என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    உலகின் அழகான பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    உலகின் அழகான பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 30 பேர் கொண்ட பட்டியலில் பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பிரபல பாப் பாடகி பியோன்ஸ் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள பிரியங்கா, ஹாலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உலகின் அழகான பெண்களின் பட்டியலில் வந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜீலி, எம்மா வாட்சன் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி பிரியங்கா இரண்டாம் இடித்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு,

    1. பியோன்ஸ்
    2. பிரியங்கா சோப்ரா
    3. டெய்லர் ஹில்
    4. எம்மா வாட்சன்
    5. டகோடா ஜான்சன்
    6. ஹிலாரி கிளிண்டன்
    7. மார்கோட் ராஃபி
    8. அஞ்சலினா ஜுலி
    9. பஃரியே எவ்சன்
    10. அலெக்சாண்ட்ரா டடாரியோ
    கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள உரு படப்பிடிப்பின் போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியதாக அப்படத்தை இயக்கியுள்ள விக்கி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விக்கி ஆனந்த் வெளியிட்ட முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
    கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள படம் ‘உரு’. புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர் தனது கதை எழுதும் பாணியை காலத்துக்கு ஏற்ப மாற்ற விரும்புகிறார். இதற்காக கொடைக்கானல் செல்லும் அவர் சந்திக்கும் சம்பவங்களே கதையாகி இருக்கிறது. வையம் மீடியாஸ் சார்பில் வி.பி. விஜி தயாரிக்கும் இந்த படத்துக்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஜோகன் இசை அமைத்திருக்கிறார்.

    இந்த படத்தை இயக்கியுள்ள விக்கி ஆனந்த் படப்பிடிப்பு அனுபவத்தை கூறும் போது...



    “இந்த படத்துக்காக டிசம்பர் மாதம் 25 நாட்கள் கொடைக்கானல் பகுதியில் தங்கி இருந்தோம். கடும் குளிர் 4 டிகிரி வெப்பநிலையில் படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் நாயகன், நாயகி உள்பட அனைவரும் சிரமப்பட்டோம். இரவில் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடத்திய போதும், பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருந்தது. ஒரு நாள் காட்டெருமை கூட்டம் எங்களை சூழ்ந்து விட்டது. நல்ல வேளையாக முதலில் கவனித்ததால் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பினோம்.

    இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜோகன் புதுமையான முறையில் இசை அமைத்துள்ளார். பாடல்களை வித்தியாசமாக கொடுத்துள்ளார். அது புதுமையாக இருக்கும். தயாரிப்பாளர் வி.பி. விஜி படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். கலையரசன், தன்ஷிகா உள்பட அனைவருடைய நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. ‘உரு’ பேய் இல்லாத வித்தியாசமான திகில் கதை” என்றார்.
    நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விடுதி ஒன்றில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    நடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். `வம்சம்', `கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தியாகராய நகரில் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ள கார்த்திகேயன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான தருணத்திலேயே இவர்கள், இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



    நந்தினி தனது கணவர் கார்த்திகேயனுடன், வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகாமையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிய கார்த்திகேயன், அந்த விடுதியிலேயே குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வெகுநேரமாகியும் விடுதியில் அவரது அறை திறக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வந்து பார்த்த போது, வாயில் நுரைதள்ளிய படி கார்த்திகேயன் பிணமாகக் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபுதேவாவின் பிறந்தநாளான நேற்று, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரபுதேவா மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை கீழே பார்ப்போம்.
    நேற்று (மார்ச் 3 ஆம் தேதி) பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாள் தினத்தில் பிரபு தேவா, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் - கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். நடிகர் பிரபுதேவா, லட்சுமி மேனன், பிரகாஷ்ராஜ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த, அப்பகுதி பிரபுதேவா ரசிகர்கள் மிகப்பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரபுதேவா மறுப்பு தெரிவித்துள்ளார்.



    இரண்டு நாட்களுக்கு முன்னர் `யங் மங் சங்' படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் இரண்டு டிரைவர்களும் ஒரு தயாரிப்புப் பணியாளரும் இறந்துவிட்டனர். எனவே தனது பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என்று கூறிய பிரபுதேவா, அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்யச் சொல்லினார்.
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் `காற்று வெளியிடை' பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் தனக்குரிய தனி ஸ்டைல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான காதல் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெறுவதுடன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிப்பவையாக இருக்கும்.

    அந்தவகையில், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘ஓகே கண்மணி’ பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து மணிரத்னம் தற்போது கார்த்தி - அதிதி ராவ் ஹிடாரியை வைத்து `காற்று வெளியிடை' படத்தை உருவாக்கியுள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் மணிரத்னம்இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.



    பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வருகிற 7-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படம் இந்திய விமான படையின் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதையை கொண்டது. இப்படத்திற்கான சென்னை நகர வெளியீட்டு உரிமையை, பல்வேறு வெற்றி படங்களை வெளியிட்ட ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங், தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துள்ளது.

