என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    காப்புரிமை பிரச்சினையில் இளையராஜா-எஸ்.பி.பி. பிரிவால் இசை ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் கேட்கின்றனர்.
    இசை அமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக் கூடாது’ என்று எஸ்.பி.  பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப, அதை ஏற்றுக் கொண்டு ‘இனி உன் பாடலை பாட மாட்டேன்’ என்றார் எஸ்.பி.பி.

    பால்ய நண்பர்களான இவர்கள் இருவரிடையே என்ன நடந்தது?

    கச்சேரிகளில் மேடைகளில் ரசிகர்கள் முன் இரு வரும் ஒருவரையொருவர் வாடா.... போடா... என்று பேசிக் கொள்ளும்  அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள்.



    ஆனால் இப்போது இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்று ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள், யூகங்கள்..

    அரசியல் பரபரப்பையும் மீறி, இவர்கள் பற்றியே இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன.

    ஒரு திரைப்பட பாடலானது இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என மூவரது பங்களிப்புடன் உருவாகிறது.

    இதில் இசைஅமைப்பாளருக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது. பாடலை காட்சிக்கு ஏற்ப எந்த ராகத்தில் உருவாக்க வேண்டும்.  என்னென்ன இசைக் கருவிகளை எந்தெந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் இசை அமைப்பாளர்தான்  உருவாக்கி அதை இசைக் குறிப்பாக இசைக் கலைஞர்களிடம் கொடுக்க அதன்படி இசைக் கலைஞர்கள் இசைக்க இப்படித்தான்  இசை உருவாகிறது.

    யார் பாட்டெழுதினால், எப்படி எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்பதையும் இசை அமைப்பாளர்தான் முடிவு செய்வார்.



    இசை அமைப்பாளர் உருவாக்கிய டியூனுக்கு தகுந்தவாறு பாடல் ஆசிரியர் பாடல் வரிகளை எழுதிக் கொடுப்பார். அதை தனது  இசைக் குழுவில் உள்ள சாதாரண பாடகர்களைக் கொண்டு பாட வைத்து ரிகர்சல் (மாதிரி) எடுத்து அதில் திருத்தங்கள்  செய்யப்படும்.

    கடைசியாக பாடகர்களைக் கொண்டு பாடச் செய்து பதிவு செய்யப்படும். பாடலின் ஏற்ற இறக்கங்கள், ராகங்கள்  போன்றவற்றையும் இசை அமைப்பாளரே திருத்தங்கள் செய்வார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் போன்ற பாடகர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தாலும், இசை ஞானத்தாலும் எளிதில்  இசை அமைப்பாளர்கள் நினைப்பதை புரிந்து கொண்டு பாடி விடுவார்கள். இதனால்தான் திரை உலகில் பிரபலங்களுக்கு மவுசு  உண்டாகிறது.

    படத்துக்கு யார் இசை அமைப்பாளர் என்பதை படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து அவருக்கு மொத்தமாக சம்பளம் பேசி  கொடுத்து விடுகிறார்.

    அதன் பிறகு யார் பாடுவது? பாடலாசிரியர் யார்? இசைக் கலைஞர்கள் போன்ற மற்ற முடிவுகளை இசை அமைப்பாளரே  எடுக்கிறார்.



    ஒரு படத்துக்காக உருவாக்கப்படும் பாடல்களை படத்தயாரிப்பாளர் இசை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வார். காப்புரிமை  சட்டப்படி ஒரு பாடலுக்கான காப்புரிமையில் தயாரிப்பாளருக்கு பாதி பங்கும் மீதியில் இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர்  ஆகியோருக்கு சொந்தம் என்று கூறப்பட்டுள்ளது.

    இப்போதுள்ள காப்புரிமை சட்டப்படி பாடகர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே தான் காப்புரிமையில் தங்களுக்கும் பங்கு  வேண்டும் என்று பாடகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

    பாடல்களை விலைக்கு வாங்கிய இசை நிறுவனங்கள் தங்களுக்குத்தான் பாடலுக்கான காப்புரிமை சொந்தம் என்றும்  கூறுகிறது.

    பொதுவாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஐ.பி.ஆர்.எஸ். (இந்தியன் பெர்பார்மிங் ரைட்  சொசைட்டி) நிறுவனத்திடம் ஒரு தொகையை கட்டி அனுமதி பெற வேண்டும். இந்த தொகை இசை நிறுவனம், இசை  அமைப்பாளர், பாடல் ஆசிரியர் என மூவருக்கும் 5: 3: 2 என்ற விகிதத்தில் பிரித்து கொடுக்கப்பட வேண்டும்.

