என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
    ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று பிரகாஷ்ராஜ் கூறினார்.

    பிரகாஷ்ராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் அழகாக அமைதியாக அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். இது அனைவரையும் மெய்சிலிர்க்க  வைத்தது. நாங்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது  தேவையற்றது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லோருக்கும் பேசும் தைரியம் வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கிறார்கள்,  பேசுகிறார்கள்.



    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குபின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைவர் இல்லை. தமிழக அரசியல்  கேள்விக்குறியாக உள்ளது. இப்போது ஆட்சியும் கேள்விக்குறியாக உள்ளது. திடீர் என்று தலைவரை திணிக்கக் கூடாது, இவர்களுக்காக  மக்கள் ஓட்டு போடவில்லை. எம்.எல்.ஏ.க்.கள் ஆதரவு இருக்கிறது என்றாலும் இந்த எம்.எல்.ஏ.க்களையும் அந்த தலைவருக்காகத்தான்  தேர்வு செய்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆனாலும் நம் நாட்டு சட்டப்படி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். சட்டப்படி ஆட்சி நடத்துங்கள்.

    எந்த அரசாங்கம் இருந்தாலும் நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்காக அவர்களை சந்தித்துப் பேசுவோம். அது எங்களின் உரிமை.

    நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்கள். இந்த வி‌ஷயத்தில் ஆண்கள் நிறைய மாற வேண்டும்.



    திருட்டு விசிடி பிரச்சினையில் சி.டி. விற்பவர்களை பிடிப்பதில் பயன்இல்லை. மூலம் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

    திரை உலகில் இளைய ராஜா- எஸ்.பி.பி. மோதல் கவலை அளிக்கிறது. இருவரும் 40 ஆண்டு நண்பர்கள். இருவருக்கும் அறிவுரை  சொல்லக் கூடிய நிலையில் நாங்கள் இல்லை.

    இளையராஜா எடுத்தது நல்ல முடிவு. பெரிய கண் திறந்து இருக்கிறது. அவர் ஒரு படைப்பாளி. ஒரு பாடல் உருவாகும் போது வயலின்  எங்கே வரவேண்டும், புல்லாங்குழல் எங்கே வரவேண்டும் என ஒவ்வொரு இசைக்கும் எழுதிக் கொடுக்கிறார். அதன்படிதான் இசைக்  கலைஞர்கள் இசையை எழுப்புகிறார்கள். எனவே இதில் படைப்பாளி இசை அமைப்பாளர்தான்.

    அவர் அதற்கு சம்பளம் பெற்றாலும் ஒவ்வொரு முறையும் அதை பயன்படுத்தும் போது அதன் ராயல்டி பங்கு இசைஅமைப்பாளருக்கும்  போய்ச் சேர வேண்டும். அந்த உரிமையைத்தான் அவர் கேட்கிறார். கேட்பது அவரது உரிமை.

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மொழி, இன, பிரச்சினையை கிளப்பகூடாது, தமிழ் தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்பதால் அதில் மொழி  பாகுபாடு கிடையாது. தயாரிப்பாளர்களின் உரிமைக்காக செயல்படும் அமைப்பாகத்தான் இருக்கிறது.

    காவிரி பிரச்சினையின் போது பஸ் மீது கல்வீசி தாக்குவதோ, தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்களை தீயிட்டு கொளுத்துவதோ  கூடாது என்று தெரிவித்தேன். விவசாயிகள் தண்ணீர் கேட்டு போராடத்தான் செய்கிறார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது  கிடையாது. யாரோ வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

    நடிகராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் அரசியல் பேசுவது  அவரது உரிமை, நடிகர் சங்கத்தில் அரசியல் கலப்பு இல்லாமல் செயல் படுகிறது. அதுபோல் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட வேண்டும்  தகுதி இருந்தால் அவருடன் மோதிப்பாருங்கள்.

    இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.



    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில்  பிரகாஷ்ராஜ், விஷால் ஆகியோர் டெல்லி சென்று அங்கு 11 நாட்களாக போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு  தெரிவித்தனர்.

    அவர்களின் கோரிக்கைகளுக்காக 2 நாட்களாக டெல்லியில் தங்கி மத்திய மந்திரி நிதின்கட்காரி, அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து  பேசினார்கள்.

