என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    `தானா சேர்ந்த கூட்டம்' படப்பிடிப்பின் போது, நடிகர் செந்தில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி படக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
     'எஸ் 3' படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து  வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

    பிரபல காமெடி நடிகர் செந்தில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார். இதில் சிறப்பு என்னவென்றால்,  நேற்றுடன் தனது 66வது வயதை பூர்த்தி செய்யும் செந்திலின் பிறந்தநாளை  கொண்டாடும் விதமாக, படப்பிடிப்பின் போது, `தானா  சேர்ந்த கூட்டம்' படக்குழுவினர் கேக் வெட்டி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.



    அதிலும், அந்த கேக் அவரது பிரபல வாழைப் பழ காமெடியை நினைகூரும் விதமாக, இரு வாழைப் பழங்கள் இருப்பது போன்ற  தோற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஆர்.கே.-நீது சந்திரா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர் எம்.பி.சுமனின் மச்சினிச்சி, மற்றொருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா.

    மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் குத்துயிரும் கொலையிருமாக கிடக்கிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே.வை நியமிக்கிறார் எம்.பி.சுமன். அவர் அதே பெட்டியில் பயணம் செய்யும் தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்படுகிறார். ஆனால், அவர் இந்த கொலையை செய்யவில்லை என்பது தெரிந்ததும், அந்த கூபேயில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் மீது தனது சந்தேக பார்வையை செலுத்துகிறார் ஆர்.கே.



    இந்த கொலைக்கான விசாரணையை வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கிறது. இறுதியில், அந்த குற்றவாளி யார்? அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது? என்பதை எதிர்பாராத கிளைமாக்சுடன் கொண்டு போய் முடித்திருக்கிறார்கள்.

    ஆர்.கே. துணிச்சலான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கொலையின் காரணங்களுக்கான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போதும், குற்றவாளிகளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் வேளையிலும் நமக்குள்ளே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல், எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளிலும் இவரது ஆக்ஷன் பலே சொல்ல வைக்கிறது.



    இரட்டை வேடங்களில் வரும் நீது சந்திரா, தனது வித்தியாசமான நடிப்பால் இரண்டையும் வேறுபடுத்தி காட்டியுள்ளார். அவரை சுற்றியுள்ள மர்மங்கள் விலகும் கிளைமாக்ஸ் காட்சி நமக்கே மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கிறது. ஆர்.கே.வுடன் படம் முழுக்க வலம் வரும் மற்றொரு போலீஸ் அதிகாரியான நாசர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு.

    எம்.பியாக வரும் சுமன், நடிகையாக வரும் இனியா, ரயில்வே போலீசாக வரும் ஜான் விஜய், டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்களாக வரும் சுஜா வருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, கதாசிரியராக வரும் மனோபாலா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சமமான பங்களிப்பு கொடுத்துருப்பது படத்திற்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது.



    ஒரு ரெயிலில் நடக்கும் கொலை, அதை தொடர்ந்து நடைபெறும் விசாரணை என ஆரம்பத்தில் எடுக்கும் வேகம், கடைசிவரை குறையாமலேயே சென்றுள்ளது. இந்த கதை தமிழ் சினிமாவுக்கு புதிது. இந்த கதையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள்தான் படத்தின் முக்கிய சிறப்பம்சமே. இரண்டேகால் மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரில்லிங்கான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.

    சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும் பாராட்டப்பட வேண்டியது. ரயிலில் நடக்கும் ஒரு கதையை இவரது கேமரா படத்தின் வேகம் குறையாமல் விறுவிறுப்பாக நகர உதவியிருக்கிறது. அதேபோல், தமனின் பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது. அதேபோல், வசனங்களும் படத்திற்கு முதுகெலும்பாய் அமைந்துள்ளது.

    மொத்தத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ வேகம்.
    விஜய்மில்டன் இயக்கத்தில் பரத் - ராஜகுமாரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘கடுகு’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமமான தரங்கம்பாடியில் கவுன்சிலராக இருந்து வருகிறார் நாயகன் பரத். இவர் அந்த கிராமத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர். இதனால், அந்த ஊரில் இவருக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. இந்நிலையில், அதேஊருக்கு மாற்றலாகி வரும் இன்ஸ்பெக்டரான வெங்கடேஷ், கூடவே தனக்கு சமையல்காரராக ராஜகுமாரானையும் அழைத்து வருகிறார்.

