போது, கட்டாயத்தின் பேரில் சஞ்சிதா ஷெட்டியுடன் ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சஞ்சிதா ஷெட்டியின் அப்பா, வீட்டின் பேரில் வாங்கிய கடனால், வீடு ஏலத்துக்குப் போகவே, அந்த வீட்டை எப்படியாவது மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். இதை அறியும் கதிர், அவள் மீது பரிதாபப்பட்டு, அவளுக்காக அந்த பணத்தை தயார் செய்து அந்த வீட்டை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார்.

    இறுதியில், பரத், கதிர் இருவரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்ததா? இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    சென்னையின் முக்கிய பகுதியான கிண்டியில் நடைபெறும் குதிரை பந்தயத்தை இதுவரை தமிழ் சினிமாவில் ஒருசில காட்சிகள்தான் பெயரளவிற்கு வைத்திருந்தார்கள். குதிரை பந்தயத்தை மையமாக வைத்து முழுநீள படமாக இதுவரை எடுத்ததில்லை. இப்படியொரு கதையை தேர்வு செய்ததற்காகவே இயக்குனர் அருண் கிருஷ்ணசாமியை பாராட்டலாம். குதிரை பந்தயத்துக்கு பின் இருக்கும் அரசியல், பந்தயத்தில் வெல்லத் தேவையான சாதுர்யம் ஆகியவற்றை கதையாக்கி, குழப்பாத திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.

    நாயகன் பரத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பந்தயத்தில் பணத்தை இழந்தாலும் அதை மீட்பதற்காக இவர் சாதுர்யமாக காய் நகர்த்தும் பாணி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. பெண்களை கண்டாலே எட்டி நிற்கும் கதாபாத்திரத்தில் கதிரின் நடிப்பு அசத்துகிறது. அதேநேரத்தில், ஒரு பெண்ணுக்காக அவர் படும் கஷ்டங்களையும் படத்தில் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

    நாயகிகளான சாந்தினிக்கும், சஞ்சிதா ஷெட்டிக்கும் சரிசமமான கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதுபோல் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ராதாரவி படத்தில் வந்தாலே போதும் என்று கூறும் அளவிற்கு, இந்த படத்திலும் ரொம்பவும் அசால்ட்டாக வந்து மிரட்டிவிட்டு போயிருக்கிறார்.

    யுவாவின் கேமரா, குதிரை பந்தயத்தில் புகுந்து விளையாடியிருக்கிறது. மற்ற காட்சிகளையும் ரொம்பவும் துல்லியமாக படமாக்கியிருக்கிறது. மோசஸ், சுதர்சன் எம்.குமார் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசை கதையோடு பயணிக்கும்படி அமைந்திருப்பது பலம்.

    படத்தில் ஆங்காங்கே ஒருசில குறைகள் இருந்தாலும், படம் பார்க்கும் அனுபவத்தை அது கெடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு திருப்தியான திரில்லர் படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறது.

    மொத்தத்தில் ‘என்னோடு விளையாடு’ விளையாடலாம். 
    பாடகர் பால முரளி கிருஷ்ணாவின் மனைவி நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    மறைந்த கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா. இவரது மனைவி அன்ன பூரணா. 82 வயதாகும் இவர் கடந்த சில  மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று பிற்பகல் அவர் வீட்டில் மரணம் அடைந்தார்.

    இன்று காலை 8 மணிக்கு மயிலாப்பூர் கதீட்ரல் சாலையில் உள்ள வீட்டில் தொடங்கியது. அதன் பிறகு மயிலாப்பூர் சுடுகாட்டில்  உடல் தகனம் செய்யப் படுகிறது.

    பாலமுரளிகிருஷ்ணா - அன்னபூர்ணா தம்பதிக்கு 3 மகன்களும், 3 மகள் களும் உள்ளனர். அன்ன பூர்ணாவுக்கு 14 வயதிலேயே  பாலமுரளி கிருஷ்ணாவுடன் திருமணம் நடந்தது.

    பாலமுரளி கிருஷ்ணா 3 மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார். அதன் பிறகு இவரது உடல் நிலையும் மோசம்  அடைந்தது.

    இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.
    கமலஹாசன் தயாரிப்பில் அவரே இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது பாகமான `விஸ்வரூபம் 2` குறித்த முக்கிய தகவலை கமலஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த தகவலை கீழே பார்க்கலாம்.
    கமலஹாசன் இயக்கி நடித்த கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான `விஸ்வரூபம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது. இரு பாகமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் முதல் பாகம் வெளியான நிலையில், இரண்டாவது பாகத்தை ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் `விஸ்வரூபம் 2'  படத்தின் பணிகளில் தொய்வு ஏற்ப்பட்டது.

    மேலும், பல சிக்கல்களை சந்தித்த பின்னரே `விஸ்வரூபம்' படத்தை கமல் ரிலீஸ் செய்தார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம்  2' படம் தயாராகி வருகிறது.

    `விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமல் `சபாஷ் நாயுடு' படத்தில்  பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம் 2' படத்தின் முக்கிய பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும், தொழில்நுட்ப  மற்றும் சட்ட சிக்கல்களை மட்டுமே சமாளிக்க வேண்டியிருப்பதாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    `விஸ்வரூபம்' முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட அனைவரும்  இரண்டாவது பாகத்திலும் நடித்துளனர். இப்படத்தை கமல் அவரது சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஸன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், 6 மாதங்களில் படம் திரைக்கு வர  வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
    மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ரஜனி படத்தின் தலைப்பை கைப்பற்றியுள்ளது படக்குழு. அது என்ன தலைப்பு என்பதை கீழே பார்க்கலாம்.
    சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில்,  ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு  வெளியிட்டுள்ளது.

    சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரது படத்திலும் ரஜினியை முன்னிலைப்படுத்தி
    பல காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

    இந்நிலையில், ரஜினி நடிப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `வேலைக்காரன்'. மாபெரும்  வெற்றி பெற்ற `வேலைக்காரன்' படத்தலைப்பையே மோகன் ராஜா தனது அடுத்த படத்திற்காக கைப்பற்றியுள்ளார்.

    இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பஹத் பாசில், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சதிஷ்,  ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    சிவகார்த்திகேயன் நடிக்கும் `வேலைக்காரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட  படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி படத்தை வெளியிடப்போவதாக படக்குழு  அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    அஜித்தின் சிக்ஸ் பேக் காட்சிக்கு இசையமைத்தது குறித்து அனிருத் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ஆர்வத்துடன்  காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், அஜித் மற்றும் `விவேகம்' படம் குறித்து அப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், சில ருசீகர தகவல்களை  தெரிவித்துள்ளார். இதில், `வேதாளம்' படத்திற்கு பிறகு பல அறுவைசிகிச்சைகளை மேற்கொண்ட அஜித், விவேகம் படத்திற்காக   தனது உடலை வருத்தி கட்டுக்கோப்பான உடலுக்கு மாறியுள்ளார்.

    விவேகம் படத்தில் அஜித்தின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்ப, புதுமையான முறையில் இசையமைத்துள்ளதாக அனிருத்  தெரிவித்தார். குறிப்பாக தல அவரது கட்டுக்கோப்பான சிக்ஸ் பேக் உடலை காட்டும் ஒரு காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார்.  அந்த காட்சியில் வரும் பின்னணி இசை அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றார்.

    மேலும் `விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் பிரபல ஹிப் ஹாப் பாடகர் யோகி பி ஒரு  பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    'விவேகம்' படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை தல  பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மார்ச் 2-வது வாரத்தில் டீசரை  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இப்படத்தில் அஜித்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 
    இளைஞர்களின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள காதல் காவியமான ‘காதல் கண்கட்டுதே’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் கே.ஜி. படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறான். நாயகி அதுல்யா ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருகிறாள். இருவரும் ஒருமுறை சந்தித்து நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.

    இந்நிலையில், அதுல்யா வேறு ஊருக்கு மாற்றலாக போகிறாள். இருப்பினும், நாயகனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறாள். அதுல்யாவுக்கு கூடவே பணிபுரியும் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவனிடம் பழகுவதை தனது காதலனிடம் மறைக்காமல் போனில் அவனைப் பற்றிய தகவலை சொல்கிறாள்.