    டெல்லியில் இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், இது தமிழக விவசாயிகளின் போராட்டமாக கருதக்கூடாது. இந்திய விவசாயிகள்  பிரச்சினை. இதில் அரசியல் இல்லாமல் போராடுகிறார்கள். விவசாயிகளை தனியாக விட்டு விட முடியாது என்று தெரிவித்தனர்.
    ஆடம் ஜான்சன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, நடிப்பில் உருவாகி உள்ள `பாம்பு சட்டை' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    சென்னையில் நடுத்தர குடும்பத்தில் தனது அண்ணி பானுவுடன் வாழ்ந்து வருகிறார் பாபி சிம்ஹா. தனது அண்ணன் இறந்ததால்,  அண்ணியை தனது அம்மாவாகவே மதித்து வரும் பாபி சிம்ஹாவுக்கு வேலை இல்லை. பல இடங்களில் வேலை தேடியும்  பலன்கிடைக்கவில்லை. இறுதியில் தண்ணீர் கேன் நிறுவனம் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் வேலையில் சேர்கிறார்.  அதன் மூலம் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பாபி சிம்ஹா தனது அண்ணிக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சி  மேற்கொள்கிறார். 

    தண்ணீர் கேன் போடும் வேலையை விருப்பமில்லாமல் செய்து வரும் பாபி சிம்ஹா, வேலைக்கு சேர்ந்த மறுநாளே, படத்தின் நாயகி  கீர்த்தி சுரேஷை சந்திக்கிறார். மேலும் முதல் சந்திப்பிலேயே கீர்த்தி மீது காதல் வயப்படுகிறார். பின்னரை கீர்த்தியை பார்ப்பதற்காகவே  தினமும் தண்ணீர் கேன் போடும் வேலையை தொடர்கிறார். பின்னர் ஒருநாள் தனது காதலை கீர்த்தியிடம் தெரிவிக்கிறார். 



    முதலில் காதலிக்க மறுக்கும் கீர்த்தி, பின்னர் பாபி சிம்ஹாவின் மனதை புரிந்து கொண்டு, அவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.  கீர்த்தியின் தந்தையாக வரும் சார்லி சாக்கடை சுத்தம் செய்யும் தொழில் செய்பவர். இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் அவர்,  ஊரில் பாபி சிம்ஹாவையும், பானுவையும் சேர்த்து தவறாக பேசுவதாகக் கூறுகிறார். இதனால் கோபமடையும் பாபி தனது அண்ணியை  பற்றி அவதூறாக பேச வேண்டாம் என்று வெளியேறுகிறார். 

    இந்த பிரச்சனை பானுவுக்கு தெரியவர, தான் வேறு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். பின்னர் பானுவின்  திருமணத்திற்காக தீவிரமாக வேலை செய்து வரும் பாபி சிம்ஹா, அதற்காக ஒரு மாப்பிள்ளையையும் தேர்ந்தெடுக்கிறார்.  இந்நிலையில், அந்த மாப்பிள்ளை ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அவரை மீட்க ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து செய்யும்  பாபி சிம்ஹா, வில்லனாக வரும் கே.ராஜனின் தலைமையிலான கள்ளநோட்டு கும்பலிடம் தனது பணத்தை இழக்கிறார். கடைசியில்  தனது பணத்தை எப்படி மீட்கிறார்? தனது அண்ணிக்கு திருமணம் செய்து வைத்தாரா? கீர்த்தி சுரேஷை கரம்பிடித்தாரா என்பது படத்தின்  விறுவிறுப்பான மீதிக்கதை.



    பாபி சிம்ஹா படத்தின் தொடக்கம் முதல், இறுதிவரை தனது தனித்துவமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்‌ஷன்  காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி தனக்குரிய குறும்பு சேட்டைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நாயகனாக  இருந்தாலும் தனக்குரிய வில்லத்தனத்திலும் மிரட்டி உள்ளார். குறிப்பாக தனது மற்ற படங்களை விட இந்த படத்தில் காதல்  காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். 

    கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை சேலை மற்றும் சுடிதார்களில் அங்குமிங்கும் அழகான பெண்ணாக வலம் வருகிறார். திரையில்  தன்னை ரசிக்கும்படி படம் முழுக்க வந்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், நாயகனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் முத்திரை  பதித்திருக்கிறார். இப்படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பானு தனக்குரிய காட்சிகளை சிறப்பாக  தந்திருக்கிறார். படம் முழுவதும் அழகான குடும்ப பெண்ணாக வலம் வருகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி  உள்ளது. 



