என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.ஓ படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.110 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துவரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

    இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜி குழுமம் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழ் மட்டுமில்லாது மற்ற இந்திய மொழிகள் அனைத்துக்கும் சேர்த்தே இந்த தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.



    ‘2.ஓ’ படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கவுள்ளனர். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இப்படத்தை ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருகின்றனர். விரைவில், இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    விஷால் பட நாயகி ஒருவர், தான் தயாரிப்பாளர், இயக்குனரை அனுசரித்து போகததால் தன்னை கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    கர்நாடகத்தை சேர்ந்த நடிகை மாதவிலதா. தெலுங்கு படம் மூலம் நாயகி ஆன இவர் விஷாலின் ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது திரை உலக பயணம் பற்றி மாதவிலதா கூறும்போது, ‘‘நடிக்க வேண்டாம் என்று தடுத்த குடும்பத்தினர் வார்த்தையை மீறி வீட்டை விட்டு வெளியேறினேன். ஐதராபாத்தில் தங்கி இருந்து வாய்ப்பு தேடினேன். 2 வருடம் வீட்டுக்கே போகவில்லை.

    படவாய்ப்பு கிடைத்ததும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்னிடம் மரியாதையாக பேசினார்கள். ‘நாம் நட்பாக இருக்கலாமா’ என்று கேட்டார்கள். அப்போது அர்த்தம் புரியாமல் ‘நல்ல நண்பர்களாகத்தானே’ என்றேன். அதற்கு ‘இல்லை இல்லை வேறு நட்பு’ என்றார்கள். அதன்பிறகு தான் அர்த்தம் புரிந்தது.



    இதுபற்றி என் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அது, ‘அந்த வி‌ஷயத்தில்’ அனுசரித்து போகச் சொன்ன இயக்குனருக்கே தவறுதலாக போய்விட்டது. அதன்பிறகு படப்பிடிப்பு தளத்தில் என்னை மோசமாக நடத்த தொடங்கினார்கள். கேரவனை நிறுத்தினார்கள். ஓட்டல் அறையை மாற்றி விட்டார்கள். மரத்தடியில் மேக்கப் போட வைத்தார்கள். 55 நாட்கள் கொடுமைப்படுத்தி விட்டார்கள்.

    உதவி இயக்குனர்கள்கூட மோசமாக நடந்து கொண்டார்கள். அம்மாவை என்னுடன் வரவிடவில்லை. படப்பிடிப்பு தளத்தில் என் அப்பாவாக நடித்தவரை தவிர யாருடனும் பேச அனுமதிக்கவில்லை. ஆசிரியர் தினத்தில் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இவ்வளவு கஷ்டம் கொடுத்தும் வாழ்த்துகிறாயா? என்றார்.

    அதற்கு நான், ‘நீங்கள் என்குரு’ என்றேன். அப்போது உதவி இயக்குனர் ஒருவர், ‘இயக்குனரிடம் மன்னிப்பு கேளுங்கள் எல்லா வசதியும் கிடைக்கும்’ என்றார். நான் முடியாது என்று கூறிவிட்டேன்” என்றார்.
    சுரேஷ் மேனன் மரணமடைந்துவிட்டார் என்று வெளிவந்த செய்திக்கு அவர் புன்னகையுடன் பதில்கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகை ரேவதியின் முன்னாள் கணவரும், இயக்குனருமான சுரேஷ் மேனன் இறந்துவிட்டதாக செய்தி ஒன்று தொலைக்காட்சிகளிலும், ஒருசில இணையதளங்களிலும் பரவலாக பரவியது. ‘புதிய முகம்’ படத்தை இயக்கிய இயக்குனர் இறந்துவிட்டார் என்று ஆங்கில இணையதளங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து சுரேஷ் மேனன்தான் இறந்துவிட்டதாக நினைத்து பலரும் செய்திகளை வெளியிட தொடங்கினார்.

    ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே ‘புதிய முகம்’ என்ற மலையாள படத்தை இயக்கிய தீபன் என்பவர்தான் இறந்துவிட்டதாகவும், அது, தமிழில் ‘புதிய முகம்’ படத்தை எடுத்த சுரேஷ் மேனன் அல்ல என்று செய்தி வெளியானது. இந்த செய்தி சுரேஷ் மேனனின் பார்வைக்கும் சென்றுள்ளது.



