என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    சமுதாய உணர்வை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் மும்பையில் தேடிய போது இந்தி நடிகை ராக்கி சாவந்த் தலை மறைவானார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்தார்.

    இதன் காரணமாக சமுதாய உணர்வை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, நேரில் ஆஜராகுமாறு ராக்கி சாவந்துக்கு பல முறை கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.



    இதைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ராக்கி சாவந்தை கைது செய்வதற்காக இரண்டு போலீசார் லூதியானாவில் இருந்து மும்பை வந்தனர். மும்பையில் அவரது வீட்டில் அவரை காணவில்லை. அவர் தலை மறைவானது தெரியவந்தது.

    இதனால், ராக்கி சாவந்தை கைது செய்யும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுபற்றி கோர்ட்டில் தெரியப்படுத்துவோம் என்று லூதியானா துணை போலீஸ் கமிஷனர் கூறினார்.

    ராக்கி சாவந்த் மீதான வழக்கு வருகிற 10-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
    தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலலில் தலைவராக பொறுப்பேற்க உள்ள நடிகர் விஷாலுக்கு எதிராக சென்னை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான நம்ம அணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக அந்த அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் விஷால் 476 வாக்குகள் பெற்று, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

    பொருளாளராக எஸ்.ஆர்.பிரபுவும், செயலாளராக கே.ஈ.ஞானவேல்ராஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, மொத்தமாக 21 பேர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். வெற்றி பெற்ற அனைவரும் நாளை நடைபெறும் விழாவில் பதவியேற்க உள்ளனர்.



    இந்நிலையில், அலாவூதீன் என்பவர் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்தபோது நடிகர் விஷால், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அலாவூதீன் போட்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. 
    பாலிவுட் பிரபலம் பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    `மைனே பியார் கியா' என்ற படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பாக்யஸ்ரீ, தனது முதல் படத்தின் மூலமே 1979-ல் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்த அவர் பின்னர் மீண்டும் திரையில் தோன்றினார். அதன் பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டினார். இந்நிலையில், பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி, காஷ்யப் புரொடக்‌ஷன் கம்பெனி நிறுவனம் சார்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    ஆக்‌ஷன் கலந்த காமெடி பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் ராதிகா மதன் நடிக்க உள்ளார். வாசன் இயக்கவுள்ள இப்படத்தை அனுராக் காஷ்யப் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு `மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது.



    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான `கவண்' படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக அவர் நடித்துள்ள `புரியாத புதிர்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதுதவிர, `விக்ரம் வேதா', `கருப்பன்', `அநீதி கதைகள்', `96' உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ரஜினிகாந்த் நடிப்பில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகமாக தயாராகிக் கொண்டிருக்கும் ‘2.0’ ரூ.350 கோடி செலவில் ‘மேக் இன் இந்தியா’ படமாக உருவாகிறது.
    இந்தியாவில் பெரும் பொருள் செலவில் தயாரிக்கப்படும் படங்களில் பொதுவாக வெளிநாட்டு வாடை அதிகமாக இருக்கும். அதாவது, பல நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுவதுடன், வெளிநாட்டு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவார்கள். குறிப்பாக வி.எப்.எக்ஸ். எனப்படும் தந்திரக் காட்சிகளில் ஹாலிவுட் தொழில்நுட்பங்களை உபயோகிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆனால் ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் (2.0) இந்த விதிக்கு முரணாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பங்கேற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே இந்தியர்கள். வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பங்களுக்கும் உள்நாட்டு நிபுணர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.



    இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் 2.0 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய, கொரிய மொழிகள் உள்பட மொத்தம் 7 மொழிகளில் ரூ.350 கோடி செலவில் உருவாகும் இந்தப் படம் உண்மையிலேயே ‘மேக் இன் இந்தியா’ அம்சம் கொண்டது என இப்படத்துடன் தொடர்பு உள்ளவர்கள் தெரிவித்தனர்.

