என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    வருகிற வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 7 படங்கள் ரிலீசாக உள்ளன. எந்தெந்த படங்கள் ரிலீசாகின்றன என்பதை கீழே பார்ப்போம்.
    வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி - அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி உள்ள `காற்று வெளியிடை' படம் ரிலீசாகிறது. அதேநேரத்தில் புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள `8 தோட்டாக்கள்' படமும் ரிலீசாகிறது.

    ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி அறிமுக நாயகனாகவும், அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘8 தோட்டாக்கள்’. கிரைம் திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படம், காணாமல் போன ஒரு துப்பாக்கியில் இருந்து வெளியேறும் 8 தோட்டாக்களால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு நகர்கிறது. இப்படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.



    இவ்வாறாக, வருகிற 7-ஆம் தேதி ஒரே நாளில் `ஐயனார் வீதி', `சாயா', `ஜுலியும் 4 பேரும்', `செஞ்சிட்டாலே', `விருத்தாச்சலம்' உள்ளிட்ட படங்களும் ரிலீசாக உள்ளன. 
    அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போதே தொடங்கி உள்ள நிலையில், அவரது பிறந்தநாளான மே 1-ல் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்க உள்ளது. அது என்ன வகையான விருந்து என்பதை கீழே பார்ப்போம்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை `விவேகம்' படத்தின் இரு மாறுபட்ட போஸ்டர்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு படக்குழு விருந்தளித்திருந்தது. முதல் போஸ்டர், அஜித் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் கோபமாக நிற்கும்படியாக இருந்தது. இரண்டாவது போஸ்டர் முற்றிலும் மாறுபட்டு, பனிப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போல இருந்தது.



    இந்நிலையில், `விவேகம்' படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் அஜித்தின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் ஒருபங்காக மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள், நேற்று முதல் அஜித் பிறந்தநாள் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அங்குள்ள முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும் மற்றொரு ரசிகர் ஒருவர் `விவேகம்' போஸ்டரில் அஜித் நிற்பது போன்ற பொம்மையை வடிவமைத்து அசத்தியுள்ளார். இவ்வாறாக தற்போதே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், விரைவில் டீசர் வெளியாக உள்ளது.



    அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி, அவரது ரசிகர்களுக்கு மெகா விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளதால், படத்தின் டீசரை மே 1-ல் வெளியிட படக்குழு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு அஜித் பிறந்தநாளில் டீசர் வெளியானால், அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இப்படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். விவேக் ஓபராய் வில்லனாகவும், அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 
    ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் ரசிகர்கள் வற்புறுத்தினார்கள். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ரஜினிகாந்த், 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள்.

    “ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அனைத்து ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். அவருடைய அரசியல் பிரவேசத்தை தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே அரசியல் தூய்மைப்படுத்தப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே விரைவில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்” என்று அவர்கள் பேசினார்கள். இதுகுறித்து இப்போது விவாதிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் பதில் அளித்தனர்.

    இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்த்து சென்னையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மண்டபம் எதிரில் காலையில் இருந்தே திரண்டு நின்று ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் வாழ்க, வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க’ என்று கோஷமிட்டபடி இருந்தனர். சிலர் ரஜினிகாந்த் உருவப்படத்துடன் மன்ற கொடிகளையும் கையில் பிடித்தபடி வந்து இருந்தார்கள்.



    ரசிகர்கள் கூட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்டபத்தை சுற்றிலும் சென்னையின் பல பகுதிகளிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி ரசிகர்கள் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டி இருந்தார்கள். இலங்கை செல்ல எதிர்ப்பு கிளம்பியதை கண்டித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

    ரஜினிகாந்த் இலங்கை செல்வது சர்ச்சையானதால் பயணத்தை அவர் ரத்து செய்தது, ஈழத்தமிழர்கள் ரஜினிகாந்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. இதற்காக ஈழத்தமிழர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தது, ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் என் ஆதரவு யாருக்கும் இல்லை என்று டுவிட்டரில் அவர் அறிவித்தது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

    ஆனால் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே அவர்களை சந்திக்கிறேன் என்றும் ரசிகர்களை சந்திப்பதில் அரசியல் இல்லை என்றும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
    நல்ல கதை அமைந்தால் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க தயார் என்று ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதில் அளித்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    இயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ என்ற சினிமாபடம் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதிராவ் ஆகியோர் கோவை புரூக் பீல்டில் உள்ள வணிக வளாகத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள்.