    இந்த ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு தனது வேலையை சரியாக செய்யவில்லை என்பதே இப்போதைய குற்றச்சாட்டு.



    தற்போது யு டியூப், எப்.எம்., தொலைக்காட்சி மற்றும் இசை சேனல்கள், இசை ஆப்கள் ஏராளமாக உருவான நிலையில்  அவைகளிடம் இருந்து வசூலிக்கப்படும் காப்புரிமை தொகை இசை அமைப்பாளர்களுக்கு உரிய முறையில் போய்ச் சேரவில்லை.

    இசையில் முன்னணியில் இருக்கும் இளையராஜாவுக்கே ஆண்டுக்கு ரூ.15 லட்சம்தான் கிடைக்கிறது. எனவேதான் தனது  பாடல்களை அனுமதியின்றி பாடுவதை எதிர்த்து களம் இறங்கி இருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வசூலிக்கும் பெரும்  தொகை எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வருகிற 31-ந்தேதி காப்புரிமை அமைப்பான ஐ.பி.ஆர்.எஸ். புதிய உறுப்பினர்கள் தேர்வு நடக்கிறது. அவர்கள் தான் இதுபற்றி முடிவு  செய்வார்கள்.

    இதை எதிர்நோக்கித்தான் தற்போது காப்புரிமை தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் கூறிய தாவது:-

    ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு தான் ராயல்டியை பிரித்துக் கொடுக்கிறது. வருகிற 31-ந் தேதி ஐ.பி.ஆர்.எஸ். அமைப்புக்கு தேர்தல் நடத்தி  புதுபோர்டு வருகிறது. ராயல்டியை மாற்றி அமைப்பது பற்றி புதுபோர்டு முடிவு செய்ய இருக்கிறது.

    இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாட்டு போடுவதைத் தவிர எதையும் எதிர்பார்த்தது கிடையாது. இன்றைக்கு இசை  வணிக மயமாகி விட்டது. பணம்தான் முக்கியமானதாக கருதப்படுகிறது.



    நான் இளையராஜா ரசிகன். எஸ்.பி.பி. கச்சேரிக்கு ரசிகனாக செல்கிறேன். அப்போது “மன்றம் வந்த தென்றலுக்கு”..., “இளைய  நிலா பொழிகிறதே...”, “பொத்திவச்ச மல்லிகை மொட்டு...”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி...” பாடல்களை விரும்பி கேட்பேன்.  இதற்கு தடை போடக்கூடாது என்றார்.

    லட்சுமண் ஸ்ருதி இசைக்குழு இயக்குனர் லட்சுமண் கூறியதாவது:-

    மேடைக் கச்சேரிகள் நடத்தும் போது நாங்கள் முன் கூட்டியே அனுமதி பெற்றுத்தான் பாடல்கள் பாடுவோம்.

    ஐ.பி.ஆர்.எஸ். என்ற காப்புரிமை அமைப்புதான் ராயல்டியை எங்களிடம் இருந்து வசூலிக்கிறது. நாங்கள் நேரு ஸ்டேடியம்  போன்ற பெரிய இடங்களில் கச்சேரி நடத்தும்போது அதன் வாடகையே ரூ.35 லட்சம். அப்படி இருக்கும் போது ஐ.பி.ஆர்.எஸ்.  அமைப்பினர் எங்களிடம் வந்து ரூ.10 லட்சம் கொடு, ரூ.25 லட்சம் கொடு என்று அதுவும் கச்சேரி தொடங்க இருக்கும் சில மணி  நேரத்தில் வந்து கேட்பார்கள் எங்களால் எப்படி கொடுக்க முடியும்.



    இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளது. இளையராஜா சாரைப் பொறுத்தவரை 2 வருடங்களுக்கு முன் என்னை கூப்பிட்டு  தமிழ்நாட்டில் எத்தனை இசைக்குழு இருக்கிறது என்று கேட்டார். அவர்களையெல்லாம் சென்னைக்கு வரவழைத்து கூட்டம்  போட்டு காப்புரிமை பற்றி ஆலோசனை நடத்தினார்.

    எனக்கு பணம் முக்கியம் அல்ல. நாளைய நமது சந்ததியினர் பயன் அடைய வேண்டும். அதற்கான முயற்சிகளைத்தான் எடுத்துக்  கொண்டு இருக்கிறேன் என்று இளையராஜா சொன்னார்.

    இவ்வாறு லட்சுமண் கூறினார்.