    கதாநாயகனாக ரஜினியும், வில்லனாக அக்‌ஷய் குமாரும் தோன்றும் 2.0 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பங்களை ‘பாகுபலி’ புகழ் ஸ்ரீநிவாஸ் மோகன் வழங்குகிறார். ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் ஒலித்தொகுப்பாளராக பணியாற்றி ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் படக்குழுவில் இருக்கிறார்.
    நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நேற்று விடுதி ஒன்றில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு காரணம் என்னவென்பதை விரிவாக கீழே பார்ப்போம்.
    நேற்று நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். `வம்சம்', `கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி 8 மாதங்களே ஆகியுள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான கருத்த வேறுபாடு காரணமாக நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தியாகராய நகரில் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ள கார்த்திகேயனுக்கும், நந்தினிக்கும் திருமணமான தருணத்திலேயே ஏதோ மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நந்தினி தனது கணவர் கார்த்திகேயனுடன், வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகாமையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிய கார்த்திகேயன், அந்த விடுதியிலேயே குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார்த்தியேகன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடித்தத்தில், கார்த்திகேயன் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கார்த்திகேயனிடம், நந்தினி விவாகரத்து கேட்டு தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயனின் அம்மா சாந்தி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நந்தினியிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நந்தினி-கார்த்திகேயன் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் திருமணத்தின் போதே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது.



    மேலும் கார்த்திகேயனுக்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், கார்த்திகேயனுக்கு திருமணம் ஆனதால், வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெண்ணிலாவின் கடிதத்தில் கார்த்திக் பெயர் இருந்ததால் போலீசார் அவரை கைது செய்தது உள்ளிட்ட பிரச்சனைகள் தான் இருவருக்கும் இடையேயயான கருத்துவேறுபாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. மேலும் வேலைவாங்கி தருவதாகக் கூறி கார்த்திகேயன் சிலரை ஏமாற்றியதால், நந்தினி, கார்த்திகேயனை பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து, கார்த்திகேயனின் பெற்றோர், நந்தினியின் குடும்பத்தாரிடம் போலீசார்  விசாரணை நடத்த உள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருடு போனது.
    வாஷிங்டன்:

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது பை திருடு போனதாக கூறப்படுகிறது. அந்த பையில், அவரது பாஸ்போர்ட், வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை இருந்ததாக தெரிகிறது.

    பாஸ்போர்ட் திருடு போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார். அதையடுத்து அவருக்கு உடனடியாக மாற்று பாஸ்போர்ட் வாங்கப்பட்டது. இதற்காக இந்திய தூதரகத்துக்கு தனது ‘முகநூல்’ பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார். 
    அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.
    அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.

    ப.நீலகண்டன் கூறியது போலவே மறுநாள் அவரைப் போய்ப் பார்த்தார், வாலி. சுமார் ஐம்பது பல்லவிகளைக் கொடுத்தார். அவற்றில், "சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்'' என்ற பல்லவியை தேர்வு செய்தார், நீலகண்டன்.

    அதற்கு இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா பலவிதமான மெட்டுகளைப் போட்டுக்காட்டினார். அதில் ஒரு மெட்டை தேர்வு செய்தார், நீலகண்டன்.

    அதன் பிறகு, முழுப் பாட்டுக்கும் இசை அமைப்பதில் பாப்பா மும்முரமாக ஈடுபட்டார்.

    இசை அமைக்கும்போது வந்திருந்த ஒருவரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார், பாப்பா. அவர்தான் எழுத்தாளரும், வசன கர்த்தாவுமான மா.லட்சுமணன். "இவர்தான் உங்களைப்பற்றி ப.நீலகண்டன் சாருக்கு தெரிவித்து, அதன் மூலம் உங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்று பாப்பா கூறினார்.

    அதைக்கேட்டு வாலி பிரமித்து நின்றார். கண்கள் பனிக்க மா.லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.

    "நல்லவன் வாழ்வான்'' படத்துக்கு கதை -வசனம் எழுதுபவர் பேரறிஞர் அண்ணா என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார், வாலி.

    வாலியின் பாடல், அண்ணாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பாடல் நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, சில வரிகளை அடிக்கோடிட்டு, பாராட்டினார்.

    எம்.ஜி.ஆருக்கும் பாடல் பிடித்து விட்டது.