    அடுத்ததாக `பாகுபலி 2', `செம போத ஆகாதே' உள்ளிட்ட படங்களின் உரிமையையும்  ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் நிறுவனமே வாங்கியுள்ளது. மேலும் விஜய்யின் 61வது படம் மற்றும் `சங்கமித்ரா' உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இந்நிறுவனமே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வருகிற 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷால் தலைமையிலான நம்ம அணி வெற்றி பெற்றதையடுத்து, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் ஏப்ரல் 6-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கூட்டத்தில் விஷால் பேசியதாவது,

    இது முக்கியமான தேர்தல். எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம் ஒரு தனி மனிதனுக்காக அல்ல. ஒரு அணிக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. அந்த அடிப்படையில் இந்த அணியை தேர்வு செய்தவர்களின் நம்பிக்கை வீண்போகாது. நாங்கள் இந்த பதவிக்கு தகுதியானவர்களா? என்பதை செயல்களில்தான் காட்ட முடியும். வெற்றி அறிவிப்பு வந்த இரவே செயல்பாடுகளில் இறங்கிவிட்டோம். வரும் வியாழக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது.



    தயாரிப்பாளர்கள் குடும்பத்தோடு வர வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும். திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார். தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும். இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக  தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும்.  

    தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் திரைப்பட விருது நிகழ்ச்சியை நடத்த திட்டமிட உள்ளோம். அதேபோல இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று ஒரு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்! என்றார்.



    ஒவ்வொரு பிரச்சினைக்கும் பல அணிகளாக பிரிந்து வேலை பார்க்கப்போகிறோம். அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும் துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இதுவரை, ‘வாழ்வு வந்தால் அனைவரையும் சாகடிப்போமே’ என்ற சூழ்நிலைதான் இருந்தது. இனி அது முற்றிலுமாக மாறும் என்று துணைத்தலைவர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறினார்.
    `தடையறத்தாக்க' படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்க உள்ள அடுத்த படத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பை பெற்ற படம் `குற்றம் 23'. இப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார்.

    இந்நிலையில், அருண் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தையும், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இப்படத்தை அருண் விஜய்யை வைத்து `தடையறத்தாக்க' என்ற ஆக்‌ஷன் படத்தை அளித்திருந்த மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார்.



    `என்னை அறிந்தால்', `குற்றம் 23' போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த அருண் விஜய், இப்படத்தில் புதிய பரிநாமத்தில் தோன்றவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த `தடையறத்தாக்க' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது.

    இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றிய மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
    `8 தோட்டாக்கள்' படத்தை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா, `குரங்கு பொம்மை' படத்தின் இசை உரிமையை தனது `யு 1 ரெக்கார்ட்ஸ்' மூலம் பெற்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை `மலையாள சூப்பர் ஸ்டார்' மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை `மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது `யு 1 ரெக்கார்ட்ஸ்' மூலம் பெற்றுள்ளார்.



    யுவன் இசை உரிமையை பெற்றது ‘குரங்கு பொம்மை’ படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பி.அஜனீஸ் லோக்நாத் என்ற புதுமுக இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக யுவன் `8 தோட்டாக்கள்' படத்தின் இசை உரிமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மற்றும் நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை கீழே பார்ப்போம்.
    தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.



    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தணிக்கைகுழுவில் இப்படம் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.

    கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ள இப்படம், வருகிற மே மாதம் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி அனுசரிக்க சொன்னதால் பல படங்களில் நடிக்க தான் மறுத்ததாக நடிகை பார்வதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    `பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பார்வதி. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதிக்கு தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் வராததால் மீண்டும் மலையாளத்தில் நடித்து வந்தார். அதே நேரத்தில் அவ்வப்போது தமிழிலும் நடித்தார். `பூ' படத்திற்கு பின்னர், `சென்னையில் ஒரு நாள்', `மரியான்', `பெங்களூரு நாட்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, இதுவரை நடித்துள்ள படங்கள் அனைத்திலுமே கனமான  கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

    படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, தான் குறைவான படங்களில நடித்திருப்பதற்கு சில காரணங்களை கூறியுள்ளார். தனக்கு நிறைய படவாய்ப்புகள் வந்தும், அதனை வேண்டாம் என்று ஒதுக்கியதாக கூறிய பார்வதி, அதிர்ச்சியான காரணத்தையும் கூறியுள்ளார்.



    அது என்னவென்றால், பட வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை தகாத உறவுக்கு சிலர் அழைத்துள்ளதாக கூறியுள்ளார். சினிமாத்துறை என்றால் அப்படி தான் இருக்கும் என்று சிலர் போதனையும் செய்வார்கள். சில நேரங்களில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் கூட அவ்வாறு தன்னை அழைத்துள்ளனர். இவ்வாறு தன்னை அனுசரிக்க அழைப்பவர்களின் படங்களின் தான் நடிக்க மறுத்துவிட்டதாகவும் பார்வதி தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக மலையாள சினிமாவில், இதுபோன்ற பிரச்சனைகளை, தான் பல முறை சந்தித்துள்ளதாக கூறிய பார்வதி, தமிழ், கன்னடம், இந்தி மொழி படங்களில் இதுவரை அதுபோன்ற பிரச்சனையை சந்தித்ததில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    அதிக வருடங்கள் தனக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததற்கு அதுதான் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
    வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.
    வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.