    இதுகுறித்து அவர் கூறும்போது, தான் இறந்துவிட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறு. இந்த செய்தியை கேட்டவுடன் நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். அப்போது அந்த முகம் என்னை பார்த்து சிரித்தது என்று கூறியுள்ளார். மேலும், அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்திற்காக அப்போது எடுக்கப்பட்ட ‘செல்பி’ புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
    எவ்வளவு திட்டினாலும் எனக்கு கோபமே வராது என்று விஷால் பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடித்துள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில், நடிகர் விஷால், ஆர்யா, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், டி.சிவா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவில் விஷால் பேசும்போது, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு நான் கிளம்பி வரும்போது, ஆர்யா என்னிடம் உன்னோட படத்தின் ஆடியோ விழாவுக்கே நீ போகமாட்டாய்.. அப்படியிருக்கையில் நீ எப்படி இதில் கலந்துகொள்கிறாய் என்று கேட்டான். அதற்கு நான், இன்னும் இரண்டு வருடத்துக்கு திரையுலகம் இப்படித்தான் இயங்கப் போகிறது. நாம் சம்பந்தப்படாத படமாக இருந்தாலும், அதை விளம்பரப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம் என்று சொன்னேன்.



    இந்த படத்தின் தலைப்பே ரொம்பவும் அருமையாக உள்ளது. ஷக்தி சிதம்பரம் அவர்கள் தொடர்ச்சியாக படம் தயாரிக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். எஸ்.ஏ.சந்திரசேகர், தேனப்பன், டி.சிவா என எல்லோருமே நல்ல நண்பர்கள்தான். என்னை எவ்வளவு திட்டினாலும், கோபமே வராது. ஏனென்றால் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

    விஷாலை கைது செய்... கைது செய்... கைது செய்’ என்ற செய்தியை பார்த்துவிட்டு எனது அம்மா-அப்பா இருவருமே ‘சூப்பர் காமெடி’ என்று காமெடி சேனல் பார்ப்பதுபோலவே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டில் இந்த மாதிரி விஷயங்களைத்தான் ரசித்து பார்ப்பார்கள்.  நடிகர் சங்கத்தில் நாங்கள் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையுமே நிறைவேற்றிவிட்டோம்.  என்னை வளர்த்த திரையுலகம் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என இளைஞர்கள் வந்துள்ளோம்.

    இவ்வாறு விஷால் பேசியுள்ளார்.
    நடிகை பாவனா போலீசுக்கு கொடுத்த ரகசிய வாக்குமூலம் வெளியானது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

    திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் திரும்பிய நடிகை பாவனா, கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.

    ஓடும் காரில் அந்த கும்பல் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது. அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் விபரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.


    மேலும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது தாக்கல் செய்த ஆவணங்களில் போலீசார் தெரிவித்த தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    போலீசாரால் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட ஆவணங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது எப்படி நடந்தது? ரகசியங்களை யார் கசிய விட்டது? என்பதை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து கோட்டயம் எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பாவனாவின் ரகசிய வாக்குமூலத்தை சமூக ஊடகங்களுக்கு தெரிவித்தது யார்? என்பதை ரகசியமாக விசாரித்து வருகிறார்கள். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாளத்தில் ‘புதியமுகம்’ படத்தை இயக்கிய தீபன் திடீர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    மலையாளத்தில் 2003-ஆம் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் தீபன். இப்படத்தை தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘புதிய முகம்’ என்ற படத்தை இயக்கி பிரபலமானார். இப்படத்தில் பிரித்விராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    அதைத் தொடர்ந்து ‘ஹீரோ’, ‘சிம்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தீபன், இன்று காலமானார். கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    தீபன் சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. காலமான தீபனுக்கு வயது 47. தீபனின் உடல் அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    தீபன் இயக்கத்தில் கடைசியாக உருவாகியுள்ள ‘சத்யா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார் தீபனின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தனுஷ் பலவித திறமை கொண்டவர் என்று நடிகை அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்த அவர் மேலும் கூறியதை கீழே விரிவாக பார்ப்போம்.

    அமலாபால் தற்போது தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ படங்களில் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி கேட்ட போது அமலா பால் அளித்த பதில்...