    அடிக்கடி, தன்னுடன் வேலை பார்க்கும் அந்த நபரைப் பற்றி நாயகி கூறுவதை கேட்கும் நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவள்மீது வெறுப்பு வருகிறது. இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள். இந்த பிரிவு தற்காலிகமாக இருந்ததா? அல்லது நீடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவராஜ். பெரிய, பெரிய இயக்குனர்களால்தான் இந்த மாதிரியான அழகான, நேர்த்தியான படத்தை கொடுக்க முடியும் என்ற நிபந்தனையும் மீண்டும் ஒரு புதிய இயக்குனர் முறியடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    இன்றைய கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    காதல், மோதல், ஊடல் என தமிழ் சினிமாவுக்கு அதர பழசான கதையாக இருந்தாலும், அதை எடுத்தவிதம் அருமை. ரொம்பவும் எளிமையான நடிப்பு, ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரங்கள் என படத்தில் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடியதாக இருக்கின்றன.

    பவணின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் கதைக்கு தேவையானதை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சிவராஜின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘காதல் கண்கட்டுதே’ கைதட்டலாம்.
    `விஜய் 61' படத்தில் ரசிகர்களுக்கு புதுமையான விருந்து ஒன்று காத்திருக்கிறது. அது என்னவென்பதை கீழே பார்க்கலாம்.
    தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிமுகங்கள், தொழில்நுட்பங்கள் என அதன் அடுத்த  நிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் நடிகர்களும்,  நடிகைகளும் தங்களது பங்களிப்பை பலவிதங்களில் அளித்து வருகின்றனர்.

    அந்தவகையில் நடிகர்கள் ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் ஏதுமின்றி தாமாகவே நடித்து ரசிகர்களை கவர்கின்றனர். இவ்வாறு டூப்  போடாமல் ஸ்டன்ட்களில் ஈடுபடுவது நடிகர் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல. முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `தெறி'  படத்தில் 90 அடி பாலத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பு அம்சங்களுமின்றி தண்ணீரில் குதித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    அந்த வகையில் `விஜய் 61' படத்தில் அவரது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான விருந்து காத்திருக்கிறது. விஜய் தற்போது அட்லி  இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதில்  ஒரு முக்கியமான காட்சியில் விஜய் பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி ஆபத்தான ஸ்டன்ட் ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். இந்தகாட்சி திரையில் வரும்போது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில்  சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
    வெளிமாநிலத்தில் பதிவு செய்து விட்டு சொகுசு காரை மும்பையில் ஓட்டிய எந்திரன் பட வில்லன் நடிகருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    நாட்டிலேயே மும்பையில் சாலை வரி அதிகமாகும். இங்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு 20 சதவீதம் சாலை வரி விதிக்கப்படுகிறது. எனவே பலர் சாலை வரி 2 முதல் 2½ சதவீதம் மட்டும் விதிக்கப்படும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் அல்லது புதுச்சேரி, டையு-டாமன் போன்ற யூனியன் பிரதேசங்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி மும்பையில் பயன்படுத்தி வருகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும்.

    இதனால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் ஓட்டப்பட்டு வரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் சட்ட விரோதமாக ஓட்டப்பட்டு வந்த 451 சொகுசு வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கார்கள் சுமார் ரூ.10 கோடி வரி ஏய்ப்பு செய்து வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

    பிடிபட்டதில் பிரபல நடிகர் டேனியின் சொகுசு காரும் அடங்கும். அவருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதித்தனர்.

    தமிழில் வெளியான எந்திரன் படத்தில் டேனி, வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழக அரசியல் திருப்பங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன், டைரக்டர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கருத்துகள் வெளியிட்டு உள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நடிகர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆட்சி அமைக்க நடக்கும் போட்டிகள், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு ஆகியவைபற்றி கருத்துகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்.

    அவரது சமீபத்திய டுவிட்டர் பதிவுகள் வருமாறு:-

    “திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வேண்டும். நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருக்கிறது? என்றால் ஜனமாவது நாயகமாவது...”

