என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நான் கோபக்காரன் என்பதால் அரசியலுக்கு வர எனக்கு தகுதியில்லை என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடைபெற்ற சம்பவம் மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறியதாவது:-

    ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட பின்னர் சசிகலாவின் குடும்பம் என்னும் கிரிமினல் கூட்டத்தாரால் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

    நான் கூறுவது உண்மை என்பது நீதிமன்றத்தால் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட குற்றம்சாட்டப்பட்டவர்தான்.

    தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால், தெருக்களில் உள்ள உணர்ச்சி கொந்தளிப்பு வேறு எதையோ குறிப்பிடுகிறது.

    நமது சட்டசபையை நாம் தூய்மைப்படுத்த வேண்டும். மக்கள் தங்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் என்றும் இந்த பேட்டியின்போது குறிப்பிட்ட கமல்ஹாசன், நான் மிகவும் கோபக்காரன். கோபக்காரர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை, எதையும் நடுநிலையாக அணுகும் அரசியல்வாதிகள் தான் இன்று நமக்கு தேவை. தற்போது நானும் கோபமாக இருக்கிறேன், மக்களும் கோபமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகள் குறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை நேற்று சட்டசபையில் நிரூபித்து தனது ஆட்சியை பலப்படுத்தியுள்ளார். இந்த சட்டசபைக்குள் நேற்று நடந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைக்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அமளி, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டது என நேற்று தமிழக அரசியலில் பெரும் சூறாவளியே தாக்கியது எனலாம்.

    நேற்று தமிழக அரசியலில் தொடர்ந்து நடந்த இந்த சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் கமல், சூர்யா ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது அரவிந்த்சாமியும் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

    அவர் கூறும்போது, என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு. இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல" என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி. 
    பெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது நடிகை சினேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சினேகா, தற்போது குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களிலும், சிறப்புத் தோற்றத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

    தற்போது, சிவகார்த்திகேயன் - மோகன்ராஜா கூட்டணியில் உருவாகும் ‘வேலைக்காரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், தனியார் அழகு கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் சினேகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அதில் அந்நிறுவனத்தில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசும்போது, இங்கே இருக்கும் அனைத்து அழகுக் கலை நிபுணர்களுக்கும் வணக்கம். இந்நிறுவனத்தின் நிறுவனரை எனக்கு 7 வருடங்களாகத் தெரியும். ஒரு பெண்ணாக அவருடைய உழைப்பு மிகப்பெரியது. அதனால்தான் இந்த நிறுவனம் மிகப்பெரியதாக உயர்ந்துள்ளது.

    இந்நிறுவனத்தின் 10-வது வருட பட்டமளிப்பு விழாவில் பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லாத் துறைகளும் பெண்களுக்கு சவாலான துறை தான். எந்த துறைக்குச் சென்றாலும், பெண்கள் சவால்களை சமாளித்துதான் முன்னேற முடியும். இங்கே இருக்கும் பெண்கள் அனைவருக்கும் உங்களுடைய நிறுவனர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அழகுக் கலை நிபுணர்கள் மருத்துவர்களுக்கு நிகரானவர்கள்.

    அழகுக் கலை நிபுணர்கள் கையில் அதிக திறமை உள்ளது. அவர்கள் நினைத்தால் இந்த உலகத்தையே அழகாக மாற்ற முடியும். சினிமா நடிகைகள் மட்டும் தான் அழகாக இருக்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது நீங்கள் நினைத்தால் உலகத்தில் உள்ள அனைவரும் அழகாகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் 'தீபாவளி', 'சித்திரம் பேசுதடி', 'அசல்', 'ஜெயம் கொண்டான்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

    தற்போது இவர், நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா நேற்று முன்தினம் இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மர்ம கும்பல் ஒன்று இவரது காரை வழிமறித்து, அதில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக செய்திகள் வெளிவந்தது.

    இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவரான மார்ட்டின் மீது போலீசார் சந்தேகப்பட்டு, அவரை நேற்று விசாரணை செய்தது. இந்நிலையில், இன்று டிரைவர் உள்பட 7 பேரை இன்று கேரளா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார்? எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 
    பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.
    பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.

    விஜயகுமார் ஏற்கனவே சிவாஜியை வைத்து "நெஞ்சங்கள்'' என்ற படத்தை தயாரித்தார். வசூல் ரீதியாக அந்தப்படம் வெற்றி பெறாததால், தொடர்ந்து படம் தயாரிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டார்.

    ஆனால், பட அதிபர் ஜீவி கேட்டுக்கொண்டதால், "தயாரிப்பு மேற்பார்வை'' என்ற பொறுப்பை ஏற்க நேரிட்டது.

    இதுகுறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    "சொந்தப்படம் எடுத்த அனுபவம், எனக்கு நிச்சயம் புதிய அனுபவம். இனி தயாரிப்பே வேண்டாம் என்கிற அளவுக்கு இந்த தயாரிப்பு அனுபவம் என்னை பாதித்திருந்தது.

    தொடர்ந்து 4 வருடம் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் ஜீவி என்னை அழைத்துப்பேசினார். "ஒரு கன்னடப்படம் வந்திருக்கிறது. வித்தியாசமான கதையமைப்புடன் நன்றாகவே இருக்கிறது. தமிழில் ரஜினியை வைத்து அதை தயாரிக்க இருக்கிறேன்'' என்றார்.

    ரஜினி அப்போது சூப்பர் ஸ்டார் ஆகயிருந்த நேரம். அதோடு வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவந்தார். எனவே, ரஜினி அந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஜீவியிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

    "உங்களுக்கு இந்தப் படத்தில் வேலை இருக்கிறது. தயாரிப்பாளராக நான் இருந்தாலும், நீங்கள்தான் முன்னிலை தயாரிப்பு மேற்பார்வை செய்யவேண்டும்'' என்றார், ஜீவி.

    அவர் அப்படிச் சொன்ன பிறகு, எனக்கு மறுக்கத் தோன்றவில்லை.

    படத்தில் ரஜினி ஜோடியாக பார்வையற்ற பெண் கேரக்டரில் ரேவதி நடித்தார். மகேந்திரன் டைரக்ட் செய்தார்.

    திட்டமிட்டபடி, படம் வளர்ந்து வந்தது. கிளைமாக்ஸ் காட்சியின்போதுதான் எனக்கும் டைரக்டர் மகேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    பார்வையற்ற பெண்ணுக்கு ரஜினி வாழ்வு கொடுக்கிறார். அந்தப் பெண் ரஜினியை மணந்து கொண்ட நேரத்தில் அந்த ஊர் பண்ணையாரால் அவள் கற்பு பறிபோகிறது. இதை தெரிந்து கொண்ட ரஜினி பெருந்தன்மையுடன் "உன் மீது எந்த தவறும் இல்லை. நடந்ததை ஒரு விபத்தாக கருதி மறப்போம்'' என்று சொல்லி மனைவி ரேவதியுடன் வேறு ஊருக்கு புறப்பட்டுப் போகிற மாதிரி படம் முடியும்.

    பொதுவாகவே ரஜினி மாதிரி `இமேஜ் வேல்ï' உள்ள நடிகர்கள் படங்களில், ஜோடியாக வருபவர்களுக்கு எந்த மாதிரியான துன்பம் என்றாலும் உயிரைப் பணயம் வைத்தாவது ஹீரோ காப்பாற்றி விடுவார். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள். "ரஜினியின் மனைவியாக நடிக்கும் ரேவதியின் கற்பு பறிபோகிற மாதிரியான காட்சியை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். எனவே கிளைமாக்சை மாற்றுங்கள்'' என்று மகேந்திரனிடம் சொன்னேன்.

    அவரோ, "ஒரிஜினல் கதையில் இப்படித்தான் இருக்கிறது. நமது ரசிகர்கள் புதுமை விரும்பிகள். அதனால் கிளைமாக்சை மாற்ற அவசியமில்லை'' என்றார்.

    அப்படியும் நான் விடவில்லை. முதல் இரவில் அந்த பார்வையில்லாத பெண் கணவனிடம் என்ன சொல்கிறாள்? "நான் உங்களுக்கு முன்னாடியே பூவும் பொட்டுமா போயிடணும்னு ஆசைப்படுகிறேன்'' என்கிறாள். பதறிப்போகும் கணவனை கையமர்த்தி, "அப்படி நான் செத்துப்போகும்போது நீங்கதான் என்னை குளிப்பாட்டி புடவை கட்டி விடணும். அதாவது ஒரு பெண் கூட என் உடம்பை பார்க்கக் கூடாது. கணவனா நீங்களே அந்தக் கடமையையும் செய்துடணும்'' என்கிறார்.

    இப்படி இன்னொரு பெண்கூட தனது உடம்பை பார்த்து விடக்கூடாது என்று சொல்லும் அவள், வேறொரு ஆண் மகனால் சிதைக்கப்படுவது அந்த கேரக்டரின் தன்மையையே சின்னா பின்னப்படுத்துவது போல் ஆகிவிடாதா? எனவே கிளைமாக்சை ரஜினி கேரக்டரின் தன்மைக்கு பாதிப்பு நேராமல் நாயகியின் விருப்பமும் பூர்த்தியாகிற மாதிரி மாற்றிப் பாருங்கள்'' என்றேன்.