    “தனுஷ் ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தேன். இப்போது அதன் 2-வது பாகத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரி டம் பலவித திறமைகள் இருக்கின்றன. கதை, கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்வார். தனுஷ் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபாத்திரங்கள் தான் கண்முன் நிற்கும். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் திறமையாக நடித்து விடுவார்.

    தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தில் வடசென்னை பெண்ணாக வருகிறேன். சவாலான வேடம். அது ஒரு காலகட்டத்தில் நடக்கும் படமாக தயாராகிறது. கதை கேட்டதும் இரண்டு நாட்கள் அந்த பாத்திரமாகவே மாறிவிட்டேன்


    இந்தி ‘குயின்’ படம் மலையாளத்தில் ‘ரீமேக்’ ஆகிறது. ரேவதி இயக்கும் இந்த படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எனக்கு பிடித்த நடிகை. சிறுவயதில் அவரைப் பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன். இது தவிர 'திருட்டுப்பயலே' இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன்.

    நாங்கள் பிரிந்து விட்டாலும் விஜய் இப்போதும் எனக்கு பிடித்தவர். நாங்கள் ஒருவர் மற்றவரிடம் இருந்து அற்புதமான வி‌ஷயங்களை கற்று இருக்கிறோம். நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு பிடித்தமானது நடிப்பு. சினிமாவில் நடிப்பதற்காகவே வாழ்கிறேன்.

    எதிர் காலத்தில் தொழில் அதிபராவேன். சென்னையில் ஓட்டல் தொடங்குவேன். அங்கு யோகா, தியான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வேன்” என்றார்.

    விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சூப்பர் ஸ்டார் நாயகி ஒருவர் தேர்வாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகிக் கொண்டே வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ படத்தை இயக்கிய பிறகு கோகுல், காமெடி கலந்த ஒரு கதையை தயார் செய்து வந்ததாகவும், தற்போது அந்த கதை எழுதும் பணி முடிந்துவிட்டபடியால் அதில் நடிக்க விஜய்சேதுபதியை அணுகி, ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.



    இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘2.ஓ’ படத்தில் நடித்துள்ள ஏமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்யப்போவதாக படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
    திகில், நகைச்சுவை கதைகளில் நடிக்க பிடிக்கும்” என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை சமந்தா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் மணக்க இருக்கும் நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?

    பதில்:- நாக சைதன்யாவும், நானும் கடந்த வருடமே ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது இன்னொரு படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறோம். இந்த படத்துக்கான கதை தயாராகி விட்டது. அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

    கேள்வி:- உங்கள் மாமனார் நாகார்ஜுனிடம் பிடித்த விஷயம்?

    பதில்:- அவர் சிறந்த மனிதர். நாக சைதன்யாவை மணந்த பிறகு நாகார்ஜுனை எப்படி அழைப்பீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவரை எவ்வாறு கூப்பிடுவது என்பது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை.

    கேள்வி:- வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்துக்கு போக ஆசைப்படுவீர்களா? கடந்த காலத்துக்கு போக விரும்புவீர்களா?

    பதில்:- நான் இப்போது சந்தோஷமாகவே இருக்கிறேன். இதுவே எனக்கு போதும்.



    கேள்வி:- நீங்கள் நடிக்க விரும்புவது நகைச்சுவை படங்களா? திகில் படங்களா?

    பதில்:- வாய்ப்பு கிடைத்தால் நகைச்சுவை படங்களிலும், திகில் படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். குறிப்பிட்ட கதை மற்றும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற கட்டுப்பாடுகள் என்னிடம் இல்லை.

    கேள்வி:- நாய்களிடம் பிடித்த விஷயம் என்ன?

    பதில்:- நாய்கள் காரணம் இல்லாமல் எல்லோரையும் நேசிக்கும். இது அவைகளிடம் எனக்கு பிடித்த விஷயங்கள்.

    கேள்வி:- இந்த பூமியில் உங்களுக்கு பிடித்தமான இடம் எது?

    பதில்:- வேறு எது? எங்கள் வீடுதான். வீட்டில் இருப்பதுபோன்ற சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. படப்பிடிப்பு ஓய்வுகளில் வீட்டில் இருக்கவே விரும்புகிறேன்.