    லட்சுமண் ஸ்ருதி இசைக் குழு மற்றொரு இயக்குனர் ராமன் கூறியதாவது:-

    இளையராஜாவும் எஸ்.பி. பி.யும் இளம் பருவத்தில் இருந்தே நணபர்களாக ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்துள்ளனர்.  இருவருமே ரசிகர்கள் மத்தி யில் பிரபலமாக விளங்கு கிறார்கள். நாங்கள் நடத்திய 189 கச்சேரிகளில் எஸ்.பி.பி.  பாடியிருக்கிறார். இதில் 150 கச்சேரிகளில் இளையராஜா இசை அமைத்த பாடல்கள் மட்டுமே பாடியிருக்கிறார்.

    அவர் கச்சேரிகளில் இளையராஜாவை புகழ்ந்து பாராட்டி பேசுவார். ரசிகர் கள் அதை ரசித்து கேட் பார்கள். இப்போது அவர்  களிடையே பிரச்சினை ஏற்பட்டு இருப்பது கஷ்டமாக இருக்கிறது. மீண்டும் இருவர் இடையே புரிந்துணர்தல் வேண்டும்.

    கச்சேரிகளில் பாடும் போது சில ஆயிரம்பேர் தான் கேட்டு ரசிக்கிறார்கள். இங்கு காப்புரிமை தொகை அதிகம்  வசூலிக்கப்படுகிறது. ஆனால் டி.வி., வானொலியில் ஒலி பரப்பாகும்போது லட்சக் கணக்கானோரை சென்று அடைகிறது. அதில்  காப்புரிமை தொகை குறைவு எனவே இதில் பாடலுக்கான கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.

    சினிமா ஒரு கலை. அது எல்லோருக்கும் சொந்தம். கதை, அதற்கேற்ற பாடல், பாடலுக்கு ஏற்ற இசை, அதற்கேற்ற குரல்,  எல்லாவற்றுக்கும் ஏற்ற நடிப்பு என்று எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும். இத்தனையும் சிறப்பாக அமைந்தாலும் ரசிகர்கள்  ரசிக்க வேண்டும். அப்போது தான் ஒரு பாடல் உயிர் பெறும்.

    பாடல்கள் மக்கள் இதயங்களில் வாழ்கிறது. ஒருவர் பாடிய குரலை ரசிப்பார். இன்னொருவர் பாடல் வரிகளை ரசிப்பார்.  மற்றொருவர் இசையை ரசிப்பார்.

    காப்புரிமை பிரச்சினையால் ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல்களை கேட்க முடியாமல் போவது வருத்தமாக உள்ளது.

    இளையராஜா - எஸ்.பி.பி. இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது பெண்ணை திருமணம் செய்து கொடுத்து விட்டு  சம்பந்திகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் போன்றதுதான். ஒரு ரசிகையாக இருந்து நான் எதிர்பார்ப்பது இருவரும் ஒன்றாக  இருந்து இசை உலகில் வழிகாட்ட வேண்டும். இருவரது இதயமும், நட்பும் தூய்மையானது. அவர்கள் தனியாக அமர்ந்து  பேசினாலே பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு.

    இவ்வாறு பாடகி மாலதி கூறினார்.



    தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இளையராஜா - எஸ்.பி.பி. இருவர் மீதும் அளவிட முடியாத பாசம் கொண்டுள்ளனர்.  இருவரையும் சேர்த்துத்தான் பார்க்கிறார்கள். காப்புரிமை பிரச்சினையை சட்டப்படி முடிவு செய்யட்டும். ஆனால் எங்களால்  இசையை கேட்காமல் இருக்க முடியாது என்று ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார், இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.  இதுதான் அவர்களுக்கிடையேயான பெருந்தன்மை.

    இதையே சிலர் உள்ளே புகுந்து சொந்த பகையை தீர்த்துக் கொள்வது சரியல்ல என்பதே ரசிகர்கள் கருத்து.
    சென்னை விமானநிலையத்தில் ஒரு செல்ஃபி எடுக்க கேட்ட ரசிகரிடம் தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார் நடிகர் கவுண்டமணி. அவர் என்ன சொன்னார் என்பதை கீழே பார்ப்போம்.
    80-90 களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிக்கட்டி பறந்தவர் கவுண்டமணி. இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிப்பு  மழையில் நனைய வைத்திருக்கும் இவர், ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணி  நடிகர்களுடன் நடிக்கும்போது அவர்களையே இவர் கலாய்த்து அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார்.

    தனது அளப்பறியாத நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த கவுண்டமணி, கவுண்டர்  வசனங்களுக்கு பெயர் பெற்றவர். கோயமுத்தூரில் பிறந்த இவருக்கு, கோயமுத்தூர் குசும்பு ரொம்பவே அதிகம். மேலும் இவரது  காமெடிகள் அனைத்து தலைமுறையினராலும் ரசித்து பார்க்கப்படும் ஒன்றாகவும் இருக்கிறது.