    அப்போது வி.கோபாலகிருஷ்ணன் நாலைந்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும், சவுகார் ஜானகியும், எம்.ஆர்.ராதாவும் நடித்த "தாமரைக்குளம்'' படத்தின் படப்பிடிப்பு, கோல்டன்ஸ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் `முக்தா' சீனிவாசன்.

    படப்பிடிப்பை பார்க்க வாலி சென்றிருந்தார். அவருக்கு ஒரு புதுமுக நடிகரை கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    அதுபற்றி வாலி கூறுகிறார்:-

    "நானும் அந்தப் புதுமுக நடிகரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். மிகமிக ஒல்லியான உருவம். சினிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம். ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர் விழியிலும், வார்த்தையிலும் ஓர் அறிவு தீட்சண்யம் இருந்தது. அவருடைய உருவ அமைப்பை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன். அறிமுகமாகி ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.

    "மிஸ்டர் வாலி, என் சொந்த ஊர் தாராபுரம். என் பெயர் குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவே மாறி, என்னுடைய சிந்தனையை முழு நேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்களிலேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன். இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு. நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணூறு ரூபா தர்றேன்னாரு. எனக்குப் பணம் முக்கியமில்லை, என் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.''

    நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது.

    "என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதை நீங்க விட்டது ரொம்பத் தப்பு'' என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

    "வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு நாள் நான் கண்டிப்பா `ஸ்டார்' ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிற்கும்'' என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.

    பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார். நானும் அவரும் பின்னாளில் `வாடா... போடா...' என்று அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஆப்த நண்பர்களானோம்.

    அந்த `குண்டுராவ்' வேறு யாருமல்ல. நாகேஷ்தான் அவர்!''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    இரண்டாவது பட வாய்ப்பு உடனே கிடைக்காததாலும், உடல் நலம் சரியில்லாததாலும், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போனார், வாலி.

    அப்போது, அவர் தந்தை காலமானார்.

    வாலியின் அண்ணன் மும்பையில் இருந்தார். "பாட்டு எழுதும் வேலை சரிப்படாது. மும்பை சென்று ஏதாவது வேலை தேடவேண்டியதுதான்'' என்ற முடிவுக்கு வந்தார், வாலி. தாயாருடன் மும்பை சென்றார்.

    மும்பையில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். தியாகராய நகரில் சிவா- விஷ்ணு கோவில் அருகே இருந்த கிளப்ஹவுசில் தங்கினார். அங்கு 20 அறைகள் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கியிருந்தனர். ஒருவருக்கு வாடகை 15 ரூபாய்.

    அங்கே தங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் பிரம்மச்சாரிகள். நாகேசும் அப்போது அங்கு தங்கியிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நாகேசும், வாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடராமன் என்ற இளைஞரும், அங்கு தங்கியிருந்தார். அவரும் வாலிக்கு நண்பரானார்.

    இவர்தான் பிற்காலத்தில் "வெண்ணிற ஆடை''யில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலம் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஸ்ரீகாந்த்.

    கிளப் ஹவுசில் தங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரை உலகில் நுழைந்தார்கள். வாலிக்குமë நல்ல காலம் பிறந்தது.

    ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.

    வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.

    மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.

    ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.

    "நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.

    "பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?''

    "ஆமாம் சார்!''

    "அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!''

    ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

    வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.

    வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார்.

    மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.

    காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.

    `எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!
    விபிஎம் கிரியே‌ஷன்ஸ் தயாரிப்பில் வீரஇளைஞனின் கதையாக உருவாகியுள்ள ‘வதம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    இதில் பிரவின், வின்ஸ்லி ஆகிய இருவர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவப்னா நாயகியாக அறிமுகமாகிறார். பாலாசிங், ராஜேந்திரநாத், இயக்குனர் ஜேப்பி, ஆசைத்தம்பி, ராதாகிருஷ்ணன், நவீன் சீதாராமன், விஷ்வா, கம்பம் மீனா ஆகியோர் நடிக்கின்றனர்.

    இளையராஜாவின் அக்காள் மகன் ரவிவிஜய் ஆனந்த் இசை அமைக் கிறார். ஒளிப்பதிவு- ஹார்முக், பாடல்கள் -மோகன்ராஜன், ரவிவிஜய் ஆனந்த், முருகன் மந்திரம்,எடிட்டிங்- மாரீஷ்.ஏ, நடனம்- அக்‌ஷய் ஆனந்த், ஸ்டண்ட்-ஜாக்கி ஜான்சன், தயாரிப்பு- விபிஎம்.எல்.வின்ஸ்லி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- என்.எஸ்.அருள்செல்வம்.



    “ இது அரசியல் பின்புலத்துடன் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களை செய்து வருபவர்களை எதிர் கொண்டு அப்பாவி மக்களின் துயர் துடைக்கும் வீர தீர இளைஞனின் கதை. இதில் வரும் சண்டை காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும். பாடல்கள் ஆட்டம் போட வைக்கும்” என்றார். படப்பிடிப்பு திருநெல்வேலி, வடக்கன்குளம், வள்ளியூர் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.
    ×