    அப்போது ரசிகர்கள் அவர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சுற்றி நின்ற ரசிகர்கள் அனைவரும் செல்போனில் படம் எடுத்தனர். சில ரசிகர், ரசிகைகள் மட்டும் நடிகர் கார்த்தியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

    ரசிகர்கள் எழுதி கொடுத்த கேள்விகளை ஒருங்கிணைப்பாளர்கள் தொகுத்து நடிகர் கார்த்தியிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் கூறியதாவது:-


    கோவையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் கார்த்தி பதில் அளித்து பேசியபோது எடுத்த படம். அருகில் கதாநாயகி அதிதிராவ் உள்ளார்.

    நான் நடித்து வெளிவர உள்ள ‘காற்று வெளியிடை’ படம் ரோஜா, பம்பாய் படத்தை போன்று சர்ச்சைக்குரிய படம் அல்ல. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டு இருந்தாலும் இது ஒரு காதல் கதை. இந்த படத்தில் நான் விமானியாக நடித்துள்ளேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இந்த படத்தின் இயக்குனர் மணிரத்னத்திடம் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். அப்போது நான் அதிகம் திட்டு வாங்கினேன். ஆனால் இப்போது நடிகர் என்பதால் அவர் என்னை திட்டுவது இல்லை. எனவே உதவி இயக்குனர் என்பதை விட நடிகராகவே இருக்க விரும்புகிறேன். நல்ல இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தால் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதை விட கதாநாயகனாக நடித்தால் படம் முழுவதும் வந்து ரசிகர்களை திருப்தி படுத்த முடியும்.

    நான் உதவி இயக்குனராக இருந்தபோது எனது அண்ணனை மனதில் வைத்து ஒரு கதை எழுதினேன். 16 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒருவரின் வாழ்க்கை பற்றிய அந்த கதையில் அவரால் மட்டுமே நடிக்க முடியும். தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் நிச்சயம் வருங்காலத்தில் ஒரு படமாவது இயக்குவேன். நானும் எனது அண்ணனும் ஒரே துறையில் உள்ளோம். இந்த கால கட்டத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். நல்ல கதை அமைந்தால் அண்ணன் சூர்யாவுக்கு வில்லனாக கூட நடிப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு ரி்த்திகா சிங் மீண்டும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், `இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார். மேலும் அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றார். பின்னர் விஜய்சேதுபதியுடன் இணைந்து `ஆண்டவன் கட்டளை' படத்தில் நடித்திருந்தார்.

    இதையடுத்து தமிழ் கலாச்சாரத்தின் மீது தனக்கு பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதால் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார். இதற்காக தமிழ் பேச தான் பயிற்சி எடுத்து வருவதாகவும் ரித்திகா தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக, ரித்திகா நடித்துள்ள `சிவலிங்கா' படம் வருகிற ஏப்ரல் 14-ல் ரிலீசாகிறது. மேலும் `இறுதிச்சுற்று' படத்தின் தெலுங்கு ரீமேக்கான `குரு' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்படமும் விரைவில் ரிலீசாகிறது.

    அடுத்து செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து `வணங்காமுடி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் ரித்திகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க உள்ள அப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரித்திகா நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ரித்திகாவுக்கு செமயான ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தினமும் 1500 ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் ரஜினிகாந்த், தனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த சந்திப்புகள் நடைபெறவில்லை. ரசிகர்கள் தங்களை சந்தித்து பேசும்படி ரஜினிகாந்துக்கு வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பி வந்தனர். இதை தொடர்ந்து அவர்களை சந்திக்க அவர் முடிவு செய்து உள்ளார்.

    இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் ஆலோசனை கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.



    இந்த கூட்டத்தில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்மன்ற பொறுப்பாளர்கள் சத்திய நாராயணா, சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ரஜினிகாந்தின் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து எவ்வளவு ரசிகர்களை அழைத்து வரவேண்டும். எந்தெந்த தேதிகளில் வரவேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    மாவட்ட தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் வந்து இருந்தனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் மண்டபத்துக்கு வெளியே திரண்டு நின்று ரஜினியை வாழ்த்தி கோஷம் போட்டபடி இருந்தனர். திடீரென்று அவர்கள் பாதுகாவலர்களை தள்ளிக்கொண்டு ‘கேட்டை’ திறந்து உள்ளே புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மத்தியில் ரசிகர் மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா பேசியதாவது:-



    “ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களில் உள்ள ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வந்தனர். இதனால் ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் முடிவு செய்து உள்ளார். வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையில் இந்த கூட்டம் நடக்கிறது. 32 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகளை அவர் சந்திக்க உள்ளார். புதுச்சேரி காரைக்கால் ரசிகர்களையும் சந்திக்கிறார்.

    தினமும் 1500 ரசிகர்களை அவர் சந்திப்பார். 6 நாட்களும் 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரசிகர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அப்போது அனைத்து ரசிகர்களுடனும் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்வார். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவே இன்று ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே ரசிகர்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்றைய கூட்டத்தில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை.”

    இவ்வாறு சத்திய நாராயணா பேசினார்.

    இதைதொடர்ந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். காலை 10 மணிமுதல் பகல் 1 மணிவரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு லூதியானா கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து ஒரு அவதூறான கருத்தை தெரிவித்தார். சமுதாய உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



    இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி பலமுறை கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இறுதியாக கடந்த மாதம் 9-ந்தேதியும் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு 9-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்துக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. 2 போலீசார் அந்த வாரண்டுடன் மும்பைக்கு சென்றுள்ளனர்.

    மாவட்ட அளவிளான பளுதூக்கும் போட்டியில் தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதுகுறித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார்.

    சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிளான பளுதூக்கும் போட்டியில் 80 கிலோ எடை பிரிவில் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதையடுத்து, பதக்கத்துடன் தான் நிற்பது போன்ற புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பீஸ்ட் மோடில் செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



    முன்னதாக, மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ரம்யா தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ரம்யா தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். 
    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் குறித்த முழுவிவரத்தை தேர்தல் அதிகாரியும், முன்னாள் நீதிபதியுமான ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ளார். அந்த விவரத்தை கீழே பார்ப்போம்.
    நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் அபார வெற்றி பெற்றனர். குறிப்பாக அந்த அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் விஷால் 476 வாக்குகள் பெற்று, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பொருளாளராக விஷால் அணியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பிரபு தேர்வு செய்யப்பட்டார். கே.ஈ.ஞானவேல்ராஜா செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதுதவிர, மொத்தமாக 21 பேர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களது விவரம் வருமாறு,



    சுந்தர்.சி, ரா.பார்த்திபன், பாண்டிராஜ், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலி கான், எஸ்.எஸ்.துரைராஜு, ஆர்.கே.சுரேஷ், ஜம்ஷத் @ ஆர்யா, ராமசந்திரன்.எஸ், ஜெமினி ராகவா, அபினேஷ் இளங்கோவன், ஏ.எல்.உதயா, எம்.ஜாபர், பிரவீன்காந்த், மனோஜ்குமார், பி.எல்.தேனப்பன், எஸ்.வி.தங்கராஜ், கே.பாலு (கே.பி.பிலிம்ஸ்), எம்.எஸ்.அன்பு, எஸ்.எஸ். குமரன், டி.ஜி.தியாகராஜன் உள்ளிட்ட 21 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்த தேர்தலை நடத்திய, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில்  வெற்றி பெற்ற அனைவரும் விரைவில் பதவியேற்க உள்ளனர்.