    தனது வசனங்களால் மக்களை ரசிக்க வைத்த கவுண்டமணி, சிந்திக்கவும் வைத்திருக்கிறார். குறிப்பாக கவுண்டமணி - செந்தில்  இருவரும் இணைந்து நடித்த காமெடிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றால் அது மிகையாகாது. மக்கள்  சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களை தனது வசனங்களால் முன்கூட்டியே ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த  பெருமை இவரையே சாரும். தொழில்நுட்ப வளர்ச்சியை பெரிதும் நாட்டமில்லாத நம்ம கவுண்டர் அதனை தவிர்த்தும் வருகிறார்.



    அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர், கவுண்டமணியிடம் சென்று அவருடன் தனியாக ஒரு செல்ஃபி  எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி தனக்கே உரித்தான ஸ்டைலில் பதில் கூறியுள்ளார். அது  என்னவென்றால், அவருக்கு முன்னால் கையை நீட்டி, “அங்கே யாருமே இல்லை, போய் எடுத்துக்கோ” என்று கூறியுள்ளார்.  உடனே அந்த ரசிகரும் கவுண்டமணிக்கு எதிரே சற்று தூரம் சென்று கவுண்டர் பின்புறத்தில் உட்கார்ந்திருக்க, அவர் முன்பு நின்று  ஒரு செல்ஃபி எடுத்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் சமூக வதைளங்களில் வைரலாக பரவி  வருகிறது.

    எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரது நக்கல் பேச்சும், பஞ்ச்-சும் அவரை விட்டு போகாது என்பது இதன்மூலம்  ஊர்ஜிதமாகிறது.
    இனப்படுகொலை விசாரணையில் இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் அளிக்க கூடாது என்று ஜெனீவா மாநாட்டில், இயக்குனர் கவுதமன் வலியுறுத்தினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் தமிழ் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    1½ லட்சம் ஈழத்தமிழர்கள் இலங்கையில் சிங்கள ராணுவத்தினரால் சுட்டும், விமான குண்டுகள் வீசியும், எறிகணைக் குண்டுகள் வீசியும் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா உள்ளக விசாரணை அறிக்கையின்படி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் என தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.

    போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிபதிகள் மூலம் இதுவரை இலங்கை அரசு நடத்தாத நிலையில் இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஐ.நா. பொதுச்சபையிடம் ஒப்படைத்தது.



    இந்த நிலையில் தற்போது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தமக்கு சாதகமான இன்றைய இலங்கை அரசை பாதுகாப்பதற்காக விசாரணை கால நீட்டிப்புக்கு ஆதரவு அளித்து, காலப்போக்கில் விசாரணையை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் தந்திரத்துக்கு உதவுவது மிகப்பெரிய குற்றம் ஆகும்.

    இலங்கை அரசு கோரும் மேலும் 2 ஆண்டுகால கால நீட்டிப்புக்கு வாய்ப்பு அளிக்காமல் உடனடியாக ஐ.நா. பொதுச்சபை மூலம் ஐ.நா. பாதுகாப்பு சபை வாயிலாக ஒரு சர்வதேச விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

    இந்த பூமி பந்தின் ஆதி இனமான, 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட 10 கோடி தமிழர்களின் சார்பாக மன்றாடி கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    25 வருடங்களாக ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து பயணிப்பதை மணிரத்னம் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்
    மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படத்தின் இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கார்த்தி, அதீதி ராவ் ஹைதாரி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார்.

    விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, 25 வருடங்களாக நானும் ரகுமானும் ஒன்றாக பயனித்துள்ளோம், அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரை பார்த்தது போல் தான் இப்போவும் அவர் உள்ளார். ‘காற்று வெளியிடை’ திரைப்படம் இந்திய விமான படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும்.



    நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படப்பிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களை பார்த்துள்ளேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படப்பிடிப்பு தளத்திருக்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன் என்றார்“.  அதுதான் அவர்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும்.

    ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரகுமானுடன் இனைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படபிடிப்பு உள்ளது பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரை பாடலுக்காக சந்திக்க சென்றால் அவர் தீம் மியூசிக் ரெடி செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும்.



    என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடி பிடித்து கொடுப்பவர் அவர். நான் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் நன்றி கூறிகொள்கிறேன். அடுத்த படத்தை ஏ.ஆர்.ரகுமான் உடன் இனைந்து பணியாற்ற அவரிடம் உங்கள் முன்னால் கேட்டு கொள்கிறேன் என்றார் இயக்குநர் மணிரத்னம்.  
    சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஜெயிக்கிறகுதிர’ என்ற காமெடி கலாட்டா படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கிறகுதிர’.

    இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர்  நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன்,  ரமேஷ்கண்ணா, மதன் பாப், ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, பவர்ஸ்டார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.



    ஒளிப்பதிவு-ஆஞ்சி, இசை-கே.ஆர்.கவின்சிவா, எடிட்டிங் -ரஞ்சித்குமார், கலை-மணிகார்த்திக், ஸ்டண்ட்- தளபதி தினேஷ், நடனம்  -கூல் ஜெயந்த், தயாரிப்பு-டி.ஆர்.திரேஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-‌ஷக்தி என்.சிதம்பரம்.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது....

    “ஜெயிக்கிறவனை மட்டும் தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா கெட்டவனா என்று பார்க்காது. அப்படிப்பட்ட இந்த  உலகில் ஜெயிக்க, நாயகன் ஜீவன் எந்த வழியை தேர்ந்தெடுத்தார்? எப்படி வெற்றி பெற்றார்? என்பதை காமெடி, சென்டிமென்ட்  கலந்து வித்தியாசமாக உருவாக்கி உள்ளோம். இந்த படத்தில் காமெடி, இரண்டரை மணி நேரம் சிவகாசி சீனி வெடி போல பட  பட வென இருக்கும். அனைவரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படமாக உருவாக்கி இருக்கிறேன். படம் விரைவில் வெளியாக  உள்ளது” என்றார்.
    பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரம் அல்ல” என்று நடிகை வித்யாபாலன் கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை வித்யாபாலன் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

    “திருமணமான நடிகைகளை யார் பார்த்தாலும் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று கேட்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இப்படி கேட்பது எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்தியாவை தவிர வேறு எந்த நாடுகளிலும் இதுபோல் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து தம்பதிகளிடம் யாரும் விசாரிப்பது இல்லை.

    குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டும்தான் பெண்களா? குழந்தைகளை பெற்றுப்போடும் எந்திரங்கள் அல்ல பெண்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உலகில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. இதில் கொஞ்சம் பேர் குழந்தை இல்லாமல் இருப்பது நல்லதுதான்.

    குடும்ப விஷயங்கள், குழந்தை என்பதெல்லாம் நானும் எனது கணவரும் சம்பந்தப்பட்டவை. குழந்தை இப்போது வேண்டுமா வேண்டாமா? எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் நாங்கள்தான் தீர்மானிப்போம். இதில் மற்றவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது. எனக்கு திருமணமான அன்று உறவினர் ஒருவர் வாழ்த்த வந்தார்.



    என்னையும் எனது கணவரையும் பார்த்து அடுத்த முறை உங்களை சந்திக்கும்போது நீங்கள் மூன்று பேராக இருக்க வேண்டும் என்றார். அதை கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. இருவரும் அவரை பார்த்து சிரித்துக்கொண்டோம். அப்போது நாங்கள் தேனிலவுக்கு எங்கே செல்வது என்று கூட முடிவு செய்யவில்லை.

    வாழ்த்தி விட்டு போவதை விட்டு குழந்தை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக எங்கள் சொந்த வாழ்க்கையில் அவர் தலையிட்டதை நான் விரும்பவில்லை. குழந்தை பற்றி மற்றவர்கள் பேசுவது தேவையற்றது. குழந்தை பெற்றுக்கொள்வது அவரவரின் சொந்த விஷயம். அதில் யாரும் தலையிடக்கூடாது. தயவு செய்து இனிமேல் பெண்களிடம் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள் என்று யாரும் கேட்க வேண்டாம்”.

    இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.
    சிறு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. இதில் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுகின்றனர். அந்த அணியை சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர், நேற்று மதுரையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஷால் கூறியதாவது-

    எங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி மதுரையில் உள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கேட்டுள்ளோம். அவர்களும் எங்களுக்கு வாக்களிப்பதாக கூறியுள்ளனர். நாங்கள் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்திருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம்.

    தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள், சிறிய அளவில் பணம் போட்டு படம் தயாரிப்பவர்களின் நலனுக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அதில் உள்ள நிர்வாகிகள் யாரையும் தொடர்பு கொள்ளமுடிவதில்லை. அவர்களின் முகவரிகள் பொய்யானதாக இருக்கிறது.

    பொது நலம் இல்லாமல் சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு வழிகளில் சங்கத்திற்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பொய் கணக்கு எழுதுகிறார்கள். இதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.