    படத்தில் வில்லனாக வலம் வரும் கே.ராஜன் படம் முழுவதும் மிரட்டி இருக்கிறார். இவருக்கு ஒரு வலிமையான கதாபாத்திரம்.  அவரது வசனங்களும், தோற்றமும், உடல் செய்கைகளும் ரசிக்கும்படி உள்ளது. அவருக்கு துணையாக வரும் ஜோக்கர் சோமசுந்தரம்  சூழ்நிலைக்கு ஏற்ப தனது போக்கை மாற்றிக் கொள்ளும் ஒரு நல்ல பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவரது ஸ்டைல், ஜோக்கர்  படத்தில் இருப்பது போலவே இதிலும் பேசும்படியாக இருக்கிறது.  

    இயக்குநர் ஆடம் ஜான்சன் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் இரு தகவல்களை தெரிவிக்கிறார்  இயக்குநர். தப்பு செய்பவர்கள் கண்டிப்பாக அதன் பலனை கண்டிப்பாக அனுபவிப்பார்கள். அதில் மாறுபாடு ஏதும் இல்லை என்ற ஒரு  தகவலும், சாப்பாடு கூட இல்லாத ஏழை மக்கள் தங்களது பிழைப்புக்காக, தவறான வழிக்கு செல்ல மாட்டார்கள். அந்த எண்ணமும்  அவர்களுக்கு வராது என்பதை தெரிவித்திருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களுமே ரசிக்கும் படி உள்ளது.

    துப்புரவு தொழிலாளராக வரும் சார்லி தனது முதிர்ந்த நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வசனங்களும் மனதில்  நிற்கிறது. மொட்டை ராஜேந்திரனை பொறுத்தவரையில், காமெடியில் கலக்கிய நேரத்தில் பாபி சிம்ஹாவுக்கு சில அறிவுரைகளை  கூறுவதன் மூலம் குணசித்திர கதாபாத்திரத்தையும் சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார். 

    படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. வசனங்கள் மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் பாம்பு சட்டை, கனகச்சிதம்.
    தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
    இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு  வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து  இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா  நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான  ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து  வந்தன.



    இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த  வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்  உள்ளிட்ட பலரும் ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

    இதுகுறித்த பதில் தெரிவித்துள்ள ரஜினி, எனது நண்பர் திருமாவளவன் தன்னிடம் இலங்கை செல்ல வேண்டாம் என்று  வற்புறுத்தியதாலும், வைகோ நேரிடையாகவே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாலும், வேல்முருகன் தனது  நண்பர் மூலம் தன்னை தொடர்பு கொண்டு அரசியல் சூழ்நிலைகளை விவரித்ததாலும் இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளேன்  என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கூறிய காரணங்களை என்னால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்.



    மேலும் எனது பயணத்தை இலங்கையில் புனிதப்போர் செய்த மக்களை காணும் நோக்கத்தில் செல்ல இருந்தேன். அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கும் எனது மீனவ சகோதரர்களுடைய உயிர்ப்பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசேனவுடன் பேச இருந்ததாவும்  தெரிவித்துள்ளார்.

    மேலும், நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், அன்பு சகோதரர் திருமாவளவன் சொன்னது போல மக்களை மகிழ்விப்பது  என்னுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த  புனிதப்போர் பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதனை அரசியலாக்க வேண்டாம் என்று அன்புடனும்,  உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
    டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தற்கொலை முயற்சியை விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அமைதியான முறையில் நடைபெற்று வரும் இவர்களது போராட்டத்துக்கு மத்திய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.  இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழ் நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவு  தெரிவித்தனர்.



    மேலும் அவர்களது கோரிக்கையை மத்திய அமைச்சர்களை சந்தித்து எடுத்துரைப்பதாகவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.  அதனைத்தொடர்ந்து மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து நதிகள் இணைப்பு குறித்த கோரிக்கையை  அளித்தனர். மேலும் இன்று காலை அருண் ஜேட்லியையும் சந்தித்து விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி விஷால் அணியினர்  வலியுறுத்தியிருந்தனர்.

    இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு செவிமடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்த, விவசாயிகளில் இருவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.



    விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இருவரும் தற்கொலை மிரட்டல்  விடுத்தனர். அதனைத்தொடர்ந்து, தற்கொலை செய்ய முயன்ற விவசாயிகளை கீழே இறங்குமாறு பலரும் கேட்டுக்கொண்டனர்.  அந்தநேரத்தில் விஷால் அணியினரும் அங்கு இருந்ததால் விவசாயிகளை கீழே இறங்கச் சொல்லி அவர்களும் வேண்டிக் கொண்டனர்.  பலரது வேண்டுகோளை ஏற்று மரத்தில் இருந்து இரு விவசாயிகளும் கீழே இறங்கி தற்கொலை முயற்சியை கைவிட்டனர்.
    சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தலில் போட்டியில் இருந்து ஒரு அணியினர் விலகி உள்ளனர். தேர்தலில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டி தேர்தலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
    சவுத்இந்தியன் பிலிம் பேர் ஆப் காமர்ஸ் அமைப்புக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தலைவர், இணை செயலாளர்,  பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இதன் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹரிபரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகிணி ஆர்.பன்னீர் செல்வம்  தலைமையில் ஒரு அணியும், எல்.சுரேஷ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ‘இந்த தேர்தலில் முறைகேடு நடக்கிறது. தேர்தல் அதிகாரி நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை’ என்று கூறி  ரோகிணி ஆர்.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மற்ற உறுப்பினர்களும் தேர்தலை  புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    ‘கொடி வீரன்’ படத்தில் சசிகுமாருக்கு தங்கை ஆனது தனக்கு மகிழ்ச்சியே என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமார், ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் கொடிவீரன் படத்தில், சசிகுமாரின்  தங்கையாக நடிக்கிறார். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...

    “நான் எப்போதுமே ஒரு படத்தில் நடிக்கும் போது அதில் யார் ஹீரோ, எத்தனை நாயகிகள் என்று பார்ப்பது இல்லை. கதையில் எனது  பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன்.



    அந்த வகையில் ‘கொடிவீரன்’ படத்தில் எனக்கு தங்கை வேடம் என்றாலும் அழுத்தமான வேடம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள  வேடம். ‘காக்காமுட்டை’ படத்தில் எப்படி எனது அம்மா வேடம் பேச வைத்ததோ, அது போல் இந்த தங்கை வேடமும் என்னை பற்றி  பேசவைக்கும் வகையில் இருக்கும். எனவே, சசிகுமாருக்கு தங்கையானதும் மகிழ்ச்சி தான்” என்றார்.
    `பாகுபலி 2' படத்திற்கு தடைக்கோரி கர்நாடகாவில் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கான காரணம் என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    `பாகுபலி 2' படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதால் அப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்ய தகவல் வந்து  கொண்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான `பாகுபலி 2' இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 28-ஆம்  தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதில் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

     

    அது என்னவென்றால், கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்ய தடை கேட்டு கர்நாடக ஆதரவு அமைப்புகள் போராட்டம் நடத்தி  வருகின்றன. `பாகுபலி' படத்தின் இருபாகத்திலும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நாம் அறிந்ததே. கட்டப்பா ஏன்  பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு அதன் அடுத்த பாகமான `பாகுபலி 2'-ல் தான் விடை இருக்கிறது. இந்நிலையில், படத்தில்  சத்யராஜ் நடத்திருக்கும் ஒரே காரணத்தால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக எதிர்ப்புக் குழுவினர் தொடர்ந்து  போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்காக கர்நாடக திரைப்படக் குழுவின் தலைவர் கோவிந்துவை சந்தித்த அவர்கள் தங்களது  கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.



    தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான தண்ணீர் பிரச்சனையின் போது, நடிகர் சத்யராஜ் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதால், சத்யராஜ்  மன்னிப்பு கேட்கும் வரை படத்தை திரையிடக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், `பாகுபலி' படத்தின் முதல் பாகத்திற்கு தடை விதிக்க கோராத அவர்கள், அதன் அடுத்த பாகமான  `பாகுபலி 2' படத்திற்கு தடை கேட்பது வேடிக்கையாக உள்ளது.

