என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் உருவாகி இருக்கும் `பாகுபலி 2' ரிலீசிலும் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளது. அந்த சாதனை குறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று `பாகுபலி 2'. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான `பாகுபலி'   படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ள `பாகுபலி 2' வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

    பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்திய அளவில் அதிக  பார்வையாளர்கள் பார்த்த டிரெய்லர் என்ற சாதனை படைத்துள்ளது.



    தெலுங்கில் மட்டும் இதுவரை 33 லட்சம் பார்வையாளர்களும், இந்தியில் 30 லட்சம் பார்வையார்களும் டிரெய்லரை  கண்டுகளித்துள்ளனர். இந்தியில் டப்பிங் செய்யப்படும் ஒரு படத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது இதுவே முதல்முறை  என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 5 லட்சம் பேரும், மலையாளத்தில் 1 லட்சம் பேரும் பாகுபலி 2 டிரெய்லரை  பார்த்துள்ளனர்.

    ரிலீசுக்கு முன்பே ரூ.500 கோடி விலைபோன, இப்படத்தின் இந்தி சாட்லைட் உரிமையை சோனி குழுமம் கைப்பற்றியுள்ளது.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமையை ஸ்டார் குழுமம் வாங்கியுள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளது.



    இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜாராஜன் வாங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு,  இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி  புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 1750 திரையரங்குகளில் ரிலீசாக உள்ள பாகுபலி 2,  அமெரிக்காவில் மட்டும் 750 திரைகளில் வெளியாகிறது.

    தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் வீடியோ வடிவில் வருவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
    தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முன்னேற்ற அணிக்கு கலைப்புலி தாணு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த அணியின் பிரச்சார கூட்டத்தில் தாணு பேசியதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது. அதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.

    இந்த விழாவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும், ஆர்.ராதாகிருஷ்ணன், கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர் கே.சதீஸ்குமார், மற்றும் டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், கலைப்புலி எஸ்.தாணு, சுரேஷ் காமாட்சி மற்றும் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.



    அப்போது, கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, "இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன். தம்பி டி.சிவாவை முரளிதரன் முன்மொழிந்தபோது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம், அகங்காரம், கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.

    தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார். 2012-ல் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்றபோது ஒரு கோடி ரூபாய்  நான் உதவி செய்தேன். 'பாயும்புலி' பட சிக்கல் வந்தபோது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?



    ஒருமுறை 50 லட்ச ரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார். சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு, நாவடக்கம் தேவை. தம்பி விஷால் ‘மதகஜராஜா’ ரூ. 30 கோடி பிரச்சினையில் உள்ளது. நீ என்ன புரட்சி செய்தாய்? புரட்சி தளபதி என்கிறாயே.. உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26-ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.

    ஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார், கொம்பன்' படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா? பிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா? உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்? இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா?''

    இவ்வாறு அவர் பேசினார். 
    இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலிருந்து அடுத்த பாடலை படக்குழு வெளியிட உள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்போம்.
    இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'.  கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள  இப்படத்தில் நடிகர் ராணா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    ஜோமான் டி.ஜான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.



    முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியாகிய "மறுவார்த்தை பேசாதே" என்ற பாடல் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலும் வெளியாக உள்ளது. "நான் பிழைப்பேனோ" என்ற  வரிகளில் தொடங்கும் இப்பாடலை வருகிற 25-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

    இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குநர் கவுதம் மேனன் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். எனினும் `கிடாரி'  படத்திற்கு இசையமைத்த தர்புகி சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    தொழில் தெரியாத இயக்குனர் உள்ளிட்டோரை வைத்து தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்க கூடாது என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    “தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவையும் தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழாவையும் விரைவில் கொண்டாட இருக்கிறோம். இந்த விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். முன்பெல்லாம் வெற்றி படங்கள் தோல்வி படங்கள் என்று இருந்த சினிமாவில் இப்போது குப்பை படங்கள் அதிகம் வருவதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளது.