    இதற்கிடையே நான் கிளைமாக்சை மாற்றச் சொன்ன விஷயம், ரஜினிக்கும் தெரியவந்தது. அதுபற்றி என்னிடம் பேசிய ரஜினி, "விஜய்! நீங்க சொன்ன கிளைமாக்சையும் எடுத்துவிடுவோம்'' என்றார், ஆர்வமாக.

    ஆனால், அதற்குள் ஏற்கனவே எடுத்த கிளைமாக்சுடனேயே படம் தயாராகி விட்டது. அந்த முடிவுடன்தான் படம் ரிலீஸ் ஆகியது.

    ரஜினியின் ரசிகர்களால் படத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இதனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

    இதற்குப் பிறகு படத்தயாரிப்பு பக்கம் என் பார்வை போகவில்லை.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    மனஉளைச்சலை கவர்னருக்கு மின்அஞ்சலாக அனுப்ப நடிகர் கமலஹாசன் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார். அவரது பகர்தலை கருத்தை விரிவாக கீழே பார்ப்போம்.
    தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகள் என பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு  வருகின்றனர். இதில் தனது நேரடியான, வெளிப்படையான கருத்துக்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்களில் நடிகர்  கமலஹாசனும் ஒருவர்.

    அவ்வப்போது நிகழும் முக்கிய நிகழ்வுகள், பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வரும் கமல்,  தற்போது தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் குறித்த தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னர் கமல் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்ததாவது,
    "இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா? அந்த சொக்கனின் தந்திரமா? பார்ப்போம்".

    என்று கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கடும் அமளிக்கிடையே நடந்த வாக்கெடுப்பிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி 122 ஓட்டுகளை பெற்று முதல்வராக  பொறுப்பேற்க சபாநாயகர் அனுமதி அளித்தார்.

    அதனைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களிலேயே கமல் மீண்டும் தனது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். அதில் "Rajbhavantamilnadu@gmail.com ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும்  அது அசம்பளியில்ல Governor வீடு"

    என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
    `துருவ நட்சத்திரம்' படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்துள்ள விக்ரம் - கவுதம் மேனன் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
    விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். கவுதம் மேனனின் கனவு படமான  `துருவ நட்சத்திரம்' படம் மூலம் விக்ரம்-கவுதம் மேனன் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரிது வர்மா நடிக்கிறார்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை கவுதம் மேனின் ஒன்ராகா என்டர்டெயிண்ட்மண்ட், கொண்டாடுவோம்  என்டர்டெயிண்ட்மண்ட், மோஷன் பிக்சர்ஸ் மதன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவுதம் மேனன்-விக்ரம் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால் படக்குழு  இதனை மறுத்துள்ளது.

    நடிகர் விக்ரம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

    கவுதம் மேனனுக்கும், தனக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்றும், தான் தற்போது வாலு இயக்குநர் விஜய்  சந்தர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறேன். வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு பின்னர் `துருவ நட்சத்திரம்'  படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வேன் என்று கூறிய விக்ரம், வதந்திகள் குறித்து ரசிகர்கள் கவலைபடத் தேவையில்லை என்றும்  குறிப்பட்டுள்ளார்.
    நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    இந்தி நடிகை சோனம்கபூர் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள யுடிஏ நிறுவனத்துடன்  ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் அவருக்கு பொருத்தமான ஹாலிவுட் படவாய்ப்பை தேடிவருகிறார்கள்.

    இது குறித்து சோனம்கபூர் அளித்த பேட்டியில்,

    “ இந்தி பட உலகம் ஆனாலும், ஹாலிவுட் என்றாலும் நல்ல பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். என்னை தேடிவரும் எல்லா  படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டேன். சீன படம் உள்பட எந்த மொழிபடமாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே  முன்னுரிமை கொடுப்பேன்.

    நான் ஹாலிவுட் சென்றாலும் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா அளவுக்கு வரமுடியாது. அவர்களுடன் என்னை ஒப்பிடமாட்டேன்.  அவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். நான் அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு  வருவேன்” என்று மனம் திறந்து சொல்லி இருக்கிறார்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் `2.0' படத்தில், அக்‌ஷய் குமாருக்கும், ஏமி ஜாக்சனுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற உள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
    ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0' படத்தில் நடித்து வருகின்றனர்.  முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்' படம் நல்ல வரவேற்பை  பெற்றுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது பாகமாக `2.0' படம் தயாராகி வருகிறது.

    இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

    450 கோடி பட்ஜெட்டில் லைகா புரெடெக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில்  நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதில் அக்‌ஷய் குமார்-எமி ஜாக்சன் இடையே  கடுமையான சண்டைக்காட்சிகள் நாளை முதல் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2017 தீபாவளி ரிலீசாக `2.0' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அடிமைப்பெண்'. இப்படத்தை டிஜிட்டல் வடிவில் வெளிவர உள்ளது. இதுகுறித்த முழுசெய்தியை கீழே பார்க்கலாம்.
    எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடிமைப்பெண்’. வசூல் சாதனை படைத்த  ‘அடிமைப் பெண்’ 25 வாரம் அமோகமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இதில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

    ஜெயலலிதாவும் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின்,  பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.

    கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரபலம். சொர்ணம் வசனம் எழுத கே.சங்கர் இயக்கத்தில் படம் உருவானது.

    1969 ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடல் மூலம் பிரபலம்  ஆனார். ஜெயலலிதா முதன் முதலாக பாடிய “அம்மா என்றால் அன்பு” பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

    படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஜெய்ப்பூர் ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடைபெற்றது.

    48 வருடங்களுக்குப் பிறகு ‘அடிமைப்பெண்’ படத்தை தி ரிஷிஸ் மூவீஸ் நிறுவனத்தை சேர்ந்த சாய் நாகராஜன்.கே. படத்தை அதி நவீன  டிஜிட்டலில் மாற்றி வெளியிடுகிறார்.

    “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டில் புதுப்பொலிவுடன் உருவாகி இருக்கும். ‘அடிமைப்பெண்’ படத்தை நவீனப் படுத்தி  வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.
    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரண உதவிகளை நடிகர் விஷால் வழங்கியுள்ளார். முழுசெய்தியை கீழே பார்ப்போம்.
    கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் தீ விபத்து ஏற்ப்பட்டது. இதனால் அங்கே வசித்து  வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்கள் பற்றி அறிந்த நடிகர் விஷால் உடனே  அவர்களுக்கு உதவ முன்வந்தார். அங்கே வசித்து வந்த 25 குடும்பங்களில் குழந்தைகள் உட்பட 216 பேர்களுக்கு தேவையான உணவு,  போர்வை, சமையலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    விஷாலின் இந்த உடனடி உதவியால் பயனடைந்த மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து அவரை வாழ்த்தினர். இன்னும் அந்த மக்களுக்கு  தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக நடிகர் விஷால் கூறினார். நேதாஜி நகர் மக்களுக்கு  உதவும் பணிகளை அம்மக்களோடு இருந்து நடிகர் விஷாலின் குழுவினர் கவனித்து வருகின்றனர்.
    முக்கிய தலைவர் மரண மர்மத்தை சொல்லும் கதையை ஹாலிவுட் பாணியில் உருவாக்கும் முதல் தமிழ்படம் குறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்படும் காட்சிகளைக் கொண்ட விஷூவல் எபக்ட்ஸ் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி  பெறுகின்றன.

    இந்தநிலையில் தீபன் என்ற இளம் இயக்குனர் ‘மாயா மீடியா வொர்க்’ மற்றும் ஆம்சி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு விஷூவல் எபக்ட்ஸ்  சார்ந்த படத்தை தொடங்குகிறார்.

    இந்த படத்தில் ஒரு முக்கியமான தேசிய தலைவரின் மரணத்தில் உள்ள மர்மங்களை மிகவும் சுவாரஸ்யமான முறையில் மக்களிடம்  கொண்டு சேர்க்க உள்ளனர்.

    ஹாலிவுட் படங்களில் வருவது போல், இந்த திரைக்கதையில் கதாநாயகன் நியூரல் சிமுலே‌ஷன் மூலம் பல்வேறு வித்தியாசமான  இடங்களுக்கு பயணம் செய்து பல தடைகளை மீறி அந்த மர்மங்களை கண்டுபிடிக்கிறார். அது போன்ற பாணியில் உருவாக்கும் முதல்  தமிழ் படம் இது.

    புதுமுகம் வைதேஷ் ஹரிஹரன் இதில் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது.

    இயக்குனர் தீபக் கூறும் போது “இந்த திரைப்படம் தற்போது ஆரம்ப விஷூவல் நிலையில் உள்ளது.

    மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட உள்ள இந்த படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயமாக அனைவருக்கும்  பிடித்ததாக அமையும். இது அனிமே‌ஷன் மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் திரைபடங்களுக்கு ஒரு புரட்சிகரமான தொடக்கமாக அமையும்.

    இந்த படத்திற்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது பெற்ற ப்ரெட் ஆலன் மற்றும் விஜய் கூட்டணி இசை அமைக்க உள்ளனர்.
    ×