    “107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட 104 செயற்கை கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர். வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழ், வாழிய பாரத மணித்திருநாடு”

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    நடிகரும் டைரக்டருமான பாக்யராஜ் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியிருப்பதாவது:-

    “சீட்டு கொடுத்தவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்கும் நீ, அந்த சீட்டை எம்.எல்.ஏ. பதவியாக மாற்றிய ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்ககூடாதா?”

    இவ்வாறு பாக்யராஜ் கூறியுள்ளார்.

    நடிகர் சித்தார்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    “நமது நாட்டில் பல அரசியல்வாதிகள் நூறுகோடி, ஆயிரம் கோடி என்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ஊழல் செய்ததற்கான விலையை கொடுக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக நம்மால் சண்டை போட முடியும். ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தி கேட்க வேண்டும். நீங்கள் மாற்றமாக இருப்பதற்கு உறுதி எடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நடிகர் மாதவன், ”நம்பிக்கையையும் பழைய இயல்பு வாழ்க்கையையும் கொண்டு வருவதற்கான நேரம் இது. தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கையை மீட்பதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகவும் இது இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

    நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த 15 நாட்கள் தங்கப்போகும் அடுத்த ஹாலிடே ஸ்பாட் எங்கு இருக்கிறதோ?.. தேசிய செய்தி சேனல்கள் தமிழக பிரச்சினை முடிந்துவிட்டதாக தெரிவித்து வருகின்றன. பிரச்சினையே இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்பது அவற்றுக்கு தெரியவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.எல்.ஏக்களிடம் மக்கள் கேட்கவேண்டும்.

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.
    அஜித் அண்ணா மிகவும் அன்பானவர் என்று பாலிவுட் நடிகர் புகழந்துள்ளார். அவர் அளித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ஆர்வத்துடன்  காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், `விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் அஜித் குறித்த  தனது கருத்துக்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தொடக்கம் முதலே `விவேகம்' படம் குறித்த தகவல்கள்  பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது ஒருசில தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய்   அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

    இந்நிலையில், நேற்று அஜித் குறித்து அவர் தெரிவி்த்ததாவது,

    "அஜித் அண்ணா மிகவும் பணிவான மனிதன், மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதில் அவர் முழுமையான மாணிக்கம், சென்னையில்  இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சுகமாக இருப்பதை உணர்கிறேன். உங்களது அன்புக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    'விவேகம்' படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை தமிழ் தல  பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

    இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு  அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 
    பிரபல இயக்குனரின் பேரன் தமிழல் இயக்குனராக அறிமுகமாகும் "யார் இவன்" படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
    படகோட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரின் பேரன் தமிழல் இயக்குனராக அறிமுகமாகும் "யார் இவன்"

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் `படகோட்டி', நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில்  `உத்தம்புத்திரன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா "யார் இவன்" படத்தின் மூலமாக  தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

    `பீமிலி கபடி ஜட்டு', `எஸ்.எம்.எஸ்', `ஷங்கரா' ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும்  முதல் தமிழ் படம் `யார் இவன்'.

    `யார் இவன்' ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும்  நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர்.

    ஏப்ரல் 2017 படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என  தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
    செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் `வணங்காமுடி' படத்தில் இருந்து விலகியதாக டேனியல் பாலாஜி அறிவித்துள்ளார். அவர் விலகியதற்கான காரணம் என்னவென்பதை கீழே பார்க்கலாம்.
    பிரபல இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் படம் `வணங்காமுடி'. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்  நேற்று முன்தினம் துவங்கியது. `புதையல்' படத்திற்கு பிறகு 20 வருடங்களுக்குப் பிறகு செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி  மீண்டும் நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி உள்ளிட்ட 3 நாயகிகள் நடித்து  வருகின்றனர்.

    முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர்   உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், படத்திலிருந்து தான் விலகியுள்ளதாக டேனியல் பாலாஜி அறிவித்துள்ளார்.

    டேனியல் பாலாஜி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை  முடித்து பிறகு `வணங்காமுடி'-யில் நடிக்க இருந்தநிலையில், `வணங்காமுடி' படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்கியதால்  அப்பபடத்தில் நடிக்க முடியதா சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    `வணங்காமுடி` படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைக்கிறார். மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில்  கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
    ×