    வந்த இடத்தில் டீச்சரான ராதிகா பிரசித்தாவுக்கும் ராஜகுமாரனுக்கும் நட்பு உருவாகிறது. ராதிகா பிரசித்தா உடன் இருக்கும் சிறுமியிடம் ராஜகுமாரன் ரொம்பவும் அன்புடன் இருக்கிறார். இந்நிலையில், அந்த தொகுதிக்கு அமைச்சர் ஒருவர் வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் பரத். அடுத்ததாக அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவிக்கு அந்த அமைச்சர்தான் பரத்தை பரிந்துரைக்கிறார்.



    ஊருக்கு வரும் அமைச்சர் பள்ளியில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். அப்போது பள்ளி மாணவியான கீரித்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். இதை பார்க்கும் பரத், அவரால்தான் தனக்கு எம்.எல்.ஏ.பதவி கிடைக்கவிருக்கிறது என்பதால் அதை கண்டும் காணாததுமாக சென்றுவிடுகிறார். ஆனால், பிரசித்தாவோ அமைச்சரிடமிருந்து அந்த மாணவியை காப்பாற்றுகிறாள்.

    இந்த விஷயம் பிரசித்தா மூலமாக ராஜகுமாரனுக்கு தெரிய வருகிறது. எந்தவிதத்திலும் அந்த பெண்ணுக்கு நீதி தேடிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் ராஜகுமாரன் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைக்கு அந்த அமைச்சரை எப்படி தண்டித்தார்? இதில் ராதிகா பிரசித்தா, பரத்தின் பங்கு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் பரத் படம் முழுக்க மிடுக்கான தோற்றத்துடன் ஒரு பெரிய மனிதர்போல் படம் முழுக்க அழகாக வலம் வந்திருக்கிறார். இவருடைய கெட்டப் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இளம் அரசியல்வாதி போன்ற தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முதல் பாதியில் வில்லத்தனம் கலந்ததுபோலவும், இரண்டாம் பாதியில் நல்லவனாகவும் தனது நடிப்பில் மாற்றம் கொடுத்து நடித்திருப்பது சிறப்பு.

    ராஜகுமாரனின் நடிப்புதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதுவரையிலான படங்களில் அவரை காமெடிக்காக பயன்படுத்தியவர்கள், இந்த படத்தில் விஜய் மில்டன் அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அப்பாவியான தோற்றத்துடன் வலம்வரும் இவரது நடிப்பு அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதேபோல், நடிப்பு என்று தெரியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை பதிவு செய்து கைதட்டல் பெறுகிறார்.



    ராதிகா பிரசித்தா, ஏற்கெனவே குற்றம் கடிதல் படத்தில் டீச்சராக வந்து தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இந்த படத்திலும் அவரது நடிப்பு ஒருபடி மேலே இருக்கிறது. தனது சொந்த கதையை சொல்லி அழும் காட்சிகளில் எல்லாம் அவர்மீது நமக்கும் இரக்கம் வருகிறது.

    பள்ளி மாணவியாக வரும் கீர்த்தி, மற்றும் அவளுக்கு அம்மாவாக நடித்தவரும், போலீஸ் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அமைச்சராக வரும் தயா வெங்கட்டும் காமம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.



    அரசியல் அதிகாரத்தின் மூலமாக சாமான்ய மக்களுக்கு நேரும் துயரங்களை தட்டிக்கேட்க துடிக்கும் எவருக்கும், நியாயமான தீர்வு கிடைத்ததே கிடையாது. அதேநேரத்தில், எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லையெனில் ஒரு சாமான்யனின் கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

    சமீபகாலமாக சமூகத்தில் நிலவி வரும் பாலியல் சீண்டல்கள் எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்தாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் இந்தக் கொடூரங்கள் கொஞ்சமேனும் குறையும் என்பதை வலியுறுத்தும் படமாக இது அமைந்துள்ளது.