    திரைப்பட துறையில் அனுபவம் இல்லாதவர்களும் தொழில் தெரியாதவர்களும் படங்கள் எடுப்பதால்தான் இதுபோன்ற ஒழுங்கீனங்கள் ஏற்பட்டு குப்பை படங்கள் வருகின்றன. சம்பளம் வேண்டாம் என்று சொல்லும் திரைப்பட தொழிலாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்களை வைத்து படங்கள் எடுப்பதாலேயே இந்த தவறுகள் நடக்கின்றன.

    இனிமேல் தொழில் தெரியாதவர்களை வைத்து படங்கள் தயாரிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். பெப்சியில் டைரக்டர் சங்கம் உள்பட 23 திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளன. டைரக்டர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத இயக்குனர்கள் எடுத்த 25 படங்கள் சமீப காலங்களில் வெளியாகி இருக்கிறது.



    ஏப்ரல் 15-ந்தேதி முதல் பெப்சியில் உறுப்பினராக இருக்கிறவர்கள் எடுக்கும் படங்களில் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் குப்பை படங்கள் வரத்து தவிர்க்கப்படும்.

    தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் தமிழ் நாட்டில்தான் நடத்தப்பட வேண்டும். அரசு இங்கு படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தமிழ் படங்களில் நடிக்கும் மும்பை கதாநாயகிகள் உதவிக்கு 5 பேரை தங்களுடன் அழைத்து வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு ஆகிறது. இங்குள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கிறது.

    இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் ஒப்பனை உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ் திரைப்பட தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். பெப்சியில் இருக்கும் சங்கங்கள் கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து பணத்தை விரயம் செய்யாது. தயாரிப்பாளர்களிடம் இணக்கமாக செயல்படுவோம். பையனூரில் அரசு ஒதுக்கிய இடத்தில் விரைவில் திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டப்படும்.

    இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.

    பேட்டியின்போது பெப்சி பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர்கள் ஸ்ரீதர், ஸ்ரீபிரியா, இணை செயலாளர்கள் தனபால், ராஜா, சபரிகிரிசன், செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
    நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணி, சீமான், சமத்துவ மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், பாஜக அணி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, ஆசி பெற்றார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய கங்கை அமரன், ரஜினிகாந்த் தன்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன் என்றும் கூறினார்.



    இதையடுத்து, ரஜினிகாந்த் பாஜக-வை ஆதரிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், வரும் தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
    ‘டோரா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கில் தயாரிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை நயன்தாரா, நடிகர் தம்பிராமையா நடித்துள்ள ‘டோரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை, திரைக்கதை தனக்கு சொந்தமானது என கூறி சினிமா இணை இயக்குனர் நாடிமுத்து என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், ‘2013-ம் ஆண்டு ‘நீயும் நானும்’ என்ற தலைப்பில் கதை, திரைக்கதை எழுதியிருந்தேன். அதை படமாக எடுப்பதாக கூறிய தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், என் கதையை வாங்கி படித்து விட்டு மறுநாள் திருப்பித்தந்தார்.



    பின்னர், என் கதையின் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, ‘டோரா’ என்ற பெயரில் என் கதையை திரைப்படமாக தயாரித்துள்ளார். இந்த படத்தை வெளியிட அனுமதித்தால் அது எனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சாந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ நாளை (24-ந் தேதி) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்து வரும் `வேலைக்காரன்' படத்தின் அடுத்த கட்ட படப்படிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனை கீழே விரிவாக பார்ப்போம்.
    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.  தற்போது இவர் மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை  மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

    சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம், சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் சேரி  போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் எடுத்து  முடித்துவிட்டதால், மீதி காட்சிகளும் படமாக்கப்பட்ட பின்னர், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் 35 நாட்கள்  நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



    மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி,  ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  வருகின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.  அதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்திக்கு (ஆகஸ்ட் 25) படம் வெளியாக உள்ளது.
    நடிகர் ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா? என்ற கேள்விக்கு நல்ல முடிவு வரும் என ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தண்டையார்பேட்டையில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ரஜினிகாந்த் சந்திப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- பா.ஜனதா வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டதும் எனக்கு செல்போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரிடம் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அதன்படி நேற்று முன்தினம் அவரை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    கேள்வி:- பா.ஜனதாவில் ரஜினிகாந்த் சேர வேண்டும் என்று அழைப்புகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அது பற்றி பேசினாரா?