    கேபிள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் புதுப்படங்கள் வெளியிடப்படுகின்றன. இதுசம்பந்தமாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். ஒரு வருடமாக தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காக போராடுவோம். ஒரு படத்தை தயாரித்தவர்கள் மறுபடியும் படம் தயாரிக்க தயக்கம் காட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் அதுபோல் நடக்காமல் தயாரிப்பாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். அதுபோல், சமீப காலமாக சிறு முதலீடு கொண்ட படங்கள் வெளியிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. படம் வெளியிடப்படுவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கான வழிகாட்டுதல்களையும், தீர்வுகளையும் தயாரிப்பாளர்களுக்கு எடுத்துரைப்போம்.

    நடிகர் சங்க தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி விட்டோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் ஒருவாரத்தில் தொடங்கும். வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியும் அப்படியே செயல்படுவோம். சினிமாவிற்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில், “கடந்த சில வருடங்களான தரமான படங்களை வெளியிட முடிவதில்லை. இதனால் சிறிய அளவில் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வசதியாக புதிய அலை உருவாகி உள்ளது. இந்த அலை வெற்றி அலையாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. தமிழ் சினிமா அழகானதாக மாறப்போகிறது. தேர்தலில் வெற்றி பெற்று சுயநலத்தோடு செயல்படாமல் பொது நலத்தோடு செயல்படுவோம். நலிந்த, சிறு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். தயாரிப்பாளர்களை தலைநிமிர்ந்து நடக்க வைப்போம்“ என்றார்.
    தனுஷின் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில், நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான் என்று நிரூபித்தாலே போதும் என்று மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்களது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    தனுஷின் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில், நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான் என்று நிரூபித்தாலே போதும்  என்று மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்களது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.

    நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான் என்று நிரூபித்தாலே போதும் என்று மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய  மகன் தான் என்றும், வயதாகி விட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தனர்.



    ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை  ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன் நடிகர் தனுஷ் எனது  மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறி இருந்தார்.

    மேலும் எனது மகன் கலைச்செல்வன் தான் தற்போது தனுஷ் என்று பெயரை மாற்றி சினிமாவில் நடித்து வருகிறார் என்றும்  அவனது பள்ளிச்சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஐகோர்ட்டில் கதிரேசன் தாக்கல் செய்தார்.



    இதனிடையே தனுஷ் தரப்பிலும் பள்ளிச்சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த சான்றிதழில் அங்க அடையாளங்கள்  குறிப்பிடப்படவில்லை. எனவே நடிகர் தனுஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த  மாதம் 28-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அப்போது அவரது அங்க அடையாளங்களை மதுரை அரசு  ஆஸ்பத்திரி டீன் வைரமுத்துராஜா தலைமையிலான குழுவினர் சரி பார்த்தனர்.

    இதுதொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வருகிற 27-ந் தேதிக்கு  தள்ளிவைத்து நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.

    டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், நடிகர் தனுசின் அங்க அடையாளங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. வழக்கில்  குறிப்பிடப்பட்டுள்ளது போல அங்க அடையாளங்கள் உள்ளனவா? என்றும் இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா?  என்றும் சோதித்தோம்.

    ஆனால் சிறிய அளவிலான மச்சம் லேசர் சிகிச்சை மூலம் எந்த தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளை முழுமையாக ஆய்வு செய்து விரைவில் உத்தரவு  பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த நிலையில் கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் கூறியதாவது:-

    நாங்கள் பணம் காசுக்கு ஆசைப்பட்டு இந்த வழக்கை தொடரவில்லை. நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான். 16 வயதில் வீட்டை  விட்டு வெளியே சென்ற எங்கள் மகன் கலைச்செல்வன், சினிமாவில் தனுஷ் என்ற பெயரில் நடித்து புகழ் பெற்று இருக்கலாம்.  ஆனாலும் அவன் எனது தாய்-தந்தை இவர்கள் தான் என்று நீதிமன்றத்தில் சொன்னாலே போதும்.

    தனுஷ் எங்கள் மகன் என்று நிரூபிப்பதற்காகத் தான் போராடி வருகிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை  இருக்கிறது. தனுசின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் மறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் அறிக்கையில் கூட  தெரிவித்துள்ளார்கள். இதில் இருந்தே உண்மை வெளி உலகிற்கு தெரியவந்துவிட்டது.