    கேள்வி:- உங்களை பயமுறுத்துகிற விஷயம் எது?

    பதில்:- தோல்விகள் என்றால் மிகவும் பயப்படுகிறேன். இதனால் வாழ்க்கையில் தோல்வி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். சில நேரங்களில் நான் வருத்தப்படக்கூடிய சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அப்போது ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்டுகளை கணக்கில்லாமல் சாப்பிடுவேன்.

    கேள்வி:- உங்கள் அழகு ரகசியம் என்ன?

    பதில்: நான் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறேன். அதனால் அழகாக தெரிகிறேன்.

    இவ்வாறு சமந்தா கூறினார்.
    சினிமாவுக்கு வந்த புதிதில் படங்கள் ஓடாததால் என்னை ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தி ஒதுக்கினார்கள் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    “நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நடிகையான புதிதில் படங்கள் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். 3 வருடங்கள் கஷ்டப்பட்டேன். அப்போது தெலுங்கு நடிகர் பவன்கல்யான் தனது கப்பார்சிங் படத்தில் தைரியமாக என்னை நடிக்க வைத்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் எனது வாழ்க்கையே மாறியது.

    தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனது தந்தை கமல்ஹாசனுடன் சபாஷ்நாயுடு படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடிப்பது சுலபமானது அல்ல. படப்பிடிப்பு அரங்கில் எல்லோரும் தன்னைப்போல் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். எனக்கு அவருடன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் வேலை செய்ய ஆரம்பித்ததும் அவருடைய வேகம் என்னையும் தொற்றிக்கொண்டு விட்டது.



    எனது தந்தை உறுதியானவர். அவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. விபத்து பாதிப்பில் இருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆகலாம் என்று நினைத்தேன்.

    ஆனால் தனது மன உறுதி மூலம் விரைவிலேயே குணமடைந்து விட்டார். வேறு யாருக்கு இதுபோல் விபத்து ஏற்பட்டு இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் குணமடைந்து இருக்க முடியாது. அவர் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை சாதிக்காமல் விடமாட்டார். விரைவில் நாங்கள் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி அதில் நடிக்க இருக்கிறோம்.

    என் அப்பாவின் அம்மா பெயரான ராஜலட்சுமி என்பதுதான் எனது உண்மையான பெயர். எனக்கு இசை மீது இருந்த ஆர்வத்தால் சுருதி என்று அழைத்தார்கள். பிறகு அதுவே எனது பெயராக நிலைத்து விட்டது. எதிர்காலத்தில் நிறைய இசை ஆல்பங்களை உருவாக்குவேன். நடிகையான பிறகு படப்பிடிப்பு நட்சத்திர ஓட்டல்கள், விமான பயணம் என்று எனது வாழ்க்கை கழிகிறது. எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். குழந்தை பெற்றுக்கொள்வதற்காக திருமணம் செய்து கொள்வேன்”.

    இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
    தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையின் படி சட்டசபைக்கு தேர்தல் நடத்த 4 ஆண்டுகள் வரை காத்திருக்காமல் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
    நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    ‘விஸ்வரூபம்’ படத்துக்கு பிறகு எழுந்த பிரச்சனைக்கு காரணம் இஸ்லாமியர்கள் அல்ல. அரசியல்வாதிகள் தான் முழுக்க முழுக்க காரணம். எனது படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததே அப்போதைய ஆட்சியில் இருந்தவர்கள்தான்.

    நான் பகுத்தறிவாதத்தை பேசிக்கொண்டேதான் இருப்பேன். அரசியல் வர்த்தகம் ஆகி விட்டது.

    நிகழ்கால அரசியலுக்கு தீங்கு ஏற்படுமானால் நிச்சயம் குரல் கொடுப்பேன். வெறும் கலைஞனாக மட்டும் என்னால் இருக்கமுடியாது. நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன்.

    என் வாழ்க்கையில் எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்கவில்லை. ஓட்டுக்களை விலை பேசினால் கேள்வி கேட்க முடியாது. எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்கவேண்டும்.

    ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஜெயலலிதா வெளிப்படையாக இருந்தது இல்லை. ஒருவேளை அவரது சிகிச்சை தொடர்பான சந்தேகத்துக்கு அதுவும் காரணம் என நினைக்கிறேன்.