    வெற்றிக்கு பின்னர் பேசிய விஷால், தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த 2 ஆண்டுகள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலமாக அமையும் என்று கூறினார். இந்த 2 ஆண்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.



    பதவியேற்றதுடன் முதல் வேலையாக தயாரிப்பாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக இரண்டு முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.  மேலும் திருட்டு விசிடி மற்றும் பைரேசி விவகாரங்களில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் அணி, கேயார் அணி, ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 
    சாவித்ரியின் வாழ்கை வரலாறு படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    1950-70-களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை சாவித்ரி. நடிகையர் திலகம் என போற்றப்பட்ட இவரது வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுக்க உள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகிகளாக ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி வேடத்திலும், சமந்தா மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

    இந்நிலையில் கடந்த வாரம் வெளியான தகவலின்படி, இப்படத்தில் காதல்மன்னன் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து படக்குழுவிடம் கேட்ட போது, சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், தேதி இல்லாததால் சூர்யா இப்படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.



    ‘மகாநதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாம். இப்படத்தை வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
    பிரபல இயக்குநர் பிரபு சாலமன் தனது அடுத்த படத்தை பாலைவனத்திலேயே எடுக்க உள்ளாராம். அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான `மனிதன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து உதயநிதி `பொதுவாக என் மனசு தங்கம்', `இப்படை வெல்லும்' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், எழில் இயக்கத்தில் உதயநிதி, ரெஜினா கசண்ட்ரா, சூரி நடித்துள்ள `சரவணன் இருக்க பயமேன்' வருகிற மே 12-ல் ரிலீசாக உள்ளது. அதே நாளில் தான் ஜெயம்ரவியின் `வனமகன்' மற்றும் ஜோதிகாவின் `மகளிர் மட்டும்' உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன.

    இந்நிலையில், உதயநிதி, பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காடு, மலை என வித்தியாசமான படங்களை இயக்கி வரும் பிரபு சாலமன் கடைசியாக ஒரு முழுமையான ரயில் பயணத்தை மையக்கருவாக கொண்டு `தொடரி' படத்தை இயக்கியிருந்தார்.



    இந்நிலையில், தனது அடுத்த படத்தை முழுக்க முழுக்க பாலைவனத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக உதயநிதி சிறப்பு உடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் திருட்டு விசிடி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சவால் விடுத்தார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொருளாளர் உள்ளிட்ட இதர பதவிகளுக்கு பெரும்பாலும் விஷால் அணியை சேர்ந்தவர்க்ளே வெற்றி பெற்றுள்ளனர். 

    இந்நிலையில், வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளரிகளிடம் விஷால் பேசியதாவது:-

    தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவரும் நன்றி. எங்கள் வெற்றி அடுத்த 2 ஆண்டுகள், சினிமாவிற்கு பொற்காலமாக அமையும். தயாரிப்பாளர் சங்கள் வரலாறு காணாத முன்னேற்றத்தை அடையும் 

    மாற்றம் வர வேண்டும் என்றால் அதனை யாராலும் தடுக்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனுக்காக, பழி வாங்கும் நடவடிக்கைகாக இந்த வெற்றி கிடைக்கவில்லை. தயாரிப்பாளர்களின் பிரச்சனைகள் தீர்வு காண விரும்பி இந்த வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.

    அத்தனை முதலாளிகளுக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியவை தடையில்லாமல் கிடைக்கும். பதவியேற்றதும் விவசாயிகள், 
    தயாரிப்பாளர்களுக்காக இரண்டு அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.

    திருட்டு விசிடி விவகாரத்தில் பதவிக்கு வருவதற்கு முன்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தேன். தற்போது பதவிக்கு வந்துள்ளேன். நீயா, நானா பார்த்துவிடுவோம்(திருட்டு விசிடிகாரர்கள்).

    இவ்வாறு கூறினார்.

    ×