    எனவேதான் எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்க மரபணு சோதனைக்கு கூட நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு  வயதாகிவிட்டது. இனி பணம் காசு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அது எங்களுக்கு தேவையில்லை. எங்கள்  மகன் தனுஷ் என்பதை விரைவில் நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    தமிழகத்தின் முன்னேற்றமே நமது முன்னேற்றம் என்று கூறி உள்ள இயக்குனர் தங்கர்பச்சான் இளைஞர்களுக்காக புதிய இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திரைப்பட இயக்குனரும், தமிழ் ஆர்வலருமான தங்கர் பச்சான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என் தமிழ் உணர்வுதான் என்னை எழுத்தாளனாகவும், சமூகப் போராளியாகவும் மாற்றி இருக்கிறது. என்னைப்பற்றியும், என் குடும்பத்தைப்பற்றியும் நினைப்பதைவிட எதிர்கால தமிழ் சமூகத்தைக் குறித்த அக்கறையும், கவலையுமே என்னை ஒவ்வொரு மணித்துளியும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

    நெடுங்காலமாகவே ஏதாவது ஒரு பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று என் மீது பற்றுள்ளவர்களும், அக்கறை கொண்டவர்களும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை என்று இதுவரை மறுத்து வந்தேன்.

    தற்போது உள்ள சூழ்நிலையைப் பார்த்தால் தமிழர்களின் வாழ்வை சூரையாடியவர்களின் எண்ணிக்கையை விடவும் சூரையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும். இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம் நாம் நம் வாக்கு உரிமையை சரியாக பயன்படுத்தத் தவறியதுதான்.

    வாக்குகளை விலைக்கு விற்காமல் சரியாக பயன்படுத்தி இருந்தால் எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருந்திருக்கும். திருடர்களிடமும், குற்றவாளிகளிடமும் நாட்டைக்கொடுத்துவிட்டு இப்படி நடுத்தெருவில் நின்று புலம்பி கொண்டிருக்க மாட்டோம். இப்படி கண்ணுக்கு எதிரே விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.



    படித்து முடித்து வேலை வேண்டி பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இருக்கின்ற 1¼ கோடி இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நம் சிக்கல்களையும், தேவைகளையும் தீர்த்து கொள்கிற ஆட்சியை நம் இளைஞர்களே உருவாக்கிவிட முடியும். அது அமைய வேண்டுமானால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியைத் தந்து நேர்மையானவர்களை அடையாளம் காண்பித்து குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு புரிய வைத்து புதிய அரசியலை உருவாக்க வேண்டியத் தேவை சமூகத்தைப்பற்றிய அக்கறை உடைய ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

    நாம் அனைவருமே இதை எல்லாம் உணர்ந்திருந்தாலும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இக்கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் இனியாவது இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஒன்றுபட்டு நம் மக்களுக்கு வாக்கு உரிமையின் வலிமையை உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    இனி ‘மக்கள் பணி’ என்பது தங்கர் பச்சான் எனும் தனிப்பட்ட பெயர் கொண்டு இல்லாமல் ஒரு இயக்கத்தின் பெயர் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கான பணியில் உங்களுடன் நாங்களும் இணைந்து கொள்கிறோம் என என் மீது பற்றுள்ள பற்றாளர்களும், இளைஞர்களும் வற்புறுத்துகிறார்கள். அதன் அவசியத்தை நான் புரிந்து கொண்டதன் காரணமாக அதற்கான இசைவை இப்போது அளித்திருக்கிறேன்.

    இந்த இயக்கம், இளைஞர்களாகிய உங்களுக்கானது. இதனை உருவாக்கி உங்களிடமே கொடுத்து விட்டு உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட விரும்புகிறேன். அந்த இயக்கத்திற்கான பெயரை நான் தேர்வு செய்வதைவிட மாணவர்களாகிய, இளைஞர்களாகிய, நம் குடிமக்களாகிய நீங்கள் தேர்வு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

    முக்கியமாக, பொருளட்ட வேண்டி எல்லைகளைக் கடந்தும், கடல் கடந்தும் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு தமிழ் நிலத்தையும், இம்மக்களையும் பற்றி அக்கறையும், கவலையும் கொண்டிருக்கின்ற நம் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் இணைந்து வழி நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன். அரசியலை வியாபாரமாக கொண்டவர்களை அகற்றுவோம்.

    மக்கள் பணியே என்றும் நமது முதன்மைப்பணி. தமிழகத்தின் முன்னேற்றமே நமது முன்னேற்றம்.

    இவ்வாறு இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
    சிரிப்பு போலீசில் இருந்து சீரியஸ் போலீசாக மாறியுள்ளதாக நடிகர் காளி வெங்கட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் தனக்குரிய தனித்துவமான நகைச்சுவை மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் காளி வெங்கட்.  கடைசியாக அவர் நடிப்பில் வெளியான `எனக்கு வாய்த்த அடிமைகள்', `கட்டப்பாவ காணோம்' படத்திலும் அவரது காமெடிகள்  ரசிகர்களை கவரும்படி இருந்தது.

    இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `முண்டாசுப்பட்டி'. விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா,  காளி வெங்கட், முனீஷ்காந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.