    பதில்:- நீங்கள் பார்ப்பது ‘டிரெய்லர்’ தான். ‘மெயின் பிக்சர்’ தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்.

    கேள்வி:- இதை எப்படி எடுத்துக்கொள்வது?

    பதில்:- அவர் நேரடியாக தெரிவிப்பது.

    கேள்வி:- சினிமாத்துறையில் இருந்து உங்களை ஆதரித்து யாரும் பிரசாரம் செய்வார்களா?

    பதில்:- இப்போதே சொன்னால் ஆர்வம் குறைந்துவிடும். நிறையபேர் பிரசாரம் செய்ய வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    `பவர்பாண்டி' படத்தின் ஆன்மாவே ஷான் ரோல்டனின் இசைதான் என்று நடிகரும், இயக்குநருமான தனுஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் `பவர்பாண்டி'. `ப. பாண்டி' என்று பெயர் மாற்றம்  செய்யப்பட்டுள்ள இப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை  ரேவதி, பிரசன்னா, சாயா சிங், செண்ட்ராயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

    நேற்று இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அதில் இப்படத்தின் இயக்குநர் தனுஷ்  கூறியதாவது,



    உலகத்தில் நம் வாழ்க்கையில் அன்பு, நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இதில்  பாஸிட்டிவ் விஷயங்கள் அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வது தான் இந்த ப.பாண்டி திரைப்படம்.

    இயக்குனர் பாலுமகேந்திரா எப்போதும் ஒரு விஷயத்தை நம்புவார். அதாவது, ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை  தானே எடுத்துக் கொள்ளும், அப்படி எடுத்துக் கொள்ளாத படங்கள் தான் தோல்வியை சந்திக்கின்றன என்று அவர் கூறுவார்.



    அந்தவகையில், `ப.பாண்டி' தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக்கொண்டது. இவ்வாறகவே  இப்படத்தின் பவர்பாண்டியும் (ராஜ்கிரண்) எங்களுக்கு கிடைத்தார் என்றார்.

    மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றி தனுஷ் கூறும்போது, இப்படத்தின் ஆன்மாமே ஷான் ரோல்டனின் இசைதான்,  எனது எண்ணமும் அவரது எண்ணமும் ஒரே திசையில் பயணித்ததே இப்படத்தின் இசை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.  என்று கூறினார்.
    `புலி' படத்தை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி `மாம்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். மூன்று மொழிகளில் தயாராகி வரும் இப்படம் ஜுலையில் வெளியாக உள்ளது.
    தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட்  தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஒய்வு  கொடுத்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களில் நடித்தார். இப்போது ஸ்ரீதேவி ‘மாம்’ (அம்மா) என்ற  படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.  அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்‌ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.

    ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘மாம்’ படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி,  குஷி ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வரும் ஜூலை மாதம் 14ம் தேதி  உலகமெங்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிடுகின்றது.
    திமுக எம்.எல்.ஏ ஜே.அன்பழகனை சந்தித்த நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தனது அணிக்கு ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிற ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டி.சிவா, கேயார், விஷால்  உள்ளிட்ட 5 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது வேட்பாளர்களையும், தேர்தல்  அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். தயாரிப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று 5 அணியினரும்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு தயாரிப்பாளர்களின் வீட்டுக்கும் சென்று தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து ஓட்டு கேட்டு  வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஷால் சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வான ஜே.அன்பழகனை  சந்தித்து பேசியுள்ளார். கடந்த வாரம் ஜே.அன்பழகனை சந்தித்த விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தனது அணிக்கு  ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.



    மேலும் விஷால் அணியின் சார்பாக இயக்குநர் மிஷ்கின், பாண்டிராஜ், பிரபு, பிரகாஷ்ராஜ், கே.இ.ஞானவேல்ராஜா உள்ளிட்டோர்  நேற்று மதுரையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    விஷால் தலைமையிலான அணிக்கு ‘நம்ம அணியினர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்.
    சென்னை:

    இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்.

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

    இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார்.

    இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்சியில் கலந்து கொள்கின்றனர். ‘2.0’ படம் வெளிவரும் போது ஏதேனும் எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
    ×