    தற்போதை ஆட்சியை (எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை) ஏற்க முடியாது.

    தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும். சட்டங்கள் ஒத்துக்கொள்ளாது என்பதற்காக மக்கள் விரும்பாத அரசு ஆட்சி மேலும் 4 ஆண்டுகள் தொடரவேண்டும் என்று யாரும் சொல்லத்தேவையில்லை. அப்படி சொல்வது கட்டாய திருமணம் போன்றது. யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


    நான் அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது முதல் தகுதி. சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் கம்யூனிஸ்ட் வாதி என்று நினைக்க வேண்டாம். முதல்வர் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் மக்களுக்கு சேவை செய்யும் கருவி.

    என்னை அரசியல் கட்சிக்குள் கொண்டு வர நீண்ட நாட்களாக முயற்சி நடக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் எரிமலையின் நுனி பல்வேறு கோபங்களின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.

    தவறுகள் அதிகமாகும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் மாற வேண்டும். பழைய சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

    திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்லமுடியாது. தமிழ்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிடம் என்ற சொல்லும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதை யாரும் மறுக்க முடியாது. தேசிய கட்சிகள் தமிழகத்திற்குள் நுழைந்தால் திராவிடத்தை நிச்சயம் ஏற்கத்தான் வேண்டும்.

    ஒரு முக கலாசாரத்தை இந்தியாவில் புகுத்த முடியாது. பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். இது இன்று நேற்றல்ல காலம் காலமாக தொடர்கிறது.

    பொறுக்கி என்று கூறிய சுப்பிரமணியசாமியின் கருத்து தவறானது என்னுடைய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அமைதிப்படுத்தலாமே தவிர யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது.

    காந்தி, பெரியார் போன்ற ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியலில் இல்லை. கொள்கை நேரத்துக்கு நேரம் மாறும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை.

    ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் யாருடனும் எனக்கு பரீட்சயம் இல்லை. நான் யாருக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. சினிமாவை பலரும் விமர்சனம் செய்வது போல்தான் நானும் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன்.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். சாதிகள் இல்லா சமுதாயம் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.
    கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

    பாலசந்தரின் சொந்த பட நிறுவனம் "கவிதாலயா.'' அந்த நிறுவனத்தின் பெரும்பாலான படங்களை பாலசந்தர் டைரக்ட் செய்தார் என்றாலும், நிறுவனத்தின் பொருளாதார நிலையை வலுவாக வைத்துக்கொள்வதற்காக, இடையிடையே சில கமர்ஷியல் படங்களையும் தயாரிக்க வேண்டியிருந்தது.

    புரட்சிகரமான, புதுமையான, பரீட்சார்த்தமான படங்களை டைரக்ட் செய்து வந்த பாலசந்தர், கமர்ஷியல் படங்களை இயக்க விரும்பவில்லை. மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய படங்களை - அதாவது மசாலா படங்களை தயாரிப்பதற்கு வேறு திறமை வேண்டும் என்று கருதினார்.

    இந்த முடிவுக்கு வந்தபின் பாலசந்தரின் மனக்கண் முன் தோன்றியவர் எஸ்.பி.முத்துராமன்தான். கருத்துள்ள படங்களையும், கமர்ஷியல் படங்களையும் டைரக்ட் செய்யக்கூடிய திறமையைப் பெற்றவர் அவர். அதே சமயம் சினிமாத்தனங்கள் இல்லாத -எல்லோராலும் மதிக்கப்பட்ட இயக்குனராகவும் திகழ்ந்தார்.

    ரஜினியை தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து, "நெற்றிக்கண்'' என்ற படத்தை தயாரிக்க பாலசந்தர் முடிவு செய்தார். அந்தப் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பை எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

    லட்சுமி, சரத்பாபு, மேனகா, சரிதா ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர்.

    15-8-1981-ல் வெளிவந்த "நெற்றிக்கண்'' மகத்தான வெற்றி பெற்றது.

    பிறகு, ரஜினியை வைத்து "நான் மகான் அல்ல'', "வேலைக்காரன்'', "புதுக்கவிதை'', "ராகவேந்திரா'' ஆகிய படங்களை பாலசந்தர் தயாரிக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

    "வேலைக்காரன்'' படத்தில், ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்தார். படம் "மெகாஹிட்.''