    இந்நிலையில், `முண்டாசுப்பட்டி' போன்ற கதைக்களத்தில், போலீஸ் அதிகாரியாக காளி வெங்கட் நடிப்பதாக தகவல்கள்  வெளியானது. இந்த தகவல்கள் குறித்து நடிகர் காளி வெங்கட் கூறியதாவது,

    முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் இணைந்த இயக்குநர் ராம், விஷ்ணு, முனிஸ்காந்த் உடன் தான் மீண்டும் இணைந்து புதிய  படத்தில் நடித்து வருவதாக கூறினார். ஆனால் இப்படம் `முண்டாசுப்பட்டி' கதைக்களம் போன்று இல்லாமல் முற்றிலும்  மாறுபட்டதாக இருக்கும். இதற்கு முன்பு தான் காமெடி போலீசாக நடித்திருந்தேன். ஆனால் இப்படத்தில் ஒரு சீரியசான, அதிரடி  போலீஸ் அதிகாரியாக வருவதாக கூறினார். மேலும் முனிஸ்காந்தும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெறுங்கி உள்ளதாகவும், இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பாக்டரி  நிறுவனம் தயாரித்து வருவதாகவும் கூறினார்.
    இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையிலான பாடல் காப்புரிமை பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் என்று நம்புவதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
    இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் ஏற்பட்டுள்ள பாடல் காப்புரிமை மோதல் பட உலகை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இளையராஜா அனுப்பி உள்ள வக்கீல் நோட்டீசால் மேடை கச்சேரிகளில் அவரது இசையில் பாடிய பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தால் இனிமேல் பாட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இது சம்பந்தமான கருத்து விவாதங்கள் அனல் பறக்கிறது.

    இளையராஜா தரப்பில் அவரது ஆலோசகர் இது குறித்து கூறும்போது, “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பியது வழக்கமான நடைமுறைதான். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.



    சாதாரண மேடை கச்சேரி நடத்துபவர்களிடம் ‘ராயல்டி’ செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது இல்லை. வணிக ரீதியாக பாடல்களை மேடைகளில் பாடி சம்பாதிப்பவர்களிடம் மட்டுமே ராயல்டி செலுத்த வேண்டும் என்று கோருகிறோம். இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் அவருக்கு சட்ட ரீதியாக வரவேண்டிய ராயல்டியை வழங்க வேண்டும்” என்றார்.

    இந்த நிலையில் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதல் குறித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

    “இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே பாடல் காப்புரிமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த பிரச்சினை விரைவில் நல்ல முறையில் சுமுகமாக தீர்க்கப்பட்டு விடும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
    பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம் என்ற பெயரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்பட கல்வி நிலையம் ஒன்றை துவங்க உள்ளார். அதன் சிறப்பம்சங்களை கீழே பார்ப்போம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை  வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலை புகுத்தி  தன்னுடைய படைப்புகளினால் தமிழ் சினிமாவிற்கு புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

    பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கார்த்திக், ராதா, ரேவதி, கவுண்டமனி, ஜனகராஜ், காஜல் அகர்வால், பிரியா மணி, நெப்போலியன்,  ரஞ்சிதா, மணிவன்னன், மனோபாலா, என்.வி.நிர்மல் குமார், சித்ரா லக்ஷ்மணன் என்று இவரிடம் திரைத்துறையை கற்று  வந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை கூறிக்கொண்டே போகலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன்,  நடிகை ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்று  சொன்னால் மிகையாகாது.



    திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுக்க "பாரதிராஜாவின் உலகளாவிய  திரைப்பட பயிற்சி நிலையம்" எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்கவுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

    நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் & ஒருங்கிணைப்பு, ஒலி வடிவமைப்பு, எடிட்டிங் & தொல்லியல், ஸ்டண்ட் இயக்கம், நடன அமைப்பு, உற்பத்தி வடிவமைப்புகள் (கலை) உள்ளிட்ட ஒன்பது கலைகளின் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.



    இந்நிறுவனத்தின் கௌரவ ஆலேசகர்களாக திரு.முத்துக்குமார், துணை வேந்தர் (பாரதிதாசன் யூனிவர்சிட்டி), இயக்குனர்  மகேந்திரன், இயக்குனர் மணிரத்னம், இயக்குனர் ப்ரியதர்ஷன், இயக்குனர் ராஜீவ்மேனன் கவிஞர் வைரமுத்து, கங்கை அமரன்,  நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இன்றைய தலைமுறையின் முன்னோடிகளாய் விளங்கும் இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள்  அனுபவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இளைய தலைமுறைக்கு திரைக்கலையை சிறந்த முறையில் பயிற்சி  அளிக்க உள்ளனர்.
    ×