    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள `பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    பட வாய்ப்பு தருவதற்கு தமிழ் பட டைரக்டர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்று சிம்பு பட நாயகி புகார் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக பரபரப்பு புகார்கள் கிளம்பி உள்ளன. பாவனாவை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் பல நடிகைகள் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு உள்ளனர்.

    தற்போது நடிகை லேகா வாஷிங்டனும் தன்னை தமிழ் பட டைரக்டர் ஒருவர் படுக்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.

    இவர் ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் வினய் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். காதலர் தினம், உன்னாலே உன்னாலே, வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சிம்புக்கு ஜோடியாக கெட்டவன் என்ற படத்தில் ஒப்பந்தமாகினார். அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

    லேகா வாஷிங்டன் செக்ஸ் தொல்லை குறித்து அளித்த பேட்டி வருமாறு:-



    “சினிமாவில் நடிகையாக இருப்பது சாதாரண காரியம் அல்ல. நிறைய தொல்லைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை எப்போதுமே மறக்க முடியாது.

    தமிழ் பட டைரக்டர் ஒருவர் என்னை அவரது காரில் அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவாய் என்று கேட்டார்.

    அந்த இயக்குனர் கேட்டது புரியாதது போல் நான் நடித்தேன். ஆனாலும் அவர் விடவில்லை. திரும்ப திரும்ப நீ என்ன தருவாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். எனக்கு கோபம் வந்தது. உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்று மட்டும் நினைக்காதீர்கள் என்று அவரிடம் சொல்லி விட்டேன்.

    படுக்கைக்கு வர மாட்டேன் என்று நான் சொன்னதும் அவர் அதிர்ச்சியானார். மீண்டும் மீண்டும் என்னை வற்புறுத்தினார். நான் முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டேன். இதனால் அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி விட்டார்”.

    இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறினார்.
    விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று ஈரோட்டில் கல்லூரி விழாவில் பேசிய இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்தார். இதுகுறித்த அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
    விவசாயிகளுக்காக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் பேசினார்.

    மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த கலைவிழாவில் இயக்குநர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நமது வாக்குரிமையின் வலிமையை உணராத காரணத்தால் தவறானவர்கள் நம்மை ஆளும் நிலை ஏற்பட்டது. அரசியல் வேண்டாம்  என்று திறமையான, தகுதியான இளைஞர்கள் பலர் ஒதுங்கியதே இதற்கு காரணமாகும்.

    பொருள்தேடும் கல்வியை மட்டுமே கற்றுத்தருவதால் திறமையான பலர் வெளிநாடுகளில் வேலைக்கு சேர்ந்து சுகமாக வாழ்கிறார்கள்.  அவர்களுக்கு தாய்மண் குறித்த கவலை ஏதும் இல்லை. சொகுசு வாழ்க்கையை மட்டும் விரும்பும் அவர்கள், போராட்டங்களில் இருந்து  தப்பிக்கவே முயற்சிக்கின்றனர்.



    எனவே மாணவர்களுக்கு வாழ்வியல் கல்வியும், அரசியல் கல்வியும் அவசியமாகும். அந்த காலங்களில் மாணவர்கள் நலனுக்காக  ஆசிரியர்கள் போராடினார்கள். ஆனால் தற்போது ஆசிரியர்கள் ஊதிய உயர்வு போன்ற சுய தேவைகளுக்காக போராடுகின்றனர்.

    கல்வி கற்பிப்பது ஒரு தொண்டு என்ற நிலையில் இருந்து, அது ஒரு தொழில் என்ற நிலையை அடைந்ததே இதற்கு காரணமாகும்.

    தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அரசியல் பேச  வைத்தது. அந்த நிலை தொடர வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை காப்பாற்றியதோடு நமது கடமை முடிந்தது என்று இளைஞர்கள்  இருக்கக் கூடாது.



    தற்போது விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காகவும் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். அடுத்த 20  ஆண்டுகளுக்குள் விவசாயம் அழிந்துவிடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை  இளைஞர்களுக்கு உண்டு.