    படம் முழுவதும் ரொம்பவும் சீரியஸாக செல்லாமல் ஆங்காங்கே நகைச்சுவையும் கொடுத்து ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதுபோல் இவரது வசனங்களும் அமைந்திருப்பது சிறப்பு. புளூபிலிம்ல நடிக்கிற நடிகைகளை தேடிப்பிடித்து ஆட்டோகிராப் வாங்குறீங்க. ஆனால் உங்க பக்கத்து வீட்ல இருக்குற தப்பே செய்யாத பெண்ணை பார்த்து தப்பா பேசுறீங்களே..? என்னதாண்டா உங்க பிரச்சினை…? என்று ராஜகுமாரன் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது என்பதுதான் உண்மை.



    அதேபோல், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. கதை நடக்கும் கிராமத்தின் அழகை அவர் பதிவாக்கியிருக்கும் விதமும், ஒருசில காட்சிகளில் அவர் வைத்திருக்கும் கேமரா கோணமும் பார்ப்பவர்களை கதையோடு ஒன்றி பயணிக்க உதவியிருக்கிறது. சுப்ரீம் சுந்தரின் சண்டை காட்சிகளில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அருமையாக இருக்கிறது. அருணகிரியின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள்எதான் என்றாலும் அவை இரண்டும் முத்தானவை. முழுமையாக கேட்கும் அளவுக்கு இனிமையாக இருக்கிறது. கதையோடு ஒட்டியே பாடல்களும் நகர்வதால் ரசிக்கவே முடிகிறது. பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவு அமைத்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘கடுகு’ அவசியம் பார்க்கவேண்டிய படம்.
    ரூ.90 கோடி மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பட அதிபர் மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக மாணவ-மாணவிகளிடம் ரூ.90 கோடி மோசடி நடந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதியன்று படஅதிபர் மதன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் படஅதிபர் மதன் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை ஆனார்.

    நேற்று அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி அவர் கையெழுத்து போட்டார். கமிஷனர் அலுவலகத்தின் பின்பக்க வாசல் வழியாக வந்து கையெழுத்து போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
    சுயநலத்துக்காக நான் எதையும் செய்யமாட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. அவர்கள் புதுச்சேரி வந்து ஆதரவு திரட்டினார்கள். அதைத்தொடர்ந்து நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை, கடலூர், சிதம்பரம் பகுதிகளில் உள்ள தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளோம். தயாரிப்பாளர் சங்கத்தில் 1,212 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சினிமா தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத்தை எப்படி எடுப்பது? கேள்வி எழுந்துள்ளது.

    முதலீட்டை எடுக்க படத்துக்கு பூஜை போடுவது முதல் இறுதிவரை நாங்கள் தயாரிப்பாளருக்கு உறுதுணையாக இருப்போம். அதேபோல் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உரிய சலுகைகளையும் வழங்குவோம். சினிமாத்துறையில் வருமானம் இருந்தும் அது தயாரிப்பாளருக்கு கிடைப்பதில்லை. இந்த தேர்தலில் நாங்கள் ஜெயிப்பது உறுதி. அதன்பின் மாற்றங்கள் நடக்கும்.

    எங்களது வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரு வருடத்தில் நிறைவேற்றுவோம். இதற்காக அனைத்து தயாரிப்பாளர்களுடனும் கைகோர்த்து செயல்படுவோம். எங்கள் குடும்பம் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும். கடந்த 4, 5 நாட்களாக நிறைய காமெடிகள் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிலர் கூறும் நிலை இப்போது வந்துள்ளது.



    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றதும் நலிந்த தயாரிப்பாளர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தருவோம். திருமண உதவித்தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்துவோம். தயாரிப்பாளர்களுக்கான வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

    தயாரிப்பாளர் சங்க தலைவராக என்னை தேர்வு செய்தால் சுயநலத்துக்காக நான் எதையும் செய்யமாட்டேன். நாங்கள் நடிகர் சங்க பொறுப்புக்கு வந்தபின்தான் கடன்களை அடைத்து ரூ.9 கோடி இருப்பு வைத்துள்ளோம். விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம்.

    சினிமா நடிகைகளுக்கான பாலியல் துன்புறுத்தலை அவர்கள் துணிச்சலாக வெளியில் சொல்வதால் பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. தங்களுக்கு நேர்ந்த துன்புறுத்துவதை வெளிப்படையாக சொல்வதால்தான் அதற்கு தீர்வு காணப்படுகிறது. பாதிக்கப்படுவோர் எந்த துறையாக இருந்தாலும் நாம் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

    இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.
    "பாசமலர்'' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "வாராய் என் தோழி வாராயோ...'' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.
    "பாசமலர்'' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "வாராய் என் தோழி வாராயோ...'' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

    அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த "பாசமலர்'' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.

    மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், "வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ'' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

    இந்தப்பாடல் பெரிய "ஹிட்'' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

    அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, "பாசமலர்'' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.

    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "பணமா பாசமா'' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.

    அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்'' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

    டைரக்டர் ஸ்ரீதர், "சிவந்த மண்'' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.

    அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.

    "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்'' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த "ஹம்மிங்'', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

    அந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகிகளில் பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு இணையாக உயர்ந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஓய்வு இன்றி நிறைய படங்களில் பாடினார்.

    அவர் பாடிய மிகப்புகழ் பெற்ற பாடல்களில் சில:

    "காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன்.''

    "ஆடவரலாம் ஆடவர் எல்லாம் ஆடவரலாம் ஆடவரலாம்.''

    "கண்களும் காவடி சிந்தாகட்டும், காளையர் நெஞ்சை பந்தாடட்டும்.''

    "அம்மம்மா கேளடி தோழி ஆயிரம் சேதி.''

    "துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை.''

    "குடிமகனே பெரும் குடிமகனே.''

    "பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணி மண்டபம்.''

    - இப்படி எண்ணற்றப் பாடல்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழுக்கு புகழ் சேர்த்தன. லட்சக்கணக்கான ரசிகர்களை தேடித்தந்தன.

    எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

    "கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு "கலைமாமணி'' விருது கொடுத்து கவுரவித்தது.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், "நந்தி விருது'' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் "வெண்ணிற ஆடை.'' அதில் அவர் பாடும் முதல் பாடலான "நீ என்பதென்ன... நான் என்பதென்ன...'' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

    கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.

    எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.

    எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

    இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.''

    இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.

    "உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராடி புகழின் உச்சிக்கு வந்த நீங்கள், அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக் கொள்ளாதது ஏன்?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறியதாவது:-

    "வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த எனது குடும்பத்தை முன்னேறச் செய்யவும், எனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் எனது கவனம் முழுவதும் இருந்ததால், எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.

    எனது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் என் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்'' என்று கூறினார், எல்.ஆர்.ஈஸ்வரி.
    நடிகை ஒரு தனது பேராசையால் மார்க்கெட்டை இழந்துபோயுள்ளார். அந்த நடிகை யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    கண்மணி நாயகிக்கு சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின் என்ற ரேஞ்சுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஏன் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை என்று விசாரிக்கையில் நடிகை அதிக சம்பளம் கேட்பதால்தான் அவருக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்.

    ஆனால், உண்மையில் விசாரிக்கையில் அந்த நடிகைக்கு இயக்குனராக வேண்டும் என்று நீண்டநாள் ஆசை உள்ளதாம். இப்போதைக்கு எந்த படத்திலாவது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும்போது, இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக அந்த படத்தை விட்டு போகமுடியாது.



    அந்த நேரத்தில் தனது கனவும் பாழாய் போய்விடும் என்பதாலேயே, இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மட்டும் நடித்துவிட்டு போய்விடுகிறாராம். இப்படி நடிக்கும்போது, ஒருசில காட்சிகளுக்காக சில நாட்கள் மட்டும் ஒதுக்கினாலே போதுமானது. மற்ற நாட்களில் இயக்குனராவதற்கான முயற்சியில் இறங்கலாம் என்ற எண்ணத்துடன்தான் நடிகை இந்த மாதிரி வருகிற வாய்ப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து வருகிறாராம்.

    ஆனால், இதுவரைக்கும் நடிகைக்கு யாரும் இயக்குனர் வாய்ப்பை வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது. இயக்குனர் ஆசையால் நடிக்க வரும் வாய்ப்பையும் இழந்து, ஒருகட்டத்தில் நடிகை சினிமாவை விட்டே ஓடிப் போகப்போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

    சிம்பு நிஜத்தில் மாமாவாகியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் சிம்பு அஸ்வின் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். திரையில் தாத்தாவாக நடிக்கும் சிம்பு, நிஜத்தில் மாமாவாகியுள்ளார்.