    ரஜினிகாந்தின் நூறாவது படம் "ராகவேந்திரா.''

    ரஜினி, ராகவேந்திரரின் பக்தர். அதனால், தனது 100-வது படமாக ராகவேந்திரர் வரலாற்றை படமாக்க வேண்டும் என்றும், ராகவேந்திரராக தான் நடிக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

    பாலசந்தரை சந்தித்து, "என்னுடைய நூறாவது படம் ராகவேந்திரர். என்னை திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான் இப்படத்தை தயாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    பாலசந்தர் இதற்கு சம்மதம் தெரிவித்தார். ராகவேந்திரர் படத்தை டைரக்ட் செய்யுமாறு, எஸ்.பி.முத்துராமனிடம் கூறினார்.

    முத்துராமன் தயங்கினார். "ராகவேந்திரர் வேடத்தில் ரஜினி நடிப்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்கவேண்டுமே! படம் வியாபார ரீதியில் வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வது?'' என்று கேட்டார்.

    "இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது வியாபார ரீதியாக வெற்றி பெறாமல் போனாலும் கவலை இல்லை. ரஜினியின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக படம் அமைந்தால் போதுமானது'' என்று பாலசந்தர் பதிலளித்தார்.

    இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன், லட்சுமி, கே.ஆர்.விஜயா, அம்பிகா ஆகியோர் நடித்தனர். வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார்.

    இப்படம் 1985 செப்டம்பர் 1-ந்தேதி வெளிவந்தது.

    கமர்ஷியல் படங்களுக்கான வரவேற்பை இப்படம் பெறாமல் போனாலும், ரஜினியின் மாறுபட்ட நடிப்பை ரசிகர்கள் வியந்து ரசித்தனர்.

    கமலஹாசனை வைத்து "எனக்குள் ஒருவன்'' படத்தை பாலசந்தர் தயாரித்தார். பூர்வஜென்மம் பற்றிய கதை இது.

    கமலஹாசன் புதுமையான வேடத்தில் நடித்தார். சத்யராஜ், ஸ்ரீபிரியா ஆகியோரும் நடித்தனர். இந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார்.

    மற்ற பட அதிபர்கள் தயாரித்த படங்களிலும் ரஜினிகாந்த்தை இயக்கியவர் முத்துராமன். "ஆறிலிருந்து அறுபது வரை'', "எங்கேயோ கேட்ட குரல்'' ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் ரஜினியை நடிக்க வைத்தார்.

    எனவே, "ரஜினிகாந்த் என்ற வைரத்தை நான் கண்டுபிடித்தேன். அந்த வைரத்தை பட்டை தீட்டியவர் எஸ்.பி.முத்துராமன்'' என்று பாலசந்தர் பாராட்டியுள்ளார்.

    "பாலசந்தர் பெரிய டைரக்டர். அவர் படங்களை இயக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்றீர்கள். அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி? நீங்கள் டைரக்ட் செய்யும்போது, பாலசந்தர் தலையிட்டு ஏதாவது ஆலோசனைகள் கூறுவாரா?'' என்று கேட்டதற்கு பதிலளித்து முத்துராமன் கூறியதாவது:-

    "படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், கதையை கேட்பார். ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதைச் சொல்வார்.

    அதன் பிறகு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரவேமாட்டார். படப்பிடிப்பு முடிந்த பிறகு, முதல் பிரதியை அவருக்குப் போட்டுக்காட்டுவோம். அவ்வளவுதான்.

    படப்பிடிப்பு செலவுகளில் சிக்கனம் பார்க்கமாட்டார். "நீங்கள் ஏவி.எம்.ஸ்டூடியோவில் பணியாற்றுகிறீர்கள். அங்கு, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை சிறப்பாகத் தயாரிக்கிறார்கள். அதேபோலவே இங்கும் செலவைப்பற்றி சிந்திக்காமல், படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும். சிக்கனம் பார்க்காதீர்கள்'' என்று என்னிடம் கூறுவார்.

    அவருடைய படங்களில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத -மகிழ்ச்சியான அனுபவம்.''

    இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
    ×