    விவசாயத்தை அடுத்த தலைமுறையினர் கையில் எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் படம் வெளியான அன்று திருட்டு சி.டி.யை விற்க முடியாது. அந்தளவுக்கு அரசு சினிமாத்துறைக்கு உதவுகிறது. தமிழகத்தில் படம் வெளியான முதல் காட்சி முடிந்த உடனேயே திருட்டு சி.டி. வந்து விடுகிறது. எனவே திருட்டு சி.டி.யை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும்.

    நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒருவரே இருந்து நிர்வாகம் செய்வது சரியாக இருக்காது. நடிகர் கால்ஷீட் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டால் அவர் நடிகரை ஆதரிப்பாரா? தயாரிப்பாளருக்கு ஆதரவாக பேசுவாரா?.



    10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். அதில் அதிக ஆர்வம் காட்டினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும், அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். காலப்போக்கில் அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.

    தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இதுபோன்ற அரசியலை பார்த்தது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வர நான் விருப்பப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்.

    விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியலில் ஈடுபடாததால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது என்று இயக்குனர் பேரரசு கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியை விரிவாக பார்க்கலாம்.
    திரைப்பட இயக்குனர் பேரரசு ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி உள்பட 9 படங்களை நான் இதுவரை இயக்கி உள்ளேன். எனது 10-வது படம் வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. ஊர் பெயர் எனது அடைமொழியாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் என் படத்துக்கு ஊர் பெயர் வைக்க சொல்கிறார்கள். அதன்பேரில் நான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஊர் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன்.

    தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளேன். நமது பண்பாடு, கலாசாரம் அழிந்து வருகிறது. அதை சினிமா மூலம் பதிவு செய்யவேண்டும். நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுப்பது எனது நீண்ட கால விருப்பமாக உள்ளது.

    நடிக்க பயமாக இருப்பதால் கதாநாயகனாகும் ஆசை எனக்கு இல்லை. முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் நடிகனாக இல்லாமல் நடிப்பேன். புதிதாக வரும் தயாரிப்பாளர்களில் 80 சதவீதம் பேருக்கு தொழில் அனுபவம் இல்லை. அதனால் செலவு அதிகமாகி, படம் தரம் இல்லாமல் போய் விடுகிறது.



    நடிகர் எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு அரசியல் விமர்சன படங்கள் வரவில்லை. அரசியல் சார்ந்த தலைப்பு வைக்கக்கூட முடியவில்லை. மீறி வைக்கும் பட்சத்தில் படம் வெளியாகும் நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேர்கிறது. அரசியல் தலையீடு தற்போது சினிமாவில் அதிக அளவில் உள்ளது.

    சினிமா துறைக்கு அரசு ரீதியாக எந்த உதவியும் கிடைப்பதில்லை. தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு உண்டு என்கிறார்கள். ஆனால் படக்குழுவினர் படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்த பின்னர்தான் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

    தமிழில் தலைப்பு வைத்தால் மட்டும் தமிழை காப்பாற்ற முடியாது. தனியார் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம், இந்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம், தமிழுக்கு கொடுக்கப்படுவதில்லை. எனவே தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக தமிழ் பாடம் இருக்கவேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மக்கள் மீது உண்மையான அக்கறை, சேவை மனப்பான்மை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்படி வருபவர்கள் சராசரி மனிதனாக இருக்கவேண்டும். மக்கள் நேசிப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. மக்களை நேசிப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

    பொழுதுபோக்கு படம் எடுங்கள். பொழுது போக்குக்காக சினிமா படம் எடுக்க வராதீர்கள். மக்களுக்காக யார் குரல் கொடுத்தாலும், அவர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்.

    இவ்வாறு இயக்குனர் பேரரசு கூறினார்.
    மகாபாரதம் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் கோர்ட்டில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் பாலா(வயது38). இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளரான இவர், கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில், நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மகாபாரதத்தை பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்து உள்ளார். பிறரின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கருத்து சொல்வது குற்றம். மகாபாரதம் சூதாட்டத்தை ஊக்குவிப்பது போலவும், மகாபாரத கதையில் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவது போலவும் விஷம கருத்துகளை கமல்ஹாசன் பேசி இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ஏற்கனவே இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் கோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பழவூர் போலீஸ் அதிகாரிகள் இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

    இப்போது கும்பகோணம் கோர்ட்டில் 2-வதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    ×