    சிம்புவின் தங்கையான இலக்கியாவுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கர்ப்பமாக இருந்த இலக்கியா நேற்று சென்னை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.



    தனக்கு மருமகன் பிறந்த சந்தோஷத்தில் தனது அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோருடன் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார் சிம்பு. தாயும், சேயும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இலக்கியா வீடு திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

    பெண்களுக்கு முக்கியத்துவம் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் தொடங்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களையும் விரைவில் வெளியிடவுள்ளனர்.



    ஏற்கெனவே ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசர், சிங்கிள், புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. படத்தின் வெளியீட்டையும் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்க்கிறார்கள். 
    குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட நடிகை கேத்தரின் தெரசா ரூ.65 லட்சம் வாங்கியுள்ளார். அது என்ன படம், யாருடன் என்பதை கீழே பார்ப்போம்.
    `மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள  ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்' படத்திலும், தெலுங்கில்  `நேனே ராஜு நேனே மந்த்ரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

    பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் புதிய படத்தில்  அவருக்கு  ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.



    அதேபோல் பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், ஸ்ரீனிவாஸ் நடிக்கும் பெயரிப்படாத படத்தில் குத்துப்பாட்டுக்கு ஒன்றுக்கு கேத்தரின்  தெரசா நடனமாடுகிறார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் கேத்தரின் தெரசாவின் சம்பளம் ரூ.65 லட்சம் என்று கூறப்படுகிறது. இது  தெலுங்கு பட உலகினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
    தன்னை பாதிக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பதாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் நாயகன் ஆர்.கே. உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ஆர்.கே. நடிப்பில் வெளிவந்த ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக் காப்பாற்றவில்லை. படத்தின் அனல் பறக்கும் வசனங்களும் ஆர்கேவின் அதிரடி சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது.

    இப்போது அதே ஆர்கே - ஷாஜி கைலாஷ் கூட்டணியில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் ரிலீஸ் ஆகிறது. முந்தைய படத்தைவிட இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் ஆர்கே. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இந்த கதையே ஒரு ரயிலில் நடப்பது போல் அமைந்துள்ளது. படம் ஆரம்பித்த உடனேயே வேகமெடுக்கும். அந்த வேகம் இறுதிக்காட்சியில் ரசிகர்களை சீட்டு நுனிக்கே கொண்டுவிடும். 'எல்லாம் அவன் செயலை' விட பத்து மடங்கு விறுவிறுப்பைப் படத்தில் அனுபவிக்கலாம்.



    எனக்கு சினிமா என்பது பேஷன். பணத்துக்காக நடிக்கவோ படம் எடுக்கவோ வரவில்லை. சினிமா மீதான காதல் மட்டுமே என்னை சினிமாவுக்குள் ஈர்த்தது. எனவே என்னை பாதிக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.

    சம்பாதிக்கும் நோக்கில் சினிமாவுக்கு வராத ஆர்கேவே சினிமாவில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்து அதற்கு ஹிட் பாக்ஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். சினிமாக்காரர்கள் ஆர்கேவையும் அவரது புதிய முயற்சியையும் பயன்படுத்திக்கொள்வது அவர்களுக்கு நல்லது.
    விக்ரம் பிரபுவின் `பக்கா' படத்தில் பிந்து மாதவியும் இணைந்துள்ளார். இதுகுறித்த முழுசெய்தியை கீழே பார்ப்போம்.
    ‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’.

    விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். இப்போது பிந்து மாதவியும்  மற்றொரு நாயகியாக அவர்களுடன் இணைந்துள்ளார். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா,  சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.



    ஒளிப்பதிவு-சரவணன், இசை -சி.சத்யா, பாடல்கள்- யுகபாரதி, கலை- கதிர், நடனம்-தினேஷ், ஸ்டண்ட் -மிராக்கிள் மைக்கேல்,  எடிட்டிங்-சசி, தயாரிப்பு -டி.சிவகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.எஸ்.சூர்யா “முதல் கட்ட படப்பிடிப்பு  முடிவடைந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிந்து மாதவி இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

    “அனைவரும் விரும்பும் நகைச்சுவை கலந்த கமர்சியல் படமாக ‘பக்கா’ இருக்கும்” என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
    ×