    சோதனை மேல் சோதனை என்றாலும், அந்தப் பாடல் பதிவு செய்யப்படுவதிலும், படத்தில் இடம் பெறுவதிலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டன.

    அதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    "சாரதா ஸ்டூடியோவில் `ரிக்கார்டிங்'கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.

    பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.

    10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

    பிறகு, ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.

    `இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு... எனவே, மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்' என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.

    மருதகாசியும் பாட்டு எழுதவந்தார். ஏற்கனவே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தார்.

    "இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை... இந்தப் பாட்டையே வைத்துக்கொள்ளுங்கள்... பாப்புலராகும்...'' என்று சொல்லிவிட்டு, மருதகாசி அண்ணன் தன் பிளைமவுத் காரில் ஏறிப் போய்விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்.

    நிïடோன் ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் போட்டு இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.

    ஒரு மலை; அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குனர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.

    முதல் ஷாட் எம்.ஜி.ஆர், `சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டூடியோ "செட்'' முழுவதும் வெள்ளக்காடாயிற்று.

    படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நான் அதிர்ந்து போனேன். இந்த ஒரு பாடலுக்கே இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.

    நல்லவேளை, செட் சீர் செய்யப்பட்டு பாட்டு நல்ல விதமாகப் படமாக்கப்பட்டு, படத்திலும் இடம் பெற்றது.

    இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.

    இவ்வளவு அமர்க்களங்களுக்கு இடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலுடன் "நல்லவன் வாழ்வான்'' 1961 ஆகஸ்டு 31-ந்தேதி திரைக்கு வந்தது.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    கடுகு படத்தில் பாரத் சீனியின் 'அனிரூத்' கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் சூர்யா மற்றும் லிங்குசாமி ஆகியோர் பாரத் சீனியை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    தன்னை ஒரு படைப்பாளியாக 'கடுகு' திரைப்படம் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றி மற்றும் சினிமா விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுகள் என இவை அனைத்தும், விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தை தந்து இருக்கின்றது.

    `கடுகு' படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்த படத்தில்  இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



    இதுகுறித்து கடுகு படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் கூறியதாவது,

    பாரத் சீனியின் 'அனிரூத்' கதாபாத்திரம், எதிர்பார்த்தததை விட நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அவருடைய யதார்த்தமான நடிப்பை பார்த்த சூர்யா, தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பாரத் சீனி இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர். அந்த வகையில் அவரை ஒரு நடிகராக திரையில் பார்த்து மகிழ்ந்த லிங்குசாமி, பாரத் சீனியை அழைத்து பாராட்டியுள்ளார்.

    இந்த பாராட்டுக்கள் பாரத் சீனிக்கு மிகுந்த மகிழ்ச்சி மட்டுமின்றி, ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது. அவருடைய நகைச்சுவை பாணியும், நகைச்சுவை வசனங்களும், ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்று தந்துருக்கிறது என்று கூறினார்.
    மோரா பிக்சர்ஸ் தயாரிப்பில் நகைச்சுவை சரவெடியாக உருவாகி உள்ள ‘மோகனா’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    மோரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘மோகனா’.

    இதில் மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், கல்யாணிநாயர், உமா ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை-எல்.ஜி.பாலா, பாடல்கள்- மோரா, சீனி வாசன், நடனம்- கவுசல்யா, சண்டைபயிற்சி- ‘ஸ்டண்ட்’ விஜய், இணைதயாரிப்பு- பிரபாவதி, தயாரிப்பு- மோரா, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ.ஆனந்த். இவர் ‘செவிலி’ படத்தை இயக்கியவர்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “நாடகத்துறையிலுள்ள கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூறுவதே இந்த படம். மோகனா எனும் நாடக நடிகையை நடிகராக வரும் பவர் ஸ்டார் ஒரு தலையாக காதலிக்கிறார். அதே சமயம் பண்ணையார் மொட்டை ராஜேந்திரனும் அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். அதில் சிக்கித் தவிக்கும் மோகனாவின் நிலை என்ன என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவை படம் இது” என்றார்.

    மொட்டை ராஜேந்திரனின் கனவில் வந்து கதாநாயகி முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக இயக்குனர் தயாரானார். முத்தக்காட்சி வேண்டும் என்று ‘பவர்ஸ்டார்’ சீனிவாசனும் கேட்க கதாநாயகி மறுத்துவிட்டார். இந்த நிலையில், கதாநாயகியை திடீரென காணவில்லை. படப்பிடிப்பை சிறிது நேரம் நிறுத்திவிட்டு தேடிய போது, அங்குள்ள ஒரு அறையில் நடிகை தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். முத்தக்காட்சியே இல்லை என்று அவரிடம் சொன்ன பிறகு தான் நடிகை வந்தார். படப்பிடிப்பு மீண்டும் நடந்தது.
    பிசியான நேரத்திலும் நயன்தாராவுக்காக நேரம் ஒதுக்கியிருக்கம் ஏ.ஆர்.ரகுமான், அறம் படத்தின் டீசரை நாளை வெளியிட இருக்கிறார். இதுகுறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானின் பங்கு அளப்பறியது. அவர் தனது இசையால் இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.  `மொசட் ஆஃப் மெட்ராஸ்' என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவர். அவர் தற்போது, ரஜினியின் `2.0', விஜய்யின் 61-வது படம் என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

    அதேபோல் `லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் முன்னணி நாயகியாக வலம்வருகிறார். அவர் தற்போது `அறம்', `வேலைக்காரன்', `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்' மற்றும் பெயரிடப்படாத படம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.



    நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான `டோரா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'அறம்' படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா 'அறம்' படத்தில் கலெக்டராக நடிக்கிறார். இந்த படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நயன்தாரா நடித்துள்ள எந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது இல்லை. `சிவாஜி' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் முக்கிய வேடங்களில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். 
    முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் மீது ரூ.2.18 கோடி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சென்னையை சேர்ந்தவர் ஆதிநாராயணன் சுப்பிர மணியன். இவர், சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு புகார் கொடுத்தார். அதில், முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவகுமாரும், அவரது ஆட்களும் என்னுடைய மருமகனிடம் ரூ.2 கோடியே 18 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

    இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், ஆதிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணையின்போது, புகார் மனுவில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்பதால், இந்த புகாரை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ந் தேதி முடித்து வைத்து விட்டதாக அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

    இதை ஏற்காத நீதிபதி, முகாந்திரம் இல்லை என்று கூறி புகாரை முடித்து வைத்து போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்தார். ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவில், இந்த புகாரை மத்திய குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியிருந்தார். ஆனால், ஐகோர்ட்டு உத்தரவிட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், ஆதிநாராயணன், போலீஸ் கமி‌ஷனர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.



    இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரத்துக்குள் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

    இந்த நிலையில், நடிகர் ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ்வரி, நாகநாத சேதுபதி பஷீர் என்ற நடிகர் வாலி, சுரேஷ் கண்ணன், முரளிதரன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு இளையராஜாவுக்கு பிரம்மாண்ட விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள், இசைஞானி இளையராஜாவை இன்று சந்தித்தனர்.

    பின்னர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் வாழ்க்கையிலேயே சந்தோ‌ஷமான நிகழ்வு இது, இளையராஜாவோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம், மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம்.

    இந்த விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும். இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது. இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது இருக்கும். இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் ஒரு விழாவாக இவ்விழா இருக்கும்.



    இந்த விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஏனென்றால் இசைஞானி இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார்.

    நாம் சிரிக்கின்றபோதிலும், நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்யம்.

    அதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் பிரம்மாண்டமான ஒரு விழாவாக இருக்கும் என்றார்.



    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் கூறும்போது, “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் அறிமுகவிழா வருகிற வியாழன் அன்று மாலை 6 மணி அளவில் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து நடைபெறும். இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.

    அப்போது துணை தலைவர் பிரகாஷ்ராஜ், கவுரவ செயலாளர் ஞான வேல்ராஜா செயற்குழு உறுப்பினர்கள் ரா.பார்த்திபன், எம்.கபார் ஆகியோர் உடன் இருந்தனர்.
    ×